Sunday, June 6, 2021

காட்டுக்குள்ள ஒரு பள்ளிக்கூடம்

 

மது கல்லூரியின் வேதியியல் துறை சார்பாக ஒவ்வொரு வருடமும் மாணவ மாணவிகள் நீலகிரி-வயநாடு, அம்பலமுலா பகுதியில் உள்ள ஆதிவாசிக்குழந்தைகளுக்கான பள்ளிக்குச் சென்று, அக்குழந்தைகளுக்கு பாடங்களை எளிய முறையில் கற்றுக்கொடுக்கும் பணியைச் செய்து வருகின்றனர். இவ்வருடம் பெருந்தொற்றுக்காரணமாக அங்கு செல்ல இயலவில்லை. எனவே எங்களது பேராசிரியர்கள் அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களை எங்கள் கல்லூரிக்கு அழைத்து வந்து ஒரு பயிற்சிப் பட்டறையை நடத்தினர். இப்பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஆசிரியர்கள் தங்கள் அனுபவங்களையும், தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும் எங்களோடு பகிர்ந்துகொண்டனர். அவை இங்கே.

அவர்களது பள்ளி இருபாலினத்தவருக்குமான உண்டு உறைவிடப்பள்ளி. எட்டாம் வகுப்பு வரை உள்ளது. அவர்கள் சொல்வதுஒரு ஆதிவாசிக்குழந்தை எந்தவொரு பொருளையும் அதன் விலை அடிப்படையில் மதிப்பதில்லை. அவன் ஒரு கால்பந்தை வைத்து விளையாடுவதை விட, சாதாரண குப்பியை வைத்து விளையாடவே விரும்புகிறான். ஒரு பேனாவையோ, புத்தகத்தையோ பத்திரப்படுத்தவேண்டும் என்ற எண்ணமே அவனுக்குக் கிடையாது. காட்டில் விளையும் பழங்கள், மூங்கில் அரிசி, அவனுடைய நதியில் இருக்கும் மீன்கள்இவையே அவனுடைய உணவு. விருந்தோபலில் அவனை அடித்துக்கொள்ளவே முடியாது. எத்தனை பேர் வேண்டுமானாலும், எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் அவன் வீட்டில் தங்கலாம்.

  அவனுக்கு நாளையைக் குறித்த எந்தக் கவலையும் இல்லை, பயமும் இல்லை. இறந்தோருக்காக அவர்கள் வருந்துவதில்லை. மாறாக மண்ணுக்குப் போற ஒடம்பு தானே சார் என்று இயல்பாக மரணத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். இம்மக்கள் குழுக்குழுவாகப் பிரிந்து வாழ்கிறார்கள். ஒரு குழுவைச் சேர்ந்த குழந்தை ஒன்று ஏதோவொரு காரணத்துக்காக மற்றொரு குழுவோடு இணைந்தால், அவர்கள் ஒரே மொழியைப் பேசும் பட்சத்தில் அக்குழந்தையை அந்தக் குழுவே எந்த வித பாரபட்சமும் பாராமல் வளர்க்கிறது. இவற்றைக் கேட்டவுடன் எனக்கு ஜெயமோகனின் ரப்பர் நாவலில் கண்டன்காணி என்னும் ஒரு ஆதிவாசிக்கிழவர் தான் நினைவில் வந்தார். குழந்தை மனம் கொண்ட எல்லா உயிர்கள் மீதும் அன்பு கொள்வதைத் தவிர வேறொன்றயும் அறியாத ஒரு முதிர்குழந்தை.

இப்போது பங்கேற்பாளர்கள் அனேகருக்கு எழுந்த ஒரே கேள்விஇவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க நம்மிடம் என்ன இருக்கிறது? என்பது தான். பல பத்தாண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு மரணம் இன்னும் ஆழ்மனதில் வடுவாக. நாளைய தினத்தைக் குறித்தக் கவலைகள், பயம், பொறாமை என்று உழன்று கொண்டிருக்கும் நான் ஒரு நிஷ்களங்கமான ஆதிவாசிக்கு எதைச் சொல்வது.

இப்போது ஆசிரியர்கள் தங்கள் நடைமுறைப்பிரச்சினைகளைப் பேசத்துவங்கினர். சுற்றுச்சூழல் பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் இவ்வாதிவாசிகள் எந்த நேரமும் கானகத்தை விட்டு வெளியேற்றப்படலாம். அப்போது இவர்கள் நம்மோடு ஒரே ஓட்டப்பந்தயத்தில் ஓடவேண்டும். இதற்கு இவர்களைத் தயார்ப்படுத்துவது நமது கடமை. அதற்காகவே இப்பள்ளிக்கூடம் செயல்படுகிறது. ஆனால் இவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பது அவ்வளவு எளிதல்ல.

முதலில் மொழிப்பிரச்சினை. இவர்களது தாய்மொழி பனியா. இப்பள்ளி தமிழக எல்லைக்குள் இருந்தாலும் இரண்டாவதாக இவர்கள் அதிகம் பேசுவது மலையாளம். மூன்றாவதுதான் தமிழ். அவர்கள் மொழியை ஓரளவாவது தெரிந்து வைத்திருந்தால்தான் அவர்களைத் தம் வசப்படுத்த முடியும் என்பதால் நம் ஆசிரியர்கள் அவர்களது தாய்மொழியான பனியாவில் சில முக்கியமானவற்றைக் கற்று வைத்துள்ளனர்.

அடுத்தது அவனுடைய கவனிக்கும் காலவரையறை. இக்குழந்தைக்கு நீண்ட நேரம் கட்டிடத்திற்குள் அமர்ந்து கற்றுக்கொள்வது என்பது இயலாத காரியம். எனவே அவன் கவனத்தை ஈர்ப்பதற்கு ஆசிரியர்கள் கையாளும் நடைமுறைகளை நடித்துக்காட்டினர். அடேங்கப்பா. குட்டிக்கரணம் ஒன்று தான் போடவில்லை. மற்றபடி அனைத்தும் செய்கிறார்கள். இவர்களின் அர்ப்பணிப்பும், மாணவர்களின் மீதான இவர்களது அளவற்ற பிரியமும், அக்கறையும்பிரமிப்பு. இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயத்தைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இவர்கள் அரசு ஆசிரியர்கள் அல்ல. தொகுப்பூதிய அடிப்படையில் வேலை செய்பவர்கள். காட்டுக்குள்ள 2 கி.மீ நடந்து போகணும் மேடம் ஸ்கூலுக்கு என்கிறார்கள். வழில யானை வரும். யான தொரத்துற வீடியோ கூட இருக்கு. போட்டுக் காட்றோம் என்கிறார்கள். நிலையற்ற வேலை, சொற்ப சம்பளம். இவர்கள் ஆத்ம திருப்தியை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கள் போலும். இல்லையெனில் இவ்வளவு ஈடுபாட்டோடு வேலை செய்வது இயலாத காரியம்.

சில நேரங்களில் யாராவது ஒரு குழந்தை வகுப்புக்கு வெளியே ஓடி காட்டுக்குள் போய் ஒளிந்து கொள்வானாம். அப்போது ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து காட்டுக்குள் தேடிப்போவார்களாம். ஒரு முறை அப்படிச் செல்லும்போது ஒரு புதர் அசைந்திருக்கிறது. பையன் தான் ஒளிந்திருக்கிறான் என்று நினைத்து புதரை விலக்கிப் பார்த்தபோது ஒரு காட்டு ஆடு ஓடியிருக்கிறது. புலியாக இருந்திருக்கக்கூட வாய்ப்பிருக்கிறது என்றார்கள் இவ்வாசிரியர்கள். கடைசியில் பையனை எங்கே கண்டுபிடித்தீர்கள் என்று கேட்டோம். அவன் 100 ரூவா குடுத்து ஆட்டோ பிடிச்சு வீட்டுக்குப் போய்ட்டான் மேடம் (அது உண்டு உறைவிடப் பள்ளி). நாங்க வீட்டுக்குப் போய்ப்பாத்தா ஜாலியா சுள்ளிய எரிச்சுக் குளுர் காஞ்சுகிட்டிருக்கான். அன்னைக்கு ரம்ஜான். பிரியாணிலாம் செஞ்சு வச்சிருந்தோம். கடசில என்ன சாப்ட்டோம்னே மறந்துருச்சு மேடம் என்றார் பரிதாபமாக.

இவை எல்லாவற்றையும் மீறி அவனுக்கு எதையாவது, எப்படியாவது கற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கின்றனர். இவங்கள்ள ஒருத்தன் டாக்டராவோ, ஐஏஎஸ் ஆபிசராவோ வந்துட்டா கூட போதும். எங்க வாழ்க்கைக்கு அதான் அர்த்தம் என்கின்றனர்.

குழந்தைகள் அவர்கள் மடியில் அமர்ந்து கொள்கின்றன. ஆசிரியர்களை அப்பா என்றும் ஆசிரியைகளைப் பிரியமாக அம்மா என்று அழைக்கின்றன. ஆசிரியைகள் இவ்வுறைவிடப்பள்ளியில் இரவு நேரங்களில் குழந்தைகளோடு தங்கிக்கொள்கின்றனர் தங்கள் பிள்ளைகளை வீட்டில் விட்டுவிட்டு.

உடல் வருத்தி, கொடும் மிருகங்களைக் கடந்து, தன் குடும்பத்தை இரண்டாம்பட்சமாக்கி, ஒரு ஆதிவாசிக்குழந்தை தன் இருப்பிடத்தை விட்டு வெளியேற்றப்படும் பட்சத்தில், அது இவ்வுலகில் காலூன்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் எழுத்தறிவிக்கும் இவர்கள் இறைவன் இல்லையென்றால் வேறு யார்???!!!

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes