இது ஸ்கூல் அட்மிஷன் சீசன். பிரபல பள்ளிகளில் அட்மிஷனுக்காகப் பெற்றோர்கள் அலைமோதிக்கொண்டிருக்கின்றனர். தன் பிள்ளைகளுக்குச் சிறந்ததை வழங்குவதே ஒவ்வொரு பெற்றோரின் ஆவலாக இருக்கிறது. இதற்காக தம் சக்திக்கு உட்பட்டதையும், அப்பாற்பட்டதையும் செய்ய பெற்றோர் சித்தமாக இருக்கின்றனர். மேலும் இன்ன பள்ளியில் என் பிள்ளை படிக்கிறான் என்று கூறிக்கொள்வது ஒரு முக்கியமான ஸ்டேட்டஸ் சிம்பல். பத்மா சேஷாத்திரியில் மூன்றாம் வகுப்பு வரை ஒரு வருடத்திற்கு 1,25,000 ரூபாய், டிஏவியில்ரூ. 40000 , செயின்ட் பிரிட்டோவிலும் இதே ரேன்ஜ்.
என் பிள்ளைகளையும் அனேக வருடங்கள் ஸ்டேட் ரேங்க் எடுக்க வைக்கிற ஒரு பிரபல சிபிஎஸ்இ பள்ளியில் சேர்த்து விட்டு, தற்சமயம் மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் விழித்துக்கொண்டிருக்கிறேன் - காரணம் வொர்க் லோட் மற்றும் படிப்பைத் தவிர வேறெதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமை.
பள்ளிகளும், கல்லூரிகளும் இன்று எதைக் கற்றுத் தருகின்றன? சம்பாதிப்பதற்கான வழியை. இந்த வருடம் ஐஐடி நுழைவுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவன் சொல்கிறான் - கடுமையான போட்டி மற்றவர் மேல் பொறாமையைத் தோற்றுவிக்கிறது - என்று. ஆர்.கே.நாராயணின் ஸ்வாமி அண்ட் பிரண்ட்ஸ் புத்தகம் வெளியாகி உலகப்புகழ் பெற்ற அதே வருடம், மெட்ராஸ் யுனிவர்சிட்டி அவர் ஆங்கிலத்தேர்வில் தோல்வியுற்றதாக அறிவிக்கிறது. என்ன ஒரு அருமையான கல்விமுறை.
சக மனிதன் மேல் பொறாமைப்படுவதும் , க்ரியேட்டிவிட்டி என்பது துளியும் இருந்துவிடக்கூடாது என்று மிகக் கவனமாகப் பார்த்துக்கொள்ளுவதுமான கல்விமுறை.
என் பிள்ளைகளுக்கு நான் பின் வருவனவற்றைக் கற்றுத் தர விரும்புகிறேன்.
- எப்போதும் மனமகிழ்ச்சியுள்ளவர்களாக, கவலைகளற்றவர்களாக இருக்க வேண்டும்.
- எதையும் தைரியமாக எதிர்கொள்பவர்களாக
- உடல், மன ஆரோக்கியம் உள்ளவர்களாக
- மனிதத்தன்மை நிரம்பியவர்களாக, எதிலும் நேர்மை, உண்மையுள்ளவர்களாக
- வாழ்க்கையைக் கொண்டாடுபவர்களாக இருக்க வேண்டும்
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை
நேரேயின் றெனக்குத் தருவாய்
என் முந்தை தீவீனைப் பயன்கள்
இன்னும் மூளாதழிந்திடல் வேண்டும்
இனி என்னைப் புதியவுயிராக்கி
எனக்கேதுங் கவலையறச்செய்து
மதி தன்னை மிகத் தெளிவு செய்து
என்னையென்றும் சந்தோஷம் கொண்டிருக்கச்செய்வாய்
என்னும் பாரதியின் வரங்கேட்டலில் வருவது போல் மதி தனை மிகத்தெளிவு செய்து, கவலைகள் அறச்செய்து, சந்தோஷம் கொண்டிருக்கச்செய்யும் பள்ளியைத் தேடிக்கொண்டிருக்கிறேன்....................