Saturday, December 24, 2011

சென்னை ஐஐடி கேம்பஸ் இன்டர்வ்யூ - மாணவனின் சம்பளம் வருடத்திற்கு 64 லட்சம் - எந்த துறை சார்ந்த நிறுவனத்தில்?

இந்த வருடம் எக்கனாமிக் ஸ்லோடவுன் இருக்கும் என்று உலகப்பொருளாதார வல்லுனர்கள் அச்சம் தெரிவித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில், ஐஐடி சென்னை மாணவன் ஒருவர் வருடத்திற்கு 64 லட்சம் ரூபாய் சம்பளத்தில் ஒரு அமெரிக்க நிறுவனத்தில் வேலையில் சேர்ந்துள்ளார். இந்நிறுவனம் எத்துறையைச் சார்ந்தது? பேங்க்கிங், பாதுகாப்பு, விண்வெளி ஆராய்ச்சி போன்ற எந்தத் துறையும் இல்லை. மாதம் சுமார் 5 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு ஆள் எடுத்துள்ள நிறுவனம் - பாக்கெட் ஜெம்ஸ். இந்நிறுவனம் செல்போன் கேம்ஸ் டெவலப் செய்யும் நிறுவனம். மேலும் பேஸ்புக் வருடத்திற்கு சுமார் 50 லட்சம் ரூபாய் சம்பளத்தில் ஐஐடி பாம்பே மாணவருக்கு வேலை அளித்துள்ளது.

இவ்விரு நிறுவனங்களும் கிட்டத்தட்ட பொழுதுபோக்கு துறையைச் சார்ந்தவை. ஏன் ஓடுகிறோம்? நம்முடைய இலக்கு என்ன என்பது தெரியாமலே ஒரு மிகப்பெரிய ஓட்டப்பந்தயத்தில் அனைவரும் ஓடிக்கொண்டிருக்கிறோம். இருக்கும் இடத்தைத் தக்க வைக்க இன்னும் வேகமாக ஓட வேண்டும் என்கிறார்கள் மேனேஜ்மென்ட் குருக்கள். இதன் விளைவு மிகப்பெரிய மன அழுத்தம். அனைவரும் ஏதாவது சாதித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். சாமான்யர்களுக்கு இங்கு இடம் இல்லை. இச்சூழ்நிலையில் அனைவருக்கும் தேவைப்படு்வது ஒரு ரிலாக்ஸேஷன். இதனால் பொழுதுபோக்குத்துறை மிக வேகமாக வளர்கிறது. இதன் வெளிப்பாடுதான் அனைத்து துறைகளிலும் மந்த நிலை நிலவும்போது, கம்ப்யூட்டர் கேம்ஸ் தயாரிக்கும் நிறுவனம் இவ்வளவு சம்பளம் கொடுத்து மாணவர்களை வேலைக்கு எடுப்பது.

Thursday, December 22, 2011

ஆ.ராசாவின் செக்ரட்டரி ஆசிர்வாதம் ஆச்சாரியின் 4 லட்சம் மதிப்புள்ள செல்போன்

2 ஜி வழக்கில் ஆ.ராசாவின் முன்னாள் செக்ரட்டரி ஆசிர்வாதம் ஆச்சாரி கோர்ட்டில் ராசாவிற்கு எதிராகத் தன்னுடைய சாட்சியத்தை அளிக்கத் துவங்கியிருக்கிறார். அவரைக் குறுக்கு விசாரணை செய்து கொண்டிருப்பவர் கனிமொழிக்காக ஆஜராகியிருக்கும் ராம் ஜெத்மலானி.



நேற்றைய விசாரணையில் ஆச்சாரியின் செல்போனைப் பற்றி விசாரித்திருக்கிறார் ஜெத்மலானி. அதன் மதிப்பு ரூ2.5 லட்சம் முதல் ரூ 4 லட்சத்திற்குள் இருக்கும் என்பது அவரது எஸ்டிமேஷன். இந்த போன் உங்களுக்கு எப்படி கிடைத்தது? அதன் விலை என்ன? என்று ஆச்சாரியைக் கேட்டிருக்கிறார். அதற்கு அவர் இந்த போன் என் மனைவிக்குப் பரிசாகக் கிடைத்தது. எனவே அதன் விலை எனக்குத் தெரியவில்லை என்றிருக்கிறார். வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு அவர்மேல் தொடர சிபிஐ காத்திருக்கிறது.

இந்நிலையில் அந்த செல்போனின் விலையைப் பில்லோடு இன்று கோர்ட்டில் நிரூபித்திருக்கிறார் ஆச்சாரி. அந்த செல்போனின் உண்மையான விலை இந்திய மதிப்பில் ரூ.4500. அதை ஆன்லைனில் ஆர்டர் செய்து அவரின் மனைவிக்கு வாங்கிக்கொடுத்திருப்பவர் மனைவியின் சகோதரர்.

4500 மதிப்புள்ள போனை 4.5 லட்சமாகச் சந்தேகமடையச்செய்து ஆச்சாரியைக் கோர்ட்டில் அசைத்துப் பார்த்த ஜெத்மலானி கோர்ட்டில் இன்று பல்பு வாங்கியுள்ளார். இன்னும் என்னென்ன போலியான மிரட்டல்களை ஆச்சாரி எதிர்கொள்ள வேண்டியிருக்குமோ??!!!!

Tuesday, December 20, 2011

தமிழ் கேபிசியின் ஹோஸ்ட் யார் - இப்போதே தெரிந்து கொள்ளுங்கள்

மிகப்பிரபலமான கேபிசி நிகழ்ச்சியின் தமிழ் வடிவம் நாளை முதல் விஜய் டிவியில் வரவிருக்கிறது. இதை நடத்தப்போவது சூர்யா (நன்றி டைம்ஸ் ஆ்ப் இண்டியா).

நேருக்கு நேர் படத்தில் ஆட வேண்டிய நேரத்திலும் ஓடிக்கொண்டேயிருந்த அந்த இளைஞனின் வளர்ச்சி ஆச்சரியத்தைத் தருகிறது. தமிழில் இது போன்ற ஒரு ஷோவை நடத்திய சரத்குமார் அவ்வளவு பிரமாதமாகச் செய்ததாக எனக்குத் தோன்றவில்லை. சூர்யா எப்படி நடத்தப்போகிறார் என்பதைப் பார்க்க ஆவலாக உள்ளேன்.

என் பாடல்களை தனுஷ் பாடலோடு ஒப்பிடாதீர்கள் - உலகமகா தமிழ்ப்பாடலாசிரியர் சிம்பு

இப்பலாம் யார் வேணாலும் தமிழ் சினிமால பாட்டெழுதலாம்னு ஆயிருச்சு. சும்மா எதையாவது வார்த்தைய சேத்துப்போட்டு பாட்டுன்னு சொல்றாங்க. என் பாட்ட இனிமே தனுஷ் பாட்டோட கம்ப்பேர் பண்ணாதீங்க - என்கிறார் லூஸுப்பெண்ணே லூஸுப்பெண்ணே போன்ற மனதை வருடும் காதல் பாடல்களையும், எவன்டி ஒன்னப் பெத்தான் கைல கெடச்சா செத்தான் போன்ற உயர்தர, காலத்தால் வெல்ல முடியாத தத்துவப்பாடல்களையும் படைத்த மகாக்கவிஞர் சிலம்பரசன்.

இவரது லேட்டஸ்ட் படமான ஒஸ்தியிலும் ஒரு மிக அருமையான பாடல் - வாடி வாடி க்யூட் பொண்டாட்டி, எழுதியிருக்கிறார். அதன் வரிகள் - அடாடா - எதாவது கோயில் வாசல் கல்வெட்டுல எழுதி இவர் அது பக்கத்துலயே உக்காந்துக்கலாம். நமக்கு பின்னால வர்ற சந்ததிகள் அதப்படிச்சு, நம்மள பத்தி தெரிஞ்சுக்க வசதியாயிருக்கும். வரலாறு ரொம்ப முக்கியம் சிம்பு ;)

கண்ணதாசனும், பட்டுக்கோட்டையும் இன்ன பிறரும் போட்ட ராஜபாட்டையில் செல்வதாக நினைத்துக்கொண்டிருக்கும் சிம்பு சற்று யோசித்துப்பேசுவது நல்லது. கேட்டுக்கொண்டிருப்பவர்கள் மடையர்கள் அல்ல.

Friday, December 16, 2011

கொலவெறி இசையமைப்பாளரின் இன்றைய நிலை



கொலவெறி பாடல் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது. தமிழ்ப்பற்றாளர்கள் கொலைவெறியோடு சுற்றுகிறார்கள் பாடலாசிரியரைப் பின்ன வேண்டுமென்று (நம்ம தனுஷ்தான்). இந்த ஒரு பாடலால் தமிழ் அழிந்துவிடும், கலாச்சாரம் தகர்ந்துவிடும் என்றெல்லாம் நான் நம்பவில்லை. தமிழ் மொழி இந்த மைனர் glitches க்கெல்லாம் தகர்ந்துவிடக்கூடிய பலவீன மொழியல்ல.



விஷயம் இப்பாடலின் இசையமைப்பாளருக்கு நம் தமிழ் திரையுலகம் தந்துள்ள cold response ஐப் பற்றியது. ஆனந்த விகடன் பேட்டியில் அவ்விசையமைப்பாள இளைஞன் தெரிவித்துள்ளார் தமிழ்த்திரையிசையுலகில் இருந்து யாரும் தன்னைத் தொடர்பு கொள்ளவோ பாராட்டவோ இல்லை என்று. ஒரு இளைஞன் தன் முதல் பாடலின் இசையிலேயே உலகின் கவனத்தையே ஈர்த்துள்ளான் என்பது நிச்சயம் அங்கீகரிக்கப்படவேண்டிய விஷயம். தகவல் தொடர்பு மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுவிட்ட இக்காலத்தில் ஒரு எஸ்எம்எஸ் மூலம் கூட தம் வாழ்த்தைத் தெரிவிக்கலாம்.



ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருது வாங்கியபோது எல்லாப்புகழும் இறைவனுக்கே என்றார். இது நடந்த ஓரிரு வாரத்திற்குள்ளாக இளையராஜா ஒரு பேட்டியில் - இப்ப எல்லாரும் எல்லாப்புகழும் இறைவனுக்குன்னு சொல்றாங்க. இறைவன் அனைத்தையும் கடந்தவன். அவனுக்கு எதுக்குங்க புகழ் - என்கிறார். என்ன ஒரு அற்பத்தனமான கமண்ட். தன் வெற்றியை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் ஒரு சக கலைஞனைக் காயப்படுத்தும் விமர்சனம் இது. சூட்டோடு சூடாக உலகம் இப்போ எங்கோ போகுது என்று ஒரு பாடல் வேறு. இளையராஜாவின் மாஸ்டர் பீஸான ஜனனி ஜனனி பாடலால் தன் மகளுக்கு ஜனனி என்று பெயர் சூட்டிய நிறைய பேரை நான் அறிவேன். தன் இசையால் ஒரு தலைமுறையையே கட்டிப்போட்ட ஒரு மகா கலைஞன் தன் சக கலைஞனை மதிக்கவோ வாழ்த்தவோ ஏன் துணிவதில்லை?



டிஎம்எஸ்ஸின் சில ஆண்டுகளுக்கு முந்தைய தற்கொலை முயற்சி மற்றுமொரு அதிர்ச்சி. அவரின் சாகாவரம் பெற்ற பாடல்களை இன்றும் நாம் நம் பக்தி நிமிடங்களிலும்(தேவனே என்னைப் பாருங்கள், ஆறு மனமே ஆறு), தத்துவ பொழுதுகளிலும், மனம் உற்சாகததில் துள்ளும் போதும் (அன்று வந்ததும் அதே நிலா, அதோ அந்த பறவை) ............................. மீண்டும் மீண்டும் நினைவில் கொண்டு வந்து மகிழ்கிறோம். இப்பேர்ப்பட்ட அங்கீகாரத்தைப் பெற்றும் அவர் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். தனக்குரிய அங்கீகாரம் தனக்கு அளிக்கப்படவில்லை என்ற அவரது புலம்பல் எரிச்சலையே அளிக்கிறது. இப்படிப்பட்டவர்களை நாம் நம் சொந்தக்காரர்களில், பணியிடங்களில் என்று பல இடத்தில் சந்திக்க முடியும்.



நாம் வியந்து போற்றும் சாதனையாளர்கள் பலரும் தன் மேலும் தன் திறமை மேலும் நம்பிக்கையில்லாமல் இருப்பது மிகுந்த ஆச்சரியத்தைத் தருகிறது. தன் மேல் நம்பிக்கை இருப்பவன் ஒருபோதும் பிறனை அவமானப்படுத்த மாட்டான். திறமைகள் எங்கிருந்தாலும் அங்கீகரிக்கத்தவறமாட்டான். தனக்குக் கிடைத்த அங்கீகாரத்தில் திருப்தி உடையவனாய் நிச்சயம் இருப்பான்.

Friday, December 9, 2011

சாப்ட்வேர் இன்ஜினியர்களின் வித்தியாச ஆன்சைட்

சென்னை பல்கலைக்கழத்தில் செமஸ்டர் எக்ஸாம்கள் நடந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் அங்கு சூப்பர்விஷன் செல்ல நேரிட்டது. எக்ஸாம் ஹால் சூப்பர்விஷன் என்பது நான் ஏற்கனவே முன்னொரு பதிவில் சொல்லியிருந்ததைப்போல எனக்கு மிகவும் பிடிக்காத மொக்கை வேலை. வேறு வழியேயில்லாமல் சென்றேன்.


பார்வையற்ற மாணவர்களுக்கான ஹாலில் எனக்கு சூப்பர்விஷன் அலாட் செய்யப்பட்டிருந்தது. இப்படிப்பட்ட அனுபவம் எனக்கு முதன்முறையாகக் கிடைத்தது. ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு உதவியாளர் வந்து மாணவர்கள் சொல்லச் சொல்ல எழுதிக்கொடுக்கின்றனர். அவர்களுக்கு ஸ்க்ரைப் என்று பெயர். பொதுவாக எக்ஸாம் ஹால்கள் மௌனத்தில் வெடித்துச்சிதறும். ஆனால் சலசலவென்று சத்தத்தோடு ஒரு எக்ஸாம் ஹால் இதுவே.


ஸ்க்ரைப்களாக வந்திருந்தவர்களில் காதில் எதுவும் அணியாமல் Swatch Watch, Puma bag உடன் வந்திருந்த பபிள்கம்மை மென்று மென்று மென்று கொண்டிருந்த இளம் பெண், தலையெல்லாம் பரட்டையாக பயங்கரமான Nike Shoeவும் ஒற்றைக் காதில் கடுக்கன் இளைஞன், மிக நீட்டாக ஆபிஸ் டிரஸ்ஸில் வந்திருந்த இரு இளைஞர்கள், சாதாரணமாக ஆடையணிந்த நடுத்தர வகுப்பைச் சேர்ந்த தோற்றத்தைக் கொண்டவர்கள் என வித்தியாச கலவையாக இருந்தது. அனைவரும் 25 வயது மிகாதவர்கள், இளைஞர்கள்.


அவர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரித்தேன் - நீங்கள் யார்? எப்படி ஸ்க்ரைபாக வந்தீர்களென்று. இவர்கள் அனைவரும் வெவ்வேறு தொண்டு நிறுவனங்கள் சார்பாக இச்சேவையைச் செய்து வருவதாகத் தெரிவித்தனர். கடுக்கன் இளைஞன், துபாயில் வேலை பார்ப்பதாகவும், விடுமுறையில் வந்தபோது இதைச்செய்வதாகத் தெரிவித்தான். இளம்பெண் MBA Student, மற்றொரு பெண் கரஸ்பான்டன்ஸில் கெமிஸ்ட்ரி. அனைவரும் இளைஞர்கள், 25 வயது மிகாதவர்கள். அந்த ஆபிஸ் இளைஞர்கள் இருவரும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள். சாப்ட்வேர் இன்ஜினியர்கள் அமெரிக்கா போவார்கள், லண்டன் போவார்கள், ரிசார்ட்டுகளில் கூத்தடிப்பார்கள் என்று பல்வேறு மீடியாக்களாலும் உருவாக்கப்பட்டு வரும் பிம்பம் சுக்குநூறாக சிதைந்தது. அவர்கள் ஆபிஸிலேயே (Scope International) சமூக சேவைக்கு நேரம் ஒதுக்கி வசதி செய்து தருகிறார்கள் என்று சொன்னான் அந்தப்பையன்.

மேலும் இக்கால இளைஞர்கள் மேம்போக்கானவர்கள், சமூக அக்கறையில்லாதவர்கள் என்ற அசட்டு வாதங்களும் அங்கே பொய்யாக்கப்பட்டன. விடுமுறையில் வரும்போதும் தேடி வந்து உதவி செய்யும் அவ்விளைஞனும், பணிச்சுமையிலும் அங்கு வந்து அருமையாக எழுதிக்கொடுக்கும் அப்பொறியாளர்களும், மேலும் அங்கிருந்த அத்தனை அழகர்களும், அழகிகளும் மானுடத்தின் மீதான என் நம்பிக்கையை எப்போதும் போல் உயர்த்தினர்.

என்னருமை இளைஞர்களே, உலகமெனும் பெருஞ்சக்கரம் உருண்டோடுவதற்கான பல்சக்கரங்கள் நீங்களே, உம் போன்றவர்களே. வாழ்க நீவிர் வளமுடன் என்னாளும்

Friday, December 2, 2011

பொன்னியின் செல்வன் வாசக வெறியர்களுக்கு ஒரு அதிர்ச்சி


பொன்னியின் செல்வனை வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே கருதும் தமிழர் அனேகம். வந்தியத்தேவனின் குதிரையை மனதால் பின்தொடர்ந்தோர் கணக்கில் அடங்காதவர். அனிருத்தப்பிரம்மராயரின் அறிவுத்திறனையும், குருவை மிஞ்சிய சிஷ்யனான ஆழ்வார்க்கடியானையும் விரும்பாதவர் யார்?
பூங்குழலியின் நுண்ணறிவோடு கூடிய விளையாட்டுத்தனம், ஆதித்த கரிகாலனின் வீரம் மற்றும் வேகம், ராஜராஜனின் தியாகம், சேந்தன் அமுதனின் பக்தி, குந்தவையின் ஆளுமைத்திறன், நந்தினியின் மயக்கும் அழகு மற்றும் தீராக்கோபம், மதுராந்தகனின் கோழைத்தனம், துரோகம் என அப்புதினத்தில் இடம்பெறாத மனித உணர்ச்சிகளே இல்லை எனலாம்.
இங்கு ஆதித்த கரிகாலனின் மரணம் இன்றும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது. யார் அவரைக்கொலை செய்தது என்பதை கல்கி பூடகமாகவே விட்டிருப்பார். பாண்டியனின் ஆபத்துதவிகள், பழுவேட்டரையர், நந்தினி என்று பலரும் ஆதித்தனின் அகால மரண வேளையில் கடம்பூர் அரண்மனையில் இருந்ததாக கல்கி சித்தரித்திருப்பார்.
பொன்னியின் செல்வன் நாவலின்படி சோழ அரசியான செம்பியன்மாதேவியால் வளர்க்கப்பட்ட ஆனால் பாண்டியகுலத்தைச் சேர்ந்தவனான மதுராந்தகன் அரியணையைக்கைப்பற்ற சூழ்ச்சி செய்து கொண்டிருக்கும் வேளையில், உண்மையில் அரியணைக்குரியவராகக் கருதப்பட்டவரும், செம்பியன் மாதேவியின் திருவயிறுதித்தத்தேவருமான, சேந்தன் அமுதன் சிவனெறிச்செல்வராக, சிவக்கைங்கர்யத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, தங்க நகைகளைக் காணும்போதும் சிவபெருமானின் பொன்மேனியை நினைவில்கொண்டு, பொன்னார்மேனியனே என்று சிவபதிகம் பாடிக்கொண்டிருந்திருக்கிறார். ராஜ்ஜியம் ஆளும் ஆசை துளியும் இல்லாத அவரை ராஜராஜனே அரியணையில் கட்டாயப்படுத்தி அமர வைத்ததாக நாவல் கூறுகிறது.
ஆனால் சமீபத்தில் படித்த ராஜராஜன் என்ற புத்தகத்தின் அடிப்படையில் (இப்புத்தகம் வரலாற்றுச்சான்றுகளின் அடிப்படையில் எழுதப்பட்டது - ஆசிரியர் ச.ந.கண்ணன், கிழக்கு பதிப்பகம்) உண்மையில் சேந்தன் அமுதன் என்ற உத்தம சோழனே சதி செய்து கரிகாலச்சோழனைக் கொன்றிருக்கிறார். எனவேதான் சுந்தரசோழனுக்கு அடுத்து ஆட்சிக்கு வந்தபின் உத்தமசோழன் ஆதித்தனைக் கொன்றவர்களைக் கண்டுபிடிக்கவோ தண்டிக்கவோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் மக்கள் உத்தமசோழனின் சதியை அறிந்தே இருந்திருக்கின்றனர். எனவே மக்களின் ஆதரவில்லாத மன்னனாகவே அவர் விளங்கியிருக்கிறார். அவருக்குப்பின் அரியணையேறிய ராஜராஜன் ரவிதாஸன் முதலான சதிகாரர்களைத் தண்டித்திருக்கிறார் And rest is history.
கதைக்காகக்கூட ஒரு சோழமன்னனைக் கொலைகாரனாக காட்ட கல்கி விரும்பவில்லை போலும். எழுத்தாளர்களுக்கே உரிய டிராபேக் இது. உண்மை இதனால் நிச்சயம் மறைக்கப்படுகிறது.

Monday, November 28, 2011

ஃபேஸ்புக்கின் கதை - தி சோஷியல் நெட்வொர்க்


சோனி பிக்ஸ் சேனலில் The Social Network திரைப்படத்தைப் பார்க்க நேர்ந்தது. 17.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு சாம்ராஜ்ஜியத்தை ஸ்தாபித்ததன் பின்னால் உள்ள அபாரமான மூளைத்திறனும், தொலைநோக்கும், நட்பும், நம்பிக்கை துரோகமும், ஐடியா திருட்டும், காத்திருந்து ஆளைக்கவிழ்க்கும் சதிகளும் - மார்வலஸ்.
ஃபேஸ்புக்கை உருவாக்கியதன் பின்னணி கதை இது. நம்மூரைப்போல் இத்திரைப்படத்தில் வரும் பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே - யாரையும் குறிப்பிடுபவையல்ல என்ற முன்னுரையெல்லாம் இல்லாமல், அனைத்து பாத்திரங்களையும் அதே உண்மைப்பெயர்களோடு உலாவ விட்டிருக்கின்றனர். facebook ன் founderஆக வரும் கதாபாத்திரம் திரைப்படத்திலும் அப்படியே, அதே பெயரோடுதான் வருகிறார்.
கதை இதுதான். zuckerberg ஹார்வர்டு பல்கலைகழகத்தின் மாணவர் (சைக்காலஜி மற்றும் கணினித் துறை). 2004ம் ஆண்டு தன் ரூம்மேட்ஸ் மற்றும் நண்பர்கள் டஸ்டின் மாஸ்கோவிட்ச், எட்வர்டோ சாவரின் ஆகியோரின் துணையோடு ஃபேஸ்மாஷ் என்றொரு வெப்ஸைட்டை உருவாக்குகிறார் - அதாவது தன் கல்லூரி பெண்களுக்கு ஆன்லைனில் மார்க் போடுவது. ஒரே நாளில் அனைவரும் இந்த சைட்டுக்கு லாகின் செய்த்ததால் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் நெட்வொர்க் க்ராஷ் ஆகிறது. இதையடுத்து கல்லூரியில் இவரது facemash தடை செய்யப்பட்டது. மேலும் அனுமதியின்றி கல்லூரி மாணவிகளின் புகைப்படத்தைப் பயன்படுத்தியதற்காக Zuckerberg அனைவரிடமும் மன்னிப்பு கேட்கவும் நேரிடுகிறது.
இச்சம்பவத்திற்கடுத்து Zuckerberg தன் website ஐடியாவைக் கல்லூரிக்கு வெளியில் தொடர்கிறார். தன் வெப்ஸைட்டை வெற்றிகரமானதாக்க யார் யாரை அவர் பிடித்தார், அவர்களைப் பயன்படுத்திக்கொண்ட பிறகு எவ்வாறு அவர்களைக்கழற்றிவிட்டார், facebookஐத் துவங்கியபோது தம்மோடிருந்த Eduardo Savarinஐ (Co-founder of Facebook) எப்படி வஞ்சித்தார் என்று விரிகிறது படம்.
மனிதமனத்தின் விகாரங்களும், நம்பிக்கை துரோகங்களும் நம்மை திகிலடைய வைக்கின்றன. குறிப்பாக நேப்ஸ்டர் கம்யுனிட்டியைக் (நாங்கள் கல்லூரியில் படித்தபோது இத்தளம் ரொம்ப ஃபேமஸ். music industryக்கு பெருத்த இழப்பை ஏற்படுத்தியதால் இத்தளம் தடைசெய்யப்பட்டது. இது ஒரு illegal தளம்தான்) கண்டுபிடித்த Sean Parker ஐ போலிஸில் மாட்டிவிடும்போது - இப்படியொரு வஞ்சகனின் வலைத்தளத்தையா நாம் பயன்படுத்துகிறோம் என்ற எண்ணம் ஏற்படுகின்றது. ஆசியர்களைப்பற்றியா இவர்களின் ஆதிக்க கருத்தும் சந்தடிசாக்கில் வெளிவருகிறது.
இப்படத்திற்கு Zuckerberg ன் reaction - ஹீரோவின் ட்ரெஸ்ஸிங் என்னைப்போலவே மிகச்சரியாக இருந்தது.மற்றபடி நிறைய விஷயங்கள் தவறு. இவ்வளவுதான் மொத்த ரியாக்ஷனே. வளர்ந்த நாடுகளின் கருத்துச்சுதந்திரம் நம்மை பிரமிக்க வைக்கிறது. இதைப்போல இங்கு சன் நெட்வொர்க் முன்னேற்றத்தின் பின்னணியைத் திரைப்படமாக எடுக்க முடியுமா?
அருமையான டைரக்ஷன், தேர்ந்த நடிப்பு, சிறந்த திரைக்கதை - வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் பாருங்கள்.

Friday, November 25, 2011

"ஏம்ப்பா நான் சரியாத்தான பேசுறேன்?"சந்தேகங்கள் :)

சில நேரங்களில், சில விஷயங்களில் நான் மட்டும் தான் இப்படி நினைக்கிறேனா, எனக்கு மட்டும்தான் இப்படித் தோன்றுகிறதா, நான் மட்டும்தான் இப்படி பண்றேனா என்று சந்தேகங்கள் ஏற்படுவது உண்டு. அப்படிப்பட்டவற்றை இங்கு சொல்கிறேன். நீங்களும் அப்படித்தானா என்பதைச் சொல்லுங்கள் ப்ளீஸ்.

  1. With all due respect to Dr.A.P.J.Abdul Kalam (no offense intended). சத்தியமா எனக்கு அக்னிச்சிறகுகள் படிக்கும் போது இம்ப்ரெஸ்ஸிவாகவே இல்ல. இந்தியா 2020 புத்தகத்தை என்னால் படித்து முடிக்கவே முடியல. செமயா தூக்கம் வந்துருச்சு. ஒரே போரான நடை - உங்களுக்கு?
  2. முன்பே வா என் அன்பே வா பாடலை எல்லோரும் சூப்பர் பாட்டு என்கிறார்கள். எனக்கு அந்தப்பாட்டு செம மொக்கயா தெரியுது. அதே மாதிரி ராவணன் படத்தில் கள்வரே பாட்டு - ஐய்யய்யயோ அதல்லாம் பாட்டான்னு தோணுது. (இந்த மாதிரி பெரிய்யய லிஸ்ட்டே இருக்குப்பா)இதச்சொன்னா நம்மள கேவலமா பாக்குறாங்கப்பா.
  3. அப்புறம் மைக்ரோவேவ் அவன - உண்மையா சொல்லுங்க மக்கா - ready to eat chappathis தயார் செய்யுறது, சாப்பாடு சுட வக்கிறது தவிர வேற எதுக்காச்சு யூஸ் பண்றீங்களா என்ன? convection mode ல கேக்கு, க்ரில் மோடுல சிக்கன் எல்லாம் அவன் வாங்குன ஒரு மாசத்துக்கப்புறம் எப்பவாச்சு பண்ணீங்களா?
  4. சீனியர்ஸ் சொல்ற ஜோக்குக்கு சிரிப்பு வருது?

Sunday, November 20, 2011

பழசை நோக்கி ஓடும் மனம்

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வருவதும், இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லாததாய் தோன்றுவதும் நடிகர் திலகத்திற்கு மட்டுமல்ல நம் அனைவருக்குமே அனேக நேரங்களில் அப்படித்தான் இருக்கிறது. ஏன் இந்த மனம் என்றும் பழசை நோக்கியே பாய்கிறது?

ஆசிரியையாக வகுப்பின் முன் நிற்கும்போதும் ஏன் மாணவியாக benchல் அமர்ந்திருந்த நாட்களைநோக்கி மனம் பின்னால் பாய்கிறது?

பருகுவதற்கு மிக இனிமையான Greams' Road Fruitshopன் freshஆன பழச்சாறுகள், MarryBrownன் மில்க் ஷேக்குகள், எக்கச்சக்க சாக்லேட் வெரைட்டிகள், ஐஸ்க்ரீம்கள், கேக்குகள், பிட்ஸாக்கள் இவற்றில் எதை பருகினாலும், உண்டாலும் ஏன் இந்த மனம் பழைய சூடமிட்டாயை, கல்கோனாவை நினைத்து ஏங்குகிறது? ஏன் கோல்ட்ஸ்பாட் படத்தைப் பார்த்தாலே தொண்டை அடைத்து மனம் வாடுகிறது?


அது ரெஸ்பான்ஸிபிலிட்டிஸ் இல்லாத காலம். அப்போது நமக்கு ஏதும் பொறுப்புகள் கிடையாது. நாம் மனதளவில் ஃப்ரீயாக இருந்தோம். எனவேதான் அந்த நாட்களை நாம் மீண்டும், மீண்டும் அசைபோடுகிறோம். அந்த நாட்களோடு தொடர்புடைய பொருட்களை நாம் விரும்புகிறோம் என்னும் கருத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. என்னுடைய மாணவப்பருவத்தில் நான் நிச்சயம் ஃப்ரீயாக, பொறுப்புகளற்றவளாக இல்லை. தீராத தனிமையிலும், மனக்கவலையிலும், வயதுக்கு மீறிய பொறுப்புகளோடும் தான் இருந்தேன்.


இளமைக்காலங்கள் இவ்வாறு பிரச்சனைகள் நிறைந்ததாய் இருந்தாலும்கூட பல வேளைகளில் நாம் அந்நாட்களை எண்ணுவதற்கு காரணம் நிகழ்வாழ்க்கையின் வெம்மையும், எதிர்காலத்தின் நிச்சயமற்ற தன்மையும் தான் என்றெண்ணுகிறேன்.

வாழ்க்கையென்னும் மகாநதியின் போக்கை நம்மால் கணிக்கவோ, அதை மாற்றவோ இயலுவதில்லை. வாழ்க்கையைச் சுவாரசியமாக்குவதும் அதன் இத்தன்மைதான் என்றாலும் பல சமயங்களில் இப்பூடகம், இந்நிச்சயமற்ற தன்மை நம்மை பீதிக்குள்ளாக்குவதும் மறுக்கமுடியாத நிஜம். இதனால்தான் தற்சமயம் நாம் எவ்வளவு நல்ல நிலையில் இருந்தாலும், நாம் ஏற்கனவே வாழ்ந்து முடித்த, இதற்குப்பின் இதுதான் நேரும் என்று நிச்சயமாகத் தெரிந்த அந்த நாட்களை நாம் அதிகம் நேசிக்கிறோம் என்பது என் கருத்து.

Wednesday, November 9, 2011

4 நாட்கள் லீவ் போட்ட 2ஆம் வகுப்பு பிள்ளை

பிள்ளைகளுக்கு எதிர்பாராமல் ஒரு 4 நாட்கள் ஸ்கூலுக்கு லீவ் எடுக்கும்படி நேர்ந்துவிட்டது. 2ம் வகுப்பு பிள்ளை 4 நாட்கள் லீவ் எடுத்தால் நமக்கு கை கிட்டத்தட்ட ஒடிந்துவிடும். 7 subject (English, Tamil, EVS, Hindi, GK, Maths, Arts & Craft) - ஒவ்வொரு subjectஇலும் 10 பக்கம் எழுத வேண்டியிருக்கும். அதையாவது எழுதிக்கொடுத்து விடலாம் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.என்ன பின் வருவது போன்ற கமெண்ட்டைப் பிள்ளையிடம் கேட்க வேண்டியிருக்கும்.(#ஹேண்ட் ரைட்டிங் நல்லால்லைனு மிஸ் திட்டினாங்க. இனிமே கொஞ்சம் நீட்டா எழுதித்தாங்கம்மா என்றாள் என் மகள்). ஆனால் arts and crafts என்று ஒன்று இருக்கிறது. பென்சில் துருவலைப் பயன்படுத்தி பூ செய்யவேண்டும். சாக்லேட் தாளால் கப்பல் செய்யவேண்டும் - அவ்வ்வ்வ்வ்வ்.

இதில் நான் actualஆக சொல்ல நினைத்தது என்னவென்றால், நாங்கள் ஸ்கூல் படித்தபோதெல்லாம் (சுமார் 25 வருடங்களுக்கு முன்) லீவ் போட்டோமென்றால் ப்ரண்ட்ஸ்களின் வீட்டை நோக்கி ஓடுவோம். அவர்களின் நோட்டை வாங்கி விடுபட்ட பாடங்களைக் காப்பி செய்வதற்கு. பாடங்களை எழுதாமல் செல்வோமேயானால் டீச்சர் அடி பின்னி விடுவார்கள் பின்னி. ஆனால் இப்போது நிலைமை தலைகீழ். நான்கு நாட்கள் விடுமுறைக்குப்பின் பள்ளி சென்ற என் மகள் திரும்பி வந்தபோது அவளுடைய க்ளாஸ் டீச்சரே அனைத்து பாடங்களுக்கான notesஐயும் மற்ற பிள்ளைகளிடம் வாங்கி கொடுத்து விட்டிருந்தார். தயவு செய்து நாளையே காப்பி பண்ணிவிட்டு மற்ற பிள்ளைகளின் நோட்டைக்கொடுத்து விட்டுவிடுங்கள். இல்லன்னா பிரின்ஸிபால் என்னைத் திட்டுவார் என்ற கெஞ்சல் தொனியிலான குறிப்புடன்.

எனக்கு ஆசிரியர்களின் இன்றைய நிலை குறித்து மிகுந்த மனவருத்தம் ஏற்பட்டது. ஆசிரியர்கள் service providerகளாகவும், மாணவர்கள் customer களாகவும் மாறிவிட்டதன் அவலம் இது. குரு என்ற உன்னத ஸ்தானம் இன்று இல்லை. மாணவர்கள் அவர்களுக்கு கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் என்ற கான்சப்ட்டே இன்று இல்லை. எங்க மிஸ்ஸ இன்னக்கி HM திட்டிட்டாங்க. எங்க மிஸ் class cupboardஅ நீட்டாவே வச்சுக்கல - என்று பிள்ளைகள் சொல்வதை சர்வசாதாரணமாக கேட்க முடிகிறது. தன் ஆசிரியை தன் கண் முன்னாலேயே மற்றொருவரால் திட்டப்படுவதைப் பார்க்கும் பிள்ளை எப்படி தன் ஆசிரியரை மதிக்கும்? ஆசிரியர் என்பதற்கான கம்பீரமான பிம்பம் சுக்குநூறாக உடைபடுகிறதல்லவா? சாதித்த நிறைய பேருக்குத் தங்கள் பள்ளி ஆசிரியரே Rolemodel ஆக இருந்திருக்கின்றனர் (உதா. அப்துல்கலாம் - அவரின் பள்ளி ஆசிரியர்தான் அவருடைய role model என்று பல இடங்களில் சொல்லியிருக்கிறார்). எனக்கும் என் 10ம் வகுப்பு science teacher (உயர்திரு. மஹாலட்சுமி) தான் role model. வாழ்க்கையில் எது முக்கியம், எது முக்கியமில்லை என்று எனக்கு சொல்லிக்கொடுத்தவர் அவர்தான். அது பற்றி பின்னொரு சமயம் எழுதுகிறேன். இப்படியொரு role model ஆசிரியர்கள் உலகிலிருந்து நம் பிள்ளைகளுக்கு கிடைப்பது இனி சாத்தியமா? அப்படி ஒருவேளை சாத்தியமில்லை என்பது நம் பதிலாய் இருக்குமேயானால் அதற்கு முழுமுதற்காரணமும் நாம்தான். ஆசிரியர்கள் அல்ல.

Friday, October 21, 2011

சென்னை MRTS திருவான்மியூர் ஸ்டேஷனில் ஒரு நாள்

காலையில் அரக்க பரக்க பிள்ளைகளை ஸ்கூலுக்கு கிளப்பி அனுப்பிவிட்டு, தங்கள் பிரேக்ஃபாஸ்ட்டைச் சின்ன மூடி போட்ட கிண்ணங்களில் எடுத்து வந்து ரயிலில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் குடும்பத்தலைவியர், கையடக்கப் புத்தகங்களிலிருந்து ஸ்லோகங்களையோ, கர்த்தருக்கு ஸ்தோத்திரங்களையோ படித்துக்கொண்டிருக்கும் பெண்கள், லஷ்மி கடாட்சம் பெறுவது எப்படி என ஆன்மிக மலரிலிருந்து வாசித்துக்கொண்டிருக்கும் நீட்டான பேண்ட் சர்ட் அணிந்து, கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு, பெரிய குங்குமப்பொட்டு வைத்துக்கொண்டிருக்கும் வினோதமான கெட்டப்பில் நடுத்தர வயது ஆண்கள், நின்றபடியே ஹிண்டு படிப்பவர் எனக் கலந்து கட்டி கம்பார்ட்மென்ட் நிறைந்து வழிந்து கொண்டிருந்தது. என்னருகில் ஒரு இளம்பெண் அமர்ந்திருந்தார் செல்போனைக் குடைந்தபடி. வேளச்சேரியிலிருந்து வண்டி லேசாக வேகமெடுத்து திரும்பவும் வேகத்தைக்குறைத்து மீண்டும் புறப்பட்டது. (யாராவது ட்ரெய்னைப் பிடிக்க ஓடி வருவதைப்பார்த்தால் டிரைவர் நிறுத்தி மீண்டும் புறப்படுவார். ட்ரெய்னையே நிறுத்தி நம்மை ஏற்றிக்கொள்ளும் மனிதாபிமானமெல்லாம் நிச்சயம் இங்கு மட்டுந்தான் காண முடியும். UK வில் பஸ்ஸைப் பிடிக்க நாம் ஓடி வருவதைப் பார்த்தாலும் டிரைவர் போய்க்கொண்டே இருப்பார்.) அடுத்த நிறுத்தத்தில் ticket checker ஏறினார். என்னருகில் அமர்ந்திருந்த பெண் டிக்கட் எடுக்கவில்லை. பிடிபட்டுவிட்டார். நில்லும்மா மத்தவங்கள செக் பண்ணிட்டு வந்துர்றேன் என்று டிக்கட் செக்கர் நகர்ந்தார். வண்டியும் நகரத்துவங்கிவிட்டது. அந்த நேரத்தில் அவ்விளம்பெண் யாரும் எதிர்பாராத ஒரு வேலையைச் செய்தார். சிறிது வேகம் பிடித்த ரயிலிலிருந்து குதித்து விட்டார். அப்படியே பிளார்ட்ஃபார்மில் டமாரென்று விழுந்த சத்தம். அப்புறம் என்னென்னவோ வினோத சத்தங்கள். என்னவென்று பார்ப்பதற்குள் வண்டி மிகுந்த வேகமெடுத்துவிட்டது. நிச்சயம் 2,3 fracture ஆவது ஆகியிருக்கும்.

மிஞ்சி மிஞ்சிப் போனால் 500 ரூபாய் ஃபைன் போட்டிருப்பார். இதற்குப் போய் ஏன் ஓடும் ரயிலிலிருந்து குதித்தார்? அவரை ரயிலிலிருந்து குதிக்கத் தூண்டியது நிச்சயம் அந்த ஃபைனாக இருக்காது. அவமானம் தான் காரணமாக இருக்கும்.

நம் வாழ்க்கையில் நாம் ஏமாந்த தருணங்களை விட, உடல் ரீதியாகத் துன்பப்பட்டத் தருணங்களை விட நாம் அவமானப்படுத்தப்பட்ட தருணங்களே நம்மை மிக அதிகமாகப் பாதிக்கின்றது. யோசித்துப்பார்த்தால் நம்மிடம் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றியவர்களைக் கூட நாம் குறிப்பிட்ட நாட்களுக்குள் மன்னித்து மறந்தும் கூட விடுகிறோம். ஆனால் வார்த்தைகளாலும், செயல்களாலும் நம்மை அவமானப்படுத்துபவர்களோடு நாம் நம் உறவைத் தொடர என்றுமே விரும்புவதில்லை. இதனால் தான் ஆத்திச்சூடி கூட மதியாதார் தலைவாசல் மிதியாதே என்று போதிக்கின்றது போலும். வேறெந்த வகையில் நம்மைப் பாதித்தவர் வீட்டுக்குக் கூடச் செல்லலாம். ஆனால் அவமதித்தவர் வீட்டிற்கல்ல என்கிறார் நம் அவ்வைப்பாட்டி. யாரையும் கனவிலும் அவமதிக்காமல் இருக்க எங்கும் நிறை இறைபெருமான் நமக்கு அருள் பிரிவாராக

Friday, October 14, 2011

அழகிய பிட்கெய்ர்ன் தீவு - பெண் குழந்தைகளின் பாலியல் நரகம்

ஒரு காலத்தில் தென் பசிபிக் பகுதியின் தனிமை சொர்க்கமாக கருதப்பட்ட பிட்கெய்ர்ன் தீவின் இருண்ட பக்கங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. தலைமுறை தலைமுறையாகத் தொடரும் பெண் குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறைகள் தற்சமயம் வெளிவந்துள்ளன.





பிட்கெய்ர்ன் தீவு பெருவுக்கும், நியூசிலாந்துக்கும் இடையில் அமைந்துள்ள உலகின் மிகத்தனிமையான, குறைவான மனிதர்களே வசிக்கும் ஒரு அழகிய தீவாகும். இது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வரும் தீவாகும். இத்தீவின் தனிமையே இதன் மிகப்பெரிய அட்ராக்ஷனாகவும் இருக்கிறது. கடினமான பாறைகளும், அடர்ந்திருக்கும் மரங்களும், அலைகளின் தாலாட்டும், ஆளரவமற்ற தனிமையும் இங்கு முதலில் 1790ஆம் ஆண்டு ஃப்ளெட்சர் க்றிஸ்டியனின் தலைமையின் கீழ் வந்தடைந்த HMS Bounty கப்பலில் இருந்தவர்களுக்கு ஒரு சொர்க்கத்தை வந்தடைந்த உணர்வைத் தந்தது. இத்தீவின் தனிமை அவர்களுக்கும், இன்றும் அங்கே வசித்து வரும் அவர்களின் வம்சாவளியினருக்கும் தங்களின் கொடிய குற்றங்களை மறைத்துக் கொள்ள ஒரு நல்ல போர்வையைத் தந்தது.





இங்குள்ள பெண் குழந்தைகள் 12 வயதிலேயே அவர்களின் விருப்பமின்றி
தாயாக்கப்படுகிறார்கள். இங்குள்ள அனைத்து ஆண்களுமே பெண்குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறை புரிந்தவர்களாகவும், பெண் குழந்தைகள் அனைவருமே பாதிக்கப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர், (2004 ல் இவர்களின் மொத்த ஜனத்தொகை 47). இத்தீவுக்கு airport, sea port கிடையாது. ஒரேயொரு docking yard மட்டும் உண்டு. இப்படி ஒரு வெளியாட்களின் வரவே இல்லாத ஒரு சமூகத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் யாரிடமும் எதுவும் சொல்லவும் வாய்ப்பில்லை. தாயார், பாட்டி அனைவரும் இதே விதத்தில் பாதிக்கப்பட்டவர்களே. 1999ஆம் ஆண்டு அங்கு விசிட்டிங் போலீஸாக வந்த ஒரு பெண் அதிகாரியிடம் ஒரு 15 வயது பெண் குழந்தை தான் ரேப் செய்யப்பட்டதையும், இங்கு எவ்வாறு அது சர்வசாதாரணமாக செய்யப்படுகிறது என்பது பற்றியும் தெரிவித்திருக்கிறாள். மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு பெரிய திருட்டை மட்டுமே ஹேண்டில் செய்திருந்த அந்த அதிகாரி, இக்குற்றச்சாட்டின் தீவிரத்தால் அதிர்ந்து போனார். மற்ற பெண்களும், குழந்தைகளும் தைரியமடைந்து தங்களின் வேதனையான அனுபவங்களை வெளியில் சொல்லத்துவங்க, இத்தீவின் இன்னொரு கோர முகம் உலகுக்கு வெளிப்படுத்தப்பட்டது. நியுசிலாந்து கோர்ட்டில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விசாரிக்கப்பட்டனர். நாங்கள் பிரிட்டிஷ் ராஜஜியத்தின் கீழ் வரமாட்டோம். எனவே எங்களை வேறு யாரும் விசாரித்து குற்றம் சாட்டமுடியாது என்று தற்சமய தலைவர் (முதல் ஃபோட்டோவில் 2ம் வரிசையில் வெள்ளை டிஷர்ட்டில் இருப்பவர் - அவரும் குற்றவாளிதான்) வாதிட்டது தள்ளுபடி செய்யப்பட்டது. அனேகமாக அனைத்து ஆண்களும் கைதாகும் நிலை ஏற்பட்டதால், சில வயதான பெண்கள், தீவின் ஆண்களைக் காப்பாற்ற வேண்டுமென "இதிலென்ன இருக்கிறது. இது பாலினேஷியக் கலாசாரத்தின் ஒரு பகுதி" என வாதிட்டனர். இவை அனைத்தையும் மீறி, நியுசிலாந்து கோர்ட் அனைவருக்கும் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

இன்று செய்தித்தாளில் விழுப்புரத்தில் தந்தையால் கர்ப்பமாக்கப்பட்ட பெண் குழந்தை, குழந்தை பெற்றார் என்ற தினமலர் செய்தி மனத்தை நொறுக்குகிறது. இக்கட்டுரை பாதிக்கப்பட்ட, பட்டுக்கொண்டுருக்கிற ஒவ்வொரு குழந்தைக்குமான என்னுடைய பிரார்த்தனை.








Friday, October 7, 2011

இந்தியா திரும்புவீர்களா NRI இன்ஜினியர்ஸ்?

சமீபத்தில் ஒரு நீண்ட ரயில் பயணம் மேற்கொள்ள நேர்ந்தது. பிள்ளைகள்
வளர்ந்து விட்டதனால் அவர்களைத் தொடர்ந்து கவனிக்க வேண்டிய அவசியமில்லாமல் பிரயாணத்தை ரசிக்க முடிந்தது. மிதமான ஏசி, சுவையான சரவணபவன் உணவு வகைகள் மற்றும் அருமையான புத்தகங்கள். ஒரு ரயில் பயணத்தை உபசொர்க்கமாக மாற்ற இவை போதுமல்லவா?






வழியில் பெயர் தெரியாத சின்ன சின்ன ஊர்கள் ஓடி மறைந்து கொண்டிருந்தன. அந்த நிலையங்களில் காணப்பட்ட செடி கொடிகள் படர்ந்த உடைந்த பெஞ்சுகள் என் நினைவுகளை வேறெங்கோ இழுத்துச் சென்றன. அந்த நிலையங்களில் எந்த ரயில் நிற்கும் என்றே தெரியவில்லை. எதற்கு தன்னந்தனி காட்டுக்குள் இப்படியொரு ஸ்டேஷன்? அங்கிருந்து ஒடி மறையும் மண் சாலைகள் எங்கு செல்கின்றன? புரியவில்லை. அந்த பாழடைந்த தோற்றம் இங்கு தனிமையிலிருக்கும் பெற்றோரை ஏனோ எனக்கு நினைவுறுத்தியது.




நான் என் நண்பர்கள் அல்லது பிள்ளைகளோடில்லாத உறவினர்கள் வீட்டுக்குச் செல்லும்போது (நண்பர்கள் வெளிநாட்டில், இங்கே இருப்பது அவர்களின் பெற்றோர்கள் மட்டும். நான் பார்க்கச் செல்வதும் பெற்றோர்களைத்தான்)அமெரிக்காவில் இருக்கும் பிள்ளைகளை நினைத்தபடி இங்கே தவிக்கும் அவர்களின் தனிமை மனதை உலுக்குகிறது. பிள்ளைகளின் ஃபோட்டோக்களை ஆசை ஆசையாக நமக்கு எடுத்து காண்பிக்கின்றனர். ஏற்கனவே facebookல் பார்த்துவிட்டோம் என்று சொல்ல மனமில்லாமல் நாமும் முதன்முறை பார்ப்பது போல் நடிக்கிறோம். அவர்களின் வீடுகள் மிகவும் posh ஆக இருக்கின்றன. ஆனால் அவை வெறும் கற்களாலான கட்டடம் மட்டுமே. குழந்தைகளின் அழுகையும் சிரிப்பும் நிறைந்த, மகனும் மருமகளும் மகிழ்ந்து குலாவி அல்லது சண்டை போட்டுத்திரியும் உயிரோட்டம் அங்கு இல்லை. Sunday evening நம்ம டைம் 7மணி போல onlineல வருவாங்கம்மா என்று அவர்கள் சொல்லும்போது அவர்கள் use பண்ணும் technical terms (online, skype, webcam) என் மனத்தை அறுக்கின்றது. எனக்குத்தெரியும் அவர்கள் அந்த வார்த்தைகளை எவ்வளவு வெறுக்கிறார்கள் என்று.


ஹரிகேசநல்லூர் வெங்கடராமன் (பிரபல ஜோதிடர்) சொல்கிறார் - ஒரு காலத்தில் (சுமார் 15 வருடங்களுக்கு முன்னர்) என்னிடம் ஜாதகம் பார்க்க வரும் பெற்றோர்கள் என் மகன் வெளிநாடு போவானா? அவனுக்கு அந்த யோகம் இருக்கிறதா? என்று கேட்பர். ஆனால் இப்போதோ என் மகன் திரும்ப வருவானா? அவன் கையால் கொள்ளி வாங்கும் யோகம் எனக்கிருக்கிறதா என்று கேட்கின்றனர் என்கிறார்.
கணவன்,மனைவி இருவரும் சேர்ந்து பிள்ளைகளற்ற தனிமையில் இருப்பது கூட பரவாயில்லை. வாழ்க்கைத்துணை மறைந்து பிள்ளைகளும் வேறெங்கோ இருப்பவரின் நிலை இன்னும் பரிதாபம். கொடிது, கொடிது முதுமையில் தனிமை.

வெளிநாடுகளில் வசிப்போரே, உங்கள் பெற்றோர் இங்கு தனிமையில் இருக்கும் பட்சத்தில் யோசியுங்கள். நீங்கள் அங்கு இருப்பதற்கான காரணம் நிச்சயம் பணத்தைத் தவிர வேறெதுவாகவும் இருக்க முடியாது. ஆனால் உண்பது நாழி,உடுப்பது இரண்டு, உறைவிடம் என்பது ஒன்று தான். பெற்றோரைத் தனிமையில் விடாதீர்கள். மேஜர் சர்ஜரிகளைத் தனிமையில் எதிர்கொள்கிறார்கள், தனித்திருக்கும் தகப்பன்மார்கள் தொலைபேசியில் சமையல் குறிப்பு கேட்கிறார்கள் புத்தக சேகரிப்புகளை யார் பார்த்துக்கொள்வார்கள் என்று வருந்துகிறார்கள்.இவர்களின் தேவை பணமல்ல. நீங்கள் தான். வீடு திரும்புங்கள். பெற்றோர் மனம் குளிரச் செய்யுங்கள்.








Saturday, September 17, 2011

பாலுமகேந்திராவின் மனைவி

நான் என் மனைவிக்கே விசுவாசமாக இல்லை. இப்படிச் சொல்லிக்கொள்வதில் எந்த வருத்தமும் இல்லை - படப்பெட்டி சினிமா இதழ் வெளியீட்டு விழாவில் பாலுமகேந்திரா வெளியிட்டுப் பேசியது.



தமிழ்நாட்டின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர்; தனது பெரும்பான்மையான படங்களில் (மீண்டும் கோகிலா, மறுபடியும், ரெட்டைவால் குருவி, சதிலீலாவதி) கணவன் வேறொரு பெண்ணை நாடிச் செல்லுவதில் உள்ள சிக்கல்களையும், மனைவிக்கு அதனால் ஏற்படும் மன உளைச்சலையும், நியாயமான கோபத்தையும் அழகுற, ஆழமாக காட்சிப்படுத்தியவரின் இப்படியொரு ஸ்டேட்மெண்ட் அதிர்ச்சியைத் தருகிறது. ஒரு கணவன் தன்னைவிட்டு வேறொரு பெண்ணை நாடும்போது அந்த மனைவி எவ்வளவு வருத்தமுறுகிறாள் என்பதை மிக நன்றாக ஒரு பெண்ணின் மனநிலையிலிருந்து புரிந்து கொண்டு அதை மிகச்சரியாகவும் படம் பிடித்த ஒரு ஆண்மகன் தன் மனைவியை அதே போன்றதொரு சோகத்தில் ஆழ்த்துவது எப்படி சாத்தியம்? படைப்புகள் என்பவை ஒரு படைப்பாளனின் பிரதிபலிப்பு இல்லையா? உச்சிதனை முகர்ந்தால் கர்வம் ஓங்கி வளருதடி என்று பாடிய பாரதியால் தன் மகளை வெறுக்க முடியுமா? அப்படி வெறுத்தால் அவனுடைய படைப்பு போலியானது இல்லையா? உண்மை மட்டுமே என்றும் நிலைக்கும். சதிலீலாவதியில் ஒரு காட்சியில் கமல் கதாநாயகனைப் பார்த்துச் சொல்வார் - கார் வாங்கி குடுத்தானாம், வீடு வாங்கி குடுத்தானாம், ஃப்ரிட்ஜ் வாங்கி குடுத்தானாம் (சின்ன வீட்டுக்கு). உன் மனைவி குடுத்ததுதானடா உங்கிட்ட இருக்குறது எல்லாம். என்னவொரு அருமையான வசனம். இதை எழுதியவரே இதை உணராமல் போவது எவ்வளவு பெரிய சோகம்.

பாலுமகேந்திராவின் மனைவியைப் பற்றி அவருடைய சிஷ்யர்கள் தங்கள் நிறைய பேட்டிகளில் சொல்லியிருக்கின்றனர். பாலா ஆனந்தவிகடனில் எழுதிய தொடரில் கூட பாலுமகேந்திராவின் மனைவியின் மென்மையான சுபாவத்தைப் பற்றி கூறியிருப்பார். அத்தகைய மனத்தை மவுனிகா என்னும் வலிய ஆயுதம் கொண்டு தாக்குவது எவ்விதத்திலும் சரியில்லை.

அதே போல் எழுத்தாளர் பாலகுமாரன் தன்னுடைய பல நாவல்களில் பெண்ணியம் பேசுவார். அவருடைய பயணிகள் கவனிக்கவும் என்ற நாவலில், கதாநாயகனது infatuation பற்றியும், பின்னொரு நாளில் அவன் உண்மையான காதலில் ஈடுபடுவதையும் அழகாகச் சுட்டுவார். காதலைப் பற்றி இவ்வளவு அழகாக எழுதுபவர், வாழ்க்கைத்துணையைப்பற்றி சிலாகித்துப் பேசுபவர் எப்படி இன்னொரு திருமணம் செய்தார்?? இதில் இரு மனைவியரும் ஒரே வீட்டில் ஒற்றுமையாக இருக்கின்றனர் என்று பெருமை வேறு. படைப்புகள் படைப்பாளிகளின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும். அது நான் வடித்த ஒரு கேரக்டர். அந்த கேரக்டர் அப்படி நடந்து கொள்ளும். அதற்கு நான் என்ன செய்வது என்று ஒரு படைப்பாளன் சொல்லுவானேயானால் then he is a hypocrite. இந்த வசனத்தை ஒரு நடிகன் வேண்டுமானால் சொல்லலாம் (உதாரணம்: ரஜினி- குசேலன் படம்). ஏனெனில் நடிகன் ஒரு கருவி மட்டுமே. ஆனால் ஒரு இயக்குனர், ஒரு எழுத்தாளர் கர்த்தா. அவன் இப்படிச்சொல்லுவது பேடித்தனம்.

முடிவாக, தவறுகளுக்கு மன்னிப்பு உண்டு. துரோகங்களுக்கு அல்ல.

Friday, September 16, 2011

வேளச்சேரியில் உணவகங்கள் - ஒரு கைட்லைன் - பார்ட் II





வேளச்சேரியில் உள்ள உணவகங்களின் சுவை, சர்வீஸ் மற்றும் விலை பற்றிய தொடர் பதிவு இது. முதலில் 100 அடி ரோட்டில் உள்ள சங்கீதா வெஜ் ரெஸ்ட்டாரண்ட். பொதுவாக எங்கள் வீட்டில் யாரும் வெஜ் ரெஸ்ட்டாரண்ட்டை, ரெஸ்ட்டாரண்ட்டாகவே கருதுவதில்லை ;). இருப்பினும் அந்த ஏரியாவின் மற்ற நான்-வெஜ் ரெஸ்ட்டாரண்ட்டுக்குப் போக அன்று மனதில் தெம்பு இல்லாததால் (ஹிஹிஹி) இங்கு சென்றோம். சும்மா சொல்லக்கூடாது - நல்ல ஆம்பியன்ஸ். சீட்டிங் அரேன்ஜ்மென்ட்டும் வசதியாக உள்ளது. ஒரே டேபிளில் இந்தப்பக்கம் ஒரு குடும்பத்தையும் அந்தப்பக்கம் மற்றொர் முன்பின் தெரியாத குடும்பத்தையும் அமர வைப்பதில்லை.






நாம் சென்று அமர்ந்தவுடன் ஒரு பெரிய பவுல் நிறைய சின்ன அப்பளம், வடகம் கொண்டு வந்து வைக்கிறார்கள். பிள்ளைகளுக்கு ஜாலிதான். starter க்கு சில்லி பன்னீர் க்ரேவி, மஷ்ரும் 65 ஆர்டர் செய்து கொண்டோம். மிக சாஃப்ட்டான டேஸ்ட்டியான, மிதமான மசாலா கொண்ட பன்னீர் துண்டுகள். மஷ்ரூம் 65 ஒரு துளி எண்ணெயில்லை. மிக அருமை. இங்கு இட்லி, தோசை வகைகள் not up to the mark. இட்லி பிய்க்க 4 விரல்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. சிறிது புளிப்பாகவும் இருக்கிறது. மற்றபடி சூப், fried rice ஆகியவை மிக அருமை.










KFC Restaurantன் ரிஸோ ரைஸ், பக்கெட் சிக்கன், பர்கர் அனைத்தும் நன்றாக உள்ளன. இவற்றை நம் இந்திய நாவிற்கு ஏற்ற முறையில் spicy யாகத் தருகிறார்கள். ஆனால் இங்கு உள்ளே நுழைந்தவுடன் குப்பென்று வீசும் துர்நாற்றம் நாம் இன்னொரு முறை அங்கே செல்ல வேண்டுமா என்று யோசிக்க வைக்கிறது. எவ்வளவோ அருமையான air freshenerகள் இருக்கின்ற நிலையில் ஏன் இப்படியொரு துர்நாற்றம்??? Im surprised. இந்தப்பிரச்சினையை இந்த ரெஸ்ட்டாரண்ட் காரர்கள் கட்டாயம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.








அடுத்தது நிறைய விளம்பரங்களுடன் துவங்கப்பட்ட திண்டுக்கல் தலப்பாக்கட்டி ரெஸ்ட்டாரண்ட். விளம்பரங்களால் எதிர்பார்ப்பும் மிக அதிகம். இவர்கள் ஹைலைட் செய்தது இவர்களின் பிரியாணி, மற்றும் கரண்டி முட்டை. அதையே ஆர்டர் செய்தோம். பிரியாணியின் ஸ்பெஷாலிட்டி, சீரக சம்பா அரிசியில் செய்கிறார்கள். அருமையான ருசி. மிதமான மசாலா, நன்கு வெந்த கறித்துண்டுகள். அந்த வகை அரிசியினாலே ஒரு தனி ருசி நிச்சயம் கிடைக்கிறது. மற்றவை சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இங்கே இவர்களது சீட்டிங் arrangement very very uncomfortable. Ergonomyயைக் கன்ஸிடர் பண்ணவே இல்லை.


Flamingo வுக்கு ஒரு மதியம் 2.30 போல் சென்றோம். இவர்களது நேரம் காலை 11 முதல் இரவு 11 வரை என்று குறிப்பிட்டிருந்தாலும் நாங்கள் சென்ற நேரம் எதைக்கேட்டாலும் இல்லையென்றார்கள். எந்த starter ம் இல்லை. அது இல்லை, இது இல்லை - ஸ் அப்பா. சாம்பார் சாதமும் தயிர் சாதமும் மட்டும் இருக்கிறது என்றார்கள். நன்றாகத்தான் இருந்தது. ஆனால் கொஞ்சம் (ரொம்பவே) காஸ்ட்லி. Hot Chips அவ்வளவு திருப்திகரமாக இல்லை.


மொத்தத்தில் இம்முறை முந்துவது சங்கீதா ரெஸ்ட்டாரண்ட்தான். நல்ல சர்வீஸ், வசதியான இருக்கைகள், சுவையான உணவு, மிதமான விலை. try பண்ணி பார்த்துவிட்டு சொல்லுங்கள்.









Wednesday, September 14, 2011

விருதுநகர் புரோட்டா சால்னா

ஆரம்பிக்கும் முன் ஒரு சின்ன க்விஸ். கீழ்க்காணும் விருதுநகர் புரோட்டாவில் காணப்படும் பிழைகள் என்ன? விடைகள் கடைசியில்.







விருதுநகர் காமராஜர் பிறந்த ஊர் என்பதற்கு அடுத்தபடியாக அதன் புரோட்டா சால்னாவிற்குத்தான் ஃபேமஸ். 60 வருடங்களுக்கு முன் தெப்பத்தை ஒரு ரவுண்ட் சுற்றி வந்தால், சுற்றியுள்ள புரோட்டா கடைகளில் ஊர் முதலாளிகள் (TKSP, VVR, MSP - ஊர் பெரிய மனிதர்களின் பெயர்ச்சுருக்கம்) அனைவரையும் பார்த்துவிடலாம் என்பார்கள் எங்கள் வீட்டுப் பெரியவர்கள். ஒரு காலத்தில் பெரிய மனிதர்களின் ஏகபோக உரிமையாக இருந்த புரோட்டா சால்னா இப்போது அனைவரும் புசிக்கக் கூடியதாக மாறிவிட்டது.






சாயங்காலம் 5 மணி முதல் எல்லா புரோட்டா கடைகளிலும், புரோட்டா கிடைக்கத் துவங்கும். முன்பெல்லாம் பெண்கள் கடைக்குச் சென்று சாப்பிடமாட்டார்கள். வீட்டு ஆண்கள் வாங்கி வருவதற்காகக் காத்திருக்க வேண்டும். எங்கள் மயில் அண்ணன் வயர்க்கூடை சகிதம் புரோட்டா வாங்கக் கிளம்பிய தினங்கள் இன்றும் பசுமையாய். இப்போ trend மாறி விட்டது. முக்கால்வாசி கடைகளில் family room வந்து விட்டது.



இன்றும் என்று விடுமுறைக்கு ஊருக்குச் சென்றாலும் வாசு கட்டாயம் எங்களை கடைக்கு கூட்டிச் சென்று விடுவார். இதில் ஒரு விஷயம் என்னவென்றால் நீங்கள் பர்மா கடை, கமாலியா, அசன் கடை, அல்லா பிச்சை கடை என்று எந்த கடைக்கு வேண்டுமானாலும் செல்லலாம். எல்லாக் கடையிலும் அதே சுவை கிடைக்கும்.



மொறு மொறுவென்று புரோட்டா. அதற்கு தொட்டுக்கொள்ள சால்னா. சீக்கிரம் சென்றால் மட்டுமே கிடைக்கும் மட்டன் சுக்கா. இதைச்சாப்பிடுவதில் ஒரு டெக்னிக் இருக்கிறது. புரோட்டாவைச் சால்னா தொட்டு சாப்பிடக்கூடாது. சர்வரே பிய்த்துப்போட்டு மேலே சால்னா ஊத்தி எடுத்து வருவார். உங்கள் முகத்தைப் பார்த்தால் வெளியூர்க்காரர் என்று தெரிந்தால் பிய்த்துப்போடமாட்டார் - hygiene reasons க்காக நீங்கள் மறுக்கலாம். ஆனால் அவரே பிய்த்துப் போட்டு தருவதில்தான் டேஸ்ட் அடங்கியுள்ளது. அந்த மட்டன் சுக்கா - அடேங்கப்பா - டிவைன் என்பார்களே அந்த ரகம். சான்ஸே இல்லை. அண்ணாச்சீ அந்தக்கறிய எப்டிண்ணாச்சி வேக வக்கிறீங்க?? saute, marinate என்று என்னென்னவோ சொல்கிறார்களே - அனைவரும் பிச்சை வாங்க வேண்டும். அந்த மசாலா எதைக்கொண்டு தயாரிக்கிறார்கள் - அடேங்கப்பா. முட்டை வழியல் என்று ஒரு ஐட்டம். முட்டை ஆம்லேட் ஒரு பந்து மாதிரி இருக்கும். அதைப்பிய்த்தால் உள்ளே வெங்காயம், மிளகு எல்லாம் கலந்து அரைவேக்காடாக இருக்கும். என்ன ஒரு ருசி. அதை நினைத்துக்கொண்டு இங்கே நம்ம சென்னையில், திண்டுக்கல் தலப்பாக்கட்டி restaurantல் கரண்டி முட்டை ஆர்டர் செய்தோம். menu cardல் photo லாம் பயங்கர அழகா போட்டிருந்தாங்கன்னு நம்பி ஆர்டர் பண்ணிட்டோம் - அவ்வ்வ்வ்வ். அப்படியொரு roughஆ ரப்பர் மாதிரி இருந்துச்சு.



track மாறிட்டேன் sorry.







இன்னொரு விஷயம் அங்கே காணப்படும் கஸ்டமர் சர்வீஸ். அரைமணி நேரம் ஏன்னு கேக்க ஆளில்லாம திருதிருன்னு முழித்துக்கொண்டு உட்கார்ந்திருக்க அவசியமில்லை. அதே போல் சும்மா சும்மா சால்னா கேட்க வெட்கப்பட்டுக்கொண்டு அமர்ந்திருக்க வேண்டாம். நாம் சால்னா கேட்கலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே 'தம்பி அக்காக்கு சால்னா ஊத்து' என்பார் அண்ணாச்சி. ஆனா என்ன ஒரு சின்ன விஷயம்னா அண்ணாச்சிக்கு 50, 60 வயசு இருக்கும். ஆனால் எல்லா வயதினரும் அக்கா, அண்ணாச்சி தான் அவருக்கு.

எங்கள் ஊர்ப்பக்கம் சென்றால் புரோட்டா கடைக்குப் போகாம வந்துராதீங்க. ஜென்மம் சாபல்யம் அடையாது ;)


புதிர் விடைகள்


1. புரோட்டாவின் சைஸ் - படத்தில் மிகப்பெரிதாக உள்ளது

2. சைட் டிஷ் - பட்டாணி, உருளக்கியங்கு குருமா தொட்டு சாப்பிடுறதுக்குப் பேசாம வீட்லயே பால் சோறு சாப்ட்டு படுத்துருலாம்ங்க.

Tuesday, September 13, 2011

குட்டி பிள்ளைகளின் சுட்டி ரெஸ்பான்ஸ்கள்

பின் வருபவை 6 வயது அக்கா மற்றும் 4 வயது தம்பியின் பதில்கள், விளக்கங்கள் ;)







  1. காலை எழுந்தவுடன் ஆரம்பிக்கும் கேள்விக்கணைகள் - மீன் பல் தேய்க்குமா?; ரைனோசரஸுக்கு வால் இருக்குமா? (அவன் கேட்டவுடன் எனக்கே சந்தேகம் வந்துவிடும்); மழை பெய்யும்போது வானத்தில் ஏரோப்பிளேன் நனையுமே! யார் குடை பிடிப்பா?; tenக்கு அப்புறம் tenone தானே, ஏன் elevenனு சொல்றீங்க(பிள்ளை கேட்பதும் correct தானங்க. twentyக்கப்புறம் twentyone தான?) - இப்படி இடைவிடாத கேள்விகளில் நாம் பொறுமையிழந்து தொண தொணன்னு கேள்வி கேக்காதடா என்று அலறும் போது அக்குழந்தை உண்மையிலேயே குழம்பி - நான் கேள்வி கேக்கல அம்மா. பதில் கேக்குறேன் - என்று சொல்லும் குழந்தைத்தனத்தில் இறைவனைக் காணலாம்.




  2. Chips packet ஐ தலைகீழாக கவிழ்த்து விளையாடும் பிள்ளையிடம், ஏய் என்ன பண்ணிக்கிட்டிருக்க? அறிவு கெட்டது - என்று சொன்னவுடன் - நான் அறிவு கெட்டது இல்லம்மா - அறிவு நல்லது என்று ரெஸ்பான்ஸ் (ரொம்ப நல்லவன்டா நீ அவ்வவ்வவ்வவ்வ்)




  3. Chota Bheem POGO வில் இப்போது தமிழில் வருவதைப்பற்றி அக்காவும் தம்பியும் டிஸ்கஷன் - என்ன பப்பு பீமும் காலியாவும் தமிழ்ல பேசுறாங்க? ஆமா தம்பு, அவுங்க தமிழ் டியூஷன் போயிருப்பாங்கன்னு நெனக்கிறேன். (அடுத்து அனேகமாக Mr.Beanம் தமிழ் டியூஷன் போயிருவாருன்னு நெனக்கிறேன் ;) )




  4. Real Juice 1 ltr carton ஐத் தலைகீழாக கவிழ்த்துக்கொண்டிருக்கும் பிள்ளையிடம் - எதுக்கு இப்படி கவுத்துற?. பிள்ளையின் பதில் - juice இருக்கா தீந்து போயிருச்சான்னு பாக்குறேன். (அவரு பாத்து முடிக்கிறதுக்குள்ள juice நெஜமாவே தீந்திருக்கும் :) )


  5. அக்காவிடம் தம்பி - missக்கு A B C தவிர வேற ஒண்ணுமே தெரியல பப்பு. daily அதே தான் சொல்லிக்கொடுக்குறாங்க.

Saturday, September 3, 2011

சூப்பர் சீன்ஸ்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாமல் இடம்பெறுபவை காதல் காட்சிகள். இவற்றில் என்னை மிகவும் கவர்ந்தவற்றை, எப்போது நினைத்து பார்த்தாலும் மனதில் இனிய உணர்வுகளைத் தோற்றுவிக்கும் காட்சிகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.




நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்


நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்


திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்


சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்


என்று காணுமிடமெல்லாம் தன் காதல்துணையையே காணும் இனிமையன்றோ காதல். கமலஹாசனைக் காதல்மன்னன் என்று ஏன் சொல்கிறார்கள் என்பதே எனக்குப்புரியவில்லை. கமல் தன்னுடைய முக்கால்வாசி படங்களில் தன் மேல் காதல் வெறி கொண்ட கதாநாயகிகளுக்கு தமிழ் பண்பாட்டைக் கற்றுத்தருகிறார் அல்லது தன் வேலை எவ்வளவு முக்கியமானது என்பதை மக்கு காதலிக்கு தன் ட்ரேட்மார்க் முறையில் சொல்லிக்கொடுக்கிறார் - சகலகலாவல்லவன், காக்கிச்சட்டை, சிங்காரவேலன், குருதிப்புனல், தேவர்மகன், மகாநதி என்று என் நினைவில் தோன்றும் கமலின் அனைத்துப்படங்களிலுமே இதே நிலைதான். விஜயகாந்த், சத்யராஜ் என்று அந்த பீரியட் நடிகர்களின் அனைத்துப்படங்களுக்கும் இது தான் நிலை. கார்த்திக் துறுதுறு காதலனாகத் தோன்றி இளம் மனங்களைக் கொள்ளை அடித்தார்.


விஜய் காதல் காட்சிகளைப் பற்றி பேச ஒன்றுமேயில்லை. பத்தாம்பசலித்தனமான வசனங்களும் காட்சிகளுமே காதல் என்ற பெயரில் இடம் பெறுகின்றன. விஷால், சிம்பு, தனுஷ் முதலிய இன்றைய கதாநாயகர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் - நண்பர்களிடம் சவால்விட்டு பெண்களை மடக்குவது போன்ற காட்சிகளைப் பெண்கள் நிச்சயம் ரசிப்பதில்லை.


கம்மிங் டு த பாய்ண்ட் - எனக்குப் பிடித்த காதல் காட்சி - ஜானி திரைப்படத்தில் ரஜினி, ஸ்ரீதேவி இடையேயான காட்சி - ரஜினி முதலில் கரும்பு ஜூஸ் 2 டம்ளர் வாங்கி வருவார். ஒரு டம்ளரில் இருப்பது சிந்திவிடும். நிறைய இருக்கும் டம்ளரை ஸ்ரீதேவியிடம் கொடுப்பார். ஸ்ரீதேவி அதை வாங்க மறுத்து குறைவாக இருக்கும் டம்ளரையே தனக்கும் கேட்பார். என்ன ஒரு அருமையான ரொமான்ஸ்.


ஒரு நல்ல, இனிமையான உணவை ரசித்து உண்ணும் போதும், அருமையான புத்தகத்தைப் படித்துக் கரையும்போதும் இதை ரசிக்க நம்மோடு அவன்/ள் வேண்டுமே, இந்த அருமையான உணவின் சுவையை அவனும்/அவளும் சுகிக்க வேண்டுமே என்ற நினைவுதானே, கரிசனம் தானே காதல். தனக்கு குறைவானதை எடுத்துக்கொண்டு நிறைவானதைத் தன் துணைக்குத் தருவது தானே காதல். அதே திரைப்படத்தில் இன்னொரு காட்சி. ஸ்ரீதேவி எதற்கோ அழுவார். அதை ரஜினியால் துளியும் சகித்துக்கொள்ள முடியாது. 'ஏன் ஏன் அழுறீங்க கண்ண தொடச்சிக்கோங்க" - தன் மனதிற்கினியவள் துயருறும் போது அதைக் காணவும் சகியாத மனம் தானே காதல் நிறைந்தது. அந்தக்காட்சியில் நீங்க அழுதா என்னால தாங்க முடியாது என்று வசனம் பேசியிருந்தால் that scene would have fell flat. எல்லாவற்றையும் சொல்லிவிடமுடியுமா? பேசாத வெற்றிடத்தையும் நிரப்புவது தானே காதல். இதற்கு இணையான ஒரு காதல் காட்சியை இன்று வரை நான் காணவில்லை. அதே படத்தின் சென்யோரிட்டா பாடலில் கற்பனை காகம் கதாநாயகியின் மேல் அசிங்கம் செய்துவிடும். ரஜினி அதை துரத்துவார். அதில் தெரியும் அக்கறை - சான்ஸே இல்லை. இன்னொன்றையும் இவ்விடத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். ரஜினி போல் பவர்ஃபுல் ஸ்கிரீன் பிரஸன்ஸ் கொண்ட நடிகர் இன்று வரை யாரும் இல்லை. power packed performance என்பார்களே அது - மற்றும் அந்த manliness. அதனால் தான் அவர் அன்றும் இன்றும் என்றும் SuperStar.


முன்னால் கண்ணாடிக்கதவைத்திறந்து கொண்டு கணவன் கடைக்குள் நுழைய பின்னால் குழந்தையுடன் வரும் மனைவி கதவைப்பிடிக்கத் தடுமாறுவதை எத்தனையோ இடங்களில் பார்த்திருக்கிறேன். அக்கறைதான் காதல், பகிர்தல் தான் காதல். இதை அருமையாக சித்தரித்த ஜானிக்கே என் ஓட்டு.

Wednesday, August 31, 2011

ஆசிரியர்கள் உலகின் 5 ரகசியங்கள்

மாணவப்பெருமக்களே, ஆசிரியர்கள் உங்களுக்கு இதுவரை சொல்லியிராத இனிமேலும் சொல்லப்போகாத ரகசியங்கள் பின் வருபவை:




  • ஆசிரியர்களுக்கு நீங்கள் nick name வைப்பதைப் போல அவர்களும் உங்களுக்கு nickname வைப்பதுண்டு. அப்பெயரை வைத்து தான் நீங்கள் departmentல் அழைக்கப்படுவீர்கள். நீங்கள் முன்னாள் மாணவராய் இருந்தால் உங்கள் டீச்சரிடம் கேட்டுப்பாருங்கள் உங்கள் பெயர் என்னவென்று.


  • Bit அடிக்கும் மாணவனைப் பிடித்த பின்பு எங்களுக்கும் (அதாவது ஆசிரியர்களுக்கும்) பயமாக இருக்கும் - பையன் பொன்னம்பலம் சைசில் இருப்பான். பத்திரமாக வீடு போய் சேர வேண்டுமே :)


  • வகுப்பறையில் தூங்கும் மாணவனை அந்நேரம் திட்டினாலும் மனதிற்குள் சிரிப்பை அடக்கிக் கொண்டுதான் இருப்போம். departmentன் அன்றைய காமெடி பீஸ் அவன்தான்


  • உங்களிடம் Take a paper - surprise test என்று சொன்னால் நிச்சயம் எங்கள் வீட்டிற்கு முந்தின நாள் guest வந்தார்கள். அதனால் prepare பண்ணவில்லை என்று அர்த்தம்.


  • நீங்கள் எப்படி 1 hr க்ளாஸைத் தள்ள கஷ்டப்படுகிறீர்களோ அதேபோல் நாங்களும் 3 hrs exam supervisionஐத் தள்ளக் கஷ்டப்படுவோம். அதனால்தான் பொறுப்பாக நீங்கள் எழுதும் answerஐப் படித்துக்கொண்டிருப்போம். (அது ஏன் நாங்க உங்க பேப்பர படிக்க ஆரம்பிச்சவுடனே நீங்க எழுதுறத நிறுத்திட்டு எங்களப் பாக்குறீங்க - அப்புறம் எப்படித்தான் எங்களுக்கு பொழுது போறதாம்?)

Sunday, August 28, 2011

ஒவ்வொரு ஃபிரெண்டும் தேவை

நாம் மனிதர்களையும் அவர்கள்பால் நாம் கொள்ளும் உறவுகளையும் கையாள்வதில் என்றும் உணர்ச்சிவயப்பட்டவர்களாகவே இருக்கிறோம். பெண் என்னும் தனி மனுஷியை நமக்கு ஒன்று தெய்வமாக சித்தரிக்கவேண்டும் அல்லது பேயாக கேவலப்படுத்த வேண்டும். கணவனைக் கண்கண்ட தெய்வம் என்று கொண்டாடும் - தெய்வம் தொழாள் கொழுநன் தொழுவாள் - டைப்பாக இருக்கவேண்டும். ஆசிரியர்களை mr அல்லது mrs என்ற அடைமொழியோடு பெயரிட்டு கூப்பிடுவதை நம்மால் நினைத்தே பார்க்க முடியாது. அதே போல் நண்பர்களையும், நட்பையும் ஒரு pedestalல் கொண்டு வைத்தபின் தான் நாம் ஓய்கிறோம். friendshipக்காக என்ன வேணாலும் செய்வேன் என்று பேசுபவரை திரைப்படத்தில், வகுப்பறையில், ஆஃபிஸில் எங்கும் காணலாம்.





போன வாரம் ஸ்கூலில் இருந்து வீடு திரும்பிய என் மகளின் கைகளில் காயம். என்னவென்று விசாரித்ததில் ஹரிணி கிள்ளிவிட்டதாகச் சொன்னாள். நீ miss கிட்ட சொல்லி வேற place போக வேண்டியது தான என்றேன். ஹரிணி என் friend மா என்றாள். உன்ன மாதிரியே இருக்கிறா உன் மகளும் (எவ்வளவு அடிச்சாலும் தாங்குறா. இவ ரொம்ப நல்லவ) என்றார் வாசு. நண்பர்களால் நாம் காயமடைவதும், மோசமான ஏமாற்றங்களுக்கு உள்ளாவதும், அதை நம் நெருங்கிய உறவினர் criticise பண்ணுவதும் எல்லா வீடுகளிலும் நடப்பது. நீதான் friend friendங்கிற. அவ செஞ்ச வேலையப் பாத்தியா என்ற கேள்வியை எதிர்கொள்ளாதவர்களே இருக்க முடியாது. இது எதை நிருபிக்கிறது என்றால் நண்பர்கள் மோசமான மனிதர்கள் என்பதையல்ல - நண்பர்களும் மனிதர்களே என்பதை. நண்பர்கள் சில வேளைகளில் சுயநலத்தோடு நடந்து கொண்டாலும், காயப்படுத்தினாலும் நிச்சயம் அவர்களை நம் வாழ்க்கையிலிருந்து முற்றுமாக அகற்றிவிட முடியாது. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. நட்பை பாதுகாத்துக் கொள்ள சில டிப்ஸ் தர விரும்புகிறேன்.















  1. பிரத்தியேகமானது எதையும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். துன்பத்தைப் பகிர்ந்து கொண்டால் பாதியாகும், இன்பத்தைப் பகிர்ந்து கொண்டால் இரட்டிப்பாகும் என்பதும் சுத்த ஹம்பக். அனைவருக்கும் பொதுவான பிரச்சினைகளை மட்டும் பகிர்ந்து கொள்ளுங்கள். உதாரணமாக பெற்றோரின் மரணம் தரும் வலியை என்னால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் உடல் பருமனால் அவதியுறும் தோழியின் மனவலியை என்னால் ஒரு அளவுக்கு மேல் புரிந்து கொள்ளவே முடியாது. whats the big deal என்பதே என் reaction ஆக இருக்கும். எனவே மனம் வருந்தி நீங்கள் பகிர்ந்து கொள்ளும் விஷயம் கிண்டலாக ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் உங்கள் மீது பிரயோகிக்கப்படும்போது மனவலி ஏற்படும். ஏனெனில் அப்பிரச்சினை இல்லாத உங்கள் தோழியால் அதைப்புரிந்து கொள்ள இயலாது. அதே போல் பொதுவான சந்தோஷங்களை மட்டுமே பகிர்ந்து கொள்ளுங்கள். அன்னா ஹசாரே உண்ணாவிரதம் சக்ஸஸ் என்று கூறி சந்தோஷப்பட்டுக்கொள்ளுங்கள். உங்கள் பிரத்தியேக சந்தோஷங்களை அல்ல. ஏனெனில் மனித மனம் நுண்ணிய இழைகளால் ஆனது. அந்த இழைகளை அறுத்து மனத்தைச் சிதைக்க சிறு சலனமும் போதும். உங்களின் வெற்றியைக் கேட்கும் உங்கள் நண்பனின் மனதில் தோன்றும் சிறு ஏக்கமும் (அந்த வெற்றி அவர்களுக்கும் கிடைத்திராத பட்சத்தில்) பொறாமைத்தீயைப் பற்ற வைத்து நட்பை பஞ்சராக்கும். இவைகளால் நம் நண்பர்கள் கெட்டவர்கள் என்று புரிந்து கொள்வது அரைவேக்காட்டுத்தனம். நம் நண்பர்களும் - உயர்ந்த லட்சியங்களும், கீழான இச்சைகளும், சகமனிதருக்கு உதவவேண்டும் என்ற எண்ணமும், நான் மட்டுமே உயரவேண்டும் என்ற தன்னலமும் - கலந்து கொண்ட நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களே.










  2. எதன் பொருட்டும் கேட்கப்படாமல் அட்வைஸ் கொடுக்காதீர்கள். இது 10 வருட நட்பையும் 10 நிமிடத்தில் நொறுக்கி அள்ளிவிடும் வல்லமை படைத்தது. என் 12 வருட தோழியின் காதலனுக்கு accident. வீட்டில் படுக்கையிலிருக்கிறார். அவர்களுக்கு கல்யாணம் நிச்சயமாகிவிட்டது. தோழி வேறு ஊரில் இருந்தாள். accident விஷயம் தெரிந்தவுடன் அவள் அவர் வீட்டிற்கு சென்று தங்கி அவருக்கு உதவி செய்ய விருப்பப்பட்டாள். நான் அந்த ஊர்ல ஒரு மாதிரியா பேசுவாங்க. பாத்துப்போ என்றேன். (அவள் என்னிடம் ஐடியா கேட்கவேயில்லை. நானாத்தான் கொடுத்தேன்). அன்றோடு என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டாள். திருமணத்திற்கு பத்திரிககை கூடத்தரவில்லை. கேட்கப்படாமல் ஐடியாவோ அட்வைஸோ தரவே தராதீர்கள். அவரவர் வாழ்க்கையை நடத்திச்செல்ல அவரவருக்குத்தெரியும்.



இவற்றால் உணரப்படும் நீதி: எல்லாவற்றையும் பகி்ர்ந்து கொள்ளாதீர்கள், கேட்கப்படாமல் அட்வைஸ் தராதீர்கள். ஏனெனில் ஒவ்வொரு ஃபிரெண்டும் நிச்சயம் தேவை நண்பர்களே

Monday, August 8, 2011

டப்பர்வேர் தோழிகள் ??!!

கல்லூரிப்பருவம் முடிந்த பின்னர் திருமணமானவுடன் தோழிகளோடு செலவிட பெண்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. திருமணமான முதல் வருடம் தம்பதியருக்குள் ஒருவரின் குறை மற்றவருக்குத் தெரிவதில்லை. எனவே முதல் வருடம் இனிதே கழிகிறது. அடுத்த 3 வருடங்கள் ஒரே தலை போகிற சண்டை (ஒருவரை ஒருவர் புரிஞ்சுக்கிறோமாம் ;) ). நீங்க ஏன் உங்க அம்மாக்கிட்ட அப்படி சொன்னீங்க? நீ மட்டும் அப்டி செய்யலாமா - இத்யாதிகள். அடுத்து ஒரு ஸ்டேஜ் - வாழ்க்கைத்துணை செய்யும் ஏதோ ஒரு செயல் மனவருத்தத்தைத் தருகிறது - ஆமா சொல்லி சண்ட போட்டானாப்ல என்ன ஆயிரப்போகுது என்ற மனப்பக்குவமும், தெளிவும் ஏற்பட்டுவிடும் ;)பிள்ளைகளும் பள்ளிக்குச் செல்லத் துவங்கிவிடுவர். இந்த இடத்தில் ஒரு வெற்றிடம் ஏற்படுகிறது. கல்லூரித் தோழிகளின் நினைவு வருகிறது. இச்சமயத்தில் அக்கம்பக்கம் யாராவது நம்மோடு பழகமாட்டார்களா? ஏதாவது ப்ரண்ட் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றுகிறது.

இப்படி ஒரு ஸ்டேஜில் நான் இருந்தபோது ஒரு நாள் என் மகளை அபாகஸ் க்ளாஸ் முடித்து என் அம்மா கூப்பிட்டு வநுத பின் ஒரு விஷயத்தைச் சொன்னார். சன் ஷேட் அப்பார்ட்மென்ட்ஸில் (எங்க வீட்டுக்கு 2 வீடு தள்ளி) ஒருத்தங்க இருக்காங்க. டப்பர்வேர் சாமான்லாம் விக்கிறாங்களாம். வாங்குறியான்னு கேட்டாங்க. அவங்க வீட்டுக்கு வரச்சொன்னாங்க - என்றார். நானும் பழைய டப்பாக்களைத் தூக்கிப்போட்டுவிட்டு புது டப்பாக்கள் வாங்கலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அவர்கள் வீட்டுக்கு போய்தான் பார்ப்போமே என்று சென்றேன் (தயக்கத்துடன்தான்). அங்கே எனக்கு தடபுடல் வரவேற்பு. மிக இனிமையாக பேசினார் அப்பெண்மணி. குழந்தைகளின் படிப்பு, பள்ளிகளின் தரம், ஏரியாவில் ரியல் எஸ்டேட் நிலவரம் என்று பல விஷயங்களை டிஸ்கஸ் செய்தோம். நேரம் போனதே தெரியவில்லை. கேட்டலாக் காண்பித்தார். நான் கேட்ட சில ரக டப்பாக்கள ஸ்டாக் இல்லை. 2 எண்ணை ஜார்கள், ஒரு பீலர் வாங்கிக்கொண்டேன். கிட்டத்தட்ட ரூ.1800 பில். மற்ற சாமான்கள் ஸ்டாக் வய்தவுடன் தெரிவிப்பதாகச் சொன்னார். சாப்பிட்டுத்தான் போகவேண்டுமென்று ஒரே அன்புத்தொல்லை. அடுத்தமுறை பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு வரவேண்டுமென்றார். எனக்கும் பிள்ளைகள் எந்நேரமும் வீட்டிற்குள்ளேயே கிடக்கின்றார்களே. நல்ல விளையாட்டுத்துணை கிடைத்திருக்கிறார்கள் என்று மகிழ்ச்சி. ஒரு வாரமாக அவர்கள் வீட்டுக்கு என் பிள்ளைகளும் எங்கள் வீட்டுக்கு அவர்கள் பிள்ளைகளும் வந்து ஒரே குதூகலம் தான். டிவி கம்ப்யூட்டர் தான் விளையாட்டுத்தோழர்கள் என்று எண்ணியிருந்த குழந்தைகளுக்கு ஒரு புதிய உலகம் கண்முன் விரிந்த்து. everything went smooth. meanwhile நான் என் சுமார் 18 வருடத்தோழி மோனிக்கு போன் பண்ணி கிச்சன் முழுமைக்கும் டப்பர்வேர் டப்பாக்கள் வாங்கவிருப்பதைச் சொன்னேன். மாலா ப்ளாஸ்டிக்கில் ஏன் அவ்வளவு காசு போடுகிறாய்? சாதா ப்ளாஸ்டிக்குக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இருக்காது. ஒரே வருடத்தில் இதுவும் பழசாக ஆகிவிடும் என்றாள். யோசித்துப் பார்த்ததில் அதுவே சரியென்று பட்டது. எனவே டப்பர்வேர் தோழியிடம் மற்றவை வேண்டாமென்று சொல்லிவிட்டு தோசை மாவு டப்பா ஒன்று மட்டும் வாங்கிக்கொண்டேன்.

அன்று மாலை - அம்மா ஷிவானி (புதுத்தோழியின் மகள்) அக்கா வருவாங்க. பேப்பர்ல கேமரா பண்ண சொல்லித்தருவாங்க - என்று என் பிள்ளைகள் வெய்ட் பண்ணிக்கொண்டிருந்தார்கள். அவள் அன்று மட்டுமல்ல பின் என்றுமே வரவில்லை. பிள்ளைகள் மறுபடியும் டிவிக்கும் கம்ப்யூட்டருக்கும் பழகிக்கொண்டார்கள். நான் தான் டப்பர்வேர் வாங்கியிருக்கலாமோ என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். :(

Monday, August 1, 2011

ரியலிசப் படங்கள்

நீண்ட நாட்களுக்குப்பின் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. தற்சமய ட்ரெண்டான ரியலிச படங்களைப் பற்றி நான் நினைப்பதைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அங்காடித்தெரு, கற்றது தமிழ், நந்தலாலா, உன்னைப்போல் ஒருவன், தெய்வத்திருமகள் - இந்தப்படங்களின் க்ளிப்பிங்சைப் பார்க்கும் போதே மனதை ஒரு பதட்டம் ஆக்கிரமிக்கிறது. இவற்றின் இயக்குனர்கள் ஒரே குரலில் சொல்லும் செய்தி - உண்மை நிகழ்ச்சிகளின் அடிப்படையில் இப்படத்தை எடுத்தேன். இவர்கள் சொல்வது நிச்சயம் சரிதான். ஒரு முறை சரவணா ஸ்டோர்ஸ் சென்றிருந்தோம் (இனிமேல் ஏழேழு ஜென்மத்துக்கும் அங்கு செல்ல மாட்டேன், அனைத்துப் பொருட்களையும் இலவசமாகக் கொடுத்தாலும் கூட). வழக்கம் போல் என் மகளுக்கு பாத்ரூம் வந்துவிட்டது. அங்கு இருந்த லேடீஸ் டாய்லெட் - தனியாக கதவுடன் இருக்கக்கூடியவை 6 இருந்திருக்கலாம் மற்றவை வெட்டவெளி. உள்ளே ஒரு பெருங்கூட்டம். தனி டாய்லெட்டுக்கு காத்திருப்பதெல்லாம் நிச்சயம் கஷ்டம். தள்ளிக்கோங்க ப்ளீஸ் அவசரம் என்ற ஒரு சிறு வயது சேல்ஸ் பெண், அங்கு யாரிருக்கிறார்? பக்கத்திலிருக்கின்றனரா, தூரத்திலிருக்கிறாரா என்பதையெல்லாம் பார்க்காமல் என் காலுக்கு மிக அருகிலேயே அமர்ந்து விட்டார். நாமாக ஒதுங்கிக்கொள்ள வேண்டியதுதான். எனக்கு கண்கள் தளும்பிவிட்டன. ஒரு சின்னஞ்சிறு பெண் பக்கத்திலிருக்கும் யாரையும் கணக்கிலெடுத்துக்கொள்ளாமல் இயற்கை உபாதையைத் தணித்துகொள்வது எனக்கு பரிதாபமாக இருந்தது. என்ன ஒரு மோசமான வேலை பார்க்கும் சூழல்?

நான் சொல்ல வருவது இதைத்தான் - நேரிலேயே ஏற்கனவே ஜீரணிக்க முடியாத, நம்ப முடியாத பல விஷயங்களைப் பார்க்கிறோம், கேட்கிறோம். இவை நம்மை ஒரு விதமான குற்றமனப்பான்மைக்கும், மனச்சோர்வுக்கும் ஆளாக்குகின்றன. அவற்றையே மீண்டும் போய் தியேட்டரிலும் பார்க்கும் மனவலிமை நிச்சயம் எனக்கு இல்லை. why should i relive my same stress again in அங்காடித்தெரு?


தமிழ் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கம்மி என்பது நமக்குத் தெரியாதா? இப்போதைக்கு எதைப்படித்தாலும் வேலை வாய்ப்பு கம்மிதான். 3 வேளை சாப்பிடவும், தங்க இடமும் இல்லாத எத்தனையோ மாணவர்களை நான் அறிவேன். அம்மாக்கு உடம்பு சரியில்ல. பணத்துக்கு என்ன பண்ணனு தெரியல என்று கண்ணீர் விட்ட மாணவ சகோதரர்களை எனக்குப் பர்சனலாகத் தெரியும். நேற்று டைம்ஸ் ஆஃப் இண்டியாவில் வந்த வெவ்வேறு செய்திகள் -




  1. சென்ற வருடம் படிப்பை முடித்த ஒரு ஏரோநாட்டிக் இன்ஜினியர் வேலை கிடைக்காமல் ஏடிஎம்மை கொள்ளை அடிக்க முயற்சி.


  2. BL மாணவன் வழிப்பறி கொள்ளை


  3. கல்லூரி மாணவர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டனர்

இதை ஒரு 3 மணி நேரம் படமாகப் பார்க்க வேண்டுமா?


படம் என்பது அன்றாட வாழ்க்கையின் தீவிரத்தைக் கொஞ்ச நேரமாவது குறைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தலைவர் ரஜினி வேலையில்லாப் பட்டதாரியாக லெதர் பேண்ட், ரேபான் கண்ணாடி போட்டுக்கொண்டு வேலை தேடுவார், கதாநாயகி - உனக்குத்தான் வேறு வேலையில்லையே என்னைக்காதலி- என்று பாடியாடுவார். உடனே தலைவர் சர்ட்டிபிகேட் ஃபைலைத் தூக்கிப்போட்டுவிட்டு காதல் செய்யத்துவங்கிவிடுவார். கட்டாயம் பின்னொரு நாளில் ஏதாவது வேலை கிடைத்துவிடும். நம்பிக்கை தாங்க வாழ்க்கை. படம் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும். உண்மையிலேயே அந்நாளையப் படங்களுக்காக மனம் ஏங்குகிறது.


அலைகள் ஓய்வதில்லை படத்தில் சிலுவை, பூணூலைத் தூக்கிப்போட்டுவிட்டு போவதோடு படத்தை முடித்து விட்டார். அதற்கு பிறகு அவர்கள் எவ்வளவு கஷ்டப்படார்கள் என்பதை நான் காண்பிக்கிறேன் என்று கிளம்பும் இயக்குன நண்பர்களே - அவர்கள் நாய்படாத பாடு படுவார்கள் என்பதை நாங்கள் அறிவோம் (தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சிவியின் மகளுடைய காதல் கணவன் dowry harassmentக்காக ஜெயிலில், டாக்டர் மகளின் காதல் கணவனை pwdல் வேலை பார்க்கும் என்ஜினியர் ஆள் வைத்துக் கொன்றார் etc etc etc...................................). இந்தப்பாடுகளைப் பக்கத்து வீட்டில், எதிர்த்த வீட்டில், உடன் வேலை பார்ப்பவர்களிடத்தில் தினமும் பார்க்கிறோம். And they lived HAPPILY everafter என்பதை திரைப்படத்திலாவது பார்க்கவே நாங்கள் விரும்புகிறோம்.

Sunday, January 16, 2011

ஏற்பது இகழ்ச்சி

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். இனி தமிழ்நாட்டின் அடுத்த திருவிழா தேர்தல்தான். இப்போதே கருணாநிதியின் இலவசங்கள் குறித்த அறிவிப்புகள் குவியத்துவங்கிவிட்டன - 1.75லட்சம் கோடியைச் செலவழிக்க வேண்டாமா? இதில் ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும் என்ற மொக்கை அறிவிப்பு வேறு. புல்லரிக்குது போங்க. சென்னையின் பெரும்பாலான ஏரியாக்களில் TV இலவச Door delivvery. நீங்கள் இதைப் பெற்றுக்கொள்வதற்கு எங்கும் போய் வரிசையில் காத்திருக்க வேண்டாம். சில மாதங்களுக்கு முன் இதைப்பெற்றுக்கொள்ள நீங்கள் அருகாமையில் உள்ள ரேஷன் கடைக்கு செல்ல நேர்ந்திருக்கும். வேளச்சேரியில் இந்த இலவச தொலைக்காட்சியைப் பெற்றுக் கொள்ள Ford Ikon , Santro க்களில் வந்திருந்தார்களாம் மக்கள் (நன்றி - டைம்ஸ் ஆஃப் இந்தியா). நீங்கள் எதற்கு இதை வாங்குகிறீர்கள் என்று கேட்டதற்கு என் வீட்டில் வேலை செய்பவருக்குக் கொடுக்க என்றார்களாம். இப்படிப்பட்ட செய்திகளைப் படிக்கவும், கேட்கவும் நேர்ந்த சூழ்நிலையில் தினமலரின் ஒரு செய்தி என்னை மிகவும் கவர்ந்தது. செய்தி இதுதான். திருச்சியைச் சேர்ந்த ஒரு விவசாயி தனக்கு அளிக்கப்பட்ட இலவச வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டியைக் கலெக்டர் ஆஃபிஸில் திருப்பி அளித்தார். அதனோடு அவர் ஒரு கடிதத்தையும் இணைத்திருந்தார். கடிதத்தின் சாராம்சம் இது - முதல்வர் அவர்களுக்கு மிக்க நன்றி. ஆனால் எங்களுக்கு இலவசங்கள் எதுவும் தேவையில்லை. இதற்கு பதிலாக எங்கள் பகுதியில் தடையில்லாத மின்சாரம் கிடைக்க வழி செய்தும், பாசன முறைகளில் புதுமை புகுத்த பயிற்சியளித்தும் விளைச்சலைப் பெருக்க வழி செய்து கொடுங்கள். அப்படி நீங்கள் செய்யும் போது இவற்றையெல்லாம் நாங்கள் எங்கள் சுயசம்பாத்தியத்தில் பெற்றுக்கொள்வோம். இந்த தொலைக்காட்சியை என் அன்புப்பரிசாக நான் முதல்வருக்கு அளிக்கிறேன்.

நான் தமிளன்டா என்று மேடைகளில் முழங்கும் சிவப்புக்கண் தெலுங்கர்கள், தமிழ் தான் என்னை வாழ வைத்தது என்று சொல்லிவிட்டு அனைத்து முதலீடுகளையும் தம் சொந்த மாநிலங்களில் செய்யும் கன்னடர்களையும் பார்த்து சலித்த எனக்கு இந்த தமிழனி்னஃ செய்கை மிகுந்த பெருமிதத்தை தருகிறது. தன்னிறைவே மெய் நிறைவு. ஏற்பது எவ்வகையிலும் இகழ்ச்சியே. நாம் கொடுப்பவர்களாய் இருப்போம், பெறுபவர்களாய் அல்ல. என் பாத்திரம் நிரம்பி வழியும். அதிலிருந்து நான் எல்லோருக்கும் கொடுப்பேன் என்பதே நம் மனநிலையாய் இருக்கட்டும்.

இதனை எழுதும்போது சென்ற வாரம் நடந்த நிகழ்ச்சி ஒன்று நினைவில் வருகிறது. என் தோழியின் வீட்டிறக்கு செல்ல வேண்டியிருந்தது. வாசுவோடு வண்டியில் சென்றேன். என் ஹேண்டஃ பேகை வண்டியின் முன் பகுதியில் தொங்கவிட்டிருந்தேன். நான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் பையை எடுத்துக்கொள்ள முன்னால் வந்து பார்த்தால் பையைக் காணவில்லை. எங்கே விழுந்த்தென்று நானும் கவனிக்கவில்லை, வாசுவுக்கும் தெரியவில்லை. என்ன செய்வதென்று விளங்கவில்லை. வாசு ATM ல் பணம் எடுத்துக்கொடுத்துவிட்டு, எனக்கு திரும்பி்பபோய் தேடிப்பார்க்க டைம் இல்லை. ஆஃபிஸிற்கு லேட்டாகிவிட்டது. அப்படியே நாம் தேடினாலும் கிடைப்பதற்கான பாஸிபிலிட்டி ரொம்ப கம்மி. நீ ஃப்ரண்டு வீட்டுக்குப் போய்ட்டு வா. அப்புறம் பாத்துக்கலாம் என்றார். அவர் சொல்வதும் சரிதான். தொலைந்த பை கிடைக்கவா போகிறது என்று நினைத்து பேசாமல் friendஐப் பார்க்கச் சென்றுவிட்டேன். திடீரென்று வாசு என் friend நம்பருக்கு phone செய்து (என் phone பையோடு சென்றுவிட்டது) உன் நம்பருக்கு call பண்ணேன். ஒரு அம்மா எடுத்தாங்க. அட்ரஸ் கொடுத்தாங்க. அங்க போய் உன் பைய வாங்கிக்குவியாம் என்றார். இதெல்லாம் நம்ம சிங்காரச்சென்னையில் சாத்தியமா என்றே புரியவில்லை. ப்ரேமா (என் ப்ரெண்ட்), ரமேஷ் அண்ணன்(ப்ரேமாவின் அண்ணன், எனக்கும் தான் - தனியால்லாம் போக வேண்டாம்மா. எவ்வளவு தூரம் நம்பலாம்னு தெரியல) நான் எல்லோரும் அண்ணனின் காரில் அந்த முகவரிக்குச் சென்று பார்த்தோம். ஒரு ஒண்டிக்குடித்தன வீடு. ஒரு அம்மா வந்து பையைக் கொடுத்தார்கள். வீட்டில் வேறு யாரும் இல்லை. வீட்டுக்கார்ரை (40 வயது) ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார்களாம் heart operationக்கு. பிள்ளைகள் அவருக்குத் துணைக்கிருக்கிறார்களாம். வீட்டுக்காரர் டீக்கடையில் வேலை பார்க்கிறாராம். ஒரு நாள் சம்பளம் 120 ரூபாயாம். 3.5 லட்சம் கடன் வாங்கி ஆபரேஸன் செய்திருக்கிறார்களாம். என் HideSign bag, E Series phone, பையிலிருந்த சில ஆயிரங்கள் இவற்றை அவர் வைத்துக்கொண்டிருந்தால் நிச்சயம் பல ஆயிரங்கள் அவருக்கு கிடைத்திருக்கும். சில நாட்களை அவர் சிரமமின்றி கழித்திருக்கலாம். ஆனாலும் அவர் சொல்கிறார் - அடுத்தவங்க பொருளுக்கு ஆசப்படலாமா? அது தப்புமா. அவர் தான் உண்மையான, தன்மானத் தமிழன். மந்திரியாயிருந்த ராசாக்களும், அவர்களின் பரிவாரங்களும் என் நினைவில் ஆடினர்.
நண்பர்களே நாம் என்றைக்கும் எதையும் மற்றவர்க்கு கொடுப்பவர்களாய், எவ்விதத்திலும் மற்றவர்க்கு உதவுபவராய், ஈவதில் உவகையுள்ளவர்களாய் இருக்க நமக்கு கடவுள் அருள்பாலிக்க வேண்டுகிறேன்.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes