சட்டமன்றத்தேர்தல் நடக்கவிருக்கும் மாநிலங்களில் பிரச்சாரம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸின் நட்சத்திரப்பேச்சாளராக ராகுல் காந்தி பிரமோட் செய்யப்படுகிறார். பாஜக சார்பாக நரேந்திரமோடி பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறார். இப்பதிவில் எந்தக்கட்சி நல்ல கட்சி, யார் சிறப்பாகப் ஆட்சி செய்யப்போகிறார்கள் என்று ஆராயப்போவதில்லை. இது அரசியல் சார்ந்தது அல்ல. மாறாக, தலைவர்களின் லீடர்ஷிப், கரிஸ்மா, மேனரிசம் இவற்றைப்பற்றி இப்பதிவு பேசப்போகிறது.
ராகுல் காந்தியின் உரைகளை முன்பு கட்சிப்பிரமுகர்கள் தயார் செய்து கொடுத்துக்கொண்டிருந்தார்களாம். ஆனால் இப்போது தானாகவே தயார் செய்து கொள்கிறாராம். நரேந்திரமோடி மேடை மேடையாக உறுமிக்கொண்டிருக்கிறார். அவரது உரையின் முன், ராகுலின் `என் பாட்டி, என் அப்பா, என் தாயின் அழுகை` போன்ற பேச்சுகள் எடுபடவேயில்லை. சிங்கத்தின் முன் பூனை மியாவ் மியாவ் என்பது போல் இருக்கிறது. அவருடைய பாடி லாங்வேஜும் ஒரு தலைவனுக்கு உரியதாக இல்லை. சேத்தன் பகத் `ராகுல் இத்தனை முறை கைகளை மடக்குவதற்குப் பதிலாக அரைக்கைச்சட்டை போட்டுக்கொள்ளலாமே. காங்கிரஸ்காரர்கள் யாராவது இதை அவருக்குச்சொல்லுங்க` என்கிறார்.ராகுல் ஓயாமல் கைகளை மடித்துவிட்டுக்கொண்டே இருப்பது கவனக்கலைப்பாகவும், தன்னம்பிக்கை குறைவைக் காட்டுவதாகவும் இருக்கிறது. அதே நேரம் மோடி `பாயியோம், பெஹனோம்` என்று கூறுவதே ஒரு அறைக்கூவல் போலிருக்கிறது.
ஒரு சாதாரணக் குடிமகனின் மகன் அடிமட்டத்திலிருந்து கிளம்பி தளபதிகளையும், மந்திரிகளையும், ராஜகுருக்களையும் வீழ்த்தி அல்லது வசப்படுத்தி மன்னனை வென்று தான் மன்னனாவதற்கும் - சுகபோகத்தில் வளர்ந்த ஒரு ராஜகுமாரன் மன்னனாவதற்கும் உள்ள வேறுபாடு இது. ராகுல் என்னும் அரசியல் குழந்தையால், மோடி என்னும் அரசியல் மன்னனுக்கு எந்த விதத்திலும் டஃப் கொடுக்க முடியாது. காங்கிரஸ் ராகுலை வைத்து காமெடி பண்ணுவதை நிறுத்திக்கொள்ளலாம்.
0 comments:
Post a Comment