Monday, November 17, 2014

அப்பாக்களின் செல்ல மகள்கள்

காலையில் கல்லூரிக்கு பஸ்ஸில் பயணம் செய்வது ஒரு இனிய அனுபவம். முதிராத காலை (6.30), இதமான காற்று, ப்ரஷ்ஷான சக பயணிகள் அருமை. இந்தப் பயணத்தில், சமூகத்தின் பல்வேறு அடுக்குகளில் இருக்கிற அப்பாக்களையும், மகள்களையும் பார்ப்பது எனக்கு ஒரு இனிய பொழுதுபோக்கு. அவர்களது உடைகளும், வாகனங்களும், வீடுகளும் வேறு விதமாக இருந்தாலும் அடிப்படையில் அனைத்து அப்பாக்களும் மகள்களை ஒரே விதத்தில்தான் டீல் செய்கின்றனர்.

 1. அப்பார்ட்மென்ட் வாசலில், அரைக்கால் சட்டையோடு, ஒரு தோளில் புத்தகப்பை மற்றும் வாட்டர்பேக், மற்றொரு கையில் சாப்பாட்டுக்கூடையோடு நிற்கும் அப்பா - ஏற்கனவே நான்காக மடித்ததைப் போல் இருக்கும் குட்டி கர்ச்சீப்பை எட்டாக மடித்து, மெலிதாக விசிறியபடி இருக்கும் டீன் ஏஜ் மகள் அல்லது பொறுப்பாக நொண்டி விளையாடிக்கொண்டிருக்கும் ரெட்டை ஜடை போட்டு ரிப்பன் வைத்த  ஸ்கூல் போகும் மகள்.

2. ஒரு கையால் வண்டியை பேலன்ஸ் செய்துகொண்டு, மற்றொரு கையில் மகளின் ஆகப்பெரிய காலேஜ்பேகைப் பிடித்தபடி காலேஜ் பஸ் வருகிறதா எனப்பார்த்துக்கொண்டிருக்கும் அப்பா - ஸமார்ட்போனைப் பொறுப்பாக நோண்டிக்கொண்டிருக்கும் இன்ஜினியர் மகள்.

3.நெற்றியில் விபூதி மணக்க மகளின் புராஜக்ட் வொர்க்கைக் கையில் வைத்துக்கொண்டு, சார் கொஞ்சம் நகந்துக்கோங்க - அம்மா அங்க எடம் இருக்கு பாரு, என்று பஸ்ஸின் கீழ் நின்றபடியே பஸ்ஸுக்குள் சீட் பிடித்துக் கொடுக்கும் ஆட்டோ டிரைவர் அப்பா,இப்ப என்னன்றீங்க என்பது போன்ற முகபாவனையுடன் சலித்துக்கொள்ளும் டீன் ஏஜ் மகள்.

இது போல் பள்ளி, கல்லூரி செல்ல காத்திருக்கும் எல்லா மகள்களும் கைவீசியபடி நிற்க, பேதமேயில்லாமல் எல்லாத் தரப்பு அப்பாக்களும் அவர்களின் புத்தக மூட்டையைச் சுமந்தபடி. ஆனால் மகன்களுக்கு கண்டிஷனே வேறு. தன்னை விடப் பெரிய பை முதுகில், அதோடு கல்லை எத்தி விளையாட்டு - வேறேதோ திசையில் பார்த்தபடி கடனே என்று நிற்கும் அப்பா. இன்று வரையில் தன் பையைத் தானே தூக்கிக் கொள்ளும் மகளையோ, மகனின் பையைத் தூக்கிக்கொண்டிருககும் அப்பாவையோ  நான் பார்க்கவில்லை. அப்பாவின் சின்ன இளவரசிகள் இவர்கள் - நாளை ஒரு மன்னனின் மகாராணியாகட்டும்  - ஆமென்

எதிர்பார்ப்பைக் கிளப்பி ஏமாற்றிய பிரபலங்கள் - சிம்பு

ஐயாம் எ லிட்டில் ஸ்டார், ஆவேன் நான் சூப்பர் ஸ்டார் என்று ஆடிப்பாடிய அந்த சின்னக் குழந்தையை ரசிக்காதவர்கள் அன்று தமிழகத்திலேயே கிடையாது. பின்னர் பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி என்று 10 வயது சிறுவனாக சிம்பு ஆடியபோது தியேட்டரே சாமி வந்து ஆடியது. சிம்புவுக்குப்பின் எந்தக் குழந்தை நட்சத்திரமும் அவ்வளவு பிரபலமாக ஆகவில்லை.(மே பி, எந்தக் குழந்தையையும் வைத்து அவன் அப்பா படம் இயக்கி, தயாரிக்கவில்லை என்று நினைக்கிறேன்). 
என்ன தான் அப்பா படத்தில் நடித்தாலும் கூட, சிம்பு வெளிப்படுத்திய திறமை அசாத்தியமானது. வசன உச்சரிப்பு, அருமையான டான்ஸ் ஆடும் திறன், உணர்வுகளை வெளிப்படுததும் நடிப்புத்திறன் என்று அசரடித்தார்.சில வருடங்களுக்கு முன் ஒரு முன்னணி கதாநாயகனின் மகன், தன் தந்தையோடு ஒரு படத்தில் ஒரு பாட்டுக்கு நடனமாடினார். பதட்டத்தோடு, மாஸ்டர் சொல்லிக்கொடுத்ததை அப்படியே ஆடிவிடவேண்டும் என்ற முனைப்புதான் இருந்ததே தவிர, சிம்புவிடம் இருந்த ஒரு ஸ்பான்டெனிட்டி இல்லை.
பின்னர் டீன் ஏஜராகத் திரையில் தோன்றியபோது, 80களின் கதாநாயகர்களின் முதல் வாரிசு நடிகர் இவர்தான்.பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே அறிமுகமான சிம்பு அடுத்தடுத்து நடித்த கதாபாத்திரங்கள் (குத்து, காளை,தம்)இளம்பெண்களிடம் தீவிரமான வெறுப்பை ஏற்படுத்தியது.பாடலாசிரியர், இயக்குனர், கதை, திரைக்கதாசிரியர் என்று பன்முகத்திறமைகள் கொண்ட சிம்பு, இயக்குனர்களின் நடிகனாக மட்டும் இருந்தால் மிகச் சிறப்பான வெற்றிகளை அவரால் கொடுக்க   
முடியு ம் (விண்ணைத் தாண்டி வருவாயா).
ஒன் டேக் ஆர்ட்டிஸ்ட் என்று பெருமையாகச் சொல்லப்படும் இவர், இன்னும் அதிகப் படங்களில், படத்தின் நாயகனாக மட்டும் அவர் தன் வேலையைக் குறித்த நேரத்தில் முடித்துக் கொடுத்தாரேயானால் - இயக்கம் மற்றும் பிறவற்றில் தலையிடாமல் - (அவர் இயக்குனராக இல்லாத பட்சத்தில்), தமிழ்த்திரையுலகம்  ஒரு மிகச் சிறந்த, திறமை வாய்ந்த இளைஞரைத் தூக்கி வைத்துக் கொண்டாடும்.

Friday, November 14, 2014

எதிர்பார்ப்பைக் கிளப்பி ஏமாற்றிய பிரபலங்கள் - செல்வராகவன்

         இந்த எதிர்பார்ப்பைக் கிளப்பி ஏமாற்றிய பிரபலங்கள் தொடர் பதிவில், இன்று செல்வராகவனைப் பற்றிப் பார்க்கலாம். 

    இவரது முதல் திரைப்படம் துள்ளுவதோ இளமை.(அபிஷியலாக காதல்கொண்டேன்) துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் இயக்குனர் கஸ்தூரிராஜா என்று கேட்டபோது வித்தியாசமாக இருந்தது. எட்டுப்பட்டி ராசா, கும்மிப்பாட்டு, கரிசக்காட்டுப்பூவே போன்ற படங்களின் இயக்குனரா இந்தப்படத்தையும் இயக்கினார் என்று ஆச்சர்யம் + சந்தேகப்பட்டபோது, இதை இயக்கியவர் அவரது மூத்த மகன் செல்வராகவன் என்று தெரிய வந்தது.  இப்படம் நன்றாகவே ஓடியது. யுவனின் இசையில் பாடல்கள் மிகப்பெரிய ஹிட். கதாநாயகி ஷெரினும் பெரிதும் பேசப்பட்டார். 
          தொடர்ந்து காதல் கொண்டேன். தனுஷின் மிரட்டலான நடிப்பு, சோனியா அகர்வாலின் பிரமாதமான அறிமுகம், அழகான ஒளிப்பதிவு, இனிமையான யுவன் பாடல்கள் - வாவ். எப்போதும் உணர்வுகளை வார்த்தைப்படுத்துவதும், காட்சிப்படுத்துவதும் கடினமான வேலை. இதை செல்வராகவன் தன் படங்களில் அனாயசமாகச் செய்தார். எனக்கு மட்டும் ஏன் எதுவுமே சரியா நடக்க மாட்டேங்குது, ஏன் என்று கதாநாயகன்  வினோத் அழுவது தொண்ணூறு சதவீத மக்களின் மைண்ட் வாய்ஸாகவே தமிழகம் முழுவதும் ஒலித்தது. படம் பிரம்மாண்ட வெற்றி. அடுத்து 7ஜி - இளைஞர்களின் ஏகோபித்த ஆதரவு. இதன் பின்னர் தொடங்கியது செல்வராகவனின் சறுக்கல்.

     ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் என்று வேறு ஜானரில் அவர் முயற்சித்த படங்கள் முழுத்தோல்வியடைந்தன. என்னால் எல்லா ஜானரிலும் படமெடுக்க முடியும் என்று நிரூபிக்கவே இந்தப்படங்களை எடுத்தேன் என்கிறார் அவர். 
 ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான ஜானர் நன்றாக வரும். ராமநாராயணன் - விலங்குகள் படம், பாரதிராஜா - கிராமத்துப்படம், பாலச்சந்தர் - உறவுகளைச் சித்தரிக்கும் படம், எஸ.பி.முத்துராமன் - மசாலாப்படம், விசு - குடும்பச்சித்திரம். இவர்கள் இந்த ஜானரிலிருந்து விலகவில்லை. வேறெதையும் இவர்களிடம் ரசிகர்கள் எதிர்பார்க்கவும் இல்லை. இது செல்வராகவனுக்கும் பொருந்தும். செல்வராகவன் என்றால் இந்த வகையான படத்தை தான் எடுப்பார் என்ற பிம்பத்தை ஏன் உடைக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள் செல்வராகவன். உணர்வுகளைக் காட்சிப்படுத்துவது மிகக்கடினம். அது உங்களுக்கு அட்டகாசமாகக் கைவருகிறது. நீங்கள் அதையே ஏன் தொடரக்கூடாது? காதல் கொண்டேன் போன்ற ஒரு படத்தை உங்களிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கிறோம்.

Friday, August 15, 2014

உங்களுக்கு எத்தனை நண்பர்கள்?

கொஞ்ச நாட்களுக்கு முன் திடீரென்று ஒரு நாள் கல்லூரி முன்னிருக்கும் வளையல் கடையில் கலர் கலராக கயிறுகள் தொங்கிக்கொண்டிருந்தன. என்ன விசேஷமென்று க்ளாஸில் பிள்ளைகளிடம் கேட்டபோது ஃப்ரண்ட்ஸ் டே மேம் என்றார்கள். ஒரு காலத்தில் எவ்வளவோ முக்கியமாகத்தோன்றிய ஒரு தினம் இன்று என்ன விசேஷமென்று கேட்கும் நிலையிலிருக்கிறது.

நட்பென்பது எவ்வளவு அழகானது. என்ன பேசிக்கொண்டிருந்தோம் என்று தெரியாமலே இரவு 2 மணியாவதும், மறு நாள் காலை க்ளாஸில் தூங்குவதும், ரெஸ்ட்டாரண்ட்டில் சாப்பிட்டு முடித்து பே பண்ணி முடித்துவிட்டு, சர்வர் வந்து இந்த டேபிளுக்கு ஆள் வராங்க, கொஞ்சம் எந்திரிச்சுக்கோங்க என்று சொல்லும் வரையில் பேசிக்கொண்டே அமர்ந்திருப்பதும், க்ளாஸை பங்க் பண்ணிவிட்டு வெளியே சுற்றுவதும்...................

எந்த நொடியில் இதெல்லாம் நம் வாழ்விலிருந்து காணாமல் போகிறது? எப்போது துரோகங்களும் பொய்களும் நட்புக்குள் ஆரம்பிக்கின்றன? நண்பனின் தொழிலைப் பற்றி ஒற்றறிவதும், காசுக்கணக்குகளும் எப்போது மிக அவசியமானவையாகின்றன? மனித மனங்கள் தன் மலிவுத்தன்மையை அனேகம் தரம் வெளிப்படுத்துகின்றன. ஒருவர் உங்களோடு ஒரு 10 வருடங்கள் நண்பராயிருக்கிறாரென்றால் அவர் உங்களுடைய எக்கச்சக்க தவறுகளைப் பொறுத்துக்கொண்டு சென்றிருக்கிறார் என்று தான் அர்த்தம் (நீங்களும் அவருடைய). இதற்கு மேல் முடியாது என்ற நிலைவரும்போது தன்னால் முடிவு வருகிறது. 
லைஃப் ஆஃப் பை படத்தின் இறுதிக்காட்சியில் கடல் முழுதும் தன்னை மட்டும் துணையாகக் கொண்டு பயணம் செய்த அந்தப்புலி காட்டுக்குள் சென்று மறையும் முன் தன்னைத் திரும்பிப்பார்க்கும் என்ற எதிர்பார்ப்போடு கதாநாயகன் பார்த்துக்கொண்டேயிருப்பான். ஆனால் அந்தப்புலி திரும்பியே பார்க்காமல் காட்டுக்குள் சென்று அவன் வாழ்விலிருந்து என்றென்றைக்குமாக மறைந்துவிடும். அலைகளிலும், பெருமழையிலும், பெரும் புயல்காற்றிலும் தன்னோடு பயணித்த அந்தப்புலி ஒருமுறையாவது தன்னைத் திரும்பிப்பார்த்திருக்கலாம் என்று மனம் வருந்துவான். 

உங்களோடு பயணம் செய்த உங்களின் நண்பன் ஒரு கொடும் புலியாகவே இருந்திருக்கலாம் - இருந்தாலும் நண்பர்களே, பிரிய வேண்டும் என்று முடிவு செய்தால் தயவு செய்து உங்கள் நண்பனை ஒரு முறை திரும்பிப்பார்த்துவிட்டு உங்கள் வழி செல்லுங்கள். இது உங்களின் நட்புக்கு நீங்கள் தரும் ஒரு சிறு மரியாதை.

யுவனின் இரண்டாம் திருமணமும் பிரிவை நோக்கி......

இளையராஜாவின் மகனும், இசையமைப்பாளருமான யுவன் ஷங்கரின் பேட்டி சமீபத்தில் சென்னை டைம்ஸில் வந்திருந்தது. பெர்சனல் விஷயங்களையும் பகிர்ந்து கொண்டிருந்தார் இந்த ராஜா வீட்டு `இளைய` ராஜா. 25 வயதில் நடைபெற்ற முதல் திருமணம் 3 மாதங்களில் பிரிவை நோக்கி சென்றிருக்கிறது. 30 வயதில் நடைபெற்ற இரண்டாம் திருமணமும் தோல்வியடைந்திருக்கிறது. இதே நேரத்தில் தன் தாயையும் இழந்திருக்கிறார் இவர்.

உறவுகளின் பிரிவு ஆறாத்துயரைத் தரக்கூடியது. குறிப்பாக வாழ்க்கைத்துணை. என்ன தான் தம்பதியருக்குள் சண்டை வருவது சாதாரண நிகழ்வாக இருந்தாலும், தன் கணவன் அல்லது மனைவியோடு போட்ட ஒரு சாதாரண சண்டை அன்றைய தினத்தின் அழகையே சிதைத்து விடுகிறது. இப்படிப்பட்ட நிலையில் டைவர்ஸை நோக்கி செல்லும் சண்டைகள் எத்தனை மனக்காயங்களையும், வடுக்களையும் விட்டுச்செல்லும்??!!! இந்த மாதிரி சமயங்களில் அம்மாவின் ஆறுதல் வார்த்தைகள் கூட வேண்டாம் - வெறும் அருகாமையே பெரும் மனவலிமையைத் தரவல்லது. அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது யுவனுக்கு.

இந்நிலையில் இஸ்லாத்தைத் தழுவியிருக்கிறார் யுவன். இம்முடிவில் இவரது தந்தைக்கு அவ்வளவு விருப்பமில்லை போல் தெரிகிறது. என் பார்வையில் மதம் மாறுபவர்களைப் பரிதாபத்துக்குரியவர்களாக நான் கருதுகிறேன். ஆயிரம் பேர் நிறைந்திருக்கும் இடத்தில் மிகத்தனியாக இருப்பவர்களும், வாழ்க்கையின் வெம்மையிலிருந்து தற்காத்து கொள்ள நினைப்பவர்களும் தான் பெரும்பாலும் மதம் மாறுகிறார்கள் (இது என் சொந்த அனுபவம்). பெற்றோரின் இழப்பு, தாங்கவொண்ணாப்பிரிவு, மன அழுத்தம் போன்றவை தான் இவர்களை கடவுளை நோக்கி விரட்டுகிறது. அப்போது இவர்களுக்கு மதம் என்பதெல்லாம் விஷயமேயில்லை. அச்சமயத்தில் நீ வேற்று மதத்தை நாடுகிறாய் என்றெல்லாம் பேசிக்கொண்டிருப்பது பொருளற்றது. ஏதோவொரு விதத்தில் மன அமைதி கிடைத்தால் போதும்.

16 வயதில் இசையமைக்கத் தொடங்கிய இளைஞன், எந்தவொரு கிசுகிசுவும் இவர் பேரில் வந்ததில்லை. (இப்போது ஒரு பாட்டுக்கு இசையமைத்தவர்களெல்லாம் போடும் சீனுக்கும், 18-20 வயதில் இவர்கள் மாட்டிக்கொள்ளும் கீழ்த்தரமான விஷயங்களுக்கும் - நோ மோர் கமெண்ட்ஸ்) In his early thirties, யுவன் எதிர்கொண்டுவிட்ட கஷ்டங்கள் கொஞ்சம் அதிகம். எல்லாம் வல்ல அல்லாஹ் அவருக்கு மன அமைதியையும், சிறந்த வாழ்க்கைத்துணையையும் அருள் செய்யட்டும் - இன்ஷா அல்லாஹ்

Sunday, June 8, 2014

80களின் குழந்தைகள் Versus தற்சமயக் குழந்தைகள்

80களின் மற்றும் தற்சமயக்குழந்தைகளுக்கு இடையே நான் பார்க்கும் ஸ்டீப் வித்தியாசங்கள் இவை:

1. 80களில் யாராவது சிட்டியிலிருக்கும் பெரிய அண்ணா அல்லது மாமா மட்டுமே கேமரா வைத்திருப்பார்கள். அவர்கள் ஊரிலிருந்து வரும்போது வீட்டிலிருக்கும் எல்லாக்குட்டிப்பிள்ளைகளையும் வரிசையாக நிற்க வைத்து ஃபோட்டோ எடுப்பார்கள். எல்லோரும் அடித்துப்பிடித்துக்கொண்டு லைனாக நிற்போம் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு. தற்சமயப் பிள்ளைகளை எந்தவொரு எக்ஸாட்டிக் இடத்துக்குக் கூட்டிக்கொண்டு போனாலும் ஏய் நில்லு நில்லு ஒரே ஒரு போட்டோ எடுத்துக்குறேன். கொஞ்சம் சிரியேன் என்று நம்மைக் கதற விடுவார்கள். மேற்கொண்டு இன்னொரு போட்டோ என்று சொன்னால் ஓ, நாட் அகைன் என்பார்கள்.

2.  தீபாவளி, பொங்கல், பிறந்த நாளுக்கு மட்டுமே புது டிரெஸ் கிடைக்கும். எப்படா போட்டுக்கொள்வோம் என்று தவித்துக்கொண்டிருப்போம். இப்போது புது டிரெஸெல்லாம் பிள்ளைகளுக்கு மேட்டரே இல்லை. சைஸ் சரியா இருக்கா என்று செக் செய்வதற்கு கூட போட்டுப்பார்க்கமாட்டார்கள். `எல்லாம் சரியாத்தான இருக்கும். போர் அடிக்காதீங்கம்மா` என்று சிம்பிளாக முடித்துக்கொள்வார்கள். இந்த ரூ.1500 டிரஸ்ஸுக்கு உன் டோட்டல் ரியாக்ஷன் இவ்ளோதானா என்று நாம் முழித்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

3. கடைத்தெருவுக்குப் போவதென்றால் ஒரே கொண்டாட்டம் தான். சிங்கப்பூர் சென்டர், வஹாப்  கடை (புதுக்கோட்டையில் அனேக முஸ்லிம்கள் அப்போது சிங்கப்பூர் அல்லது மலேசியாவில் இருப்பார்கள். அவர்களுடைய சொந்தக்காரர்கள் இங்கே ஸ்டோர் வைத்திருப்பார்கள் - சரவணா ஸ்டோர் போல்). பிரமாதமாக ஒன்றும் வாங்கித்தந்துவிட மாட்டார்கள் - கண்ணாடி வைத்த ஷார்ப்பனர், பாதி வெள்ளை பாதி பச்சையாக முகர்ந்து பார்த்தால் சென்ட் வாசம் வீசும் ரப்பர் -இவ்வளவுதான். டபுள்டக்கர் பாக்ஸெல்லாம் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது. இவ்வளவு பர்ச்சேஸுக்கே சந்தோஷம் பிய்த்துக்கொள்ளும். இப்போது பென்சில் டப்பா ரூ.400. ஒரு பட்டனை அமுக்கினால் ஸ்கேல் வெளியே வரும் மற்றொன்றை அமுக்கினால் ரப்பர் இப்படி எக்கச்சக்கம். இதை வாங்கிக்கொடுக்க கடைக்கு கூப்பிட்டோம் என்றால் ஷாப்பிங்கா சுத்த போர். முடிந்தது விஷயம். 

4. நமக்கு (ஒரு 4 பிள்ளைகளின் கூட்டம்) ஒரேயொரு கோல்ட் ஸ்பாட் பாட்டில் கிடைக்கும். ஒரு ஸ்ட்ராவை வைத்துக்கொண்டு ஆளுக்கொரு உறி உறிவோம். முடிந்தது கதை. இப்போதெல்லாம் பலாப்பழம் வாங்கினால் கூட எனக்கு ஒண்ணு தனியா வாங்கித்தந்துருங்க என்பார்கள் போலும்.

5. கவணில் கல் வைத்து பறவையை அடித்தால் 80. கவணில் பறவையை வைத்து கல்லை அடித்தால் (ஆங்க்ரி பேர்டு) தற்காலம்.

சரிதானா எனக்குத்தெரிவியுங்கள்.

Sunday, June 1, 2014

என்ஜினியரிங் கல்லூரியில் ஆசிரியர்களுக்கு எப்படி நடக்கின்றன இன்டர்வியூக்கள்???

ஏப்ரல், மே மாதங்களில் என்ஜினியரிங் கல்லூரிகளில் இருந்து ஆசிரியர் பணிக்கு எக்கச்சக்க வான்ட்டட் வரும். நாமும் சலிக்காமல் அப்ளை செய்து, எல்லா நேர்முகத் தேர்வுகளையும் அட்டண்ட் செய்து கொண்டிருப்போம். இன்ட்டர்வியூவில் சந்தித்து நண்பர்கள் ஆனவர்கள் நிறைய - ஒரே செட் ஆஃப் ஆட்களுக்குத்தான் வெவ்வேறு பல்கலைகள் மற்றும் கல்லூரிகளிலிருந்து அழைப்பு வந்திருக்கும். இந்த இன்ட்டர்வியூக்கள் குறித்த நெருடலை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

 நெருடல் - இன்ட்டர்வியூ அட்டண்ட் பண்ண வருபவர்களை இவர்கள் ட்ரீட் பண்ணும் முறை. சமீபத்தில் ஒரு பிரபல கல்விக்குழுமத்தின் இன்ட்டர்வியூ அட்டண்ட் செய்துள்ளார் என் முன்னாள் மாணவர் ஒருவர். இந்தக்கல்விக் குழுமத்திற்கு ஏகப்பட்ட கல்லூரிகள் உள்ளன - ஒரு டீம்ட் யுனிவர்சிட்டி உட்பட. ஒரு கல்லூரி மூத்த மகனுக்கு, ஒரு கல்லூரி இளைய மகனுக்கு மற்றுமொரு கல்லூரி மகளுக்கு, பல்கலை அவருக்கு என்று கேள்வி. நம் மாணவர் அட்டண்ட் பண்ணியது மருமகனுக்குரிய கல்லூரியில். இனி அவரின் அனுபவம் அவர் மொழியில் - நேர்முகத்தேர்வு அறையில் அந்த மருமகன் மற்றும் ஒரு பேராசிரியர் (ஏதோ ஒரு துறையின் தலைவராக இருக்கவேண்டும்). ஆக்சுவலா நாந்தான் இன்டர்வியூக்காகப் போயிருந்தேன். ஆனா என்னைய விட அந்த பேராசிரியர்தான் ஜாஸ்தி டென்ஷனா இருந்தார். மருமகன் சில்க் க்ளாத்ல வெள்ள சட்ட போட்டுக்கிட்டு, கோல்டன் ரிம் கண்ணாடி போட்டுக்கிட்டு பேப்பர் படிச்சுக்கிட்டு இருந்தார். என்னைக் கூப்பிட்டவுடன் உள்ள போனேன். நான் இன்டர்வியு முடிச்சுட்டு வெளிய வர்ற வரைக்கும் அந்த பேப்பர் படிச்சுக்கிட்டு இருந்த ஆள் என்னைய நிமிர்ந்தே பாக்கல.அவர் பாட்டுக்கு நியூஸ் படிச்சுக்கிட்டிருந்தார். இந்த புரொபஸர் என்ன கேக்கறோம்னே தெரியாம டென்ஷன்ல என்னைய என்னத்தையோ கேட்டுக்கிட்டு இருந்தார். நான் இன்னைக்கு சென்னைல வெயில் ஜாஸ்தின்னு ஏதாவது கேள்விக்கு ஆன்ஸர் பண்ணியிருந்தாக் கூட அந்த ஆளுக்குத் தெரிஞ்சிருக்காது. அவ்ளோ டென்ஷனா இருந்தாப்ல. ஏங்க இவ்ளோ டென்ஷனாயிருக்கீங்க. என்ன தலையவா சீவீருவாங்கன்னு சொல்லி அவரக் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாமானு நெனச்சேன். அப்புறம் விஷால் பண்ற மொக்க காமெடி மாதிரி ஆயிடும்னு கம்முனு இருந்துட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சு  அப்புறம் சொல்றோம்னு சொல்லி வெளிய அனுப்பிட்டாங்க.

இதில் நம் மாணவரின் சந்தேகங்கள் - 

1. அப்புறம் சொல்றோம்னு சொல்றாங்க. ஆனா யாரத்தான் செலக்ட் பண்றாங்கன்னே தெரியல. ஏஏ காலேஜ்ல இன்டர்வியு அட்டண்ட் பண்ணவங்க எல்லாரும் பிபி காலேஜுக்கும் வர்றாங்க.

2. இன்டர்வியுவுக்கு வர்றவங்கள எப்டினாலும் நடத்தலாம்கிற ஐடியா இவங்களுக்கு எப்டி வருது?

இதில் சந்தேகம் ஒன்றுக்கான விடை நாம் விசாரித்தவரை - ஏஐசிடிஇ, யுஜிசி போன்ற நிறுவனங்களுக்கு சப்மிட் செய்யும் ரிப்போர்ட்டில் பேப்பரில் வெளியிட்ட வான்ட்டஅட் விளம்பரம், அதற்கு வந்த ரெஸ்பான்ஸ் விண்ணப்பங்களின் எண்ணிக்கை, அதில் முனைவர் பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை போன்றவற்றை கல்லூரி நிர்வாகம் சப்மிட் செய்ய வேண்டுமாம். இதற்காகவே ஆசிரியர்கள் தேவை இருக்கிறதோ இல்லையோ இப்படி விளம்பரம் கொடுத்து ஒரு இன்டர்வியுவும் நடத்திவிடுகிறார்களாம். 

சந்தேகம் இரண்டைப் பொருத்தவரை இது காலம் காலமாக இருந்து வரும் பிரச்சினை என்று கருதுகிறேன். மன்னவனும் நீயோ, வளநாடும் உனதோ, உன்னையறிந்தோ பிஹெச்டி படித்தேன் என்று சாபமிட்டுவிட்டு வரவேண்டியதுதான்.

பி.கு.

இதில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் நடத்தும் நேர்முகத்தேர்வுகள் உண்மையானவைகளாக இருக்கின்றன. தேர்வு நடக்கும் அறையில் தேர்வாளர்கள் நாம் பேசுவதைக் கவனிக்கின்றனர்.தேர்வு முடிந்தவுடனே முடிவுகளை அறிவித்துவிடுகின்றனர். மேலும் இன்ஜினியரிங் கல்லூரிகளிலும் மிகச்சொற்ப விதிவிலக்குகள் உள்ளன.


Thursday, May 29, 2014

நிஜமாகவே எல்லாம் அவன் செயலா?

நிஜமாகவே எல்லாம் அவன் செயல்தானா? நாம் நம் வாழ்க்கையில் பல சமயங்களில் நல்ல வேள, By God's grace தப்பிச்சேன். ஒரு அரை மார்க் குறைஞ்சிருந்தா அவ்ளோதான், வேலை போயிருக்கும், மெடல் போயிருக்கும் ஆர்டர் கெடச்சிருக்காது, ப்ராஜக்ட் கெடச்சிருக்காது, அந்த வீடு அமையாம போயிருந்திருக்கும்.......................... இப்படி பல பல சந்தர்ப்பங்கள், சம்பவங்களில் கடவுள் கருணையுள்ளவர் என்பதைச் சொல்லியிருப்போம்.

என்னுடைய இன்றைய வாழ்க்கை வரை எக்கச்சக்க முறை கடவுளின் கிருபையால் என்ற வார்த்தையை வெவ்வேறு சூழ்நிலைகளில்,  பயன்படுத்தியிருக்கிறேன். அவற்றில் பெரும்பாலான சமயங்களில் என் அறிவு, என் திறமை போன்ற நினைவுகளை ஒரு போலியான பெருந்தன்மையுடன் கஷ்டப்பட்டு பின்தள்ளிவிட்டு (அப்புறம் சாமி கண்ணக் குத்திரும் என்ற பயத்துடன் ;) )  By God's grace என்று சொல்லிக்கொள்வேன். என்ன தான் கடவுள் இருந்தாலும் என் அறிவால்தானே இந்த கவுரவம் கிடைத்தது என்ற எண்ணத்தை என்னால் அகற்றிக் கொள்ளவே முடிந்ததில்லை. நான் கட்டிய மகா பாபிலோன் என்று அதனைக் கட்டிய மன்னன் கர்வத்தோடு நினைத்த மறுகணம் அரண்மனை இடிந்து விழுந்தது என்று வாசித்ததை  நினைவு படுத்திக்கொண்டு, ஒரு பயத்தை வரவழைத்துக்கொண்டுதான் என்னால் கடவுளின் கிருபை என்ற வார்த்தையைச் சொல்ல முடிந்திருக்கிறது.

ஆனால் சமீப காலங்களில் நடைபெற்ற சில அருமையான சம்பவங்கள் leaves me speechless. நான், எனது அறிவு, திறமை, செல்வம் போன்றவையெல்லாம் எவ்வளவு பெரிய மாயை!!! இவையனைத்தும் பயனற்றுப் போகும் சந்தர்ப்பங்களை வாழ்க்கை நம்முன் வாரி இறைக்கிறது. அப்போது எல்லாம் அவன் செயல் என்னும் பேருண்மை மனதில் மின்னி மறைகிறது. அந்த நொடி கொடுக்கும் பரவசத்தை என்னால் வார்த்தைப்படுத்த இயலவில்லை. (கடவுள் உங்களுக்கும் அந்தப்பரவசத்தை - இது வரை கிடைக்காத பட்சத்தில் - அருள் புரிவாராக)

 இந்த வாழ்க்கையென்னும் மகாநதியின் முன் நாம் எல்லோரும் எவ்வளவு சாதாரணமானவர்கள். இந்நதி பொங்கிப் பிரவாகம் எடுத்தால் நாம்  அனைவரும் எம்மூலை?  இந்நதியை வழிநடத்தும் மகாசக்தியிடம் நம்மை ஒப்புவித்துவிட்டு அவரின் எல்லாம் வல்ல கரங்கள் நம்மை வழிநடத்தட்டும் என்று அடி பணிவது ஒன்றே நாம் செய்யத்தக்கது.  
                 பணிவதே பணி என்று பணிந்துவப்பேன் இறைவா!!!!!!

Tuesday, April 1, 2014

கலை வளர்க்கும் எத்திராஜ் கல்லூரி

          எத்திராஜ் மகளிர்க் கல்லூரியின் ஆண்டு விழா மற்றும் இன்டர்-காலேஜ் ஃபெஸ்டிவல் சிருஷ்டி-14 கோலாகலமாக நடந்தேறியது. ஜெயம் ரவி, சமுத்திரக்கனி,ஆச்சி மனோரமா, சேரன், ஜீ.வி.ப்ரகாஷ், விவேக் என ஏகப்பட்ட சின்னத்திரை மற்றும் பெரிய திரை நட்சத்திரங்கள்.
        இதில் என்னைக் கவர்ந்த விஷயம் என்னவென்றால்,ஃபேஷன் ஷோவில் அல்ட்ரா மாடர்னாகவும், வெஸ்டர்ன் டான்ஸ், ம்யூசிக்கில் இளையதலைமுறையின் பல்ஸுக்கேற்ப அசத்தும் மாணவியர், அதே அளவு உற்சாகத்துடனும் ஆதன்ட்டிசிட்டியுடனும் பரதநாட்டியத்திலும், கர்னாடக சங்கீதத்திலும் ஜொலிக்கின்றனர். 
    இது வரை நான் பார்த்த பரதநாட்டியங்களில் - ஸ்கூல் ஸ்டேஜில் வெள்ளையாக இருக்கும் ஒரு குட்டிப்பெண்ணிற்கு தாவணியெல்லாம் கட்டிவிட்டு, குஞ்சம் வைத்து, ரோஸ் கலர் பவுடர், லிப்ஸ்டிக்கெல்லாம் அப்பிவிட்டு - ஒரு நாலைந்து பாட்டுகளுண்டு - மாதவி பொன் மயிலாள், அழகு மலராட, அபிநய சுந்தரி ஆடுகிறாள் - இவற்றில் ஏதாவது ஒன்றுக்கு அந்த சிறு பெண்ணை ஆட விட்டுவிடுவார்கள். அதுவும் குஞ்சத்தை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, தாவணியை இன்னொரு கையால் பிடித்துக்கொண்டு டான்ஸ் போல் ஏதோ ஒன்று செய்யும். நான் முதலில் வேலை பார்த்த (டவுன் சவுத்) காலேஜில், கொஞ்சம் முன்னேற்றம் - வினாயகர் பாட்டுக்கு ஆடுவார்கள். முகத்தைச் சிரித்தபடி வைக்க வேண்டும் என்று இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் போலும். பிள்ளைகள் ஈயென்று சிரித்தபடி தையா தக்கா என்று ஆடுவார்கள். பிறிதொரு வகை - நம் தூர்தர்ஷனில். 30 வயதிற்கு மேற்பட்ட ஆன்ட்டிகள் அபிநயம் பிடிக்கிறேன் என்று சாகடிப்பார்கள். கிருஷ்ணா நீ பேகனே என்று அரம்பித்த உடனேயே எழுந்து அந்தப்பக்கம் போய்விடுவேன். ( அப்ப சானல் மாத்துற லக்சுரிலாம் கிடையாது. நாம மாறிக்க வேண்டியதுதான்). பரதநாட்டியம் என்றாலே தெறித்து ஓடுவோம். கொஞ்சம் லேட்டா போய்க்கலாம். மொதல்ல பரதநாட்டியம் தான் இருக்கும் - என்பது எல்லா பள்ளி, கல்லூரி விழாக்களிலும் கேட்கக்கூடிய ஒரு சாதாரண டயலைக்

           ஆனால் எத்திராஜ் மாணவியரின் பரதநாட்டியம் அடேங்கப்பா ரகம். பரதம் என்பது 10 வயது முதல் 20 வயது வரை உள்ள பெண்கள் ஆட வேண்டிய ஒரு கலை. பரதத்தை டெக்னிக்கலாக என்னால் அனலைஸ் செய்ய முடியாது. ஆனால் இந்தப்பெண்கள் 'சதாசிவன், பனிமாமலையன், மத்தளம் கொட்டிட, தாண்டவம் ஆடுகிறான்' என்ற வரிகளுக்கு அபிநயம் பிடிக்கும்போது, மத்தள ஓசை செவிகளில் அதிர்கிறது, விரிசடையுடன் தாண்டவம் ஆடும் எம்பிரான் கண்முன் எழுந்தருளுகிறான். பிறகென்ன கண்களில் நீர் மல்க அவனைத் தரிசிக்க வேண்டியதுதான். 
                  ராம்ப்வாக், அது இது என்று என்னனென்னவோ மாடர்னாகச் செய்யும் இந்தக்கல்லூரிப்பிள்ளைகள், நம் மண்ணின் பாரம்பர்யத்தையும் ஏகபோகமாக பரிபாலிக்கிறார்கள்.(இக்கல்லூரியில் நடைபெறும் தியாகராயர் ஆராதனையும் குறிப்பிடத்தக்க ஒன்று. கர்னாடக இசையையே அறியாதவர்களையும் மனம் கரைந்துகேட்கவைக்கும் வண்ணம் பாடுகிறார்கள்). நம் பண்பாட்டுவேர் பாதாளம் வரை பாய்கிறது. அசைப்பது கடினம், கடினம்.

Friday, February 14, 2014

லேடீஸ் காலேஜ் வாட்ச்மேன்கள்

          அது என்னமோ தெரியல, என்ன மாயமோ தெரியல நான் படித்த மற்றும் வேலை பார்த்த, பார்க்கின்ற பெண்கள் கல்லூரி வாட்ச்மேன்கள் அனைவருமே மிகவும் கண்டிப்பானவர்களாக, அதே நேரம் அக்கல்லூரியைச் சார்ந்த அனைவராலும் விரும்பப்படுகிறவர்களாகவே இருக்கின்றனர். 
        ஹோலிகிராஸ் சேஷு அண்ணா முதல் எத்திராஜ் அண்ணாதுரை அண்ணா வரை இவர்கள் கண்களில் தப்பி ஈ, காக்காய் கூட உள்ளே நுழைய முடியாது. அதுவும் ஒரு முறை சேஷு அண்ணா, காலேஜுக்கு ஒரு ஃபங்ஷனுக்கு வந்த சீஃப் கெஸ்ட்டை வெளியே நிறுத்தி புண்ணியம் கட்டிக்கொண்டார். என்னடா இன்னும் சீஃப்கெஸ்ட்டைக் காணோம் என்று கேட்டுக்கு வந்து பார்த்தவர்கள், அப்புறம் அவரை சேஷு அண்ணாவிடமிருந்து மீட்டு உள்ளே கூட்டிச் சென்றார்கள். (செல்போனெல்லாம் அப்போது கிடையாது).
     ஸ்டூண்ட்ஸும் ஆசிரியர்களிடமிருந்து கூட கல்லூரி நேரத்தில் வெளியே செல்ல பர்மிஷன் வாங்கிவிடலாம். ஆனால் வாட்ச்மேனுக்கு விளக்கம் சொல்லி மாளாது. ஏறக்குறைய ஒரு இன்டர்நேஷனல் ஏர்போர்ட் சுங்கத்துறை இலாகா அதிகாரிகளுக்கு நிகரானவர்கள் இவர்கள். ஆனாலும் இவர்கள், மாணவிகளாலும், பேராசிரியப்பெருமக்களாலும் மிகவும் மதிக்கப்படுபவர்களாகவும், அன்பு செய்யப்படுபவர்களாகவும் இருக்கின்றார்கள்.
    எப்படி இத்துறையில் இருக்கும் அனைவரும் இவ்வளவு சின்சியராக இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது, நடுத்தர வயது ஆண்களான இவர்களுக்கு கட்டாயம் கல்லூரிப்பெண்களின் வயதில் மகள்கள் இருக்கிறார்கள். எனவே வாசலில் நிற்பது வாட்ச்மேன் அல்ல, ஒரு தகப்பன். தன் பிள்ளையைப் பாதுகாக்கும் அதே வேகத்துடன் இவர்கள் அங்குள்ள ஒவ்வொரு பிள்ளையையும் ப்ரொடக்ட் செய்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட வயதை அடையும்போது இப்பக்குவம் தன்னால் வருகிறது.
     சமீபத்தில் லோலிட்டா என்ற நாவலைப் படிக்கத்துவங்கினேன். இது ஒரு மிகப்பிரபலமான நாவல். திரைப்படமாகவும் வந்துள்ளது. இது ஒரு ப்ரொஃபஸர், 12 வயது பெண்ணிடம் கொள்ளும் தகாத ஆசை பற்றியது. ஒரு 12 வயது பெண்குழந்தையின் சாதாரண நடவடிக்கைகளையும் பாலியல் கண்களோடு பார்ப்பதாக அந்நாவல் விரிகிறது. சில பக்கங்களுக்கு மேல் என்னால் அந்த நாவலைப் படிக்க இயலவில்லை.  10 வயது பெண்குழந்தையின் தாயாக அதைப்படிக்கும்போது ஏற்பட்ட உணர்வு பயங்கரமானது. அனேக சுஜாதா நாவல்களிலும் 12 வயது பெண்குழந்தைகளைப் பற்றிய பெர்வர்ட் ஐடியாக்களைக் காணலாம். ஒரு 20 வயதுப் பெண்ணாக சுஜாதா நாவலை (ஒரு ஸ்கூல் குழந்தையை கடத்து பணக்கார இளைஞன் மற்றும் பல)  ரசித்த என்னால், 10 வயது மகளின் தாயாக அதை வாசிக்கவே முடியவில்லை.

இது போன்ற காரணத்தால்தான் வாட்ச்மேன்களும் சூப்பர் கடமையுணர்ச்சியோடு இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஹாட்ஸ் ஆஃப்  டு ஆல் ஆஃப் யு அண்ணா. வீ ஆர் ப்ரௌட் ஆஃப் யு

Tuesday, February 11, 2014

இஸ்லாத்துக்கு மாறிய யுவன் ஷங்கர் ராஜா

யுவன் இஸ்லாம் மதத்தைத் தழுவியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.மேலும் ராஜாவுக்கும், யுவனுக்கும் இடையே கருத்து வேறுபாடு என்றும் ஒரு செய்தி உலாவுகிறது.ஏற்கனவே முதல் திருமணம் தோல்வியடைந்த நிலையில், யுவன் இரண்டாம் திருமணமாக ஒரு டாக்டரை மணந்தார். ஆனால் தற்சமயம் மூன்றாவதாக யாரையோ மணக்கவிருக்கிறார் என்றொரு வதந்தி.தாயின் இழப்பால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளாராம் யுவன்.

 திட்டமிட்டு செய்யப்படுகின்ற மதமாற்றங்கள் தனி ரகம். அவர்கள் பெரும்பாலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய அடித்தட்டு மக்களாகவே இருப்பர். ஆனால் அடித்தட்டுக்கு மேற்பட்ட நிலையிலிருக்கும் மக்கள், தாங்களாகவே, யாருடைய வம்படியான போதனையும் இல்லாமல், இப்படி மதம் மாறிக்கொள்ள முடிவெடுக்கிறார்கள் என்றால், அவர்கள் நிச்சயம் ஏதோவொரு தாங்கவொண்ணா மன அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்றே பொருள்.ஏதோ ஒரு இறை வடிவில் அவர்கள் மன ஆறுதல் அடைகிறார்கள் என்றால் அது நல்ல விஷயம்தானே. ஏன் அதை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டும்? இவர்களை, இவர்களின் குடும்பத்தார் ஜட்ஜ் பண்ணாமல், விமர்சிக்காமல் அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும். 

யுவன் வேறு எந்த தவறான வழியையும் நாடாமல் (குடிப்பழக்கம் இத்யாதிகள்) தன் ஸ்ட்ரஸ்ஸைப் போக்கிக் கொள்ள இப்படி ஒரு ஆன்மிக வழியைத் தேர்ந்தெடுத்தது வரவேற்கப்படவேண்டிய விஷயம். இதனை அவரது குடும்பத்தார் அனைவரும் ஏற்றுக்கொண்டு, அவருக்குத் தேவைப்படும் மாரல் சப்போர்ட்டைத் தர வேண்டும்.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes