எதிர்பாராவிதமாக எனக்கு ஒன்றரை மாதம் விடுமுறை கிடைத்தது. ஒரு வார விடுமுறை எதிர்பார்த்ததுதான். ஆனால் அது ஒன்றரை மாதமாக நீண்டு விட்டது. முதல் ஒரு வாரம் பிரமாதமாக கழிந்தது. காலை எட்டரை மணிக்குள் கணவன், பிள்ளைகள் அனைவரும் கிளம்பி விடுவர். பின்னர் நீண்டு கிடக்கும் பகல் பொழுது முழுவதும் எனக்கே எனக்கு. நிதானமாக 10.30 மணிக்கு டிஃபன், சாப்பிட்டானதும் மீண்டும் ஒரு காஃபி, குறுக்கீடுகள் ஏதுமின்றி தொலைக்காட்சி - என் கையில் ரிமோட்டுடன். என் இஷ்டம் போல் சேனல் மாற்றி மாற்றி என்ஜாய் செய்து கொண்டிருந்தேன். பின்னர் சமையல் குறிப்புகளைப் பார்த்து வெரைட்டி சமையல். மதியம் மகன் வந்தவுடன் அவனுக்கு சாப்பாடு கொடுத்து தூங்கப் பண்ணிவிட்டு மீண்டும் தொ.கா. ஒரு குட்டித் தூக்கம். இப்படியாக ஒரு உப சொர்க்கத்தைச் சிருஷ்டித்து மகிழ்ந்து கொண்டிருந்தேன்.
ஒரு வாரம் முடிந்தது. சேனல்கள் கடுப்படித்தன. டாக் ஷோக்களில் ஒரு குடும்பத்து உறுப்பினர்களை வரவழைத்து, எதிரெதிர் அணிகளில் உட்கார வைத்து, சண்டையை மூட்டி ஒரே காரில் வந்தவர்களை இரண்டு ஆட்டோக்களில் அனுப்பி வைத்தனர். விஜய் டிவியில் லட்சுமி 'அந்தக்குழந்தையைக் கொடுத்தப்ப உன் மனசு எப்படி இருந்துச்சு? சொல்லு. நானும் ஒரு தாய்' என்கிற ரீதியில் பேசி எப்படியாவது அழ வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தார் (டிஆர்பி படுத்தும் பாடு). எல்லா சேனல்களிலும் Super Singer, Super Dancer, Top Singer என்ற தலைப்புகளில் குழந்தைகளும், பெரியவர்களும் படுத்திக் கொண்டு Sorry பாடிக் கொண்டு இருந்தனர். நியூஸ் சேனல்கள் இன்னும் மோசம். ப்ளாஷ் நியூஸ், லைவ் என்ற பெயர்களில் பாத்திரத் திருடர்கள் கல்லால் அடித்துக் கொல்லப்படுவதையும், போலீஸ் ஸ்டேஷனில் நடைபெறும் 3rd degree torturesஐயும் ஒளிபரப்பின. அதே பாடல்கள், நகைச்சுவைத் துணுக்குகள். வெறுத்து விட்டது எனக்கு. இதற்கிடையே நான் முயற்சி செய்த Paneer Capsicum masala, Prawn Capsicum curry, Mushroom masala போன்றவற்றிற்கு பெரும் வரவேற்பும், பேராதரவும் அளித்த குடும்பத்தார் நாளடைவில் 'நீ சமைக்கும் பருப்பு சோறும், உருளைக்கிழங்கும் ரொம்ப நல்லா இருக்கும்' என்று சொல்ல ஆரம்பித்தார்கள். புரிந்து விட்டது. சரி masalas, curries இனிமேல் செய்யவில்லை என்றேன். மகிழ்ந்து களிகூர்ந்தார்கள். ம்ஹும் இந்த வளரும் மல்லிகா பத்ரிநாத்திற்கு வந்த சோதனை ;(.
சமையல் முயற்சிகள் நின்று போயின. தொ.கா பக்கம் போக முடியவில்லை. நண்பர்களுக்கு ஃபோன் செய்தால் 'ஏய் என்ன இந்த நேரத்துல, வெயிட் பண்ணு. 5 நிமிஷத்துல கால் பண்றேன்' என்று வைத்து விட்டார்கள். என்ன செய்வது என்று யோசித்து வலைப்பூ ஆரம்பித்து விட்டேன். நண்பர்களே உங்களுக்கு இந்த வலைப்பூ bore அடிக்கும் முன் எனக்கு லீவ் முடிந்து விடும் என நம்புகிறேன்.
'இந்த வாழ்க்கைக்குப் பயன் என்பது ஒன்றும் இல்லை. நாமாக ஒன்று கண்டுபிடித்துக் கொள்ளவேண்டியது தான் (This life haas no purpose at all unless we find one) ' என்ற வாக்கியம் தான் ஞாபகம் வருகிறது.
2 comments:
பொழுது போகலைன்னா விஜய் பட டீவீடி வேணுமா?
ஹ்ம்ம்..!
பொதுவா வேலைப் பளு நெருக்கும்போது சற்று ஒய்வு கிடைக்காத என்று தோன்றும்...அப்படி ஒரு ஒய்வு அமையும்பொழுது சில நேரங்கள் அல்லது நாட்கள் கழித்து ஒரு வித சலிப்புணர்வு தோன்றிவிடும்...! வேறென்ன பண்றது...ஒய்வு கிடைக்கும் கால வரையறை முன்பே தெரிந்திருந்தால் எதாவது மாற்று வழிகளை அலசலாம்.....இல்லாவிடில் முடிந்த அளவு தூங்கி கழிக்க வேண்டியதுதான்.
Post a Comment