ஜீ தமிழ் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பெர்சனல் பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்கிறார் நிர்மலா பெரியசாமி. இந்நிகழ்ச்சியில் வரும் முக்கால்வாசி பிரச்சினைகள் முறையற்ற காதல் என்று சொல்லப்படுபவைதான். முறையற்ற காதல் என்று சொல்லப்படுவது எது? ஒரு திருமண பந்தத்தில் இருக்கும் ஆண் அல்லது பெண், வேறொரு பெண் அல்லது ஆணின்பால் ஈர்க்கப்படுவதை முறையற்ற / கள்ளக்காதல் என்கிறோம். இதனால் ஏற்படும் பிரச்சனைகளும் மன உளைச்சல்களும் ஏராளம். அந்த ஷோவுக்கு வந்த ஒரு பெண் சொல்கிறார் தன் கணவரைப்பற்றி - தினமும் தண்ணி போடுறார்ம்மா. வீட்டுக்கு, பிள்ளைகளுக்குச் செலவுக்குக் காசே குடுக்குறதில்ல. எந்த நேரமும் அடி, உதைதான். (இன்னொரு ஆணைச் சுட்டிக்காட்டி) அந்த நேரம் இவரு தான்ம்மா ஆறுதலா இருந்தாரு. இந்த ஷோவுக்கு வரும் பெண்கள் சொல்லும் சில விஷயங்களை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. அவ்வளவு வக்ரங்கள், குரூரங்கள். இப்படிப்பட்ட சூழலில் இருக்கும் ஒரு பெண் தன் கணவனை விட நல்லவனாக, ஆறுதலாக இருக்கும் ஒரு ஆண்மகன்பால் ஈர்க்கப்படுவது இயல்புதானே.
மனிதமனம் என்பது ஒரு பலவீனமான, காற்றில் ஆடும் கொடியைப்போன்றது. தான் பற்றிக்கொண்டிருந்த கொழுக்கொம்பு பயனற்றதாகும் போது தன் ஆயிரம் கரங்களைக் காற்றில் வீசி வேறோர் கொம்பைப் பற்றிக்கொள்வது தான் அதன் இயல்பு. சில ஆண்கள் படும் துயரங்களும் பெண்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை. வாய் ஓயாமல் திட்டிக்கொண்டேயிருக்கும் மனைவியை முதல் மரியாதை படத்தில் பார்த்த போது மிகைப்படுத்தல் - ரொம்ப ஓவரா காட்டுறார். இப்டிலாம் இருப்பாங்களா என்றே நினைத்தேன். இதெல்லாம் சாதாரணம் என்று நினைக்கக்கூடிய அளவுக்கு மனைவிமார்களை நிஜத்தில் பார்த்தாயிற்று.
இந்த மாதிரியான உறவுச்சிக்கல்களுக்கு நிர்மலா பெரியசாமி சொல்லும் தீர்வு - நீங்க சொல்றது எனக்கு நல்லா புரியுது. இந்த மாதிரி நெலம வேற ஒருத்தர்க்கு வரக்கூடாது. ஆனா முதல் கல்யாணத்த சட்டப்பூர்வமா முடிச்சுட்டு, இன்னொரு உறவுக்குள்ள போங்க. அதான் முறையானது. - என்கிறார். அதே நேரத்தில் தன் வாழ்க்கை சரியில்லையென்று சொல்லிக்கொண்டு, ஏற்கனவே நல்லவொரு திருமண பந்தத்தில் இருப்பவர்களின் மனதைக் கலைத்து தன் பக்கம் ஈர்ப்பவர்களைக் கடுமையாகக் கண்டித்து சம்பந்தப்பட்ட இருவர்மேலும் போலீஸ் நடவடிக்கை எடுக்கச் செய்கிறார்.
இது மிகச்சரியான தீர்வு என்றே எனக்குப் படுகிறது. நல்ல திருமண வாழ்க்கை அமையப்பெற்றவர்கள் பாக்கியவான்கள். இவர்களால் சிக்கலான திருமணத்தில் இருப்பவர்களைப் புரிந்து கொள்ள முடியாது என்றே நினைக்கிறேன். தெரு நாய்களுக்காகக் கவலைப்படும் காரில் போகும் கனவான்களின் மனநிலை தான் இவர்களுக்கு இருக்கும். பிள்ளையோடு தெருவில் நடக்கும்போது 4 நாய்கள் சூழ்ந்து கொண்டு கிர்ரென்று கூரிய பற்களைக் காட்டும் பயங்கரத்தை இவர்கள் அறிய மாட்டார்கள். உங்களில் பாவம் செய்யாதவன் இவள் மேல் கல்லெறியட்டும் என்றார் ஒரு மகான். கல்லெறியும் முன் யோசிப்போம்.
Happiness in marriage is entirely a matter of chance - Jane Austen. இது காலங்களைக் கடந்த உண்மை.