சென்ற வார இறுதியில் பிரகாஷ்ராஜ், போனிவர்மாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறியதாம். அவர்கள் இருவரும் Made for each other ஆக காட்சி அளித்தார்களாம் (நன்றி - டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ்). விஷயம் பிரகாஷ்ராஜின் முதல் மனைவியின் குழந்தைகள் பற்றியது. இரு குழந்தைகளும் அங்கு ஆஜர். ஒரு மாதிரி அரைப்புன்னகை புரிந்தபடி மூத்த மகள். என்ன உணர்வை வெளிப்படுத்தவென்று தெரியாத குழப்பம் அந்த முகத்தில். ஒரு 15, 16 வயது பிள்ளையிடம் 'இவர் தான் உன் புதிய தாய்' என்று அறிமுகப்படுத்துதல் என்ன மாதிரியான மனப்பாதிப்பை ஏற்படுத்தும்?? வற்புறுத்தி வரவழைக்கப்பட்ட சோகமோ என சந்தேகிக்க வைக்கிறது அந்த குழந்தையின் முகபாவம்.
இதே போல் மற்றொரு செய்தி - பிரபுதேவாவின் மகன் 'அப்பா அம்மாவைக் கஷ்டப்படுத்தாதீர்கள் என்று கதறல்' (நன்றி - குமுதம்). இந்த செய்தியைப் படிக்கும் போது அந்தக்குழந்தையின் மனநிலை எனக்குப் பதற்றத்தைத் தோற்றுவிக்கிறது. ஒரு குழந்தைக்கு மன நிம்மதியையும், பாதுகாப்பு உணர்வையும் தருவது பெற்றோர்களின் கடமையில்லையா? நம் தாய், தந்தையின் தியாகங்களும், ஒருவரையொருவர் பொறுத்துக் கொண்டு சென்ற மனப்பாங்கும் அல்லவோ நம் குடும்பங்களின் அடித்தளமாய் விளங்குகிறது.
ரேகா (காதல் மன்னன் ஜெமினி கணேசனின் மகள்) ஒரு தொலைக்காட்சி பேட்டியில் (ஸ்டார் ப்ளஸ்) 'ஃபாதரா? எனக்குத் தெரிந்ததெல்லாம் சர்ச் ஃபாதர்தான். என் வாழ்வில் தகப்பனார் என்பவர் எந்தப் பங்கையும் ஆற்றவில்லை. குழந்தைப் பருவத்திலிருந்து தனியாகத்தான் இருக்கிறேன். தனிமை எனக்குப் புதிதல்ல' என்கிறார். தகப்பன் காதல் லீலைகள் புரிந்து கொண்டிருக்கும் போது ஒரு மனைவி தீராத மன உளைச்சலுக்கு ஆளாகி குழந்தைகளைக் கவனிக்க இயலாத மனநிலைக்குத் தள்ளப்படுகிறாள்; குழந்தைகள் திணிக்கப்பட்ட தனிமைக்குள் சிக்கி வாழ்நாள் முழுதும் நீங்காத வடுவைப் பெற்று வாடுகிறார்கள். ரேகா இன்றும் தனித்தே இருக்கிறார்.
காதல் மன்னன்களும், அறிவு ஜீவிகளும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் இந்தக் குழந்தைகளுக்கு?
1 comments:
சினிமாகாரங்களுக்கு இதெல்லாம் சீப் விளம்பரம்தான. நாம நம்ம வேலையே பாப்போம். இவனுங்க திருந்த மாட்டானுக..
Post a Comment