Wednesday, September 15, 2010

சினிமாப் பாடல்கள்

சில சினிமாப் பாடல்களை எப்போது கேட்கும் போதும், அப்பாடலை நான் முதன் முதலில் கேட்க நேர்ந்த நேரத்தின் குறிப்பிட்ட காட்சிகள் மனதிற்குள் நிழற்படமாய் மறுபடி, மறுபடி தோன்றும். அச்சந்தர்ப்பத்தில் நான் இருந்த மனநிலைக்கும் - அது மகிழ்ச்சியோ, சோகமோ - மறுபடியும் செல்ல நேரிடுகிறது. நாங்கள் முன்பிருந்த லைன் வீட்டின்(கிட்டத்தட்ட 10 வீடுகள் ஒரே வரிசையில் இருக்கும். கொடுமைங்க அது) தெரு முனை டீக்கடையில் ரேடியோ இருக்கும். காலையிலேயே விவிதபாரதியின் வர்த்தக ஒளிபரப்பு உச்சஸ்தாயியில் அலறும். 'ஒரு கிளி உருகுது', 'ஓ மானே மானே', 'விக்ரம்' பாடல்களை இப்போது கேட்கும் போதும் அக்கடையில் நாங்கள் வாங்கிச்சுவைத்த வெங்காய பக்கோடாவின் சுவை நாவில் வருகிறது.
சிந்துபைரவி பாடல்கள் பக்கத்து வீட்டு செந்திலக்காவை (அக்கா தான். அவர்களின் முழுப்பெயர் செந்தில் செல்வி) நினைவூட்டும். அந்தப்படம் வந்த புதிது. பாடல்கள் மெகா ஹிட். நான் ஏற்கனவே சொன்னது போல் ரேடியோ டீக்கடையில் மட்டுமே இருக்கும். இந்நிலையில் tape recorder பற்றியெல்லாம் பேசவே முடியாது. இப்படியொரு சூழலில் செந்திலக்கா தன் கல்லூரி தோழியிடம் ஒரு டேப் ரிக்கார்டர் தேத்திக்கொண்டு வந்தார், சிந்து பைரவி காசட்டோடு. 10 வீட்டுப் பிள்ளைகளும் அவர்கள் வீட்டில். பாடறியேன் படிப்பறியேன், தண்ணித்தொட்டி பாடல்களை ரசித்து தள்ளினோம். அக்கா பார்க்காத நேரம் அதைத் தொட்டுப்பார்த்துக்கொள்வோம். நண்பர்களே 36 inch டிவி கொடுக்காத சந்தோஷத்தை அந்த tape recorder அன்று தந்தது.
மை டியர் குட்டிச்சாத்தான் படத்தில் 'பூ வாடை காற்றே' என்றொரு பாடல். இளம் குழந்தைத்தோழர்கள் மகிழ்ந்து கழித்து விளையாடும் காட்சிகளைக் கொண்ட பாடல். இதை இப்போது எங்கும் கேட்கக்கூட முடியவில்லை :( . என் இனிய பள்ளித் தோழிகள் நபீஸா, திலீபா (5th std வரை என்னோடு படித்தவர்கள். )திலீபா இலங்கையிலிருந்து வந்தாள். அவளின் பெயர்க்காரணம் இப்போது தான் எனக்குப் புரிகிறது. Contact மீண்டும் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் ??!! என்னருமை திலீபா எங்கிருக்கிறாய்? . நபீஸாவின் அப்பா சிங்கப்பூரில் கடை வைத்திருந்தார். அவர்களுடைய வீடு பெரிய பங்களா. காம்பவுண்டுக்குள் ஒரு கட்டைச்சுவர் இருக்கும். அந்தப்பாடலில் பிள்ளைகள் சுவரின் மேல் ஏறி நடப்பார்கள். ஃபேனில் அமர்வார்கள். நாங்கள் அதைப்போல் செய்வதாக நினைத்து அந்தக்கட்டைச்சுவரின் மேல் ஏறி ஆடுவோம் - ம் இனிய நாட்கள் அவை.
சோகம் இனி இல்லை பாடல், நாங்கள் NTSE வகுப்புக்கு காலையில் (7 மணி) வகுப்பறைகள் திறக்கக் காத்திருந்த - மரத்தடியில் அமர்ந்து கொண்டு, புல்லின் நுனியில் பனித்துளிகளை உதிர்த்துக்கொண்டு - போது எங்கோ ஒலித்தது. அந்தப்பாடலை இப்போது கேட்கும் போதும் அந்த நுனிப்புல்லின் ஈரம் விரலில் குறுகுறுக்கிறது.
9th std class roomல் அமர்ந்திருந்த போது ஒலித்த 'பூங்காத்து திரும்புமா' பாடலின் 'எனக்கொரு தாய்மடி கிடைக்குமா?' வரி கண்ணீர் உகுக்கச் செய்தது. (அம்மா என்னை 6th லிருந்து ஹாஸ்டலில் விட்டுவிட்டார்கள்)
College I yr ல் இருந்த போது அன்று Sports Day. Physics allied வகுப்பு. groundல் பாட்டு போட ஆரம்பித்து விட்டார்கள். அந்த சத்தத்தில் வகுப்பு முடியவில்லை. அதனால் ஃப்ரி hour விட்டு விட்டார்கள். அந்த எதிர்பாராத ஃப்ரீ hour நிமிடத்தின் சந்தோஷம் இப்போதும் 'ராஜனோடு ராணி வந்து' - சதிலீலாவதி கமல் படம் - பாடலைக் கேட்கும்போது ஏற்படுகிறது.
நாங்கள் இதற்கு முன் இருந்த வீடு ஒரு independent house. பக்கத்து வீட்டில் கட்டட வேலை நடந்து கொண்டிருந்தது. கொத்தனார்கள் எப்போதும் ரேடியோ வைப்பர். எங்கள் வீட்டின் முன் பெரிய தோட்டம் இருக்கும். ராத்திரி நேரம் பூச்சிகள் பயத்தால் பிள்ளைகளை வெளியே விட மாட்டோம். ஒரு நாள் இரவு 8 மணி இருக்கும். என் பெண்ணை வீட்டிற்குள் காணவில்லை. அந்நேரம் அவள் வயது 4. ஆளுக்கு ஒரு பக்கம் தேடினோம். பார்த்தால் கதவு திறந்து இருந்தது. இவள் தோட்டத்தில் நின்று கொண்டு பக்கத்து வீட்டு ரேடியோவில் இருந்து வரும் 'கல்லை மட்டும் கண்டால்' பாட்டை ரசித்துக்கொண்டு நின்றாள். இசையால் ஆகர்ஷிக்கப்படுவதற்கு வயது வரையறை ஏதும் இல்லை போலும். May be இந்தப்பாடலை பின்னொரு நாள் அவள் கேட்கும் போது, தோட்டத்தில் நின்று கொண்டிருந்த தினம் அவளுக்கு நினைவிற்கு வரலாம் :)

2 comments:

லெமூரியன்... said...

படிக்கும் போதே மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது....!
அப்படியே உங்க கூட பயணித்து என்னோட சிறு வயது ,பாடல்களை ரசித்த நினைவுக்குள்
கொண்டு சென்றுவிடீர்கள்.....

\\அக்கா பார்க்காத நேரம் அதைத் தொட்டுப்பார்த்துக்கொள்வோம்......//
தாத்தா வீட்ல பார்த்த வெளிநாடு ரேடியோ....
சிறு வயதில் அப்பாவுடன் உட்கார்ந்து கேட்ட ரெகார்ட் போன்(கிராம போனுக்கு அடுத்த சந்ததி :) )
அதற்க்கப்பரம்......ஏதுமில்லாமல் குழாய் ரேடியோவில் பாட்டு கேட்டது.......
நினைவடுக்குகளுக்குள் சென்று நின்று கொள்கிறது இந்த பதிவு.....

அருமையாய் இருக்கு மாலா...!

மாலா வாசுதேவன் said...

மிக்க நன்றி லெமூரியன். தங்களின் கமெண்ட்ஸ் எனக்கு மகிழ்ச்சியையும் மேலும் எழுதுவதற்கான ஊக்கத்தையும் அளிக்கிறது

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes