Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

Wednesday, July 11, 2012

மத்திய தர மக்களை அவமதிக்கும் சிதம்பரம்

ரூ.15க்கு குடிதண்ணீரும், ரூ.20க்கு ஐஸ்க்ரீமும் வாங்கத் தயங்காத மத்திய தர மக்கள் அரிசி விலையை உயர்த்தினால் கூச்சலிடுகின்றனர் என்கிறார் செல்வச்சீமான் சிதம்பரம். 
மத்தியதர மக்கள் தினமும் 3 வேளை ஐஸ்க்ரீம்தான் சாப்பிடுகிறார்களா? குடிதண்ணீருக்காக 15 ரூபாயை செலவழிக்கிறோம் என்கிறார் வெட்கம் கெட்ட மத்திய அமைச்சர். சுதந்திரம் வாங்கி இத்தனை ஆண்டுகளுக்குப்பின்னரும் மக்களின் அடிப்படைத்தேவையான சுத்தமான குடிநீரை வழங்க இயலாத கையாலாகாத அரசின் அங்கமான இவர் விலை உயர்வைப்பற்றி என்ன கவலைப்படப்போகிறார்? 30 சதவீதம் வரி செலுத்தும் இந்த மத்தியதரத்தின் பணம் எங்கே போகிறது? அந்த பணத்தைக்கொண்டு அரசு அவர்களுக்கு என்ன வசதி செய்து தரப்போகிறது? வளர்ந்த நாடுகளில், வரி செலுத்தும் மக்களுக்கு மருத்துவம் இலவசம், தரமான கல்வி இலவசம். இங்கே புழுத்த அரிசியும், குவார்ட்டரும் கோழி பிரியாணியும்தான் இலவசம்.

மத்திய தரத்தின் வருமானத்தில் 30 சதவீதத்தைப் பிடுங்கிக்கொள்ளுங்கள். மிச்ச 70 சதவீதத்தில் டாஸ்மாக் வளரட்டும். இன்னும் ஏதாவது மிச்சமிருந்தால் அரிசி வாங்கிக்கொள்ளட்டும் - 1 ரூபாயென்ன - எவ்வளவு வேண்டுமானாலும் உயர்த்திக்கொள்ளுங்கள். போதாதற்கு அவர்களைக் கேவலமும் படுத்துங்கள்.  ஒரு நாளுக்கு ரூ.28 சம்பாதித்தால் அவன் ஏழை இல்லை , வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ளவன் என்று மான்டேக்சிங் அலுவாலியாவைக்கொண்டு அறிவியுங்கள்.ஏனென்றால் எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்கள் - இவர்கள் ரொம்ப நல்லவர்கள்.

Wednesday, June 27, 2012

கனிமொழிக்கு மீண்டும் சிறை

அதிமுக அரசின் கைது நடவடிக்கைகளைக் கண்டித்து, திமுக வரும் நான்காம் தேதி சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவித்துள்ளது. ஜாமீன் பெற முயற்சிக்காமல் சிறையிலேயே இருப்பவர்களுக்குக் கட்சியில் பதவியும் தரப்போகிறாராம் ஸ்டாலின்.
கருணாநிதிக்கு எதில் யார் வாரிசோ என்னவோ தெரியாது - ஆனால் அவரைப்போல் காமெடி பண்ணுவதில் அவருடைய வாரிசு நிச்சயம் கனிமொழிதான். சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொள்வதற்கு சிபிஐயிடம் சிறப்பு அனுமதி வாங்கப்போகிறாராம். மக்களை அடிமுட்டாளாக எண்ணும் கருணாநிதி மற்றும் குடும்பத்தாரின் போக்கு சொல்ல முடியாத அளவு எரிச்சலை ஏற்படுத்துகின்றது.
மேடம் கனிமொழி - நீங்கள் இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு சிறையை நிரப்ப அனுமதி வாங்குவதற்குப் பதிலாக, திகார் சிறையையே நிறைத்திருக்கலாம் அல்லவா - வெளியே வந்தவுடன் உங்கள் சகோதரர் உங்களுக்குக் கட்சியில் பதவியும் கொடுத்திருந்திருப்பார், நீங்கள் ரொம்ப கஷ்டப்பட்டு ஜாமீனுக்குச் செய்த முயற்சியும் மிச்சமாகியிருந்திருக்கும்

Wednesday, June 20, 2012

பஸ்ஸில் பயணம் செய்து பல்பு வாங்கிய தேனி எம்எல்ஏ

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியின் சிபிஎம் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ பஸ்ஸில் பயணம் செய்திருக்கிறார்.  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=489928. பஸ்ஸில் பயங்கர கூட்டம் போலும் - உட்கார இடம் கிடைக்கவில்லை. கண்டக்டரிடம் - நான் எம்எல்ஏங்க என்று சொல்லியிருக்கிறார். கண்டக்டர் கண்டு கொள்ளவில்லை. அவர்  பாட்டுக்கு டிக்கெட் கொடுத்துவிட்டு தன் சீட்டில் அமர்ந்து விட்டார். எம்எல்ஏ நொந்து போய் போக்குவரத்துக் கழகத்திடம் தன் வருத்தத்தைத் தெரிவித்திருக்கிறார். இது இன்றைய செய்தி.
இச்செய்திக்கு இரண்டு விதமான ரெஸ்பான்ஸ்கள் வந்திருக்கின்றன.
  •  முதல் டைப் ; எம்எல்ஏக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது? தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் நின்றபடிதான் பயணம் செய்கின்றனர். ஒவ்வொருவருக்கும் சீட் பிடித்துக் கொடுப்பதா கண்டக்டரின் வேலை?
  • இரண்டாவது டைப் (இது என் கருத்து) ; இதே எம்எல்ஏ கொத்துக் கொத்தாக செயின் போட்டுக்கொண்டு ஸ்கார்ப்பியோவில் பத்து, பதினைந்து ஆட்களோடு வந்து பஸ்ஸை அரை மணிநேரம் நிறுத்திப்போட்டிருந்தால், கண்டக்டரும், பயணிகளும் பயந்து நடுங்கியிருப்பார்கள். ஒரு மக்கள் பிரதிநிதிக்கு ஜனநாயக நாட்டில் சிறிய அளவில் மரியாதை தெரிவிப்பதில் ஒன்றும் தவறில்லை. 
எளிமையாக இருப்பவர்களைக் கேவலப்படுத்துவதும், தாம்தூமென்று குதிப்பவர்கள் முன் மிகப்பணிந்து செல்வதும் நம் இந்திய மனோபாவம். மாணவர்களோடு இறங்கிப் பழகும் ஆசிரியரை மாணவர்கள் மதிப்பதில்லை. சொந்தக்காரர்களில் நன்றாகப் பழகுபவரை யாரும் மதிப்பதில்லை. நன்றாகப் பழகினால் - இவனை/ளை என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், செய்யலாம் - என்றே நினைக்கிறார்கள். நம் இடத்தை விட்டு கீழே இறங்காமல் மெயின்டெயின் செய்துகொண்டு, நான் பணக்காரன்/ரி, படித்தவன்/ள், நல்ல நிலையில் இருக்கிறவன்/ள், பதவியில் இருக்கிறவன்/ள் என்று ஒவ்வொரு நிமிடமும் பறை சாற்றினால்தான் பிறரின் அவமதிப்பில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள முடியும். எளிமை கிளிமை எல்லாம் unaffordable ஆகி கொஞ்ச நாளாகிவிட்டது. கவிஞர் கண்ணதாசன் பாடலில்( பரமசிவன் கழுத்திலிருந்து) வருவது போல எல்லாம் இருக்குமிடத்தில் இருந்து விட்டால் எல்லாம் சவுக்கியமே என்பதுதான் சரி. 
மிஸ்டர் பெரியகுளம் எம்எல்ஏ உடனே போய் தொகுதி நிதியிலிருந்து ஒரு ஸ்கார்ப்பியோ கார் வாங்குங்கள்.

Monday, March 5, 2012

நண்பர்களே நமது பிளாகிற்கு லீப்ஸ்டர் விருது



என் இனிய வாசக நண்பர்களே நமது பிளாகிற்கு லீப்ஸ்டர் விருது வழங்கியிருக்கிறார் நண்பர் கவிப்ரியன். இந்த பிளாகிற்குக் கிடைத்துள்ள இவ்விருது மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது. எந்தவொரு வேலைக்கும் கிடைக்கும் அங்கீகாரமே அந்த வேலையைத் தொடர்ந்து செய்வதற்கான ஊக்கத்தை அளிக்கிறது.. இந்த விருது 200க்கும் குறைவான பின்தொடர்பவர்களை உடைய புதிய தளங்களுக்கு அளிக்கப்படுகிறது. என்னுடைய தளத்தையும் வாசித்து அதற்கும் அங்கீகாரம் அளித்த நண்பர் கவிப்ரியனுக்கு நன்றி.

இதற்கு பின் நான் ஏதாவது 5 வலைப்பூக்களுக்கு இந்த விருதை வழங்க வேண்டும். ஒன்று எனக்கு இதை அளித்த கவிப்ரியன் அவர்களின் வலைப்பூவிற்கு. மற்றவை மற்ற வலைப்பூக்களை மேய்ந்து பார்த்தபின் ;).

வாசித்து ஊக்கப்படுத்தும் இனிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

Wednesday, February 15, 2012

டீன் ஏஜ் ப்ரக்னன்ஸியைத் தவிர்க்க இங்கிலாந்து அரசின் திட்டம் - கொதிக்கும் பெற்றோர்

உலக அளவில் டீன் ஏஜ் கருத்தரித்தல் அதிகமாக இருப்பது ஐரோப்பாவில். அதுவும் குறிப்பாக இங்கிலாந்து நாட்டில் என்கிறது சர்வே. இதைக்குறைப்பதற்காக சமீபத்தில் இங்கிலாந்து அரசு ஒரு திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது. இத்திட்டம் பெற்றோரின் கடும் கோபத்திற்கும், கண்டனத்திற்கும் ஆளாகியுள்ளது.
இங்கிலாந்து சவுத்தாம்ப்ட்டன் பகுதியில் சுமார் 9 பள்ளிகளைச் சேர்ந்த 13வயதான பெண்குழந்தைகளுக்கு கருத்தடை சாதனத்தைப் பொருத்தியுள்ளது அரசு.பெற்றோரிடமும் இது குறித்து தெரிவிக்கவில்லை. தற்செயலாக வெளியே வந்துள்ள அவ்விஷயம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டீன் ஏஜ் கருத்தரித்தலைக் குறைப்பதற்கு நிச்சயம் இதுவல்ல வழி. முறையான உடலியல் அறிவும், பாலியல் விழிப்புணர்வுமே சரியான வழியாகும். பெற்றோருக்கே தெரியாமல் ஒரு 13 வயது குழந்தைக்கு கருத்தடை சாதனம் பொருத்துவது குழந்தைகளுக்கு எதிரான குரூரமான வன்முறை என்றே கருதுகிறேன். அரசே இப்படியொரு வேலையைச் செய்வது மிகவும் கண்டிக்கத்தக்க அறிவீனமான செயல். பிள்ளைகளுக்கு வீட்டைத் தவிர வேறு எங்குமே பாதுகாப்பில்லை. குழந்தைகளை அடிக்காதீர்கள், கையால் சாப்பாடு கொடுக்காதீர்கள் என்று அபத்தமாக ரூல்ஸ் பேசுபவர்கள் குழய்தைகளுக்கு கருத்தடை சாதனம் பொருத்துகிறார்கள் - என்ன அறிவு, என்ன மேதைமை அடாடாடா

Friday, January 20, 2012

ஈஸ்ட்மேன் கோடக் நிறுவனம் திவாலாகும் நிலையில்

கோடக் நிறுவனம் ஜார்ஜ் ஈஸ்ட்மேனால் 1880ம் வருடம் நிறுவப்பட்டது. கைக்கேமரா, புகைப்பட நெகட்டிவ், தற்சமயம் முழுக்க முழுக்கப் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் காமெரா அனைத்தும் இவர்களின் கண்டுபிடிப்பே. 1100க்கும் அதிகமான பேடன்ட்டுகளையும் இவர்கள் வைத்துள்ளனர்.

புகைப்படத்துறையிலும், திரைப்படத்துறையிலும் கோலோச்சியவர்கள் இவர்கள். எம்ஜிஆர், சிவாஜி திரைப்படங்களை ஈஸ்ட்மேன் கலரில் என்று விளம்பரம் செய்த காலம் ஒன்றுண்டு. நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் நடந்தபோது தன்னுடன் ஒரு கோடக் காமெராவைத்தான் எடுத்துச்சென்றார். ஒரு காலத்தில் கிட்டத்தட்ட 64000 தொழிலாளர்களுடன் செயல்பட்டு வந்த நிறுவனம் இன்று 17000 தொழிலாளர்களுடன் தடுமாறிக்கொண்டிருக்கிறது. இதன் சந்தை மதிப்பும் சரிந்துவிட்டது.

இதன் வீழ்ச்சிக்குக் காரணமாக சொல்லப்படுவது, லேட்டஸ்ட் டெக்னாலஜிக்கு விரைவாக அடாப்ட் ஆகாததேயாகும். உதாரணமாக இவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட டிஜிட்டல் காமெரா தயாரிப்பில் இவர்களே முழுமூச்சாக ஈடுபடவில்லை. தற்சமயம் தங்கள்வசமிருக்கும் 1100 பேடண்ட்டுகளை விற்று நிலைமையைச் சமாளிக்க முயன்றுகொண்டிருக்கிறது இந்நிறுவனம்.

மாற்றம் ஒன்றே மாறாதது. இதை உணர்ந்து, ஏற்க மறுத்தால் ஜாம்பவன்களாய் இருந்தாலும் மண்ணைக் கவ்வ வேண்டியதுதான் என்பதே கோடக் நமக்கு சொல்லும் பாடம்.

Monday, January 9, 2012

ஒரு நற்செய்தி - புத்தகக்கண்காட்சியில் பூந்தளிர் அமர்சித்திரக்கதை தமிழில் கிடைக்கிறது

35ம் புத்தகக்கண்காட்சி சென்னையில் கோலாகலமாக நடந்து கொண்டிருக்கிறது. ஒரு மிக மகிழ்ச்சியைத் தந்த விஷயம் - கிழக்கு பதிப்பகம் ஸ்டாலில் அமர் சித்திரக்கதை தமிழில் கிடைக்கிறது.







அந்தப்புத்தகங்களின் அட்டையைப் பார்க்கும்போது, நாம் படித்த கல்லூரிக்கு செல்லும் போது , ஆத்மார்த்தமான நண்பனை நீண்ட நாட்கள் கழித்துப்பார்க்கும்போது, நம்முடைய ஆதர்ச எழுத்தாளரை நேரில் சந்திக்கும்போது ஆகிய தருணங்களில் எல்லாம் ஏற்படும் நெகிழ்வு ஏற்பட்டது. என்ன தான் ஆங்கில அமர் சித்திரக்கதையைப் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுத்து, விநாயகரை கணேஷா என்றும், இராவணனை ராவணா என்று பிள்ளைகள் படிப்பதைப் பார்த்தாலும் பிள்ளைகள் நம் புராணங்களை நம் தாய்மொழியில் படிப்பதையே நான் விரும்புகிறேன். கும்பகர்ணனின் கதையைப் படித்து குழந்தைகள் சிரித்து சிரித்து குதூகலிக்கும்போது ஆங்கிலத்தில் இதையே அவர்கள் படித்திருந்தால் இந்தளவு அவர்களால் கதையோடு ஒன்றிப்போயிருக்க முடியுமா? என்று தோன்றியது. சந்தேகம்தான்.

சர்வைவலுக்குப் பிற மொழிகள் தேவைதான். ஆனால் மனம் ஒன்றவும், மனம் கரையவும் தாய்மொழியில் படிப்பதாலும் எழுதுவதாலும் மட்டுமே முடியும்.


பி.கு

அருமையான ஏற்பாடுகள் செய்திருக்கும் அமைப்பாளர்கள், அரங்கத்திற்குள் இருக்கும் காபி வெண்டிங் மெஷினின் காபி தரத்தைக் கொஞ்சம் கவனிக்க வேண்டும். நடந்து நடந்து காபி அவசியம் தேவைப்படுகிறது. ஆனால் அந்தக் காபியைக் குடிக்கவே முடியவில்லை. நிறைய பேர் பாதி கப்பில் குப்பையில் போட்டுவிட்டனர் - நான் உட்பட.





Thursday, January 5, 2012

இஞ்சிக்கு பேட்டன்ட் - இங்கிலாந்து கம்பெனி வாங்கிய பல்பு

இங்கிலாந்தைச் சேர்ந்த நிக்கோலஸ் ஜான் லார்கின்ஸ் என்ற கம்பெனி நுரையீரல் மற்றும் சுவாசக்கோளாறுகளுக்கான ட்ரீட்மெண்ட்டில் இஞ்சியின் பயன்பாட்டைத் தாங்கள் கண்டுபிடித்திருப்பதாகவும், அது தங்களுடைய அரிய கண்டுபிடிப்பு என்பதால் அதற்கு பேட்டன்ட் வழங்க வேண்டும் என்றும் யு.கே. பேட்டன்ட் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளது.


இந்தியாவில் தலைமுறை தலைமுறையாக இருமலுக்காகவும், ஜலதோஷத்துக்காகவும் நாம் இஞ்சியை வெவ்வேறு வடிவங்களில் சாப்பிட்டு வருகிறோம். வீட்டில் நமக்கு இருமல் இருந்தால் சின்ன வயசில் அம்மாவின் இஞ்சிக் கஷாயம், கொஞ்சம் பெரியவர்கள் ஆனவுடன் டீன் ஏஜ் ஸ்டேஜில் கஷாயம்லாம் குடிக்க முடியாது என்று சொல்லும் பருவத்தில் சரி இஞ்சி டீயாவது குடி என்பார்கள் தாய்மார்கள். அப்புறம் இஞ்சி மொரப்பா என்று ஒரு இஞ்சி மிட்டாய், மும்பையில் அட்ரக் சாய் என்ற பெயரில் இஞ்சி டீ- சளித்தொல்லைக்காக இவற்றையெல்லாம் காலங்காலமாக நாம் சாப்பிட்டு வருகிறோம். இதற்கு பேட்டன்ட் கேட்டு விண்ணப்பிப்பது ஒரு அன்னிய நாடு.

நல்ல வேளை - சரியான சமயத்தில் (அதாவது பேட்டன்ட் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டே வாரத்தில்) இந்திய CSIR மற்றும் Dept. of Ayush தலையிட்டு இந்தியாவின் பாரம்பர்ய மருந்து இது என்பதை 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆயுர்வேத மற்றும் யுனானி மருத்துவப்புத்தகங்களை ஆதாரமாகக் கொண்டு விளக்கியிருக்கிறது. அதனால் பேடன்ட்டும் மறுக்கப்பட்டுள்ளது.

கொஞ்சம் உஷாரா இல்லன்னா நம்ம இட்லி, பொங்கல், மண்பானை எல்லாத்துக்கும் பேட்டன்ட் வாங்கிடுவானுங்க போல

Saturday, December 24, 2011

சென்னை ஐஐடி கேம்பஸ் இன்டர்வ்யூ - மாணவனின் சம்பளம் வருடத்திற்கு 64 லட்சம் - எந்த துறை சார்ந்த நிறுவனத்தில்?

இந்த வருடம் எக்கனாமிக் ஸ்லோடவுன் இருக்கும் என்று உலகப்பொருளாதார வல்லுனர்கள் அச்சம் தெரிவித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில், ஐஐடி சென்னை மாணவன் ஒருவர் வருடத்திற்கு 64 லட்சம் ரூபாய் சம்பளத்தில் ஒரு அமெரிக்க நிறுவனத்தில் வேலையில் சேர்ந்துள்ளார். இந்நிறுவனம் எத்துறையைச் சார்ந்தது? பேங்க்கிங், பாதுகாப்பு, விண்வெளி ஆராய்ச்சி போன்ற எந்தத் துறையும் இல்லை. மாதம் சுமார் 5 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு ஆள் எடுத்துள்ள நிறுவனம் - பாக்கெட் ஜெம்ஸ். இந்நிறுவனம் செல்போன் கேம்ஸ் டெவலப் செய்யும் நிறுவனம். மேலும் பேஸ்புக் வருடத்திற்கு சுமார் 50 லட்சம் ரூபாய் சம்பளத்தில் ஐஐடி பாம்பே மாணவருக்கு வேலை அளித்துள்ளது.

இவ்விரு நிறுவனங்களும் கிட்டத்தட்ட பொழுதுபோக்கு துறையைச் சார்ந்தவை. ஏன் ஓடுகிறோம்? நம்முடைய இலக்கு என்ன என்பது தெரியாமலே ஒரு மிகப்பெரிய ஓட்டப்பந்தயத்தில் அனைவரும் ஓடிக்கொண்டிருக்கிறோம். இருக்கும் இடத்தைத் தக்க வைக்க இன்னும் வேகமாக ஓட வேண்டும் என்கிறார்கள் மேனேஜ்மென்ட் குருக்கள். இதன் விளைவு மிகப்பெரிய மன அழுத்தம். அனைவரும் ஏதாவது சாதித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். சாமான்யர்களுக்கு இங்கு இடம் இல்லை. இச்சூழ்நிலையில் அனைவருக்கும் தேவைப்படு்வது ஒரு ரிலாக்ஸேஷன். இதனால் பொழுதுபோக்குத்துறை மிக வேகமாக வளர்கிறது. இதன் வெளிப்பாடுதான் அனைத்து துறைகளிலும் மந்த நிலை நிலவும்போது, கம்ப்யூட்டர் கேம்ஸ் தயாரிக்கும் நிறுவனம் இவ்வளவு சம்பளம் கொடுத்து மாணவர்களை வேலைக்கு எடுப்பது.

Thursday, December 22, 2011

ஆ.ராசாவின் செக்ரட்டரி ஆசிர்வாதம் ஆச்சாரியின் 4 லட்சம் மதிப்புள்ள செல்போன்

2 ஜி வழக்கில் ஆ.ராசாவின் முன்னாள் செக்ரட்டரி ஆசிர்வாதம் ஆச்சாரி கோர்ட்டில் ராசாவிற்கு எதிராகத் தன்னுடைய சாட்சியத்தை அளிக்கத் துவங்கியிருக்கிறார். அவரைக் குறுக்கு விசாரணை செய்து கொண்டிருப்பவர் கனிமொழிக்காக ஆஜராகியிருக்கும் ராம் ஜெத்மலானி.



நேற்றைய விசாரணையில் ஆச்சாரியின் செல்போனைப் பற்றி விசாரித்திருக்கிறார் ஜெத்மலானி. அதன் மதிப்பு ரூ2.5 லட்சம் முதல் ரூ 4 லட்சத்திற்குள் இருக்கும் என்பது அவரது எஸ்டிமேஷன். இந்த போன் உங்களுக்கு எப்படி கிடைத்தது? அதன் விலை என்ன? என்று ஆச்சாரியைக் கேட்டிருக்கிறார். அதற்கு அவர் இந்த போன் என் மனைவிக்குப் பரிசாகக் கிடைத்தது. எனவே அதன் விலை எனக்குத் தெரியவில்லை என்றிருக்கிறார். வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு அவர்மேல் தொடர சிபிஐ காத்திருக்கிறது.

இந்நிலையில் அந்த செல்போனின் விலையைப் பில்லோடு இன்று கோர்ட்டில் நிரூபித்திருக்கிறார் ஆச்சாரி. அந்த செல்போனின் உண்மையான விலை இந்திய மதிப்பில் ரூ.4500. அதை ஆன்லைனில் ஆர்டர் செய்து அவரின் மனைவிக்கு வாங்கிக்கொடுத்திருப்பவர் மனைவியின் சகோதரர்.

4500 மதிப்புள்ள போனை 4.5 லட்சமாகச் சந்தேகமடையச்செய்து ஆச்சாரியைக் கோர்ட்டில் அசைத்துப் பார்த்த ஜெத்மலானி கோர்ட்டில் இன்று பல்பு வாங்கியுள்ளார். இன்னும் என்னென்ன போலியான மிரட்டல்களை ஆச்சாரி எதிர்கொள்ள வேண்டியிருக்குமோ??!!!!

Friday, October 14, 2011

அழகிய பிட்கெய்ர்ன் தீவு - பெண் குழந்தைகளின் பாலியல் நரகம்

ஒரு காலத்தில் தென் பசிபிக் பகுதியின் தனிமை சொர்க்கமாக கருதப்பட்ட பிட்கெய்ர்ன் தீவின் இருண்ட பக்கங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. தலைமுறை தலைமுறையாகத் தொடரும் பெண் குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறைகள் தற்சமயம் வெளிவந்துள்ளன.





பிட்கெய்ர்ன் தீவு பெருவுக்கும், நியூசிலாந்துக்கும் இடையில் அமைந்துள்ள உலகின் மிகத்தனிமையான, குறைவான மனிதர்களே வசிக்கும் ஒரு அழகிய தீவாகும். இது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வரும் தீவாகும். இத்தீவின் தனிமையே இதன் மிகப்பெரிய அட்ராக்ஷனாகவும் இருக்கிறது. கடினமான பாறைகளும், அடர்ந்திருக்கும் மரங்களும், அலைகளின் தாலாட்டும், ஆளரவமற்ற தனிமையும் இங்கு முதலில் 1790ஆம் ஆண்டு ஃப்ளெட்சர் க்றிஸ்டியனின் தலைமையின் கீழ் வந்தடைந்த HMS Bounty கப்பலில் இருந்தவர்களுக்கு ஒரு சொர்க்கத்தை வந்தடைந்த உணர்வைத் தந்தது. இத்தீவின் தனிமை அவர்களுக்கும், இன்றும் அங்கே வசித்து வரும் அவர்களின் வம்சாவளியினருக்கும் தங்களின் கொடிய குற்றங்களை மறைத்துக் கொள்ள ஒரு நல்ல போர்வையைத் தந்தது.





இங்குள்ள பெண் குழந்தைகள் 12 வயதிலேயே அவர்களின் விருப்பமின்றி
தாயாக்கப்படுகிறார்கள். இங்குள்ள அனைத்து ஆண்களுமே பெண்குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறை புரிந்தவர்களாகவும், பெண் குழந்தைகள் அனைவருமே பாதிக்கப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர், (2004 ல் இவர்களின் மொத்த ஜனத்தொகை 47). இத்தீவுக்கு airport, sea port கிடையாது. ஒரேயொரு docking yard மட்டும் உண்டு. இப்படி ஒரு வெளியாட்களின் வரவே இல்லாத ஒரு சமூகத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் யாரிடமும் எதுவும் சொல்லவும் வாய்ப்பில்லை. தாயார், பாட்டி அனைவரும் இதே விதத்தில் பாதிக்கப்பட்டவர்களே. 1999ஆம் ஆண்டு அங்கு விசிட்டிங் போலீஸாக வந்த ஒரு பெண் அதிகாரியிடம் ஒரு 15 வயது பெண் குழந்தை தான் ரேப் செய்யப்பட்டதையும், இங்கு எவ்வாறு அது சர்வசாதாரணமாக செய்யப்படுகிறது என்பது பற்றியும் தெரிவித்திருக்கிறாள். மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு பெரிய திருட்டை மட்டுமே ஹேண்டில் செய்திருந்த அந்த அதிகாரி, இக்குற்றச்சாட்டின் தீவிரத்தால் அதிர்ந்து போனார். மற்ற பெண்களும், குழந்தைகளும் தைரியமடைந்து தங்களின் வேதனையான அனுபவங்களை வெளியில் சொல்லத்துவங்க, இத்தீவின் இன்னொரு கோர முகம் உலகுக்கு வெளிப்படுத்தப்பட்டது. நியுசிலாந்து கோர்ட்டில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விசாரிக்கப்பட்டனர். நாங்கள் பிரிட்டிஷ் ராஜஜியத்தின் கீழ் வரமாட்டோம். எனவே எங்களை வேறு யாரும் விசாரித்து குற்றம் சாட்டமுடியாது என்று தற்சமய தலைவர் (முதல் ஃபோட்டோவில் 2ம் வரிசையில் வெள்ளை டிஷர்ட்டில் இருப்பவர் - அவரும் குற்றவாளிதான்) வாதிட்டது தள்ளுபடி செய்யப்பட்டது. அனேகமாக அனைத்து ஆண்களும் கைதாகும் நிலை ஏற்பட்டதால், சில வயதான பெண்கள், தீவின் ஆண்களைக் காப்பாற்ற வேண்டுமென "இதிலென்ன இருக்கிறது. இது பாலினேஷியக் கலாசாரத்தின் ஒரு பகுதி" என வாதிட்டனர். இவை அனைத்தையும் மீறி, நியுசிலாந்து கோர்ட் அனைவருக்கும் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

இன்று செய்தித்தாளில் விழுப்புரத்தில் தந்தையால் கர்ப்பமாக்கப்பட்ட பெண் குழந்தை, குழந்தை பெற்றார் என்ற தினமலர் செய்தி மனத்தை நொறுக்குகிறது. இக்கட்டுரை பாதிக்கப்பட்ட, பட்டுக்கொண்டுருக்கிற ஒவ்வொரு குழந்தைக்குமான என்னுடைய பிரார்த்தனை.








 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes