Friday, November 15, 2013

ஆசிப் ப்ரதர்ஸின் அசத்தல் பிரியாணி

இந்த சனி, ஞாயிறில் தம்பிமார்கள் பாலாவும், கார்த்தியும் குடும்பத்துடன் பெங்களூரிலிருந்து எங்கள் வீட்டுக்கு வந்திருந்தனர். ஞாயிற்றுக்கிழமை ஹோட்டலில் சாப்பிடுவோம் என்று முடிவாகியது. எங்கு சாப்பிடுவது என்ற பேச்சு கிளம்பியது. வாசு ஃபார்ச்சூன் அல்லது பார்பிக்யூ நேஷன் போவோம் என்றார். பாலாவுக்கு 2.30க்கு ட்ரெயின். அதனால் அவன் வீட்டிலிருந்து 1 மணிக்கு கிளம்ப வேண்டும். ஃபார்ச்சூன் எங்கள் வீட்டிலிருந்து கொஞ்சம் தூரம் அதிகம். 1 மணிக்குள் வீடு திரும்ப முடியாது. எனவே அந்த ஆப்ஷன் ட்ராப். அடுத்ததாக பார்பிக்யூ நேஷன். பேரைச் சொன்னவுடன் எங்கள் மகன் எக்சைட் ஆகிவிட்டான். டேபிளிலேயே இருக்கும் க்ரில், பச்சைக்கொடி, சிகப்புக்கொடி என்று அவர்கள் போடும் சீனுக்கு என் மகன் அடிமை ;). ஆனால் அவர்களின் டைமிங்ஸ் எங்களுக்கு செட்டாகவில்லை.
 ஆப்பக்கடைகள், செட்டிநாடு ஹோட்டல்களில் சாப்பிட மனதில் தெம்பில்லை. எனவே ஆசிப் ப்ரதர்ஸ் ஹோட்டலை நான் முன்மொழிந்தேன். கொடூரமாகப் பசித்த ஒரு மாலைப் பொழுதில், பிரியாணி டோர்டெலிவரிக்காக ஒரு பிரபல ஆப்பக்கடைக்குக் கால் செய்யப்போனேன். ஐய்யயோ அந்தக் கடை பிரியாணி நேத்து வச்ச புளிசோறு மாதிரி இருக்கு. எனக்கு வேண்டாம் என்று அலறினாள் என் மகள். மகனும் பலமாக அதை ஆமோதிக்க, கூகுளாண்டவரைச் சரணடைந்தேன் புது ரெஸ்ட்டாரண்ட் கண்டுபிடிக்க. அன்று துவங்கியது எங்கள் வீட்டுக்கு ஆசிப் பிரியாணியின் டோர்டெலிவரி. ஆனால் ஒருமுறைகூட நேரில் செல்லாததால் வாசு கொஞ்சம் தயங்கினார். குறைந்த விலை என்பது அவர் தயக்கத்திற்கான முதல் காரணம். அப்படி இப்படி பேசி சரிக்கட்டி ஒருவழியாகச் சென்றோம்.
மிகச்சாதாரணமான இருக்கைகள், உள் அலங்காரங்கள். பவர் ஆஃப் பாஸிட்டிவ் திங்க்கிங்கைப் பயன்படுத்தி, பாருங்களேன், ஏசி லாம் இருக்கு என்றேன். வாசு பார்த்த பார்வையில் கம்மென்று மெனு கார்டைப் பார்க்கத் திரும்பிவிட்டேன். தனியாக இருக்கும்போது நாம் செய்யத்தயங்கும் வேலைகளைக் கூட்டமாக இருக்கும்போது தாராளமாகச் செய்வோம். அப்படித்தான் வாசு ஸ்ட்டாட்டருக்கு ஆஃப்கன் சிக்கன் ஆர்டர் செய்தார். மேலும் சில்லி ப்ரான், க்ரில்டு சிக்கன் மற்றும் சிக்கன் லாலிபாப் ஆர்டர் செய்து கொண்டோம். மெயின் கோர்ஸுக்கு அவர்கள் கடையில் ஃபேமஸான பிரியாணி மற்றும் ப்ரான் மசாலா. 
முதலில் ஏகப்பட்ட சட்னிகளோடு ஆஃப்கன் சிக்கன் வந்த்து. சிக்கனுக்கு மேல் ஒரு வெண்ணிற லேயர். பார்ப்பதற்கு அவ்வளவு அப்பீலிங்காக இல்லை. வாசுவின் முழியே சரியில்லை. கொஞ்சம் டெரராகத்தான் இருந்தது. ஆளுக்கொரு துண்டை எடுத்து சாப்பிடத்துவங்கினோம். ஒரு கடி - அடேங்கப்பா அப்படியொரு சுவை.ஓரங்களில் லேசாகக் கருகி - அந்த வெண்ணிற லேயர், நன்கு அடிக்கப்பட்ட முட்டையின் வெள்ளைக்கரு. அது சிக்கனின் ருசிக்கு மேலும் சுவை கூட்டிற்று. சட்னியில் ஒரு முக்கு, ஒரு கடி - சுவையென்றால் அது தான் சுவை. க்ரில்டு சிக்கன் சொல்லிக்கொள்ளும்படியாக ஒன்றும் இல்லை. சிக்கன் லாலிபாப்பைத் தோலோடு பொரிக்கிறார்கள். இது வேறு எந்த ரெஸ்ட்டாரண்ட்டிலும் இல்லாதது. இதனால் சிக்கன் வெளியே மொறுமொறுவென்றும் உள்ளே மிருதுவாகவும் இருக்கின்றது. மேலும் தோலினால், கொழுப்பு கொஞ்சம் சிக்கனிலேயே இருக்கிறது. இதுவும் அதன் அசாதாரண ருசிக்கு ஒரு காரணம். ஆனால் இவர்கள் இந்த தோல் டெக்னிக்கை ஓவராகப் பயன்படுத்தி, சூப்பிலும் தோலோடு போடுகின்றனர். அது சகிக்கவில்லை.
அடுத்து வந்தது அவர்களின் மாஸ்டர் பீஸ் பிரியாணி. மெலிதான, நீளமான பாசுமதி அரிசி, மிதமான மசாலா. ப்ரான் மிகச்சரியான பதத்தில் - வேகாமலும் இல்லை, ரப்பர் போலவும் இல்லை. அருமை.
இவை அனைத்திற்கும் 3000க்கும் குறைவான பில். நிறைவான வயிறு, மனதோடு வெளியேறினோம்.

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes