Tuesday, December 31, 2013

சுரா பற்றி ஜெயமோகன்,சுஜாதாவைப் பற்றி சுஜாதாவின் மனைவி

ஜெயமோகன் எழுதிய - சுந்தர ராமசாமி நினைவின் நதியில் - என்ற புத்தகத்தை இந்த விடுமுறையில் படித்தேன். ஒரு மிகப்பெரிய ஆளுமையின் அருகிலிருந்து ரத்தமும், சதையுமாக அவர் வாழ்வதை அவதானிப்பது ஜெயமோகன் செய்த பாக்கியம் என்றே கருதுகிறேன். ஜெயமோகனின் இந்தப் புத்தகம் சுராவைப் பற்றிய, சமரசங்களற்ற ஒரு பதிவு.
 மூன்று பெண்களின் தந்தையும், மூன்று சகோதரிகளின் இடையே வளர்ந்தவருமான சுரா, பெண்கள் பற்றி கொண்டிருந்த உண்மையான கருத்து, தனக்குப் போதுமான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற கற்பனை அழுத்தத்தில் இருந்த சுரா,  கறாரான, அவர் கடையில் வேலை பார்ப்பவர்களால் திட்டப்பட்ட வியாபாரியான சுரா, மாற்றுக்கருத்துக்களை மறுத்த சுரா, பொய் சொன்ன சுரா, இந்தியா பற்றிய சிறிய எள்ளலும், அமெரிக்கா மீதான மோகமும் கொண்ட சுரா போன்ற சுந்தர ராமசாமியின் நினைத்துக்கூட பார்க்க முடியாத முகங்கள். நான் - குழந்தைகள், பெண்கள், ஆண்கள் - பாலுவின் வளர்ந்த வடிவமே சுரா என்ற கற்பனையில் மிதந்து கொண்டிருந்தேன். அந்தக் கற்பனை எனக்கு உவப்பானதாகவே இருந்தது. ஆனால் உண்மை வேறு.
ஜெயமோகனின் இந்தப்புத்தகத்தால் நான் சுரா மீது கொண்டிருக்கும் மரியாதையும், பற்றும், அன்பும், பிரமிப்பும் எந்த விதத்திலும் குறையப்போவதில்லை. ஜெயமோகனே இன்று வரையிலும் சுரா உபாசகர்தான். இவருக்கு சுரா தான் ஆசான். தன்னுடைய குரு, தன் வளர்ச்சியை அங்கீகரிக்காமல் இருப்பதில் வரும் வலி மிகுந்த துயர் ஜெயமோகனுடையது.
அனைத்துப் படைப்பாளிகளுக்கும் ஒரு மறுபக்கம் இருக்கிறது. நான் முன்னொரு பதிவில் http://personaldiaryofpadma.blogspot.in/2011/09/blog-post_17.html ஒரு படைப்பு, படைப்பாளியின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும் என்று எழுதியிருந்தேன். அதை நான் தீவிரமாக நம்பவும் செய்தேன். அப்படி இருக்கவேண்டியதில்லை என்று வாழ்க்கை முகத்தில் அடித்து எனக்கு கற்றுத் தருகிறது. உதாரணமாக எழுத்தாளர் சுஜாதாவின் மனைவியின் பேட்டி - சில சாம்பிள்கள் இங்கே - அவரை விட்டு பிரியணும்னுதான் நினைச்சேன்… அம்மா மடில படுத்து பல நேரம் அழுதிருக்கேன்… அவரோட வாழ பிடிக்கலைனு கதறியிருக்கேன்… ஆனா, குழந்தைகளோட ஒரு பொண்ணு தனியா வாழறது நல்லதுக்கில்லைனு அம்மா தடுத்துட்டாங்க… அவங்களை சொல்லி குற்றமில்லை. அந்தக் காலம் அப்படி. இந்தக் காலம் மாதிரி சமூக சூழல் இருந்திருந்தா நிச்சயம் அவரை விட்டு பிரிஞ்சிருப்பேன்…’’

———–
‘’அவரோட எழுத்துக்களை நான் படிச்சா திட்டுவாரு… சொல்லப் போனா புத்தகங்களை பெண்கள் படிக்கறதே அவருக்கு பிடிக்காது… சமையலறை, குடும்பத்தைத் தாண்டி பெண்கள் வெளிய வரக் கூடாதுங்கிறது அவர் கொள்கை…
———-
‘’அக்கிரகாரத்துல தன் பாட்டி வீட்லதான் அவர் வளர்ந்தாரு. அதனால அக்கிரகாரத்தை தாண்டி அவர் சிந்தனை வளரவேயில்லை. கடைசி காலம் வரைக்கும் அவருக்குள்ள இருந்தது அந்த அக்கிரகார சிறுவன்தான்…’’ 

ஒரு விஞ்ஞானி, மெத்தப் படித்தவர் கடைசி வரை மனத்தளவில் அக்கிரகாரச் சிறுவனாகவே வாழ்ந்து மடிகிறார். அன்னா கரீனாவின் ஒப்லான்ஸ்கியையும், லெவினையும் படைத்து குடும்ப அமைப்பின் மேன்மையைச் சொன்ன டால்ஸ்டாய், தன் மனைவியின் சகோதரியை செட்யூஸ் செய்கிறார். பாலுமகேந்திரா, பாலகுமாரன், இளையராஜா, சாரு நிவேதிதா................... என்று படைத்தது ஒன்று, வாழ்க்கைமுறை வேறொன்று என்று வாழ்பவர்களின் பட்டியல் முடிவில்லாதது. மலையும், மனிதர்களும் தூரத்தில் இருந்துதான் அழகு.

மனத்தைப் புடம் போடும் ஒவ்வொரு படைப்பும் (எழுத்து, இசை) தானாகவே தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும். காலத்தை வென்று நிற்கும் இப்படைப்புகளை வெளிக்கொண்டு வரும் ஒரு சாதாரண மீடியம்தான் இன்று இருக்கிறான், நாளை இல்லை என்னும் பெருமை படைத்த மானுடன். அன்னா கரீனாவை எழுத ஒரு டால்ஸ்டாய் இல்லையென்றால் இன்னோரு நட்டான்யா மூலம் அவ்வெழுத்து வெளிப்பட்டிருக்கும். அவ்வளவே. அந்நாவலுக்கும், டால்ஸ்டாய்க்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை. லா.ச.ரா விடம் ஒரு முறை உங்கள் எழுத்துக்கள் புரியவில்லையே என்று கேட்டபோது - நான் எங்கே எழுதுகிறேன், எழுத்து தன்னையே எழுதிக்கொண்டு செல்கிறது என்றாராம். இது தான் சத்தியம்.

இனிமேல் பாரதியார் தன் மகளை அடி, அடியென்று அடித்தாராம் என்று கேள்விப்பட்டால்கூட ஆச்சர்யப்படமாட்டேன் ;)

Friday, November 15, 2013

ஆசிப் ப்ரதர்ஸின் அசத்தல் பிரியாணி

இந்த சனி, ஞாயிறில் தம்பிமார்கள் பாலாவும், கார்த்தியும் குடும்பத்துடன் பெங்களூரிலிருந்து எங்கள் வீட்டுக்கு வந்திருந்தனர். ஞாயிற்றுக்கிழமை ஹோட்டலில் சாப்பிடுவோம் என்று முடிவாகியது. எங்கு சாப்பிடுவது என்ற பேச்சு கிளம்பியது. வாசு ஃபார்ச்சூன் அல்லது பார்பிக்யூ நேஷன் போவோம் என்றார். பாலாவுக்கு 2.30க்கு ட்ரெயின். அதனால் அவன் வீட்டிலிருந்து 1 மணிக்கு கிளம்ப வேண்டும். ஃபார்ச்சூன் எங்கள் வீட்டிலிருந்து கொஞ்சம் தூரம் அதிகம். 1 மணிக்குள் வீடு திரும்ப முடியாது. எனவே அந்த ஆப்ஷன் ட்ராப். அடுத்ததாக பார்பிக்யூ நேஷன். பேரைச் சொன்னவுடன் எங்கள் மகன் எக்சைட் ஆகிவிட்டான். டேபிளிலேயே இருக்கும் க்ரில், பச்சைக்கொடி, சிகப்புக்கொடி என்று அவர்கள் போடும் சீனுக்கு என் மகன் அடிமை ;). ஆனால் அவர்களின் டைமிங்ஸ் எங்களுக்கு செட்டாகவில்லை.
 ஆப்பக்கடைகள், செட்டிநாடு ஹோட்டல்களில் சாப்பிட மனதில் தெம்பில்லை. எனவே ஆசிப் ப்ரதர்ஸ் ஹோட்டலை நான் முன்மொழிந்தேன். கொடூரமாகப் பசித்த ஒரு மாலைப் பொழுதில், பிரியாணி டோர்டெலிவரிக்காக ஒரு பிரபல ஆப்பக்கடைக்குக் கால் செய்யப்போனேன். ஐய்யயோ அந்தக் கடை பிரியாணி நேத்து வச்ச புளிசோறு மாதிரி இருக்கு. எனக்கு வேண்டாம் என்று அலறினாள் என் மகள். மகனும் பலமாக அதை ஆமோதிக்க, கூகுளாண்டவரைச் சரணடைந்தேன் புது ரெஸ்ட்டாரண்ட் கண்டுபிடிக்க. அன்று துவங்கியது எங்கள் வீட்டுக்கு ஆசிப் பிரியாணியின் டோர்டெலிவரி. ஆனால் ஒருமுறைகூட நேரில் செல்லாததால் வாசு கொஞ்சம் தயங்கினார். குறைந்த விலை என்பது அவர் தயக்கத்திற்கான முதல் காரணம். அப்படி இப்படி பேசி சரிக்கட்டி ஒருவழியாகச் சென்றோம்.
மிகச்சாதாரணமான இருக்கைகள், உள் அலங்காரங்கள். பவர் ஆஃப் பாஸிட்டிவ் திங்க்கிங்கைப் பயன்படுத்தி, பாருங்களேன், ஏசி லாம் இருக்கு என்றேன். வாசு பார்த்த பார்வையில் கம்மென்று மெனு கார்டைப் பார்க்கத் திரும்பிவிட்டேன். தனியாக இருக்கும்போது நாம் செய்யத்தயங்கும் வேலைகளைக் கூட்டமாக இருக்கும்போது தாராளமாகச் செய்வோம். அப்படித்தான் வாசு ஸ்ட்டாட்டருக்கு ஆஃப்கன் சிக்கன் ஆர்டர் செய்தார். மேலும் சில்லி ப்ரான், க்ரில்டு சிக்கன் மற்றும் சிக்கன் லாலிபாப் ஆர்டர் செய்து கொண்டோம். மெயின் கோர்ஸுக்கு அவர்கள் கடையில் ஃபேமஸான பிரியாணி மற்றும் ப்ரான் மசாலா. 
முதலில் ஏகப்பட்ட சட்னிகளோடு ஆஃப்கன் சிக்கன் வந்த்து. சிக்கனுக்கு மேல் ஒரு வெண்ணிற லேயர். பார்ப்பதற்கு அவ்வளவு அப்பீலிங்காக இல்லை. வாசுவின் முழியே சரியில்லை. கொஞ்சம் டெரராகத்தான் இருந்தது. ஆளுக்கொரு துண்டை எடுத்து சாப்பிடத்துவங்கினோம். ஒரு கடி - அடேங்கப்பா அப்படியொரு சுவை.ஓரங்களில் லேசாகக் கருகி - அந்த வெண்ணிற லேயர், நன்கு அடிக்கப்பட்ட முட்டையின் வெள்ளைக்கரு. அது சிக்கனின் ருசிக்கு மேலும் சுவை கூட்டிற்று. சட்னியில் ஒரு முக்கு, ஒரு கடி - சுவையென்றால் அது தான் சுவை. க்ரில்டு சிக்கன் சொல்லிக்கொள்ளும்படியாக ஒன்றும் இல்லை. சிக்கன் லாலிபாப்பைத் தோலோடு பொரிக்கிறார்கள். இது வேறு எந்த ரெஸ்ட்டாரண்ட்டிலும் இல்லாதது. இதனால் சிக்கன் வெளியே மொறுமொறுவென்றும் உள்ளே மிருதுவாகவும் இருக்கின்றது. மேலும் தோலினால், கொழுப்பு கொஞ்சம் சிக்கனிலேயே இருக்கிறது. இதுவும் அதன் அசாதாரண ருசிக்கு ஒரு காரணம். ஆனால் இவர்கள் இந்த தோல் டெக்னிக்கை ஓவராகப் பயன்படுத்தி, சூப்பிலும் தோலோடு போடுகின்றனர். அது சகிக்கவில்லை.
அடுத்து வந்தது அவர்களின் மாஸ்டர் பீஸ் பிரியாணி. மெலிதான, நீளமான பாசுமதி அரிசி, மிதமான மசாலா. ப்ரான் மிகச்சரியான பதத்தில் - வேகாமலும் இல்லை, ரப்பர் போலவும் இல்லை. அருமை.
இவை அனைத்திற்கும் 3000க்கும் குறைவான பில். நிறைவான வயிறு, மனதோடு வெளியேறினோம்.

Thursday, November 14, 2013

Asif Brothers' asathal biriyani

It was an anticipated weekend with both my brothers, Bala and Karthi, along with their wives turned up to our home for a week end bash all the way from Bangalore. My children were head over heels with the arrival of their mamas and athais. We planned for a brunch out as both my brothers were not ready to eat whatever I offered to cook.
Next came the part of deciding the restaurant.My husband suggested two places - Fortune or BBQ nation. Bala's return train was by 2.30. So he had to leave for the station by 1.30. This constraint was to be taken into consideration before choosing a restaurant. Fortune is a bit far away from our place. So rejected. BBQ nation is a major attraction for my son with all its grill over the table, green flag, red flag etc. But they start a bit late which means Bala could not leave on time for station.
 We were not ready for the monotonous Aappakadais, Chettinad restaurants. So I suggested Asif Biriyani centre. On a day of terrible hunger, we decided to order biriyani from our usual aappakadai near our place. But my daughter said that their biriyani tasted like yesterday's puli choru (Puliogare), which was immediately agreed by my son. So I went straight to googlaandavar which listed asif biriyani as a restaurant which would door-deliver to our area. Thus followed weeks and months of door delivery from Asif. But my husband was not sure of that place as we have never been there straight. His main reason for doubt is that their prices are very reasonable. I convinced him somehow and thus we three families landed in Asif Brothers' Biriyani Center.
The restaurant is not posh with very normal seatings and lightings. Atleast the place had a/cs. I tried to be optimistic and ventured saying 'Hey see, they have a/cs' here '. My husband gave me a plain stare. I turned back to the menu. When you are in a group you try to do things which you will never do when you are alone. Thus came vasu's (my husband) wild idea of ordering for afghan chicken for starters. Then we ordered for chilly prawn, grilled chicken and chicken lollipop. For soup, we chose chicken soup and hot n sour corn soup. For main course, we ordered what they are famous for - Biriyani and prawn masala.
First came the Afghan chicken with lots of accompaniments. There was a white layer over the chicken which was not much visually appealing which in turn made Vasu have a second thought about his choice. Each of us grabbed a piece. A bite into it - Wow........The taste just blew us away. That white layer is actually well beaten egg white spread over the chicken which added on to its taste. A dip into the chutney and a bite - it was divine. Grilled Chicken - not up to the mark. Then came the Chicken lollipop. Here they prepare the chicken lollipop with skin which I haven't tasted in any other restaurant. This makes the chicken crispy outside and moist inside. The slight fat content retained because of the covering skin enhances the flavour. But they stretch this idea a bit far and make chicken soup also with skin. This is a definite dampener.
Biriyani is a block-buster here. The thin, looong basmathi rice, the mild, not-so-overpowering masala, the texture - simply great. Prawn was cooked to perfection - not under-cooked also not rubbery. Finger licking good.
For all these, we paid less than 3 grand which was surprising. We left the pocket-friendly, tasty place with content. Try this place friends for a change!

Friday, November 8, 2013

தீபாவளி விற்பனை 334 கோடி

தீபாவளியை ஒட்டிய 3 நாட்களில் டாஸ்மாக்கின் விற்பனை 334 கோடியாம். நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட இது பல மடங்கு அதிகமாம். 2002-2003ன் போது இருந்த டாஸ்மாக்கின் விற்பனை அளவு, கடந்த பத்து ஆண்டுகளில் பத்து மடங்கு அதிகரித்திருக்கிறது என்கிறது புள்ளி விவரம். பள்ளிச்சிறார்களும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்களாம்.

காலை 7 மணி போல் கல்லூரிக்குச் செல்லும் போது, நடைபாதைகளிலும், பேருந்து நிறுத்தங்களிலும் விழுந்து கிடக்கும் ஆண்களைப்பார்க்கும் போது, அவர்களின் மனைவியரும், பிள்ளைகளும் என்ன வேதனையில் இருப்போர்களோ என்ற நினைப்பு மனதை அழுத்துகிறது. மதியம் 3 மணியின் போதே இதே போன்ற காட்சிகளைக் காண முடியும். உழைக்க வேண்டிய வயதில், தன்னையும், குடும்பத்தையும், நாட்டையும் முன்னேற்ற வேண்டிய பருவத்தில் இப்படி குப்புறடித்துக்கிடக்கிறது தமிழ்ச்சமூகம்.

அன்று மதியம் 2.30 மணி இருக்கும். பேருந்தில், பெண்கள் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு 20 - 25 வயது மதிக்கத்தக்க இளைஞனை, ஒரு 40 வயது பெண்மணி எழுந்திருக்கச்சொன்னார். அவன், இது பெண்கள் இருக்கைதான். ஆனால் என்னால் நிற்க முடியவில்லை. என்ன செய்வது என்கிறான். நிற்கக்கூட முடியாத மிக ஆரோக்கியமான தலைமுறை உருவாகி வருகிறது. 1971 மதுவிலக்கை ரத்து செய்தார் கருணாநிதி. அன்று ஆரம்பித்தது வினை.

ஆனால் இந்நிலை மாறும். பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி, சீனர்களின் மேல் தொடுத்த ஓப்பிய யுத்தத்தை ஒத்த யுத்தமொன்று தமிழ்நாட்டிலும் நடந்து கொண்டிருக்கிறது. எல்லாப்பிரச்சினைகளையும் மழுங்கடிக்க மது பயன்படுத்தப்படுகிறது. அனால் சீனர்கள் போல் நாமும் இம்மது மயக்கத்திலிருந்து தெளிந்து நிச்சயம் வெளிவருவோம்.

ராகுல் காந்திக்கு சேத்தன் பகத் கொடுக்கும் ஐடியா

சட்டமன்றத்தேர்தல் நடக்கவிருக்கும் மாநிலங்களில் பிரச்சாரம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸின் நட்சத்திரப்பேச்சாளராக ராகுல் காந்தி பிரமோட் செய்யப்படுகிறார். பாஜக சார்பாக நரேந்திரமோடி பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறார். இப்பதிவில் எந்தக்கட்சி நல்ல கட்சி, யார் சிறப்பாகப் ஆட்சி செய்யப்போகிறார்கள் என்று ஆராயப்போவதில்லை. இது அரசியல் சார்ந்தது அல்ல. மாறாக, தலைவர்களின் லீடர்ஷிப், கரிஸ்மா, மேனரிசம் இவற்றைப்பற்றி இப்பதிவு பேசப்போகிறது.

ராகுல் காந்தியின் உரைகளை முன்பு கட்சிப்பிரமுகர்கள் தயார் செய்து கொடுத்துக்கொண்டிருந்தார்களாம். ஆனால் இப்போது தானாகவே தயார் செய்து கொள்கிறாராம். நரேந்திரமோடி மேடை மேடையாக உறுமிக்கொண்டிருக்கிறார். அவரது உரையின் முன், ராகுலின் `என் பாட்டி, என் அப்பா, என் தாயின் அழுகை` போன்ற பேச்சுகள் எடுபடவேயில்லை. சிங்கத்தின் முன் பூனை மியாவ் மியாவ் என்பது போல் இருக்கிறது. அவருடைய பாடி லாங்வேஜும் ஒரு தலைவனுக்கு உரியதாக இல்லை. சேத்தன் பகத் `ராகுல் இத்தனை முறை கைகளை மடக்குவதற்குப் பதிலாக அரைக்கைச்சட்டை போட்டுக்கொள்ளலாமே. காங்கிரஸ்காரர்கள் யாராவது இதை அவருக்குச்சொல்லுங்க` என்கிறார்.ராகுல் ஓயாமல் கைகளை மடித்துவிட்டுக்கொண்டே இருப்பது கவனக்கலைப்பாகவும், தன்னம்பிக்கை குறைவைக் காட்டுவதாகவும் இருக்கிறது. அதே நேரம் மோடி `பாயியோம், பெஹனோம்` என்று கூறுவதே ஒரு அறைக்கூவல் போலிருக்கிறது.

ஒரு சாதாரணக் குடிமகனின் மகன் அடிமட்டத்திலிருந்து கிளம்பி தளபதிகளையும், மந்திரிகளையும், ராஜகுருக்களையும் வீழ்த்தி அல்லது வசப்படுத்தி மன்னனை வென்று தான் மன்னனாவதற்கும் - சுகபோகத்தில் வளர்ந்த ஒரு ராஜகுமாரன் மன்னனாவதற்கும் உள்ள வேறுபாடு இது. ராகுல் என்னும் அரசியல் குழந்தையால், மோடி என்னும் அரசியல் மன்னனுக்கு எந்த விதத்திலும் டஃப் கொடுக்க முடியாது. காங்கிரஸ் ராகுலை வைத்து காமெடி பண்ணுவதை நிறுத்திக்கொள்ளலாம்.

Tuesday, October 1, 2013

புதிய வக்ரங்களை நோக்கி ஜீ டிவி சொல்வதெல்லாம் உண்மை

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி துவக்கத்தில் மாமியார் மருமகள் பிரச்சினை, கணவன் மனைவியிடையே வரும் ஈகோ பிரச்சினை, பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமிடையே இருக்கும் சிறு சிறு மனத்தாங்கல்கள் என இவ்வகை பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்லிக்கொண்டிருந்தனர். அனேக எபிசோடுகள் நன்றாக இருந்தன. 
அப்படியே மெதுவாக கணவன் வேறு பெண்ணோடு தொடர்பு கொண்டான், மனைவி வேறொருவனோடு கள்ளத்தொடர்பு என்று ஆரம்பித்து, மகளிடம் தவறாக நடக்கும் தந்தை, மகனுடைய தோழனோடு உறவு கொள்ளும் தாய் என்று மூன்றாம், நான்காம் தர ஆபாச வெப்சைட் மற்றும் பத்திரிக்கைகளின் உள்ளடக்கத்தைப்போல சொல்லவும், நினைக்கவும் மனம் கூசும் விதமான வக்ரங்களை ஒளிபரப்பி வருகின்றனர். இவற்றுக்குக் கட்டாயமாக ஒரு சென்சார் தேவை. 
இருப்பதைத்தானே காட்டுகிறோம் என்பது ஒரு அபத்தமான வாதம். இருப்பதையெல்லாம்  காட்டிவிட முடியுமா? அப்படி காட்ட வேண்டியதன் அவசியம்தான் என்ன? விழிப்புணர்வை உருவாக்குவது என்பது வேறு. இவர்கள் செய்வது அதுவல்ல. ஆரோகணம் என்ற நல்ல விமர்சனத்தைப் பெற்ற படத்தை இயக்கிய லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு இது தேவையா?
மேலானதும், உயர்வானதுமான, மானுடத்தைப் பண்படுத்தக்கூடிய விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் நிகழ்ச்சிகளையே நாம் ஆதரிப்போம்.

Thursday, August 29, 2013

தனுஷ் படத்தில் சிம்பு - பழம் விட்டாச்சு

தனுஷ், சிம்பு கொஞ்ச வருடங்களுக்கு முன் மோதிக்கொண்டிருந்தாலும் இப்போது நண்பர்களாகவே வெளியில் காட்டிக்கொள்கின்றனர். தற்சமயம் வெற்றிமாறனும், தனுஷும் இணைந்து தயாரிக்கும் காக்கா முட்டை படத்தில் ஒரு பாடலை, சிம்பு பாடினால் நன்றாக இருக்கும் என்று கருதி, அவரைப்பாடித் தருமாறு தனுஷ் கேட்டுக்கொண்டிருக்கிறார். சிம்புவும் ஒப்புக்கொண்டு சந்தோஷமாகப் பாடித் தந்ததாகக் கேள்வி.
ஒருவரை வெறுப்பேற்ற வேண்டுமென்றால் அவருக்குப் பிடிக்காதவரிடம் நாம் ஒட்டி உறவாடலாம். என்ன நடக்குது தனுஷ் இங்க - வீட்ல எல்லாரும் சுகம் தானே???? ;)

Wednesday, August 28, 2013

ஒரு ஊர்ல எம்.சி.ஏ ன்னு ஒரு படிப்பு இருந்துச்சாம்

சுமார் 20 வருடங்களுக்கு முன், எம்.சி.ஏ சீட் கிடைத்தவர்கள், கடவுளர்களால் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாகக் கருதப்பட்டனர். முடித்தவுடன், அரசுக்கல்லூரிகளில் பெர்மணன்ட் வாத்தியார் வேலைக்குச் சென்றவர்களும், ஐ.டி. துறையில் வேலைக்குச் சென்றவர்களும் பிழைத்தனர். மாறாக, ப்ரைவேட் என்ஜினியரிங் கல்லூரிகளில் வேலைக்குச் சென்ற வாத்தியார்களின் நிலை தான் இப்பதிவின் பாடுபொருள்.

முதலில், தகுதியற்றவர்கள் தான் வாத்தியார் வேலைக்கு வருவார்கள் என்ற பிம்பத்தை எப்பாடுபட்டும் உடைக்க இயலாது. நீங்கள் பல்கலைக்கழக முதல் மாணவராக இருந்தாலும் சரி, வாத்தியார் வேலைக்கு வந்து விட்டால் நீங்கள் மக்குதான். சரி அதாவது பரவாயில்லை. யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளட்டும் என்று விட்டுவிடலாம். தற்சமயப் பிரச்சினை என்னவென்றால், எம்.சி.ஏ கோர்ஸிற்கு மாணவர்கள் சேர்வதேயில்லை. 120 சீட் இருக்கும் கல்லூரியில் 20 பேர் சேர்கிறார்கள். காரணம் 6 வருடப் படிப்பு. அதனால் வேலையில் இருக்கும் வாத்தியார்கள் வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர். தங்களுடைய லேட் 30களில் இருக்கும் வாத்தியார்கள், வேலையில்லை என்று வீட்டுக்கு அனுப்பப்படும்போது அவர்களால் வேறு என்ன செய்யமுடியும். இனிமேல் ஐ.டி. துறைக்குள் நுழைவதென்பது இயலாத காரியம். மேலும், ஏற்கனவே ஐ.டி. யில் இருப்பவர்களே பயந்து கொண்டு இருக்கும் சூழ்நிலை இருக்கிறது (நோ ஜாப் செக்யூரிட்டி). எனவே அவர்களுக்கு ஆப்ஷன்ஸ் என்பதே இல்லை என்பது தான் நிதர்சனம்.

எனவே மாணவர்களும், பெற்றோரும் ஒரு துறையைத் தேர்ந்தெடுக்கும் முன் நிதானிக்க வேண்டியது மிக அவசியம். ஏதாவது ஒரு கோர் சப்ஜக்ட்டை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு பொத்தாம்பொதுவான கோர்ஸுக்கு வேலை வாய்ப்பில்லாமல் போகும்போது, கோர் சப்ஜக்ட் படித்தவர்கள் கட்டாயம் பிழைத்துக்கொள்கிறார்கள். மாறாக டெம்ப்ரரி பூம் இருக்கும் கோர்ஸுகளைத் தவிர்ப்பதே நல்லது.

Tuesday, August 27, 2013

மலேசியாவில் நடைபெற்ற உலகத்தமிழ் இணைய மாநாட்டுத் தீர்மானம் - தமிழ் மென்பொருட்களைப் பயன்படுத்துவோம்

மலேயா பல்கலைக்கழகமும், உத்தமமும் இணைந்து உலகத்தமிழ் இணைய மாநாட்டை மலேயா பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 15-18 தேதிகளில் வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். உயர்திரு. அனந்தகிருஷ்ணன், டைரக்டர், ஐ.ஐ.டி கான்பூர், அவர்களும் உயர்மட்டக்குழுவின் ஒரு உறுப்பினர். தமிழில் உள்ள மென்பொருட்கள், இன்னும் புதிய தமிழ் மென்பொருட்கள் உருவாக்க வேண்டியதன் அவசியம், இருக்கும் தமிழ் மென்பொருட்களின் தரம், அவை இன்னும் அப் டி த மார்க் இல்லாமல் இருப்பதன் காரணங்கள் முதலியவற்றை விரிவாக அலசினார்.
தமிழில் இருக்கும் மென்பொருட்களை நாம் முதலில் பயன்படுத்துகிறோமா? என்னென்ன மென்பொருட்கள் தமிழில் இருக்கின்றன என்பது முதலில் நமக்குத்தெரியுமா? இப்போதைய தொழில்நுட்ப யுகத்தில், ஒரு மொழி சர்வைவ் செய்ய வேண்டுமென்றால் அது தன்னை மொழித்தொழில் நுட்பத்துக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். தமிழுக்குத் தன்னார்வலர்கள் பலர் சிறப்பான மென்பொருட்களைத் தயாரித்துள்ளனர். ஆனால் நாம் யாரும் அதைப்பயன்படுத்துவதில்லை. ஒரு பொருளைச் சந்தைப்படுத்த இயலாத போது, அதைத் தயாரிக்க பலர் முன்வருதில்லை. சந்தைப்படுத்த அவசியமில்லாத பொருளின் தரத்தைக்குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. இது ஒரு லூப் மாதிரி போகிறது - தரமில்லாததால் பயன்படுத்துவதில்லை, பயன்படுத்திக்கொண்டே இருந்தால்தான் தரத்தை உயர்த்த முடியும். நாம் பயன்படுத்தி feedback கொடுத்தால்தான் மென்பொருள் தயாரிப்பாளர்கள் அதில் உள்ள குறைகளைக் களைய முடியும். இது தான் மாநாட்டில் விவாதிக்கப்பட்ட விஷயங்களின் சாராம்சம். கீழே தமிழ் மென்பொருட்கள் பட்டியலைத் தருகிறோம். பயன்படுத்திப் . பாருங்கள்.

1. பெரும் பேராசிரியர். உயர்திரு. தெய்வசுந்தரம் அவர்களின் மென்பொருள். 90% மேல் சரியான அவுட்புட் தருகின்ற அருமையான சொல்திருத்தியுடன் கூடிய தமிழ்ச்சொல்லாளர் (வேர்ட் ப்ராஸஸர்) மென்தமிழ். ட்ரையல் வெர்ஷனைப் பயன்படுத்திப்பாருங்கள்

2. மைக்ரோசாப்ட் வேர்டோடு தரப்படுகிற தமிழ் சொல்திருத்தி மற்றும் ப்ராஸஸர். மென்தமிழோடு இதனை ஒப்பிட்டுப் பாருங்கள். பேராசிரியர், தமிழ் கம்ப்யூட்டிங்கில் எங்கிருக்கிறார் என்று தெரியும்.

3.பொன்விழி என்னும் ஓ.சி.ஆர். உங்கள் கையெழுத்தைக் கணிணி புரிந்து கொள்வதற்கான மென்பொருள். http://ildc.in/tamil/Gist/htm/ocr_spell.htm

மேலும் உங்களுக்குத் தெரிந்த தமிழ் மென்பொருட்களின் சுட்டிகளும் வரவேற்கப்படுகின்றன. மொழி, காலத்தை வெல்ல வேண்டுமென்றால், மொழித்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்துவோம் - செம்மொழியைக் கணிணி மொழியாகவும் ஆக்குவோம்.

Monday, August 19, 2013

மலேசியாவில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாடு - ஒரு குறிப்பு

மலேசியாவில் மலேயா பல்கலைக்கழகமும், உத்தமமும் இணைந்து நடத்திய உலகத்தமிழ் இணைய மாநாடு ஆகஸ்ட் 15 முதல் 18 வரை மலேயா பல்கலைக்கழகத்தில் நடந்தது. உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். ஒரு சிறு பயணக்குறிப்பு இதோ.

டிப்பெண்டன்ட் விசாவில் இல்லாத முதல் வெளிநாட்டுப்பயணம் என்பதால் மிகவும் எக்ஸைட்டடாக இருந்தது. மாநாட்டின் டெக்னிக்கல் விஷயங்கள் ஒரு புறம் இருக்கட்டும் (பின்னொரு பதிவில்). இப்பதிவில் நான் வேறு சிலவற்றைப் பற்றி விவாதிக்க விரும்புகிறேன்.

முதலில் உணவு. காலை உணவில் விதவிதமான நூடுல்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒல்லியான, பட்டையான, உருண்டையான என்று வித விதமான வடிவங்களில், முக்கியமாக மீன் சேர்க்கப்பட்டவை.இவர்களின் நூடுல்ஸ் மசாலா வித்தியாசமாக, மிகச்சுவையாக இருக்கிறது.  அப்புறம் சம்பல் - இந்த மீன் குழம்பு சான்ஸே இல்லை. சூப்பர். முக்கியமாக கவனிக்க வேண்டியது - இவர்களின் மதிய, இரவு உணவில் (பெரிய ஹோட்டல்களில் மட்டுமல்ல -எந்த உணவகமாக இருந்தாலும்) காய்கறி சாலட்டும் (வெறும் உப்பு சேர்த்து வேகவைக்கப்பட்டவை ஆனால் ஆச்சர்யகரமாக மிக ருசியானவை), பழங்களும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இது நம்மூரில் இல்லாத, நிச்சயம் ஆரோக்கியமான உணவுப்பழக்கம். நம் வீடுகளிலும், ஹோட்டல்களிலும் இப்பழக்கத்தை நாம் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். கொஞ்சமாவது வறுப்பதையும், பொரிப்பதையும் குறைத்துக்கொள்ளவேண்டும்.

அப்புறம் ஷாப்பிங் அவ்வளவு எக்சைட்டிங்காக இல்லை. எல்லா ப்ராடக்ட்டுகளும் நம்மூரில் கிடைக்கின்றன.

ஒரு யு.எஸ் தமிழ்க்குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி தன் குடும்பத்தோடு  மாநாட்டில் பேப்பர் ப்ரஸண்ட் பண்ண வந்திருந்தார். அவர், அவருடைய கணவர், இரு மகள்கள்.18 மற்றும் 14 வயது. என்ன படிக்கிறார்கள் என்று கேட்டேன். மூத்த பிள்ளை பி.ஹெச்.டி பயோடெக்னாலஜி ஒரு ஐவி லீக் பல்கலையில் செய்து கொண்டிருப்பதாகச் சொன்னார். சர்ப்ரைஸ். எப்படி இவ்வளவு சிறிய வயதில் என்று கேட்டேன். ஹை ஸ்கூலில் இவளது சாட் ஸ்கோரைப் பார்த்து, நான்கு வருடம் பிரமோஷன் கொடுத்து, நேரடியாக பிஹெச்டி யில் அனுமதித்ததாகக் கூறினார். இது எந்த வளரும் நாட்டிலும் சாத்தியமில்லை.
இதே நேரம் ஒரு மலேசியத்தமிழரிடம் பேசிய போது, மலாய்ப்பிரிவு மாணவர்கள்  பள்ளியில் பத்து பாடங்களில், ஏதாவது இரண்டு பாடங்களில் `ஏ` க்ரேட் எடுத்தால் கூட  போதும். காலேஜில் அவர்கள் கேட்கும் பிரிவு கோட்டாவில் கிடைத்து விடும். ஆனால் தமிழ்ப்பிள்ளைகள் பத்துக்குப் பத்து `ஏ` வாங்கினால் கூட கேட்ட கோர்ஸ் கிடைப்பது கடினம் என்று கூறினார். ஏன் வளரும் நாடுகள், வளரும் நாடுகளாகவே பல வருடங்கள் இருக்கின்றன என்று எனக்குப் புரிந்தது.
இலங்கையிலிருந்து ஒரு தமிழர் வந்திருந்தார். சமீபத்தில் துக்ளக் பத்திரிக்கையில் ஒரு ஈழம் தொடர் வெளியாகி, பெருத்த விமர்சனங்களுக்கு ஆளாகியிருந்தது. அத்தொடரில், ஒரு நிருபர் குழு, இலங்கை சென்று மீள்குடியேற்றம் எப்படி நடக்கிறது என்பதைப் பார்த்து, மிகப்பாஸிட்டிவான ரிப்போர்ட்டைக் கொடுத்திருந்தனர். மற்ற அனைத்து ஊடகங்களும் நெகட்டிவ் விமர்சனங்களையே கொடுத்திருந்த நிலையில், துக்ளக் மட்டும் மீள்குடியேற்றம் ஒழுங்காக நடப்பதாகத் தெரிவித்திருந்தது. உண்மையில் அங்கு என்ன தான் நடக்கிறது என்று அவரிடம் கேட்டேன். அவர் என்னைக் கேட்டவை மற்றும் என்னிடம் தெரிவித்தவை இதோ.


1. நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, இலங்கை என்னும் நாடாக முன்னேற விரும்புகிறோம். உங்கள் அரசியல்வாதிகள் உங்கள் தமிழ்நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்கட்டும். எங்களை நாங்கள் பார்த்துக்கொள்வோம்.

2. போரின் காயங்களை மறந்து நாங்கள் முன் செல்ல விரும்புகிறோம். எங்களை விட்டுவிடுங்கள்.

நாம் நிறைய உண்மைகளை எதிர்கொள்ள விரும்புவதில்லை. மாறாக நாம் விஷயங்கள் எப்படி இருக்க வேண்டுமென்று விரும்புகிறோமோ அப்படியே கற்பனை செய்து கொள்கிறோம். இதுவே நிஜம்.

Wednesday, July 17, 2013

தமிழ் நாட்டு மக்களின் டாப் 10 டெரர்கள்

நம்ம தமிழ் மண்ணுக்குன்னே சில குணம் இருக்கு. அந்த குணத்தால பல நேரம் மெல்லவும் முடியாம, முழுங்கவும் முடியாம தடுமார்றது நம்ம ப்ளட்லயே இருக்கு. அதுல முக்கியமான 5 இதோ -

1. மாடி வீட்டு அங்கிளாவது, ஆன்ட்டியாவது நம்ம வீட்டு பிள்ளங்க அல்லது மனைவி கூட வாசல்ல நின்னு பேசிக்கிட்டு இருந்தா, விரல் நகம் கூட வெளிய தெரிஞ்சிராம, நல்லா தள்ளி உக்காந்து ஒளிஞ்சுக்கிறது.

2. மேல பாத்த இந்த குணம், நம்ம அப்பார்ட்மென்ட்டோட நிக்கிறது இல்ல. கடல் தாண்டி போனாலும், யாராவது தமிழ்க்காரன்னு தெரிஞ்சுட்டா அப்டியே எங்கயாவது போய் பதுங்கிர்றது. லண்டன் ஐ-ய ஒரு நிமிஷம் நிறுத்தி, அதுல இருக்குற தமிழ்க்காரங்கள மட்டும் கவுன்ட் பண்ணா, நிச்சயம் ஒரு 50 பேராவது இருப்போம். ஆனா யாரும் யார்கூடவும் பேசிக்க மாட்டோம். (மலையாளிகள் மலையாளியான்னு? அப்டின்னு உடனே ஆரமிச்சிருவாங்க)

3. பெரிய ஸ்வீட் ஸ்டாலுக்குப் போய் கிலோ ரூ.680 விக்கிற ஏதாவது ஸ்வீட்ட சாம்பிள் கேட்டு வாங்கி சாப்ட்ருவோம். அப்புறம் அந்த டேஸ்ட் நமக்கு சுத்தமா பிடிக்கலன்னா கூட, கடைக்காரங்க தப்பா நெனச்சுருவாங்களோன்னு அதே ஸ்வீட்ட வாங்கிட்டு திருதிருன்னு முழிப்போம்.

4. ஃபுல் எலக்ட்ரிக் ட்ரெயினும் காலியா இருக்கும். ஆனா மெனக்கெட்டு நம்ம கிட்ட வந்து உக்கார்றவன நாம வெளிய தள்ளலாமா இல்லன்னா நம்ம வெளிய குதிச்சுருவோமான்னு சின்சியரா யோசிச்சுக்கிட்டு இருப்போம்.

5. ஸ்டார் ஹோட்டல், இல்லன்னா வேற ஏதாவது பெரிய ரெஸ்ட்டாரண்ட்டுக்குப் போகும்போது தமிழ்ல பேசுனா நம்மள மட்டமா நெனச்சிருவாங்களோன்னு டெரர்லயே சுத்துவோம் (ஆனா ஒரு பாம்பே காரன் ஸ்டார் ஹோட்டல்லயும் ஹிந்தில தான் பேசுறான்)

இதுல ஏதாவது ஒண்ணயாவது நீங்க எப்பவாவது பண்ணியிருக்கலன்னா நீங்க தமிழனாவே இருக்க முடியாது - ஹிஹிஹி



Wednesday, June 26, 2013

மணிவண்ணனைத் திட்டித் தீர்த்த பாரதிராஜா

ஆனந்தவிகடனில் பாரதிராஜா வாசகர்களின் கேள்விக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார். மணிவண்ணன் பற்றிய ஒரு கேள்விக்கு மிகக் கடுமையாக, தரக்குறைவாக பதில் அளித்திருக்கிறார் பாரதிராஜா.
 ஈழத்தமிழர் பிரச்சினை, காவேரிப் பிரச்சினை போன்றவற்றில் இவர்களுக்குக் கருத்து வேறுபாடு இருந்திருக்கிறது. மாற்றுக்கருத்தே இருக்கக்கூடாத அளவுக்கு பாரதிராஜா மானுடப்பிறப்புக்கு  அப்பாற்பட்டவரா என்ன? அவன் முழி திருட்டு முழி, நான் தான் அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சேன் - இத்யாதிகள். கருத்துக்கு பதில் கருத்தை முன் வையுங்கள் பாரதிராஜா. பர்சனல் விமர்சனங்களை அல்ல. பாரதிராஜாவின் பேட்டி வெளி வந்த 3 நாட்களில் மணிவண்ணன் மரணமடைந்து விட்டார். அவன் வாயத்திறந்தா பொய்தான் வரும் என்று சொன்ன பாரதிராஜா வாயைத் திறந்ததால் ஒரு உயிர்  ஆறாத மனக்காயத்துடன் மரணத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறதே. இதற்கு பாரதிராஜா என்ன நியாயம் கற்பிக்கப்போகிறார். (பாரதிராஜாவுக்கு மாறாத மரியாதையுடன் மணிவண்ணன் அளித்த கடைசி பதில் இங்கே - http://tamil.oneindia.in/movies/news/2013/06/director-manivannan-s-last-speech-177270.html )
வார்த்தைகள் வலிமையானவை. அவற்றால் விளிம்பில் இருக்கு ஒருவனை உயிர்ப்பித்து, உயர வைக்க முடியும். அதே வார்த்தையால் மனிதனை நரகத்திற்கு வழி நடத்த முடியும். நம்மை, நம் வாழ்க்கையைத் திசை மாற்றிய வார்த்தைகளைப் பேசியவர்களை நாம் என்றும் மறப்பதில்லை. வார்த்தைகள் இரு பக்கமும் கருக்குள்ள பட்டயம் போன்றவை. அவற்றை மிகக்கவனமாகக் கையாளப் பழகுவோம். யாகாவாராயினும் நாகாக்கப் பழகுவோம் - அது பாரதிராஜாவாகவே இருந்தாலும் கூட.

Wednesday, June 12, 2013

இந்தக் கேள்விய எங்கிட்ட கேக்காதீங்க - டென்ஷனாகும் இளையராஜா

நம்ம தமிழ்நாட்ல பொதுமக்களுக்கும், ஜர்னலிஸ்ட், மத்த ஊடகத்துக்காரங்க எல்லார்கிட்டயும் ஒரு செட் ஆஃப் கொஸ்ட்டின்ஸ் இருக்கு. சம்மந்தப்பட்ட ஆள் சிக்கும்போது அந்தக்கேள்வியக் கேக்காம விடவே மாட்டாங்க. இதோ அந்த லிஸ்ட் - 

சிம்பு கிட்ட - எப்ப கல்யாணம்? ஷூட்டிங்ல என்ன பிரச்சினை?

தனுஷ்கிட்ட - சூப்பர் ஸ்டார நீங்க எப்படி கூப்பிடுவீங்க? (எப்டி கூப்ட்டா என்ன - ஏம்ப்பா உசுர வாங்குறீங்க)

அஜித் கிட்ட - பிரியாணி நல்லா செய்வீங்களாமே?

ரஜினி கிட்ட - இது உலகத்துக்கே தெரியும்ப்பா - இன்னொரு தடவ அந்தக்கேள்விய டைப் பண்ணவே எனக்குப்பிடிக்கல

கமல்கிட்ட - மருதநாயகம் ஏன் நின்னுச்சு?

விஷால் கிட்ட - யாரு அந்தப் பொண்ணு?

த்ரிஷா கிட்ட - உங்களுக்கும் ராணாவுக்கும் நடுவுல என்ன?

இளையராஜா, வைரமுத்து, பாரதிராஜா கிட்ட - உங்க கூட்டணி திரும்ப வருமா? (ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா - வந்தா வரட்டும் வராட்டி போகட்டும் ஏம்ப்பா டார்ச்சரக் கிளப்புறீங்க - ராஜாவே டென்ஷனாகிட்டார்)

பாலச்சந்தர் கிட்ட - திரும்ப ரஜினி கமல வெச்சு படம் இயக்குவீங்களா?

இதுல நெறய கொஸ்ட்டினுக்கு எங்களுக்கும், கேக்கறவங்களுக்குமே ஆன்ஸர் தெரியும், மீதி கொஸ்ட்டினுக்கு ஆன்ஸர் தேவயில்ல. அதுனால புதுசா எதாவது யோசிச்சுக்கேளுங்கப்பா ப்ளீஸ்

Tuesday, April 30, 2013

விஜய் டிவியில் கமல் சொன்ன அறம்

விஜய் டிவி நீவெஒகோ (இங்கிலிஷ்ல மட்டும் தான் கேபிசியா? நாங்களும் சுருக்குவோம்ல) ஷோவில் கமல் கலந்து கொண்ட நிகழ்ச்சி வழக்கம்போல் கான்ட்ரவர்ஸியில் சிக்கிக்கொண்டுள்ளது - ஆனாலும் ஷோவில் பெண்கள் கொஞ்சம் ஓவராகத்தான் செய்தார்கள். கமல் அதில் ஜெயமோகன் அவர்களின் அறம் என்ற புத்தகத்தைப்பற்றி தெரிவித்தார். கண்களில் நீர்மல்க படித்த ஒரு புத்தகம் என்றார். உடனே வாங்கினேன் (டயல்ஃபார்எபுக் மிகச்சிறப்பாகச் செயல்படுகின்றனர்). உண்மையில் கரைந்து போனேன்.

பொதுவாக இப்போதைய பிரபல எழுத்தாளர்கள் சாருநிவேதிதா,எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன் போன்றோரின் எழுத்துக்கள் என்னைக் கவரவில்லை, அனேக எழுத்துக்கள் எனக்குப் புரியவும் இல்லை.
 தேவனும் அசுரனும் கலந்தவன் மனிதன். நம் அன்றாட வாழ்க்கையில் ஒரு சிறிய உரசலிலும் நம்முள் இருக்கும் அசுரன் தலை காட்டி விடுகிறான். கோபம், பொறாமை, கீழான இச்சைகள், மனக்கசப்பு இத்தியாதிகள். ஆனால் நம்முள் இருக்கும் தேவனை வெளிக்கொணர பகீரதப்பிரயத்தனம் செய்யவேண்டியுள்ளது. இங்குதான் பல்வேறு கலை வடிவங்களும் மனிதனுக்குத் துணைபுரிகின்றன. இசையும், இலக்கியமும் இன்னபிறவும் மனிதனுள் இருக்கும் தேவனை, அவனுக்கும், அவன் சுற்றத்தாருக்கும் புலப்படுத்துகின்றன. ஒரு நல்ல இலக்கியம் நிச்சயம் இவ்வேலையைச் செய்யும்.
 ஆனால் சாருநிவேதிதாவின் ஒரு ஃபேமஸ் நாவல் என்னைப்பொறுத்தவரை ஏற்கனேவே விளிம்பில் இருக்கும் மனிதனை இன்னும் கீழ்மைப்படுத்துவதாக இருந்தது. அதே போல் மிகப்பிரபலமான ராமகிருஷ்ணனின் உபபாண்டவத்தை வாசிக்க முயற்சித்தேன். தீம் மிக நல்ல தீம். ஆனால் அவர் மொழிநடை எனக்குச்சரிப்பட்டு வரவில்லை. இதே போன்றதொரு தீமில் பிரபஞ்சனின் மிக அற்புதமான படைப்பு ஒன்றைப் படித்திருக்கிறேன். அந்த வாசிப்பில் கிடைத்த சுகம், மத்தியான வெயிலில் ஆர்ட் பிலிம் பார்ப்பது போன்ற உணர்வைத்தந்த உபபாண்டவத்தில் இல்லை. 
சரி வயதாகிவிட்டது. புதிய எழுத்தாளர்களின் (எனக்கு) நடையைப் பழக்கப்படுத்திக்கொள்வது சாத்தியமில்லை என்ற முடிவுக்கு நான் வந்த வேளையில், கமல் அறத்தைப் பற்றி சொன்னார். வாங்குவோம் - பிடித்தால் படிப்போம், இல்லை என்றால் விட்டுவிடுவோம் என்ற முடிவோடு ஆர்டர் செய்தேன்.
அறம் - உண்மையில் அனேக இடங்களில் புத்தகத்தின் எழுத்துக்களைக் கண்ணீர் அசைத்தது. மானுடத்தின் மேன்மையை உரக்கச்சொன்ன புத்தகம். மனத்தின் கரைகளைக் கழுவி கண்ணீராக வெளியேற்றியது. நான் வாசித்து வாசித்து பிரமித்த பிரபஞ்சனின் இன்னொரு வடிவம் ஜெயமோகனாக வெளிப்பட்டு நின்றது. சோற்றுக்கணக்கு, யானை டாக்டர் - இரண்டும் மிகப் பிரமாதம்.
 தேடிச்சோறு நிதம் தின்று
 பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பம் மிகவுழன்று,
 பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவம் எய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே நானும்
வீழ்வேன் என நினைத்தாயோ

என்று காலத்துக்குச் சவால் விட்ட, வெளியில் வராத மாமனிதர்கள் இப்புத்தகத்தில் உலாவினர். அனேகர் உண்மை மாந்தர்கள். வாய்ப்புக்கிடைத்தால் கட்டாயம் படியுங்கள். இல்லையென்றால் வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு படியுங்கள்.

Friday, April 26, 2013

அமெரிக்க H1B விசா வாங்க யாரை அணுகுவது?

ஹெ1பி விசா இந்த வருடம் குலுக்கல் முறையில் கொடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனங்கள் இவ்விசாவிற்கான விதிமுறைகளைத் தளர்த்த வேண்டும் என்று அந்நாட்டு அரசாங்கத்திடம் வலியுறுத்திக்கொண்டிருக்கின்றன. ஆனால் மன்னித்துக்கொள்ளுங்கள் நண்பர்களே. நான் விசா வாங்க யாரை அணுகுவது என்பதைப்பற்றி இப்பதிவில் பேசப்போவதில்லை. மாறாக ஏன் விசா வாங்க வேண்டும் என்றே பேசப்போகிறேன்.
 இப்போதும் நம் இளைய சமுதாயம், அமெரிக்காவுக்குப்போய் சம்பாதிப்பதுதான் லட்சியம் எனவும், அங்கு போய் சம்பாதித்தவர்கள் தான் வாழ்க்கையில் வென்றவர்கள் என்றும் நினைக்கின்றனர். இதைத்தான் பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு வலியுறுத்துகின்றனர். பொருளாதார ரீதியாகப் பெறும் வெற்றிதான் வெற்றியா? இல்லை - நிச்சயமாக இல்லை.ஆனால் துரதிர்ஷடவசமாக இக்கருத்துக்கு வலிவூட்டும் விதமான ஒரு ஐடியலிஸ்ட்டிக் மனிதனை அருகில் பார்க்கக்கூடிய வாய்ப்பு இன்றைய பெரும்பாலான இளைஞர்களுக்கு இல்லை. கலெக்டர் ஆபிஸில் லட்சலட்சமாக சம்பளமாகவும் கிம்பளமாகவும் பெரும் வாய்ப்பை த் தரும் வேலையை விட்டுவிட்டு அரசு பள்ளிக்கூட ஆசிரியராக, தன் சம்பளத்தில் ஏழை மாணவர்களுக்கு சீருடை வாங்கித்தரும் என் ஆசிரியரையும், தன் வருமானம் தன் குடும்பத்துச்செலவுக்கு மிக டைட்டாக இருந்த போதிலும், ஏழை மாணவிகளுக்கு எந்த ஃபீஸூம் வாங்காமல் ட்யூஷன் எடுத்த என் தாயாரையும் விட வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் வேறு யாராக இருக்க முடியும்?
குடும்பச்செலவுகளைச் சமாளிக்கும் அளவுக்கான பணம், தான் இருக்கும் இடத்தில் தன்னைச் சுற்றி இருப்பவர்களின் மேல் கரிசனம், பணம் மட்டுமே வாழ்க்கை, பணம் சம்பாதிப்பது ஒன்றே குறிக்கோள் என்றில்லாமல் பணத்திற்கு எவ்வளவு மதிப்பு கொடுக்க வேண்டுமோ அதை மட்டுமே கொடுத்து, தேவைப்படுபவர்களுக்குத் தன்னால் இயன்ற பணத்தைக்கொடுத்து வாழ்வதே வெற்றிகரமான வாழ்க்கை. செழுங்கிளையை எவன் தாங்குகின்றானோ அவனே செல்வந்தன்.

Thursday, April 18, 2013

நீங்கள் சமீபத்தில் திருமணம் செய்து கொள்ள இருக்கும் இளைஞரா - இதைப் படியுங்கள் முதலில்

     முதலில் உங்கள் திருமண வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள். எப்படியும் உங்களுக்குச் சமமாகப் படித்த, வேலை பார்க்கும் பெண்ணைத்தான் தேர்ந்தெடுப்பீர்கள். சமீபத்தில் நான் பார்த்த வரை, அழகிய தோற்றத்திற்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுத்து மனைவியைத் தேர்ந்தெடுப்பதும் நடக்கிறது. தவறில்லை - ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு ஆசை, கனவு.
ஆனால் பெண்களின் உடலியல் கூறுகள் பற்றிய சில அறிவியல்பூர்வமான தகவல்களையும், பெண்களின் மனவியல் பற்றியும் சில தகவல்களை அறிந்து கொள்வது ஒவ்வொரு ஆணுக்கும் அவசியம்.

பார்ப்பதற்குக் குடும்பப்பாங்கா இருக்கணும் என்று நீங்கள் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்த பெண் பார்ப்பதற்கு சினேகா போலோ அல்லது மவுன ராகம் ரேவதி போலவோ இருக்கலாம். ஆனால் மவுனராகத்தில் ரேவதி சொல்வது - எனக்கு ரொம்ப பிடிவாதம் உண்டு, முன்கோபம் உண்டு,சொன்ன பேச்சு கேட்கமாட்டேன் - இதுவே நிஜம். சினேகா போல் சிரித்துக்கொண்டே நீங்கள் சொன்னதெற்கெல்லாம் சரி சொல்வாள் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். விஜய் டிவி நீயா நானாவில் பெண்கள் வன்மம் வைத்து பழி வாங்குவது குறித்துப்பேசிய போது ஆண்கள் அதிர்ந்து விட்டனர். எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் இது கூடவா ஆண்களுக்குத் தெரியாது என்பதுதான். பெண்களின் வன்மம் குரூரமானது. அவர்கள் கோல்ட் பிளட்டட் ஆக எளிதில் செயல்படுவார்கள் . பெண்கள் மிகவும் மென்மையானவர்கள். அவர்களை நம் இ\ஷ்டத்துக்கு வளைத்துக்கொள்ளலாம் என்று நினைப்பவர்கள் - உஷார்.

இன்னொரு முக்கியமான விஷயம் - நீங்கள் செய்த, சொன்ன விஷயத்தை ஒரு நாள் சாதாரணமாக எடுத்துக்கொண்டவர்கள் வேறொரு நாள் அதே போன்ற ஒரு விஷயத்துக்காக சண்டையிடலாம். குழம்பிவிடாதீர்கள்.பெண்களுக்கு பி.எம்.எஸ் என்று ஒரு பிரச்சினை உண்டு. இது மாதா மாதம் அவர்களின் உடல் நலம், மன நலம் இரண்டையுமே பாதிக்கிறது. பெண்களின் பீரீயட்ஸ் நாட்களுக்கு 4 நாட்கள் முன்பிருந்தே அவர்களுக்கு தீடீர்க்கோபம், திடீர் அழுகை, டிப்ரஷன் போன்றவை வர ஆரம்பிக்கின்றன. இது அனேக ஆண்களுக்குத்தெரிவது இல்லை. ஏன் காரணமில்லாம அழறா? பொம்பளங்க மனச புரிஞ்சுக்க முடியாது - என்று பத்தாம் பசலித்தனமாக யோசிக்காதீர்கள். இது போன்ற சமயங்களில் அவர்களை சமைக்கவோ, வேறு வேலைகள் செய்யவோ வற்புறுத்தாதீர்கள். வெளியே பார்ப்பதற்கு அவர்கள் நலமாய் இருப்பது போல் தான் உங்களுக்குத்தெரியும். ஆனால் அவர்களுக்குள் உடல் மன ரீதியாகப் பிரளயம்தான் நடந்து கொண்டிருக்கும். இது போன்ற சமயங்களில் அவர்களுக்கு நீங்கள் செய்யும் ஒவ்வொரு சின்ன உதவியும், உங்கள் மீதான அன்பையும், காதலையும், மரியாதையையும் பன்மடங்கு அதிகரிக்கும். மாறாக உங்களது சிறிய உதாசீனமும் உங்கள் மேல் வெறுப்பை விஷவிருட்சம் போல் வளர்க்கும். ஏற்கனவே நான் சொன்ன பெண்களின் வன்மத்தை நீனைவில் கொள்க. 
தற்போதைய பெண்கள் உங்கள் அம்மாக்கள் போல் கிடையாது. பொருளாதார ரீதியாக சப்போர்ட் பண்ணுவதிலும், குழந்தைகளை அறிவுச்சுடராக வளர்ப்பதிலும் உங்கள் அம்மா வை விட உங்கள் மனைவி பன்மடங்கு உயர்ந்து இருக்கப்போகிறாள் - அவளின் படிப்பு மற்றும் எக்ஸ்போஷர் காரணமாக. அதே நேரம் உங்களின் அர்த்தமற்ற அடக்குமுறைகளை ரிஜக்ட் செய்வதிலும் அவள் உங்கள் அம்மாவிடமிருந்து வேறுபடத்தான் போகிறாள். 

Friday, April 12, 2013

பல்கலைக்கழகத் துணைவேந்தரின் துணிச்சல்

மேற்கு வங்கத்தில் Students' Federation of India வின் தலைவர் 22 வயது சுதிப்தா குப்தா போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்தார். இம்மரணத்தில் மர்மம் இருப்பதாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனையொட்டி மேற்கு வங்க நிதியமைச்சர் கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்பினால் தாக்கப்பட்டார். இதற்கு பதிலடி தரும் விதமாக திரிணமூல் காங்கிரஸ் கொடியை ஏந்திய சிலர் பிரசிடன்சி பல்கலைக்கழக வளாகத்தினுள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கு பயிலும் மாணவிகளைப் பாலியல் பலாத்காரம் செய்யப்போவதாக மிரட்டியுள்ளனர்.

இப்படி ஒரு பதட்டமான சூழ்நிலையில், அப்பல்கலையின் துணைவேந்தர் மாளபிகா சர்க்கார் அளித்துள்ள பேட்டி எனக்கு மிகுந்த ஆச்சரியத்தைத் தருகிறது. அவர் மீடியாக்களில் தெளிவாக நடந்ததை அப்படியே தெரிவித்துள்ளார். கையில் கட்சிக்கொடி ஏந்திய குண்டர்கள், பல்கலைக்கழகத்தின் லேபுகள், பிற பொருட்களைச் சேதப்படுத்தியிருக்கின்றனர் என்றார். அவர்கள் கட்சிக்காரர்கள் தானா அல்லது வேறு யாராவது கட்சியைக் களங்கப்படுத்துவதற்காக கட்சிக்கொடியைக் கையில் வைத்துக்கொண்டு அப்படிச் செய்தார்களா என்று நிருபர் எடுத்துக்கொடுத்த லீடுக்கு வளவள கொழகொழ பதிலைச் சொல்லாமல் அதைத் தீர்மானிக்க வேண்டியது காவல்துறை என்றார் கம்பீரமாக.
இத்துணைவேந்தரை நியமித்தது மம்தா பானர்ஜி.பேஸ்புக் கார்ட்டூனுக்கு லைக் கொடுத்ததற்காக கைது செய்யப்படுவது வங்கத்தில் புதிதல்ல. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தான் பார்த்ததை, தான் அநியாயம் என்று எண்ணுவதைத் தைரியமாக எந்தவித காம்ப்ரமைஸூம் இல்லாமல் எடுத்துச்சொன்ன இப்பெண்மணியின் நெஞ்சுரமும், நேர்மைத்திறமும் என்னை வியப்பிலாழ்த்துகிறது. நாம் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ விதமான அபத்தங்களையும்,
 மேலிடத்தில் இருப்பவர்களின் அர்த்தமற்ற கோபங்களையும், செயல்களையும் - சர்வைவல் பிரச்சினை என்று கூறிக்கொண்டு மென்று முழுங்கிக் கொண்டு , சகிக்க முடியாமல் சகித்துக்கொண்டு சென்று கொண்டிருக்கிறோம். ஏன் நம் மாநிலத்திலேயே கிட்டத்தட்ட 160 வருட பாரம்பரியம் கொண்ட ஒரு பெரும் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஒருவர் தான் பேசும் அனைத்து மேடைகளிலும், தான் சார்ந்துள்ள ஒரு கட்சித்தலைவரையும், அவர் குடும்பத்தாரையும் காது கூசும் அளவிற்குப் புகழ்ந்து தன்னை அவர் காலடியில் அமர்ந்திருப்பேன் என்று கூறித் தரைமட்டமாகத் தாழ்த்திக்கொண்ட உரையை எவ்வளவோ முறை கேட்டிருக்கிறோம். அவரின் இத்தகைய `தன்னடக்க` பேச்சை விகடன் கூட சிறிய எள்ளலோடு வெளியிட்டிருந்தது.
     இப்படிப்பட்ட அடிவருடித்தனம் இல்லாமல், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் கொண்ட உயர்திரு.மாளபிகா சர்க்கார் அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட். We admire you Dear Madam

Thursday, March 14, 2013

சூப்பர் சிங்கரில் நித்யஸ்ரீ மகாதேவன்

                  திரையிசை மற்றும் கர்நாடக இசைப் பாடகி நித்யஸ்ரீயை மீண்டும் சங்கீத மேடைகளில் பார்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. சில மாதங்களுக்கு முன் அவருடைய கணவர் திரு. மகாதேவன் தற்கொலை செய்து கொண்டார். பல்வேறு காரணங்கள் கிசுகிசுக்கப்பட்டன. அவற்றுள் ஒன்று, நித்யஸ்ரீயின் மாமியார் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது அவர் வீட்டிலிருந்து மாமியாரைக் கவனித்துக்கொள்ளவில்லையாம். இதனால் அவருடைய கணவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், தாயாரின் மறைவுக்குப்பின் அம்மனவுளைச்சல் அதிகமானதாகவும் கூறப்படுகிறது. இதனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று ஒரு ரூமர். 

                          இச்செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் சில கருத்துக்களை முன் வைக்க விரும்புகிறேன். இசை என்பது கடவுள் கொடுக்கும் வரம். எல்லோருக்கும் அவ்வரம் கிட்டுவதில்லை. சமீபத்தில் விஜய் டீவி-யில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ஒளிபரப்பானது. ஓம் சிவோஹம் பாடலைக் கேட்டபோது Knowledge Surpassing Peace என்பார்களே - அது போன்ற அறிவெல்லாம் கடந்த இறை அமைதி மனதை நிறைத்தது. இப்படிப்பட்ட மன அமைதியை எத்தனை பேரால் பிறருக்கு வழங்க முடியும்? இது ஒரு மிகப்பெரிய வரமல்லவா?

                        இப்படிப்பட்ட ஒரு வரம் கிடைக்கப்பெற்ற நித்யஸ்ரீ, அதை பிறருக்கும் வழங்குவதே நியாயம். தன் தாயாரை ஒரு வேலையாளை அமர்த்திப் பார்த்துக்கொண்டிருக்கலாமே திரு.மகாதேவன்? இதற்காக அவர் தன்னையும் வருத்தி, காலமெல்லாம் தன் மனைவியும், பிள்ளைகளும் வருந்தும் படி செய்தது தவறல்லவா? 

 'இது ஒரு புதுவித பரவசம் - மயக்குது இசையென்னும் அதிசயம்............



இவ்வதிசயத்தைக் கைக்கொண்ட எல்லோரும் மானுடத்தை வசப்படுத்தட்டும்.

Wednesday, January 23, 2013

குழந்தைகளுக்குப் புத்தகத் திருவிழாவில் இம்முறை என்ன சிறப்பு?

        கோலாகலமாக நடந்து முடிந்து கொண்டிருக்கிறது புத்தகத்திருவிழா (இன்றே கடைசி). பார்க்கப் பார்க்கச் சலிக்கவில்லை. இந்த முறை சின்ன பிள்ளைகளுக்கான தமிழ்ப் புத்தகங்கள் ஆப்பிள் பிரசுரத்தால் மிகவும் சிறப்பாகக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ரீஸனபிள் விலை, மிக அழகான படங்கள், க்வாலிட்டி பேப்பர் - சுருக்கமான கதைகள். பிள்ளைகளால் மிக எளிதாகப் படிக்க முடிக்கிறது. இதைத்தான் நான் ரொம்ப நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.
                  அதாவது, சின்னப் பிள்ளைகளுக்குரிய தமிழ்ப்புத்தகங்கள் (7 மற்றும் 5 வயது) அவர்களை வசீகரிக்கும் வண்ணம் இருந்ததேயில்லை - படமேயில்லாத மிக நீண்ட கதைகள், மொழி நடை வயதுக்கேற்றார் போல் இல்லாமல் - இப்படித்தான் இதுவரையில் கடந்த 4 வருடங்களாக நான் புத்தகச் சந்தையில் பார்த்தேன். ஆனால் இம்முறை அந்தக்குறையை ஆப்பிள் பிரசுரம் போக்கிவிட்டது. குழந்தைகளுக்கான ஆங்கிலப் புத்தகங்களுக்கு இணையான தரத்துடனும், சுவாரசியத்துடனும் தமிழ்ப்புத்தகங்கள் - Im impressed to the core. குழலினிது யாழினிது என்பர் தங்கள் பிள்ளைகள் தமிழ்ப்புத்தகங்கள் (அதாவது தாய்மொழியில் உள்ள புத்தகங்கள் ) படித்து இன்புறுவதைக் கேட்டு மகிழாதவர். ஜென்ம சாபல்யம் அடைந்தேன் ;)
மேலும் AGS.மணி என்பவர் ஒரு பிரசுரம் நடத்தி வருகிறார். சின்ன பிள்ளைகளுக்கான க்ளாசிக் வரிசை  தமிழில் (ஆலிஸ் இன் வெண்டர்லேண்ட், தீக்குச்சி விற்ற பெண்....) ஒரு புத்தக விலை ரூ.12. இதுவும் மிக நன்றாக இருந்தது. பேப்பர் அவ்வளவு தரமில்லை. ஆனாலும் பரவாயில்லை. இது ஒரு நல்ல முயற்சி.
           அப்புறம் இருக்கவே இருக்கிறது நம் அமர்சித்திரக்கதை. காக்கை காளி, சுப்பாண்டி, தந்திரி மந்திரி - பூந்தளிரில் நாம் ரசித்து ரசித்து ரசித்த கேரக்டர்கள் - ஆங்கிலத்தில் தொகுப்பாக வெளியிடுகின்றனர். இதைத் தமிழிலும் வெளியிட்டால் நன்றாக இருக்கும். என்ன தான் என் பிள்ளை இதை ஆங்கிலத்தில் சிரித்துச் சிரித்துப் படித்தாலும், அவள் (ன்) தமிழில் படிப்பதையே நான் மிகவும் ரசிக்கிறேன். குரங்கு கபீஷை ஏனப்பா ஆங்கிலத்தில் கூட வெளியிட மறுக்கிறீர்கள்???
            நியுசெஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்திலும் நான் மேற்சொன்ன வயது குழந்தைகளுக்கான சில தமிழ்ப்புத்தகங்கள் கிடைக்கின்றன.இன்னொரு இனிய காட்சி - நான் எந்த ஸ்டாலில் எல்லாம் சின்ன பிள்ளங்க தமிழ் புக், சின்ன பிள்ளங்க தமிழ் புக் என்று தேடிக்கொண்டிருந்தேனோ அங்கெல்லாம் இன்னொரு அப்பா (பிள்ளைகள் 5 மற்றும் 3 வயது) சின்ன பிள்ளங்க தமிழ் புக் தேடிக்கொண்டிருந்தார். அப்புறம் ஸ்டால் எண் டிப்ஸெல்லாம் பரிமாறிக்கொண்டோம்.  பிரசுரகர்த்தாக்களே நீங்கள் வெளியிடுங்கள் - நாங்கள் வாங்குவோம் கட்டாயம்.
              மற்றும் க்ராஸ்வேர்ட், விடுகதைகள் ..... (ஆங்கிலத்தில்தான்) - இவ்வாறு எங்கள் குடும்பத்தின் புத்தகக்கண்காட்சி இனிதே முடிந்தது.
எனக்கு வாங்கிய புத்தகப்பட்டியல் பின்னொரு பதிவில் :)
 
 

Tuesday, January 15, 2013

பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கு்ம் பாலமேடு ஜல்லிக்கட்டு - வசந்த் டிவி நேரடி ஒளிபரப்பு

வசந்த் டிவியில் பாலமேடு ஜல்லிக்கட்டு நேரடியாக ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. சும்மா சொல்லக்கூடாது - உண்மையில் செம த்ரில். மாடு பிடிப்பவருக்கு பரிசுகள் பீரோ, சைக்கிள், பாவாடை (???), தங்கக்காசு, வேட்டி, அண்டா, குடம். வாடிவாசலின் இருபுறமும் சைக்கிள், பீரோக்களைக் கட்டித் தொங்கவிட்டிருக்கிறார்கள். வாடிவாசலின் மேல் சிறிய மூங்கில் மேடை கட்டி ஊர்க்காரர் ஒருத்தர் லைவ் காம்ப்பியர் பண்ணிக்கொண்டிருக்கிறார் (மேடை ஒரு டைப்பாக இருக்கிறதே  - விழுந்துவிடாதா?).  டிவி சார்பாக பட்டு சேலை கட்டி ஒரு பெண் மற்றும் வேட்டி சட்டையில் ஒரு ஆண் அமர்ந்திருந்தார்கள். இவர்கள் இருவரின் வர்ணனை ஒரு சாம்பிள் -
பட்டு வேட்டி சேலை ஆண் பெண் 
                மீன் கிடைக்காத போது சும்மா நின்று கொண்டிருக்கும் கொக்கு மீனைப் பார்த்தவுடன் பாயும் என்ற அய்யன் வள்ளுவனின் வாக்கிற்கிணங்க வீரர்கள் மாடு வந்தவுடன் பாயக் காத்திருக்கிறார்கள். காளையா வீர மாலையா என்று வீரர்கள் வீறு கொண்டு நிற்கிறார்கள். நம் கண்களும் வாசலைப்பார்த்து கண்கள் ஆயிரம் பூக்களைப் பூத்து நிற்கிறது. அதோ ஒரு வீரர் மாட்டை அடக்கி விட்டார் - கீழே விழுந்து விட்டார் - மருத்துவக்குழு வந்து தூக்கிவிட்டது.
நம் ஊர்க்கார காம்ப்பியரர் 
               ஏம்ப்பா மாடு பிடிக்க வந்திகளா, சும்மா நிக்க வந்திகளா?. மாட்ட புடிங்கப்பா. பூரா ப்ரைஸூம் மாட்டுக்காரந் தான் வாங்கிட்டுப் போறான். காசு கீசு வாங்கிட்டியா. ஏ யாரப்பா டிஷர்ட் (மாடு பிடிப்பவர்கள் அணிவது) போட்டுக்கிட்டு டிராக்டர் கீழ உக்காந்துருக்கிறது? சாப்பாடு கொண்டாரச்சொல்லவா. எந்திருச்சு மாட்டப் பிடியப்பா. மாட்டத்தொட்டாலாம் பரிசு கெடயாது, புடிக்கணும். ஏ சிங்கம்டா நீ - அது பிடிமாடு. வந்து பரிச வாங்கிட்டுப்போ. அது சின்ன அடிதான் வுடு சரியாப் போவும்.
எது போட்டியின் போக்கை அழகாகத் தெரிவிக்கிறது - Choice left to u to decide

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes