விஜய் டிவி நீவெஒகோ (இங்கிலிஷ்ல மட்டும் தான் கேபிசியா? நாங்களும் சுருக்குவோம்ல) ஷோவில் கமல் கலந்து கொண்ட நிகழ்ச்சி வழக்கம்போல் கான்ட்ரவர்ஸியில் சிக்கிக்கொண்டுள்ளது - ஆனாலும் ஷோவில் பெண்கள் கொஞ்சம் ஓவராகத்தான் செய்தார்கள். கமல் அதில் ஜெயமோகன் அவர்களின் அறம் என்ற புத்தகத்தைப்பற்றி தெரிவித்தார். கண்களில் நீர்மல்க படித்த ஒரு புத்தகம் என்றார். உடனே வாங்கினேன் (டயல்ஃபார்எபுக் மிகச்சிறப்பாகச் செயல்படுகின்றனர்). உண்மையில் கரைந்து போனேன்.
பொதுவாக இப்போதைய பிரபல எழுத்தாளர்கள் சாருநிவேதிதா,எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன் போன்றோரின் எழுத்துக்கள் என்னைக் கவரவில்லை, அனேக எழுத்துக்கள் எனக்குப் புரியவும் இல்லை.
தேவனும் அசுரனும் கலந்தவன் மனிதன். நம் அன்றாட வாழ்க்கையில் ஒரு சிறிய உரசலிலும் நம்முள் இருக்கும் அசுரன் தலை காட்டி விடுகிறான். கோபம், பொறாமை, கீழான இச்சைகள், மனக்கசப்பு இத்தியாதிகள். ஆனால் நம்முள் இருக்கும் தேவனை வெளிக்கொணர பகீரதப்பிரயத்தனம் செய்யவேண்டியுள்ளது. இங்குதான் பல்வேறு கலை வடிவங்களும் மனிதனுக்குத் துணைபுரிகின்றன. இசையும், இலக்கியமும் இன்னபிறவும் மனிதனுள் இருக்கும் தேவனை, அவனுக்கும், அவன் சுற்றத்தாருக்கும் புலப்படுத்துகின்றன. ஒரு நல்ல இலக்கியம் நிச்சயம் இவ்வேலையைச் செய்யும்.
ஆனால் சாருநிவேதிதாவின் ஒரு ஃபேமஸ் நாவல் என்னைப்பொறுத்தவரை ஏற்கனேவே விளிம்பில் இருக்கும் மனிதனை இன்னும் கீழ்மைப்படுத்துவதாக இருந்தது. அதே போல் மிகப்பிரபலமான ராமகிருஷ்ணனின் உபபாண்டவத்தை வாசிக்க முயற்சித்தேன். தீம் மிக நல்ல தீம். ஆனால் அவர் மொழிநடை எனக்குச்சரிப்பட்டு வரவில்லை. இதே போன்றதொரு தீமில் பிரபஞ்சனின் மிக அற்புதமான படைப்பு ஒன்றைப் படித்திருக்கிறேன். அந்த வாசிப்பில் கிடைத்த சுகம், மத்தியான வெயிலில் ஆர்ட் பிலிம் பார்ப்பது போன்ற உணர்வைத்தந்த உபபாண்டவத்தில் இல்லை.
சரி வயதாகிவிட்டது. புதிய எழுத்தாளர்களின் (எனக்கு) நடையைப் பழக்கப்படுத்திக்கொள்வது சாத்தியமில்லை என்ற முடிவுக்கு நான் வந்த வேளையில், கமல் அறத்தைப் பற்றி சொன்னார். வாங்குவோம் - பிடித்தால் படிப்போம், இல்லை என்றால் விட்டுவிடுவோம் என்ற முடிவோடு ஆர்டர் செய்தேன்.
அறம் - உண்மையில் அனேக இடங்களில் புத்தகத்தின் எழுத்துக்களைக் கண்ணீர் அசைத்தது. மானுடத்தின் மேன்மையை உரக்கச்சொன்ன புத்தகம். மனத்தின் கரைகளைக் கழுவி கண்ணீராக வெளியேற்றியது. நான் வாசித்து வாசித்து பிரமித்த பிரபஞ்சனின் இன்னொரு வடிவம் ஜெயமோகனாக வெளிப்பட்டு நின்றது. சோற்றுக்கணக்கு, யானை டாக்டர் - இரண்டும் மிகப் பிரமாதம்.
தேடிச்சோறு நிதம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பம் மிகவுழன்று,
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவம் எய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே நானும்
வீழ்வேன் என நினைத்தாயோ
என்று காலத்துக்குச் சவால் விட்ட, வெளியில் வராத மாமனிதர்கள் இப்புத்தகத்தில் உலாவினர். அனேகர் உண்மை மாந்தர்கள். வாய்ப்புக்கிடைத்தால் கட்டாயம் படியுங்கள். இல்லையென்றால் வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு படியுங்கள்.
0 comments:
Post a Comment