Monday, November 17, 2014

அப்பாக்களின் செல்ல மகள்கள்

காலையில் கல்லூரிக்கு பஸ்ஸில் பயணம் செய்வது ஒரு இனிய அனுபவம். முதிராத காலை (6.30), இதமான காற்று, ப்ரஷ்ஷான சக பயணிகள் அருமை. இந்தப் பயணத்தில், சமூகத்தின் பல்வேறு அடுக்குகளில் இருக்கிற அப்பாக்களையும், மகள்களையும் பார்ப்பது எனக்கு ஒரு இனிய பொழுதுபோக்கு. அவர்களது உடைகளும், வாகனங்களும், வீடுகளும் வேறு விதமாக இருந்தாலும் அடிப்படையில் அனைத்து அப்பாக்களும் மகள்களை ஒரே விதத்தில்தான் டீல் செய்கின்றனர்.

 1. அப்பார்ட்மென்ட் வாசலில், அரைக்கால் சட்டையோடு, ஒரு தோளில் புத்தகப்பை மற்றும் வாட்டர்பேக், மற்றொரு கையில் சாப்பாட்டுக்கூடையோடு நிற்கும் அப்பா - ஏற்கனவே நான்காக மடித்ததைப் போல் இருக்கும் குட்டி கர்ச்சீப்பை எட்டாக மடித்து, மெலிதாக விசிறியபடி இருக்கும் டீன் ஏஜ் மகள் அல்லது பொறுப்பாக நொண்டி விளையாடிக்கொண்டிருக்கும் ரெட்டை ஜடை போட்டு ரிப்பன் வைத்த  ஸ்கூல் போகும் மகள்.

2. ஒரு கையால் வண்டியை பேலன்ஸ் செய்துகொண்டு, மற்றொரு கையில் மகளின் ஆகப்பெரிய காலேஜ்பேகைப் பிடித்தபடி காலேஜ் பஸ் வருகிறதா எனப்பார்த்துக்கொண்டிருக்கும் அப்பா - ஸமார்ட்போனைப் பொறுப்பாக நோண்டிக்கொண்டிருக்கும் இன்ஜினியர் மகள்.

3.நெற்றியில் விபூதி மணக்க மகளின் புராஜக்ட் வொர்க்கைக் கையில் வைத்துக்கொண்டு, சார் கொஞ்சம் நகந்துக்கோங்க - அம்மா அங்க எடம் இருக்கு பாரு, என்று பஸ்ஸின் கீழ் நின்றபடியே பஸ்ஸுக்குள் சீட் பிடித்துக் கொடுக்கும் ஆட்டோ டிரைவர் அப்பா,இப்ப என்னன்றீங்க என்பது போன்ற முகபாவனையுடன் சலித்துக்கொள்ளும் டீன் ஏஜ் மகள்.

இது போல் பள்ளி, கல்லூரி செல்ல காத்திருக்கும் எல்லா மகள்களும் கைவீசியபடி நிற்க, பேதமேயில்லாமல் எல்லாத் தரப்பு அப்பாக்களும் அவர்களின் புத்தக மூட்டையைச் சுமந்தபடி. ஆனால் மகன்களுக்கு கண்டிஷனே வேறு. தன்னை விடப் பெரிய பை முதுகில், அதோடு கல்லை எத்தி விளையாட்டு - வேறேதோ திசையில் பார்த்தபடி கடனே என்று நிற்கும் அப்பா. இன்று வரையில் தன் பையைத் தானே தூக்கிக் கொள்ளும் மகளையோ, மகனின் பையைத் தூக்கிக்கொண்டிருககும் அப்பாவையோ  நான் பார்க்கவில்லை. அப்பாவின் சின்ன இளவரசிகள் இவர்கள் - நாளை ஒரு மன்னனின் மகாராணியாகட்டும்  - ஆமென்

2 comments:

எம்.ஞானசேகரன் said...

தமிழ்மணத்தில் உங்கள் பதிவு இன்று அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

விசு said...

‘அப்பாக்களின்செல்ல மகள்கள்’
அடே டே .. .இந்த தலைப்பை பார்த்தவுடனே ஓடி சென்று படித்தேன். ரெண்டு ராச்திக்களுக்கு நானும் அப்பா தானே ... என்னே ஒரு அருமையான பதிவு .

அது என்னமோ போங்க. என்னை பொறுத்தவரை ஒரு தந்தை - மகள் உறவை போல் மகிழ்ச்சியான உறவு வேறு எதுவுமே இல்லை என்று தான் சொல்வேன்.

அறிமுகமான பதிவர்களுக்கு வாழ்த்துக்கள் .

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes