Showing posts with label Tips. Show all posts
Showing posts with label Tips. Show all posts

Thursday, June 21, 2012

குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காக வேலையை விட்ட பெண்களுக்கு ஒரு அலர்ட்

நடுத்தரக் குடும்ப மற்றும் டெக்னிக்கல்லி ஸ்கில்டு, க்வாலிபைடு பெண்கள் பலரும் குழந்தை பேற்றுக்குப்பின் வேலையை விட்டுவிடுவது மிகப் பரவலாக க் காணப்படும் ஒரு சாதாரண ட்ரண்ட். பிள்ளையப் பாத்துக்கிறதுக்காக ரூ.40000 வேலய விட்டுருக்கா - என்று ஒரு பாராட்டுப்பத்திரமும் கிடைக்கும். இதனால் ஏற்படக்கூடிய பொருளாதாரப் பின்னடைவுகளைப் பற்றி ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது ( http://uk.finance.yahoo.com/news/can-you-afford-to-be-a-stay-at-home-mum.html ). வேலையை விட்டுவிடுவதன் சாதக பாதகங்களை விரிவாக அலசியிருக்கிறார்கள். 
இதைப்படிக்கும்போது மாபசான் எழுதிய சிறுகதை ஒன்று ஞாபகம் வருகிறது.
ஒரு குடிசைப்பகுதியில் நிறைய குடும்பங்கள் வசிக்கின்றன. ஒவ்வொரு குடும்பத்திலும் 10, 12 பிள்ளைகள். ஒரு கனவானும், அவர் மனைவியும் தினமும் அந்தப்பகுதியைக் கடந்து வாக்கிங் செல்வார்கள். அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை. எனவே அந்தப் பகுதியிலிருந்து ஒரு பிள்ளையைத் தத்தெடுக்கப் பிரியப்படுவார்கள். இரு குடும்பத்தைச் சேர்ந்த தாய்மார்களிடம் பேசுவார்கள். ஒரு தாய் பசியோ, பட்டினியோ எங்கள் பிள்ளையை நாங்கள் வளர்த்துக்கொள்வோம். யாருக்கும் கொடுக்க மாட்டோம் என்று மறுத்து விடுவாள். மற்றொருவள் தன் கடைசி மகனைத் தத்துக்கொடுக்க சம்மதித்து விடுவாள். 
தத்துக்கொடுத்த பெண்ணை அந்தப்பகுதி மக்கள் இரக்கமில்லாதவள், பாசமில்லாதவள் என்று தினமும் திட்டுவார்கள். அதே நேரம் தத்துக்கொடுக்க மறுத்த பெண்ணைத் தாயென்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று போற்றுவார்கள். வறுமையும் தொடர்ந்தது.
இப்படியாக 18 வருடம் கழிந்தபின், ஒரு நாள் தத்துக்கொடுக்கப்பட்ட பிள்ளை தன் நிஜ தாய் தந்தையரைப் பார்க்க வருவான், உயர்தர உடுப்புக்களோடு, கையில் விலையுயர்ந்த பரிசுகளும், பணமும் கொண்டு வந்து அவர்களுக்குக் கொடுத்து அவர்களை நன்றாகக் கவனித்துக்கொள்வான்.
இதைப் பார்த்துக்கொண்டிருக்கும் அந்த பக்கத்து வீட்டு வறுமையில் உழலும் பையன் தன் தாயிடம் - நீதான் என் வாழ்க்கையைப் பாழாக்கினாய். முதலில் என்னைத்தான் தத்துக்கேட்டார்களாமே நீ கொடுக்க மறுத்த்தால் இன்று என் வாழ்க்கையே வறுமையில் இருக்கிறது. செல்வச்சீமானாக இருந்திருக்க வேண்டியவன், உன்னால் இப்படியாகி விட்டேன். மகன் இப்படிச்சொல்வதோடு கதையை முடித்திருப்பார் மாபசான்.
இளம் தாய்மார்களே வேலையை விடுவதற்கு முன் யோசியுங்கள். குழந்தைக்குப் பாதுகாப்பு தேவைதான் - அதில் முக்கியமானது "பொருளாதாரப் பாதுகாப்பு"

Saturday, March 31, 2012

அபிராமி மெகா மால் - ஒரு ரெவ்யூ

குழந்தைகளுக்குப் பள்ளி விடுமுறை விட்டாயிற்று. எங்கயாவது கூட்டிட்டுப் போங்க என்ற பிள்ளைகளின் நச்சு ஆரம்பித்திருக்கும். சென்னையில் சின்ன பிள்ளைகளுக்கு ஏற்ற இடம் என்று பார்த்தால் - பீச், ஜூ, கிண்டி ஸ்நேக் பார்க் - இவை தான் (வேறு ஏதாவது இருந்தால் தயவு செய்து சொல்லுங்கள் நண்பர்களே). இப்போது அந்த லிஸ்ட்டில் முக்கிய இடம் பிடித்திருப்பது அபிராமி மெகாமால். எப்படியிருக்கிறது இது? கொடுக்கப்படும் விளம்பரம் வொர்த்தி தானா? பார்ப்போம்.
பிள்ளைகளுக்கு ஒரு 3டி ஷோ இருக்கிறது. அதற்கு நுழைவு கட்டணம் ரூ.120. ஷோ 20 நிமிடங்கள் நடக்கிறது. ரூ.120 கட்டணம் வொர்த்தி என்று தான் நினைக்கிறேன்.ஷோவைப் பிள்ளைகள் மிகவும் ரசித்தனர்.

மேஜர் அட்ராக்ஷனாக அவர்கள் பிரமோட் செய்வது ஸ்நோவேர்ல்ட். நாங்கள் போன நேரம் ரெனவேஷனுக்காக அது பூட்டப்பட்டிருந்தது. ஆனால் இதைப்பற்றிய எந்த அறிவிப்பும் இவர்களின் விளம்பரங்களில் இல்லை. பிள்ளைகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். சரி முன்னால் நின்று ஒரு போட்டோ எடுத்துக்கொள்ளலாம் என்று பார்த்தால் வேகமாக ஒருவர் வந்து போட்டோலாம் எடுக்கக்கூடாதுங்க என்று சொல்லிவிட்டுச் சென்றார். இதே ஆர்டர்தான் கிஸ்ஸிங் கார்ஸ் இடத்திலும். ஏன் புகைப்படம் எடுக்க அனுமதி மறுக்கிறார்கள் என்று புரியவில்லை. அப்படி பூட்டி வைத்துக்கொள்ளும் படி extra ordinary ஆக எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்புறம் ஏன் இந்த பில்ட் அப்???

அக்வேரியம் என்று ஒன்று வைத்து ரூ.30 ஒரு ஆளுக்கு வசூலிக்கிறார்கள். நிச்சயம் its not worthy. ஒரு ப்ளே ஏரியா இருக்கிறது. இங்கும் புகைப்படம் எடுக்க அனுமதியில்லை - ஸ்ஸ் அப்பா முடியல. ஒரேயொரு அன்வான்டேஜ் - இங்கிருக்கும் ப்ளே மெஷின்களில் வின்னிங் டிக்கெட் நிறைய வருகிறது. அனேகமாக எல்லா பிள்ளைகளுமே எளிதாக ஏதாவது ஒரு சிறிய பரிசை வெல்கிறார்கள்.

தியேட்டர்கள் ஒவ்வொன்றும் ஒரு தீம் என்றார்கள். எங்களால் அனைத்தையும் விசிட் செய்ய முடியவில்லை. அதனால் அதைப்பற்றி அதிகம் கூற முடியவில்லை.

இன்னொரு விஷயம் - இங்கு புட் கோர்ட்டில் நிறைய ஸ்டால்களில் உணவு நன்றாக இருக்கிறது. 3டி ஷோவைத் தவிர வேறெதுவும் தனித்துவமிக்கதாக இல்லை. ஒரு வேளை ஸ்னோ வேர்ல்டு திறந்திருந்தால் வேறு மாதிரி இருந்திருக்கலாம். மற்றபடி வேறு அனைத்துமே சிட்டி சென்டர், எக்ஸ்பிரஸ் அவென்யு போன்ற மற்ற மால்களில் இருப்பவைதான்.

Monday, March 19, 2012

பேஸ்புக் பின்விளைவுகள்

பேஸ்புக் சோஷியல் நெட்வொர்க்கிங் தளத்தில் இன்றைய தேதிக்கு நமக்குத் தெரிந்த 4 பேரில் கட்டாயம் 3 பேர் அக்கவுண்ட் வைத்திருக்கிறார்கள். அதை ரெகுலராக அப்டேட்டும் செய்கிறார்கள். ஒரு அமெரிக்கத் தன்னார்வ நிறுவனம் சமீபத்தில் நடத்திய சர்வேயின்படி (நன்றி-டைம்ஸ் ஆப் இண்டியா), ஒரு வாரத்தில் 5 மணி நேரத்துக்கும் அதிகமாக பேஸ்புக்கில் இருப்பவர்கள், தங்களை விட தங்கள் நண்பர்களின் வாழ்க்கை மிகவும் சுவாரசியமாக இருப்பதாகக் கருதுகிறார்களாம். மேலும் மற்ற அனைவரும் பிரச்சனைகள் ஏதும் இல்லாமல் மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதாக நினைக்கிறார்களாம்.

இந்த சர்வே முடிவுகளுக்கு நாம் அமெரிக்கா வரை போகத்தேவையில்லை. நாமே சில நேரங்களில் இப்படியொரு நினைப்பிற்கு ஆட்பட்டிருப்போம். கணவரின் தோளில் தலை சாய்த்தபடி சிரிக்கும் தோழியின் புகைப்படத்தைப் பார்க்கும்போது, தவிர்க்க முடியாமல் அன்று நம் வீட்டில் நடந்த அல்ப காரணத்துக்காக நடந்த சண்டை நினைவில் உறுத்தும் (ஆரம்பிச்சுட்டாங்கடா என்ற பிள்ளைகளின் கமெண்ட்ஸோடு ;) ). உடனே மற்ற அனைத்து தம்பதிகளும் எப்போதும் சிரித்துக்கொண்டு காக்க காக்க சூர்யா ஜோதிகா போல் இருப்பதுபோல் நினைத்துக்கொள்கிறோம். யார் கண்டார்கள் - தோழி வீட்டில் முந்தைய நாள் என்ன குடுமிப்பிடி சண்டையோ ;)

நடைமுறை உண்மை என்பது தம்பதிகள் சில சமயங்களில் Made for each other, சில சமயங்களில் Mad at each other and not mad(e) for each other. இது தானே அனைத்துக்குடும்பங்களிலும் நடப்பது.

புகைப்படங்கள் பொய்சொல்லும். நமது மிகச்சிறந்த புகைப்படங்களாக நாம் நினைப்பவற்றைத்தான் அப்லோட் செய்கிறோம். எல்லோரும் அப்படித்தான். நாம் நினைப்பது போல் அல்ல - எல்லோர் வாழ்க்கையிலும், நம் வாழ்க்கையில் இருப்பதைப் போன்றே ஏற்றத்தாழ்வுகள் உண்டு. மன நிம்மதிக்கு ஒன்று பேஸ்புக் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளுங்கள் அல்லது மேல் சொன்னவற்றை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

Tuesday, January 17, 2012

எப்போதும் சந்தோஷமாயிருக்க எளிய வழிகள்

கற்கால மனிதர்களின் வாழ்வியல் சூழல் - எப்போதும் ஆபத்து நேரலாம். அதனால் எந்நேரமும் தயாராயிருக்க வேண்டும் - என்ற மனநிலையிலேயே அவர்களை வைத்திருந்தது. இயற்கைச் சீற்றங்களால், வனவிலங்குகளால், நோய்களால், உணவு பற்றாக்குறையால் என்று அவர்கள் எப்போதும் மனதளவில் பிரச்சனைகளை எதிர்நோக்க தயாராயிருக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்கின்றனர். இப்போது வாழ்வியல் சூழல் முற்றிலும் மாறியிருக்கிறது. பரிணாம வளர்ச்சியில் உடல் மாற்றம் அடைந்திருக்கிறது - மனம்? நிச்சயமாக இல்லை. எல்லாம் நிறைவாக இருக்கும் வேளையிலும் மனம் ஏதோவொரு முகம் தெரியா ஆபத்தைப் பற்றிய கற்பனை பயத்தில், கவலையில் உழல்கிறது. மனம் தீப்பந்தம் போல் கொழுந்துவிட்டெரியும் சூழ்நிலையிலும், கவலை மேகங்கள் அதைச் சூழ ஒரு நொடி போதும். மனதை அடக்கி அதனை எப்போதும் சந்தோஷம் கொண்டிருக்கச்செய்ய எளிய வழிகள் இவை -

1. ஒப்பிடாதீர்கள் - பேஸ்புக் ஸ்டேட்டஸில் ஆல்ப்ஸ் மலை அடிவாரத்திலிருந்து, லக்ஸுரி க்ருய்ஸில், லண்டன் வீதியில் போன்ற அப்டேட்டுகளைப் பார்க்கும்போது நாம் மெட்ராஸ் மொட்டை வெயிலில், HOD tortureல் என்று தான் status update செய்யவேண்டியிருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்களேன். அதற்காக கவலைகொள்ளாதீர்கள். ஒவ்வொருவருடைய வாழ்க்கையின் போக்கும், அர்த்தமும் வேறு. மற்றவர்களோடு நம்மை கம்ப்பேர் செய்வது மனக்கஷ்டத்துக்குத்தான் வழிவகுக்கும். அவ்வாறு ஒப்பீடுகள் வரக்கூடிய சந்தர்ப்பங்களைத் தவிருங்கள். 2. சின்ன விஷயங்களிலும் சந்தோஷமடையுங்கள். உதாரணமாக இந்த மென்பனிக்காலத்தின் காலையில் அருந்தும் அருமையான ஒரு கப் காபி, இளையராஜாவின் ஜெயா டிவி ஷோ etc, etc... வாழ்க்கை கடுமையானது. மகிழ்ச்சியாயிருக்க காரணங்களைக் கண்டுபிடியுங்கள்.

3. நன்றியுள்ளவர்களாயிருக்கப் பழகுவோம். எத்தனையோ பேர் எதுவமேயில்லாமலிருக்கும்போது, நான் இதைக் கணினியில் டைப் செய்யவும், அதை நீங்கள் வாசிக்கவும் சந்தர்ப்பம் கொடுத்த இறைவனுக்கு நன்றி.

4. தேவைப்படுபவர்களுக்கு இயன்ற உதவியைச் செய்வோம். பின் வருவது ஒரு நல்ல ஆர்கனைசேஷன். முடிந்தால் அவர்களோடு உங்களை இணைத்துக்கொள்ளுங்கள். ஒருபோதும் திருப்பிச்செலுத்தமுடியாத வகையிலான உதவிகளைச் செய்யுங்கள். www.chennaisocialservice.org, Mr.Sivakumar : 9941014591. இதில் கிடைக்கும் மனநிறைவும் சந்தோஷமும் வேறெதிலும் இல்லை.

5. இறுதியாக இறைவனின் திருவடியை இறுகப்பற்றிக்கொள்வோம். ஒன்றை நினைத்து ஒன்றை மறந்து ஒடும் மனம் எல்லாம் நீயென்றறிந்தால் எங்கே இயங்கும் பராபரமே என்னும் தாயுமானவரின் என்றும் நினைவில் இருத்துவோம்

Friday, January 13, 2012

சென்னையில் அப்பார்ட்மெண்ட் வாங்கப்போகிறீர்களா - ஹிட்டன் காஸ்ட்டுக்கு பில்டர்களின் புது டெக்னிக்ஸ்

சென்னையின் ரியல் எஸ்டேட் பிசினஸ் நல்ல லாபத்தில் இயங்குவதாகச் சொல்கிறார்கள். சென்னை இப்போது க்ரேட்டர் சென்னையாக மாறியதால் புறநகர்களில் நிறையப் பகுதிகள் சிட்டி லிமிட்ஸுக்குள் வந்து விட்டன. அதனால் தென்சென்னை பகுதியில் புழுதிவாக்கம், உள்ளகரம், ஆலந்தூர், பள்ளிக்கரணை, பெரும்பாக்கம் போன்ற ஏரியாக்களில் அப்பார்ட்மெண்ட்டுகளின் விலை எகிறிவிட்டது. 20,25 வருடங்களுக்கு முன் அங்கே நிலம் 1 கிரவுண்டு ரூ.10000-20000 என்று வாங்கிப்போட்டவர்களெல்லாம் இன்று கோடீஸ்வரர்கள். இப்படிப்பட்ட நில உரிமையாளர்களும் இன்று திடீர் பில்டர்களாக அவதாரம் எடுத்து அப்பார்ட்மெண்ட் கட்டி விற்க துவங்கிவிட்டார்கள்.

வீடு வாங்குபவர்கள் ப்ரொபஷனல் பில்டர்களிடம் வாங்காமல் இப்படிப்பட்ட திடீர் பில்டர்களிடம் மாட்டிக்கொண்டோம் என்றால் தொலைந்தோம். சில ப்ரொபஷனல் பில்டர்களிடமும் ட்ராபேக்ஸ் இருக்கலாம். ஆனால் இது என் மற்றும் என் நண்பர்களின் சொந்த அனுபவம். Hidden costs list பின் வருமாறு -


1.இந்த கார்ப்பெட் ஏரியா, ப்ளிந்த் ஏரியா,காமன் ஏரியா களேபரங்களில் நீங்கள் வாங்கும் வீட்டின் மொத்த அளவில் இருந்து கார்ப்பெட் ஏரியா 20% மட்டுமே குறைவாக இருந்தால் உங்கள் பில்டர் உங்களை ஏமாற்றவில்லை. உதாரணமாக நீங்கள் 850 சதுரடியில் வீடு வாங்கினீர்கள் என்றால் உங்கள் கார்ப்பெட் ஏரியா குறைந்தபட்சம் 680 சதுரடியாக இருக்க வேண்டும். கார் பார்க்கிற்குத் தனியாக 1 - 1.5 லட்சம் வாங்குவார்கள். ஆனால் இப்போது கார் பார்க்கிங் ஏரியாவையும் வீட்டின் அளவோடு சேர்த்துவிடுகிறார்கள். எங்கள் வீட்டின் கார் பார்க் ஏரியா 60சதுரடி. ஒரு சதுரடியின் விலை ரூ.3500. எனவே நாங்கள் கார் பார்க்கிங்குக்கு கொடுத்த தொகை ரூ.210000 - கிட்டத்தட்ட குறைந்தபட்சம் ரூ.60000 எக்ஸ்ட்ரா.

2. வீட்டுக்கு டைல்ஸ் போடும் நேரத்தில் ஒரு டைலுக்கு ரூ.40 தான் தருவேன் என்பார் பில்டர். மேற்கொண்டு ஆவதை நாம் தான் செலவழிக்க வேண்டும். ஒரு டைல் ரூ.100க்காவது வாங்கினால்தான் தரமானதாக இருக்கும். 800 சதுரடிக்கு ஆகும் டைல்ஸ் செலவு - ரூ80000. இதில் பில்டர் தருவது ரூ.32000 மட்டுமே. நமக்கு ஆகும் எக்ஸ்ட்ரா ரூ50000. மேலும் குழாய் இணைப்புகள், வாஷ்பேசின் அனைத்துக்குமே இருப்பதிலேயே லோ காஸ்ட் ஐட்டங்கள்தான் தருவோம் என்பார் (இந்த கண்டிஷன் எதையுமே நீங்கள் வீடு புக் செய்வதற்கு முன் சொல்லமாட்டார்). இவற்றுக்கு எப்படியும் ரூ. 30000 எக்ஸ்ட்ரா.

3.வீட்டில் ஒரு ஸ்விட்ச் போர்டு அதிகம் கேட்டால் கூட ஒரு ஸ்விட்ச் 20 ரூபாய் என்று கணக்கு சொல்வார். நாம் விதியை நொந்து கொண்டு கொடுக்கவேண்டியதுதான்.

4. என்ன பணம் கொடுத்தாலும் பில் உடனே வாங்கிக்கொள்ளுங்கள். சாயந்தரம் வாங்கிக்கொள்ளலாம் என்று நினைக்காதீர்கள் - எவ்வளவு அவசரத்திலிருந்தாலும் பரவாயில்லை. என் தோழி கவுரவமான உயர்தொழிலில் இருப்பவர். அவர் ரூ.5000த்திற்கு பில் அப்புறம் வாங்கிக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டார். பில்டர் நீங்கள் 5000 ரூபாய் தரவேயில்லை என்று சொல்லி மேற்கொண்டு 5000 வாங்கிவிட்டார். இவ்வாற் நாம் 5000 ஏமாந்து, அவரை 5000 ரூபாய்க்கு ஏமாற்றியதாக அவப்பெயரையும் வாங்கிக்கட்டிக்கொள்ளவேண்டியதுதான்.

இப்படி அப்படி என்று ரூ2 லட்சம் எக்ஸ்ட்ரா கறந்துவிடுவர். அத்துடன் மிகவும் மரியாதைக்குறைவான, நம்பிக்கையற்ற ட்ரீட்மெண்ட் நமக்கு கிடைக்கும். இந்த மாதிரி மோசமான அனுபவம் நல்ல established, professional பில்டரிடம் எங்களுக்கு ஏற்படவேயில்லை. வீடு வாங்குவது அனேகருக்கு வாழ்நாள் கனவு. வாங்கும் முன் பில்டரையும் கவனியுங்கள்.

Sunday, August 28, 2011

ஒவ்வொரு ஃபிரெண்டும் தேவை

நாம் மனிதர்களையும் அவர்கள்பால் நாம் கொள்ளும் உறவுகளையும் கையாள்வதில் என்றும் உணர்ச்சிவயப்பட்டவர்களாகவே இருக்கிறோம். பெண் என்னும் தனி மனுஷியை நமக்கு ஒன்று தெய்வமாக சித்தரிக்கவேண்டும் அல்லது பேயாக கேவலப்படுத்த வேண்டும். கணவனைக் கண்கண்ட தெய்வம் என்று கொண்டாடும் - தெய்வம் தொழாள் கொழுநன் தொழுவாள் - டைப்பாக இருக்கவேண்டும். ஆசிரியர்களை mr அல்லது mrs என்ற அடைமொழியோடு பெயரிட்டு கூப்பிடுவதை நம்மால் நினைத்தே பார்க்க முடியாது. அதே போல் நண்பர்களையும், நட்பையும் ஒரு pedestalல் கொண்டு வைத்தபின் தான் நாம் ஓய்கிறோம். friendshipக்காக என்ன வேணாலும் செய்வேன் என்று பேசுபவரை திரைப்படத்தில், வகுப்பறையில், ஆஃபிஸில் எங்கும் காணலாம்.





போன வாரம் ஸ்கூலில் இருந்து வீடு திரும்பிய என் மகளின் கைகளில் காயம். என்னவென்று விசாரித்ததில் ஹரிணி கிள்ளிவிட்டதாகச் சொன்னாள். நீ miss கிட்ட சொல்லி வேற place போக வேண்டியது தான என்றேன். ஹரிணி என் friend மா என்றாள். உன்ன மாதிரியே இருக்கிறா உன் மகளும் (எவ்வளவு அடிச்சாலும் தாங்குறா. இவ ரொம்ப நல்லவ) என்றார் வாசு. நண்பர்களால் நாம் காயமடைவதும், மோசமான ஏமாற்றங்களுக்கு உள்ளாவதும், அதை நம் நெருங்கிய உறவினர் criticise பண்ணுவதும் எல்லா வீடுகளிலும் நடப்பது. நீதான் friend friendங்கிற. அவ செஞ்ச வேலையப் பாத்தியா என்ற கேள்வியை எதிர்கொள்ளாதவர்களே இருக்க முடியாது. இது எதை நிருபிக்கிறது என்றால் நண்பர்கள் மோசமான மனிதர்கள் என்பதையல்ல - நண்பர்களும் மனிதர்களே என்பதை. நண்பர்கள் சில வேளைகளில் சுயநலத்தோடு நடந்து கொண்டாலும், காயப்படுத்தினாலும் நிச்சயம் அவர்களை நம் வாழ்க்கையிலிருந்து முற்றுமாக அகற்றிவிட முடியாது. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. நட்பை பாதுகாத்துக் கொள்ள சில டிப்ஸ் தர விரும்புகிறேன்.















  1. பிரத்தியேகமானது எதையும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். துன்பத்தைப் பகிர்ந்து கொண்டால் பாதியாகும், இன்பத்தைப் பகிர்ந்து கொண்டால் இரட்டிப்பாகும் என்பதும் சுத்த ஹம்பக். அனைவருக்கும் பொதுவான பிரச்சினைகளை மட்டும் பகிர்ந்து கொள்ளுங்கள். உதாரணமாக பெற்றோரின் மரணம் தரும் வலியை என்னால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் உடல் பருமனால் அவதியுறும் தோழியின் மனவலியை என்னால் ஒரு அளவுக்கு மேல் புரிந்து கொள்ளவே முடியாது. whats the big deal என்பதே என் reaction ஆக இருக்கும். எனவே மனம் வருந்தி நீங்கள் பகிர்ந்து கொள்ளும் விஷயம் கிண்டலாக ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் உங்கள் மீது பிரயோகிக்கப்படும்போது மனவலி ஏற்படும். ஏனெனில் அப்பிரச்சினை இல்லாத உங்கள் தோழியால் அதைப்புரிந்து கொள்ள இயலாது. அதே போல் பொதுவான சந்தோஷங்களை மட்டுமே பகிர்ந்து கொள்ளுங்கள். அன்னா ஹசாரே உண்ணாவிரதம் சக்ஸஸ் என்று கூறி சந்தோஷப்பட்டுக்கொள்ளுங்கள். உங்கள் பிரத்தியேக சந்தோஷங்களை அல்ல. ஏனெனில் மனித மனம் நுண்ணிய இழைகளால் ஆனது. அந்த இழைகளை அறுத்து மனத்தைச் சிதைக்க சிறு சலனமும் போதும். உங்களின் வெற்றியைக் கேட்கும் உங்கள் நண்பனின் மனதில் தோன்றும் சிறு ஏக்கமும் (அந்த வெற்றி அவர்களுக்கும் கிடைத்திராத பட்சத்தில்) பொறாமைத்தீயைப் பற்ற வைத்து நட்பை பஞ்சராக்கும். இவைகளால் நம் நண்பர்கள் கெட்டவர்கள் என்று புரிந்து கொள்வது அரைவேக்காட்டுத்தனம். நம் நண்பர்களும் - உயர்ந்த லட்சியங்களும், கீழான இச்சைகளும், சகமனிதருக்கு உதவவேண்டும் என்ற எண்ணமும், நான் மட்டுமே உயரவேண்டும் என்ற தன்னலமும் - கலந்து கொண்ட நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களே.










  2. எதன் பொருட்டும் கேட்கப்படாமல் அட்வைஸ் கொடுக்காதீர்கள். இது 10 வருட நட்பையும் 10 நிமிடத்தில் நொறுக்கி அள்ளிவிடும் வல்லமை படைத்தது. என் 12 வருட தோழியின் காதலனுக்கு accident. வீட்டில் படுக்கையிலிருக்கிறார். அவர்களுக்கு கல்யாணம் நிச்சயமாகிவிட்டது. தோழி வேறு ஊரில் இருந்தாள். accident விஷயம் தெரிந்தவுடன் அவள் அவர் வீட்டிற்கு சென்று தங்கி அவருக்கு உதவி செய்ய விருப்பப்பட்டாள். நான் அந்த ஊர்ல ஒரு மாதிரியா பேசுவாங்க. பாத்துப்போ என்றேன். (அவள் என்னிடம் ஐடியா கேட்கவேயில்லை. நானாத்தான் கொடுத்தேன்). அன்றோடு என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டாள். திருமணத்திற்கு பத்திரிககை கூடத்தரவில்லை. கேட்கப்படாமல் ஐடியாவோ அட்வைஸோ தரவே தராதீர்கள். அவரவர் வாழ்க்கையை நடத்திச்செல்ல அவரவருக்குத்தெரியும்.



இவற்றால் உணரப்படும் நீதி: எல்லாவற்றையும் பகி்ர்ந்து கொள்ளாதீர்கள், கேட்கப்படாமல் அட்வைஸ் தராதீர்கள். ஏனெனில் ஒவ்வொரு ஃபிரெண்டும் நிச்சயம் தேவை நண்பர்களே

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes