Wednesday, July 11, 2012

மத்திய தர மக்களை அவமதிக்கும் சிதம்பரம்

ரூ.15க்கு குடிதண்ணீரும், ரூ.20க்கு ஐஸ்க்ரீமும் வாங்கத் தயங்காத மத்திய தர மக்கள் அரிசி விலையை உயர்த்தினால் கூச்சலிடுகின்றனர் என்கிறார் செல்வச்சீமான் சிதம்பரம். 
மத்தியதர மக்கள் தினமும் 3 வேளை ஐஸ்க்ரீம்தான் சாப்பிடுகிறார்களா? குடிதண்ணீருக்காக 15 ரூபாயை செலவழிக்கிறோம் என்கிறார் வெட்கம் கெட்ட மத்திய அமைச்சர். சுதந்திரம் வாங்கி இத்தனை ஆண்டுகளுக்குப்பின்னரும் மக்களின் அடிப்படைத்தேவையான சுத்தமான குடிநீரை வழங்க இயலாத கையாலாகாத அரசின் அங்கமான இவர் விலை உயர்வைப்பற்றி என்ன கவலைப்படப்போகிறார்? 30 சதவீதம் வரி செலுத்தும் இந்த மத்தியதரத்தின் பணம் எங்கே போகிறது? அந்த பணத்தைக்கொண்டு அரசு அவர்களுக்கு என்ன வசதி செய்து தரப்போகிறது? வளர்ந்த நாடுகளில், வரி செலுத்தும் மக்களுக்கு மருத்துவம் இலவசம், தரமான கல்வி இலவசம். இங்கே புழுத்த அரிசியும், குவார்ட்டரும் கோழி பிரியாணியும்தான் இலவசம்.

மத்திய தரத்தின் வருமானத்தில் 30 சதவீதத்தைப் பிடுங்கிக்கொள்ளுங்கள். மிச்ச 70 சதவீதத்தில் டாஸ்மாக் வளரட்டும். இன்னும் ஏதாவது மிச்சமிருந்தால் அரிசி வாங்கிக்கொள்ளட்டும் - 1 ரூபாயென்ன - எவ்வளவு வேண்டுமானாலும் உயர்த்திக்கொள்ளுங்கள். போதாதற்கு அவர்களைக் கேவலமும் படுத்துங்கள்.  ஒரு நாளுக்கு ரூ.28 சம்பாதித்தால் அவன் ஏழை இல்லை , வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ளவன் என்று மான்டேக்சிங் அலுவாலியாவைக்கொண்டு அறிவியுங்கள்.ஏனென்றால் எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்கள் - இவர்கள் ரொம்ப நல்லவர்கள்.

Wednesday, June 27, 2012

கனிமொழிக்கு மீண்டும் சிறை

அதிமுக அரசின் கைது நடவடிக்கைகளைக் கண்டித்து, திமுக வரும் நான்காம் தேதி சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவித்துள்ளது. ஜாமீன் பெற முயற்சிக்காமல் சிறையிலேயே இருப்பவர்களுக்குக் கட்சியில் பதவியும் தரப்போகிறாராம் ஸ்டாலின்.
கருணாநிதிக்கு எதில் யார் வாரிசோ என்னவோ தெரியாது - ஆனால் அவரைப்போல் காமெடி பண்ணுவதில் அவருடைய வாரிசு நிச்சயம் கனிமொழிதான். சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொள்வதற்கு சிபிஐயிடம் சிறப்பு அனுமதி வாங்கப்போகிறாராம். மக்களை அடிமுட்டாளாக எண்ணும் கருணாநிதி மற்றும் குடும்பத்தாரின் போக்கு சொல்ல முடியாத அளவு எரிச்சலை ஏற்படுத்துகின்றது.
மேடம் கனிமொழி - நீங்கள் இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு சிறையை நிரப்ப அனுமதி வாங்குவதற்குப் பதிலாக, திகார் சிறையையே நிறைத்திருக்கலாம் அல்லவா - வெளியே வந்தவுடன் உங்கள் சகோதரர் உங்களுக்குக் கட்சியில் பதவியும் கொடுத்திருந்திருப்பார், நீங்கள் ரொம்ப கஷ்டப்பட்டு ஜாமீனுக்குச் செய்த முயற்சியும் மிச்சமாகியிருந்திருக்கும்

Thursday, June 21, 2012

குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காக வேலையை விட்ட பெண்களுக்கு ஒரு அலர்ட்

நடுத்தரக் குடும்ப மற்றும் டெக்னிக்கல்லி ஸ்கில்டு, க்வாலிபைடு பெண்கள் பலரும் குழந்தை பேற்றுக்குப்பின் வேலையை விட்டுவிடுவது மிகப் பரவலாக க் காணப்படும் ஒரு சாதாரண ட்ரண்ட். பிள்ளையப் பாத்துக்கிறதுக்காக ரூ.40000 வேலய விட்டுருக்கா - என்று ஒரு பாராட்டுப்பத்திரமும் கிடைக்கும். இதனால் ஏற்படக்கூடிய பொருளாதாரப் பின்னடைவுகளைப் பற்றி ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது ( http://uk.finance.yahoo.com/news/can-you-afford-to-be-a-stay-at-home-mum.html ). வேலையை விட்டுவிடுவதன் சாதக பாதகங்களை விரிவாக அலசியிருக்கிறார்கள். 
இதைப்படிக்கும்போது மாபசான் எழுதிய சிறுகதை ஒன்று ஞாபகம் வருகிறது.
ஒரு குடிசைப்பகுதியில் நிறைய குடும்பங்கள் வசிக்கின்றன. ஒவ்வொரு குடும்பத்திலும் 10, 12 பிள்ளைகள். ஒரு கனவானும், அவர் மனைவியும் தினமும் அந்தப்பகுதியைக் கடந்து வாக்கிங் செல்வார்கள். அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை. எனவே அந்தப் பகுதியிலிருந்து ஒரு பிள்ளையைத் தத்தெடுக்கப் பிரியப்படுவார்கள். இரு குடும்பத்தைச் சேர்ந்த தாய்மார்களிடம் பேசுவார்கள். ஒரு தாய் பசியோ, பட்டினியோ எங்கள் பிள்ளையை நாங்கள் வளர்த்துக்கொள்வோம். யாருக்கும் கொடுக்க மாட்டோம் என்று மறுத்து விடுவாள். மற்றொருவள் தன் கடைசி மகனைத் தத்துக்கொடுக்க சம்மதித்து விடுவாள். 
தத்துக்கொடுத்த பெண்ணை அந்தப்பகுதி மக்கள் இரக்கமில்லாதவள், பாசமில்லாதவள் என்று தினமும் திட்டுவார்கள். அதே நேரம் தத்துக்கொடுக்க மறுத்த பெண்ணைத் தாயென்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று போற்றுவார்கள். வறுமையும் தொடர்ந்தது.
இப்படியாக 18 வருடம் கழிந்தபின், ஒரு நாள் தத்துக்கொடுக்கப்பட்ட பிள்ளை தன் நிஜ தாய் தந்தையரைப் பார்க்க வருவான், உயர்தர உடுப்புக்களோடு, கையில் விலையுயர்ந்த பரிசுகளும், பணமும் கொண்டு வந்து அவர்களுக்குக் கொடுத்து அவர்களை நன்றாகக் கவனித்துக்கொள்வான்.
இதைப் பார்த்துக்கொண்டிருக்கும் அந்த பக்கத்து வீட்டு வறுமையில் உழலும் பையன் தன் தாயிடம் - நீதான் என் வாழ்க்கையைப் பாழாக்கினாய். முதலில் என்னைத்தான் தத்துக்கேட்டார்களாமே நீ கொடுக்க மறுத்த்தால் இன்று என் வாழ்க்கையே வறுமையில் இருக்கிறது. செல்வச்சீமானாக இருந்திருக்க வேண்டியவன், உன்னால் இப்படியாகி விட்டேன். மகன் இப்படிச்சொல்வதோடு கதையை முடித்திருப்பார் மாபசான்.
இளம் தாய்மார்களே வேலையை விடுவதற்கு முன் யோசியுங்கள். குழந்தைக்குப் பாதுகாப்பு தேவைதான் - அதில் முக்கியமானது "பொருளாதாரப் பாதுகாப்பு"

Wednesday, June 20, 2012

பஸ்ஸில் பயணம் செய்து பல்பு வாங்கிய தேனி எம்எல்ஏ

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியின் சிபிஎம் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ பஸ்ஸில் பயணம் செய்திருக்கிறார்.  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=489928. பஸ்ஸில் பயங்கர கூட்டம் போலும் - உட்கார இடம் கிடைக்கவில்லை. கண்டக்டரிடம் - நான் எம்எல்ஏங்க என்று சொல்லியிருக்கிறார். கண்டக்டர் கண்டு கொள்ளவில்லை. அவர்  பாட்டுக்கு டிக்கெட் கொடுத்துவிட்டு தன் சீட்டில் அமர்ந்து விட்டார். எம்எல்ஏ நொந்து போய் போக்குவரத்துக் கழகத்திடம் தன் வருத்தத்தைத் தெரிவித்திருக்கிறார். இது இன்றைய செய்தி.
இச்செய்திக்கு இரண்டு விதமான ரெஸ்பான்ஸ்கள் வந்திருக்கின்றன.
  •  முதல் டைப் ; எம்எல்ஏக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது? தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் நின்றபடிதான் பயணம் செய்கின்றனர். ஒவ்வொருவருக்கும் சீட் பிடித்துக் கொடுப்பதா கண்டக்டரின் வேலை?
  • இரண்டாவது டைப் (இது என் கருத்து) ; இதே எம்எல்ஏ கொத்துக் கொத்தாக செயின் போட்டுக்கொண்டு ஸ்கார்ப்பியோவில் பத்து, பதினைந்து ஆட்களோடு வந்து பஸ்ஸை அரை மணிநேரம் நிறுத்திப்போட்டிருந்தால், கண்டக்டரும், பயணிகளும் பயந்து நடுங்கியிருப்பார்கள். ஒரு மக்கள் பிரதிநிதிக்கு ஜனநாயக நாட்டில் சிறிய அளவில் மரியாதை தெரிவிப்பதில் ஒன்றும் தவறில்லை. 
எளிமையாக இருப்பவர்களைக் கேவலப்படுத்துவதும், தாம்தூமென்று குதிப்பவர்கள் முன் மிகப்பணிந்து செல்வதும் நம் இந்திய மனோபாவம். மாணவர்களோடு இறங்கிப் பழகும் ஆசிரியரை மாணவர்கள் மதிப்பதில்லை. சொந்தக்காரர்களில் நன்றாகப் பழகுபவரை யாரும் மதிப்பதில்லை. நன்றாகப் பழகினால் - இவனை/ளை என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், செய்யலாம் - என்றே நினைக்கிறார்கள். நம் இடத்தை விட்டு கீழே இறங்காமல் மெயின்டெயின் செய்துகொண்டு, நான் பணக்காரன்/ரி, படித்தவன்/ள், நல்ல நிலையில் இருக்கிறவன்/ள், பதவியில் இருக்கிறவன்/ள் என்று ஒவ்வொரு நிமிடமும் பறை சாற்றினால்தான் பிறரின் அவமதிப்பில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள முடியும். எளிமை கிளிமை எல்லாம் unaffordable ஆகி கொஞ்ச நாளாகிவிட்டது. கவிஞர் கண்ணதாசன் பாடலில்( பரமசிவன் கழுத்திலிருந்து) வருவது போல எல்லாம் இருக்குமிடத்தில் இருந்து விட்டால் எல்லாம் சவுக்கியமே என்பதுதான் சரி. 
மிஸ்டர் பெரியகுளம் எம்எல்ஏ உடனே போய் தொகுதி நிதியிலிருந்து ஒரு ஸ்கார்ப்பியோ கார் வாங்குங்கள்.

Thursday, May 31, 2012

பாலாஜிசக்திவேலை வறுத்தெடுத்த பாக்யராஜ் - காரணம் என்ன?

வழக்கு எண் 18 9 திரைப்படத்தின் வெற்றிவிழா மற்றும் பாலாஜிசக்திவேலுக்கான பாராட்டுவிழா சமீபத்தில் நடைபெற்றது. இதற்கு சிறப்பு விருந்தினராக பாக்யராஜ் அழைக்கப்பட்டிருந்திருக்கிறார். பேசுவதற்காக மைக்கைப் பிடித்த பாக்யராஜ், வழக்குஎண் திரைப்படத்தில் இந்தக்காட்சி சரியில்லை, அந்தக்காட்சியில் லாஜிக் இல்லை என்று சகட்டுமேனிக்குக் குறை சொல்லித் தள்ளி இருக்கிறார். பாராட்டி உரையாற்றவேண்டியவர் இப்படி காய்ச்ச, படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமி உட்பட மேடையிலிருந்த அனைவரும் சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் நெளிந்திருக்கின்றனர்.
பாராட்டுவிழாவில் விமர்சனம் செய்யவேண்டிய அவசியமென்ன? படம் குறைகள் நிறைந்ததாக அவருக்குத் தோன்றியிருந்தால் தலைமையேற்க முதலிலேயே நாகரிகமாக மறுத்திருக்கலாமே.
ஆக்சுவலி காதல் திரைப்படத்தில் நடிக்க சாந்தனுவைத்தான் முதலில் அப்ரோச் செய்திருக்கிறார் பாலாஜி - இது பாக்யராஜே முன்பு ஒரு பேட்டியில் தெரிவித்திருந்த செய்தி. அருமையான ஒரு திரைப்படத்தில் அறிமுகமாயிருந்திருக்க வேண்டிய தன் மகன், இன்னும் திரையுலகில் ஒரு இடம் பெற தடுமாறிக்கொண்டிருப்பதால் ஏற்பட்ட சலிப்பு, கோபம் இவையெல்லாம் பாலாஜி மேல் திரும்பியிருக்கும் என்று நினைக்கிறேன். பிள்ளை பாசம் கண்ணை மறைத்து விட்டது இந்த திரைக்கதை மன்னனுக்கு. கூல் மிஸ்டர் பாக்யராஜ் - உங்கள் மகனும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Monday, May 28, 2012

மனைவி சொன்னதைக் கேட்டாலும் பிரச்சனை கேட்காவிட்டாலும் பிரச்சனை - தவிக்கும் தனுஷ்

3 படம் ஆரம்பித்ததிலிருந்து செய்திகளில் அடிபட்டுக்கொண்டே இருக்கிறது. கொலவெறியின் மெகா ஹிட், படம் பிரமாண்ட ப்ளாப், கஸ்தூரி ராஜா- நட்டி பிரச்சினை, ரஜினியிடம் நஷ்டத்தைத் திரும்பக்கேட்டது மற்றும் அனைத்திலும் ஹைலைட்டாக தனுஷ் - ஸ்ருதி கெமிஸ்ட்ரி என நாளொரு செய்தியும், பொழுதொரு பிரச்சனையுமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
  கஸ்தூரி ராஜா ஒரு பேட்டியில், தனுஷ் ஐஸ்வர்யா இடையே பிரச்சனை என்பது உண்மைதான். எல்லா கணவன் மனைவியிடையே இருக்கும் பிரச்சனை போல தான் இதுவும். தனுஷ் ஸ்ருதியோடு மிகவும் நெருக்கமாக நடித்தது ஐஸ்வர்யாவுக்கு வருத்தத்தைத் தந்தது என்கிறார்.
            இதில் என் சந்தேகம் என்னவென்றால் - படத்தின் இயக்குனர் சொன்னதை நடிகர் செய்திருக்கிறார். அப்புறம் இயக்குனரே ஏன் இப்படி நடித்தாய் என்றால் நடிகர் என்ன செய்வார் பாவம்.
          ஐஸ்வர்யா அவர்களே தாங்கள் சொன்னதைத் தானே தங்கள் கணவர் செய்தார். அப்புறம் ஏன் கோபித்துக்கொள்கிறீர்கள்? சொன்னதைக் கேட்டாலும் தப்பு, கேட்காவிட்டாலும் தப்பா?? என்ன கொடுமை சரவணன் இது.

Tuesday, May 22, 2012

சென்னை - பிரபல சிபிஎஸ்இ பள்ளிகளின் கட்டணங்கள்

இது ஸ்கூல் அட்மிஷன் சீசன். பிரபல பள்ளிகளில் அட்மிஷனுக்காகப் பெற்றோர்கள் அலைமோதிக்கொண்டிருக்கின்றனர். தன் பிள்ளைகளுக்குச் சிறந்ததை வழங்குவதே ஒவ்வொரு பெற்றோரின் ஆவலாக இருக்கிறது. இதற்காக தம் சக்திக்கு உட்பட்டதையும், அப்பாற்பட்டதையும் செய்ய பெற்றோர் சித்தமாக இருக்கின்றனர். மேலும் இன்ன பள்ளியில் என் பிள்ளை படிக்கிறான் என்று கூறிக்கொள்வது ஒரு முக்கியமான ஸ்டேட்டஸ் சிம்பல். பத்மா சேஷாத்திரியில் மூன்றாம் வகுப்பு வரை ஒரு வருடத்திற்கு 1,25,000 ரூபாய், டிஏவியில்ரூ. 40000 , செயின்ட் பிரிட்டோவிலும் இதே ரேன்ஜ்.
என் பிள்ளைகளையும் அனேக வருடங்கள் ஸ்டேட் ரேங்க் எடுக்க வைக்கிற ஒரு பிரபல சிபிஎஸ்இ பள்ளியில் சேர்த்து விட்டு, தற்சமயம் மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் விழித்துக்கொண்டிருக்கிறேன் - காரணம் வொர்க் லோட் மற்றும் படிப்பைத் தவிர வேறெதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமை.
பள்ளிகளும், கல்லூரிகளும் இன்று எதைக் கற்றுத் தருகின்றன? சம்பாதிப்பதற்கான வழியை. இந்த வருடம் ஐஐடி நுழைவுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவன் சொல்கிறான் - கடுமையான போட்டி மற்றவர் மேல் பொறாமையைத் தோற்றுவிக்கிறது - என்று. ஆர்.கே.நாராயணின் ஸ்வாமி அண்ட் பிரண்ட்ஸ் புத்தகம் வெளியாகி உலகப்புகழ் பெற்ற அதே வருடம், மெட்ராஸ் யுனிவர்சிட்டி  அவர் ஆங்கிலத்தேர்வில் தோல்வியுற்றதாக அறிவிக்கிறது. என்ன ஒரு அருமையான கல்விமுறை. 
சக மனிதன் மேல் பொறாமைப்படுவதும் , க்ரியேட்டிவிட்டி என்பது துளியும் இருந்துவிடக்கூடாது என்று மிகக் கவனமாகப் பார்த்துக்கொள்ளுவதுமான கல்விமுறை.
என் பிள்ளைகளுக்கு நான் பின் வருவனவற்றைக் கற்றுத் தர விரும்புகிறேன்.
  • எப்போதும் மனமகிழ்ச்சியுள்ளவர்களாக, கவலைகளற்றவர்களாக இருக்க வேண்டும்.
  • எதையும் தைரியமாக எதிர்கொள்பவர்களாக
  • உடல், மன ஆரோக்கியம் உள்ளவர்களாக
  • மனிதத்தன்மை நிரம்பியவர்களாக, எதிலும் நேர்மை, உண்மையுள்ளவர்களாக
  • வாழ்க்கையைக் கொண்டாடுபவர்களாக இருக்க வேண்டும்
நான் சேர்த்த பள்ளியில் இவை எதையுமே அவர்களுக்குக் கற்றுத் தருவதாக எனக்குத் தெரியவில்லை.தேர்வு பயம், மார்க் பயம் இவை மட்டுமே பிரதானம்.

நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை
நேரேயின் றெனக்குத் தருவாய்
என் முந்தை தீவீனைப் பயன்கள் 
இன்னும் மூளாதழிந்திடல் வேண்டும்
இனி என்னைப் புதியவுயிராக்கி
எனக்கேதுங் கவலையறச்செய்து
மதி தன்னை மிகத் தெளிவு செய்து
என்னையென்றும் சந்தோஷம் கொண்டிருக்கச்செய்வாய்
என்னும் பாரதியின் வரங்கேட்டலில் வருவது போல் மதி தனை மிகத்தெளிவு செய்து, கவலைகள் அறச்செய்து, சந்தோஷம் கொண்டிருக்கச்செய்யும் பள்ளியைத் தேடிக்கொண்டிருக்கிறேன்....................

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes