Friday, November 30, 2012

மனீஷா கொய்ராலாவிற்கு கான்சர்

பிரபல நடிகை மனீஷா கொய்ரலாவிற்கு கான்சர். சில நாட்களுக்கு முன் ஒரு சமூக வலைத்தளத்தில் புட் பாய்சனிங்கால் தனக்கு உடல் நிலை சரியில்லை என்று தெரிவித்திருந்தார். தான் கட்டிக்கொண்டிருக்கும் புதிய வீட்டிற்காக நேபாளில் தங்கியிருக்கும் மனீஷா இரு தினங்களுக்கு முன் சுயநினைவை இழந்து கீழே விழுந்திருக்கிறார். அது வரை புட் பாய்சனிங் என்று நினைத்துக்கொண்டிருந்த அவரின் குடும்பத்தார் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து உடனடியாக அவரை மும்பை கொண்டு வந்திருக்கின்றனர். ஜஸ்லோக் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுள்ள அவர், இச்செய்தியை மிகத் தைரியமாக எதிர்கொண்டதாக அவரின் தோழி தெரிவிக்கின்றார். விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள்.

கௌதம் மேனன், மணிரத்னத்துக்குப் படம் எடுக்கத் தெரியாது - தயாரிப்பாளர்கள் பாய்ச்சல்

சமீபத்தில் மணிரத்னத்தின் பல்வேறு பேட்டிகள் ஒரு புத்தகமாகத் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஒரு பேட்டியில் தான் இயக்கியதில் தனக்குப் பிடிக்காத படம் இதயக்கோயில் என்று குறிப்பிட்டுள்ளார். இப்படத்தின் தயாரிப்பாளர் கோவைத்தம்பி டென்ஷனாகிவிட்டார். முதல் படம் தோல்வியடைந்த ஒரு புது இயக்குனருக்கு, அடுத்த படம் வாய்ப்புக் கொடுக்க எந்த தயாரிப்பாளர் முன்வருவார்? அந்த நிலையில் இருந்த மணிரத்னத்திற்கு அவர் வாய்ப்பு கொடுத்ததே பெரிய விஷயம்.  Beggars cannot be choosers என்பதை உணர்ந்துதான் மணிரத்னமும் இன்னொருவரின் கதையை இயக்கித்தருவதற்கு ஒப்புக்கொண்டிருப்பார். அப்போது அவருக்கு அந்த வாய்ப்பே பெரிய விஷயமாக இருந்திருக்கும். இதே போல்தான் கௌதம் மேனனும். லேப்டாப்பை வைத்துக்கொண்டு கதை சொல்வதற்கே தடுமாறியதாக காக்க காக்க திரைப்படத்தின் தயாரிப்பாளர் சொல்கிறார். ஆனால் படம் வெற்றியடைந்த பிறகு தயாரிப்பாளரைபற்றி எக்கச்சக்க குறை சொல்லி பேட்டி தருகிறார் கௌதம். தயாரிப்பாளரிடம் குறைகள் இருந்திருக்கலாம். ஆனால் நன்றி மறப்பது நன்றன்று. விக்ரமுக்கு நீண்ட வருடங்களுக்குப்பின் சேது ஹிட். அதற்கு அடுத்து அவர் நடித்த படம் விண்ணுக்கும் மண்ணுக்கும். கதையை ஓகே செய்து, வாய்ப்பை ஒப்புக்கொண்டு, நடித்து முடித்துப், பின் படம் சரியாக ஓடாத போது இயக்குனரைப் பற்றி அளவில்லாத குறை சொன்னார் விக்ரம். முதலில் ஏன் ஒப்புக்கொண்டீர்கள் Vikram?
நாம் ஒரு புது இடத்தில் வேலைக்குச் சேரும்போதோ, புது ஏரியாவில் குடி போகும்போதோ, அங்கே இருக்கும் மற்றவர்களால் அதிகம் கண்டுகொள்ளப்படாத ஒருவர் நம்முடன் பழகி நம்மைப் புதிய சூழலுக்கு  familiarise பண்ணி விடுவார். முதலில் நமக்கும் அந்த நட்பு மிகத்தேவையாக இருக்கும். பின்னர் நாம் மற்றவருடன் பழகியவுடன் நாமும் அந்த முதல்வரைக் கண்டுகொள்ளமாட்டோம். இது சர்வசாதாரணமாக எல்லா இடங்களிலும் நடப்பதுதான். அட்லீஸ்ட் பின்னொரு நாளில் அவர்களைப் பற்றி குறை சொல்லாமலாவது இருப்போம்.
காலத்தால் செய்த உதவி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

Saturday, November 17, 2012

சொல்வதெல்லாம் உண்மை நிர்மலா பெரியசாமி சொல்வது சரியா?

ஜீ தமிழ் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பெர்சனல் பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்கிறார் நிர்மலா பெரியசாமி. இந்நிகழ்ச்சியில் வரும் முக்கால்வாசி பிரச்சினைகள் முறையற்ற காதல் என்று சொல்லப்படுபவைதான். முறையற்ற காதல் என்று சொல்லப்படுவது எது? ஒரு திருமண பந்தத்தில் இருக்கும் ஆண் அல்லது பெண், வேறொரு பெண் அல்லது ஆணின்பால் ஈர்க்கப்படுவதை முறையற்ற / கள்ளக்காதல் என்கிறோம்.  இதனால் ஏற்படும் பிரச்சனைகளும் மன உளைச்சல்களும் ஏராளம். அந்த ஷோவுக்கு வந்த ஒரு பெண் சொல்கிறார் தன் கணவரைப்பற்றி - தினமும் தண்ணி போடுறார்ம்மா. வீட்டுக்கு, பிள்ளைகளுக்குச் செலவுக்குக் காசே குடுக்குறதில்ல. எந்த நேரமும் அடி, உதைதான். (இன்னொரு ஆணைச் சுட்டிக்காட்டி) அந்த நேரம் இவரு தான்ம்மா ஆறுதலா இருந்தாரு. இந்த ஷோவுக்கு வரும் பெண்கள் சொல்லும் சில விஷயங்களை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. அவ்வளவு வக்ரங்கள், குரூரங்கள். இப்படிப்பட்ட சூழலில் இருக்கும் ஒரு பெண் தன் கணவனை விட நல்லவனாக, ஆறுதலாக இருக்கும் ஒரு ஆண்மகன்பால் ஈர்க்கப்படுவது இயல்புதானே.
  மனிதமனம் என்பது ஒரு பலவீனமான, காற்றில் ஆடும் கொடியைப்போன்றது. தான் பற்றிக்கொண்டிருந்த கொழுக்கொம்பு பயனற்றதாகும் போது தன் ஆயிரம் கரங்களைக் காற்றில் வீசி வேறோர் கொம்பைப் பற்றிக்கொள்வது தான் அதன் இயல்பு. சில ஆண்கள் படும் துயரங்களும் பெண்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை. வாய் ஓயாமல் திட்டிக்கொண்டேயிருக்கும் மனைவியை முதல் மரியாதை படத்தில் பார்த்த போது மிகைப்படுத்தல் - ரொம்ப ஓவரா காட்டுறார். இப்டிலாம் இருப்பாங்களா என்றே நினைத்தேன். இதெல்லாம் சாதாரணம் என்று நினைக்கக்கூடிய அளவுக்கு மனைவிமார்களை நிஜத்தில் பார்த்தாயிற்று.
 இந்த மாதிரியான உறவுச்சிக்கல்களுக்கு நிர்மலா பெரியசாமி சொல்லும் தீர்வு - நீங்க சொல்றது எனக்கு நல்லா புரியுது. இந்த மாதிரி நெலம வேற ஒருத்தர்க்கு வரக்கூடாது. ஆனா முதல் கல்யாணத்த சட்டப்பூர்வமா முடிச்சுட்டு, இன்னொரு உறவுக்குள்ள போங்க. அதான் முறையானது. - என்கிறார். அதே நேரத்தில் தன் வாழ்க்கை சரியில்லையென்று சொல்லிக்கொண்டு, ஏற்கனவே நல்லவொரு திருமண பந்தத்தில் இருப்பவர்களின் மனதைக் கலைத்து தன் பக்கம் ஈர்ப்பவர்களைக் கடுமையாகக் கண்டித்து சம்பந்தப்பட்ட இருவர்மேலும் போலீஸ் நடவடிக்கை எடுக்கச் செய்கிறார்.
இது மிகச்சரியான தீர்வு என்றே எனக்குப் படுகிறது. நல்ல திருமண வாழ்க்கை அமையப்பெற்றவர்கள் பாக்கியவான்கள். இவர்களால் சிக்கலான திருமணத்தில் இருப்பவர்களைப் புரிந்து கொள்ள முடியாது என்றே நினைக்கிறேன். தெரு நாய்களுக்காகக் கவலைப்படும் காரில் போகும் கனவான்களின் மனநிலை தான் இவர்களுக்கு இருக்கும். பிள்ளையோடு தெருவில் நடக்கும்போது 4 நாய்கள் சூழ்ந்து கொண்டு கிர்ரென்று கூரிய பற்களைக் காட்டும் பயங்கரத்தை இவர்கள் அறிய மாட்டார்கள்.  உங்களில் பாவம் செய்யாதவன் இவள் மேல் கல்லெறியட்டும் என்றார் ஒரு மகான். கல்லெறியும் முன் யோசிப்போம்.
Happiness in marriage is entirely a matter of chance - Jane Austen. இது காலங்களைக் கடந்த உண்மை.

Friday, November 16, 2012

லக்சுரி அப்பார்ட்மென்ட் வாங்குவது புத்திசாலித்தனமா?

ரியல் எஸ்டேட்டின் லேட்டஸ்ட் ட்ரெண்ட் - லக்சுரி அப்பார்ட்மெண்ட்ஸ். ஓஎம்ஆரில் லொக்கேட்டட்; ஜிம், ஸ்விம்மிங் பூல், க்ளப் ஹவுஸ், ஜாகிங் ஏரியா, டென்னிஸ் கோர்ட், பிள்ளைகளுக்குப் ப்ளே ஏரியா எல்லாம் இருக்கு என்று கேட்கும்பொதே மெய் சிலிர்த்து விடும் நம் மேல் மத்திய தர வர்க்கத்தினருக்கு. நாம் அனுபவிக்காததை நம் பிள்ளைகள் அனுபவிக்கட்டும் என்று தான் நாம் முக்கால்வாசி விஷயங்களை வாங்குகிறோம்.
       ஆனால் லக்சுரி அப்பார்ட்மெண்ட்டுகளின் மெயின்டெனென்ஸ் காஸ்ட்டைக் கவனத்தில் கொள்ளத் தவறிவிடுகிறோம். சுமாராக 5200 ரூபாய் வரை ஒரு 1200 ச.அடி ப்ளாட்டுக்குக் கொடுக்க வேண்டியிருக்கிறது. அதாவது ரூ.3.50 ச.அடிக்கு + வாட்டர் ட்ரீட்மெண்ட் ப்ளாண்ட்டுக்கு ரூ.600 + குடிநீருக்கு ரூ.400. க்ளப்ஹவுஸ் இருந்தால் இதோடு சேர்த்து ரூ.1500. மொத்தம் ரூ.7000.
   ரூ.60000 டேக்ஹோம் பே உள்ள ஒருவர் 30 லட்சம் லோன் போட்டு இப்படி ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்கினால், மாதாமாதம் ரூ.32000 ஈ.எம்.ஐ + ரூ.7000 மெயின்டெனென்ஸ் கொடுத்தால் மிச்சம் ரூ.21000 த்தைக் கொண்டு பிற செலவுகள் அனைத்தையும் சமாளிக்க வேண்டும். இவ்வளவு மெயின்டனென்ஸ் காஸ்ட் கொடுப்பது வொர்த் தானா? மிஞ்சி மிஞ்சி போனால் வாரத்தில் 2 நாள் ஸ்விம் பண்ணுவோம் (அதுவும் சந்தேகம்தான்). வாக்கிங்காவது, ஜாகிங்காவது. அப்புறம் - யாருமே இல்லாத டீக்கடையில் யாருக்காக டீ ஆத்துவது? பேசாமல் இந்த ப்ரில்ஸ் இல்லாத நல்ல அப்பார்ட்மெண்ட்டாக வாங்கி, ரூ.2 மெயின்டெனென்ஸ் கொடுத்து சந்தோஷமாக வாழ்வோம்.

Thursday, November 1, 2012

மதபோதகர்களின் பிடியில் ஆந்திர சாப்ட்வேர் இன்ஜினியர் பெண்

சிடிஎஸ்ஸில் வேலை பார்க்கும் சாப்ட்வேர் இன்ஜினியர் பெண்ணைக் கட்டாய மதமாற்றம் செய்ததாக அவரது பெற்றோர் போலீஸில் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் பெண்ணை மீட்டுத்தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த உலகளாவிய மதமாற்றத்தின் பின்னணியில் பெரும் வணிக, அரசியல் நோக்கங்கள் உள்ளன என்று சமூகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மாதிரியான எஸ்டாபிளிஷ்ட் நிறுவனங்களைப்பற்றி நாம் பேச வேண்டாம். மாறாக நான் தெரிந்து கொள்ள விரும்புவது, நம் பக்கத்து வீட்டு டெய்ஸி அக்கா, ஆபிஸில் நம்முடன் பணிபுரியும் பெட்ஸி முதலானோர் ஏன் யாரோ ஒருவரை மதமாற்றுவதைப் பெர்ஸனல் அச்சீவ்மென்ட்டாகக் கருதுகிறார்கள்? ஏ தோவொரு தெய்வீக நொடியில் ஏற்படும் வார்த்தைப்படுத்தமுடியாத இறையுணர்வால் ஆட்கொள்ளப்பட்டு ஏசுவே தேவன் என்று அவர் கொள்கைகளைப் பின்பற்றுவது வேறு. மாறாக, நீங்க கும்புடறெதெல்லாம் கல்லு. அதால பேச முடியுமா? என்று அபத்தமாக அமெச்சூராகப் பேசி எங்க தேவன் அதப்பண்ணாரு இதப்பண்ணாரு என்றால் எரிச்சலாக வருகிறது. நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் - என்னவொரு ஆழமான வரி. நாதன் நம்முள் இருக்கிறான், நட்ட கல் ஏன் பேச வேண்டும்?
            மதம் மாற்றப்பட்டவர்களும், நான் ஆண்டவருக்காக வீட்டில் எல்லோரையும் சமாளித்தேன். பிசாச கும்பிடமாட்டேன் என்று ரொம்ப அறிவாளியாகப் பேசுவார்கள். நீங்கள் என்ன ஆண்டவருக்காகப் பண்ணுவது? எங்கும் நிறை பரம்பொருள் நம்மை நம்பியா இருக்கிறான். அவனருளால் அவன் தாள் பணிந்து என்கிறார் மாணிக்கவாசகர். அவன் தாள் பணிவதற்கும் நமக்கு அவன் அருள் வேண்டும். மாறாக நாம் ஆண்டவருக்கு அருள் புரிவதாகப் பேசிக்கொண்டு அலைகிறோம்.
               இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், பைபிளைப் பற்றி ஓயாமல் நம்மிடம் பேசும் யாரும் அதைக்கடைப்பிடிப்பவர்களாக இல்லை. நான் சிலையக்கும்பிடமாட்டேன். ஏன்னா பைபிள்ள அப்டிதான் இருக்குஎன்று சொல்லும் கொலீக்ஸ், பக்கத்து வீடுகளைப் பார்த்திருக்கிறேன் ஆனால் நான் என் சம்பாத்தியத்தில் பத்தில் ஒரு பங்கை ஏழைகளுக்குச் செலவழிக்கிறேன். ஏனென்றால் பைபிளில் அப்படித்தான் இருக்கு என்று சொல்லும் அண்டை அயலாரை நான் இன்னும் பார்க்கவில்லை. அமைதியாக தங்கள் காரியங்களைக் கவனித்துக்கொண்டு தம்மால் இயன்றதைத் தேவைப்படுபவர்களுக்குச் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தும் கிறித்துவர்கள் ஆண்டவரின் பெயரை அனாவசியமாகப் பயன்படுத்துவதில்லை. அவர்கள் வார்த்தைகளைக் கேட்டு இல்லை மாறாக அவர்கள் வாழ்க்கையைப் பார்த்தே மக்கள் அவர்களை எடைபோடுகிறார்கள்.  
இறுதியாக - கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்பதே எல்லா கடவுளர்க்கும் பொருந்தும். ஆழமான நீர்நிலை அமைதியாக இருக்கும். அவசரப்பட்டு ஆண்டவனைப் பற்றி பேசிவிடாமல் இருக்க ஆண்டவன்தான் அருள்புரிய வேண்டும்.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes