சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரியின் மகனும், குறிப்பிடக்கூடிய சில நல்ல படங்களில் நடித்தவருமான நடிகர் ஜீவா, விஜய் டி.வி நண்பன் பட புரமோஷன் நிகழ்ச்சியில் சொன்ன ஒரு விஷயம் இது - எனக்கு தற்சமயம் நடிக்கப் பிடித்திருக்கிறது. அதனால் நடிக்கிறேன். நல்ல படங்களில் நடிக்க வேண்டுமென்பது என் விருப்பம். இன்னும் சில வருடங்களில் நடிப்பது எனக்கு பிடிக்காமல் போகுமேயானால் நடிப்பை விட்டுவிட்டு எனக்குப் அந்நேரம் பிடித்த தொழிலைச் செய்ய கிளம்பிவிடுவேன்.
இவரது இந்த கருத்து மேம்போக்காக பார்க்கும்போது சாதாரணமாயிருந்தாலும் கொஞ்சம் யோசித்தால் ஜீவா கொடுத்து வைத்தவர் என்றே தோன்றுகிறது. பிடித்த தொழிலைச் செய்வது என்பது பெரும்பாலானோருக்கு வாய்ப்பதில்லை. ஐ.டி துறையிலிருந்து கொண்டு கல்லூரி ஆசிரியராக இருப்பதைப் பற்றி கனவு காண்பவரையும் (சம்பளம் ஒரு தடை - மேலும் பிழைக்கத்தெரியாதவன், திறமையில்லாதவன் என்று பல பெயர்கள் கிடைக்கும்), கல்லூரி ஆசிரியராக இருப்பவர் ஐடி துறைக்குள் செல்ல முடியவில்லையே என்று ஏங்கித்தவிப்பதையும் காண முடிகிறது. உண்மையில் கனவுகளைத் துரத்துவதற்கு மிகுந்த தைரியமும், சாதகமான குடும்பச்சூழலும் கட்டாயம் தேவை.
தி அல்கெமிஸ்ட் என்றொரு அருமையான நாவல். இந்நாவலின் நாயகன் ஒரு இடையன். அவனது காலத்தில் கடை வைத்திருப்பவனுக்குத்தான் மதிப்பு-அவனுக்குத்தான் திருமணத்துக்குப் பெண் கொடுக்கப் பிரியப்படுவார்கள். ஆனால் நம் கதாநாயகன் பயணம் செய்வதிலும், புதிய இடங்களை, நண்பர்களை அடைவதிலும் தணியாத தாகம் உள்ளவன். எனவே ஓரிடத்தில் அமர்ந்து கடை நடத்த அவன் பிரியப்படவில்லை. எனவே எப்போதும் ஏகாந்தமாக அலைந்து திரியக்கூடிய இடையன் தொழிலை அவனது தகப்பனின் விருப்பத்துக்கு மாறாகத் தேர்ந்தெடுக்கிறான். வெண்மேகம் போல் பிரபஞ்சமெங்கும் பயணப்படுகிறான்.அந்நாவலில் ஓரிடத்தில் சொல்கிறார் ஆசிரியர் Paulo Coelho - If you really want something the entire universe conspires to help you achieve that. ஆனாலும் இதன் நடைமுறை சாத்தியம் பற்றி எனக்கு இன்னும் நம்பிக்கையில்லை. லோன் வாங்கிப் படிக்கும் ஒரு மாணவன் குறைந்த சம்பள வேலையே தனக்கு ஆத்ம திருப்தி தருவதாகக் கருதினால் கடனை அடைப்பதும், குடும்ப பாரத்தை ஏற்பதும் எவ்வகையில் சாத்தியம்? எனவே தான் சொல்கிறேன் தான் விரும்பிய தொழிலைச் செய்பவர்கள் பாக்கியவான்கள். ஜீவா அவரே சொல்லிக்கொள்வதுபோல் சில்வர் ஸ்பூனோடு பிறந்தவர். அவருக்குப் பிடித்தால் நடிக்கலாம், பிடிக்காவிட்டால் ஹோட்டல் நடத்தலாம் - புலியைப் பார்த்து பூனைகள் சூடு போட்டுக்கொள்ளக்கூடாது.
2 comments:
You are absolutely correct.
ஜீவா option எடுக்கும் அளவிற்குக் கொடுத்து வைத்தவர். எல்லோருக்குமா அமையும் அது?
Post a Comment