Tuesday, September 28, 2010

பெற்றோரின் திகில் நிமிடங்கள்

3 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் அனுபவிக்க நேரும் திகில் நிமிடங்கள் இவை.

1. சாயங்காலம் 5 மணிக்குப் பிள்ளை தூங்கத் துவங்கும் போது நமக்கு வயிற்றுக்குள் பயப்பட்டாம் பூச்சிகள் பறக்கும். ஏனெனில் மாலை 5 மணிக்குத் தூங்கும் பிள்ளை இரவு 12 மணிக்கு ஃப்ரஷ்ஷாக எழுந்து தோசை அல்லது சப்பாத்தி கேட்கும். அப்புறம் காம்ப்ளான் கேட்கும். அப்புறம் ஒரு round toilet போய் முடிக்கும். பிறகு உற்சாகமாக விளையாடத் துவங்கும். மறுபடி அவர்கள் தூங்க நள்ளிரவு 2 ஆகிவிடும்.நாமும் 2 மணிக்குத் தூங்கி, காலை 6 மணிக்கு எழுந்து - அப்பா சொல்லும் போதே கண்ணக் கட்டுதே
2. கடையில் நாம் interestஆக shopping செய்து கொண்டிருக்கும் போது பிள்ளைகளுக்கு bathroom வரும் போது - ஏனெனில் நாம் toilet எங்கேயிருக்கிறது என்று கண்டுபிடித்து போவதற்குள் வழியிலேயே எல்லாம் ஆகிவிடுமோ என்று. (ஏம்ப்பா கடை முதலாளிகளே, அது ஏன் toiletஐ உங்கள் கடையின் பிரம்மாண்டமான ஒளி விளக்குகள் அலங்கரிக்கும் 3 அல்லது 4 தளங்களுக்கு மேலுள்ள junk materials போட்டு வைக்கும் தளத்தில் ஒரு ஒற்றை குண்டு பல்ப் ஒளி சிந்தும் terror setupல் toiletஐ வைத்திருக்கிறீர்கள் - இது அனேகமாக முக்கால்வாசி பெரிய்ய ஜவுளிக்கடல்களிலும், நகைமாளிகைகளிலும் நாங்கள் பார்த்தது)

3. ப்ளைட் லேண்டிங் மற்றும் டேக் ஆஃபின் போது - காது அடைப்பதனால் குழந்தைகள் அழத்துவங்குவர். நாம் முன்னேற்பாடாக கொண்டு சென்ற ear plugs (அது ஒண்ணுமில்லீங்க - காதுல வச்சிக்க பஞ்சு தான்) கட்டாயம் கையில் அந்த நேரம் சிக்காது. குழந்தையின் வாயில் விரல வைங்க. விரலச் சப்பினா காது வலிக்காது என்பார்கள். அது ஆன்னு கத்திட்டு இருக்கும் போது எங்க போயி வாயில வெரல வச்சு அது சப்புறது ???!!! pilotஅத் தவிர cabin crewல இருக்குறவங்க ஆரம்பிச்சு எல்லாரும் நம்மள தான் பாப்பாங்க. ஒண்ணும் செய்ய முடியாது. நாம யாரயும் பாக்காத மாதிரி உக்காந்துக்க வேண்டியது தான் :)

4. Parents-Teachers meetingன் போது உங்க பொண்ணு என்ன சொல்றா தெரியுமா என்று teacher ஆரம்பிக்கும் போது - ஐயையோ என்னத்த சொன்னான்னு தெரியலயே - சும்மா சும்மா parents வந்து உங்கள meet பண்ண சொல்றீங்க. எங்க அம்மா college போக வேணாமா என்று சொன்னாளாம். அது correct தானே என்று நினைத்துக்கொண்டு மகளைக் கண்டித்து விட்டேன் (வேறென்ன செய்றது. நெனக்கிறதயெல்லாம் சொல்ல முடியுமா என்ன ;) )

5. 2 பிள்ளைகள் இருக்கும் வீட்டில் ஒரு பிள்ளையின் வகுப்பில் மட்டும் யாருக்கோ பிறந்தநாள். அவள் கொடுத்த சாக்லேட்டைக் மெனக்கெட்டு கொண்டு வந்து வீட்டில் தம்பியிடம் காட்டி - எங்க classல பூஜாக்கு birthday. ஒரு chocolateதான் குடுத்தா என்று பொறுப்பாகச் சொல்லிவிட்டு அதை டபக்கென்று வாயில் போட்டுக்கொள்ளும் போது. சின்னது அலற ஆரம்பிக்கும். கொடுமைக்குன்னு அந்நேரம் வீட்டில் வேறு chocolateஏ இருக்காது. என்ன செய்வது ஆளுக்கு 2 அடி கொடுக்க வேண்டியதுதான்

Thursday, September 23, 2010

ஆயிரம் வருட அற்புதம் - பெரிய கோயில்


சமீபத்தில் தஞ்சை பெரிய கோயிலைச் சென்று பார்க்கும் பெரும் பேறு பெற்றேன். பெரிய கோவிலை நான் மறைவதற்குள் தரிசிக்க வேண்டும் என்பது என் பேரவா. வாசுவால் அது நிறைவேறியது. ஆயிரம் வருட அந்த அற்புதத்தைத் தரிசிக்க கண் கோடி வேண்டும்.


கேரளாந்தக நுழைவாயில்

கோவிலின் வாசலில் இறங்கியவுடன் தென்படும் மதில் சுவரும் கேரளாந்தக நுழைவாயிலும் காண்போரை 1000 வருடங்கள் பின்னோக்கி இழுத்துச்செல்கின்றன. அங்கிருந்தே ஒரு time machineல் ஏறி 1000 வருடங்கள் பின் சென்ற உணர்வுடன் தான் உள்ளே நுழைந்தேன்.





உள்ளே சென்றவுடன் சட்டென்று என்னைத்தாக்கிய உணர்வை எனக்கு எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. நெடிதுயர்ந்த , கம்பீரமான இறைவன் குடி கொண்டுள்ள அந்த ஸ்தலம் , மனித மனத்தில் உள்ள 'நான்' என்ற அகந்தையை அடித்து நொறுக்குகிறது. கண்ணில் நீர் மல்கி நிறைந்து நிற்கிறது. மனம் இயங்காத பெருநிலையில் நின்றது. 'ஒன்றை நினைத்து, ஒன்றை மறந்து ஓடும் மனம் எல்லாம் நீயென்றறிந்தால் எங்கே இயங்கும் பராபரமே' என்று தாயுமானசுவாமிகள் பாடியதன் பொருள் நொடியில் விளங்குகிறது. ஏதோ எல்லாப் பிரச்சனைகளும் என்னுடையது போலவும், இதை தீர்க்கப்போவது நானே தான் என்ற நினைப்பும் அகன்றது. இறை பெருமானே பிரச்சனை உன்னுடையது. தீர்க்கப்போவதும் நீ. நான் உன் கையில் வெறும் களிமண் என்ற சரணாகதி நிலை கிடைத்தது. அறிவெல்லாம் கடந்த இறை அமைதி மனத்தை நிறைத்தது.எங்கும் நிறை இறையின் இனிய பிரசன்னம் அத்தலத்தை நிறைக்கிறது. நண்பர்களே தஞ்சை பெரிய கோவில் ஏதோ ஒரு மதத்தினருக்கு மட்டுமே உரிய வழிபாட்டுத்தலமாக நான் கருதவில்லை. இது மானுடம் முழுமைக்குமான கோவில். 1000 ஆண்டு நிறைவுறும் இவ்வேளையில் அக்கோவிலைக்கட்டுவித்த மாமன்னன் ராஜராஜனுக்கு நானும் ஒரு தமிழச்சி என்ற பெருமிதத்துடன் என் வணக்கத்தைச் சமர்ப்பிக்கிறேன்.


கோவிலின் கல்வெட்டுக்களில் தானம் கொடுத்தவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருக்கிறதாம். முதல் தானம் ராஜராஜனுடையது. 'நாங்கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும்' என்று கல்வெட்டு துவங்குகிறதாம். தான் மட்டும் இக்கோவிலைக்கட்டியதாய் ஒரு சிறு நினைப்பு கூட அந்த மாமனிதனுக்கு இல்லை. - நன்றி பாலகுமாரன், தினமலர் - என்ன ஒரு பெருந்தன்மை இம்மாமன்னனுக்கு. இத்தகையோர் தோன்றிய இப்புண்ணிய பூமியில் நான் இருக்க நேர்ந்ததற்கும், இக்கோவிலைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றதற்கும் எல்லாம் வல்ல, எங்கும் நிறை இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்

சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:

Wednesday, September 15, 2010

ஒரு சாமான்யனின் இயலாமை கோபம்

நான் ரஜினியின் தீவிர ரசிகை. ரஜினியின் முள்ளும் மலரும், ஜானி, படிக்காதவன், குரு சிஷ்யன், தளபதி முதல் சந்திரமுகி வரை (சிவாஜி பார்க்கவில்லை) பார்த்தாயிற்று. ஜானியைப் போன்றதொரு இனிமையான, டீசன்ட்டான ரொமாண்டிக் படம் இன்னும் வரவில்லை. ஆனால் எந்திரன் பார்க்கப் போவதில்லை என்று தீர்மானமாக முடிவெடுத்து விட்டேன். காரணம் 'சன் பிக்சர்ஸ்'. அவர்களின் தொடர்ச்சியான விளம்பரம் வெறுப்பை ஏற்படுத்துகின்றதென்றால் அக்குடும்பத்தின் அனைத்து துறைகளிலுமான ஆக்டோபஸ் ஆக்கிரமிப்பு அக்குடும்பத்தின் மேல் ஒரு aversionஐயே ஏற்படுத்திவிட்டது. கலாநிதி மாறன், உதயநிதி, துரை தயாநிதி, அறிவுநிதி, அருள்நிதி, அந்த நிதி, இந்த நிதி - இவர்கள் கடும் உழைப்பால் மட்டும் இவர்களின் கம்பெனியைத் துவங்கவில்லை, நடிக்கத்துவங்கவில்லை. மாநிலத்திலும், மத்தியிலும் இவர்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி நினைத்தவுடன் ஒரு படத்தைத் தயாரித்து முடிக்கின்றனர். தங்களது சேனல்களை வைத்து ஓயாத ஒழியாத விளம்பரம். கருணாநிதி திரைப்படத்திற்கு வசனம் எழுதுவதற்கு அவருக்கு சம்பளம் 50 லட்சம் ரூபாயாம். இது அவரது தற்சமய எழுத்து திறமைக்காக கொடுக்கப்படும் பணமல்ல என்பது ஊரறிந்த ரகசியம். இன்னொரு விஷயம் - இவர் தனது பேரன்மார்கள் தயாரிக்கும் படத்திற்கு வசனம் எழுதுவதில்லை.(அப்புறம் படம் ஓட வேணாமா?? ;)
கலாநிதி மாறனின் சொத்து மதிப்பு USD 1.2 Billion ஆம். இந்திய மதிப்பில் இது எவ்வளவு ரூபாய் என்று யாராவது சொன்னால் நல்லா இருக்கும். உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கப்போகிறாராம். அவரின் மனைவி பத்திரிக்கை நடத்துகிறார். இப்படி இக்குடும்பத்தின் ஊடகத்துறை monopolyயால் 58 சிறிய பட்ஜட் படங்கள் வெளியிடப்பட முடியாமல் பெட்டியில் முடங்கிக் கிடக்கின்றனவாம். எத்தனை குடும்பங்களை இவர்கள் மறைமுகமாக நசுக்குகிறார்களோ??!!. இன்னொரு காமெடி - சமீபத்தில் சென்னையில் பார்லிமென்ட் கேள்வி-பதில் நேரத்தில் எப்படி பதிலளிப்பது, எப்படி பேசுவது என்று எம்பிக்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டதாம் - the funny part is - பார்லிமெண்ட்டில் எந்தக் கேள்விக்கும் பதிலளிப்பதில்லை. பேசுவதேயில்லை என்று அவைத்தலைவர் மீராக்குமார் மற்றும் பலரால் (உண்மையாக) குற்றம் சாட்டப்பட்ட மு.க.அழகிரியின் தலைமையில் இப்பயிற்சி வழங்கப்பட்டதாம். என்ன கொடுமை சரவணன் இது :(

இந்த திங்கட்கிழமை காலை என்னுடைய பேராசிரியரைப் பார்க்க செல்ல வேண்டியிருந்தது. அடையாறு டிப்போ செல்ல வேண்டும். கஸ்தூரிபாய் நகர் ஸ்டேஷனில் இறங்கினேன். ரோட்டைக் க்ராஸ் பண்ணி ஆட்டோ எடுக்க கஷ்டப்பட்டுக்கொண்டு (குறுக்கே ஓடி, மீடியனில் தாவி ஹெவி டிராஃபிக்கில் சர்க்கஸ் செய்ய நேரிடும்) ஸ்டேஷனிலிருந்தே ஆட்டோ எடுத்துக்கொண்டேன். ஆட்டோ டிரைவர் செய்தித்தாளை மடித்துவிட்டு வண்டி எடுத்தார். என்ன நியூஸ் படித்துக்கொண்டிருந்தாரோ தெரியல. செம கடுப்பாக இருந்தார். 1 ரூவா அரிசிய யாரு மேடம் சாப்பிடுறா? எங்க பாத்தாலும் இவனுங்க தான். நேத்து நான் எந்திரன் ட்ரெய்லர் பாக்கல மேடம். அதுக்கு பதிலா விஜய் டீவி முரளி ஷோ பாத்தேன் மேடம் - இன்னும் பல சொன்னார்.

ஒரு முடிவுக்கு வந்தேன். இவர்களைச் சாமான்யனான என்னால் எதுவும் செய்ய இயலாது. மிஞ்சி மிஞ்சிப் போனால் எந்திரன் பார்க்காமல் இருந்து கொள்ளலாம் அந்த ஆட்டோ ட்ரைவரைப் போல்.

சினிமாப் பாடல்கள்

சில சினிமாப் பாடல்களை எப்போது கேட்கும் போதும், அப்பாடலை நான் முதன் முதலில் கேட்க நேர்ந்த நேரத்தின் குறிப்பிட்ட காட்சிகள் மனதிற்குள் நிழற்படமாய் மறுபடி, மறுபடி தோன்றும். அச்சந்தர்ப்பத்தில் நான் இருந்த மனநிலைக்கும் - அது மகிழ்ச்சியோ, சோகமோ - மறுபடியும் செல்ல நேரிடுகிறது. நாங்கள் முன்பிருந்த லைன் வீட்டின்(கிட்டத்தட்ட 10 வீடுகள் ஒரே வரிசையில் இருக்கும். கொடுமைங்க அது) தெரு முனை டீக்கடையில் ரேடியோ இருக்கும். காலையிலேயே விவிதபாரதியின் வர்த்தக ஒளிபரப்பு உச்சஸ்தாயியில் அலறும். 'ஒரு கிளி உருகுது', 'ஓ மானே மானே', 'விக்ரம்' பாடல்களை இப்போது கேட்கும் போதும் அக்கடையில் நாங்கள் வாங்கிச்சுவைத்த வெங்காய பக்கோடாவின் சுவை நாவில் வருகிறது.
சிந்துபைரவி பாடல்கள் பக்கத்து வீட்டு செந்திலக்காவை (அக்கா தான். அவர்களின் முழுப்பெயர் செந்தில் செல்வி) நினைவூட்டும். அந்தப்படம் வந்த புதிது. பாடல்கள் மெகா ஹிட். நான் ஏற்கனவே சொன்னது போல் ரேடியோ டீக்கடையில் மட்டுமே இருக்கும். இந்நிலையில் tape recorder பற்றியெல்லாம் பேசவே முடியாது. இப்படியொரு சூழலில் செந்திலக்கா தன் கல்லூரி தோழியிடம் ஒரு டேப் ரிக்கார்டர் தேத்திக்கொண்டு வந்தார், சிந்து பைரவி காசட்டோடு. 10 வீட்டுப் பிள்ளைகளும் அவர்கள் வீட்டில். பாடறியேன் படிப்பறியேன், தண்ணித்தொட்டி பாடல்களை ரசித்து தள்ளினோம். அக்கா பார்க்காத நேரம் அதைத் தொட்டுப்பார்த்துக்கொள்வோம். நண்பர்களே 36 inch டிவி கொடுக்காத சந்தோஷத்தை அந்த tape recorder அன்று தந்தது.
மை டியர் குட்டிச்சாத்தான் படத்தில் 'பூ வாடை காற்றே' என்றொரு பாடல். இளம் குழந்தைத்தோழர்கள் மகிழ்ந்து கழித்து விளையாடும் காட்சிகளைக் கொண்ட பாடல். இதை இப்போது எங்கும் கேட்கக்கூட முடியவில்லை :( . என் இனிய பள்ளித் தோழிகள் நபீஸா, திலீபா (5th std வரை என்னோடு படித்தவர்கள். )திலீபா இலங்கையிலிருந்து வந்தாள். அவளின் பெயர்க்காரணம் இப்போது தான் எனக்குப் புரிகிறது. Contact மீண்டும் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் ??!! என்னருமை திலீபா எங்கிருக்கிறாய்? . நபீஸாவின் அப்பா சிங்கப்பூரில் கடை வைத்திருந்தார். அவர்களுடைய வீடு பெரிய பங்களா. காம்பவுண்டுக்குள் ஒரு கட்டைச்சுவர் இருக்கும். அந்தப்பாடலில் பிள்ளைகள் சுவரின் மேல் ஏறி நடப்பார்கள். ஃபேனில் அமர்வார்கள். நாங்கள் அதைப்போல் செய்வதாக நினைத்து அந்தக்கட்டைச்சுவரின் மேல் ஏறி ஆடுவோம் - ம் இனிய நாட்கள் அவை.
சோகம் இனி இல்லை பாடல், நாங்கள் NTSE வகுப்புக்கு காலையில் (7 மணி) வகுப்பறைகள் திறக்கக் காத்திருந்த - மரத்தடியில் அமர்ந்து கொண்டு, புல்லின் நுனியில் பனித்துளிகளை உதிர்த்துக்கொண்டு - போது எங்கோ ஒலித்தது. அந்தப்பாடலை இப்போது கேட்கும் போதும் அந்த நுனிப்புல்லின் ஈரம் விரலில் குறுகுறுக்கிறது.
9th std class roomல் அமர்ந்திருந்த போது ஒலித்த 'பூங்காத்து திரும்புமா' பாடலின் 'எனக்கொரு தாய்மடி கிடைக்குமா?' வரி கண்ணீர் உகுக்கச் செய்தது. (அம்மா என்னை 6th லிருந்து ஹாஸ்டலில் விட்டுவிட்டார்கள்)
College I yr ல் இருந்த போது அன்று Sports Day. Physics allied வகுப்பு. groundல் பாட்டு போட ஆரம்பித்து விட்டார்கள். அந்த சத்தத்தில் வகுப்பு முடியவில்லை. அதனால் ஃப்ரி hour விட்டு விட்டார்கள். அந்த எதிர்பாராத ஃப்ரீ hour நிமிடத்தின் சந்தோஷம் இப்போதும் 'ராஜனோடு ராணி வந்து' - சதிலீலாவதி கமல் படம் - பாடலைக் கேட்கும்போது ஏற்படுகிறது.
நாங்கள் இதற்கு முன் இருந்த வீடு ஒரு independent house. பக்கத்து வீட்டில் கட்டட வேலை நடந்து கொண்டிருந்தது. கொத்தனார்கள் எப்போதும் ரேடியோ வைப்பர். எங்கள் வீட்டின் முன் பெரிய தோட்டம் இருக்கும். ராத்திரி நேரம் பூச்சிகள் பயத்தால் பிள்ளைகளை வெளியே விட மாட்டோம். ஒரு நாள் இரவு 8 மணி இருக்கும். என் பெண்ணை வீட்டிற்குள் காணவில்லை. அந்நேரம் அவள் வயது 4. ஆளுக்கு ஒரு பக்கம் தேடினோம். பார்த்தால் கதவு திறந்து இருந்தது. இவள் தோட்டத்தில் நின்று கொண்டு பக்கத்து வீட்டு ரேடியோவில் இருந்து வரும் 'கல்லை மட்டும் கண்டால்' பாட்டை ரசித்துக்கொண்டு நின்றாள். இசையால் ஆகர்ஷிக்கப்படுவதற்கு வயது வரையறை ஏதும் இல்லை போலும். May be இந்தப்பாடலை பின்னொரு நாள் அவள் கேட்கும் போது, தோட்டத்தில் நின்று கொண்டிருந்த தினம் அவளுக்கு நினைவிற்கு வரலாம் :)

Monday, September 13, 2010

மனிதம்?

ஒரு சாயங்கால வேளை. பிள்ளைகள் இருவரும் போர்ட்டிகோவில் விளையாடிக் கொண்டிருந்தனர். இருவரின் சைக்கிள்களும் ஒன்றையொன்று முந்திக்கொண்டு பறந்து பொண்டிருந்தன. நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு அம்மா பொம்மைகள் விற்றபடி வந்து கொண்டிருந்தார். தலையில் ஒரு கூடை. கூடையின் பார்டரில் நீளமான குச்சிகள் செருகப்பட்டிருந்தன. ஒவ்வொரு குச்சியின் உச்சியிலும் களிமண்ணாலான பொம்மைகள். பிள்ளையார், கங்கையைத் தலையில் தாங்கிய சிவபெருமான், பார்க்கடலில் பள்ளிகொண்ட நாராயணன், அம்மன் இப்படி பெரிய பொம்மைகள். நடுவே ஒரு டால்ஃபின் துள்ளிக்குதித்துக் கொண்டிருந்தது. என் மகனின் ஃபேவரைட் இந்த மீன்கள். டிஸ்கவரி தொ.கா வில் எந்நேரமும் இதைத்தான் பார்ப்பான். பிளாஸ்டிக் மற்றும் எலக்ட்ரானிக் பொம்மைகளில் மட்டுமே விளையாடும் இக்காலத்துப் பிள்ளைகளுக்கு மண் பொம்மையில் விளையாடும் சுகம் தெரியவேண்டும் என்று நினைக்கிறேன். (எலக்ட்ரானிக் விளையாட்டு பொம்மையில் கற்பனைகளுக்கும் பாவனைகளுக்கும் இடமில்லை. இவ்வகை பொம்மைகள் ஆடுகின்றன, பாடுகின்றன, பேசுகின்றன and what not??? ஆனால் மண் பொம்மைகள் ஆடுவதாகவும், பாடுவதாகவும், பேசுவதாகவும் நாம் பாவிக்க வேண்டியிருக்கும். எனவே குழந்தைகள் அழகான ஒரு உலகத்தைச் சிருஷ்டித்துக் கொண்டு அதில் விளையாடுவர்)

பொம்மை விற்பவரைக் கூப்பிட்டாயிற்று. உள்ளே குட்டி குட்டியாக - திராட்சைக்கொத்தைக் கடிக்கும் அணில், மரக்கிளையில் அமர்ந்திருக்கும் ஜோடிக்கிளிகள், ஜோடிப்புறா, கன்றை நக்கிக்கொண்டிருக்கும் தாய்ப் பசு, துள்ளிகொண்டிருக்கும் இரண்டு டால்ஃபின்கள், தும்பிக்கையை உயர்த்திக்கொண்டிருக்கும் யானை - அடேயப்பா மனதைக் கொள்ளை கொள்ளும் அழகுடன். பிள்ளைகளிடம் யார் யாருக்கு எது வேணுமோ எடுத்துக்கோங்க என்றேன். மகள் ஒரு ஒட்டக பொம்மையை எடுத்துப்பொண்டாள். மகன் டால்ஃபினைத் திரும்பிக் கூடப் paarkkavilallai.(பிள்ளைகளிடம் ஆச்சரியத்திற்குப் பஞ்சமேயிர்க்காது. இன்று மிகவும் பிடிக்கும் பொருள் நாளை தேவையே படாமல் போவதும், விடுமுறையை முழுவதும் கழித்த தாத்தா பாட்டியின் ஊர் ஞாபகம் அடுத்த விடுமுறைக்குள் மறந்து விடுவதும் சர்வ சாதாரணம்). வாங்கி முடித்து பணமும் கொடுத்தாயிற்று. அந்த அம்மா கூடையைத்தூக்க ஒரு கை கொடுக்கச் சொன்னார். ம்ஹும் ஒரு levelக்கு மேல் என்னால் தூக்க முடியவில்லை. சரியான கனம். ஒரு பக்கமா பிடிக்கிறம்மா. விழப்போகுது என்று என்னைப் பயமுறுத்திவிட்டார். நான் regularஆக காய் வாங்கும் பெண் காய்க்காரப்பெண் கூடையைத்தூக்கியபடி வந்து கொண்டிருந்தார். அவருக்கு நான் அடிக்கடி கூடையைத்தூக்கிவிடுவது, மாடி வீட்டாருக்கு காய் வேண்டுமா எனக் கேட்டுவருவது என்று நிறைய எடுபிடி வேலைகள் பார்த்துள்ளேன் அந்த நம்பிக்கையில் - 2 பேரா தூக்க முடியல இந்தக்கூடைய. நீங்க ஒரு கைபொடுங்களேன் என்றேன். அதெல்லாம் தூக்க முடியாது. எனக்கு காய வித்து முடிக்கணும் என்றபடி போயேபோய் விட்டார். திகைத்து நின்று விட்டேன். இன்னும் மீளவில்லை திகைப்பிலிருந்து - ஏனெனில் மறுநாள் காய்க்காரம்மா ஒன்றுமே நடவாதது போல் ஒரு கை குடும்மா கூடையத் தூக்க என்றார் என்னிடம்.

Monday, September 6, 2010

பிள்ளைகளிடம் கேட்கக்கூடாத கேள்விகள்

பின்வரும் கேள்விகளைப் பிள்ளைகளிடம் (வயது 3 மற்றும் 5) கேட்பதைக் கட்டாயம் தவிருங்கள். மீறி நீங்கள் கேட்டால் வரக்கூடிய பின்விளைவுகளைக் கொடுத்துள்ளேன்.
  1. ரெஸ்ட்டாரண்ட்டில் இருக்கும்போது - உனக்கு ஜூஸ் வேணுமா அல்லது ஐஸ்க்ரீம் வேணுமா? (முடிவில் இரண்டையும் வாங்கிக்கொடுத்துவிட்டு கூடவே Benadryl மற்றும் Chericofஐயும் வாங்கிக் கொண்டு வீடு திரும்ப நேரிடும்)
  2. ஞாயிற்றுக்கிழமையன்று - இன்று எங்கே போகலாம்? (மூத்தது சிட்டி சென்டர் ப்ளே ஏரியா என்று சொல்லும்; இளையது பீச் என்று சொல்லும். முடிவில் சண்டையைச் சமாளிக்க முடியாமல் கோவிலுக்குப் போய் குடும்ப ஒற்றுமைக்காகப் பிரார்த்தனை செய்துவிட்டு வீடு செல்வீர்கள்)
  3. அக்கா படிக்கிறால்ல நீயும் படிக்கலாம்ல? என்று இளையபிள்ளையிடம் (Bubbles, Pepper புத்தகங்களை 1001வது முறையாக நீங்கள் வாசித்து கதை சொல்ல நேரிடும். பிள்ளை ABC, 123 எல்லாம் படிக்காது. எனவே இந்தக்கேள்வி 'நமக்கு நாமே ஆப்பு வைக்கும் திட்ட'த்தின் கீழ் வரும்)
  4. வீட்டில் இருக்கும் கடைசித்துண்டு தின்பண்டத்தை (அது கடைசித்துண்டு ஆப்பிள், சாக்லேட், பிஸ்கட் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்) - தம்பிக்கு வேணாமாம். நீ சாப்பிடுறியா? (இந்தக் கேள்வி கேட்டு முடிந்தவுடன் தம்பிக்கு உடனடியாக அது தேவைப்பட்டுவிடும். அக்காவிடம் நீங்களே கேட்டுவிட்டதால் அக்காவுக்கும் அது வேண்டும். நாம் தலையைப் பிய்த்துக்கொள்ள வேண்டியதுதான். இதுவும் மேற்சொன்ன same scheme (நமக்கு நாமே ஆப்பு)ன் கீழ் வரும்.
  5. இருமலா இருக்கே பாப்பா. இன்னிக்கு வேணா லீவ் போட்ருலாமா? (நாம் யோசிக்கத்தான் செய்து கொண்டிருப்போம். அதற்குள் யூனிஃபார்மைக் கடாசிவிட்டு சேட்டை ஆரம்பித்துவிடும். அக்கா இல்லாமல் பாசமலர் தம்பியும் பள்ளி செல்ல மாட்டார்)

Saturday, September 4, 2010

டாக்டர் ஃபீஸ்

சிக்குன்குனியா வந்திருந்த சமயம் (அது சிக்கனா, சிக்குனா?). எல்லா jointsலும் சரியான வலி. ஒரு spoonஐக்கூடப் பிடிக்க முடியவில்லை. மாடி வீட்டு நைனு அம்மா, எதிர்த்த வீட்டு மாமி, பக்கத்து வீட்டு 5ஆம் வகுப்பு படிக்கும் பப்லு எல்லோரும் சிக்குன்குனியா வந்தா அப்டித்தான் வலிக்கும் என்றனர். ரைட் விடு. பொறுத்துக்க வேண்டியதுதான் என்று விட்டு விட்டேன். என் தம்பி அப்பு கிட்டத்தட்ட 6 மாதங்களுக்குப் பிறகு வீட்டிற்கு அன்று வந்தான். எனக்கு ஃபீவர் சரியாகி 2 வாரங்கள் இருக்கும். ஆனால் வலி அப்படியேதான் இருந்தது. அதற்காக வீட்டிற்கு வந்த பையனைச் சாப்பிட வைக்காமல் அனுப்ப முடியுமா? இந்த சமயங்களில் என் கணவர் வாசு சரவணபவன், அஞ்சப்பர், மெக்டொனால்ட்ஸ் என்று வெளுத்துக் கட்டிக்கொண்டிருந்தார். எனக்கும் வாங்கிக் கொண்டுவந்து விடுவார் (அவரு ரொம்ப நல்லவரு). பேசாம அப்புவுக்கும் ஏதாவது ஆர்டர் பண்ணிடலாம் என்றார். அதெல்லாம் முடியாது, நான் தான் சமைப்பேன் என்று களம் புகுந்தேன். குக்கரைத் தூக்க முடியவில்லை. காய்கறிகளைச் சரியான அளவில் கட் பண்ண முடியவில்லை. சர்வ் பண்ண முடியவில்லை. வாசு சொன்னதையே கேட்டிருக்கலாம் என நினைத்தேன். ஏன்க்கா வாத்து மாதிரி நடக்குறீங்க என்றான் என்னருமை சகோதரன் நான் வலியைப் பொறுத்துக் கொண்டு ஒரு டைப்பாக நடப்பதைப் பார்த்து. என் மகன் குள்ள குள்ள வாத்து என்று situatuation rhymes பாடத் துவங்கினான். எப்படியோ சாப்பாட்டு வேளையைச் சமாளித்தோம். கட்டாயமா டாக்டர்கிட்ட போயே ஆகணும் என்றார் வாசு. அதான் அப்டி தான் வலிக்கும்னு பப்லு சொல்லிட்டான்ல என்றேன். கடுமையாக என்னை முறைத்தார். சரி வுடு, டாக்டர்கிட்ட போய்டுவோம் என்றேன்.
ஹாஸ்பிட்டல் வந்தாயிற்று. டாக்டர் நான் சொல்வதைப் பொறுமையாக கேட்டார். ஃபீவர் சரியாகி 2 வாரம் ஆகுதா? ஆமா டாக்டர். பாதம், ankleலாம் வலிக்குமே நடக்க முடியாதே? ஆமா டாக்டர். விரல்லாம் வலிக்குமே pen அக் கூடத் தூக்க முடியாதே? ஆமா டாக்டர் என்றேன் enthuவாக. டாக்டர் எப்டி கண்டுபிடிக்கிறார் பாத்தியா என்று கண்களாலேயே கேட்டார் வாசு. எனக்கு கூட ஃபீவர் இப்பத்தான் சரியாச்சு. பாருங்க பேனாவப் பிடிச்சு prescription கூட எழுத முடியல. ஒரு 2 மாசத்துக்கு அப்டி தான் வலிக்கும். ஒண்ணும் பண்ண முடியாது. Rs.150 ஃபீஸ். முன்னாடி pay பண்ணிருங்க என்றார் டாக்டர். அஃப்கோர்ஸ் prescription ஒண்ணும் எழுதல. பாவம் டாக்டர். இப்ப தாங்க fever சரியாயிருக்கு. என்ன கொடுமை வேதாச்சலம்???!! (டாக்டர் பேரு வேதாச்சலம்) - இதத்தான 5th std பப்லுவும் சொன்னான்

Friday, September 3, 2010

புத்தகப் பரிந்துரை

25 வருடங்களுக்கு முன், என் சிறு வயதில் தொலைக்காட்சி ஒரு ஆச்சரியமான விஷயம். எங்கள் தெருவில் 2 வீடுகளில் மட்டுமே தொலைக்காட்சி இருந்தது. எதிர்த்த வீட்டு சிங்கப்பூர் முஸ்லிம் பாய் மற்றும் ஒரு செட்டியார் வீடு. வெளியே ஆடிக் களித்து வீடு திரும்பும் பிள்ளைகள் வீட்டில் புத்தகங்களையே பொழுதுபோக்கிற்கு நம்பி இருந்தோம். அப்படித் துவங்கிய வாசிக்கும் பழக்கம் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வெவ்வேறு பருவங்களில் வெவ்வேறு வகையான புத்தகங்கள்பிடித்திருந்தன, வழிநடத்தின. அவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
6 வயதிலிருந்து - 12 வயது வரை
பூந்தளிர் : இந்தப் புத்தகம் வாரமொருமுறை வந்து கொண்டிருந்தது. காக்கை காளி, கபீஷ் குரங்கு, மதியூகி மந்திரி, சுப்பாண்டி, வேட்டைக்கார வேம்பு, ஹரீஷ், சிறுவர் மலரில் பலமுக மன்னன் ஜோ இந்தக் கதாபாத்திரங்கள் மனதைக் கொள்ளை கொண்டு சென்றன. கோகுலத்தின் 16 பக்க நடுப்பக்க வண்ணக்கதை, ஃபேமஸ் ஆனவர்கள் எழுதிய 'என் குழந்தைப் பருவம்', பின்னர் அம்புலிமாமா, ரத்னபாலா, பாலமித்ரா, ராணி காமிக்ஸ், அமர்சித்திரக்கதை etc, etc. ஒரு விதத்தில் என் அப்பாவின் அகால மரணம் ஏற்படுத்திய இழப்பின் வலியை இப்புத்தகங்கள் மூலம் மறைத்துக் கொள்ள முயன்றேன் என நினைக்கிறேன்.

பின்னர் டீன் ஏஜில் மில்ஸ் & பூன்ஸ் நாவல்களும், ரமணிச்சந்திரன் நாவல்களில் வரும் கிரேக்க கடவுளை ஒத்த தோற்றத்தையுடைய கதாநாயகனும், குடும்பப்பாங்கான கதாநாயகியும், அவர்களின் காதலும் மனதைக் கவர்ந்தன. இச்சமயத்தில் Kahlil Gibranன் The broken wings என்ற புத்தகம் வாசிக்கக்கிடைத்தது. என்ன ஒரு அருமையான வாசிப்பனுபவம். இது கிப்ரான் 18 வயது இளைஞனாக இருந்தபோது சல்மா என்னும் இளம்பெண்ணோடு ஏற்பட்ட அவருடைய முதல் காதல் பற்றியது.

" In every young man's life there is a Selma who appears to him suddenly in the spring of life and transforms his solitude into happy moments" - ஒவ்வொரு இளைஞனின் வாழ்விலும் ஒரு சல்மா ஒரு வசந்த காலத்தில் திடீரெனத் தோன்றி அவனுடைய தனிமையை, இனிமையான கணங்களாக மாற்றுகிறாள். அப்படி ஒருத்தி தோன்றுவதற்கு முன்னான தனிமையைப் பின்வருமாறு வர்ணிக்கிறார்.

"Solitude has soft, silky hands, but with strong fingers it grasps the heart and makes it ache with sorrow" - தனிமை மென்மையான, பட்டுக்கரங்களைக் கொண்டிருக்கிறது. ஆனால் அது தனது வலிமையான விரலுகளைக் கொண்டு இதயத்தைப் பற்றி அதனைத் துயரத்தால் வலி கொள்ளச் செய்கிறது. நாம் இதே போன்றதொரு தனிமையை நிச்சயம் கடந்து வந்திருப்போம். ஒரு கிப்ரனோ, சல்மாவோ நம்முடைய வசந்த காலத்தில் தோன்றியிருக்கக் கூடும். இதில் சொல்லப்பட்ட காதல் படிக்கும் எவர் மனதையும் மயக்கியிருக்கும். நான் மட்டும் விரிவிலக்கா?

மற்றொரு புத்தகம் மாக்ஸிம் கார்க்கியின் தாய். இந்தப் புத்தகத்தில் வரும் தாய் கதாபாத்திரம் எந்த அளவு என்னை இம்ப்ரஸ் செய்ததோ அதே அளவு அதில் வரும் பாவெல், அந்திரேயாவின் நட்பு. இந்த இரு நண்பர்களிடையே இருந்த நட்பின் மேன்மை - நாவலில் இடம் பெறும் ஒரு வரி "நண்பர்கள் இருவரும் ஒருவரையொருவர் கட்டித் தழுவினர். அங்கே நட்பு ஈருயிரும் ஓருடலுமாகப் பிரகாசித்தது. " இங்கே என் தோழியைப் பற்றி சொல்ல நினைக்கிறேன் - கல்லூரியில் பெண்கள் எப்போதும் தங்கள் தகப்பனாரின் பெருமையைப் பேசுவதில் பெருத்த ஆர்வம் கொண்டிருப்பர். என் தோழி தன் வீட்டில் ஒரே பெண். ரொம்ப செல்லம். அவள் ஒரு முறை கூட தன் அப்பாவைப் பற்றி பேசி நான் கேட்டதில்லை. நான் அவளிடம் கேட்டேன் ' நீ ஏன் உங்கப்பாவப் பத்தி எதுவும் பேச மாட்டேங்குற?' அவள் என்னைத் தட்டிக் கொடுத்து மெலிதாகப் புன்னகைத்தாள். ஒரு நொடியில் எனக்குப் புரிந்தது. என் அப்பாவை நான் நினைத்து ஏங்கி விடக்கூடாது என்ற கரிசனம். நண்பர்களே நிச்சயம் அங்கே நட்பு ஈருடல் ஓருயிராகப் பிரகாசித்தது.

பாரதியின் கவிதைகள் மனதிற்கு வலிமையைக் கொடுத்தன. பஞ்சுக்கு நேர் பல துன்பங்களாம், இவள் பார்வைக்கு நேர் பெரும் தீ போன்ற வரிகள் சக்தியைக் குவித்தன. ஜெயகாந்தனின் நாவல்கள் லட்சிய வெறியை ஏற்படுத்தின.

இது ஒரு பருவம். Infatuation stage தாண்டியானது. தோழி அமெரிக்காவில் செட்டிலாகி வருடத்திற்கு ஒரு முறை ஃபோன் என்றாகி விட்டது. ஜெயகாந்தன் வாழ்க்கையோடும், அரசோடும் செய்து கொண்ட compromiseகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தின. வைரமுத்துவின் வார்த்தை ஜாலங்களில் ஆவல் குறைந்தது.

பின்னர் படித்த சுந்தரராமசாமியின் 'குழந்தைகள், பெண்கள், ஆண்கள்', பிரபஞ்சனின் வானம் வசப்படும் , மேலாண்மை பொன்னுச்சாமியின் முற்றுகை, டால்ஸ்டாயின் Anna Karenina உள்ளிட்ட நாவல்கள் வேறொரு உலகத்தைக் காட்டின. குடும் பம் என்னும் அழகான அமைப்பு, மனிதத்துவத்தின் மேன்மை இவை குறித்து இந்நாவல்கள் பேசின.

Anna Karenina வின் ஆரம்ப வரி -"All happy families are the same. the unhappy families are unhappy in their own way" . அதாவது அனைத்து சந்தோஷமான குடும்பங்களும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. சந்தோஷமற்ற குடும்பங்கள் தத்தம் வழிகளில் சந்தோஷமற்றிருக்கின்றனர். ஆம் சந்தோஷமான குடும்பங்கள் இப்படித்தான் சந்தோஷமாக இருக்கின்றன - எந்தக் குடும்பத்தில், குடும்பத் தலைவி, கணவனிடம் " உன் காரியம் யாவிலும் நான் கை கொடுப்பேன். உலகை ஜெயித்து வா. உன் வெற்றி தான், என் வெற்றி. நீ காரியங்கள் ஆற்றத் தவறினால் நான் நெறிப்படுத்துவேன். இக்குடும்பம் உன்னைத் தாங்கும்" என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறாளோ, எந்தக் கணவன் தன் மனைவியிடம் "நீயே இக்குடும்பத்தின் ஆணிவேர். நீ இருக்கிறாய் என்ற தைரியத்தில் , உன்னை மையமாக வைத்து தான் நான் இயங்குகிறேன்." என்று தன் மனைவியைப் போற்றுகிறானோ அந்தக் குடும்பமே இனிமையாய் விளங்குகிறது. சுராவின் கு, பெ, ஆணில் வரும் SRS , தன் மனைவி லஷ்மிதான் தன் பலம் என நினைக்கிறார். மாறாக கணவன், மனைவி பரஸ்பரம் ஒருவர் மேலொருவர் மரியாதை இல்லாமல் இருக்கும் சாமுவின் குடும்பம் சீரழிகிறது. மே.பொ வின் கதைகளில் வரும் குடும்பத்தலைவி, தலைவன் மேல் அன்பு செலுத்தி நெறிப்படுத்துகிறாள். வானம் வசப்படுமின் ஆனந்தரங்கப்பிள்ளை பெரிய துபாஷ். அவருக்கும் தன் அரசியல் முடிவுகள் குறித்து தன் மனைவி என்ன நினைக்கிறார் என்பது முக்கியமாக இருந்திருக்கிறது. இந்த mutual respect தான் அன்பிற்கும் காதலுக்கும் அடிப்படை.

நட்பு, காதல், லட்சியம் அனைத்தையும் தாண்டி குடும்பமே ஒருவனுக்குத் தேவையான சகலத்தையும் அளிக்கிறது. I need your opinion on this friends. Also share the books that u enjoyed reading

Thursday, September 2, 2010

விஜய் படம்

தோழர் ரமேஷ், பொழுது போவதற்கு வழி கேட்டால் நானே போவதற்கு வழி சொல்கிறீர்களே??!! இது நியாயமா? விஜய் படம் பார்ப்பதற்கு மனதில் தெம்பில்லை

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes