Tuesday, November 16, 2010

தீபாவளியும் அப்பாவின் செல்லப்பெண்ணும்

நீண்ட நாட்களுக்குப்பின் அனைவரையும் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி. வெளியே மழை கொட்டிக்கொண்டிருக்கிறது. School van 5 நிமிடம் தாமதமாக வந்த்து. டென்ஷனாகிவிட்டேன் leave announce பண்ணிவிடுவார்களோ என்று. அப்புறம் rain outside the house and storm in the house ஆகிவிடுமே. நல்ல வேளை - கடவுள் தம்மை நம்புபவரை ஒரு போதும் கைவிடுவதில்லை ;). van வந்துவிட்டது. Coming to the point தீபாவளி இனிதே கழிந்தது. தீபாவளிக்கு என் பெண்ணிற்கு ஒரு க்ரீம் கலர் கவுன். Princess Dress மாதிரி இருக்கிறது என்று சொல்லிக்கொண்டாள் என் மகள். தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன் அந்த ட்ரஸஸை வாங்கியிருந்தோம். தினமும் ஸ்கூல் விட்டு வந்த்தும் ஒரு முறை அந்த ட்ரஸஸை எடுத்துப் போட்டுப் பார்த்துக் கொள்வாள். நாங்கள் யாரும் பார்க்கவில்லை என்று அவள் நினைக்கும் நேரம் டப்பாவைத் திறந்து ஆடையைத் தடவிப் பார்த்துக் கொள்வாள். நாங்கள் பார்ப்பதை அவள் கவனித்து விட்டால் வெட்கம் வந்துவிடும். பையனுக்கு வழக்கம் போல் ஒரு பனியன் கால்சட்டை. ஏம்ப்பா பசங்களுக்கு வெரைட்டீஸ் அவ்வளவு இல்லை. இவனுக்கு ட்ரஸ் choose பண்ணுவது உண்மையிலேயே எனக்குப் பெரிய வேலை. மகள் காலண்டரைப் பார்த்து துடித்துக்கொண்டிருந்தாள் 6ம் தேதி (தீபாவளி) வருவதற்கு. Atlast தீபாவளி வந்தேவிட்டது. காலையிலேயே முதல் ஆளாய்க்குளித்துவிட்டு புது ட்ரஸஸைப் போட்டுக்கொண்டுவிட்டாள். head band, matching shoes, chain, புது காதணி என்று அவளின் உற்சாகம் எங்களையும் தொத்திக்கொண்டது. சக்கரம், புஸ்வாணம், சாட்டை, கம்பி மத்தாப்பு, பாம்பு, சுருள் கேப், துப்பாக்கி - இவைகள் தான் எங்கள் தீபாவளி வெடிகள். மறந்து விட்டேன் - ஒரு பிஜிலி வெடி பாக்கெட். வாங்கடா வெடிப்போம் எனப் பிள்ளைகளைக் கூப்பிட்டுப் பார்த்தார் வாசு. வெளியே உள்ள வெடி சத்தத்தைக் கேட்டு ஒன்றும் வெளியே கிளம் ப மறுத்து விட்டது. கட்டாயம் வந்தேயாக வேண்டும், வெடித்தே ஆக வேண்டும் என்று வாசு பிள்ளைகளை ஒரே நச்சு. மெதுவாக் கூப்பிடுங்க. ஏற்கனவே பயப்படுறாங்க, நீங்க கத்துறத கேட்டு இன்னும் பயப்படப்போறாங்க என்று சொன்னேன். ஆமா பெரிய அணுகுண்டு வாங்கி வச்சிருக்கோம், புள்ளங்க பயப்படப்போறாங்க. உன்னால தான் இப்டி எதுக்கெடுத்தாலும் பயப்படுதுங்க என்று எனக்கு 2 திட்டு. இதல்லாம் நாங்க எவ்வளவோ பாத்தவங்க என்கிற மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு மீண்டும் அதையே சொன்னேன் (இதற்கு முன் swimming pool செல்லும் போதும் பிள்ளைகள் பயப்படும் போது இதையே தான் நான் சொல்லுவேன். வாசுவிடம் எனக்குப் பிடிக்காதது எதுவென்றால் swimming கூட்டிப்போன முதல் நாளன்றே பிள்ளைகளை engllish channel ஐ நீந்திக்கடக்க வேண்டும் என்பார்). பிள்ளைகளை அழ அழ மொட்டை மாடி கூட்டிக்கொண்டு சென்றார். நானும் தான். மொட்டை மாடி சென்று பார்த்தால் அடேங்கப்பா வானமே தெரியவில்லை. ஒளி வெள்ளம். விதவிதமான வாணவேடிக்கைகள். பிள்ளைகள் திறந்த வாய்மூடாமல் வேடிக்கை பார்க்கத் துவங்கினர். எந்த திசையில் பார்ப்பதென்றே தெரியவில்லை. எப்படியும் வேளச்சேரியில் மட்டும் பல லட்சம் பெறுமான வெடிகள் வெடிக்கப்பட்டிருக்கும். பிள்ளைகள் அவர்களாகவே அப்பா வாங்க நம்ம வெடிய வெடிப்போம் என்றனர். வாசு என்னைப் பார்த்து ஒரு வெற்றிப்புன்னகை புரிந்தார். மாற்றி மாற்றி சக்கரம் புஸ்வாணம் எல்லாம் வைத்து காண்பித்தோம். பின் வாசு ஒரு சாட்டையைக் கையில் பிடித்துக்கொண்டு இதை பொருத்து என்றார் (மெழுகுவத்தி அணைந்து விட்டது). சாட்டையை என்னை நோக்கி நீட்டிக்கொண்டிருந்தார். நானும் அதை பொருட்படுத்தாமல் பற்ற வைத்தேன். சர்ரென்று பற்றியதில் என் கட்டை விரலையும், சுட்டு விரலையும் பதம் பார்த்தது சாட்டை. (இன்னும் சரியாகவில்லை நண்பர்களே). என் மகன் வந்து பார்த்துவிட்டு அப்பாதான சுட்டாங்கம்மா. நான் பெரிய குச்சி வச்சிருக்கேன், அதால அடிச்சிர்றேன் என்றான். மகள் அதல்லாம் இல்ல தம்பு. அம்மாதான கைல தீப்பெட்டி வச்சிருந்தாங்க. அவங்களாதான் சுட்டுக்கிட்டாங்க. அப்பா பாவம். அப்பாவ அடிக்காத வலிக்கும்ல என்றாள். அடப்பாவி கொஞ்ச நேரம் முன்னால் வந்து என் பின்னால் ஒளிந்து நின்றாயே அப்பாவின் கோபத்துக்கு பயந்து. இது தான் Daddy's Little Girl போலும் என நினைத்து மனத்துக்குள் சிரித்துக்கொண்டேன்.

Wednesday, October 6, 2010

வேளச்சேரியில் உணவகங்கள் - ஒரு கைட்லைன்வேளச்சேரியில் உள்ள உணவகங்களில் உங்கள் வீக் எண்டைச் சுவையான உணவோடு கழிக்க எந்த உணவகம் ஏற்றது என்பதற்கு ஒரு கைட்லைன் கொடுக்க விருப்பம். இங்கு சைனீஸ் ரெஸ்ட்டாரண்ட் துவங்கி (Noodle house), Parfait 3 Bistro, Pizzaurant, Dominoes, McDonald என உலகை ஒரு வலம் வந்து, Kumarakom (Kerala Speciality), Kalinga Court (Andhra), The Dhaba (Punjabi) என்று இந்திய மாநிலங்களில் புகுந்து புறப்பட்டு, Nalas, அஞ்சப்பர், காரைக்குடி, ரத்னா கபே என்று கடைசியாக ஆனந்த பவன் என்று நம் அடையாறில் வந்து முடிகிறது (அதாங்க நம்ம அடையார் ஆனந்தபவன் :) ) இவைகளில் கிடைக்கும் உணவு வகைகள், அவற்றின் சுவை மற்றும் Hospitality ஐப் பற்றி ஒரு report இதோ :


முதலில் The Dhaba: இங்கு சென்றவுடன் முதலில் ஒரு மண் குடுவையில் ஏதோ ஒரு பானம் தருகிறார்கள். கிட்டத்தட்ட புளித்தண்ணி மாதிரி. கடைசி வரை புளியைத் தவிர அதில் வேறென்ன போட்டிருக்கிறாருகள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ரசத்தைக் கொதிக்க வைக்காமல் பச்சையாக குடித்தது போல் ஒரு feel. இதோடு ஒரு சுட்ட அப்பளமும் ஒரு சட்னியும் வேக்கிறார்கள். அந்தச் சட்னி சும்மா சொல்லக்கூடாதுங்க, செம டேஸ்ட். ஸ்டாட்டருக்கு சிக்கன் கபாப் ஆர்டர் செய்தோம். Melts in your mouth என்று சொல்வார்களே அதைப் போல் வாயில் போட்டவிடன் கரைகிறது. நன்றாக வெந்து, மசாலா சரியாக எல்லா பாகத்திலும் பரவி, ஓரத்தில் மெலிதாக கருகி, வெங்காயம், முட்டைக்கோஸ் துருவல்களுடன், அந்த சட்னியும் சேர்த்து - அடாடா கபாப் என்றால் அப்படித்தான் இருக்க வேண்டும். main courseக்கு கார்லிக் நான், பட்டர் சிக்கன் - நான் நன்றாக இருந்த்து. பட்டர் சிக்கனும் பெயருக்கேற்றார் போல் வெண்ணையாக இருந்த்து. சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்திருந்தோம் (இனிமேல் செய்ய மாட்டோம் ;) ). வெயிட்டர்கள் நன்றாக கவனிக்கிறார்கள் - நம் அருகே நின்று plateஐயே முறைத்துக்கொண்டிருப்பது இல்லை. அதே நேரம் நமக்குத் தேவையான சமயம் கரெக்டாக அங்கேயிருக்கிறார்கள். என்ன ஒரேயொரு பிரச்சனை - தயாரித்து, பரிமாற இவர்கள் எடுத்துக்கொள்ளும் நேரம். ஆர்டர் கொடுத்து மிக மிக நேரம் கழித்தும் யாரும் பரிமாற வரவில்லை. பிறகு அந்தப்பக்கம் போய்க்கொண்டிருந்த வெயிட்டரைக் கூப்பிட்டு - பாஸ் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு ஆர்டர் கொடுத்தோமே, அத ஆர்டரா எடுத்துக்காமா requestஆ எடுத்துக்கிட்டு தயவு செஞ்சு சாப்பாட்ட கொண்டு வாங்க என்று கெஞ்சிவிட்டோம் கெஞ்சி.நம்ம நளாஸ் ஆப்பக்கடை - இங்க ஆப்பம் ரொம்ப famous என்றார்கள். சீஸ் ஆப்பம், சில்ட்ரன் ஸபெஷல் ஆப்பம், முட்டை ஆப்பம் இப்படி பல. எனக்கென்னவோ இங்கு ஆப்பம் authentic ஆப்பம் போலில்லை என்று தோன்றுகிறது. கிட்டத்தட்ட தோசைக்கும் ரியல் ஆப்பத்துக்கும் நடுவே இருக்கிறது இங்கு தரப்படும் ஆப்பம். ஆனால் சிலோன் சிக்கன் பரோட்டா, கொத்து பரோட்டா போன்றவை நன்றாக இருக்கின்றன. பிரியாணி not upto the mark. ரேட் ரொம்பவே நாமினல் என்பதால் சரியான கூட்டம். once in a while போகலாம்.வேளச்சேரி அஞ்சப்பருக்கு, பெசன்ட் நகர் அஞ்சப்பரை நினைத்துக் கொண்டு சென்றால் - மன்னிக்கவும் நீங்கள் நிச்சயம் ஏமாறுவீர்கள். பெசன்ட் நகரில் சாப்பிட்ட மென்மையான வெங்காய ஊத்தப்பம், சிக்கன் குழம்பு, மீன் தந்தூரி இவற்றை நினைத்து சப்புக்கொட்டிக்கொண்டு வேளச்சேரி அஞ்சப்பருக்கு சென்றோம். கடவுளே - தந்தூரி சிக்கன் வேகவில்லை. மசாலா அப்படியே இருந்த்து வேகவேயில்லை. பிரியாணி மிகச் சாதாரணம். யார்மேலயாவது நமக்கு கோவம்னா இங்க கூட்டிட்டு வந்து treat கொடுத்துவிடுவோம் என்றார் வாசு. நிச்சயம் நல்ல யோசனை. இந்த comment காரைக்குடி ரெஸ்டாரன்ட்டுக்கும் பொருந்தும்.

பிரியாணி என்றால் நேரே கலிங்கா கோர்ட்டுக்குச் சென்று விடுங்கள். மசாலா நெடி இல்லாமல் அதே நேரம் நல்ல மணத்துடன், மிக நீண்ட பாசுமதி அரிசியில் தயாரான, கறி நன்கு வெந்து, மிதமான மசாலா சுவையுடன் கூடிய அருமையான ஆந்திர பிரியாணி. ஆனால் நான்வெஜ் மீல்ஸ் ஆர்டர் செய்ய வேண்டாம் - மிகவும் காஸட்லி. கொடுக்கும் காசுக்கு மதிப்பு கம்மி. இங்கு ஒரேயொரு பிரச்சனை - தெலுங்கு பாட்டை ஒலிக்க விடுகிறார்கள். ஆனால் அந்த பிரியாணியின் சுவைக்கு பாட்டுக்கொடுமையைச் சகித்துக்கொள்ளலாம்.
Noodle House - இங்கு ஸ்டார்ட்டருக்கு ஃபிஷ் ஃபிங்கர், சீ ஃபுட் ப்ளாட்டர் ஆர்டர் செய்தோம். ஃபிஷ் ஃபிங்கர் உண்மையில் ரொம்ப டேஸ்ட்டி - வெளியே க்ரிஸ்ப்பியாகவும், உள்ளே ஜூஸியாகவும். சீ ஃபுட்டை ரொம்ப deep fry செய்து விடுகிறார்கள். ருசியே தெரியவில்லை. இங்கே soup மிகவும் நன்றாக இருக்கிறது. நூடுல்ஸில் fried noodles, Mee Goreng இவை நன்றாக இருக்கின்றன. ஆனால் இவர்களிடம் consistency இல்லை. ஒரு முறை ஒரு ஐட்டம் நன்றாக இருக்கிறது என்று அடுத்த முறை ஆர்டர் செய்தால் - Disastrous. யோசித்துச் செல்லுங்கள்.குழந்தைகளுக்கு இருக்கவே இருக்கிறது McDonalds. Nuggets, fries, cola, burger என்று எதை வாங்கிக்கொடுத்தாலும் கம்மென்று சாப்பிட்டுவிடுகிறார்கள்.(ஆனால் வீட்டில் என் அம்மா செம திட்டு - கண்டதையும் வாங்கிக்கொடுக்கிறோம் என்று). Dominos Pizzaவும் நல்லா இருக்கும். ஆனால் வாசு சீஸ் டூத் பேஸ்ட் போலிருக்கிறது என்பார். Parfait 3 Bistro வில் ambience ரொம்ப நன்றாக இருக்கும். Chicken Alfredo - இது ஒரு Pasta வகை அருமை. chicken and caesar என்று சாலட் பெயரைப் பார்த்து ஆர்டர் செய்தேன் (Caesar dressing என்னுடைய favourite). ஆனால் இது வேறேதோ சீசர் போலும். சகிக்க முடியவில்லை. எங்க வீட்டு சீசர் கூட சாப்பிட முடியாது.

ரத்னா கபேயின் கொடுமை தாங்கவில்லை. மஷ்ரும் 65 ஆர்டர் செய்தோம். மஞ்சூரியன் செய்ய தயாரித்திருந்த காளானை வைத்து 65ஐத் தயாரித்துவிட்டனர். மேலும் இரவு 9 மணிக்கு மேல் இங்கு சென்றால் நம்மை வெளியே துரத்துவதில் குறியாய் இருக்கின்றனர். ஸ்டார்ட்டருக்கு முன் காபி வந்துவிடும். சுகாதாரம் கிடையாது. Ambience பற்றி பேசவே கூடாது. Name Boardல் since 1948 என்று எழுதியிருக்கிறார்கள். 48லிருந்தே இவனுங்க torture ஆரம்பிச்சிருச்சு போல.


இருக்கிறதுலேயே பெஸ்ட் அடையார் ஆனந்தபவன்தான். எதை வேண்டுமானாலும் தைரியமாக ஆர்டர் பண்ணலாம். நிச்சயம் ருசியாக இருக்கும். self service தான் இங்கே ஒரே பிரச்சனை. சரியான கூட்டம். இப்போது expand பண்ணி கட்டியும் கூட்டத்தைச் சமாளிக்க முடியவில்லை. ஆனால் பொறுமையாக queueவில் நினைறால் நல்ல சாப்பாடு சாப்பிடுவது நிச்சயம்.

Monday, October 4, 2010

பணமும், பணக்காரர்களும்


பணம் படைத்தவர்கள் மட்டுமே இந்தியாவில் மதிக்கப்படுகின்றனர். வேறெவரும் இங்கே மதிக்கப்படுவதில்லை - ஒரு சமீபத்திய சர்வேயின் முடிவுகள். இது டைம்ஸ் ஆஃப் இண்டியா நியூஸ்பேப்பரில் சமீபத்தில் வந்த ஒரு செய்தி. இதனோடு நான் ஒரு வரியைச் சேர்க்க விரும்புகிறேன் : இந்தியாவில் பணம் படைத்தவர்களுக்கும், நான் பணம் படைத்தவள் என்பதைக் காட்டிக் கொள்கிறவர்களுக்குமே மதிப்பு. இக்கருத்திற்கு நான் ஒரு ஆதாரத்தையும் தர விரும்புகிறேன். கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு முன் நாங்கள் மும்பையில் வசித்தபோது நடந்த ஒரு சம்பவம் - இதுவும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் தான் வெளியிடப்பட்டது. ஒரு டாக்டர் உ.பி மாநிலத்திலிருந்து மும்பையைச் சுற்றிப்பார்க்க வந்தார். சாதாரண விவசாயக்குடும்பத்தில் பிறந்து, படித்து (படிப்பால் மட்டுமே) மருத்துவர் ஆனவர். அவருடைய தாயாருக்கு புகழ் பெற்ற தாஜ் ஹோட்டலுக்குச் செல்ல வேண்டும் என்பது ஒரு கனவாகவே இருந்திருக்கிறது. நிறைவேற்றுவது ஒரு நல்ல மகனின் கட்டாயக் கடமை அல்லவா? குடும்பத்தோடு அங்கே சென்றிருக்கின்றனர். தாயார் கரிய நிறமும்,எளிய தோற்றமும் கொண்டவர் போலும். மகனும் அப்படியே. உள்ளே செல்ல முயன்ற அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. அந்த மகன் ' நான் ஒரு டாக்டர். நீங்கள் கொடுக்கும் பில்லை என்னால் செட்டில் செய்ய முடியும் ' என்று சொல்லி தன் வங்கி அட்டைகளையும் காண்பித்துள்ளார். நோ யூஸ். அனுமதி மறுப்புக்கு Hotel management சொன்ன காரணம் அவர்கள் ரப்பர் செப்பல் அணிந்திருந்தார்களாம்.(நாங்கள் gateway of india சென்றிருந்தபோது கவனித்த விஷயம் - அந்த ஹோட்டலிலிருந்து வெளியே வந்த வெளிநாட்டவர் பலரும் அரைக்கால் சட்டையும், ரப்பர் செருப்பும் அணிந்து கொண்டு கையில் ஒரு வாட்டர் பாட்டிலுடனும் இருந்தனர்).
இங்கே நான் ஒரு சிறு தகவலைத் தெரிவிக்க விரும்புகிறேன். தாஜ் ஹோட்டலை ஜாம்ஷெட்ஜி டாடா துவங்கியதற்கான காரணம், 19ம் நூற்றாண்டில் அப்போது புகழ் பெற்று விளங்கிய வெள்ளையர்கள் மட்டுமே செல்லக்கூடிய அப்பல்லோ ஹோட்டலில் டாடாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.எனவே அனைத்து இந்தியர்களும் செல்லத்தக்க உயர்தர ஹோட்டலை நிர்மாணிக்க விரும்பி அந்த ஹோட்டலைக் கட்டுவித்தார்.1904ம் ஆண்டு அது துவங்கப்பட்டது.
இதிலிருந்து நாம் புரிந்துகொள்வது - நம்மிடம் பணம் இருக்கிறது என்பதை நாம் நம் நடை, உடை, செருப்பு, நகைகள் வாயிலாகப் பறை சாற்றினாலன்றி நம்மை ஒரு பயல் மதிக்கப்போவதில்லை.நம்மைப் பற்றியிருக்கும் நிறவெறியும், பணவெறியும் என்று ஓயும்?

என்னை சிந்தனையில் ஆழ்த்திய மற்றொரு நிகழ்ச்சி - பணம் படைத்தவர்களுக்கு எதிராகவோ, அவர்களைப் பற்றியோ எந்த ஒரு கருத்தோ, தகவலோ அவர்கள் ஒப்புதலின்றி யாரேனும் சொன்னால் அவர்கள் அடையும் நிலை Oh my God :(

நடிகர் சிவக்குமாரைப் பற்றி எனக்கு மிகவும் நல்ல opinion இருந்தது. அவரது நல்லொழுக்கம், பேச்சுத்திறன், கடமையுணர்வு etc. சமீபத்தில் அவரது மகன் கார்த்தி நடித்த 'நான் மகான் அல்ல' படம் வெளியானது. அதன் தொடர்ச்சியாக PRO நிகில்முருகன் தன்னுடைய Twitter accountல் ஒரே ஒரு வரி comment ஒன்று போட்டார் - "Why poor opening for Naan Mahan Alla?"
அவ்வளவுதான். உடனே நடிகரின் வீட்டிலிருந்து கண்டனங்கள். உடனடியாக அவர் சூர்யாவின் PRO பதவியிலிருந்து நீக்கப்பட்டார். ஸ்ருதி கமல்ஹாசன் - எனக்கு நிகில் முருகன் PRO அல்ல என்று அறிக்கை வெளியிட்டார். (ஏற்கனவே நிகில் அவருக்கு PRO அல்ல. அவருடைய தந்தை கமலுக்குத்தான் நிகில் PRO - எல்லாம் ஏழாம் அறிவு படுத்தும் பாடு). நிகில் முருகன் ஒன்றும் சாதாரண ஆளில்லை. த்ரிஷா, ஹாரிஸ், கமல் போன்ற பெரிய நட்சத்திரங்களுக்கும், பெரிய பட்ஜட் படங்களுக்கும் PRO வாகப் பணியாற்றியவர். தன்னுடைய துறையில் வல்லுனர். ஒரே ஒரு வரி உண்மைக்காக இந்த action எடுக்கப்பட்டிருக்கிறது. பணம் படைத்த சிவக்குமார் தன் மகனைப் பற்றிய ஒரு தகவலை வெளியிட்டதற்காக நிகில் மேல் எடுத்திருக்கும் நடவடிக்கை அவருடைய சகிப்புத்தன்மையின் லெவலைக் காட்டுகிறது.

Tuesday, September 28, 2010

பெற்றோரின் திகில் நிமிடங்கள்

3 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் அனுபவிக்க நேரும் திகில் நிமிடங்கள் இவை.

1. சாயங்காலம் 5 மணிக்குப் பிள்ளை தூங்கத் துவங்கும் போது நமக்கு வயிற்றுக்குள் பயப்பட்டாம் பூச்சிகள் பறக்கும். ஏனெனில் மாலை 5 மணிக்குத் தூங்கும் பிள்ளை இரவு 12 மணிக்கு ஃப்ரஷ்ஷாக எழுந்து தோசை அல்லது சப்பாத்தி கேட்கும். அப்புறம் காம்ப்ளான் கேட்கும். அப்புறம் ஒரு round toilet போய் முடிக்கும். பிறகு உற்சாகமாக விளையாடத் துவங்கும். மறுபடி அவர்கள் தூங்க நள்ளிரவு 2 ஆகிவிடும்.நாமும் 2 மணிக்குத் தூங்கி, காலை 6 மணிக்கு எழுந்து - அப்பா சொல்லும் போதே கண்ணக் கட்டுதே
2. கடையில் நாம் interestஆக shopping செய்து கொண்டிருக்கும் போது பிள்ளைகளுக்கு bathroom வரும் போது - ஏனெனில் நாம் toilet எங்கேயிருக்கிறது என்று கண்டுபிடித்து போவதற்குள் வழியிலேயே எல்லாம் ஆகிவிடுமோ என்று. (ஏம்ப்பா கடை முதலாளிகளே, அது ஏன் toiletஐ உங்கள் கடையின் பிரம்மாண்டமான ஒளி விளக்குகள் அலங்கரிக்கும் 3 அல்லது 4 தளங்களுக்கு மேலுள்ள junk materials போட்டு வைக்கும் தளத்தில் ஒரு ஒற்றை குண்டு பல்ப் ஒளி சிந்தும் terror setupல் toiletஐ வைத்திருக்கிறீர்கள் - இது அனேகமாக முக்கால்வாசி பெரிய்ய ஜவுளிக்கடல்களிலும், நகைமாளிகைகளிலும் நாங்கள் பார்த்தது)

3. ப்ளைட் லேண்டிங் மற்றும் டேக் ஆஃபின் போது - காது அடைப்பதனால் குழந்தைகள் அழத்துவங்குவர். நாம் முன்னேற்பாடாக கொண்டு சென்ற ear plugs (அது ஒண்ணுமில்லீங்க - காதுல வச்சிக்க பஞ்சு தான்) கட்டாயம் கையில் அந்த நேரம் சிக்காது. குழந்தையின் வாயில் விரல வைங்க. விரலச் சப்பினா காது வலிக்காது என்பார்கள். அது ஆன்னு கத்திட்டு இருக்கும் போது எங்க போயி வாயில வெரல வச்சு அது சப்புறது ???!!! pilotஅத் தவிர cabin crewல இருக்குறவங்க ஆரம்பிச்சு எல்லாரும் நம்மள தான் பாப்பாங்க. ஒண்ணும் செய்ய முடியாது. நாம யாரயும் பாக்காத மாதிரி உக்காந்துக்க வேண்டியது தான் :)

4. Parents-Teachers meetingன் போது உங்க பொண்ணு என்ன சொல்றா தெரியுமா என்று teacher ஆரம்பிக்கும் போது - ஐயையோ என்னத்த சொன்னான்னு தெரியலயே - சும்மா சும்மா parents வந்து உங்கள meet பண்ண சொல்றீங்க. எங்க அம்மா college போக வேணாமா என்று சொன்னாளாம். அது correct தானே என்று நினைத்துக்கொண்டு மகளைக் கண்டித்து விட்டேன் (வேறென்ன செய்றது. நெனக்கிறதயெல்லாம் சொல்ல முடியுமா என்ன ;) )

5. 2 பிள்ளைகள் இருக்கும் வீட்டில் ஒரு பிள்ளையின் வகுப்பில் மட்டும் யாருக்கோ பிறந்தநாள். அவள் கொடுத்த சாக்லேட்டைக் மெனக்கெட்டு கொண்டு வந்து வீட்டில் தம்பியிடம் காட்டி - எங்க classல பூஜாக்கு birthday. ஒரு chocolateதான் குடுத்தா என்று பொறுப்பாகச் சொல்லிவிட்டு அதை டபக்கென்று வாயில் போட்டுக்கொள்ளும் போது. சின்னது அலற ஆரம்பிக்கும். கொடுமைக்குன்னு அந்நேரம் வீட்டில் வேறு chocolateஏ இருக்காது. என்ன செய்வது ஆளுக்கு 2 அடி கொடுக்க வேண்டியதுதான்

Thursday, September 23, 2010

ஆயிரம் வருட அற்புதம் - பெரிய கோயில்


சமீபத்தில் தஞ்சை பெரிய கோயிலைச் சென்று பார்க்கும் பெரும் பேறு பெற்றேன். பெரிய கோவிலை நான் மறைவதற்குள் தரிசிக்க வேண்டும் என்பது என் பேரவா. வாசுவால் அது நிறைவேறியது. ஆயிரம் வருட அந்த அற்புதத்தைத் தரிசிக்க கண் கோடி வேண்டும்.


கேரளாந்தக நுழைவாயில்

கோவிலின் வாசலில் இறங்கியவுடன் தென்படும் மதில் சுவரும் கேரளாந்தக நுழைவாயிலும் காண்போரை 1000 வருடங்கள் பின்னோக்கி இழுத்துச்செல்கின்றன. அங்கிருந்தே ஒரு time machineல் ஏறி 1000 வருடங்கள் பின் சென்ற உணர்வுடன் தான் உள்ளே நுழைந்தேன்.

உள்ளே சென்றவுடன் சட்டென்று என்னைத்தாக்கிய உணர்வை எனக்கு எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. நெடிதுயர்ந்த , கம்பீரமான இறைவன் குடி கொண்டுள்ள அந்த ஸ்தலம் , மனித மனத்தில் உள்ள 'நான்' என்ற அகந்தையை அடித்து நொறுக்குகிறது. கண்ணில் நீர் மல்கி நிறைந்து நிற்கிறது. மனம் இயங்காத பெருநிலையில் நின்றது. 'ஒன்றை நினைத்து, ஒன்றை மறந்து ஓடும் மனம் எல்லாம் நீயென்றறிந்தால் எங்கே இயங்கும் பராபரமே' என்று தாயுமானசுவாமிகள் பாடியதன் பொருள் நொடியில் விளங்குகிறது. ஏதோ எல்லாப் பிரச்சனைகளும் என்னுடையது போலவும், இதை தீர்க்கப்போவது நானே தான் என்ற நினைப்பும் அகன்றது. இறை பெருமானே பிரச்சனை உன்னுடையது. தீர்க்கப்போவதும் நீ. நான் உன் கையில் வெறும் களிமண் என்ற சரணாகதி நிலை கிடைத்தது. அறிவெல்லாம் கடந்த இறை அமைதி மனத்தை நிறைத்தது.எங்கும் நிறை இறையின் இனிய பிரசன்னம் அத்தலத்தை நிறைக்கிறது. நண்பர்களே தஞ்சை பெரிய கோவில் ஏதோ ஒரு மதத்தினருக்கு மட்டுமே உரிய வழிபாட்டுத்தலமாக நான் கருதவில்லை. இது மானுடம் முழுமைக்குமான கோவில். 1000 ஆண்டு நிறைவுறும் இவ்வேளையில் அக்கோவிலைக்கட்டுவித்த மாமன்னன் ராஜராஜனுக்கு நானும் ஒரு தமிழச்சி என்ற பெருமிதத்துடன் என் வணக்கத்தைச் சமர்ப்பிக்கிறேன்.


கோவிலின் கல்வெட்டுக்களில் தானம் கொடுத்தவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருக்கிறதாம். முதல் தானம் ராஜராஜனுடையது. 'நாங்கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும்' என்று கல்வெட்டு துவங்குகிறதாம். தான் மட்டும் இக்கோவிலைக்கட்டியதாய் ஒரு சிறு நினைப்பு கூட அந்த மாமனிதனுக்கு இல்லை. - நன்றி பாலகுமாரன், தினமலர் - என்ன ஒரு பெருந்தன்மை இம்மாமன்னனுக்கு. இத்தகையோர் தோன்றிய இப்புண்ணிய பூமியில் நான் இருக்க நேர்ந்ததற்கும், இக்கோவிலைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றதற்கும் எல்லாம் வல்ல, எங்கும் நிறை இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்

சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:

Saturday, September 18, 2010

எடின்பர்க் அனுபவங்கள்


க்ளாஸ்கோ ஏர்போர்ட்டை விட்டு வெளிய வந்ததும் தோணுன மொத விஷயம் - எப்புர்றா இந்தக் குளுர சமாளிக்கப்போறோம்ங்கிறதுதான். டிசம்பர் மாசம்க. வாசு கிட்ட இந்தியாலயே கேட்டேன் அங்க குளுருமான்னு. ஆமா அப்டீன்னாரு. இந்த எடத்துல வாசுவப் பத்தி கொஞ்சம் சொல்லணுங்க. ஒரு படம் நல்லாலன்னு வைங்களேன்- அத நான் இப்டி சொல்லுவேன் :- ஐயோ சகிக்க முடியல. படமா அது. மொக்க. அந்த தியேட்டர் பக்கமே போயிராதீங்க. அதையே வாசு :- நல்லால்ல. ஒரே வார்த்தையோட முடிச்சுக்குவார்.(வடிவேலு வலிக்குதான்னு கேட்டா லைட்டா அப்டீம்பாரே அந்த மாதிரி). அவரு ஆமான்னு சொன்னப்பவே நான் உஷாராயிருக்கணும். அந்தக்குளுர நான் எப்டி சொல்லியிருப்பேன்னா - என்னா குளிரு. தாங்கவே முடியல. எப்டித்தான் இங்க இருக்காய்ங்களோ. போன பெறவில பனிக்கரடியா இருந்திருப்பாய்ங்க போல. உண்மைலே தாங்க முடியாத குளுருங்க. என்ன இப்டி குளுருதுன்னேன் வாசு கிட்ட. நான் தான் அப்பவே சொன்னேன்ல என்றார். நல்லா சொன்னீங்க போங்கன்னு நெனச்சுக்கிட்டேன். வீட்டுக்குப் போயாச்சுங்க. வீட்ட பசங்க ரெண்டும் பாத்துட்டு, சின்னது சொல்லுது என்ன இந்த வீட்ல ஃபேனே இல்ல அப்டீங்கிறான். ரொம்ப முக்கியம்டா அப்டீன்னேன்.
காலையில எந்திரிச்ச ஒடனே எங்க வீட்ல ஒரு ரொட்டீன். 2 பசங்களும் பெட்லருந்து ஜம்ப் பண்ணி கிச்சனுக்கு ஒரே ஓட்டம் யாரு எங்கிட்ட ஃபர்ஸ்ட் வரதுன்னு. எடின்பர்க் வீட்டிலயும் அதேதான். அங்க wooden floorங்க. எங்க அப்பார்ட்மெண்ட் 1 மாடில. வேகமா நடந்தாலே டங்கு டங்குன்னு சத்தம். 2வது நாளு ஒரு அந்த ஊரு பாட்டி வந்து கதவத் தட்டுனாங்க. எனக்கு பகீர்னு ஆயிருச்சு. பின்ன அவங்க பேசுற இங்கிலீஷ் புரிஞ்சா தானே. பயபுள்ளக வேற மாதிரி பேசுதுங்க. (அவன் இங்கிலீஸ் தப்பா கத்து வச்சிருக்காம்ப்பா - கவுண்டமணி ஸ்டைல்ல படிச்சுக்கோங்க) ஒண்ணும் புரிய மாட்டேங்குது. நல்ல வேள பாட்டி மெதுவா பேசுனாங்க. ஐ கான் ஹியர் சம் பேங்கிங் ஆன் த ஃப்ளோர். மை டாக்ஸ் (dogs) could not sleep. ask ur kids not to run ன்னு சொல்லிட்டு போனாங்க. டேய் நாய் தூங்கணுமாம்டா. ஓடுனா பிச்சுருவேன்னு மெரட்டி வச்சேன்.
அங்க ட்ராஃபிக் சிக்னல் நாமளே போட்டுக்கலாம்ங்க. நடக்குறவங்க ரொம்ப கம்மி. அதனால ரோட க்ராஸ் பண்ணனும்னா சிக்னல் போஸ்ட்ல ஸ்டாப் பட்டன நாமளே அழுத்திக்கலாம். வண்டிலாம் 20 விநாடி நிக்கும். நாம cross பண்ணிக்கலாம். இங்க தாங்க எங்க குடும்பத்துக்குப் பிரச்சனையே. எங்களுக்கு 2 பிள்ளங்க. இந்தப்பக்கமிருந்து அந்தப்பக்கம் போகணுமின்னா, பெரிய புள்ள stop button அ press பண்ணிருச்சுன்னா, சின்னது ஒரே கத்தா கத்திக்கிட்டே வரும் நாந்தான் press பண்ணுவேன்னு and vice versa. இதுனால என்ன ஆகும்னா ஒரு பிள்ள இந்தப்பக்கம் press பண்ண ஒடனே அந்தப்பக்கம் cross பண்ணிப் போய் திரும்ப கத்துற இன்னொன்ன சமாளிக்கிறதுக்காக அந்தப்பக்கம் stop press பண்ணி இந்தப்பக்கம் வருவோம். இப்டியே நாம இப்ப எந்தப்பக்கம் போகணும்னு confuse ஆகி ஒரு வழியா போவோம்னு வைங்களேன். ஒன்னு பெத்து ஒளி மயமா வாழுன்னு இதெல்லாம் பாத்துதான் சொன்னாங்க போல பெரியவங்க.

Wednesday, September 15, 2010

ஒரு சாமான்யனின் இயலாமை கோபம்

நான் ரஜினியின் தீவிர ரசிகை. ரஜினியின் முள்ளும் மலரும், ஜானி, படிக்காதவன், குரு சிஷ்யன், தளபதி முதல் சந்திரமுகி வரை (சிவாஜி பார்க்கவில்லை) பார்த்தாயிற்று. ஜானியைப் போன்றதொரு இனிமையான, டீசன்ட்டான ரொமாண்டிக் படம் இன்னும் வரவில்லை. ஆனால் எந்திரன் பார்க்கப் போவதில்லை என்று தீர்மானமாக முடிவெடுத்து விட்டேன். காரணம் 'சன் பிக்சர்ஸ்'. அவர்களின் தொடர்ச்சியான விளம்பரம் வெறுப்பை ஏற்படுத்துகின்றதென்றால் அக்குடும்பத்தின் அனைத்து துறைகளிலுமான ஆக்டோபஸ் ஆக்கிரமிப்பு அக்குடும்பத்தின் மேல் ஒரு aversionஐயே ஏற்படுத்திவிட்டது. கலாநிதி மாறன், உதயநிதி, துரை தயாநிதி, அறிவுநிதி, அருள்நிதி, அந்த நிதி, இந்த நிதி - இவர்கள் கடும் உழைப்பால் மட்டும் இவர்களின் கம்பெனியைத் துவங்கவில்லை, நடிக்கத்துவங்கவில்லை. மாநிலத்திலும், மத்தியிலும் இவர்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி நினைத்தவுடன் ஒரு படத்தைத் தயாரித்து முடிக்கின்றனர். தங்களது சேனல்களை வைத்து ஓயாத ஒழியாத விளம்பரம். கருணாநிதி திரைப்படத்திற்கு வசனம் எழுதுவதற்கு அவருக்கு சம்பளம் 50 லட்சம் ரூபாயாம். இது அவரது தற்சமய எழுத்து திறமைக்காக கொடுக்கப்படும் பணமல்ல என்பது ஊரறிந்த ரகசியம். இன்னொரு விஷயம் - இவர் தனது பேரன்மார்கள் தயாரிக்கும் படத்திற்கு வசனம் எழுதுவதில்லை.(அப்புறம் படம் ஓட வேணாமா?? ;)
கலாநிதி மாறனின் சொத்து மதிப்பு USD 1.2 Billion ஆம். இந்திய மதிப்பில் இது எவ்வளவு ரூபாய் என்று யாராவது சொன்னால் நல்லா இருக்கும். உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கப்போகிறாராம். அவரின் மனைவி பத்திரிக்கை நடத்துகிறார். இப்படி இக்குடும்பத்தின் ஊடகத்துறை monopolyயால் 58 சிறிய பட்ஜட் படங்கள் வெளியிடப்பட முடியாமல் பெட்டியில் முடங்கிக் கிடக்கின்றனவாம். எத்தனை குடும்பங்களை இவர்கள் மறைமுகமாக நசுக்குகிறார்களோ??!!. இன்னொரு காமெடி - சமீபத்தில் சென்னையில் பார்லிமென்ட் கேள்வி-பதில் நேரத்தில் எப்படி பதிலளிப்பது, எப்படி பேசுவது என்று எம்பிக்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டதாம் - the funny part is - பார்லிமெண்ட்டில் எந்தக் கேள்விக்கும் பதிலளிப்பதில்லை. பேசுவதேயில்லை என்று அவைத்தலைவர் மீராக்குமார் மற்றும் பலரால் (உண்மையாக) குற்றம் சாட்டப்பட்ட மு.க.அழகிரியின் தலைமையில் இப்பயிற்சி வழங்கப்பட்டதாம். என்ன கொடுமை சரவணன் இது :(

இந்த திங்கட்கிழமை காலை என்னுடைய பேராசிரியரைப் பார்க்க செல்ல வேண்டியிருந்தது. அடையாறு டிப்போ செல்ல வேண்டும். கஸ்தூரிபாய் நகர் ஸ்டேஷனில் இறங்கினேன். ரோட்டைக் க்ராஸ் பண்ணி ஆட்டோ எடுக்க கஷ்டப்பட்டுக்கொண்டு (குறுக்கே ஓடி, மீடியனில் தாவி ஹெவி டிராஃபிக்கில் சர்க்கஸ் செய்ய நேரிடும்) ஸ்டேஷனிலிருந்தே ஆட்டோ எடுத்துக்கொண்டேன். ஆட்டோ டிரைவர் செய்தித்தாளை மடித்துவிட்டு வண்டி எடுத்தார். என்ன நியூஸ் படித்துக்கொண்டிருந்தாரோ தெரியல. செம கடுப்பாக இருந்தார். 1 ரூவா அரிசிய யாரு மேடம் சாப்பிடுறா? எங்க பாத்தாலும் இவனுங்க தான். நேத்து நான் எந்திரன் ட்ரெய்லர் பாக்கல மேடம். அதுக்கு பதிலா விஜய் டீவி முரளி ஷோ பாத்தேன் மேடம் - இன்னும் பல சொன்னார்.

ஒரு முடிவுக்கு வந்தேன். இவர்களைச் சாமான்யனான என்னால் எதுவும் செய்ய இயலாது. மிஞ்சி மிஞ்சிப் போனால் எந்திரன் பார்க்காமல் இருந்து கொள்ளலாம் அந்த ஆட்டோ ட்ரைவரைப் போல்.

சினிமாப் பாடல்கள்

சில சினிமாப் பாடல்களை எப்போது கேட்கும் போதும், அப்பாடலை நான் முதன் முதலில் கேட்க நேர்ந்த நேரத்தின் குறிப்பிட்ட காட்சிகள் மனதிற்குள் நிழற்படமாய் மறுபடி, மறுபடி தோன்றும். அச்சந்தர்ப்பத்தில் நான் இருந்த மனநிலைக்கும் - அது மகிழ்ச்சியோ, சோகமோ - மறுபடியும் செல்ல நேரிடுகிறது. நாங்கள் முன்பிருந்த லைன் வீட்டின்(கிட்டத்தட்ட 10 வீடுகள் ஒரே வரிசையில் இருக்கும். கொடுமைங்க அது) தெரு முனை டீக்கடையில் ரேடியோ இருக்கும். காலையிலேயே விவிதபாரதியின் வர்த்தக ஒளிபரப்பு உச்சஸ்தாயியில் அலறும். 'ஒரு கிளி உருகுது', 'ஓ மானே மானே', 'விக்ரம்' பாடல்களை இப்போது கேட்கும் போதும் அக்கடையில் நாங்கள் வாங்கிச்சுவைத்த வெங்காய பக்கோடாவின் சுவை நாவில் வருகிறது.
சிந்துபைரவி பாடல்கள் பக்கத்து வீட்டு செந்திலக்காவை (அக்கா தான். அவர்களின் முழுப்பெயர் செந்தில் செல்வி) நினைவூட்டும். அந்தப்படம் வந்த புதிது. பாடல்கள் மெகா ஹிட். நான் ஏற்கனவே சொன்னது போல் ரேடியோ டீக்கடையில் மட்டுமே இருக்கும். இந்நிலையில் tape recorder பற்றியெல்லாம் பேசவே முடியாது. இப்படியொரு சூழலில் செந்திலக்கா தன் கல்லூரி தோழியிடம் ஒரு டேப் ரிக்கார்டர் தேத்திக்கொண்டு வந்தார், சிந்து பைரவி காசட்டோடு. 10 வீட்டுப் பிள்ளைகளும் அவர்கள் வீட்டில். பாடறியேன் படிப்பறியேன், தண்ணித்தொட்டி பாடல்களை ரசித்து தள்ளினோம். அக்கா பார்க்காத நேரம் அதைத் தொட்டுப்பார்த்துக்கொள்வோம். நண்பர்களே 36 inch டிவி கொடுக்காத சந்தோஷத்தை அந்த tape recorder அன்று தந்தது.
மை டியர் குட்டிச்சாத்தான் படத்தில் 'பூ வாடை காற்றே' என்றொரு பாடல். இளம் குழந்தைத்தோழர்கள் மகிழ்ந்து கழித்து விளையாடும் காட்சிகளைக் கொண்ட பாடல். இதை இப்போது எங்கும் கேட்கக்கூட முடியவில்லை :( . என் இனிய பள்ளித் தோழிகள் நபீஸா, திலீபா (5th std வரை என்னோடு படித்தவர்கள். )திலீபா இலங்கையிலிருந்து வந்தாள். அவளின் பெயர்க்காரணம் இப்போது தான் எனக்குப் புரிகிறது. Contact மீண்டும் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் ??!! என்னருமை திலீபா எங்கிருக்கிறாய்? . நபீஸாவின் அப்பா சிங்கப்பூரில் கடை வைத்திருந்தார். அவர்களுடைய வீடு பெரிய பங்களா. காம்பவுண்டுக்குள் ஒரு கட்டைச்சுவர் இருக்கும். அந்தப்பாடலில் பிள்ளைகள் சுவரின் மேல் ஏறி நடப்பார்கள். ஃபேனில் அமர்வார்கள். நாங்கள் அதைப்போல் செய்வதாக நினைத்து அந்தக்கட்டைச்சுவரின் மேல் ஏறி ஆடுவோம் - ம் இனிய நாட்கள் அவை.
சோகம் இனி இல்லை பாடல், நாங்கள் NTSE வகுப்புக்கு காலையில் (7 மணி) வகுப்பறைகள் திறக்கக் காத்திருந்த - மரத்தடியில் அமர்ந்து கொண்டு, புல்லின் நுனியில் பனித்துளிகளை உதிர்த்துக்கொண்டு - போது எங்கோ ஒலித்தது. அந்தப்பாடலை இப்போது கேட்கும் போதும் அந்த நுனிப்புல்லின் ஈரம் விரலில் குறுகுறுக்கிறது.
9th std class roomல் அமர்ந்திருந்த போது ஒலித்த 'பூங்காத்து திரும்புமா' பாடலின் 'எனக்கொரு தாய்மடி கிடைக்குமா?' வரி கண்ணீர் உகுக்கச் செய்தது. (அம்மா என்னை 6th லிருந்து ஹாஸ்டலில் விட்டுவிட்டார்கள்)
College I yr ல் இருந்த போது அன்று Sports Day. Physics allied வகுப்பு. groundல் பாட்டு போட ஆரம்பித்து விட்டார்கள். அந்த சத்தத்தில் வகுப்பு முடியவில்லை. அதனால் ஃப்ரி hour விட்டு விட்டார்கள். அந்த எதிர்பாராத ஃப்ரீ hour நிமிடத்தின் சந்தோஷம் இப்போதும் 'ராஜனோடு ராணி வந்து' - சதிலீலாவதி கமல் படம் - பாடலைக் கேட்கும்போது ஏற்படுகிறது.
நாங்கள் இதற்கு முன் இருந்த வீடு ஒரு independent house. பக்கத்து வீட்டில் கட்டட வேலை நடந்து கொண்டிருந்தது. கொத்தனார்கள் எப்போதும் ரேடியோ வைப்பர். எங்கள் வீட்டின் முன் பெரிய தோட்டம் இருக்கும். ராத்திரி நேரம் பூச்சிகள் பயத்தால் பிள்ளைகளை வெளியே விட மாட்டோம். ஒரு நாள் இரவு 8 மணி இருக்கும். என் பெண்ணை வீட்டிற்குள் காணவில்லை. அந்நேரம் அவள் வயது 4. ஆளுக்கு ஒரு பக்கம் தேடினோம். பார்த்தால் கதவு திறந்து இருந்தது. இவள் தோட்டத்தில் நின்று கொண்டு பக்கத்து வீட்டு ரேடியோவில் இருந்து வரும் 'கல்லை மட்டும் கண்டால்' பாட்டை ரசித்துக்கொண்டு நின்றாள். இசையால் ஆகர்ஷிக்கப்படுவதற்கு வயது வரையறை ஏதும் இல்லை போலும். May be இந்தப்பாடலை பின்னொரு நாள் அவள் கேட்கும் போது, தோட்டத்தில் நின்று கொண்டிருந்த தினம் அவளுக்கு நினைவிற்கு வரலாம் :)

Monday, September 13, 2010

மனிதம்?

ஒரு சாயங்கால வேளை. பிள்ளைகள் இருவரும் போர்ட்டிகோவில் விளையாடிக் கொண்டிருந்தனர். இருவரின் சைக்கிள்களும் ஒன்றையொன்று முந்திக்கொண்டு பறந்து பொண்டிருந்தன. நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு அம்மா பொம்மைகள் விற்றபடி வந்து கொண்டிருந்தார். தலையில் ஒரு கூடை. கூடையின் பார்டரில் நீளமான குச்சிகள் செருகப்பட்டிருந்தன. ஒவ்வொரு குச்சியின் உச்சியிலும் களிமண்ணாலான பொம்மைகள். பிள்ளையார், கங்கையைத் தலையில் தாங்கிய சிவபெருமான், பார்க்கடலில் பள்ளிகொண்ட நாராயணன், அம்மன் இப்படி பெரிய பொம்மைகள். நடுவே ஒரு டால்ஃபின் துள்ளிக்குதித்துக் கொண்டிருந்தது. என் மகனின் ஃபேவரைட் இந்த மீன்கள். டிஸ்கவரி தொ.கா வில் எந்நேரமும் இதைத்தான் பார்ப்பான். பிளாஸ்டிக் மற்றும் எலக்ட்ரானிக் பொம்மைகளில் மட்டுமே விளையாடும் இக்காலத்துப் பிள்ளைகளுக்கு மண் பொம்மையில் விளையாடும் சுகம் தெரியவேண்டும் என்று நினைக்கிறேன். (எலக்ட்ரானிக் விளையாட்டு பொம்மையில் கற்பனைகளுக்கும் பாவனைகளுக்கும் இடமில்லை. இவ்வகை பொம்மைகள் ஆடுகின்றன, பாடுகின்றன, பேசுகின்றன and what not??? ஆனால் மண் பொம்மைகள் ஆடுவதாகவும், பாடுவதாகவும், பேசுவதாகவும் நாம் பாவிக்க வேண்டியிருக்கும். எனவே குழந்தைகள் அழகான ஒரு உலகத்தைச் சிருஷ்டித்துக் கொண்டு அதில் விளையாடுவர்)

பொம்மை விற்பவரைக் கூப்பிட்டாயிற்று. உள்ளே குட்டி குட்டியாக - திராட்சைக்கொத்தைக் கடிக்கும் அணில், மரக்கிளையில் அமர்ந்திருக்கும் ஜோடிக்கிளிகள், ஜோடிப்புறா, கன்றை நக்கிக்கொண்டிருக்கும் தாய்ப் பசு, துள்ளிகொண்டிருக்கும் இரண்டு டால்ஃபின்கள், தும்பிக்கையை உயர்த்திக்கொண்டிருக்கும் யானை - அடேயப்பா மனதைக் கொள்ளை கொள்ளும் அழகுடன். பிள்ளைகளிடம் யார் யாருக்கு எது வேணுமோ எடுத்துக்கோங்க என்றேன். மகள் ஒரு ஒட்டக பொம்மையை எடுத்துப்பொண்டாள். மகன் டால்ஃபினைத் திரும்பிக் கூடப் paarkkavilallai.(பிள்ளைகளிடம் ஆச்சரியத்திற்குப் பஞ்சமேயிர்க்காது. இன்று மிகவும் பிடிக்கும் பொருள் நாளை தேவையே படாமல் போவதும், விடுமுறையை முழுவதும் கழித்த தாத்தா பாட்டியின் ஊர் ஞாபகம் அடுத்த விடுமுறைக்குள் மறந்து விடுவதும் சர்வ சாதாரணம்). வாங்கி முடித்து பணமும் கொடுத்தாயிற்று. அந்த அம்மா கூடையைத்தூக்க ஒரு கை கொடுக்கச் சொன்னார். ம்ஹும் ஒரு levelக்கு மேல் என்னால் தூக்க முடியவில்லை. சரியான கனம். ஒரு பக்கமா பிடிக்கிறம்மா. விழப்போகுது என்று என்னைப் பயமுறுத்திவிட்டார். நான் regularஆக காய் வாங்கும் பெண் காய்க்காரப்பெண் கூடையைத்தூக்கியபடி வந்து கொண்டிருந்தார். அவருக்கு நான் அடிக்கடி கூடையைத்தூக்கிவிடுவது, மாடி வீட்டாருக்கு காய் வேண்டுமா எனக் கேட்டுவருவது என்று நிறைய எடுபிடி வேலைகள் பார்த்துள்ளேன் அந்த நம்பிக்கையில் - 2 பேரா தூக்க முடியல இந்தக்கூடைய. நீங்க ஒரு கைபொடுங்களேன் என்றேன். அதெல்லாம் தூக்க முடியாது. எனக்கு காய வித்து முடிக்கணும் என்றபடி போயேபோய் விட்டார். திகைத்து நின்று விட்டேன். இன்னும் மீளவில்லை திகைப்பிலிருந்து - ஏனெனில் மறுநாள் காய்க்காரம்மா ஒன்றுமே நடவாதது போல் ஒரு கை குடும்மா கூடையத் தூக்க என்றார் என்னிடம்.

Monday, September 6, 2010

பிள்ளைகளிடம் கேட்கக்கூடாத கேள்விகள்

பின்வரும் கேள்விகளைப் பிள்ளைகளிடம் (வயது 3 மற்றும் 5) கேட்பதைக் கட்டாயம் தவிருங்கள். மீறி நீங்கள் கேட்டால் வரக்கூடிய பின்விளைவுகளைக் கொடுத்துள்ளேன்.
 1. ரெஸ்ட்டாரண்ட்டில் இருக்கும்போது - உனக்கு ஜூஸ் வேணுமா அல்லது ஐஸ்க்ரீம் வேணுமா? (முடிவில் இரண்டையும் வாங்கிக்கொடுத்துவிட்டு கூடவே Benadryl மற்றும் Chericofஐயும் வாங்கிக் கொண்டு வீடு திரும்ப நேரிடும்)
 2. ஞாயிற்றுக்கிழமையன்று - இன்று எங்கே போகலாம்? (மூத்தது சிட்டி சென்டர் ப்ளே ஏரியா என்று சொல்லும்; இளையது பீச் என்று சொல்லும். முடிவில் சண்டையைச் சமாளிக்க முடியாமல் கோவிலுக்குப் போய் குடும்ப ஒற்றுமைக்காகப் பிரார்த்தனை செய்துவிட்டு வீடு செல்வீர்கள்)
 3. அக்கா படிக்கிறால்ல நீயும் படிக்கலாம்ல? என்று இளையபிள்ளையிடம் (Bubbles, Pepper புத்தகங்களை 1001வது முறையாக நீங்கள் வாசித்து கதை சொல்ல நேரிடும். பிள்ளை ABC, 123 எல்லாம் படிக்காது. எனவே இந்தக்கேள்வி 'நமக்கு நாமே ஆப்பு வைக்கும் திட்ட'த்தின் கீழ் வரும்)
 4. வீட்டில் இருக்கும் கடைசித்துண்டு தின்பண்டத்தை (அது கடைசித்துண்டு ஆப்பிள், சாக்லேட், பிஸ்கட் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்) - தம்பிக்கு வேணாமாம். நீ சாப்பிடுறியா? (இந்தக் கேள்வி கேட்டு முடிந்தவுடன் தம்பிக்கு உடனடியாக அது தேவைப்பட்டுவிடும். அக்காவிடம் நீங்களே கேட்டுவிட்டதால் அக்காவுக்கும் அது வேண்டும். நாம் தலையைப் பிய்த்துக்கொள்ள வேண்டியதுதான். இதுவும் மேற்சொன்ன same scheme (நமக்கு நாமே ஆப்பு)ன் கீழ் வரும்.
 5. இருமலா இருக்கே பாப்பா. இன்னிக்கு வேணா லீவ் போட்ருலாமா? (நாம் யோசிக்கத்தான் செய்து கொண்டிருப்போம். அதற்குள் யூனிஃபார்மைக் கடாசிவிட்டு சேட்டை ஆரம்பித்துவிடும். அக்கா இல்லாமல் பாசமலர் தம்பியும் பள்ளி செல்ல மாட்டார்)

Saturday, September 4, 2010

டாக்டர் ஃபீஸ்

சிக்குன்குனியா வந்திருந்த சமயம் (அது சிக்கனா, சிக்குனா?). எல்லா jointsலும் சரியான வலி. ஒரு spoonஐக்கூடப் பிடிக்க முடியவில்லை. மாடி வீட்டு நைனு அம்மா, எதிர்த்த வீட்டு மாமி, பக்கத்து வீட்டு 5ஆம் வகுப்பு படிக்கும் பப்லு எல்லோரும் சிக்குன்குனியா வந்தா அப்டித்தான் வலிக்கும் என்றனர். ரைட் விடு. பொறுத்துக்க வேண்டியதுதான் என்று விட்டு விட்டேன். என் தம்பி அப்பு கிட்டத்தட்ட 6 மாதங்களுக்குப் பிறகு வீட்டிற்கு அன்று வந்தான். எனக்கு ஃபீவர் சரியாகி 2 வாரங்கள் இருக்கும். ஆனால் வலி அப்படியேதான் இருந்தது. அதற்காக வீட்டிற்கு வந்த பையனைச் சாப்பிட வைக்காமல் அனுப்ப முடியுமா? இந்த சமயங்களில் என் கணவர் வாசு சரவணபவன், அஞ்சப்பர், மெக்டொனால்ட்ஸ் என்று வெளுத்துக் கட்டிக்கொண்டிருந்தார். எனக்கும் வாங்கிக் கொண்டுவந்து விடுவார் (அவரு ரொம்ப நல்லவரு). பேசாம அப்புவுக்கும் ஏதாவது ஆர்டர் பண்ணிடலாம் என்றார். அதெல்லாம் முடியாது, நான் தான் சமைப்பேன் என்று களம் புகுந்தேன். குக்கரைத் தூக்க முடியவில்லை. காய்கறிகளைச் சரியான அளவில் கட் பண்ண முடியவில்லை. சர்வ் பண்ண முடியவில்லை. வாசு சொன்னதையே கேட்டிருக்கலாம் என நினைத்தேன். ஏன்க்கா வாத்து மாதிரி நடக்குறீங்க என்றான் என்னருமை சகோதரன் நான் வலியைப் பொறுத்துக் கொண்டு ஒரு டைப்பாக நடப்பதைப் பார்த்து. என் மகன் குள்ள குள்ள வாத்து என்று situatuation rhymes பாடத் துவங்கினான். எப்படியோ சாப்பாட்டு வேளையைச் சமாளித்தோம். கட்டாயமா டாக்டர்கிட்ட போயே ஆகணும் என்றார் வாசு. அதான் அப்டி தான் வலிக்கும்னு பப்லு சொல்லிட்டான்ல என்றேன். கடுமையாக என்னை முறைத்தார். சரி வுடு, டாக்டர்கிட்ட போய்டுவோம் என்றேன்.
ஹாஸ்பிட்டல் வந்தாயிற்று. டாக்டர் நான் சொல்வதைப் பொறுமையாக கேட்டார். ஃபீவர் சரியாகி 2 வாரம் ஆகுதா? ஆமா டாக்டர். பாதம், ankleலாம் வலிக்குமே நடக்க முடியாதே? ஆமா டாக்டர். விரல்லாம் வலிக்குமே pen அக் கூடத் தூக்க முடியாதே? ஆமா டாக்டர் என்றேன் enthuவாக. டாக்டர் எப்டி கண்டுபிடிக்கிறார் பாத்தியா என்று கண்களாலேயே கேட்டார் வாசு. எனக்கு கூட ஃபீவர் இப்பத்தான் சரியாச்சு. பாருங்க பேனாவப் பிடிச்சு prescription கூட எழுத முடியல. ஒரு 2 மாசத்துக்கு அப்டி தான் வலிக்கும். ஒண்ணும் பண்ண முடியாது. Rs.150 ஃபீஸ். முன்னாடி pay பண்ணிருங்க என்றார் டாக்டர். அஃப்கோர்ஸ் prescription ஒண்ணும் எழுதல. பாவம் டாக்டர். இப்ப தாங்க fever சரியாயிருக்கு. என்ன கொடுமை வேதாச்சலம்???!! (டாக்டர் பேரு வேதாச்சலம்) - இதத்தான 5th std பப்லுவும் சொன்னான்

Friday, September 3, 2010

புத்தகப் பரிந்துரை

25 வருடங்களுக்கு முன், என் சிறு வயதில் தொலைக்காட்சி ஒரு ஆச்சரியமான விஷயம். எங்கள் தெருவில் 2 வீடுகளில் மட்டுமே தொலைக்காட்சி இருந்தது. எதிர்த்த வீட்டு சிங்கப்பூர் முஸ்லிம் பாய் மற்றும் ஒரு செட்டியார் வீடு. வெளியே ஆடிக் களித்து வீடு திரும்பும் பிள்ளைகள் வீட்டில் புத்தகங்களையே பொழுதுபோக்கிற்கு நம்பி இருந்தோம். அப்படித் துவங்கிய வாசிக்கும் பழக்கம் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வெவ்வேறு பருவங்களில் வெவ்வேறு வகையான புத்தகங்கள்பிடித்திருந்தன, வழிநடத்தின. அவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
6 வயதிலிருந்து - 12 வயது வரை
பூந்தளிர் : இந்தப் புத்தகம் வாரமொருமுறை வந்து கொண்டிருந்தது. காக்கை காளி, கபீஷ் குரங்கு, மதியூகி மந்திரி, சுப்பாண்டி, வேட்டைக்கார வேம்பு, ஹரீஷ், சிறுவர் மலரில் பலமுக மன்னன் ஜோ இந்தக் கதாபாத்திரங்கள் மனதைக் கொள்ளை கொண்டு சென்றன. கோகுலத்தின் 16 பக்க நடுப்பக்க வண்ணக்கதை, ஃபேமஸ் ஆனவர்கள் எழுதிய 'என் குழந்தைப் பருவம்', பின்னர் அம்புலிமாமா, ரத்னபாலா, பாலமித்ரா, ராணி காமிக்ஸ், அமர்சித்திரக்கதை etc, etc. ஒரு விதத்தில் என் அப்பாவின் அகால மரணம் ஏற்படுத்திய இழப்பின் வலியை இப்புத்தகங்கள் மூலம் மறைத்துக் கொள்ள முயன்றேன் என நினைக்கிறேன்.

பின்னர் டீன் ஏஜில் மில்ஸ் & பூன்ஸ் நாவல்களும், ரமணிச்சந்திரன் நாவல்களில் வரும் கிரேக்க கடவுளை ஒத்த தோற்றத்தையுடைய கதாநாயகனும், குடும்பப்பாங்கான கதாநாயகியும், அவர்களின் காதலும் மனதைக் கவர்ந்தன. இச்சமயத்தில் Kahlil Gibranன் The broken wings என்ற புத்தகம் வாசிக்கக்கிடைத்தது. என்ன ஒரு அருமையான வாசிப்பனுபவம். இது கிப்ரான் 18 வயது இளைஞனாக இருந்தபோது சல்மா என்னும் இளம்பெண்ணோடு ஏற்பட்ட அவருடைய முதல் காதல் பற்றியது.

" In every young man's life there is a Selma who appears to him suddenly in the spring of life and transforms his solitude into happy moments" - ஒவ்வொரு இளைஞனின் வாழ்விலும் ஒரு சல்மா ஒரு வசந்த காலத்தில் திடீரெனத் தோன்றி அவனுடைய தனிமையை, இனிமையான கணங்களாக மாற்றுகிறாள். அப்படி ஒருத்தி தோன்றுவதற்கு முன்னான தனிமையைப் பின்வருமாறு வர்ணிக்கிறார்.

"Solitude has soft, silky hands, but with strong fingers it grasps the heart and makes it ache with sorrow" - தனிமை மென்மையான, பட்டுக்கரங்களைக் கொண்டிருக்கிறது. ஆனால் அது தனது வலிமையான விரலுகளைக் கொண்டு இதயத்தைப் பற்றி அதனைத் துயரத்தால் வலி கொள்ளச் செய்கிறது. நாம் இதே போன்றதொரு தனிமையை நிச்சயம் கடந்து வந்திருப்போம். ஒரு கிப்ரனோ, சல்மாவோ நம்முடைய வசந்த காலத்தில் தோன்றியிருக்கக் கூடும். இதில் சொல்லப்பட்ட காதல் படிக்கும் எவர் மனதையும் மயக்கியிருக்கும். நான் மட்டும் விரிவிலக்கா?

மற்றொரு புத்தகம் மாக்ஸிம் கார்க்கியின் தாய். இந்தப் புத்தகத்தில் வரும் தாய் கதாபாத்திரம் எந்த அளவு என்னை இம்ப்ரஸ் செய்ததோ அதே அளவு அதில் வரும் பாவெல், அந்திரேயாவின் நட்பு. இந்த இரு நண்பர்களிடையே இருந்த நட்பின் மேன்மை - நாவலில் இடம் பெறும் ஒரு வரி "நண்பர்கள் இருவரும் ஒருவரையொருவர் கட்டித் தழுவினர். அங்கே நட்பு ஈருயிரும் ஓருடலுமாகப் பிரகாசித்தது. " இங்கே என் தோழியைப் பற்றி சொல்ல நினைக்கிறேன் - கல்லூரியில் பெண்கள் எப்போதும் தங்கள் தகப்பனாரின் பெருமையைப் பேசுவதில் பெருத்த ஆர்வம் கொண்டிருப்பர். என் தோழி தன் வீட்டில் ஒரே பெண். ரொம்ப செல்லம். அவள் ஒரு முறை கூட தன் அப்பாவைப் பற்றி பேசி நான் கேட்டதில்லை. நான் அவளிடம் கேட்டேன் ' நீ ஏன் உங்கப்பாவப் பத்தி எதுவும் பேச மாட்டேங்குற?' அவள் என்னைத் தட்டிக் கொடுத்து மெலிதாகப் புன்னகைத்தாள். ஒரு நொடியில் எனக்குப் புரிந்தது. என் அப்பாவை நான் நினைத்து ஏங்கி விடக்கூடாது என்ற கரிசனம். நண்பர்களே நிச்சயம் அங்கே நட்பு ஈருடல் ஓருயிராகப் பிரகாசித்தது.

பாரதியின் கவிதைகள் மனதிற்கு வலிமையைக் கொடுத்தன. பஞ்சுக்கு நேர் பல துன்பங்களாம், இவள் பார்வைக்கு நேர் பெரும் தீ போன்ற வரிகள் சக்தியைக் குவித்தன. ஜெயகாந்தனின் நாவல்கள் லட்சிய வெறியை ஏற்படுத்தின.

இது ஒரு பருவம். Infatuation stage தாண்டியானது. தோழி அமெரிக்காவில் செட்டிலாகி வருடத்திற்கு ஒரு முறை ஃபோன் என்றாகி விட்டது. ஜெயகாந்தன் வாழ்க்கையோடும், அரசோடும் செய்து கொண்ட compromiseகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தின. வைரமுத்துவின் வார்த்தை ஜாலங்களில் ஆவல் குறைந்தது.

பின்னர் படித்த சுந்தரராமசாமியின் 'குழந்தைகள், பெண்கள், ஆண்கள்', பிரபஞ்சனின் வானம் வசப்படும் , மேலாண்மை பொன்னுச்சாமியின் முற்றுகை, டால்ஸ்டாயின் Anna Karenina உள்ளிட்ட நாவல்கள் வேறொரு உலகத்தைக் காட்டின. குடும் பம் என்னும் அழகான அமைப்பு, மனிதத்துவத்தின் மேன்மை இவை குறித்து இந்நாவல்கள் பேசின.

Anna Karenina வின் ஆரம்ப வரி -"All happy families are the same. the unhappy families are unhappy in their own way" . அதாவது அனைத்து சந்தோஷமான குடும்பங்களும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. சந்தோஷமற்ற குடும்பங்கள் தத்தம் வழிகளில் சந்தோஷமற்றிருக்கின்றனர். ஆம் சந்தோஷமான குடும்பங்கள் இப்படித்தான் சந்தோஷமாக இருக்கின்றன - எந்தக் குடும்பத்தில், குடும்பத் தலைவி, கணவனிடம் " உன் காரியம் யாவிலும் நான் கை கொடுப்பேன். உலகை ஜெயித்து வா. உன் வெற்றி தான், என் வெற்றி. நீ காரியங்கள் ஆற்றத் தவறினால் நான் நெறிப்படுத்துவேன். இக்குடும்பம் உன்னைத் தாங்கும்" என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறாளோ, எந்தக் கணவன் தன் மனைவியிடம் "நீயே இக்குடும்பத்தின் ஆணிவேர். நீ இருக்கிறாய் என்ற தைரியத்தில் , உன்னை மையமாக வைத்து தான் நான் இயங்குகிறேன்." என்று தன் மனைவியைப் போற்றுகிறானோ அந்தக் குடும்பமே இனிமையாய் விளங்குகிறது. சுராவின் கு, பெ, ஆணில் வரும் SRS , தன் மனைவி லஷ்மிதான் தன் பலம் என நினைக்கிறார். மாறாக கணவன், மனைவி பரஸ்பரம் ஒருவர் மேலொருவர் மரியாதை இல்லாமல் இருக்கும் சாமுவின் குடும்பம் சீரழிகிறது. மே.பொ வின் கதைகளில் வரும் குடும்பத்தலைவி, தலைவன் மேல் அன்பு செலுத்தி நெறிப்படுத்துகிறாள். வானம் வசப்படுமின் ஆனந்தரங்கப்பிள்ளை பெரிய துபாஷ். அவருக்கும் தன் அரசியல் முடிவுகள் குறித்து தன் மனைவி என்ன நினைக்கிறார் என்பது முக்கியமாக இருந்திருக்கிறது. இந்த mutual respect தான் அன்பிற்கும் காதலுக்கும் அடிப்படை.

நட்பு, காதல், லட்சியம் அனைத்தையும் தாண்டி குடும்பமே ஒருவனுக்குத் தேவையான சகலத்தையும் அளிக்கிறது. I need your opinion on this friends. Also share the books that u enjoyed reading

Thursday, September 2, 2010

விஜய் படம்

தோழர் ரமேஷ், பொழுது போவதற்கு வழி கேட்டால் நானே போவதற்கு வழி சொல்கிறீர்களே??!! இது நியாயமா? விஜய் படம் பார்ப்பதற்கு மனதில் தெம்பில்லை

Wednesday, September 1, 2010

சங்கடத்தில் ஆழ்த்திய சில கேள்விகள்

என் வாழ்வின் வெவ்வேறு சூழலில், பல்வேறு நிலைகளில் என்னை நோக்கி பல்வேறு கேள்விகள் வந்தன. அவை என்னை சில நேரங்களில் மனச்சோர்விற்கும், பயத்திற்கும் ஆட்படுத்தின. இவற்றைக் கேட்டவர்களும், தெரிவித்தவர்களும் யாரோ அல்ல. நான் என் பிரியத்திற்கு உரியவர்களாக நினைத்த நண்பர்களும், உறவினர்களுமே. கஷ்டப்படும் நேரத்தில் உறுதுணையாய் இருப்பார்கள் என நான் நினைத்தவர்கள் கேட்ட கேள்விகள் பின் வருமாறு:
திருமணத்திற்கு முன் :
 1. கம்ப்யூட்டர் படித்துவிட்டு காலேஜ்ல போயி கம்மியான சம்பளத்துக்கு வேலைக்கு சேந்திருக்கிற? (ஆசிரியப்பணி புனிதப்பணி என்று நான் நினைக்கிறேன்)
 2. உன் கலருக்குப் பெரிய வேலைல இருக்குற மாப்பிள்ளை எப்படி கிடைப்பான்?
 3. படிச்ச பையன்தான தேடுறீங்க - இந்தப்பையன் தான் டிப்ளமோ படிச்சிருக்கானே?? (நான் MCA)
திருமணத்திற்குப் பின்: (திருமணம் நன்கு படித்த, பெரிய வேலையில் இருக்கும் பையனோடு, கடவுளின் கிருபையால் இனிதே நடந்து முடிந்தது)
 1. உன் வீட்டுக்காரருக்கு சம்பளம் எவ்வளவு?
 2. Bombayல வேலை பாத்த, UK போனேன்னு சொல்ற. ஏன் இப்டி dress பண்ணிக்கிற? ஏன் hairstyle இப்படி இருக்கு? (மக்களே, நான் சேலை அல்லது சுடிதார் தான் அணிந்து கொள்கிறேன். சடை பின்னிக் கொள்கிறேன். வேற என்னங்க செஞ்சுக்குறது?)
 3. என்னமோ PhD பண்ணப் போறேன்னு சொன்ன? இன்னும் guide ஒன்னும் கெடைக்கலயா?
 4. ஒரு உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த போது - இதென்ன பழைய துணி மாதிரி இருக்கு உன் டிரெஸ்?
 5. ஒரு தோழியை நெடுநாட்கள் கழித்து சந்தித்தபோது - உன் மகன் இன்னும் எலும்பும் தோலுமாத்தான் இருக்கானா?
 6. அதே தோழி - உன் மகள் எதுக்கெடுத்தாலும் பிடிவாதம் பிடிப்பாளாமே?
 7. ஒரு கல்யாண வீட்டில் - உன் வீட்டுக்காரரைத் தலைக்கு dye அடிக்கச் சொல்லு. ரொம்ப நரைச்சிருக்கு.
 8. உன் தம்பிக்குப் பொண்ணே அமைய மாட்டேங்குதாமே?

இந்தக் கேள்விகளும், ஐடியாக்களும் அக்கறையினால் கூட வந்திருந்திருக்கலாம். ஆனாலும் இவை எனக்கு பல சமயங்களில் எரிச்சலைத்தான் ஏற்படுத்தின. மற்றவர்களின் personal spaceக்குள் நாம் நுழைவதற்கு நமக்கு எந்த அதிகாரமும் இல்லை. கேட்டால் மட்டுமே நமது கருத்துக்களையும், விமர்சனங்களையும் நாம் தெரிவிப்போமாக. "Let there be spaces in your togetherness - Kahlil Gibran"

Monday, August 30, 2010

என்ஜினியரிங் காலேஜ்

மீண்டும் ஒரு புதிய கல்வியாண்டு ஆரம்பம். முதல் நாள் வகுப்பு எடுத்து முடித்து விட்டு வெளியே வந்தேன். மணிப்பிரவாள நடை மாணவர்களின் கவனத்தைப் பாடத்தில் குவியச் செய்யும் என்பதால் தமிழும், ஆங்கிலமும் கலந்து பாடம் எடுப்பது என் வழக்கம். அன்றும் அப்படித்தான். வகுப்பு முடிந்து வெளியே வந்தவுடன் ஒரு மாணவர் அவசரமாக என்னைப் பின்தொடர்ந்து வெளியே வந்தார். 'மேடம் தமில் டோனோ. ஒன்லி இங்கிலிஸ் (Tamil don't know, only english)' என்றார். "Ok. I will take only in English hereafter" என்று சொல்லிவிட்டு வந்தேன். அதே போல் செய்தேன். முதல் internal பரிட்சை முடிந்தது. அப்போது தான் தெரிந்தது அந்த மாணவனுக்கு ஆங்கிலமும் சரியாகத் தெரியவில்லை என்பது. டிபார்ட்மென்ட்டிற்கு அழைத்துப் பேசினேன். மிகவும் பிற்பட்ட ஒரு வட மாநிலத்தைச் சேர்ந்தவர் அவர். தமிழ் தெரியாது. பிராந்திய மொழியில் பள்ளி வகுப்புகளை முடித்திருக்கிறார். எனவே ஆங்கிலமும் சரியாகத் தெரியாது. எப்படி இங்கு வந்து சேர்ந்தார் எனக் கேட்டேன். கல்வி புரோக்கர்கள் இருக்கிறார்களாம். அவர்கள் தான் மொழி ஒரு பிரச்சினையில்லை என்று கூறி கல்லூரியின் புகைப்படங்களைக் காட்டி இங்கு கூட்டி வந்தாராம். இந்தப் பையனால் ஆங்கிலத்தில் நடத்தப்படும் பாடங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவனுடைய மொழி எங்களுக்குத் தெரியவில்லை. எப்படி படிப்பாய் ? என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டேன். ஏதாவது செய்ய வேண்டும் மேடம். ஆனால் கோர்ஸ் முடிக்காமல் திரும்ப செல்ல மாட்டேன். என் தகப்பனார் சாதாரண விவசாயக்கூலி. ஃபீஸை மிகக் கஷ்டப்பட்டுக் கட்டியுள்ளார். பயமாக இருக்கிறது என்றான். இந்த வசதியற்ற, பாஷை தெரியாத, வட மாநில மாணவர்கள் கல்லூரியில் ஒரு ரகம்.
மற்றொரு ரக மாணவர்கள் உள்ளனர். ஒரு முதலாமாண்டு மாணவனுக்கு, பொறியியல் கல்லூரி இயக்குநகரத்திலிருந்து ஒரு செமஸ்டர் முடிந்த நிலையில் ஒரு கடிதம் வந்தது. என்ட்ரன்ஸ் தேர்வே எழுதாமல் எப்படி நீங்கள் கல்லூரியில் சேர்ந்தீர்கள் என்று. (இது நடந்தது பல ஆண்டுகளுக்கு முன்னால்). HOD கூப்பிட்டு விசாரித்தார் ஏன் என்ட்ரன்ஸ் எழுதவில்லையென்று. என்ட்ரன்ஸ் ஃபீஸ் கட்டப் பணம் இல்லை, சும்மா சேர்ந்து கொள்ளுங்கள். பிரச்சனை வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று கல்லூரியில் சொன்னார்கள் என்றான். அப்புறம் இப்போது கோர்ஸ் ஃபீஸ் எப்படி கட்டினாய் என்று கேட்டார். 'அப்பா கடலைக் காட்டை வித்துட்டார் சார்'. பின்னர் எப்படியோ அந்த என்ட்ரன்ஸ் எக்ஸாம் பிரச்சனையைச் சமாளித்தான். சில மாதங்கள் கழித்து மீண்டும் டிபார்ட்மென்ட்டிற்கு வந்தான். இம்முறை டி.சி வாங்க வேண்டும் என்றான். என்ன ஆச்சு என்றேன். 'மேடம் என்னால் lab sessions செய்ய முடியவில்லை'. நான் : காட்ட வித்து சேத்து விட்டிருக்காங்க. எப்படி வீட்டுக்குப் போவ?
மாணவன் : டி.சி வாங்கினா வீட்டுக்கு வரக்கூடாதுன்னு அப்பா சொல்லிட்டார்
நான் : அப்புறம் எங்க போவ? பதில் ஒரு நீண்ட மவுனம். டைம் எடுத்துக்கோ. lab seesions மெதுவாப் பண்ணு. pick up பண்ணிடலாம். டிசி வாங்க வேண்டாம். டிசி வாங்கினாலும் எப்படியும் 4 வருஷ ஃபீஸையும் நீ கட்டித்தான் ஆகணும். (Course fee fullம் pay பண்ணா தான் டிசி கிடைக்கும்). அதனால் நீ படி. நான் உனக்கு practicalsஐ முடிப்பதற்கு நிறைய டைம் தருகிறேன் என்று கூறி அனுப்பி வைத்தேன். டிசி வாங்கும் ஐடியாவை விட்டு விட்டான். next semesterல் சிறந்த மதிப்பெண்கள் பெற்று விட்டு மேடம் எனக்கு நம்பிக்கை வந்து விட்டது. நான் சிறப்பாகத் தேர்ச்சி பெற்று, நல்ல வேலையில் அமர்வேன் என்றான். மனம் நிறைந்தது.
பிறிதொரு ரகம் - பையன்/பெண் பிஇ படித்திருக்கிறான்/ள் என்று சொல்லிக் கொள்வதற்காக. வேறொரு வகை - நான் சேர விரும்பியது வேறு கல்லூரியில். இந்த 2 கல்லூரிகளுக்கும் பெயர் ஒரே மாதிரியிருந்தது. ஒரு 'Institute" மட்டும் தான் வித்தியாசம். அதை நான் கவனிக்காமல் விட்டுவிட்டேன். இல்லாவிட்டால் என் cut-off ற்கு அந்த ஃபேமஸ் கல்லூரியிலேயே இடம் கிடைத்திருக்கும் என்று புலம்பும் மிக நன்றாகப் படிக்கக்கூடிய மாணவர்கள்.
இவர்கள் அனைவரையும் ஒரு கூரையின் கீழ் கொண்டு எப்படியாவது 100% ரிசல்ட் கொடுக்க உழைத்துக் கொண்டிருக்கின்றனர் ஆசிரியப் பெருமக்கள்

Friday, August 27, 2010

பொழுது போகாத பொம்மு

எதிர்பாராவிதமாக எனக்கு ஒன்றரை மாதம் விடுமுறை கிடைத்தது. ஒரு வார விடுமுறை எதிர்பார்த்ததுதான். ஆனால் அது ஒன்றரை மாதமாக நீண்டு விட்டது. முதல் ஒரு வாரம் பிரமாதமாக கழிந்தது. காலை எட்டரை மணிக்குள் கணவன், பிள்ளைகள் அனைவரும் கிளம்பி விடுவர். பின்னர் நீண்டு கிடக்கும் பகல் பொழுது முழுவதும் எனக்கே எனக்கு. நிதானமாக 10.30 மணிக்கு டிஃபன், சாப்பிட்டானதும் மீண்டும் ஒரு காஃபி, குறுக்கீடுகள் ஏதுமின்றி தொலைக்காட்சி - என் கையில் ரிமோட்டுடன். என் இஷ்டம் போல் சேனல் மாற்றி மாற்றி என்ஜாய் செய்து கொண்டிருந்தேன். பின்னர் சமையல் குறிப்புகளைப் பார்த்து வெரைட்டி சமையல். மதியம் மகன் வந்தவுடன் அவனுக்கு சாப்பாடு கொடுத்து தூங்கப் பண்ணிவிட்டு மீண்டும் தொ.கா. ஒரு குட்டித் தூக்கம். இப்படியாக ஒரு உப சொர்க்கத்தைச் சிருஷ்டித்து மகிழ்ந்து கொண்டிருந்தேன்.
ஒரு வாரம் முடிந்தது. சேனல்கள் கடுப்படித்தன. டாக் ஷோக்களில் ஒரு குடும்பத்து உறுப்பினர்களை வரவழைத்து, எதிரெதிர் அணிகளில் உட்கார வைத்து, சண்டையை மூட்டி ஒரே காரில் வந்தவர்களை இரண்டு ஆட்டோக்களில் அனுப்பி வைத்தனர். விஜய் டிவியில் லட்சுமி 'அந்தக்குழந்தையைக் கொடுத்தப்ப உன் மனசு எப்படி இருந்துச்சு? சொல்லு. நானும் ஒரு தாய்' என்கிற ரீதியில் பேசி எப்படியாவது அழ வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தார் (டிஆர்பி படுத்தும் பாடு). எல்லா சேனல்களிலும் Super Singer, Super Dancer, Top Singer என்ற தலைப்புகளில் குழந்தைகளும், பெரியவர்களும் படுத்திக் கொண்டு Sorry பாடிக் கொண்டு இருந்தனர். நியூஸ் சேனல்கள் இன்னும் மோசம். ப்ளாஷ் நியூஸ், லைவ் என்ற பெயர்களில் பாத்திரத் திருடர்கள் கல்லால் அடித்துக் கொல்லப்படுவதையும், போலீஸ் ஸ்டேஷனில் நடைபெறும் 3rd degree torturesஐயும் ஒளிபரப்பின. அதே பாடல்கள், நகைச்சுவைத் துணுக்குகள். வெறுத்து விட்டது எனக்கு. இதற்கிடையே நான் முயற்சி செய்த Paneer Capsicum masala, Prawn Capsicum curry, Mushroom masala போன்றவற்றிற்கு பெரும் வரவேற்பும், பேராதரவும் அளித்த குடும்பத்தார் நாளடைவில் 'நீ சமைக்கும் பருப்பு சோறும், உருளைக்கிழங்கும் ரொம்ப நல்லா இருக்கும்' என்று சொல்ல ஆரம்பித்தார்கள். புரிந்து விட்டது. சரி masalas, curries இனிமேல் செய்யவில்லை என்றேன். மகிழ்ந்து களிகூர்ந்தார்கள். ம்ஹும் இந்த வளரும் மல்லிகா பத்ரிநாத்திற்கு வந்த சோதனை ;(.
சமையல் முயற்சிகள் நின்று போயின. தொ.கா பக்கம் போக முடியவில்லை. நண்பர்களுக்கு ஃபோன் செய்தால் 'ஏய் என்ன இந்த நேரத்துல, வெயிட் பண்ணு. 5 நிமிஷத்துல கால் பண்றேன்' என்று வைத்து விட்டார்கள். என்ன செய்வது என்று யோசித்து வலைப்பூ ஆரம்பித்து விட்டேன். நண்பர்களே உங்களுக்கு இந்த வலைப்பூ bore அடிக்கும் முன் எனக்கு லீவ் முடிந்து விடும் என நம்புகிறேன்.
'இந்த வாழ்க்கைக்குப் பயன் என்பது ஒன்றும் இல்லை. நாமாக ஒன்று கண்டுபிடித்துக் கொள்ளவேண்டியது தான் (This life haas no purpose at all unless we find one) ' என்ற வாக்கியம் தான் ஞாபகம் வருகிறது.

நன்றி

என் வலைப்பதிவுகளை வாசித்து கமெண்ட் கொடுத்த அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து வாசித்து, உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

முதல் மனைவிகளும் அவர்களின் குழந்தைகளும்

சென்ற வார இறுதியில் பிரகாஷ்ராஜ், போனிவர்மாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறியதாம். அவர்கள் இருவரும் Made for each other ஆக காட்சி அளித்தார்களாம் (நன்றி - டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ்). விஷயம் பிரகாஷ்ராஜின் முதல் மனைவியின் குழந்தைகள் பற்றியது. இரு குழந்தைகளும் அங்கு ஆஜர். ஒரு மாதிரி அரைப்புன்னகை புரிந்தபடி மூத்த மகள். என்ன உணர்வை வெளிப்படுத்தவென்று தெரியாத குழப்பம் அந்த முகத்தில். ஒரு 15, 16 வயது பிள்ளையிடம் 'இவர் தான் உன் புதிய தாய்' என்று அறிமுகப்படுத்துதல் என்ன மாதிரியான மனப்பாதிப்பை ஏற்படுத்தும்?? வற்புறுத்தி வரவழைக்கப்பட்ட சோகமோ என சந்தேகிக்க வைக்கிறது அந்த குழந்தையின் முகபாவம்.
இதே போல் மற்றொரு செய்தி - பிரபுதேவாவின் மகன் 'அப்பா அம்மாவைக் கஷ்டப்படுத்தாதீர்கள் என்று கதறல்' (நன்றி - குமுதம்). இந்த செய்தியைப் படிக்கும் போது அந்தக்குழந்தையின் மனநிலை எனக்குப் பதற்றத்தைத் தோற்றுவிக்கிறது. ஒரு குழந்தைக்கு மன நிம்மதியையும், பாதுகாப்பு உணர்வையும் தருவது பெற்றோர்களின் கடமையில்லையா? நம் தாய், தந்தையின் தியாகங்களும், ஒருவரையொருவர் பொறுத்துக் கொண்டு சென்ற மனப்பாங்கும் அல்லவோ நம் குடும்பங்களின் அடித்தளமாய் விளங்குகிறது.
ரேகா (காதல் மன்னன் ஜெமினி கணேசனின் மகள்) ஒரு தொலைக்காட்சி பேட்டியில் (ஸ்டார் ப்ளஸ்) 'ஃபாதரா? எனக்குத் தெரிந்ததெல்லாம் சர்ச் ஃபாதர்தான். என் வாழ்வில் தகப்பனார் என்பவர் எந்தப் பங்கையும் ஆற்றவில்லை. குழந்தைப் பருவத்திலிருந்து தனியாகத்தான் இருக்கிறேன். தனிமை எனக்குப் புதிதல்ல' என்கிறார். தகப்பன் காதல் லீலைகள் புரிந்து கொண்டிருக்கும் போது ஒரு மனைவி தீராத மன உளைச்சலுக்கு ஆளாகி குழந்தைகளைக் கவனிக்க இயலாத மனநிலைக்குத் தள்ளப்படுகிறாள்; குழந்தைகள் திணிக்கப்பட்ட தனிமைக்குள் சிக்கி வாழ்நாள் முழுதும் நீங்காத வடுவைப் பெற்று வாடுகிறார்கள். ரேகா இன்றும் தனித்தே இருக்கிறார்.
காதல் மன்னன்களும், அறிவு ஜீவிகளும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் இந்தக் குழந்தைகளுக்கு?

Tuesday, August 24, 2010

சில சந்தேகங்கள்

எனக்கு பிள்ளைகள் (வயது 3 மற்றும் 5 ) விஷயத்தில் சில சந்தேகங்கள் உள்ளன. யாராவது தீர்க்க முடியுமா? இதோ சந்தேகங்கள்
1. பள்ளி செல்ல வேண்டிய தினங்களில் காலை 7.45 வரை தூங்கி நம்மை டென்ஷனாக்கும் பிள்ளைகள் எப்படி சனி,ஞாயிறு அன்று நாம் எழுப்பாமலேயே 6 மணிக்கு எழுகிறார்கள்?
2. 2 வருடங்களுக்கு முன்னால் வாங்கப்பட்ட, உடைந்த, எதற்கும் உதவாத , ஒரு மூலையில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் பொம்மை எப்படி இரு பிள்ளைகளுக்கும் ஒரே சமயத்தில் கட்டாயம் தேவைப்பட்டு சண்டை ஏற்படுகிறது?
3. எப்படி நாம் ஃபோன் பேசும் போது அல்லது சாப்பிடும் போது அல்லது யூனிபார்மை மாட்டிவிட்ட பிறகு பிள்ளைகளுக்கு டாய்லெட் வருகிறது?
4. காலை முழுவதும் நாம் தேடி, நம்மால் கண்டுபிடிக்க இயலாத பென்சில் சீவும் ஷார்ப்பான கத்தி எப்படி மாலையில் இளைய பிள்ளையின் (3 வயது) கையில் விளையாடக் கிடைக்கிறது?
5. நாமெல்லாம் படிக்கும் போது பள்ளிக்கூடம் முழுநேரம் தானே??? இப்போது மட்டும் ஏன் அரை நாள்? என்னாஆஆஆஆஆ வில்லத்தனம்

Thursday, August 19, 2010

என் மகன் படிக்கும் Pre.K.G

மகளுக்கு மன்த்லி டெஸ்ட் ரிசல்ட்ஸ் வந்து விட்டது. கணக்கில் நூற்றுக்கு நூறு. பந்தா பண்ணுகிறேன் என்று எண்ணி விடாதீர்கள் நண்பர்களே. அதே மகள் ஹிந்தி டிக்டேஷனில் பத்துக்குப் பூஜ்யம். (அவளுடைய தாத்தா - என் மாமனார், அந்நாள் தி.மு.க அபிமானியாம். ஒரு வேளை ஹிந்தி எதிர்ப்பு அவள் ரத்தத்திலேயே இருக்கிறதோ ;) ). வாசு கணக்கில் மகள் எடுத்த மார்க்குக்கு கிஃப்ட் வாங்கித் தருவோம் என்றார். ஒரு கொலுசு வாங்குவோம் என்றேன் நான். யார் சொன்னார், 'இந்த விலைக்குத் தங்கம் விற்றால் மக்கள் எப்படி வாங்குவார்?' என்று. கூட்டமோ கூட்டம் நகைக்கடையில். கஸ்டமரைக் கவனியுங்கள் என்று சூப்பர்வைஸர் சொல்லி அந்தப் பக்கம் சென்றவுடன் சேல்ஸ் பெர்ஸன் வெறியோடு நம்மைக் கடித்துக் குதறுகிறார். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. நீண்ட வேலை நேரம், குறைந்த இடைவேளை மற்றும் சம்பளம். அவர்களால் அப்படித்தான் நடந்து கொள்ள இயலும். கொலுசைத் தேர்ந்தெடுத்து வாங்கி விட்டு வீட்டிற்குச் சென்றோம். மகன் எனக்கு என்ன கிஃப்ட் என்று துளைத்தான். அக்கா 100 வாங்கியிருக்கா. நீ என்னடா பண்ண க்ளாஸில என்று கேட்டேன். அமைதியாக யோசித்துக் கொண்டிருந்தான். மகளுக்கு கொலுசை மாட்டிவிட்டு அழகு பார்த்தோம். மகன் அங்கு வந்து கொலுசைப் பார்த்துவிட்டு ' எங்க க்ளாஸில் மௌமிதா இப்படித்தான் போட்டிருப்பா' என்றான். கொலுசு என்று சொல்லத் தெரியவில்லை. 'அடப்பாவி க்ளாஸில் கவனிக்க வேண்டிய விஷயமாடா இது' என்று அலறினார் வாசு. ரூ.28000 ஃபீஸ் கட்டி ப்ரீ.கே.ஜியில் மகனைச் சேர்த்ததன் பலனை அடைந்தோம் ;)

Wednesday, August 18, 2010

மகள்

வாசுவுக்கு 2 கால்களிலும் வலி. காலைத் தரையில் ஊன்றவே முடியவில்லை. ankleல் வலி. டாக்டரைப் பார்க்கச் சென்றோம். வலி எந்த இடத்தில் என்று அழுத்திப் பார்த்தார். சரியான இடத்தில் அழுத்திய போது வலியில் துடித்து விட்டார். டாக்டரைத் திட்ட முடியாமல் உர்ரென்று நின்று கொண்டிருந்தேன். பொதுவாக இந்த வலி ஸ்போர்ட்ஸ் பெர்ஸன்ஸுக்குத்தான் வரும் என்றார் டாக்டர். குறிப்பாக அத்லெட்ஸ். இவருக்கு எப்படி வரும் என்று யோசிக்கிறேன். ஒரு வேளை டிவியில் சேனல்க்குச் சேனல் தாவுகிறாரே அதனால் இருக்குமோ??? நீளம் தாவுதல் போல, அதுவும் தாவுதல் தானே ;). கம்மிங் டு தி பாயிண்ட் - டாக்டர் அறையில் நாங்கள் அமர்ந்திருக்கும் போது ஒரு ஆக்சிடென்ட் கேஸ். டாக்டர் உடனடியாக அடிபட்டவரைக் கவனிக்கச் சென்றார். 55-60 வயது மதிக்கக்கூடிய ஒரு பெண்மணி, டிவிஎஸ் எக்ஸலில் சென்று கொண்டிருந்த போது ட்ரக் மோதிவிட்டது. ஹாஸ்பிட்டலுக்கு மிக அருகில் தான் ஆக்சிடென்ட். ஒரு வழிப்போக்கர் தூக்கிக் கொண்டு வந்து அட்மிட் செய்தார். அவர் சட்டை, பேண்ட் முழுவதும் ரத்தம். டாக்டர், மிகவும் சீரியஸ். உடனடியாக வீட்டுக்கும், ஆம்புலன்ஸுக்கும் சொல்லுங்கள் என்றார். எப்படி, யார் தகவல் தெரிவித்தார்கள் எனத் தெரியவில்லை. உடனடியாக உறவினர்கள் வந்து விட்டனர் - அந்த அம்மாளின் மகள் தன் கணவனுடன் மற்றும் அந்த அம்மாளின் மகன். மகள் பதறித் துடித்தபடி யார் யாருக்கோ ஃபோன் செய்து கொண்டும், ஆம்புலன்ஸ் அல்லது ப்ரைவேட் டாக்ஸிக்கு முயற்சி செய்து கொண்டும் நடுநடுவே அழுது கொண்டும் இருந்தார். கணவன் பதறாதே என்று சமாதானம் செய்து கொண்டிருந்தார். இத்தனைக்கும் நடுவில் அந்த மகனிடம் 'இவர் தாங்க உங்க அம்மாவ இங்க கொண்டு வந்து அட்மிட் பண்ணார்' என்று ஒருவர் சொன்னார். அந்த மகன் - வெளிநாட்டு அதிபரிடம் நம் லோக்கல் மினிஸ்டர்களை அறிமுகப்படுத்தும் போது அதிபர் சிரிப்பாரே - அதைப் போல ஒரு பெருந்தன்மையான புன்சிரிப்பை உதிர்த்தான். அந்த சிரிப்பு , அந்த நேரத்தில் அந்த இடத்தில் மிக அசிங்கமாக, எரிச்சலூட்டக்கூடியதாக இருந்த்து. ஒரு கண்ணீர், ஒரு நன்றி ஊஹூம் ஒன்றும் இல்லை. அந்தப் பெண் மட்டுமே ரொம்ப தேங்க்ஸ் ஸார் என்று கண்ணீர் உகுத்தாள். மகள்களைப் பெற்றோரே மகிழ்ந்து களிகூருங்கள். வேறு வீட்டிற்கு வாழச் சென்று விட்டாலும், நமக்கான ஈரம் நம் மகள்களின் கண்களில் மட்டுமே இருக்கும் போலும்.

Tuesday, August 17, 2010

விலைவாசி

நேற்று நான் சொல்ல வந்த விஷயம் அதுவல்ல நண்பர்களே. எங்கோ ஆரம்பித்து எங்கோ முடித்துவிட்டேன். மேட்டர் இதுதான் - அனைத்து ரெஸ்ட்டாரண்ட் பார்க்கிங் ஏரியாவிலும் ஒரு செக்யூரிட்டி நிற்பார் - மிகவும் வயதான, மிக மிக ஒல்லியாக, பொருந்தாத அளவில் யூனிபார்ஃம் அணிந்து கொண்டு நிற்பவரைக் கட்டாயம் நீங்கள் எந்த ரெஸ்ட்டாரண்ட்டின் அல்லது ஸூப்பர் மார்க்கெட் வாசலிலும் பார்க்கலாம். பார்க்கவே மனதுக்கு கஷ்டமாக இருக்கும். நம் வண்டியை எடுக்க உதவி செய்வது போல் ஏதோவொன்று செய்து கொண்டிருப்பார். (நிச்சயம் அவரில்லாமலேயே நம்மால் வண்டியை எடுத்துக் கொள்ள முடியும்). ஆனாலும் வயதானவர்கள் இப்படி ஏதாவது வேலை செய்வதைப் பார்க்கும் போது முகம் தெரியாத அவர்களின் பிள்ளைகளைத் திட்டத் தோன்றும். கைக்கு அகப்படும் சில்லறையை அவர்கள் கையில் தந்து விட்டு வருவது வழக்கம். ஞாயிற்றுக்கிழமையும் அவ்வாறே செய்ய நினைத்து பையைத் துழாவியதில் ரூ.2 மட்டுமே அகப்பட்டது. கொடுக்க நினைத்த போது அந்த செக்யூரிட்டி பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஆளிடம் சொல்லிக்கொண்டிருந்ததைக் கேட்க நேர்ந்தது. எங்களுக்கு முன்னால் வண்டியை எடுத்துச் சென்றவரைப் பற்றிய விமர்சனம் - 'என்னை பிச்சைக்காரன்னு நெனச்சானா? 5 ரூவா குடுத்துட்டுப் போறான்'. ரூ.2ஐத் திரும்ப பையில் போட்டுக் கொண்டேன். உள்ளே ரூ.10 டிப்ஸூக்கு சர்வர் என்ன திட்டு திட்டிக் கொண்டிருப்பாரோ???!!!

Monday, August 16, 2010

வீக் எண்ட்

ஞாயிற்றுக்கிழமை இரவு உணவு கட்டாயம் ரெஸ்ட்டாரண்ட்டில் தான். வேளச்சேரியில் உள்ள ஒரு சைனீஸ் ரெஸ்ட்டாரண்ட் எங்கள் குடும்பத்தின் ஃபேவரிட் ஸ்பாட். சென்று அமர்ந்தவுடன் டேபிளில் ஏறி அமர்ந்த என் மகன், பெப்பர் பாட்டிலைத் தண்ணி டம்ளருக்குள் போட்டு ஆர்க்கிமிடிஸ் ப்ரின்ஸிப்பிளைச் சரி பார்த்தான். பின் ஃபோர்க்கை எடுத்து அப்பாவைக் குத்தி ரியாக்ஷன் பார்த்தான். ஸ்டார்ட்டர் வந்தவுடன் அதைக் குத்தி எடுத்து பாதியைக் கீழே போட்டு, அதை எடுக்கிறேன் பேர்வழி என்று டேபிளுக்கு அடியில் குனிந்து, நிமிரும் போது என் கையில் இருந்த சூப்பைத் தட்டி விட்டு டேபிளில் முட்டி - அப்பா, ஒரு நிமிடம் வெயிட் ப்ளீஸ் - எனக்கு மூச்சு வாங்குகிறது. ஒரு வழியாகச் சாப்பிட்டு முடித்தோம் என்று வையுங்களேன். சென்ற மாத வுமன்ஸ் ஈராவில் (Woman's Era) படித்திருந்தேன் - கவுரவமான டிப்ஸ் என்பது பில் தொகையின் 10% - 15% என்று. ரூ.600ன் 10% எவ்வளவு என மனதுக்குள் கணக்குப் போட்டு பார்த்தேன். ரூ.10 டிப்ஸ் வைத்து விட்டு வெளியே வந்து விட்டோம்

Saturday, August 14, 2010

நேற்று பீட்ஸா ஆர்டர் செய்து கொண்டோம். வாரம் ஒரு முறை ஜங்க் ஃபுட் அலவ்ட். அவர்கள் ஒரு ஆஃபர் தருகிறார்கள். அதாவது ரூ.400க்கு பீட்ஸா வாங்கி, ரூ.39க்கு பாஸ்டா வாங்கி, ரூ.20க்கு குளிர்பானம் வாங்கினால் ரூ.25 மதிப்புள்ள கேக் ரூ.15க்குத் தரப்படுமாம். என்ன ஒரு ஆஃபர் ;). இதற்கு நான் ரூ.25 மதிப்பு கேக்கையே வாங்கிருவேனே என்கிறான் என் தம்பி. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்??? இதே போல் ஜவுளிக் கடல்கள் ஆடி சேலுக்குச் சென்றோம். ஷாப்பிங் என்றவுடன் என் மகன் வர மறுத்துவிட்டான் (வயது மூன்று ;) ). இந்த ட்ரஸ்ஸை அடுப்புத்துணியாகக் கூட பயன்படுத்த முடியாது வகையறாக்களுக்கு 50% தள்ளுபடி. மற்றவைக்கு 5% தள்ளுபடி. தெரிந்தே சில ஆயிரங்களுக்கு ஏமாந்துவிட்டு வந்தோம்.

Friday, August 13, 2010

மற்றும் ஒரு நாள். குழந்தைகள் பள்ளி சென்று விட்டனர். வாசு (என் கணவர்) ஆபிஸிற்கு கிளம்பிக் கொண்டிருந்தார். பழைய மாவை இரண்டு தோ்சையாக ஊற்றி வேலைக்காரம்மா வரும்முன் பாத்திரத்தை விலக்கப் போட்டுவிட்டேன். காலிங்பெல் ஓசை. ஒரு வயதான பெண்மணி நின்று கொண்டிருந்தார்-சுத்தமாக, நேர்த்தியாக ுடை அணிந்து. பசிக்கிறது என்றார். தோசை சாப்பிடுகிறீர்களா என்றேன். சரி என்றார். ஊற்றி வைத்திருந்த தோசையைக் கொண்டு கொடுத்தேன். போர்ட்டிகோவில் அமர்ந்து சாப்பிடவா எனக் கேட்டார். ஹவுஸ் ஓனர் என்ன சொல்வாரோ என நினைத்து எதிர் மரத்தடியைக் காண்பித்து அங்கே உட்காரச் சொன்னேன். போகும் முன் மாற்று சேலையில்லை. ஒன்று வேண்டும் எனக் கேட்டார். சாப்பிட்டு வாங்க எடுத்து வைக்கிறேன். சேலை ஒன்றைக் கண்டுபிடித்து வைத்து சாப்பிட்டானதும் கொடுத்தேன். நல்லா இருக்கணும் என வாழ்த்திச் சென்றார். அதற்குள் வாசு ஆபிஸிற்குத் தயார். தோசை ஊற்றவா என்றேன். வாயெல்லாம் புண்ணாக இருக்கிறது. எதையும் வாயில் வைக்க முடியவில்லை. தண்ணி மட்டும் கொடு என்றார். சற்று முன் பாட்டி சொன்ன வாழ்த்தினால் கிடைத்த சந்தோஷம் நொடியில் மறைந்தது.

Thursday, August 12, 2010

வணக்கம்

தமிழ் கூறும் நல்லுலகிற்கு வணக்கம்! இன்று ஆடிப்பூரம். காலை குழந்தைகளையும், கணவரையும் வழியனுப்பிவிட்டு, புவனேச்வரி அம்மனைத் தரிசித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பி வந்தால் - ஓ மை காட்! வேலைக்காரம் மா பூட்டிய வீட்டைப் பார்த்துவிட்டு திரும்பி விட்டார்களாம் - பக்கத்து வீட்டு பாய் வீட்டம்மா தெரிவித்தார்கள். தாயே புவனேச்வரி உன் பக்தைக்கு நேர்ந்த சோதனை. பாத்திரம் துலக்குவது அப்படியொன்றும் கடினமில்லையெனினும் ஏனென்று புரியவில்லை வேலைக்காரம்மா வராவிட்டால் 'நான் இளிச்சவாய் அதான் என்னை டபாய்க்கிறார்' என்ற எண்ணம் தவிர்க்க முடியாமல் ஏற்படுகிறது. உங்களுக்கும் அப்படி தோன்றுமா? சொல்லுங்களேன்

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes