எத்திராஜ் மகளிர்க் கல்லூரியின் ஆண்டு விழா மற்றும் இன்டர்-காலேஜ் ஃபெஸ்டிவல் சிருஷ்டி-14 கோலாகலமாக நடந்தேறியது. ஜெயம் ரவி, சமுத்திரக்கனி,ஆச்சி மனோரமா, சேரன், ஜீ.வி.ப்ரகாஷ், விவேக் என ஏகப்பட்ட சின்னத்திரை மற்றும் பெரிய திரை நட்சத்திரங்கள்.
இதில் என்னைக் கவர்ந்த விஷயம் என்னவென்றால்,ஃபேஷன் ஷோவில் அல்ட்ரா மாடர்னாகவும், வெஸ்டர்ன் டான்ஸ், ம்யூசிக்கில் இளையதலைமுறையின் பல்ஸுக்கேற்ப அசத்தும் மாணவியர், அதே அளவு உற்சாகத்துடனும் ஆதன்ட்டிசிட்டியுடனும் பரதநாட்டியத்திலும், கர்னாடக சங்கீதத்திலும் ஜொலிக்கின்றனர்.
இது வரை நான் பார்த்த பரதநாட்டியங்களில் - ஸ்கூல் ஸ்டேஜில் வெள்ளையாக இருக்கும் ஒரு குட்டிப்பெண்ணிற்கு தாவணியெல்லாம் கட்டிவிட்டு, குஞ்சம் வைத்து, ரோஸ் கலர் பவுடர், லிப்ஸ்டிக்கெல்லாம் அப்பிவிட்டு - ஒரு நாலைந்து பாட்டுகளுண்டு - மாதவி பொன் மயிலாள், அழகு மலராட, அபிநய சுந்தரி ஆடுகிறாள் - இவற்றில் ஏதாவது ஒன்றுக்கு அந்த சிறு பெண்ணை ஆட விட்டுவிடுவார்கள். அதுவும் குஞ்சத்தை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, தாவணியை இன்னொரு கையால் பிடித்துக்கொண்டு டான்ஸ் போல் ஏதோ ஒன்று செய்யும். நான் முதலில் வேலை பார்த்த (டவுன் சவுத்) காலேஜில், கொஞ்சம் முன்னேற்றம் - வினாயகர் பாட்டுக்கு ஆடுவார்கள். முகத்தைச் சிரித்தபடி வைக்க வேண்டும் என்று இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் போலும். பிள்ளைகள் ஈயென்று சிரித்தபடி தையா தக்கா என்று ஆடுவார்கள். பிறிதொரு வகை - நம் தூர்தர்ஷனில். 30 வயதிற்கு மேற்பட்ட ஆன்ட்டிகள் அபிநயம் பிடிக்கிறேன் என்று சாகடிப்பார்கள். கிருஷ்ணா நீ பேகனே என்று அரம்பித்த உடனேயே எழுந்து அந்தப்பக்கம் போய்விடுவேன். ( அப்ப சானல் மாத்துற லக்சுரிலாம் கிடையாது. நாம மாறிக்க வேண்டியதுதான்). பரதநாட்டியம் என்றாலே தெறித்து ஓடுவோம். கொஞ்சம் லேட்டா போய்க்கலாம். மொதல்ல பரதநாட்டியம் தான் இருக்கும் - என்பது எல்லா பள்ளி, கல்லூரி விழாக்களிலும் கேட்கக்கூடிய ஒரு சாதாரண டயலைக்
ஆனால் எத்திராஜ் மாணவியரின் பரதநாட்டியம் அடேங்கப்பா ரகம். பரதம் என்பது 10 வயது முதல் 20 வயது வரை உள்ள பெண்கள் ஆட வேண்டிய ஒரு கலை. பரதத்தை டெக்னிக்கலாக என்னால் அனலைஸ் செய்ய முடியாது. ஆனால் இந்தப்பெண்கள் 'சதாசிவன், பனிமாமலையன், மத்தளம் கொட்டிட, தாண்டவம் ஆடுகிறான்' என்ற வரிகளுக்கு அபிநயம் பிடிக்கும்போது, மத்தள ஓசை செவிகளில் அதிர்கிறது, விரிசடையுடன் தாண்டவம் ஆடும் எம்பிரான் கண்முன் எழுந்தருளுகிறான். பிறகென்ன கண்களில் நீர் மல்க அவனைத் தரிசிக்க வேண்டியதுதான்.
ராம்ப்வாக், அது இது என்று என்னனென்னவோ மாடர்னாகச் செய்யும் இந்தக்கல்லூரிப்பிள்ளைகள், நம் மண்ணின் பாரம்பர்யத்தையும் ஏகபோகமாக பரிபாலிக்கிறார்கள்.(இக்கல்லூரியில் நடைபெறும் தியாகராயர் ஆராதனையும் குறிப்பிடத்தக்க ஒன்று. கர்னாடக இசையையே அறியாதவர்களையும் மனம் கரைந்துகேட்கவைக்கும் வண்ணம் பாடுகிறார்கள்). நம் பண்பாட்டுவேர் பாதாளம் வரை பாய்கிறது. அசைப்பது கடினம், கடினம்.
0 comments:
Post a Comment