Friday, September 28, 2012

தாண்டவம் படப்பிரச்சினை - அமீர் உள்ளிட்ட 8 இயக்குனர்கள் ராஜினாமா

இயக்குனர் விஜய்யின் தாண்டவம் படத்தின் ஸ்கிரிப்ட் யாருடையது என்ற பிரச்சினை பெரிதாகியுள்ளது. பொன்னுசாமி என்பவர் படத்தின் ஸ்கிரிப்ட் என்னுடையது என்கிறார். அவருடைய சார்பில் வாதாடிய அமீர் - எப்படியாவது பொன்னுசாமிக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்று போராடிப்பார்த்தேன். ஆனால் என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை. பொன்னுசாமிக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்து நான் இயக்குனர் சங்கத்திலிருந்து ராஜினாமா செய்திருக்கிறேன் - என்கிறார்.
          
நாம் செய்த வேலையை யாரோ தான் செய்தது போல் காண்பித்துக்கொள்வது, நாம் செய்த வேலையை அது ஒன்றுமே இல்லாதது போலவும், அந்த வேலை எதற்குமே தேவை இல்லை என்பது போலவும் நடந்து கொண்டு பின்னர் அதையே அவர்கள் பயன்படுத்திக்கொள்வது, என்ன வேலை  செய்திருக்கிறோம் என்பதையே பார்க்காமல் மேம்போக்காக அவமானப்படுத்துவது போன்றவற்றைப் பெரிய மானேஜ்மென்ட் ஸ்கில்லாக, சர்வைவல் திறனாகப் பார்க்கும் போக்கு எக்காலத்திலும் இருக்கிறது. இது ஆறாக்காயத்தை ஏற்படுத்தும். மாங்கு மாங்கென்று வேலை செய்தவன் உட்கார்ந்திருக்க, வாய் மட்டும் பேசத்தெரிந்தவன் அல்லது சமூகத்தில் சில பல பிரிவிலேஜ்களை உடையவன் உச்சத்தில். என்ன நியாயம் இது?
   எனக்கென்னவோ தாண்டவம் உண்மையில் பொன்னுசாமியின் ஸ்கிரிப்ட்டாக இருந்தாலும் அவரால் எதுவும் செய்ய முடியும் என்று தோன்றவில்லை. ஏனெனில் விஜய்யின் அப்பா அழகப்பன் பெரிய தயாரிப்பாளர், தயாரிப்பாளர் கவுன்சிலின் தலைவராக இருந்தவர்.
           நம்மை ஒன்றும் செய்யமுடியாத நிலையில் இருப்பவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்கிறோமோ அதுதான் உண்மையான நாம்.

Thursday, September 27, 2012

விகடன் குழுமத்திலிருந்து புதிய வார இதழ் - விகடன் என்ற பெயர், விகடன் தாத்தா இல்லாமல்

ஆண்டிற்கு ரூ.150 கோடி டேர்ன் ஓவர் இருப்பதாகச் சொல்லப்படும் விகடன், தமிழ்க் குடும்பங்களி்ன் தவிர்க்க முடியாத ஒரு அங்கம். இக்குழுமம் வெளியிட்ட  மாத, வார இதழ்கள் ஏராளம். (அவள் விகடன், நாணயம் விகடன், பசுமை விகடன், சுட்டி விகடன், மோட்டார் விகடன், சக்தி விகடன்). ஆனால் இன்று வரை விகடன் என்ற பெயர் இல்லாமலும், விகடன் தாத்தாவின் படம் இல்லாமலும் ஒரு இதழை இவர்கள் ஆரம்பித்ததில்லை.
இப்போது முதன்முறையாக விகடன் குழுமத்திலிருந்து அக்டோபர் 6 முதல், டைம்பாஸ் என்ற வார இதழ், விகடன் என்ற அடைமொழி இல்லாமலும், விகடன் தாத்தா மாஸ்காட் இல்லாமலும் வர இருக்கிறது. இதன் விலை ரூ.5.
வீட்டுப்பெரியவர்களின் ரெஸ்பான்ஸ்
            நல்ல வேளை. விகடன்ற பேர விட்டுட்டாங்க. எப்பேர்ப்பட்ட சிறுகதைகளும், நாவல்களும் வெளியிடப்பட்டது ஒரு காலத்துல. இன்னக்கி சினிமாக்காரங்க நியூஸ் தான் வருது. என்ன தொடர் வெளியிடுறாங்க இப்பல்லாம். விகடன்னா நாங்க படிச்ச விகடனாவே இருந்துட்டுப் போகட்டும். இப்ப வர்றதெல்லாம் வேற பேர்லயே வரட்டும்.

Monday, September 24, 2012

கோயம்புத்தூர் காதல் கொலைகளின் பின்னணி

கடந்த  2 நாட்களாகத் தமிழ்நாட்டில் பரபரப்பைக் கிளப்பிக்கொண்டிருப்பது இந்தக் கோயம்புத்தூர் காதல் கொலைகள் தான். 21 வயது இளைஞன் தன் சக மாணவி, அவரது தாயார் இருவரையும் கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவ்வளவு கொடூரமான க்ரைம் ஸீனை நான் பார்த்ததில்லை என்கிறார் வடவள்ளி இன்ஸ்பெக்டர். மற்றொரு சம்பவத்தில் 9ம் வகுப்பு சிறுமியை ஒரு இளைஞன் கொலை செய்துள்ளான். காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே. இந்தக் கண்மூடித்தனமான கோபம்தான் காதலா?
காதல் பெயரால் நடக்கும் அபத்தங்கள் எத்தனையெத்தனை? திருமணமானவர்களில் கணவனோ, மனைவியோ வாழ்க்கைத்துணையிடம் உன் நல்லதுக்காகத்தானே சொல்கிறேன், நான் உன் மேல் பொஸஸிவாக  இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு எத்தனை கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர் - இதுவா காதல்? தளைகளும், கட்டுப்பாடுகளும் இருக்கும் இடத்தில் காதல் வராது. கட்டற்ற சுதந்திரம்தான் காதல். நம்மை நாமாக இருக்க அனுமதித்து நம்மை அன்பு செய்யும் மனமே காதல் நிறைந்தது.  Love possesses not nor would it be possessed - கலீல் கிப்ரன்.
                 நம் வாழ்க்கைத்துணையிடம் சிறுபிள்ளைத்தனமற்ற மெச்சூர்டான காதலையே கொண்டு அவன்/அவளின் மனதில் நீங்கா இடம் பெறுவோம். கலீல் கிப்ரனின் வரிகள் எப்போதும் போல் இப்போதும் எனக்குத் துணை வருகிறது. திருமணத்தைப்பற்றிய அவரின் கருத்து -
     
      Love one another but make not a bond of love:
      Let it rather be a moving sea between the shores of your souls.
      Fill each other's cup but drink not from one cup.
      Give one another of your bread but eat not from the same loaf.

ஒருவரையொருவர் நேசியுங்கள்,
ஆனால் காதலால் ஒரு தளையை உருவாக்காதிருங்கள்.
உங்களின் நேசம் - உங்கள் ஆன்மக்கரைகளுக்குள்
அலைபாயும் கடலாக இருக்கட்டும்.
ஒருவர் கோப்பையை மற்றவர் நிரப்புங்கள்,
ஆனால் ஒரே கோப்பையில் பருகாதிருங்கள்.
ஒருவர் ரொட்டியை மற்றவருக்குக் கொடுங்கள்,
ஆனால் ஒரே ரொட்டியிலிருந்து உண்ணாதிருங்கள்.

நம் துணையின் பெர்சனல் ஸ்பேஸை நாம் கட்டாயம் மதிப்போமாக. உன்னதமான காதலின் பெயராலும், திருமணத்தின் பெயராலும் வாழ்க்கைத்துணையைப் படுத்தாமலிருப்போமாக.

 For even as love crowns you so shall he crucify you.

எப்படி காதல் நமக்கு கிரீடம் சூட்டுகிறதோ அதே போல் நம்மைச் சிலுவையிலும் அறையும்.

நாம் கிரீடம் மட்டுமே சூட்டுவோம் - ஆமென்

Thursday, September 13, 2012

நினைத்தாலே மனம் நிறையும், நாவூறும் உணவுகள்

                    நாம் வெவ்வேறு பொழுதுகளில் நம் வீடு தொடங்கி வெவ்வேறு இடங்களில் நிறைய வகை உணவுகளை உண்டிருப்போம். சாதாரண இட்டிலியில் தொடங்கி, எக்ஸாட்டிக் என்று சொல்வார்களே அப்படிப்பட்ட உணவு வகைகளைச் சுவைத்திருப்போம். ஆனால் ஏதோ ஒரு நாள் சாப்பிட்ட ஒரு உணவின் சுவை, நாவை விட்டும் மனதை விட்டும் நீங்காமல் என்றும் நின்று விடுகிறது. சில உணவுப்பொழுதுகளை, அந்த உணவு எவ்வளவு ருசியாயிருந்தாலும், மறந்துவிட விரும்புகிறோம்.
                   மாலைப்பொழுதுகளில் திருச்சி ரமணாஸின் மிகச்சுவையான கட்லட் மற்றும் காபி, வாசுவும் நானும் கேரளா, கோவளம் கடற்கரையில் சாப்பிட்ட சிக்கன் கோல்ட் காயின், யுகே - கோனிஸ்டனில் குடும்பத்தோடு ருசித்த flavorful penne pasta - தடுக்கி விழுந்தால் கிடைக்கக்கூடிய ருசியான இவை சென்னையில் அனேக இடங்களில் கிடைக்கின்றன. இருப்பினும் அன்று சாப்பிட்ட அந்த ருசி மறக்காமல் ஏன் மனதில் இனிக்கிறது? அமெரிக்கன் கல்லூரி எதிர் டீக்கடையில் ஒரு நாள் குடித்த டீயின் ருசி ஏன் அதற்குப்பின் எதிலும் இல்லை?
                          அமெரிக்கன் கல்லூரி மகளிர் விடுதி வெராண்டாவில் நானும், என் இனிய தோழி பிரேமாவும் அமர்ந்து சாப்பிட்ட Bread n அமுல் Butterன் சுவை இன்றும் மனதில் இனிக்க, என் பிள்ளைகளுக்கு வாங்கி வைத்திருந்த பிரெட் சிலைஸ்களில் ஒன்றை எடுத்துக்கடித்தேன். ஷாக் - இந்த பிரட்டையா அன்று நாங்கள் அவ்வளவு ரசித்து சாப்பிட்டோம்?
                உண்மையில் உணவின் ருசியை அந்த உணவு மட்டுமே தீர்மானிப்பதில்லை.  அந்த பிரட், பட்டரின் சுவையைத் தீர்மானித்தது அந்த பிரட்டும் பட்டருமா? - நிச்சயமில்லை. தோழியோடு பேசிக் களித்த பொழுதுகள், அந்த வேப்பமரக்காற்று, வரவில்லாமல் செலவுகள் செய்த, பொறுப்புகள் இல்லாத அந்தப் பருவம், அங்கே நிறைந்திருந்த வஞ்சமில்லா அன்பு - இவை தான் அந்த சாண்ட்விச்சின் ருசியைத்தீர்மானித்திருக்கின்றன. இப்பொழுதும் நான் மறக்க விரும்பும் ஸ்டார் ஹோட்டல் buffets, கல்யாண வீட்டு விருந்துகள் இருக்கின்றன. உணவில் மட்டும் சுவையிருந்தால், நட்சத்திர ஹோட்டல் விருந்துகள் இன்றும் மனதில் இனிக்க வேண்டுமே?
ருசியில்லாத சாப்பாட்டைச் சாப்பிடுவது கொடுமையில்லை. அனைத்திலும் மிகப்பெரிய கொடுமையாக ஔவை சொல்லுவது அன்பில்லாத பெண்ணின் கையால் உணவருந்துவதைத்தான். சமைக்கத்தெரியாத ஆனால் அன்பானவர்களின் சமையலைச்சாப்பிட்டுவிடலாம் - உண்ணீர் உண்ணீர் என்று ஊட்டதார் தம் மனையில் உணவருந்தாதீர்கள். அது எவ்வளவு தான் ருசியாக இருந்தாலும் கூட.

கொடியது கேட்கின் நெடியவெவ் வேலோய்
கொடிது கொடிது வறுமை கொடிது;
அதனினும் கொடிது இளமையில் வறுமை;
அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்


அதனினும் கொடிது அன்புஇலாப் பெண்டிர்;
அதனினும் கொடிது இன்புற
அவர்கையில் உண்பதுதானே

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes