Tuesday, April 30, 2013

விஜய் டிவியில் கமல் சொன்ன அறம்

விஜய் டிவி நீவெஒகோ (இங்கிலிஷ்ல மட்டும் தான் கேபிசியா? நாங்களும் சுருக்குவோம்ல) ஷோவில் கமல் கலந்து கொண்ட நிகழ்ச்சி வழக்கம்போல் கான்ட்ரவர்ஸியில் சிக்கிக்கொண்டுள்ளது - ஆனாலும் ஷோவில் பெண்கள் கொஞ்சம் ஓவராகத்தான் செய்தார்கள். கமல் அதில் ஜெயமோகன் அவர்களின் அறம் என்ற புத்தகத்தைப்பற்றி தெரிவித்தார். கண்களில் நீர்மல்க படித்த ஒரு புத்தகம் என்றார். உடனே வாங்கினேன் (டயல்ஃபார்எபுக் மிகச்சிறப்பாகச் செயல்படுகின்றனர்). உண்மையில் கரைந்து போனேன்.

பொதுவாக இப்போதைய பிரபல எழுத்தாளர்கள் சாருநிவேதிதா,எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன் போன்றோரின் எழுத்துக்கள் என்னைக் கவரவில்லை, அனேக எழுத்துக்கள் எனக்குப் புரியவும் இல்லை.
 தேவனும் அசுரனும் கலந்தவன் மனிதன். நம் அன்றாட வாழ்க்கையில் ஒரு சிறிய உரசலிலும் நம்முள் இருக்கும் அசுரன் தலை காட்டி விடுகிறான். கோபம், பொறாமை, கீழான இச்சைகள், மனக்கசப்பு இத்தியாதிகள். ஆனால் நம்முள் இருக்கும் தேவனை வெளிக்கொணர பகீரதப்பிரயத்தனம் செய்யவேண்டியுள்ளது. இங்குதான் பல்வேறு கலை வடிவங்களும் மனிதனுக்குத் துணைபுரிகின்றன. இசையும், இலக்கியமும் இன்னபிறவும் மனிதனுள் இருக்கும் தேவனை, அவனுக்கும், அவன் சுற்றத்தாருக்கும் புலப்படுத்துகின்றன. ஒரு நல்ல இலக்கியம் நிச்சயம் இவ்வேலையைச் செய்யும்.
 ஆனால் சாருநிவேதிதாவின் ஒரு ஃபேமஸ் நாவல் என்னைப்பொறுத்தவரை ஏற்கனேவே விளிம்பில் இருக்கும் மனிதனை இன்னும் கீழ்மைப்படுத்துவதாக இருந்தது. அதே போல் மிகப்பிரபலமான ராமகிருஷ்ணனின் உபபாண்டவத்தை வாசிக்க முயற்சித்தேன். தீம் மிக நல்ல தீம். ஆனால் அவர் மொழிநடை எனக்குச்சரிப்பட்டு வரவில்லை. இதே போன்றதொரு தீமில் பிரபஞ்சனின் மிக அற்புதமான படைப்பு ஒன்றைப் படித்திருக்கிறேன். அந்த வாசிப்பில் கிடைத்த சுகம், மத்தியான வெயிலில் ஆர்ட் பிலிம் பார்ப்பது போன்ற உணர்வைத்தந்த உபபாண்டவத்தில் இல்லை. 
சரி வயதாகிவிட்டது. புதிய எழுத்தாளர்களின் (எனக்கு) நடையைப் பழக்கப்படுத்திக்கொள்வது சாத்தியமில்லை என்ற முடிவுக்கு நான் வந்த வேளையில், கமல் அறத்தைப் பற்றி சொன்னார். வாங்குவோம் - பிடித்தால் படிப்போம், இல்லை என்றால் விட்டுவிடுவோம் என்ற முடிவோடு ஆர்டர் செய்தேன்.
அறம் - உண்மையில் அனேக இடங்களில் புத்தகத்தின் எழுத்துக்களைக் கண்ணீர் அசைத்தது. மானுடத்தின் மேன்மையை உரக்கச்சொன்ன புத்தகம். மனத்தின் கரைகளைக் கழுவி கண்ணீராக வெளியேற்றியது. நான் வாசித்து வாசித்து பிரமித்த பிரபஞ்சனின் இன்னொரு வடிவம் ஜெயமோகனாக வெளிப்பட்டு நின்றது. சோற்றுக்கணக்கு, யானை டாக்டர் - இரண்டும் மிகப் பிரமாதம்.
 தேடிச்சோறு நிதம் தின்று
 பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பம் மிகவுழன்று,
 பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவம் எய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே நானும்
வீழ்வேன் என நினைத்தாயோ

என்று காலத்துக்குச் சவால் விட்ட, வெளியில் வராத மாமனிதர்கள் இப்புத்தகத்தில் உலாவினர். அனேகர் உண்மை மாந்தர்கள். வாய்ப்புக்கிடைத்தால் கட்டாயம் படியுங்கள். இல்லையென்றால் வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு படியுங்கள்.

Friday, April 26, 2013

அமெரிக்க H1B விசா வாங்க யாரை அணுகுவது?

ஹெ1பி விசா இந்த வருடம் குலுக்கல் முறையில் கொடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனங்கள் இவ்விசாவிற்கான விதிமுறைகளைத் தளர்த்த வேண்டும் என்று அந்நாட்டு அரசாங்கத்திடம் வலியுறுத்திக்கொண்டிருக்கின்றன. ஆனால் மன்னித்துக்கொள்ளுங்கள் நண்பர்களே. நான் விசா வாங்க யாரை அணுகுவது என்பதைப்பற்றி இப்பதிவில் பேசப்போவதில்லை. மாறாக ஏன் விசா வாங்க வேண்டும் என்றே பேசப்போகிறேன்.
 இப்போதும் நம் இளைய சமுதாயம், அமெரிக்காவுக்குப்போய் சம்பாதிப்பதுதான் லட்சியம் எனவும், அங்கு போய் சம்பாதித்தவர்கள் தான் வாழ்க்கையில் வென்றவர்கள் என்றும் நினைக்கின்றனர். இதைத்தான் பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு வலியுறுத்துகின்றனர். பொருளாதார ரீதியாகப் பெறும் வெற்றிதான் வெற்றியா? இல்லை - நிச்சயமாக இல்லை.ஆனால் துரதிர்ஷடவசமாக இக்கருத்துக்கு வலிவூட்டும் விதமான ஒரு ஐடியலிஸ்ட்டிக் மனிதனை அருகில் பார்க்கக்கூடிய வாய்ப்பு இன்றைய பெரும்பாலான இளைஞர்களுக்கு இல்லை. கலெக்டர் ஆபிஸில் லட்சலட்சமாக சம்பளமாகவும் கிம்பளமாகவும் பெரும் வாய்ப்பை த் தரும் வேலையை விட்டுவிட்டு அரசு பள்ளிக்கூட ஆசிரியராக, தன் சம்பளத்தில் ஏழை மாணவர்களுக்கு சீருடை வாங்கித்தரும் என் ஆசிரியரையும், தன் வருமானம் தன் குடும்பத்துச்செலவுக்கு மிக டைட்டாக இருந்த போதிலும், ஏழை மாணவிகளுக்கு எந்த ஃபீஸூம் வாங்காமல் ட்யூஷன் எடுத்த என் தாயாரையும் விட வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் வேறு யாராக இருக்க முடியும்?
குடும்பச்செலவுகளைச் சமாளிக்கும் அளவுக்கான பணம், தான் இருக்கும் இடத்தில் தன்னைச் சுற்றி இருப்பவர்களின் மேல் கரிசனம், பணம் மட்டுமே வாழ்க்கை, பணம் சம்பாதிப்பது ஒன்றே குறிக்கோள் என்றில்லாமல் பணத்திற்கு எவ்வளவு மதிப்பு கொடுக்க வேண்டுமோ அதை மட்டுமே கொடுத்து, தேவைப்படுபவர்களுக்குத் தன்னால் இயன்ற பணத்தைக்கொடுத்து வாழ்வதே வெற்றிகரமான வாழ்க்கை. செழுங்கிளையை எவன் தாங்குகின்றானோ அவனே செல்வந்தன்.

Thursday, April 18, 2013

நீங்கள் சமீபத்தில் திருமணம் செய்து கொள்ள இருக்கும் இளைஞரா - இதைப் படியுங்கள் முதலில்

     முதலில் உங்கள் திருமண வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள். எப்படியும் உங்களுக்குச் சமமாகப் படித்த, வேலை பார்க்கும் பெண்ணைத்தான் தேர்ந்தெடுப்பீர்கள். சமீபத்தில் நான் பார்த்த வரை, அழகிய தோற்றத்திற்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுத்து மனைவியைத் தேர்ந்தெடுப்பதும் நடக்கிறது. தவறில்லை - ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு ஆசை, கனவு.
ஆனால் பெண்களின் உடலியல் கூறுகள் பற்றிய சில அறிவியல்பூர்வமான தகவல்களையும், பெண்களின் மனவியல் பற்றியும் சில தகவல்களை அறிந்து கொள்வது ஒவ்வொரு ஆணுக்கும் அவசியம்.

பார்ப்பதற்குக் குடும்பப்பாங்கா இருக்கணும் என்று நீங்கள் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்த பெண் பார்ப்பதற்கு சினேகா போலோ அல்லது மவுன ராகம் ரேவதி போலவோ இருக்கலாம். ஆனால் மவுனராகத்தில் ரேவதி சொல்வது - எனக்கு ரொம்ப பிடிவாதம் உண்டு, முன்கோபம் உண்டு,சொன்ன பேச்சு கேட்கமாட்டேன் - இதுவே நிஜம். சினேகா போல் சிரித்துக்கொண்டே நீங்கள் சொன்னதெற்கெல்லாம் சரி சொல்வாள் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். விஜய் டிவி நீயா நானாவில் பெண்கள் வன்மம் வைத்து பழி வாங்குவது குறித்துப்பேசிய போது ஆண்கள் அதிர்ந்து விட்டனர். எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் இது கூடவா ஆண்களுக்குத் தெரியாது என்பதுதான். பெண்களின் வன்மம் குரூரமானது. அவர்கள் கோல்ட் பிளட்டட் ஆக எளிதில் செயல்படுவார்கள் . பெண்கள் மிகவும் மென்மையானவர்கள். அவர்களை நம் இ\ஷ்டத்துக்கு வளைத்துக்கொள்ளலாம் என்று நினைப்பவர்கள் - உஷார்.

இன்னொரு முக்கியமான விஷயம் - நீங்கள் செய்த, சொன்ன விஷயத்தை ஒரு நாள் சாதாரணமாக எடுத்துக்கொண்டவர்கள் வேறொரு நாள் அதே போன்ற ஒரு விஷயத்துக்காக சண்டையிடலாம். குழம்பிவிடாதீர்கள்.பெண்களுக்கு பி.எம்.எஸ் என்று ஒரு பிரச்சினை உண்டு. இது மாதா மாதம் அவர்களின் உடல் நலம், மன நலம் இரண்டையுமே பாதிக்கிறது. பெண்களின் பீரீயட்ஸ் நாட்களுக்கு 4 நாட்கள் முன்பிருந்தே அவர்களுக்கு தீடீர்க்கோபம், திடீர் அழுகை, டிப்ரஷன் போன்றவை வர ஆரம்பிக்கின்றன. இது அனேக ஆண்களுக்குத்தெரிவது இல்லை. ஏன் காரணமில்லாம அழறா? பொம்பளங்க மனச புரிஞ்சுக்க முடியாது - என்று பத்தாம் பசலித்தனமாக யோசிக்காதீர்கள். இது போன்ற சமயங்களில் அவர்களை சமைக்கவோ, வேறு வேலைகள் செய்யவோ வற்புறுத்தாதீர்கள். வெளியே பார்ப்பதற்கு அவர்கள் நலமாய் இருப்பது போல் தான் உங்களுக்குத்தெரியும். ஆனால் அவர்களுக்குள் உடல் மன ரீதியாகப் பிரளயம்தான் நடந்து கொண்டிருக்கும். இது போன்ற சமயங்களில் அவர்களுக்கு நீங்கள் செய்யும் ஒவ்வொரு சின்ன உதவியும், உங்கள் மீதான அன்பையும், காதலையும், மரியாதையையும் பன்மடங்கு அதிகரிக்கும். மாறாக உங்களது சிறிய உதாசீனமும் உங்கள் மேல் வெறுப்பை விஷவிருட்சம் போல் வளர்க்கும். ஏற்கனவே நான் சொன்ன பெண்களின் வன்மத்தை நீனைவில் கொள்க. 
தற்போதைய பெண்கள் உங்கள் அம்மாக்கள் போல் கிடையாது. பொருளாதார ரீதியாக சப்போர்ட் பண்ணுவதிலும், குழந்தைகளை அறிவுச்சுடராக வளர்ப்பதிலும் உங்கள் அம்மா வை விட உங்கள் மனைவி பன்மடங்கு உயர்ந்து இருக்கப்போகிறாள் - அவளின் படிப்பு மற்றும் எக்ஸ்போஷர் காரணமாக. அதே நேரம் உங்களின் அர்த்தமற்ற அடக்குமுறைகளை ரிஜக்ட் செய்வதிலும் அவள் உங்கள் அம்மாவிடமிருந்து வேறுபடத்தான் போகிறாள். 

Friday, April 12, 2013

பல்கலைக்கழகத் துணைவேந்தரின் துணிச்சல்

மேற்கு வங்கத்தில் Students' Federation of India வின் தலைவர் 22 வயது சுதிப்தா குப்தா போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்தார். இம்மரணத்தில் மர்மம் இருப்பதாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனையொட்டி மேற்கு வங்க நிதியமைச்சர் கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்பினால் தாக்கப்பட்டார். இதற்கு பதிலடி தரும் விதமாக திரிணமூல் காங்கிரஸ் கொடியை ஏந்திய சிலர் பிரசிடன்சி பல்கலைக்கழக வளாகத்தினுள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கு பயிலும் மாணவிகளைப் பாலியல் பலாத்காரம் செய்யப்போவதாக மிரட்டியுள்ளனர்.

இப்படி ஒரு பதட்டமான சூழ்நிலையில், அப்பல்கலையின் துணைவேந்தர் மாளபிகா சர்க்கார் அளித்துள்ள பேட்டி எனக்கு மிகுந்த ஆச்சரியத்தைத் தருகிறது. அவர் மீடியாக்களில் தெளிவாக நடந்ததை அப்படியே தெரிவித்துள்ளார். கையில் கட்சிக்கொடி ஏந்திய குண்டர்கள், பல்கலைக்கழகத்தின் லேபுகள், பிற பொருட்களைச் சேதப்படுத்தியிருக்கின்றனர் என்றார். அவர்கள் கட்சிக்காரர்கள் தானா அல்லது வேறு யாராவது கட்சியைக் களங்கப்படுத்துவதற்காக கட்சிக்கொடியைக் கையில் வைத்துக்கொண்டு அப்படிச் செய்தார்களா என்று நிருபர் எடுத்துக்கொடுத்த லீடுக்கு வளவள கொழகொழ பதிலைச் சொல்லாமல் அதைத் தீர்மானிக்க வேண்டியது காவல்துறை என்றார் கம்பீரமாக.
இத்துணைவேந்தரை நியமித்தது மம்தா பானர்ஜி.பேஸ்புக் கார்ட்டூனுக்கு லைக் கொடுத்ததற்காக கைது செய்யப்படுவது வங்கத்தில் புதிதல்ல. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தான் பார்த்ததை, தான் அநியாயம் என்று எண்ணுவதைத் தைரியமாக எந்தவித காம்ப்ரமைஸூம் இல்லாமல் எடுத்துச்சொன்ன இப்பெண்மணியின் நெஞ்சுரமும், நேர்மைத்திறமும் என்னை வியப்பிலாழ்த்துகிறது. நாம் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ விதமான அபத்தங்களையும்,
 மேலிடத்தில் இருப்பவர்களின் அர்த்தமற்ற கோபங்களையும், செயல்களையும் - சர்வைவல் பிரச்சினை என்று கூறிக்கொண்டு மென்று முழுங்கிக் கொண்டு , சகிக்க முடியாமல் சகித்துக்கொண்டு சென்று கொண்டிருக்கிறோம். ஏன் நம் மாநிலத்திலேயே கிட்டத்தட்ட 160 வருட பாரம்பரியம் கொண்ட ஒரு பெரும் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஒருவர் தான் பேசும் அனைத்து மேடைகளிலும், தான் சார்ந்துள்ள ஒரு கட்சித்தலைவரையும், அவர் குடும்பத்தாரையும் காது கூசும் அளவிற்குப் புகழ்ந்து தன்னை அவர் காலடியில் அமர்ந்திருப்பேன் என்று கூறித் தரைமட்டமாகத் தாழ்த்திக்கொண்ட உரையை எவ்வளவோ முறை கேட்டிருக்கிறோம். அவரின் இத்தகைய `தன்னடக்க` பேச்சை விகடன் கூட சிறிய எள்ளலோடு வெளியிட்டிருந்தது.
     இப்படிப்பட்ட அடிவருடித்தனம் இல்லாமல், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் கொண்ட உயர்திரு.மாளபிகா சர்க்கார் அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட். We admire you Dear Madam

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes