Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Sunday, July 29, 2012

மணிரத்னத்தால் முடியாதது செல்வராகவனால் முடியுமா?

 கல்கியின் பொன்னியின் செல்வனை ஒவ்வொரு பத்தாண்டு காலகட்டத்திலும் (in every decade) யாராவது ஒரு திரையுலகைச் சார்ந்த பிரபலம் திரைப்படமாக்க வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் அந்நாவலைத் திரைப்படமாக்க ஆசைப்பட்டதாக என் பெரியம்மா சொல்வார்கள். அப்போதே சிவாஜி ரசிகர்கள் - எம்.ஜி.ஆர் அதைத் திரைப்படமாக்கி நாவலைக் கெடுத்துவிடக்கூடாது என்பார்களாம். அதற்குப்பிறகு கமல் அதே ஆசையை வெளிப்படுத்தினார் - நடக்கவில்லை. பின்னர் கொஞ்ச ஆண்டுகளுக்கு முன் மணிரத்னம் அதையே சொன்னார். எங்கள் வீட்டுப்பெரியவர்கள் எல்லோரும் மணிரத்னம் அக்கதையைப் படமாக்கப் போகிறார் என்றவுடன் அலறிவிட்டார்கள்.
  இப்போது செல்வராகவன் பொன்னியின் செல்வனைப்படமாக்கப்போகிறேன் என்று கிளம்பியிருக்கிறார். பொதுவாக அனேக கொலைவெறிகளைச் சமாளிக்கும் நானே இதைக்கேட்டவுடன் அலறிவிட்டேன். பின்ன - ஆயிரத்தில் ஒருவன் பார்த்தீர்கள் அல்லவா?? ஆயிரத்தில் ஒருவனை கிளாடியேட்டருடன் ஒப்பிட்டு பேட்டி வேறு கொடுத்தார் செல்வராகவன். அவர் கிளாடியேட்டர் படம் பார்க்கவில்லையா அல்லது நாம் யாரும் அந்தப்படத்தைப் பார்த்திருக்க மாட்டோம் என்று நினைத்து விட்டாரா - தெரியவில்லை.
      எது எப்படியோ - பிரபல நாவல்களைப் படமாக்கும் போது எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும். அன்னா கரீனினா, மோகமுள், சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் மற்றும் பிரியா, சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் போன்ற எந்த நாவலுமே திரைப்பட வடிவில் என்னைக் கவரவில்லை. பெரிய வெற்றியும் பெறவில்லை. ஆனால் திரைக்கதையில் மிகப்பிரமாதமான மாற்றங்கள் செய்து முள்ளும் மலரும் நாவலைக் கலக்கினார் நம் டைரக்டர் மகேந்திரன். 3 இடியட்ஸும் திரைக்கதையின் சிறந்த மாற்றங்களினால் மிக நன்றாக இருந்தது. அப்படி திறமையான இயக்குனர்கள் கிடைக்கும் போதுதான் இந்த மாதிரியான மாஸ்டர் பீஸ் நாவல்கள் சோபிக்கும். எண்ணித்துணிக கருமம் திரு. செல்வராகவன்.

Thursday, May 31, 2012

பாலாஜிசக்திவேலை வறுத்தெடுத்த பாக்யராஜ் - காரணம் என்ன?

வழக்கு எண் 18 9 திரைப்படத்தின் வெற்றிவிழா மற்றும் பாலாஜிசக்திவேலுக்கான பாராட்டுவிழா சமீபத்தில் நடைபெற்றது. இதற்கு சிறப்பு விருந்தினராக பாக்யராஜ் அழைக்கப்பட்டிருந்திருக்கிறார். பேசுவதற்காக மைக்கைப் பிடித்த பாக்யராஜ், வழக்குஎண் திரைப்படத்தில் இந்தக்காட்சி சரியில்லை, அந்தக்காட்சியில் லாஜிக் இல்லை என்று சகட்டுமேனிக்குக் குறை சொல்லித் தள்ளி இருக்கிறார். பாராட்டி உரையாற்றவேண்டியவர் இப்படி காய்ச்ச, படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமி உட்பட மேடையிலிருந்த அனைவரும் சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் நெளிந்திருக்கின்றனர்.
பாராட்டுவிழாவில் விமர்சனம் செய்யவேண்டிய அவசியமென்ன? படம் குறைகள் நிறைந்ததாக அவருக்குத் தோன்றியிருந்தால் தலைமையேற்க முதலிலேயே நாகரிகமாக மறுத்திருக்கலாமே.
ஆக்சுவலி காதல் திரைப்படத்தில் நடிக்க சாந்தனுவைத்தான் முதலில் அப்ரோச் செய்திருக்கிறார் பாலாஜி - இது பாக்யராஜே முன்பு ஒரு பேட்டியில் தெரிவித்திருந்த செய்தி. அருமையான ஒரு திரைப்படத்தில் அறிமுகமாயிருந்திருக்க வேண்டிய தன் மகன், இன்னும் திரையுலகில் ஒரு இடம் பெற தடுமாறிக்கொண்டிருப்பதால் ஏற்பட்ட சலிப்பு, கோபம் இவையெல்லாம் பாலாஜி மேல் திரும்பியிருக்கும் என்று நினைக்கிறேன். பிள்ளை பாசம் கண்ணை மறைத்து விட்டது இந்த திரைக்கதை மன்னனுக்கு. கூல் மிஸ்டர் பாக்யராஜ் - உங்கள் மகனும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Monday, May 28, 2012

மனைவி சொன்னதைக் கேட்டாலும் பிரச்சனை கேட்காவிட்டாலும் பிரச்சனை - தவிக்கும் தனுஷ்

3 படம் ஆரம்பித்ததிலிருந்து செய்திகளில் அடிபட்டுக்கொண்டே இருக்கிறது. கொலவெறியின் மெகா ஹிட், படம் பிரமாண்ட ப்ளாப், கஸ்தூரி ராஜா- நட்டி பிரச்சினை, ரஜினியிடம் நஷ்டத்தைத் திரும்பக்கேட்டது மற்றும் அனைத்திலும் ஹைலைட்டாக தனுஷ் - ஸ்ருதி கெமிஸ்ட்ரி என நாளொரு செய்தியும், பொழுதொரு பிரச்சனையுமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
  கஸ்தூரி ராஜா ஒரு பேட்டியில், தனுஷ் ஐஸ்வர்யா இடையே பிரச்சனை என்பது உண்மைதான். எல்லா கணவன் மனைவியிடையே இருக்கும் பிரச்சனை போல தான் இதுவும். தனுஷ் ஸ்ருதியோடு மிகவும் நெருக்கமாக நடித்தது ஐஸ்வர்யாவுக்கு வருத்தத்தைத் தந்தது என்கிறார்.
            இதில் என் சந்தேகம் என்னவென்றால் - படத்தின் இயக்குனர் சொன்னதை நடிகர் செய்திருக்கிறார். அப்புறம் இயக்குனரே ஏன் இப்படி நடித்தாய் என்றால் நடிகர் என்ன செய்வார் பாவம்.
          ஐஸ்வர்யா அவர்களே தாங்கள் சொன்னதைத் தானே தங்கள் கணவர் செய்தார். அப்புறம் ஏன் கோபித்துக்கொள்கிறீர்கள்? சொன்னதைக் கேட்டாலும் தப்பு, கேட்காவிட்டாலும் தப்பா?? என்ன கொடுமை சரவணன் இது.

Saturday, March 10, 2012

சூர்யா தோல்வி

பெரிய திரை சூப்பர் ஸ்டார்கள் சின்னத்திரையிலும் தலைகாட்டுவது அனைத்து இந்திய மொழித்தொலைக்காட்சிகளிலும் நடக்கும் ஒரு நிகழ்வு. அமிதாப், ஷாருக், சல்மான் முதல் நம் சரத், சூர்யா வரையில் கேம் ஷோக்களில் தலை காட்டிவிட்டனர். இதில் பாலிவுட் நடிகர்களில்அமிதாப், ஷோவை சூப்பர் ஹிட்டாக்கினார். சல்மான் நடத்தும் போதும் டிஆர்பி ரேட்டிங் நன்றாகவே இருந்ததாக சர்வேக்கள் சொல்கின்றன. ஆனால் ஷாருக்கால் டிஆர்பியைத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.

விஜய் டிவியின் கேம் ஷோவைப் பார்க்கும்போது மிகுந்த அலுப்புத் தட்டுகிறது. டிஆர்பி ரேட்டிங்கும் சரியில்லையாம். ஒரு கேம் ஷோவை சுவாரசியமாக்குவது அதில் கேட்கப்படும் கேள்விகள், ஷோவை நடத்தும் ஹோஸ்ட், பார்வையாளர்களுக்கு ஷோவில் இருக்கும் பங்கு. இவற்றில் அனைத்திலுமே இந்த ஷோ பெயிலியர்தான்.

முதலில் இதில் கேட்கப்படும் கேள்விகளைப் பார்ப்போம் - ராமனின் தாயார் யார்? - பதிலுக்கான சாய்ஸ்களில் ஒன்று சீதா. உறங்கும் நேரம் தனிமை தனிமையே - இந்தப்பாடலில் இடம்பெறும் நகரம் எது? இன்னும் எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால் என்று மட்டும் தான் கேட்கவில்லை. பார்வையாளர்களையும், பங்கேற்பவர்களையும் மிகவும் அன்டர் எஸ்டிமேட் செய்கின்றனர். இந்த மாதிரியான அரைவேக்கட்டுத்தனமான கேள்விகள் வெறுப்பேற்றுகின்றன.

அடுத்து ஹோஸ்ட் - சூர்யாவால் இந்த ஷோவைச் சுமக்க முடியவில்லை. He could not carry the show. மிகவும் பரிதாபமாக அந்த சீட்டில் அமர்ந்திருக்கிறார். மேலும் அவரால் ஆடியன்ஸோடு ரிலேட் செய்ய முடியவில்லை. ஹாட்சீட்டில் அமர்ந்திருப்பவரோடு மட்டுமே தொடர்பு கொள்கிறார். நான் சொல்வது உயிரோட்டமுள்ள ஒரு உரையாடலைப் பற்றி. எனவே பார்வையாளர்களால் இந்த ஷோவோடு தங்களை ஐக்கியப்படுத்திக்கொள்ள முடியவில்லை. மனம் தானாகவே அமிதாப்போடு கம்பேரிஸனில் இறங்கி விடுவதைத் தவிர்க்க முடியவில்லை.

நிச்சயம் சூர்யாவுக்கு இந்த ஷோ தோல்வியே. மானிடரி கெய்ன்ஸ் பற்றி நாம் கணக்கெடுத்துக்கொள்ள வேண்டாம்.

Thursday, March 1, 2012

நடிகர் ஜீவா செய்வதை உங்களால் செய்ய முடியுமா?

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரியின் மகனும், குறிப்பிடக்கூடிய சில நல்ல படங்களில் நடித்தவருமான நடிகர் ஜீவா, விஜய் டி.வி நண்பன் பட புரமோஷன் நிகழ்ச்சியில் சொன்ன ஒரு விஷயம் இது - எனக்கு தற்சமயம் நடிக்கப் பிடித்திருக்கிறது. அதனால் நடிக்கிறேன். நல்ல படங்களில் நடிக்க வேண்டுமென்பது என் விருப்பம். இன்னும் சில வருடங்களில் நடிப்பது எனக்கு பிடிக்காமல் போகுமேயானால் நடிப்பை விட்டுவிட்டு எனக்குப் அந்நேரம் பிடித்த தொழிலைச் செய்ய கிளம்பிவிடுவேன்.

இவரது இந்த கருத்து மேம்போக்காக பார்க்கும்போது சாதாரணமாயிருந்தாலும் கொஞ்சம் யோசித்தால் ஜீவா கொடுத்து வைத்தவர் என்றே தோன்றுகிறது. பிடித்த தொழிலைச் செய்வது என்பது பெரும்பாலானோருக்கு வாய்ப்பதில்லை. ஐ.டி துறையிலிருந்து கொண்டு கல்லூரி ஆசிரியராக இருப்பதைப் பற்றி கனவு காண்பவரையும் (சம்பளம் ஒரு தடை - மேலும் பிழைக்கத்தெரியாதவன், திறமையில்லாதவன் என்று பல பெயர்கள் கிடைக்கும்), கல்லூரி ஆசிரியராக இருப்பவர் ஐடி துறைக்குள் செல்ல முடியவில்லையே என்று ஏங்கித்தவிப்பதையும் காண முடிகிறது. உண்மையில் கனவுகளைத் துரத்துவதற்கு மிகுந்த தைரியமும், சாதகமான குடும்பச்சூழலும் கட்டாயம் தேவை.

தி அல்கெமிஸ்ட் என்றொரு அருமையான நாவல். இந்நாவலின் நாயகன் ஒரு இடையன். அவனது காலத்தில் கடை வைத்திருப்பவனுக்குத்தான் மதிப்பு-அவனுக்குத்தான் திருமணத்துக்குப் பெண் கொடுக்கப் பிரியப்படுவார்கள். ஆனால் நம் கதாநாயகன் பயணம் செய்வதிலும், புதிய இடங்களை, நண்பர்களை அடைவதிலும் தணியாத தாகம் உள்ளவன். எனவே ஓரிடத்தில் அமர்ந்து கடை நடத்த அவன் பிரியப்படவில்லை. எனவே எப்போதும் ஏகாந்தமாக அலைந்து திரியக்கூடிய இடையன் தொழிலை அவனது தகப்பனின் விருப்பத்துக்கு மாறாகத் தேர்ந்தெடுக்கிறான். வெண்மேகம் போல் பிரபஞ்சமெங்கும் பயணப்படுகிறான்.அந்நாவலில் ஓரிடத்தில் சொல்கிறார் ஆசிரியர் Paulo Coelho - If you really want something the entire universe conspires to help you achieve that. ஆனாலும் இதன் நடைமுறை சாத்தியம் பற்றி எனக்கு இன்னும் நம்பிக்கையில்லை. லோன் வாங்கிப் படிக்கும் ஒரு மாணவன் குறைந்த சம்பள வேலையே தனக்கு ஆத்ம திருப்தி தருவதாகக் கருதினால் கடனை அடைப்பதும், குடும்ப பாரத்தை ஏற்பதும் எவ்வகையில் சாத்தியம்? எனவே தான் சொல்கிறேன் தான் விரும்பிய தொழிலைச் செய்பவர்கள் பாக்கியவான்கள். ஜீவா அவரே சொல்லிக்கொள்வதுபோல் சில்வர் ஸ்பூனோடு பிறந்தவர். அவருக்குப் பிடித்தால் நடிக்கலாம், பிடிக்காவிட்டால் ஹோட்டல் நடத்தலாம் - புலியைப் பார்த்து பூனைகள் சூடு போட்டுக்கொள்ளக்கூடாது.


Saturday, January 28, 2012

சிம்புவின் எக்ஸ்ட்ரா க்ளாஸஸ்

என் பையனைப் பொறுத்தவரைக்கும் ஸ்கூலிலிருந்து வந்தவுடனே கான்வர்ஸேஷன் வகுப்பு,ஸ்கூல் வொர்க் பண்ண,ஸ்டடி பண்ண ஒரு ட்யூஷன், தமிழுக்கு ஒரு டியூஷன் - இப்படி 3 ட்யூஷன் போறான். கர்நாடக சங்கீதம் கத்துக்கறான். ஒரு நாள் விட்டு ஒரு நாள் கராத்தே வகுப்பு, ஜிம்னாஸ்டிக்ஸ் வகுப்பு, தலைகீழா நடப்பான், சம்மர்ஸால்ட் அடிப்பான். பின்பாக பல்டி அடிப்பான். சனி ஞாயிறில் சினிமா பைட்டிங் கத்துக்கறான். கம்புச்சண்டை, மான் கொம்புச்சண்டை, குத்துச்சண்டை அதுக்கான மாஸ்டர் வச்சு கத்து தர்றேன். அப்புறம் டான்ஸ் வகுப்பு.

----- 1990ல் குமுதத்தில் டி.ராஜேந்தரின் பேட்டி. இந்த அளவுக்கு ஒரு பிள்ளையை வதைக்க வேண்டுமா? இவர் நார்வேயில் இருந்திருந்தால் சிம்புவை அரசுதான் வளர்த்திருக்கும். சமீபத்தில் நார்வேயிலிருக்கும் ஒரு இந்தியத்தம்பதியின் குழந்தைகளை அவர்கள் சரியாக வளர்க்கவில்லை என்று சொல்லி (3 வயது பையன் இன்னும் அப்பாவோடு தூங்குகிறான், கையால் சாப்பாடு கொடுக்கிறார்கள்-ஸ்பூன் பயன்படுத்துவதில்லை) நார்வே அரசாங்கம் அந்தப்பிள்ளைகளை அதுவே எடுத்து வளர்க்கிறது. இந்தக்காரணங்கள் நமக்கு மிகவும் அபத்தமாக இருக்கின்றன. ஆனால் சமீபத்தில் Amy Chua என்ற சீனப்பெண் எழுதிய Tiger Mom என்ற நாவல் மேற்கத்திய உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீனர்களின் குழந்தை வளர்ப்புமுறை பெரும்பாலும் நம் முறையை ஒத்துள்ளது. எனவே அவருடைய புத்தகத்தில் அவர் குழந்தையை அவர் வளர்த்தவிதம் குறித்து தெரிவித்துள்ள கருத்துகளில் ஏதும் தவறிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. (டி.ஆர் அளவுக்கு நிச்சயமாக பிள்ளைகளை வதைக்கக்கூடாது என்றாலும்கூட குழந்தைகள் தவறு செய்தால் அடித்து திருத்துவது, மியுசிக் வகுப்புகளைக் கட்டாயமாக்குவது போன்றவை). குழந்தையை அடிப்பதா என்கிறார்கள் மேற்கத்தியர்கள் - கையால் சாப்பாடு கொடுப்பது பெரிய குத்தமா என்கிறோம் நாம்.

பிள்ளைகளை நல்வழிப்படுத்துவது பெற்றோரின் கடமை. அவர்களின் உடல் உள்ள ஆன்ம வளர்ச்சியைக் கவனத்தில் கொள்ள வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது. எனினும் பிள்ளைகளின் வாழ்க்கையில் நம்முடைய எல்லையைப் பின்வரும் கிப்ரனின் வரிகள் கொண்டு வரைந்து கொள்வோம்.

Your Children are not your children.

They come through you and not from you.

though they are with you, they belong not to you.

You may give your love but not your thoughts..............................

உங்கள் குழந்தைகள் உங்களுடையவர்களல்ல.

அவர்கள் உங்கள் மூலமாக வருகிறார்கள் - உங்களிடமிருந்து அல்ல

அவர்கள் உங்களோடிருந்தாலும் உங்களுக்குரியவர்களல்ல

அவர்களுக்கு உங்கள் அன்பைக் கொடுக்கலாம் - உங்கள் எண்ணங்களை அல்ல

Wednesday, January 18, 2012

தனுஷின் ஹைப்பர்கேமி பிரச்சனைகள்



சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, தனுஷ் ஆகியோர் ரஜினியின் புகழைப் பயன்படுத்தி ஆதாயம் அடைய முற்படுவதாக ஒரு செய்தி வெளியாகியிருந்தது. இதில் ஐஸ்வர்யா, சவுந்தர்யாவை சொல்வது சரிதான். ரஜினியின் மகள் என்ற பேனர் இல்லாமல், ஐஸ்வர்யாவால் டைரக்ஷன் சான்ஸ் வாங்கமுடியுமா? அல்லது சவுந்தர்யாவால்தான் இந்த அனிமேஷன் வாய்ப்புகளைப் பெற முடியுமா?



ஆனால் தனுஷின் நிலையே வேறு. அவர் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்வதற்கு முன்பே 3 ஹிட் படங்களைக் கொடுத்துவிட்டார். நேஷனல் அவார்ட் வாங்கியிருக்கும் திறமையான நடிகர். இவற்றுக்கும் இவர் ரஜினியின் மருமகன் என்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ரஜினியின் பெயரைப் பயன்படுத்தி முன்னுக்கு வரவேண்டிய கட்டாயத்தில் அவர் இல்லை. இருப்பினும் அவர் ரஜினியின் மருமகனாக பார்க்கப்படுவதான உணர்வு அவருக்கு எப்போதும் இருக்கிறது. (சினிமாவில் நீங்கள் ரஜினியின் வாரிசா? - இல்லை நான் கஸ்தூரிராஜாவின் வாரிசு). பெப்சி உமா ஷோவில் திருமணமான புதிதில் - ஐஸ்வர்யா எப்படி இருக்காங்க? - ஏன் அவங்களப் பத்தியே கேக்குறீங்க. என் அம்மா அப்பா அண்ணா பத்தி கேளுங்க -புதுசா கல்யாணமான எந்த ஆணிடமும் மனைவியைப் பத்திதான் கேப்பாங்க தனுஷ். இது நீங்கள் ரஜினி மகளைத் திருமணம் செய்ததால் வந்த கேள்வி அல்ல.

தனுஷ் எப்போதும் இப்படியொரு தன்னுணர்வுடன் இருப்பதற்கு ஹைப்பர்கேமி தான் காரணம் - அதாவது நம்மை விட வசதியானவர் வீட்டில் பெண்ணெடுப்பது. எப்படி பார்த்தாலும் தற்சமயம் பொருளாதார ரீதியில் ரஜினியை விட தனுஷ் குறைவுதான். இதே தனுஷ் கமலஹாசனின் மகனாகவோ அல்லது ஒரு பெரிய குடும்பத்து - ஏவிஎம், டிவிஎஸ் etc etc - பிள்ளையாகவோ இருந்தால் யாரும் தனுஷை மாமனார் பெயரைப் பயன்படுத்துவதாக குறை சொல்லமாட்டார்கள்.

தனுஷ் இப்படியொரு ஹைப்பர்கேமி காம்ப்ளக்ஸில் தவிக்க வேண்டியதில்லை. கொலவெறி வெற்றிக்குப்பின் ஒரு வட இந்திய பேட்டியில் அவர் சொல்கிறார் - நல்ல வேளை இனிமேல் யாரும் என்னை ரஜினியின் மருமகன் என்று அடையாளப்படுத்த மாட்டார்கள். கவலைப்படாதீர்கள் தனுஷ் - உங்கள் திருமணத்திற்கு முன்னரே நீங்கள் உங்களை நிருபித்துவிட்டீர்கள்.

Tuesday, December 20, 2011

தமிழ் கேபிசியின் ஹோஸ்ட் யார் - இப்போதே தெரிந்து கொள்ளுங்கள்

மிகப்பிரபலமான கேபிசி நிகழ்ச்சியின் தமிழ் வடிவம் நாளை முதல் விஜய் டிவியில் வரவிருக்கிறது. இதை நடத்தப்போவது சூர்யா (நன்றி டைம்ஸ் ஆ்ப் இண்டியா).

நேருக்கு நேர் படத்தில் ஆட வேண்டிய நேரத்திலும் ஓடிக்கொண்டேயிருந்த அந்த இளைஞனின் வளர்ச்சி ஆச்சரியத்தைத் தருகிறது. தமிழில் இது போன்ற ஒரு ஷோவை நடத்திய சரத்குமார் அவ்வளவு பிரமாதமாகச் செய்ததாக எனக்குத் தோன்றவில்லை. சூர்யா எப்படி நடத்தப்போகிறார் என்பதைப் பார்க்க ஆவலாக உள்ளேன்.

என் பாடல்களை தனுஷ் பாடலோடு ஒப்பிடாதீர்கள் - உலகமகா தமிழ்ப்பாடலாசிரியர் சிம்பு

இப்பலாம் யார் வேணாலும் தமிழ் சினிமால பாட்டெழுதலாம்னு ஆயிருச்சு. சும்மா எதையாவது வார்த்தைய சேத்துப்போட்டு பாட்டுன்னு சொல்றாங்க. என் பாட்ட இனிமே தனுஷ் பாட்டோட கம்ப்பேர் பண்ணாதீங்க - என்கிறார் லூஸுப்பெண்ணே லூஸுப்பெண்ணே போன்ற மனதை வருடும் காதல் பாடல்களையும், எவன்டி ஒன்னப் பெத்தான் கைல கெடச்சா செத்தான் போன்ற உயர்தர, காலத்தால் வெல்ல முடியாத தத்துவப்பாடல்களையும் படைத்த மகாக்கவிஞர் சிலம்பரசன்.

இவரது லேட்டஸ்ட் படமான ஒஸ்தியிலும் ஒரு மிக அருமையான பாடல் - வாடி வாடி க்யூட் பொண்டாட்டி, எழுதியிருக்கிறார். அதன் வரிகள் - அடாடா - எதாவது கோயில் வாசல் கல்வெட்டுல எழுதி இவர் அது பக்கத்துலயே உக்காந்துக்கலாம். நமக்கு பின்னால வர்ற சந்ததிகள் அதப்படிச்சு, நம்மள பத்தி தெரிஞ்சுக்க வசதியாயிருக்கும். வரலாறு ரொம்ப முக்கியம் சிம்பு ;)

கண்ணதாசனும், பட்டுக்கோட்டையும் இன்ன பிறரும் போட்ட ராஜபாட்டையில் செல்வதாக நினைத்துக்கொண்டிருக்கும் சிம்பு சற்று யோசித்துப்பேசுவது நல்லது. கேட்டுக்கொண்டிருப்பவர்கள் மடையர்கள் அல்ல.

Friday, December 16, 2011

கொலவெறி இசையமைப்பாளரின் இன்றைய நிலை



கொலவெறி பாடல் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது. தமிழ்ப்பற்றாளர்கள் கொலைவெறியோடு சுற்றுகிறார்கள் பாடலாசிரியரைப் பின்ன வேண்டுமென்று (நம்ம தனுஷ்தான்). இந்த ஒரு பாடலால் தமிழ் அழிந்துவிடும், கலாச்சாரம் தகர்ந்துவிடும் என்றெல்லாம் நான் நம்பவில்லை. தமிழ் மொழி இந்த மைனர் glitches க்கெல்லாம் தகர்ந்துவிடக்கூடிய பலவீன மொழியல்ல.



விஷயம் இப்பாடலின் இசையமைப்பாளருக்கு நம் தமிழ் திரையுலகம் தந்துள்ள cold response ஐப் பற்றியது. ஆனந்த விகடன் பேட்டியில் அவ்விசையமைப்பாள இளைஞன் தெரிவித்துள்ளார் தமிழ்த்திரையிசையுலகில் இருந்து யாரும் தன்னைத் தொடர்பு கொள்ளவோ பாராட்டவோ இல்லை என்று. ஒரு இளைஞன் தன் முதல் பாடலின் இசையிலேயே உலகின் கவனத்தையே ஈர்த்துள்ளான் என்பது நிச்சயம் அங்கீகரிக்கப்படவேண்டிய விஷயம். தகவல் தொடர்பு மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுவிட்ட இக்காலத்தில் ஒரு எஸ்எம்எஸ் மூலம் கூட தம் வாழ்த்தைத் தெரிவிக்கலாம்.



ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருது வாங்கியபோது எல்லாப்புகழும் இறைவனுக்கே என்றார். இது நடந்த ஓரிரு வாரத்திற்குள்ளாக இளையராஜா ஒரு பேட்டியில் - இப்ப எல்லாரும் எல்லாப்புகழும் இறைவனுக்குன்னு சொல்றாங்க. இறைவன் அனைத்தையும் கடந்தவன். அவனுக்கு எதுக்குங்க புகழ் - என்கிறார். என்ன ஒரு அற்பத்தனமான கமண்ட். தன் வெற்றியை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் ஒரு சக கலைஞனைக் காயப்படுத்தும் விமர்சனம் இது. சூட்டோடு சூடாக உலகம் இப்போ எங்கோ போகுது என்று ஒரு பாடல் வேறு. இளையராஜாவின் மாஸ்டர் பீஸான ஜனனி ஜனனி பாடலால் தன் மகளுக்கு ஜனனி என்று பெயர் சூட்டிய நிறைய பேரை நான் அறிவேன். தன் இசையால் ஒரு தலைமுறையையே கட்டிப்போட்ட ஒரு மகா கலைஞன் தன் சக கலைஞனை மதிக்கவோ வாழ்த்தவோ ஏன் துணிவதில்லை?



டிஎம்எஸ்ஸின் சில ஆண்டுகளுக்கு முந்தைய தற்கொலை முயற்சி மற்றுமொரு அதிர்ச்சி. அவரின் சாகாவரம் பெற்ற பாடல்களை இன்றும் நாம் நம் பக்தி நிமிடங்களிலும்(தேவனே என்னைப் பாருங்கள், ஆறு மனமே ஆறு), தத்துவ பொழுதுகளிலும், மனம் உற்சாகததில் துள்ளும் போதும் (அன்று வந்ததும் அதே நிலா, அதோ அந்த பறவை) ............................. மீண்டும் மீண்டும் நினைவில் கொண்டு வந்து மகிழ்கிறோம். இப்பேர்ப்பட்ட அங்கீகாரத்தைப் பெற்றும் அவர் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். தனக்குரிய அங்கீகாரம் தனக்கு அளிக்கப்படவில்லை என்ற அவரது புலம்பல் எரிச்சலையே அளிக்கிறது. இப்படிப்பட்டவர்களை நாம் நம் சொந்தக்காரர்களில், பணியிடங்களில் என்று பல இடத்தில் சந்திக்க முடியும்.



நாம் வியந்து போற்றும் சாதனையாளர்கள் பலரும் தன் மேலும் தன் திறமை மேலும் நம்பிக்கையில்லாமல் இருப்பது மிகுந்த ஆச்சரியத்தைத் தருகிறது. தன் மேல் நம்பிக்கை இருப்பவன் ஒருபோதும் பிறனை அவமானப்படுத்த மாட்டான். திறமைகள் எங்கிருந்தாலும் அங்கீகரிக்கத்தவறமாட்டான். தனக்குக் கிடைத்த அங்கீகாரத்தில் திருப்தி உடையவனாய் நிச்சயம் இருப்பான்.

Monday, November 28, 2011

ஃபேஸ்புக்கின் கதை - தி சோஷியல் நெட்வொர்க்


சோனி பிக்ஸ் சேனலில் The Social Network திரைப்படத்தைப் பார்க்க நேர்ந்தது. 17.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு சாம்ராஜ்ஜியத்தை ஸ்தாபித்ததன் பின்னால் உள்ள அபாரமான மூளைத்திறனும், தொலைநோக்கும், நட்பும், நம்பிக்கை துரோகமும், ஐடியா திருட்டும், காத்திருந்து ஆளைக்கவிழ்க்கும் சதிகளும் - மார்வலஸ்.
ஃபேஸ்புக்கை உருவாக்கியதன் பின்னணி கதை இது. நம்மூரைப்போல் இத்திரைப்படத்தில் வரும் பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே - யாரையும் குறிப்பிடுபவையல்ல என்ற முன்னுரையெல்லாம் இல்லாமல், அனைத்து பாத்திரங்களையும் அதே உண்மைப்பெயர்களோடு உலாவ விட்டிருக்கின்றனர். facebook ன் founderஆக வரும் கதாபாத்திரம் திரைப்படத்திலும் அப்படியே, அதே பெயரோடுதான் வருகிறார்.
கதை இதுதான். zuckerberg ஹார்வர்டு பல்கலைகழகத்தின் மாணவர் (சைக்காலஜி மற்றும் கணினித் துறை). 2004ம் ஆண்டு தன் ரூம்மேட்ஸ் மற்றும் நண்பர்கள் டஸ்டின் மாஸ்கோவிட்ச், எட்வர்டோ சாவரின் ஆகியோரின் துணையோடு ஃபேஸ்மாஷ் என்றொரு வெப்ஸைட்டை உருவாக்குகிறார் - அதாவது தன் கல்லூரி பெண்களுக்கு ஆன்லைனில் மார்க் போடுவது. ஒரே நாளில் அனைவரும் இந்த சைட்டுக்கு லாகின் செய்த்ததால் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் நெட்வொர்க் க்ராஷ் ஆகிறது. இதையடுத்து கல்லூரியில் இவரது facemash தடை செய்யப்பட்டது. மேலும் அனுமதியின்றி கல்லூரி மாணவிகளின் புகைப்படத்தைப் பயன்படுத்தியதற்காக Zuckerberg அனைவரிடமும் மன்னிப்பு கேட்கவும் நேரிடுகிறது.
இச்சம்பவத்திற்கடுத்து Zuckerberg தன் website ஐடியாவைக் கல்லூரிக்கு வெளியில் தொடர்கிறார். தன் வெப்ஸைட்டை வெற்றிகரமானதாக்க யார் யாரை அவர் பிடித்தார், அவர்களைப் பயன்படுத்திக்கொண்ட பிறகு எவ்வாறு அவர்களைக்கழற்றிவிட்டார், facebookஐத் துவங்கியபோது தம்மோடிருந்த Eduardo Savarinஐ (Co-founder of Facebook) எப்படி வஞ்சித்தார் என்று விரிகிறது படம்.
மனிதமனத்தின் விகாரங்களும், நம்பிக்கை துரோகங்களும் நம்மை திகிலடைய வைக்கின்றன. குறிப்பாக நேப்ஸ்டர் கம்யுனிட்டியைக் (நாங்கள் கல்லூரியில் படித்தபோது இத்தளம் ரொம்ப ஃபேமஸ். music industryக்கு பெருத்த இழப்பை ஏற்படுத்தியதால் இத்தளம் தடைசெய்யப்பட்டது. இது ஒரு illegal தளம்தான்) கண்டுபிடித்த Sean Parker ஐ போலிஸில் மாட்டிவிடும்போது - இப்படியொரு வஞ்சகனின் வலைத்தளத்தையா நாம் பயன்படுத்துகிறோம் என்ற எண்ணம் ஏற்படுகின்றது. ஆசியர்களைப்பற்றியா இவர்களின் ஆதிக்க கருத்தும் சந்தடிசாக்கில் வெளிவருகிறது.
இப்படத்திற்கு Zuckerberg ன் reaction - ஹீரோவின் ட்ரெஸ்ஸிங் என்னைப்போலவே மிகச்சரியாக இருந்தது.மற்றபடி நிறைய விஷயங்கள் தவறு. இவ்வளவுதான் மொத்த ரியாக்ஷனே. வளர்ந்த நாடுகளின் கருத்துச்சுதந்திரம் நம்மை பிரமிக்க வைக்கிறது. இதைப்போல இங்கு சன் நெட்வொர்க் முன்னேற்றத்தின் பின்னணியைத் திரைப்படமாக எடுக்க முடியுமா?
அருமையான டைரக்ஷன், தேர்ந்த நடிப்பு, சிறந்த திரைக்கதை - வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் பாருங்கள்.

Saturday, September 17, 2011

பாலுமகேந்திராவின் மனைவி

நான் என் மனைவிக்கே விசுவாசமாக இல்லை. இப்படிச் சொல்லிக்கொள்வதில் எந்த வருத்தமும் இல்லை - படப்பெட்டி சினிமா இதழ் வெளியீட்டு விழாவில் பாலுமகேந்திரா வெளியிட்டுப் பேசியது.



தமிழ்நாட்டின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர்; தனது பெரும்பான்மையான படங்களில் (மீண்டும் கோகிலா, மறுபடியும், ரெட்டைவால் குருவி, சதிலீலாவதி) கணவன் வேறொரு பெண்ணை நாடிச் செல்லுவதில் உள்ள சிக்கல்களையும், மனைவிக்கு அதனால் ஏற்படும் மன உளைச்சலையும், நியாயமான கோபத்தையும் அழகுற, ஆழமாக காட்சிப்படுத்தியவரின் இப்படியொரு ஸ்டேட்மெண்ட் அதிர்ச்சியைத் தருகிறது. ஒரு கணவன் தன்னைவிட்டு வேறொரு பெண்ணை நாடும்போது அந்த மனைவி எவ்வளவு வருத்தமுறுகிறாள் என்பதை மிக நன்றாக ஒரு பெண்ணின் மனநிலையிலிருந்து புரிந்து கொண்டு அதை மிகச்சரியாகவும் படம் பிடித்த ஒரு ஆண்மகன் தன் மனைவியை அதே போன்றதொரு சோகத்தில் ஆழ்த்துவது எப்படி சாத்தியம்? படைப்புகள் என்பவை ஒரு படைப்பாளனின் பிரதிபலிப்பு இல்லையா? உச்சிதனை முகர்ந்தால் கர்வம் ஓங்கி வளருதடி என்று பாடிய பாரதியால் தன் மகளை வெறுக்க முடியுமா? அப்படி வெறுத்தால் அவனுடைய படைப்பு போலியானது இல்லையா? உண்மை மட்டுமே என்றும் நிலைக்கும். சதிலீலாவதியில் ஒரு காட்சியில் கமல் கதாநாயகனைப் பார்த்துச் சொல்வார் - கார் வாங்கி குடுத்தானாம், வீடு வாங்கி குடுத்தானாம், ஃப்ரிட்ஜ் வாங்கி குடுத்தானாம் (சின்ன வீட்டுக்கு). உன் மனைவி குடுத்ததுதானடா உங்கிட்ட இருக்குறது எல்லாம். என்னவொரு அருமையான வசனம். இதை எழுதியவரே இதை உணராமல் போவது எவ்வளவு பெரிய சோகம்.

பாலுமகேந்திராவின் மனைவியைப் பற்றி அவருடைய சிஷ்யர்கள் தங்கள் நிறைய பேட்டிகளில் சொல்லியிருக்கின்றனர். பாலா ஆனந்தவிகடனில் எழுதிய தொடரில் கூட பாலுமகேந்திராவின் மனைவியின் மென்மையான சுபாவத்தைப் பற்றி கூறியிருப்பார். அத்தகைய மனத்தை மவுனிகா என்னும் வலிய ஆயுதம் கொண்டு தாக்குவது எவ்விதத்திலும் சரியில்லை.

அதே போல் எழுத்தாளர் பாலகுமாரன் தன்னுடைய பல நாவல்களில் பெண்ணியம் பேசுவார். அவருடைய பயணிகள் கவனிக்கவும் என்ற நாவலில், கதாநாயகனது infatuation பற்றியும், பின்னொரு நாளில் அவன் உண்மையான காதலில் ஈடுபடுவதையும் அழகாகச் சுட்டுவார். காதலைப் பற்றி இவ்வளவு அழகாக எழுதுபவர், வாழ்க்கைத்துணையைப்பற்றி சிலாகித்துப் பேசுபவர் எப்படி இன்னொரு திருமணம் செய்தார்?? இதில் இரு மனைவியரும் ஒரே வீட்டில் ஒற்றுமையாக இருக்கின்றனர் என்று பெருமை வேறு. படைப்புகள் படைப்பாளிகளின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும். அது நான் வடித்த ஒரு கேரக்டர். அந்த கேரக்டர் அப்படி நடந்து கொள்ளும். அதற்கு நான் என்ன செய்வது என்று ஒரு படைப்பாளன் சொல்லுவானேயானால் then he is a hypocrite. இந்த வசனத்தை ஒரு நடிகன் வேண்டுமானால் சொல்லலாம் (உதாரணம்: ரஜினி- குசேலன் படம்). ஏனெனில் நடிகன் ஒரு கருவி மட்டுமே. ஆனால் ஒரு இயக்குனர், ஒரு எழுத்தாளர் கர்த்தா. அவன் இப்படிச்சொல்லுவது பேடித்தனம்.

முடிவாக, தவறுகளுக்கு மன்னிப்பு உண்டு. துரோகங்களுக்கு அல்ல.

Saturday, September 3, 2011

சூப்பர் சீன்ஸ்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாமல் இடம்பெறுபவை காதல் காட்சிகள். இவற்றில் என்னை மிகவும் கவர்ந்தவற்றை, எப்போது நினைத்து பார்த்தாலும் மனதில் இனிய உணர்வுகளைத் தோற்றுவிக்கும் காட்சிகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.




நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்


நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்


திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்


சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்


என்று காணுமிடமெல்லாம் தன் காதல்துணையையே காணும் இனிமையன்றோ காதல். கமலஹாசனைக் காதல்மன்னன் என்று ஏன் சொல்கிறார்கள் என்பதே எனக்குப்புரியவில்லை. கமல் தன்னுடைய முக்கால்வாசி படங்களில் தன் மேல் காதல் வெறி கொண்ட கதாநாயகிகளுக்கு தமிழ் பண்பாட்டைக் கற்றுத்தருகிறார் அல்லது தன் வேலை எவ்வளவு முக்கியமானது என்பதை மக்கு காதலிக்கு தன் ட்ரேட்மார்க் முறையில் சொல்லிக்கொடுக்கிறார் - சகலகலாவல்லவன், காக்கிச்சட்டை, சிங்காரவேலன், குருதிப்புனல், தேவர்மகன், மகாநதி என்று என் நினைவில் தோன்றும் கமலின் அனைத்துப்படங்களிலுமே இதே நிலைதான். விஜயகாந்த், சத்யராஜ் என்று அந்த பீரியட் நடிகர்களின் அனைத்துப்படங்களுக்கும் இது தான் நிலை. கார்த்திக் துறுதுறு காதலனாகத் தோன்றி இளம் மனங்களைக் கொள்ளை அடித்தார்.


விஜய் காதல் காட்சிகளைப் பற்றி பேச ஒன்றுமேயில்லை. பத்தாம்பசலித்தனமான வசனங்களும் காட்சிகளுமே காதல் என்ற பெயரில் இடம் பெறுகின்றன. விஷால், சிம்பு, தனுஷ் முதலிய இன்றைய கதாநாயகர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் - நண்பர்களிடம் சவால்விட்டு பெண்களை மடக்குவது போன்ற காட்சிகளைப் பெண்கள் நிச்சயம் ரசிப்பதில்லை.


கம்மிங் டு த பாய்ண்ட் - எனக்குப் பிடித்த காதல் காட்சி - ஜானி திரைப்படத்தில் ரஜினி, ஸ்ரீதேவி இடையேயான காட்சி - ரஜினி முதலில் கரும்பு ஜூஸ் 2 டம்ளர் வாங்கி வருவார். ஒரு டம்ளரில் இருப்பது சிந்திவிடும். நிறைய இருக்கும் டம்ளரை ஸ்ரீதேவியிடம் கொடுப்பார். ஸ்ரீதேவி அதை வாங்க மறுத்து குறைவாக இருக்கும் டம்ளரையே தனக்கும் கேட்பார். என்ன ஒரு அருமையான ரொமான்ஸ்.


ஒரு நல்ல, இனிமையான உணவை ரசித்து உண்ணும் போதும், அருமையான புத்தகத்தைப் படித்துக் கரையும்போதும் இதை ரசிக்க நம்மோடு அவன்/ள் வேண்டுமே, இந்த அருமையான உணவின் சுவையை அவனும்/அவளும் சுகிக்க வேண்டுமே என்ற நினைவுதானே, கரிசனம் தானே காதல். தனக்கு குறைவானதை எடுத்துக்கொண்டு நிறைவானதைத் தன் துணைக்குத் தருவது தானே காதல். அதே திரைப்படத்தில் இன்னொரு காட்சி. ஸ்ரீதேவி எதற்கோ அழுவார். அதை ரஜினியால் துளியும் சகித்துக்கொள்ள முடியாது. 'ஏன் ஏன் அழுறீங்க கண்ண தொடச்சிக்கோங்க" - தன் மனதிற்கினியவள் துயருறும் போது அதைக் காணவும் சகியாத மனம் தானே காதல் நிறைந்தது. அந்தக்காட்சியில் நீங்க அழுதா என்னால தாங்க முடியாது என்று வசனம் பேசியிருந்தால் that scene would have fell flat. எல்லாவற்றையும் சொல்லிவிடமுடியுமா? பேசாத வெற்றிடத்தையும் நிரப்புவது தானே காதல். இதற்கு இணையான ஒரு காதல் காட்சியை இன்று வரை நான் காணவில்லை. அதே படத்தின் சென்யோரிட்டா பாடலில் கற்பனை காகம் கதாநாயகியின் மேல் அசிங்கம் செய்துவிடும். ரஜினி அதை துரத்துவார். அதில் தெரியும் அக்கறை - சான்ஸே இல்லை. இன்னொன்றையும் இவ்விடத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். ரஜினி போல் பவர்ஃபுல் ஸ்கிரீன் பிரஸன்ஸ் கொண்ட நடிகர் இன்று வரை யாரும் இல்லை. power packed performance என்பார்களே அது - மற்றும் அந்த manliness. அதனால் தான் அவர் அன்றும் இன்றும் என்றும் SuperStar.


முன்னால் கண்ணாடிக்கதவைத்திறந்து கொண்டு கணவன் கடைக்குள் நுழைய பின்னால் குழந்தையுடன் வரும் மனைவி கதவைப்பிடிக்கத் தடுமாறுவதை எத்தனையோ இடங்களில் பார்த்திருக்கிறேன். அக்கறைதான் காதல், பகிர்தல் தான் காதல். இதை அருமையாக சித்தரித்த ஜானிக்கே என் ஓட்டு.

Monday, August 1, 2011

ரியலிசப் படங்கள்

நீண்ட நாட்களுக்குப்பின் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. தற்சமய ட்ரெண்டான ரியலிச படங்களைப் பற்றி நான் நினைப்பதைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அங்காடித்தெரு, கற்றது தமிழ், நந்தலாலா, உன்னைப்போல் ஒருவன், தெய்வத்திருமகள் - இந்தப்படங்களின் க்ளிப்பிங்சைப் பார்க்கும் போதே மனதை ஒரு பதட்டம் ஆக்கிரமிக்கிறது. இவற்றின் இயக்குனர்கள் ஒரே குரலில் சொல்லும் செய்தி - உண்மை நிகழ்ச்சிகளின் அடிப்படையில் இப்படத்தை எடுத்தேன். இவர்கள் சொல்வது நிச்சயம் சரிதான். ஒரு முறை சரவணா ஸ்டோர்ஸ் சென்றிருந்தோம் (இனிமேல் ஏழேழு ஜென்மத்துக்கும் அங்கு செல்ல மாட்டேன், அனைத்துப் பொருட்களையும் இலவசமாகக் கொடுத்தாலும் கூட). வழக்கம் போல் என் மகளுக்கு பாத்ரூம் வந்துவிட்டது. அங்கு இருந்த லேடீஸ் டாய்லெட் - தனியாக கதவுடன் இருக்கக்கூடியவை 6 இருந்திருக்கலாம் மற்றவை வெட்டவெளி. உள்ளே ஒரு பெருங்கூட்டம். தனி டாய்லெட்டுக்கு காத்திருப்பதெல்லாம் நிச்சயம் கஷ்டம். தள்ளிக்கோங்க ப்ளீஸ் அவசரம் என்ற ஒரு சிறு வயது சேல்ஸ் பெண், அங்கு யாரிருக்கிறார்? பக்கத்திலிருக்கின்றனரா, தூரத்திலிருக்கிறாரா என்பதையெல்லாம் பார்க்காமல் என் காலுக்கு மிக அருகிலேயே அமர்ந்து விட்டார். நாமாக ஒதுங்கிக்கொள்ள வேண்டியதுதான். எனக்கு கண்கள் தளும்பிவிட்டன. ஒரு சின்னஞ்சிறு பெண் பக்கத்திலிருக்கும் யாரையும் கணக்கிலெடுத்துக்கொள்ளாமல் இயற்கை உபாதையைத் தணித்துகொள்வது எனக்கு பரிதாபமாக இருந்தது. என்ன ஒரு மோசமான வேலை பார்க்கும் சூழல்?

நான் சொல்ல வருவது இதைத்தான் - நேரிலேயே ஏற்கனவே ஜீரணிக்க முடியாத, நம்ப முடியாத பல விஷயங்களைப் பார்க்கிறோம், கேட்கிறோம். இவை நம்மை ஒரு விதமான குற்றமனப்பான்மைக்கும், மனச்சோர்வுக்கும் ஆளாக்குகின்றன. அவற்றையே மீண்டும் போய் தியேட்டரிலும் பார்க்கும் மனவலிமை நிச்சயம் எனக்கு இல்லை. why should i relive my same stress again in அங்காடித்தெரு?


தமிழ் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கம்மி என்பது நமக்குத் தெரியாதா? இப்போதைக்கு எதைப்படித்தாலும் வேலை வாய்ப்பு கம்மிதான். 3 வேளை சாப்பிடவும், தங்க இடமும் இல்லாத எத்தனையோ மாணவர்களை நான் அறிவேன். அம்மாக்கு உடம்பு சரியில்ல. பணத்துக்கு என்ன பண்ணனு தெரியல என்று கண்ணீர் விட்ட மாணவ சகோதரர்களை எனக்குப் பர்சனலாகத் தெரியும். நேற்று டைம்ஸ் ஆஃப் இண்டியாவில் வந்த வெவ்வேறு செய்திகள் -




  1. சென்ற வருடம் படிப்பை முடித்த ஒரு ஏரோநாட்டிக் இன்ஜினியர் வேலை கிடைக்காமல் ஏடிஎம்மை கொள்ளை அடிக்க முயற்சி.


  2. BL மாணவன் வழிப்பறி கொள்ளை


  3. கல்லூரி மாணவர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டனர்

இதை ஒரு 3 மணி நேரம் படமாகப் பார்க்க வேண்டுமா?


படம் என்பது அன்றாட வாழ்க்கையின் தீவிரத்தைக் கொஞ்ச நேரமாவது குறைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தலைவர் ரஜினி வேலையில்லாப் பட்டதாரியாக லெதர் பேண்ட், ரேபான் கண்ணாடி போட்டுக்கொண்டு வேலை தேடுவார், கதாநாயகி - உனக்குத்தான் வேறு வேலையில்லையே என்னைக்காதலி- என்று பாடியாடுவார். உடனே தலைவர் சர்ட்டிபிகேட் ஃபைலைத் தூக்கிப்போட்டுவிட்டு காதல் செய்யத்துவங்கிவிடுவார். கட்டாயம் பின்னொரு நாளில் ஏதாவது வேலை கிடைத்துவிடும். நம்பிக்கை தாங்க வாழ்க்கை. படம் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும். உண்மையிலேயே அந்நாளையப் படங்களுக்காக மனம் ஏங்குகிறது.


அலைகள் ஓய்வதில்லை படத்தில் சிலுவை, பூணூலைத் தூக்கிப்போட்டுவிட்டு போவதோடு படத்தை முடித்து விட்டார். அதற்கு பிறகு அவர்கள் எவ்வளவு கஷ்டப்படார்கள் என்பதை நான் காண்பிக்கிறேன் என்று கிளம்பும் இயக்குன நண்பர்களே - அவர்கள் நாய்படாத பாடு படுவார்கள் என்பதை நாங்கள் அறிவோம் (தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சிவியின் மகளுடைய காதல் கணவன் dowry harassmentக்காக ஜெயிலில், டாக்டர் மகளின் காதல் கணவனை pwdல் வேலை பார்க்கும் என்ஜினியர் ஆள் வைத்துக் கொன்றார் etc etc etc...................................). இந்தப்பாடுகளைப் பக்கத்து வீட்டில், எதிர்த்த வீட்டில், உடன் வேலை பார்ப்பவர்களிடத்தில் தினமும் பார்க்கிறோம். And they lived HAPPILY everafter என்பதை திரைப்படத்திலாவது பார்க்கவே நாங்கள் விரும்புகிறோம்.

Wednesday, September 15, 2010

சினிமாப் பாடல்கள்

சில சினிமாப் பாடல்களை எப்போது கேட்கும் போதும், அப்பாடலை நான் முதன் முதலில் கேட்க நேர்ந்த நேரத்தின் குறிப்பிட்ட காட்சிகள் மனதிற்குள் நிழற்படமாய் மறுபடி, மறுபடி தோன்றும். அச்சந்தர்ப்பத்தில் நான் இருந்த மனநிலைக்கும் - அது மகிழ்ச்சியோ, சோகமோ - மறுபடியும் செல்ல நேரிடுகிறது. நாங்கள் முன்பிருந்த லைன் வீட்டின்(கிட்டத்தட்ட 10 வீடுகள் ஒரே வரிசையில் இருக்கும். கொடுமைங்க அது) தெரு முனை டீக்கடையில் ரேடியோ இருக்கும். காலையிலேயே விவிதபாரதியின் வர்த்தக ஒளிபரப்பு உச்சஸ்தாயியில் அலறும். 'ஒரு கிளி உருகுது', 'ஓ மானே மானே', 'விக்ரம்' பாடல்களை இப்போது கேட்கும் போதும் அக்கடையில் நாங்கள் வாங்கிச்சுவைத்த வெங்காய பக்கோடாவின் சுவை நாவில் வருகிறது.
சிந்துபைரவி பாடல்கள் பக்கத்து வீட்டு செந்திலக்காவை (அக்கா தான். அவர்களின் முழுப்பெயர் செந்தில் செல்வி) நினைவூட்டும். அந்தப்படம் வந்த புதிது. பாடல்கள் மெகா ஹிட். நான் ஏற்கனவே சொன்னது போல் ரேடியோ டீக்கடையில் மட்டுமே இருக்கும். இந்நிலையில் tape recorder பற்றியெல்லாம் பேசவே முடியாது. இப்படியொரு சூழலில் செந்திலக்கா தன் கல்லூரி தோழியிடம் ஒரு டேப் ரிக்கார்டர் தேத்திக்கொண்டு வந்தார், சிந்து பைரவி காசட்டோடு. 10 வீட்டுப் பிள்ளைகளும் அவர்கள் வீட்டில். பாடறியேன் படிப்பறியேன், தண்ணித்தொட்டி பாடல்களை ரசித்து தள்ளினோம். அக்கா பார்க்காத நேரம் அதைத் தொட்டுப்பார்த்துக்கொள்வோம். நண்பர்களே 36 inch டிவி கொடுக்காத சந்தோஷத்தை அந்த tape recorder அன்று தந்தது.
மை டியர் குட்டிச்சாத்தான் படத்தில் 'பூ வாடை காற்றே' என்றொரு பாடல். இளம் குழந்தைத்தோழர்கள் மகிழ்ந்து கழித்து விளையாடும் காட்சிகளைக் கொண்ட பாடல். இதை இப்போது எங்கும் கேட்கக்கூட முடியவில்லை :( . என் இனிய பள்ளித் தோழிகள் நபீஸா, திலீபா (5th std வரை என்னோடு படித்தவர்கள். )திலீபா இலங்கையிலிருந்து வந்தாள். அவளின் பெயர்க்காரணம் இப்போது தான் எனக்குப் புரிகிறது. Contact மீண்டும் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் ??!! என்னருமை திலீபா எங்கிருக்கிறாய்? . நபீஸாவின் அப்பா சிங்கப்பூரில் கடை வைத்திருந்தார். அவர்களுடைய வீடு பெரிய பங்களா. காம்பவுண்டுக்குள் ஒரு கட்டைச்சுவர் இருக்கும். அந்தப்பாடலில் பிள்ளைகள் சுவரின் மேல் ஏறி நடப்பார்கள். ஃபேனில் அமர்வார்கள். நாங்கள் அதைப்போல் செய்வதாக நினைத்து அந்தக்கட்டைச்சுவரின் மேல் ஏறி ஆடுவோம் - ம் இனிய நாட்கள் அவை.
சோகம் இனி இல்லை பாடல், நாங்கள் NTSE வகுப்புக்கு காலையில் (7 மணி) வகுப்பறைகள் திறக்கக் காத்திருந்த - மரத்தடியில் அமர்ந்து கொண்டு, புல்லின் நுனியில் பனித்துளிகளை உதிர்த்துக்கொண்டு - போது எங்கோ ஒலித்தது. அந்தப்பாடலை இப்போது கேட்கும் போதும் அந்த நுனிப்புல்லின் ஈரம் விரலில் குறுகுறுக்கிறது.
9th std class roomல் அமர்ந்திருந்த போது ஒலித்த 'பூங்காத்து திரும்புமா' பாடலின் 'எனக்கொரு தாய்மடி கிடைக்குமா?' வரி கண்ணீர் உகுக்கச் செய்தது. (அம்மா என்னை 6th லிருந்து ஹாஸ்டலில் விட்டுவிட்டார்கள்)
College I yr ல் இருந்த போது அன்று Sports Day. Physics allied வகுப்பு. groundல் பாட்டு போட ஆரம்பித்து விட்டார்கள். அந்த சத்தத்தில் வகுப்பு முடியவில்லை. அதனால் ஃப்ரி hour விட்டு விட்டார்கள். அந்த எதிர்பாராத ஃப்ரீ hour நிமிடத்தின் சந்தோஷம் இப்போதும் 'ராஜனோடு ராணி வந்து' - சதிலீலாவதி கமல் படம் - பாடலைக் கேட்கும்போது ஏற்படுகிறது.
நாங்கள் இதற்கு முன் இருந்த வீடு ஒரு independent house. பக்கத்து வீட்டில் கட்டட வேலை நடந்து கொண்டிருந்தது. கொத்தனார்கள் எப்போதும் ரேடியோ வைப்பர். எங்கள் வீட்டின் முன் பெரிய தோட்டம் இருக்கும். ராத்திரி நேரம் பூச்சிகள் பயத்தால் பிள்ளைகளை வெளியே விட மாட்டோம். ஒரு நாள் இரவு 8 மணி இருக்கும். என் பெண்ணை வீட்டிற்குள் காணவில்லை. அந்நேரம் அவள் வயது 4. ஆளுக்கு ஒரு பக்கம் தேடினோம். பார்த்தால் கதவு திறந்து இருந்தது. இவள் தோட்டத்தில் நின்று கொண்டு பக்கத்து வீட்டு ரேடியோவில் இருந்து வரும் 'கல்லை மட்டும் கண்டால்' பாட்டை ரசித்துக்கொண்டு நின்றாள். இசையால் ஆகர்ஷிக்கப்படுவதற்கு வயது வரையறை ஏதும் இல்லை போலும். May be இந்தப்பாடலை பின்னொரு நாள் அவள் கேட்கும் போது, தோட்டத்தில் நின்று கொண்டிருந்த தினம் அவளுக்கு நினைவிற்கு வரலாம் :)

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes