சமீபத்தில் தஞ்சை பெரிய கோயிலைச் சென்று பார்க்கும் பெரும் பேறு பெற்றேன். பெரிய கோவிலை நான் மறைவதற்குள் தரிசிக்க வேண்டும் என்பது என் பேரவா. வாசுவால் அது நிறைவேறியது. ஆயிரம் வருட அந்த அற்புதத்தைத் தரிசிக்க கண் கோடி வேண்டும்.
கேரளாந்தக நுழைவாயில்
கோவிலின் வாசலில் இறங்கியவுடன் தென்படும் மதில் சுவரும் கேரளாந்தக நுழைவாயிலும் காண்போரை 1000 வருடங்கள் பின்னோக்கி இழுத்துச்செல்கின்றன. அங்கிருந்தே ஒரு time machineல் ஏறி 1000 வருடங்கள் பின் சென்ற உணர்வுடன் தான் உள்ளே நுழைந்தேன்.
உள்ளே சென்றவுடன் சட்டென்று என்னைத்தாக்கிய உணர்வை எனக்கு எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. நெடிதுயர்ந்த , கம்பீரமான இறைவன் குடி கொண்டுள்ள அந்த ஸ்தலம் , மனித மனத்தில் உள்ள 'நான்' என்ற அகந்தையை அடித்து நொறுக்குகிறது. கண்ணில் நீர் மல்கி நிறைந்து நிற்கிறது. மனம் இயங்காத பெருநிலையில் நின்றது. 'ஒன்றை நினைத்து, ஒன்றை மறந்து ஓடும் மனம் எல்லாம் நீயென்றறிந்தால் எங்கே இயங்கும் பராபரமே' என்று தாயுமானசுவாமிகள் பாடியதன் பொருள் நொடியில் விளங்குகிறது. ஏதோ எல்லாப் பிரச்சனைகளும் என்னுடையது போலவும், இதை தீர்க்கப்போவது நானே தான் என்ற நினைப்பும் அகன்றது. இறை பெருமானே பிரச்சனை உன்னுடையது. தீர்க்கப்போவதும் நீ. நான் உன் கையில் வெறும் களிமண் என்ற சரணாகதி நிலை கிடைத்தது. அறிவெல்லாம் கடந்த இறை அமைதி மனத்தை நிறைத்தது.எங்கும் நிறை இறையின் இனிய பிரசன்னம் அத்தலத்தை நிறைக்கிறது. நண்பர்களே தஞ்சை பெரிய கோவில் ஏதோ ஒரு மதத்தினருக்கு மட்டுமே உரிய வழிபாட்டுத்தலமாக நான் கருதவில்லை. இது மானுடம் முழுமைக்குமான கோவில். 1000 ஆண்டு நிறைவுறும் இவ்வேளையில் அக்கோவிலைக்கட்டுவித்த மாமன்னன் ராஜராஜனுக்கு நானும் ஒரு தமிழச்சி என்ற பெருமிதத்துடன் என் வணக்கத்தைச் சமர்ப்பிக்கிறேன்.
கோவிலின் கல்வெட்டுக்களில் தானம் கொடுத்தவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருக்கிறதாம். முதல் தானம் ராஜராஜனுடையது. 'நாங்கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும்' என்று கல்வெட்டு துவங்குகிறதாம். தான் மட்டும் இக்கோவிலைக்கட்டியதாய் ஒரு சிறு நினைப்பு கூட அந்த மாமனிதனுக்கு இல்லை. - நன்றி பாலகுமாரன், தினமலர் - என்ன ஒரு பெருந்தன்மை இம்மாமன்னனுக்கு. இத்தகையோர் தோன்றிய இப்புண்ணிய பூமியில் நான் இருக்க நேர்ந்ததற்கும், இக்கோவிலைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றதற்கும் எல்லாம் வல்ல, எங்கும் நிறை இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்
சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:
2 comments:
வணக்கம் மாலா...!
புகைப்படங்கள் அற்புதமா வந்திருக்கு...!
நான் ஒரு ஆறேழு தடவை...அங்கே போயிருக்கேன்...
ஒவ்வொரு தடவையும் நான் வியந்து போவேன் அந்த கோவிலைக் கண்டு....
அதைவிட பிரமிப்பாக உணர்வது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கலைகளின் கடவுள்கள் வாழ்ந்த இடத்தில்
நாம் நிற்கிறோம் என்பதே........!
நீங்கள் சொல்வது மிகவும் சரி லெமூரியன்.
Post a Comment