Saturday, December 24, 2011

சென்னை ஐஐடி கேம்பஸ் இன்டர்வ்யூ - மாணவனின் சம்பளம் வருடத்திற்கு 64 லட்சம் - எந்த துறை சார்ந்த நிறுவனத்தில்?

இந்த வருடம் எக்கனாமிக் ஸ்லோடவுன் இருக்கும் என்று உலகப்பொருளாதார வல்லுனர்கள் அச்சம் தெரிவித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில், ஐஐடி சென்னை மாணவன் ஒருவர் வருடத்திற்கு 64 லட்சம் ரூபாய் சம்பளத்தில் ஒரு அமெரிக்க நிறுவனத்தில் வேலையில் சேர்ந்துள்ளார். இந்நிறுவனம் எத்துறையைச் சார்ந்தது? பேங்க்கிங், பாதுகாப்பு, விண்வெளி ஆராய்ச்சி போன்ற எந்தத் துறையும் இல்லை. மாதம் சுமார் 5 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு ஆள் எடுத்துள்ள நிறுவனம் - பாக்கெட் ஜெம்ஸ். இந்நிறுவனம் செல்போன் கேம்ஸ் டெவலப் செய்யும் நிறுவனம். மேலும் பேஸ்புக் வருடத்திற்கு சுமார் 50 லட்சம் ரூபாய் சம்பளத்தில் ஐஐடி பாம்பே மாணவருக்கு வேலை அளித்துள்ளது.

இவ்விரு நிறுவனங்களும் கிட்டத்தட்ட பொழுதுபோக்கு துறையைச் சார்ந்தவை. ஏன் ஓடுகிறோம்? நம்முடைய இலக்கு என்ன என்பது தெரியாமலே ஒரு மிகப்பெரிய ஓட்டப்பந்தயத்தில் அனைவரும் ஓடிக்கொண்டிருக்கிறோம். இருக்கும் இடத்தைத் தக்க வைக்க இன்னும் வேகமாக ஓட வேண்டும் என்கிறார்கள் மேனேஜ்மென்ட் குருக்கள். இதன் விளைவு மிகப்பெரிய மன அழுத்தம். அனைவரும் ஏதாவது சாதித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். சாமான்யர்களுக்கு இங்கு இடம் இல்லை. இச்சூழ்நிலையில் அனைவருக்கும் தேவைப்படு்வது ஒரு ரிலாக்ஸேஷன். இதனால் பொழுதுபோக்குத்துறை மிக வேகமாக வளர்கிறது. இதன் வெளிப்பாடுதான் அனைத்து துறைகளிலும் மந்த நிலை நிலவும்போது, கம்ப்யூட்டர் கேம்ஸ் தயாரிக்கும் நிறுவனம் இவ்வளவு சம்பளம் கொடுத்து மாணவர்களை வேலைக்கு எடுப்பது.

Thursday, December 22, 2011

ஆ.ராசாவின் செக்ரட்டரி ஆசிர்வாதம் ஆச்சாரியின் 4 லட்சம் மதிப்புள்ள செல்போன்

2 ஜி வழக்கில் ஆ.ராசாவின் முன்னாள் செக்ரட்டரி ஆசிர்வாதம் ஆச்சாரி கோர்ட்டில் ராசாவிற்கு எதிராகத் தன்னுடைய சாட்சியத்தை அளிக்கத் துவங்கியிருக்கிறார். அவரைக் குறுக்கு விசாரணை செய்து கொண்டிருப்பவர் கனிமொழிக்காக ஆஜராகியிருக்கும் ராம் ஜெத்மலானி.



நேற்றைய விசாரணையில் ஆச்சாரியின் செல்போனைப் பற்றி விசாரித்திருக்கிறார் ஜெத்மலானி. அதன் மதிப்பு ரூ2.5 லட்சம் முதல் ரூ 4 லட்சத்திற்குள் இருக்கும் என்பது அவரது எஸ்டிமேஷன். இந்த போன் உங்களுக்கு எப்படி கிடைத்தது? அதன் விலை என்ன? என்று ஆச்சாரியைக் கேட்டிருக்கிறார். அதற்கு அவர் இந்த போன் என் மனைவிக்குப் பரிசாகக் கிடைத்தது. எனவே அதன் விலை எனக்குத் தெரியவில்லை என்றிருக்கிறார். வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு அவர்மேல் தொடர சிபிஐ காத்திருக்கிறது.

இந்நிலையில் அந்த செல்போனின் விலையைப் பில்லோடு இன்று கோர்ட்டில் நிரூபித்திருக்கிறார் ஆச்சாரி. அந்த செல்போனின் உண்மையான விலை இந்திய மதிப்பில் ரூ.4500. அதை ஆன்லைனில் ஆர்டர் செய்து அவரின் மனைவிக்கு வாங்கிக்கொடுத்திருப்பவர் மனைவியின் சகோதரர்.

4500 மதிப்புள்ள போனை 4.5 லட்சமாகச் சந்தேகமடையச்செய்து ஆச்சாரியைக் கோர்ட்டில் அசைத்துப் பார்த்த ஜெத்மலானி கோர்ட்டில் இன்று பல்பு வாங்கியுள்ளார். இன்னும் என்னென்ன போலியான மிரட்டல்களை ஆச்சாரி எதிர்கொள்ள வேண்டியிருக்குமோ??!!!!

Tuesday, December 20, 2011

தமிழ் கேபிசியின் ஹோஸ்ட் யார் - இப்போதே தெரிந்து கொள்ளுங்கள்

மிகப்பிரபலமான கேபிசி நிகழ்ச்சியின் தமிழ் வடிவம் நாளை முதல் விஜய் டிவியில் வரவிருக்கிறது. இதை நடத்தப்போவது சூர்யா (நன்றி டைம்ஸ் ஆ்ப் இண்டியா).

நேருக்கு நேர் படத்தில் ஆட வேண்டிய நேரத்திலும் ஓடிக்கொண்டேயிருந்த அந்த இளைஞனின் வளர்ச்சி ஆச்சரியத்தைத் தருகிறது. தமிழில் இது போன்ற ஒரு ஷோவை நடத்திய சரத்குமார் அவ்வளவு பிரமாதமாகச் செய்ததாக எனக்குத் தோன்றவில்லை. சூர்யா எப்படி நடத்தப்போகிறார் என்பதைப் பார்க்க ஆவலாக உள்ளேன்.

என் பாடல்களை தனுஷ் பாடலோடு ஒப்பிடாதீர்கள் - உலகமகா தமிழ்ப்பாடலாசிரியர் சிம்பு

இப்பலாம் யார் வேணாலும் தமிழ் சினிமால பாட்டெழுதலாம்னு ஆயிருச்சு. சும்மா எதையாவது வார்த்தைய சேத்துப்போட்டு பாட்டுன்னு சொல்றாங்க. என் பாட்ட இனிமே தனுஷ் பாட்டோட கம்ப்பேர் பண்ணாதீங்க - என்கிறார் லூஸுப்பெண்ணே லூஸுப்பெண்ணே போன்ற மனதை வருடும் காதல் பாடல்களையும், எவன்டி ஒன்னப் பெத்தான் கைல கெடச்சா செத்தான் போன்ற உயர்தர, காலத்தால் வெல்ல முடியாத தத்துவப்பாடல்களையும் படைத்த மகாக்கவிஞர் சிலம்பரசன்.

இவரது லேட்டஸ்ட் படமான ஒஸ்தியிலும் ஒரு மிக அருமையான பாடல் - வாடி வாடி க்யூட் பொண்டாட்டி, எழுதியிருக்கிறார். அதன் வரிகள் - அடாடா - எதாவது கோயில் வாசல் கல்வெட்டுல எழுதி இவர் அது பக்கத்துலயே உக்காந்துக்கலாம். நமக்கு பின்னால வர்ற சந்ததிகள் அதப்படிச்சு, நம்மள பத்தி தெரிஞ்சுக்க வசதியாயிருக்கும். வரலாறு ரொம்ப முக்கியம் சிம்பு ;)

கண்ணதாசனும், பட்டுக்கோட்டையும் இன்ன பிறரும் போட்ட ராஜபாட்டையில் செல்வதாக நினைத்துக்கொண்டிருக்கும் சிம்பு சற்று யோசித்துப்பேசுவது நல்லது. கேட்டுக்கொண்டிருப்பவர்கள் மடையர்கள் அல்ல.

Friday, December 16, 2011

கொலவெறி இசையமைப்பாளரின் இன்றைய நிலை



கொலவெறி பாடல் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது. தமிழ்ப்பற்றாளர்கள் கொலைவெறியோடு சுற்றுகிறார்கள் பாடலாசிரியரைப் பின்ன வேண்டுமென்று (நம்ம தனுஷ்தான்). இந்த ஒரு பாடலால் தமிழ் அழிந்துவிடும், கலாச்சாரம் தகர்ந்துவிடும் என்றெல்லாம் நான் நம்பவில்லை. தமிழ் மொழி இந்த மைனர் glitches க்கெல்லாம் தகர்ந்துவிடக்கூடிய பலவீன மொழியல்ல.



விஷயம் இப்பாடலின் இசையமைப்பாளருக்கு நம் தமிழ் திரையுலகம் தந்துள்ள cold response ஐப் பற்றியது. ஆனந்த விகடன் பேட்டியில் அவ்விசையமைப்பாள இளைஞன் தெரிவித்துள்ளார் தமிழ்த்திரையிசையுலகில் இருந்து யாரும் தன்னைத் தொடர்பு கொள்ளவோ பாராட்டவோ இல்லை என்று. ஒரு இளைஞன் தன் முதல் பாடலின் இசையிலேயே உலகின் கவனத்தையே ஈர்த்துள்ளான் என்பது நிச்சயம் அங்கீகரிக்கப்படவேண்டிய விஷயம். தகவல் தொடர்பு மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுவிட்ட இக்காலத்தில் ஒரு எஸ்எம்எஸ் மூலம் கூட தம் வாழ்த்தைத் தெரிவிக்கலாம்.



ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருது வாங்கியபோது எல்லாப்புகழும் இறைவனுக்கே என்றார். இது நடந்த ஓரிரு வாரத்திற்குள்ளாக இளையராஜா ஒரு பேட்டியில் - இப்ப எல்லாரும் எல்லாப்புகழும் இறைவனுக்குன்னு சொல்றாங்க. இறைவன் அனைத்தையும் கடந்தவன். அவனுக்கு எதுக்குங்க புகழ் - என்கிறார். என்ன ஒரு அற்பத்தனமான கமண்ட். தன் வெற்றியை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் ஒரு சக கலைஞனைக் காயப்படுத்தும் விமர்சனம் இது. சூட்டோடு சூடாக உலகம் இப்போ எங்கோ போகுது என்று ஒரு பாடல் வேறு. இளையராஜாவின் மாஸ்டர் பீஸான ஜனனி ஜனனி பாடலால் தன் மகளுக்கு ஜனனி என்று பெயர் சூட்டிய நிறைய பேரை நான் அறிவேன். தன் இசையால் ஒரு தலைமுறையையே கட்டிப்போட்ட ஒரு மகா கலைஞன் தன் சக கலைஞனை மதிக்கவோ வாழ்த்தவோ ஏன் துணிவதில்லை?



டிஎம்எஸ்ஸின் சில ஆண்டுகளுக்கு முந்தைய தற்கொலை முயற்சி மற்றுமொரு அதிர்ச்சி. அவரின் சாகாவரம் பெற்ற பாடல்களை இன்றும் நாம் நம் பக்தி நிமிடங்களிலும்(தேவனே என்னைப் பாருங்கள், ஆறு மனமே ஆறு), தத்துவ பொழுதுகளிலும், மனம் உற்சாகததில் துள்ளும் போதும் (அன்று வந்ததும் அதே நிலா, அதோ அந்த பறவை) ............................. மீண்டும் மீண்டும் நினைவில் கொண்டு வந்து மகிழ்கிறோம். இப்பேர்ப்பட்ட அங்கீகாரத்தைப் பெற்றும் அவர் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். தனக்குரிய அங்கீகாரம் தனக்கு அளிக்கப்படவில்லை என்ற அவரது புலம்பல் எரிச்சலையே அளிக்கிறது. இப்படிப்பட்டவர்களை நாம் நம் சொந்தக்காரர்களில், பணியிடங்களில் என்று பல இடத்தில் சந்திக்க முடியும்.



நாம் வியந்து போற்றும் சாதனையாளர்கள் பலரும் தன் மேலும் தன் திறமை மேலும் நம்பிக்கையில்லாமல் இருப்பது மிகுந்த ஆச்சரியத்தைத் தருகிறது. தன் மேல் நம்பிக்கை இருப்பவன் ஒருபோதும் பிறனை அவமானப்படுத்த மாட்டான். திறமைகள் எங்கிருந்தாலும் அங்கீகரிக்கத்தவறமாட்டான். தனக்குக் கிடைத்த அங்கீகாரத்தில் திருப்தி உடையவனாய் நிச்சயம் இருப்பான்.

Friday, December 9, 2011

சாப்ட்வேர் இன்ஜினியர்களின் வித்தியாச ஆன்சைட்

சென்னை பல்கலைக்கழத்தில் செமஸ்டர் எக்ஸாம்கள் நடந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் அங்கு சூப்பர்விஷன் செல்ல நேரிட்டது. எக்ஸாம் ஹால் சூப்பர்விஷன் என்பது நான் ஏற்கனவே முன்னொரு பதிவில் சொல்லியிருந்ததைப்போல எனக்கு மிகவும் பிடிக்காத மொக்கை வேலை. வேறு வழியேயில்லாமல் சென்றேன்.


பார்வையற்ற மாணவர்களுக்கான ஹாலில் எனக்கு சூப்பர்விஷன் அலாட் செய்யப்பட்டிருந்தது. இப்படிப்பட்ட அனுபவம் எனக்கு முதன்முறையாகக் கிடைத்தது. ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு உதவியாளர் வந்து மாணவர்கள் சொல்லச் சொல்ல எழுதிக்கொடுக்கின்றனர். அவர்களுக்கு ஸ்க்ரைப் என்று பெயர். பொதுவாக எக்ஸாம் ஹால்கள் மௌனத்தில் வெடித்துச்சிதறும். ஆனால் சலசலவென்று சத்தத்தோடு ஒரு எக்ஸாம் ஹால் இதுவே.


ஸ்க்ரைப்களாக வந்திருந்தவர்களில் காதில் எதுவும் அணியாமல் Swatch Watch, Puma bag உடன் வந்திருந்த பபிள்கம்மை மென்று மென்று மென்று கொண்டிருந்த இளம் பெண், தலையெல்லாம் பரட்டையாக பயங்கரமான Nike Shoeவும் ஒற்றைக் காதில் கடுக்கன் இளைஞன், மிக நீட்டாக ஆபிஸ் டிரஸ்ஸில் வந்திருந்த இரு இளைஞர்கள், சாதாரணமாக ஆடையணிந்த நடுத்தர வகுப்பைச் சேர்ந்த தோற்றத்தைக் கொண்டவர்கள் என வித்தியாச கலவையாக இருந்தது. அனைவரும் 25 வயது மிகாதவர்கள், இளைஞர்கள்.


அவர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரித்தேன் - நீங்கள் யார்? எப்படி ஸ்க்ரைபாக வந்தீர்களென்று. இவர்கள் அனைவரும் வெவ்வேறு தொண்டு நிறுவனங்கள் சார்பாக இச்சேவையைச் செய்து வருவதாகத் தெரிவித்தனர். கடுக்கன் இளைஞன், துபாயில் வேலை பார்ப்பதாகவும், விடுமுறையில் வந்தபோது இதைச்செய்வதாகத் தெரிவித்தான். இளம்பெண் MBA Student, மற்றொரு பெண் கரஸ்பான்டன்ஸில் கெமிஸ்ட்ரி. அனைவரும் இளைஞர்கள், 25 வயது மிகாதவர்கள். அந்த ஆபிஸ் இளைஞர்கள் இருவரும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள். சாப்ட்வேர் இன்ஜினியர்கள் அமெரிக்கா போவார்கள், லண்டன் போவார்கள், ரிசார்ட்டுகளில் கூத்தடிப்பார்கள் என்று பல்வேறு மீடியாக்களாலும் உருவாக்கப்பட்டு வரும் பிம்பம் சுக்குநூறாக சிதைந்தது. அவர்கள் ஆபிஸிலேயே (Scope International) சமூக சேவைக்கு நேரம் ஒதுக்கி வசதி செய்து தருகிறார்கள் என்று சொன்னான் அந்தப்பையன்.

மேலும் இக்கால இளைஞர்கள் மேம்போக்கானவர்கள், சமூக அக்கறையில்லாதவர்கள் என்ற அசட்டு வாதங்களும் அங்கே பொய்யாக்கப்பட்டன. விடுமுறையில் வரும்போதும் தேடி வந்து உதவி செய்யும் அவ்விளைஞனும், பணிச்சுமையிலும் அங்கு வந்து அருமையாக எழுதிக்கொடுக்கும் அப்பொறியாளர்களும், மேலும் அங்கிருந்த அத்தனை அழகர்களும், அழகிகளும் மானுடத்தின் மீதான என் நம்பிக்கையை எப்போதும் போல் உயர்த்தினர்.

என்னருமை இளைஞர்களே, உலகமெனும் பெருஞ்சக்கரம் உருண்டோடுவதற்கான பல்சக்கரங்கள் நீங்களே, உம் போன்றவர்களே. வாழ்க நீவிர் வளமுடன் என்னாளும்

Friday, December 2, 2011

பொன்னியின் செல்வன் வாசக வெறியர்களுக்கு ஒரு அதிர்ச்சி


பொன்னியின் செல்வனை வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே கருதும் தமிழர் அனேகம். வந்தியத்தேவனின் குதிரையை மனதால் பின்தொடர்ந்தோர் கணக்கில் அடங்காதவர். அனிருத்தப்பிரம்மராயரின் அறிவுத்திறனையும், குருவை மிஞ்சிய சிஷ்யனான ஆழ்வார்க்கடியானையும் விரும்பாதவர் யார்?
பூங்குழலியின் நுண்ணறிவோடு கூடிய விளையாட்டுத்தனம், ஆதித்த கரிகாலனின் வீரம் மற்றும் வேகம், ராஜராஜனின் தியாகம், சேந்தன் அமுதனின் பக்தி, குந்தவையின் ஆளுமைத்திறன், நந்தினியின் மயக்கும் அழகு மற்றும் தீராக்கோபம், மதுராந்தகனின் கோழைத்தனம், துரோகம் என அப்புதினத்தில் இடம்பெறாத மனித உணர்ச்சிகளே இல்லை எனலாம்.
இங்கு ஆதித்த கரிகாலனின் மரணம் இன்றும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது. யார் அவரைக்கொலை செய்தது என்பதை கல்கி பூடகமாகவே விட்டிருப்பார். பாண்டியனின் ஆபத்துதவிகள், பழுவேட்டரையர், நந்தினி என்று பலரும் ஆதித்தனின் அகால மரண வேளையில் கடம்பூர் அரண்மனையில் இருந்ததாக கல்கி சித்தரித்திருப்பார்.
பொன்னியின் செல்வன் நாவலின்படி சோழ அரசியான செம்பியன்மாதேவியால் வளர்க்கப்பட்ட ஆனால் பாண்டியகுலத்தைச் சேர்ந்தவனான மதுராந்தகன் அரியணையைக்கைப்பற்ற சூழ்ச்சி செய்து கொண்டிருக்கும் வேளையில், உண்மையில் அரியணைக்குரியவராகக் கருதப்பட்டவரும், செம்பியன் மாதேவியின் திருவயிறுதித்தத்தேவருமான, சேந்தன் அமுதன் சிவனெறிச்செல்வராக, சிவக்கைங்கர்யத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, தங்க நகைகளைக் காணும்போதும் சிவபெருமானின் பொன்மேனியை நினைவில்கொண்டு, பொன்னார்மேனியனே என்று சிவபதிகம் பாடிக்கொண்டிருந்திருக்கிறார். ராஜ்ஜியம் ஆளும் ஆசை துளியும் இல்லாத அவரை ராஜராஜனே அரியணையில் கட்டாயப்படுத்தி அமர வைத்ததாக நாவல் கூறுகிறது.
ஆனால் சமீபத்தில் படித்த ராஜராஜன் என்ற புத்தகத்தின் அடிப்படையில் (இப்புத்தகம் வரலாற்றுச்சான்றுகளின் அடிப்படையில் எழுதப்பட்டது - ஆசிரியர் ச.ந.கண்ணன், கிழக்கு பதிப்பகம்) உண்மையில் சேந்தன் அமுதன் என்ற உத்தம சோழனே சதி செய்து கரிகாலச்சோழனைக் கொன்றிருக்கிறார். எனவேதான் சுந்தரசோழனுக்கு அடுத்து ஆட்சிக்கு வந்தபின் உத்தமசோழன் ஆதித்தனைக் கொன்றவர்களைக் கண்டுபிடிக்கவோ தண்டிக்கவோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் மக்கள் உத்தமசோழனின் சதியை அறிந்தே இருந்திருக்கின்றனர். எனவே மக்களின் ஆதரவில்லாத மன்னனாகவே அவர் விளங்கியிருக்கிறார். அவருக்குப்பின் அரியணையேறிய ராஜராஜன் ரவிதாஸன் முதலான சதிகாரர்களைத் தண்டித்திருக்கிறார் And rest is history.
கதைக்காகக்கூட ஒரு சோழமன்னனைக் கொலைகாரனாக காட்ட கல்கி விரும்பவில்லை போலும். எழுத்தாளர்களுக்கே உரிய டிராபேக் இது. உண்மை இதனால் நிச்சயம் மறைக்கப்படுகிறது.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes