Wednesday, August 24, 2016

பெண்களைக் கவரும் ஆல்ஃபா ஆண்கள் - நீங்கள் இவ்வகையா

ஆல்ஃபா ஆண்கள் என்றால் யார்? சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் நம் திரைப்படங்களில் நாம் வழிபடும் ஹீரோக்கள் தான் ஆல்ஃபா வகை ஆண்கள். எதிலும் எளிதில் முடிவெடுக்கக்கூடியவர்களும், பிரச்சினைகளைத் தைரியமாக எதிர்கொள்ளக் கூடியவர்களாகவும் இருப்பவர்கள் இந்த ஆல்ஃபா வகை ஆண்கள். தடைகளைத் தாண்டி, இலக்கை அடைவது வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக்கொண்டு செயல்படுவது இவர்களின் தனிச்சிறப்பு.

இவர்கள் எங்கும் எப்போதும் கொடுப்பவர்கள், பெறுபவர்கள் அல்ல. புறம் பேச மாட்டார்கள்.ஒரு குழுவாகச் செயல்படும்போது, தன்னுடைய வேலையை மட்டுமின்றி குழுவில் ஒவ்வொருவரும் என்ன வேலை செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாகத் தீர்மானிப்பவர்கள்.இவ்வளவு திட்டமிடலுக்கும் மெனக்கெடலுக்கும் பின்னும் ஒரு தோல்வி நேருமேயானால், அதில் துவண்டு விடாமல், வீழ்வேனென நினைத்தாயோ என மீண்டெழும் நெஞ்சுரம் கொண்டவர்கள். யாருடைய பரிதாபத்தையும் ஏற்றுக்கொள்ளாதவர்கள். பெண்களைப் பாதுகாப்பவர்கள். ஒரு திரைப்படப் பாடலில் வருவது போல் பெண்கள் பின்னே சுற்றாமல், பெண்ணே சுற்றும் பேரழகன். ஒரே வரியில் சொல்வதானால் - very strong personalities.

சரி, விஷயத்திற்கு வருவோம். பொதுவாக ஆல்ஃபா ஆண்களைப் பற்றி சொல்லப்படுவது, பெண்கள் இவ்வாண்கள்பால் மிகவும் ஈர்க்கப்படுவார்கள் என்பது. இதில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது. 

  • ஆல்ஃபா ஆண்களின் பாசிட்டிவ் பக்கத்தை மேலே பார்த்தோம். இந்த பாசிட்டிவ்களே பல நேரங்களில் இவர்களின் நெகட்டிவாகவும் மாறிவிடுகிறது. உதாரணமாக, ஒரு குழு வேலையில், இவர்களின் டாமினேஷன் மிக அதிகம். நான் சொல்வதைத்தான் நீ செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பது உறுப்பினர்களின் வெறுப்பையே வளர்க்கும்.

  • இவர்கள் மற்றவர்களைப் பார்த்து பரிதாபப்பட்டு கொடை கொடுப்பார்கள், ஆனால் இவர்கள் யாரிடமும் எதையும் பெற்றுக்கொள்ளாத வறட்டுப்பிடிவாதம் உடையவர்கள். ஆம் எனக்கு உதவி தேவை என்று ஒப்புக்கொள்ள முடியாதவர்களும் பலவீனர்களே. ஆல்ஃபா ஆண்கள் இந்த வகை பலவீனர்கள். 

  • வெற்றி ஒன்றே இவர்களின் இலக்கு - போர் என்றால் சிலர் சாகத்தான் செய்வார்கள் என்பது இவர்களின் attitude. மனிதநேயமற்ற இந்த அணுகுமுறை கொடுக்கும் வெற்றியை எந்த அளவு அனுபவிக்க முடியும்.
  • பெண் என்பவள் பாதுகாக்கப்பட வேண்டியவள் என்ற அணுகுமுறை, பெண்கள் தான் என்னைச்சுற்றுவார்கள், நான் அவர்களைக் கவர வேண்டிய அவசியமில்லை என்ற மனப்போக்கு இந்தக்காலத்திற்கு எள்ளளவும் பொருந்தாது. இப்படிப்பட்டக் கருத்துகளை வலியுறுத்தும் விதம் இப்போதும் படம் எடுத்ததால் , ஒரு படமும் ஓடாமல் தன் ரூட்டை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார் ஒரு இளம் வாரிசு ஹீரோ. 

ஆல்ஃபா வகை என்பது பாலினம் சார்ந்தது அல்ல. ஆல்ஃபா பெண்களும் உண்டு. இப்படி பார்க்கும் போது, ஆல்ஃபா ஆண்கள் பெண்களைக் கவருகிறார்கள் என்பது மறுபரிசீலனைக்கு வைக்கப்படவேண்டிய ஒரு கருத்து.

1 comments:

Yaathoramani.blogspot.com said...

ஆல்ஃபா ஆண்கள் விளக்கம்
இதுவரை அறியாதது
ஆயினும் மிகச் சரியானதுதான்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes