Saturday, October 6, 2012

எதிர்பார்ப்பைக் கிளப்பி ஏமாற்றிய தமி்ழ் சினிமா பிரபலங்கள் - 1

ஒன் மூவி வொண்டர், flash in a pan என்றெல்லாம் சொல்வார்களல்லவா - அதைப்போன்று தங்கள் திறமையால் நடிப்பு, இயக்கம், இசைத்துறைகளில் இரண்டு, மூன்று படங்களில் நம்மைத் திரும்பிப்பார்க்க வைத்த பிரபலங்கள் தொடர்ச்சியாக அடுத்தடுத்த படங்களில் நம்மை மிகுந்த ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள். சிலர் திரையுலகிலிருந்து காணாமலே போய்விட்டார்கள். அவர்களில் சிலரைப்பற்றி ஒரு ரவுண்ட் வருவோம்.

முதலில் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா
வாசுதேவநல்லூரில் பிறந்து தன் 31வது வயதில் 1999ம் ஆண்டு வாலி படத்தை இயக்கினார். படம் சூப்பர் டூப்பர் ஹிட். அடுத்த படம் குஷி. வாலி படத்தில் கூட சாலிடான கதை இருந்தது. ஆனால் குஷி படத்தின் துவக்கத்திலேயே இவங்க 2 பேரும் தாங்க லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கப் போறாங்க என்று சொல்லிவிட்டார். எனவே எந்த விதமான திருப்பங்களுக்கும், சஸ்பென்ஸ்களுக்கும் இடமில்லை. திரைக்கதைதான் பேசியாக வேண்டும். இந்நிலையில் மாலை கோர்ப்பது போல் திரைக்கதையைக் கோர்த்து என்ன ஒரு அருமையான வெற்றிப்படத்தைக் கொடுத்தார். திரைக்கதையில் பாக்யராஜுக்கு அடுத்து ஒருவர் கிடைத்துவிட்டார் என்று மிகப்பாஸிட்டிவான ரெவ்யூக்கள். நிகழ்ச்சிகளைக் காட்சிப்படுத்துவதோ, எழுதுவதோ கஷ்டமில்லை. ஆனால் மனவுணர்வுகளைக் காட்சிப்படுத்துவதும், வார்த்தைகளாக்குவதும் மிகக் கடினம்.  அதை சர்வசாதாரணமாக குஷியில் செய்து காட்டினார். இப்படி இவர் இயக்குனராகவே தொடர்ந்திருக்கலாம். கதாநாயகனாக நடிக்கவேண்டும் என்று இவர் எடுத்த முடிவு தவறு என்றே நினைக்கிறேன்.
இருப்பினும் இவர் ஹீரோவாக நடித்த நியூ படம் முதல் நாள் 1 கோடி ரூபாய் வசூலித்ததாம். இது ஒரு பாக்ஸ் ஆபிஸ் சாதனை. அதிலிருந்து துவங்கியது இவருடைய வீழ்ச்சி. இவருடைய டயலாக் டெலிவரி தவிர்க்க முடியாமல் நகைச்சுவை நடிகர் பாண்டுவை நினைவுறுத்துகிறது. கதாநாயகனுக்குரிய பாடி லாங்வேஜ், டயலாக் டெலிவரி இவரிடம் இல்லை.
தன்னை இயக்குனராகவே அடையாளப்படுத்திக்கொண்டு அந்தப்பாதையிலேயே இவர் தொடர்ந்திருக்கலாம். பரவாயில்லை. இட்ஸ் நாட் டூ லேட். வாலி, குஷி போன்ற மிக அருமையான கதை, திரைக்கதை உடைய படங்களை இவர் தருவார் என்று நம்புவோம்.
இன்னும் சில பிரபலங்கள் பற்றி அடுத்தடுத்த பதிவுகளில்..........

Friday, October 5, 2012

ராசிக்கு ஆறாம் இடத்திலிருக்கும் சனிபகவான் அதிர்ஷ்டம் தருவாரா?

ஒவ்வொரு கிரகங்களும் பெயர்ச்சி ஆகும்போது, சனிப்பெயர்ச்சி பலன்கள், குருப்பெயர்ச்சி பலன்கள், ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் என்று பார்த்துத் தள்ளுவது தமிழர்களின் ஒரு பொதுவான குணம். ஏதாவது ஒன்று நடந்து நமக்கு நல்லகாலம் பிறந்துவிடாதா என்று நினைப்பதில் எந்தத் தவறும் இல்லை. நாலாப்பக்கமும் வாழ்க்கை நசுக்கும்போது வெளியேற வழிதேடுவது மனித இயல்பு.

இதைத்தான் நம் பகுத்தறிவு சிங்கம் கருணாநிதியும் செய்திருக்கிறார். குருபகவான் அருள் பெறுவதற்காக மஞ்சள் துண்டு அணிந்தவர், தற்போது கறுப்புக்கு மாறியிருக்கிறார். காரணம், இவர் ரிஷப ராசிக்காரர். ரிஷப ராசிக்கு இப்போது ஆறாமிடத்தில் இருக்கிறார் சனிபகவான். ஜோதிட ரீதியில் இது ஒரு நல்ல அமைப்பாம். கறுப்புச்சட்டை அணிந்தால் ரொம்ப விசேஷமாம்.ஆனால் இதையெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா? அதனால் ஜெயலலிதா மீது பழியைப் போட்டுவிட்டு கறுப்புச்சட்டை.

இது தெரியாமல் தொண்டர் படையும் கறுப்புச்சட்டை அணிந்து கொண்டு ஆயிரம் விளக்குப்பகுதி தொடங்கி எல்லா இடத்திலும் சுற்றிக்கொண்டிருக்கிறது. தொண்டர்களே நீங்கள் என்ன செய்தாலும் தலைவர்தான் நல்லாயிருப்பார். அதனால் வடிவேலு சொன்னது போல் -  கப்பித்தனமா பேசாம புள்ளக்குட்டிய படிக்க வைங்க.

Friday, September 28, 2012

தாண்டவம் படப்பிரச்சினை - அமீர் உள்ளிட்ட 8 இயக்குனர்கள் ராஜினாமா

இயக்குனர் விஜய்யின் தாண்டவம் படத்தின் ஸ்கிரிப்ட் யாருடையது என்ற பிரச்சினை பெரிதாகியுள்ளது. பொன்னுசாமி என்பவர் படத்தின் ஸ்கிரிப்ட் என்னுடையது என்கிறார். அவருடைய சார்பில் வாதாடிய அமீர் - எப்படியாவது பொன்னுசாமிக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்று போராடிப்பார்த்தேன். ஆனால் என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை. பொன்னுசாமிக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்து நான் இயக்குனர் சங்கத்திலிருந்து ராஜினாமா செய்திருக்கிறேன் - என்கிறார்.
          
நாம் செய்த வேலையை யாரோ தான் செய்தது போல் காண்பித்துக்கொள்வது, நாம் செய்த வேலையை அது ஒன்றுமே இல்லாதது போலவும், அந்த வேலை எதற்குமே தேவை இல்லை என்பது போலவும் நடந்து கொண்டு பின்னர் அதையே அவர்கள் பயன்படுத்திக்கொள்வது, என்ன வேலை  செய்திருக்கிறோம் என்பதையே பார்க்காமல் மேம்போக்காக அவமானப்படுத்துவது போன்றவற்றைப் பெரிய மானேஜ்மென்ட் ஸ்கில்லாக, சர்வைவல் திறனாகப் பார்க்கும் போக்கு எக்காலத்திலும் இருக்கிறது. இது ஆறாக்காயத்தை ஏற்படுத்தும். மாங்கு மாங்கென்று வேலை செய்தவன் உட்கார்ந்திருக்க, வாய் மட்டும் பேசத்தெரிந்தவன் அல்லது சமூகத்தில் சில பல பிரிவிலேஜ்களை உடையவன் உச்சத்தில். என்ன நியாயம் இது?
   எனக்கென்னவோ தாண்டவம் உண்மையில் பொன்னுசாமியின் ஸ்கிரிப்ட்டாக இருந்தாலும் அவரால் எதுவும் செய்ய முடியும் என்று தோன்றவில்லை. ஏனெனில் விஜய்யின் அப்பா அழகப்பன் பெரிய தயாரிப்பாளர், தயாரிப்பாளர் கவுன்சிலின் தலைவராக இருந்தவர்.
           நம்மை ஒன்றும் செய்யமுடியாத நிலையில் இருப்பவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்கிறோமோ அதுதான் உண்மையான நாம்.

Thursday, September 27, 2012

விகடன் குழுமத்திலிருந்து புதிய வார இதழ் - விகடன் என்ற பெயர், விகடன் தாத்தா இல்லாமல்

ஆண்டிற்கு ரூ.150 கோடி டேர்ன் ஓவர் இருப்பதாகச் சொல்லப்படும் விகடன், தமிழ்க் குடும்பங்களி்ன் தவிர்க்க முடியாத ஒரு அங்கம். இக்குழுமம் வெளியிட்ட  மாத, வார இதழ்கள் ஏராளம். (அவள் விகடன், நாணயம் விகடன், பசுமை விகடன், சுட்டி விகடன், மோட்டார் விகடன், சக்தி விகடன்). ஆனால் இன்று வரை விகடன் என்ற பெயர் இல்லாமலும், விகடன் தாத்தாவின் படம் இல்லாமலும் ஒரு இதழை இவர்கள் ஆரம்பித்ததில்லை.
இப்போது முதன்முறையாக விகடன் குழுமத்திலிருந்து அக்டோபர் 6 முதல், டைம்பாஸ் என்ற வார இதழ், விகடன் என்ற அடைமொழி இல்லாமலும், விகடன் தாத்தா மாஸ்காட் இல்லாமலும் வர இருக்கிறது. இதன் விலை ரூ.5.
வீட்டுப்பெரியவர்களின் ரெஸ்பான்ஸ்
            நல்ல வேளை. விகடன்ற பேர விட்டுட்டாங்க. எப்பேர்ப்பட்ட சிறுகதைகளும், நாவல்களும் வெளியிடப்பட்டது ஒரு காலத்துல. இன்னக்கி சினிமாக்காரங்க நியூஸ் தான் வருது. என்ன தொடர் வெளியிடுறாங்க இப்பல்லாம். விகடன்னா நாங்க படிச்ச விகடனாவே இருந்துட்டுப் போகட்டும். இப்ப வர்றதெல்லாம் வேற பேர்லயே வரட்டும்.

Monday, September 24, 2012

கோயம்புத்தூர் காதல் கொலைகளின் பின்னணி

கடந்த  2 நாட்களாகத் தமிழ்நாட்டில் பரபரப்பைக் கிளப்பிக்கொண்டிருப்பது இந்தக் கோயம்புத்தூர் காதல் கொலைகள் தான். 21 வயது இளைஞன் தன் சக மாணவி, அவரது தாயார் இருவரையும் கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவ்வளவு கொடூரமான க்ரைம் ஸீனை நான் பார்த்ததில்லை என்கிறார் வடவள்ளி இன்ஸ்பெக்டர். மற்றொரு சம்பவத்தில் 9ம் வகுப்பு சிறுமியை ஒரு இளைஞன் கொலை செய்துள்ளான். காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே. இந்தக் கண்மூடித்தனமான கோபம்தான் காதலா?
காதல் பெயரால் நடக்கும் அபத்தங்கள் எத்தனையெத்தனை? திருமணமானவர்களில் கணவனோ, மனைவியோ வாழ்க்கைத்துணையிடம் உன் நல்லதுக்காகத்தானே சொல்கிறேன், நான் உன் மேல் பொஸஸிவாக  இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு எத்தனை கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர் - இதுவா காதல்? தளைகளும், கட்டுப்பாடுகளும் இருக்கும் இடத்தில் காதல் வராது. கட்டற்ற சுதந்திரம்தான் காதல். நம்மை நாமாக இருக்க அனுமதித்து நம்மை அன்பு செய்யும் மனமே காதல் நிறைந்தது.  Love possesses not nor would it be possessed - கலீல் கிப்ரன்.
                 நம் வாழ்க்கைத்துணையிடம் சிறுபிள்ளைத்தனமற்ற மெச்சூர்டான காதலையே கொண்டு அவன்/அவளின் மனதில் நீங்கா இடம் பெறுவோம். கலீல் கிப்ரனின் வரிகள் எப்போதும் போல் இப்போதும் எனக்குத் துணை வருகிறது. திருமணத்தைப்பற்றிய அவரின் கருத்து -
     
      Love one another but make not a bond of love:
      Let it rather be a moving sea between the shores of your souls.
      Fill each other's cup but drink not from one cup.
      Give one another of your bread but eat not from the same loaf.

ஒருவரையொருவர் நேசியுங்கள்,
ஆனால் காதலால் ஒரு தளையை உருவாக்காதிருங்கள்.
உங்களின் நேசம் - உங்கள் ஆன்மக்கரைகளுக்குள்
அலைபாயும் கடலாக இருக்கட்டும்.
ஒருவர் கோப்பையை மற்றவர் நிரப்புங்கள்,
ஆனால் ஒரே கோப்பையில் பருகாதிருங்கள்.
ஒருவர் ரொட்டியை மற்றவருக்குக் கொடுங்கள்,
ஆனால் ஒரே ரொட்டியிலிருந்து உண்ணாதிருங்கள்.

நம் துணையின் பெர்சனல் ஸ்பேஸை நாம் கட்டாயம் மதிப்போமாக. உன்னதமான காதலின் பெயராலும், திருமணத்தின் பெயராலும் வாழ்க்கைத்துணையைப் படுத்தாமலிருப்போமாக.

 For even as love crowns you so shall he crucify you.

எப்படி காதல் நமக்கு கிரீடம் சூட்டுகிறதோ அதே போல் நம்மைச் சிலுவையிலும் அறையும்.

நாம் கிரீடம் மட்டுமே சூட்டுவோம் - ஆமென்

Sunday, July 29, 2012

மணிரத்னத்தால் முடியாதது செல்வராகவனால் முடியுமா?

 கல்கியின் பொன்னியின் செல்வனை ஒவ்வொரு பத்தாண்டு காலகட்டத்திலும் (in every decade) யாராவது ஒரு திரையுலகைச் சார்ந்த பிரபலம் திரைப்படமாக்க வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் அந்நாவலைத் திரைப்படமாக்க ஆசைப்பட்டதாக என் பெரியம்மா சொல்வார்கள். அப்போதே சிவாஜி ரசிகர்கள் - எம்.ஜி.ஆர் அதைத் திரைப்படமாக்கி நாவலைக் கெடுத்துவிடக்கூடாது என்பார்களாம். அதற்குப்பிறகு கமல் அதே ஆசையை வெளிப்படுத்தினார் - நடக்கவில்லை. பின்னர் கொஞ்ச ஆண்டுகளுக்கு முன் மணிரத்னம் அதையே சொன்னார். எங்கள் வீட்டுப்பெரியவர்கள் எல்லோரும் மணிரத்னம் அக்கதையைப் படமாக்கப் போகிறார் என்றவுடன் அலறிவிட்டார்கள்.
  இப்போது செல்வராகவன் பொன்னியின் செல்வனைப்படமாக்கப்போகிறேன் என்று கிளம்பியிருக்கிறார். பொதுவாக அனேக கொலைவெறிகளைச் சமாளிக்கும் நானே இதைக்கேட்டவுடன் அலறிவிட்டேன். பின்ன - ஆயிரத்தில் ஒருவன் பார்த்தீர்கள் அல்லவா?? ஆயிரத்தில் ஒருவனை கிளாடியேட்டருடன் ஒப்பிட்டு பேட்டி வேறு கொடுத்தார் செல்வராகவன். அவர் கிளாடியேட்டர் படம் பார்க்கவில்லையா அல்லது நாம் யாரும் அந்தப்படத்தைப் பார்த்திருக்க மாட்டோம் என்று நினைத்து விட்டாரா - தெரியவில்லை.
      எது எப்படியோ - பிரபல நாவல்களைப் படமாக்கும் போது எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும். அன்னா கரீனினா, மோகமுள், சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் மற்றும் பிரியா, சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் போன்ற எந்த நாவலுமே திரைப்பட வடிவில் என்னைக் கவரவில்லை. பெரிய வெற்றியும் பெறவில்லை. ஆனால் திரைக்கதையில் மிகப்பிரமாதமான மாற்றங்கள் செய்து முள்ளும் மலரும் நாவலைக் கலக்கினார் நம் டைரக்டர் மகேந்திரன். 3 இடியட்ஸும் திரைக்கதையின் சிறந்த மாற்றங்களினால் மிக நன்றாக இருந்தது. அப்படி திறமையான இயக்குனர்கள் கிடைக்கும் போதுதான் இந்த மாதிரியான மாஸ்டர் பீஸ் நாவல்கள் சோபிக்கும். எண்ணித்துணிக கருமம் திரு. செல்வராகவன்.

Monday, July 16, 2012

உலகத்துல இருக்குற எல்லா அம்மாக்களும் இதே வசனத்த தான் வேற வேற மாதிரி பேசுறாங்க

நிச்சயம் பின்னாடி வரும் எல்லா வசனத்தையும் உங்க அம்மா, உங்க வீட்ல ஒரு தடவயாவது பேசியிருப்பாங்க. நீங்களே ஒரு அம்மான்னா - நீங்களும் நிச்சயமா இது எல்லாத்தயும் பேசியிருப்பீங்க ;)

  1. பல் தேச்சுட்டியா?
  2. இன்னுமா தேய்க்கல
  3. புக் ஏன் கீழ கிடக்கு - தூக்கி ஷெல்புல வை
  4. யார் எடுத்தான்னு நான் கேக்கல. தூக்கி வைன்னு தான் சொன்னேன்
  5. இந்த டிரஸ்ஸ போட்டுக்கிட்டு வெளில வரக்கூடாது. டிரஸ்ஸ மாத்து
  6. ஆர்க்யூ பண்ணாத
  7. பின்னாடி தள்ளி வா. இவ்வளவு பக்கத்துல உக்காந்து பாக்கக்கூடாது
  8. அவன அடிக்காத
  9. ஏதாவது சொல்லணும்னா பக்கதுல வந்து சொல்லு. கத்தாத
  10. போதும். இப்ப தான ஒரு பெரிய bowl fullஆ சாப்பிட்ட
  11. சீக்கிரம் கிளம்பு. உனக்காக தான் எல்லாரும் வெயிட்டிங்
  12. பாத்ரூம் போய்ட்டு வந்துட்டியா?
  13. கட்டாயம் பாத்ரூம் போய்ட்டுதான் கெளம்பணும்
  14. பரவால்ல. try பண்ணு. வரும்
  15. அர்ஜன்ட்டா வருதா
  16. கொஞ்ச நேரம் கன்ட்ரோல் பண்ணிக்க முடியுமா?
  17. ஒரு பீஸ் சாப்ட்டு பாரு. பிடிச்சா சாப்பிடு. இல்லன்னா வச்சிரு
  18. ஹலோ, அவன் வீட்ல இல்லயே. நீங்க? (நம்ம அங்க தான் உக்காந்து பாத்துக்கிட்டு இருப்போம்)
  19. இப்பவே ஸ்விட்ச் off பண்ணு - இப்பவே
  20. ஏன்னா நான் அம்மா. அம்மா சொன்னா கேக்கணும்
உலகின் எல்லா அம்மாக்களுக்கும் என் மனம் கனிந்த நன்றிகள். நீங்க இல்லாம நாங்க இல்ல.

பின்குறிப்பு
இந்த article, Chicken soup for the soul புத்தகத்தின் ஒரு ஆர்ட்டிக்கலின் தழுவல். எனக்கு மிகவும் பிடித்திருந்ததால் அதன் பாதிப்பில் இந்தப் பதிவை எழுதினேன்.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes