Thursday, May 31, 2012

பாலாஜிசக்திவேலை வறுத்தெடுத்த பாக்யராஜ் - காரணம் என்ன?

வழக்கு எண் 18 9 திரைப்படத்தின் வெற்றிவிழா மற்றும் பாலாஜிசக்திவேலுக்கான பாராட்டுவிழா சமீபத்தில் நடைபெற்றது. இதற்கு சிறப்பு விருந்தினராக பாக்யராஜ் அழைக்கப்பட்டிருந்திருக்கிறார். பேசுவதற்காக மைக்கைப் பிடித்த பாக்யராஜ், வழக்குஎண் திரைப்படத்தில் இந்தக்காட்சி சரியில்லை, அந்தக்காட்சியில் லாஜிக் இல்லை என்று சகட்டுமேனிக்குக் குறை சொல்லித் தள்ளி இருக்கிறார். பாராட்டி உரையாற்றவேண்டியவர் இப்படி காய்ச்ச, படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமி உட்பட மேடையிலிருந்த அனைவரும் சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் நெளிந்திருக்கின்றனர்.
பாராட்டுவிழாவில் விமர்சனம் செய்யவேண்டிய அவசியமென்ன? படம் குறைகள் நிறைந்ததாக அவருக்குத் தோன்றியிருந்தால் தலைமையேற்க முதலிலேயே நாகரிகமாக மறுத்திருக்கலாமே.
ஆக்சுவலி காதல் திரைப்படத்தில் நடிக்க சாந்தனுவைத்தான் முதலில் அப்ரோச் செய்திருக்கிறார் பாலாஜி - இது பாக்யராஜே முன்பு ஒரு பேட்டியில் தெரிவித்திருந்த செய்தி. அருமையான ஒரு திரைப்படத்தில் அறிமுகமாயிருந்திருக்க வேண்டிய தன் மகன், இன்னும் திரையுலகில் ஒரு இடம் பெற தடுமாறிக்கொண்டிருப்பதால் ஏற்பட்ட சலிப்பு, கோபம் இவையெல்லாம் பாலாஜி மேல் திரும்பியிருக்கும் என்று நினைக்கிறேன். பிள்ளை பாசம் கண்ணை மறைத்து விட்டது இந்த திரைக்கதை மன்னனுக்கு. கூல் மிஸ்டர் பாக்யராஜ் - உங்கள் மகனும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Monday, May 28, 2012

மனைவி சொன்னதைக் கேட்டாலும் பிரச்சனை கேட்காவிட்டாலும் பிரச்சனை - தவிக்கும் தனுஷ்

3 படம் ஆரம்பித்ததிலிருந்து செய்திகளில் அடிபட்டுக்கொண்டே இருக்கிறது. கொலவெறியின் மெகா ஹிட், படம் பிரமாண்ட ப்ளாப், கஸ்தூரி ராஜா- நட்டி பிரச்சினை, ரஜினியிடம் நஷ்டத்தைத் திரும்பக்கேட்டது மற்றும் அனைத்திலும் ஹைலைட்டாக தனுஷ் - ஸ்ருதி கெமிஸ்ட்ரி என நாளொரு செய்தியும், பொழுதொரு பிரச்சனையுமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
  கஸ்தூரி ராஜா ஒரு பேட்டியில், தனுஷ் ஐஸ்வர்யா இடையே பிரச்சனை என்பது உண்மைதான். எல்லா கணவன் மனைவியிடையே இருக்கும் பிரச்சனை போல தான் இதுவும். தனுஷ் ஸ்ருதியோடு மிகவும் நெருக்கமாக நடித்தது ஐஸ்வர்யாவுக்கு வருத்தத்தைத் தந்தது என்கிறார்.
            இதில் என் சந்தேகம் என்னவென்றால் - படத்தின் இயக்குனர் சொன்னதை நடிகர் செய்திருக்கிறார். அப்புறம் இயக்குனரே ஏன் இப்படி நடித்தாய் என்றால் நடிகர் என்ன செய்வார் பாவம்.
          ஐஸ்வர்யா அவர்களே தாங்கள் சொன்னதைத் தானே தங்கள் கணவர் செய்தார். அப்புறம் ஏன் கோபித்துக்கொள்கிறீர்கள்? சொன்னதைக் கேட்டாலும் தப்பு, கேட்காவிட்டாலும் தப்பா?? என்ன கொடுமை சரவணன் இது.

Thursday, May 24, 2012

6 மாதம் அமெரிக்க,ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று திரும்பும் ஆன்சைட் இன்ஜினியர்கள் சீன் போடுவது ஏன்?

சாப்ட்வேர் துறை பரவலான பின்னர் இப்போது வெளிநாடுகளுக்குச் சென்று வருவது என்பது சர்வசாதாரணமாக ஆகி விட்டது. 6 மாதம் ஆன்சைட் போய் வருபவர்கள் கூட - அங்கல்லாம் என்று ஆரம்பித்தால் நிறுத்த மாட்டார்கள். முதலில் இவர்களெல்லாம் மிகவும் ஸ்னாபிஷ், பந்தா விடுகிறார்கள் என்று தான் நினைப்பேன். ஆனால் நிச்சயம் வளர்ந்த நாடுகளின் வாழ்க்கைமுறை ஒழுங்கு நிறைந்ததாக இருக்கிறது. மருத்துவ வசதி, போக்குவரத்து, பிள்ளைகளின் பள்ளி இவைகள் மிகச்சிறப்பாகச் செயல்படுத்தப்படுகின்றன. விதிவிலக்குகளைப் பற்றி இதில் பேசவில்லை. பொதுவான வாழ்க்கைமுறையைப் பற்றியே பேச நினைக்கிறேன்.
 தனிமனித வாழ்க்கை - இங்கே திருமண வாழ்க்கை மிகச்சிறந்ததாக இருக்கிறது. நமக்கு கிடைத்த பிம்பம் என்பது மேற்கத்திய நாடுகளில் வாழ்வோர்  எத்தனை பேருடன் வேண்டுமானாலும் வாழ்வார்கள் - டைவர்ஸ் சாதாரணம் என்பது. உண்மைதான். ஆனால் திருமணம் என்ற பந்தத்துக்குள்ளும் இவர்கள் எளிதில் புகுவதில்லை. பிள்ளைக்கு 20 வயதாகும்போது பெற்றோர் ஒருவரையொருவர் மணம் புரிந்து கொள்வது என்பது சாதாரணம். அப்படிச் செய்துகொள்கிற திருமணத்தைத் தக்க வைத்துக்கொள்ள இவர்கள் மிகுந்த முயற்சியெடுக்கிறார்கள், கவுன்சிலிங போகிறார்கள். அப்படியும் பிரிவு தவிர்க்க முடியாத பட்சத்தில் தெரபிகளுக்குப் போகிறார்கள். பிரிவு அவர்களையும் வருத்துகிறது. நாம் நினைப்பது போல் ஒரு கல்யாணம் இல்லன்னா இன்னொன்னு என்பது போல் இல்லை.
வாழ்க்கைத்துணையை சதா வருத்துவது என்பது இல்லை. பிடிக்கவில்லையா- கவுரவமாக விலகிக்கொள்கிறார்கள். நம் நாட்டில் எப்போதும் abuse பண்ணும் வாழ்க்கைத்துணையோடு தொடர்ந்து மன,உடல் காயங்களோடு கலாச்சாரம் என்ற பெயரில் வாழ்ந்து கொண்டு நாம் யாரை ஏமாற்றிக்கொள்கிறோம்?அப்பாவிடம் எந்நேரமும் திட்டுவாங்கிக்கொண்டு அமைதியாகப்போகும் அம்மா  வழியாக மகளுக்குக் கிடைக்கும் செய்தி - நம்மை யார் அவமதித்தாலும் வாயை மூடிக்கொண்டு போகவேண்டும். இதில் பால் வித்தியாசம் இல்லை. அம்மாவிடம் தினமும் திட்டு வாங்கி அமைதியாகப்போகும் அப்பாக்களும் உண்டு. இவர்களின் பிள்ளைகள் எப்படி ஒரு self esteem உடைய தனிமனிதர்களாக உருவெடுப்பார்கள்?
எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பிரியத்தேவையில்லை. அதே நேரம் வாழ்க்கைத்துணையை இவன்/இவள் நாம் என்ன செய்தாலும் நம்மோடுதானே இருப்பான்/ள் என்ற அலட்சியத்தோடு நடத்துபவர்கள் நம் நாட்டில்தான் உண்டு. அதனால்தான் நாம் தலைமுறை தலைமுறையாக அடிமைகளை மட்டுமே உருவாக்கி வருகிறோம்.
Where the mind is without fear and head is held high
Where knowledge is free 

Where the world has not been broken up into fragments 
By narrow domestic walls 
..........
........
Into that heaven of freedom, my Father, let my country awake 
-Rabindranath Tagore

எங்கே மனம் அச்சமற்றிருக்கிறதோ, தலை நிமிர்ந்து இருக்கிறதோ
எங்கே அறிவு சுதந்திரமாய் இருக்கிறதோ
...........
...........
எந்தையே, அச்சுதந்திர சொர்க்கத்தில் எம் நாட்டை எழச்செய்யும்
- ரவீந்திரநாத் தாகூர்


Tuesday, May 22, 2012

சென்னை - பிரபல சிபிஎஸ்இ பள்ளிகளின் கட்டணங்கள்

இது ஸ்கூல் அட்மிஷன் சீசன். பிரபல பள்ளிகளில் அட்மிஷனுக்காகப் பெற்றோர்கள் அலைமோதிக்கொண்டிருக்கின்றனர். தன் பிள்ளைகளுக்குச் சிறந்ததை வழங்குவதே ஒவ்வொரு பெற்றோரின் ஆவலாக இருக்கிறது. இதற்காக தம் சக்திக்கு உட்பட்டதையும், அப்பாற்பட்டதையும் செய்ய பெற்றோர் சித்தமாக இருக்கின்றனர். மேலும் இன்ன பள்ளியில் என் பிள்ளை படிக்கிறான் என்று கூறிக்கொள்வது ஒரு முக்கியமான ஸ்டேட்டஸ் சிம்பல். பத்மா சேஷாத்திரியில் மூன்றாம் வகுப்பு வரை ஒரு வருடத்திற்கு 1,25,000 ரூபாய், டிஏவியில்ரூ. 40000 , செயின்ட் பிரிட்டோவிலும் இதே ரேன்ஜ்.
என் பிள்ளைகளையும் அனேக வருடங்கள் ஸ்டேட் ரேங்க் எடுக்க வைக்கிற ஒரு பிரபல சிபிஎஸ்இ பள்ளியில் சேர்த்து விட்டு, தற்சமயம் மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் விழித்துக்கொண்டிருக்கிறேன் - காரணம் வொர்க் லோட் மற்றும் படிப்பைத் தவிர வேறெதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமை.
பள்ளிகளும், கல்லூரிகளும் இன்று எதைக் கற்றுத் தருகின்றன? சம்பாதிப்பதற்கான வழியை. இந்த வருடம் ஐஐடி நுழைவுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவன் சொல்கிறான் - கடுமையான போட்டி மற்றவர் மேல் பொறாமையைத் தோற்றுவிக்கிறது - என்று. ஆர்.கே.நாராயணின் ஸ்வாமி அண்ட் பிரண்ட்ஸ் புத்தகம் வெளியாகி உலகப்புகழ் பெற்ற அதே வருடம், மெட்ராஸ் யுனிவர்சிட்டி  அவர் ஆங்கிலத்தேர்வில் தோல்வியுற்றதாக அறிவிக்கிறது. என்ன ஒரு அருமையான கல்விமுறை. 
சக மனிதன் மேல் பொறாமைப்படுவதும் , க்ரியேட்டிவிட்டி என்பது துளியும் இருந்துவிடக்கூடாது என்று மிகக் கவனமாகப் பார்த்துக்கொள்ளுவதுமான கல்விமுறை.
என் பிள்ளைகளுக்கு நான் பின் வருவனவற்றைக் கற்றுத் தர விரும்புகிறேன்.
  • எப்போதும் மனமகிழ்ச்சியுள்ளவர்களாக, கவலைகளற்றவர்களாக இருக்க வேண்டும்.
  • எதையும் தைரியமாக எதிர்கொள்பவர்களாக
  • உடல், மன ஆரோக்கியம் உள்ளவர்களாக
  • மனிதத்தன்மை நிரம்பியவர்களாக, எதிலும் நேர்மை, உண்மையுள்ளவர்களாக
  • வாழ்க்கையைக் கொண்டாடுபவர்களாக இருக்க வேண்டும்
நான் சேர்த்த பள்ளியில் இவை எதையுமே அவர்களுக்குக் கற்றுத் தருவதாக எனக்குத் தெரியவில்லை.தேர்வு பயம், மார்க் பயம் இவை மட்டுமே பிரதானம்.

நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை
நேரேயின் றெனக்குத் தருவாய்
என் முந்தை தீவீனைப் பயன்கள் 
இன்னும் மூளாதழிந்திடல் வேண்டும்
இனி என்னைப் புதியவுயிராக்கி
எனக்கேதுங் கவலையறச்செய்து
மதி தன்னை மிகத் தெளிவு செய்து
என்னையென்றும் சந்தோஷம் கொண்டிருக்கச்செய்வாய்
என்னும் பாரதியின் வரங்கேட்டலில் வருவது போல் மதி தனை மிகத்தெளிவு செய்து, கவலைகள் அறச்செய்து, சந்தோஷம் கொண்டிருக்கச்செய்யும் பள்ளியைத் தேடிக்கொண்டிருக்கிறேன்....................

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes