Monday, November 17, 2014

அப்பாக்களின் செல்ல மகள்கள்

காலையில் கல்லூரிக்கு பஸ்ஸில் பயணம் செய்வது ஒரு இனிய அனுபவம். முதிராத காலை (6.30), இதமான காற்று, ப்ரஷ்ஷான சக பயணிகள் அருமை. இந்தப் பயணத்தில், சமூகத்தின் பல்வேறு அடுக்குகளில் இருக்கிற அப்பாக்களையும், மகள்களையும் பார்ப்பது எனக்கு ஒரு இனிய பொழுதுபோக்கு. அவர்களது உடைகளும், வாகனங்களும், வீடுகளும் வேறு விதமாக இருந்தாலும் அடிப்படையில் அனைத்து அப்பாக்களும் மகள்களை ஒரே விதத்தில்தான் டீல் செய்கின்றனர்.

 1. அப்பார்ட்மென்ட் வாசலில், அரைக்கால் சட்டையோடு, ஒரு தோளில் புத்தகப்பை மற்றும் வாட்டர்பேக், மற்றொரு கையில் சாப்பாட்டுக்கூடையோடு நிற்கும் அப்பா - ஏற்கனவே நான்காக மடித்ததைப் போல் இருக்கும் குட்டி கர்ச்சீப்பை எட்டாக மடித்து, மெலிதாக விசிறியபடி இருக்கும் டீன் ஏஜ் மகள் அல்லது பொறுப்பாக நொண்டி விளையாடிக்கொண்டிருக்கும் ரெட்டை ஜடை போட்டு ரிப்பன் வைத்த  ஸ்கூல் போகும் மகள்.

2. ஒரு கையால் வண்டியை பேலன்ஸ் செய்துகொண்டு, மற்றொரு கையில் மகளின் ஆகப்பெரிய காலேஜ்பேகைப் பிடித்தபடி காலேஜ் பஸ் வருகிறதா எனப்பார்த்துக்கொண்டிருக்கும் அப்பா - ஸமார்ட்போனைப் பொறுப்பாக நோண்டிக்கொண்டிருக்கும் இன்ஜினியர் மகள்.

3.நெற்றியில் விபூதி மணக்க மகளின் புராஜக்ட் வொர்க்கைக் கையில் வைத்துக்கொண்டு, சார் கொஞ்சம் நகந்துக்கோங்க - அம்மா அங்க எடம் இருக்கு பாரு, என்று பஸ்ஸின் கீழ் நின்றபடியே பஸ்ஸுக்குள் சீட் பிடித்துக் கொடுக்கும் ஆட்டோ டிரைவர் அப்பா,இப்ப என்னன்றீங்க என்பது போன்ற முகபாவனையுடன் சலித்துக்கொள்ளும் டீன் ஏஜ் மகள்.

இது போல் பள்ளி, கல்லூரி செல்ல காத்திருக்கும் எல்லா மகள்களும் கைவீசியபடி நிற்க, பேதமேயில்லாமல் எல்லாத் தரப்பு அப்பாக்களும் அவர்களின் புத்தக மூட்டையைச் சுமந்தபடி. ஆனால் மகன்களுக்கு கண்டிஷனே வேறு. தன்னை விடப் பெரிய பை முதுகில், அதோடு கல்லை எத்தி விளையாட்டு - வேறேதோ திசையில் பார்த்தபடி கடனே என்று நிற்கும் அப்பா. இன்று வரையில் தன் பையைத் தானே தூக்கிக் கொள்ளும் மகளையோ, மகனின் பையைத் தூக்கிக்கொண்டிருககும் அப்பாவையோ  நான் பார்க்கவில்லை. அப்பாவின் சின்ன இளவரசிகள் இவர்கள் - நாளை ஒரு மன்னனின் மகாராணியாகட்டும்  - ஆமென்

எதிர்பார்ப்பைக் கிளப்பி ஏமாற்றிய பிரபலங்கள் - சிம்பு

ஐயாம் எ லிட்டில் ஸ்டார், ஆவேன் நான் சூப்பர் ஸ்டார் என்று ஆடிப்பாடிய அந்த சின்னக் குழந்தையை ரசிக்காதவர்கள் அன்று தமிழகத்திலேயே கிடையாது. பின்னர் பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி என்று 10 வயது சிறுவனாக சிம்பு ஆடியபோது தியேட்டரே சாமி வந்து ஆடியது. சிம்புவுக்குப்பின் எந்தக் குழந்தை நட்சத்திரமும் அவ்வளவு பிரபலமாக ஆகவில்லை.(மே பி, எந்தக் குழந்தையையும் வைத்து அவன் அப்பா படம் இயக்கி, தயாரிக்கவில்லை என்று நினைக்கிறேன்). 
என்ன தான் அப்பா படத்தில் நடித்தாலும் கூட, சிம்பு வெளிப்படுத்திய திறமை அசாத்தியமானது. வசன உச்சரிப்பு, அருமையான டான்ஸ் ஆடும் திறன், உணர்வுகளை வெளிப்படுததும் நடிப்புத்திறன் என்று அசரடித்தார்.சில வருடங்களுக்கு முன் ஒரு முன்னணி கதாநாயகனின் மகன், தன் தந்தையோடு ஒரு படத்தில் ஒரு பாட்டுக்கு நடனமாடினார். பதட்டத்தோடு, மாஸ்டர் சொல்லிக்கொடுத்ததை அப்படியே ஆடிவிடவேண்டும் என்ற முனைப்புதான் இருந்ததே தவிர, சிம்புவிடம் இருந்த ஒரு ஸ்பான்டெனிட்டி இல்லை.
பின்னர் டீன் ஏஜராகத் திரையில் தோன்றியபோது, 80களின் கதாநாயகர்களின் முதல் வாரிசு நடிகர் இவர்தான்.பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே அறிமுகமான சிம்பு அடுத்தடுத்து நடித்த கதாபாத்திரங்கள் (குத்து, காளை,தம்)இளம்பெண்களிடம் தீவிரமான வெறுப்பை ஏற்படுத்தியது.பாடலாசிரியர், இயக்குனர், கதை, திரைக்கதாசிரியர் என்று பன்முகத்திறமைகள் கொண்ட சிம்பு, இயக்குனர்களின் நடிகனாக மட்டும் இருந்தால் மிகச் சிறப்பான வெற்றிகளை அவரால் கொடுக்க   
முடியு ம் (விண்ணைத் தாண்டி வருவாயா).
ஒன் டேக் ஆர்ட்டிஸ்ட் என்று பெருமையாகச் சொல்லப்படும் இவர், இன்னும் அதிகப் படங்களில், படத்தின் நாயகனாக மட்டும் அவர் தன் வேலையைக் குறித்த நேரத்தில் முடித்துக் கொடுத்தாரேயானால் - இயக்கம் மற்றும் பிறவற்றில் தலையிடாமல் - (அவர் இயக்குனராக இல்லாத பட்சத்தில்), தமிழ்த்திரையுலகம்  ஒரு மிகச் சிறந்த, திறமை வாய்ந்த இளைஞரைத் தூக்கி வைத்துக் கொண்டாடும்.

Friday, November 14, 2014

எதிர்பார்ப்பைக் கிளப்பி ஏமாற்றிய பிரபலங்கள் - செல்வராகவன்

         இந்த எதிர்பார்ப்பைக் கிளப்பி ஏமாற்றிய பிரபலங்கள் தொடர் பதிவில், இன்று செல்வராகவனைப் பற்றிப் பார்க்கலாம். 

    இவரது முதல் திரைப்படம் துள்ளுவதோ இளமை.(அபிஷியலாக காதல்கொண்டேன்) துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் இயக்குனர் கஸ்தூரிராஜா என்று கேட்டபோது வித்தியாசமாக இருந்தது. எட்டுப்பட்டி ராசா, கும்மிப்பாட்டு, கரிசக்காட்டுப்பூவே போன்ற படங்களின் இயக்குனரா இந்தப்படத்தையும் இயக்கினார் என்று ஆச்சர்யம் + சந்தேகப்பட்டபோது, இதை இயக்கியவர் அவரது மூத்த மகன் செல்வராகவன் என்று தெரிய வந்தது.  இப்படம் நன்றாகவே ஓடியது. யுவனின் இசையில் பாடல்கள் மிகப்பெரிய ஹிட். கதாநாயகி ஷெரினும் பெரிதும் பேசப்பட்டார். 
          தொடர்ந்து காதல் கொண்டேன். தனுஷின் மிரட்டலான நடிப்பு, சோனியா அகர்வாலின் பிரமாதமான அறிமுகம், அழகான ஒளிப்பதிவு, இனிமையான யுவன் பாடல்கள் - வாவ். எப்போதும் உணர்வுகளை வார்த்தைப்படுத்துவதும், காட்சிப்படுத்துவதும் கடினமான வேலை. இதை செல்வராகவன் தன் படங்களில் அனாயசமாகச் செய்தார். எனக்கு மட்டும் ஏன் எதுவுமே சரியா நடக்க மாட்டேங்குது, ஏன் என்று கதாநாயகன்  வினோத் அழுவது தொண்ணூறு சதவீத மக்களின் மைண்ட் வாய்ஸாகவே தமிழகம் முழுவதும் ஒலித்தது. படம் பிரம்மாண்ட வெற்றி. அடுத்து 7ஜி - இளைஞர்களின் ஏகோபித்த ஆதரவு. இதன் பின்னர் தொடங்கியது செல்வராகவனின் சறுக்கல்.

     ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் என்று வேறு ஜானரில் அவர் முயற்சித்த படங்கள் முழுத்தோல்வியடைந்தன. என்னால் எல்லா ஜானரிலும் படமெடுக்க முடியும் என்று நிரூபிக்கவே இந்தப்படங்களை எடுத்தேன் என்கிறார் அவர். 
 ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான ஜானர் நன்றாக வரும். ராமநாராயணன் - விலங்குகள் படம், பாரதிராஜா - கிராமத்துப்படம், பாலச்சந்தர் - உறவுகளைச் சித்தரிக்கும் படம், எஸ.பி.முத்துராமன் - மசாலாப்படம், விசு - குடும்பச்சித்திரம். இவர்கள் இந்த ஜானரிலிருந்து விலகவில்லை. வேறெதையும் இவர்களிடம் ரசிகர்கள் எதிர்பார்க்கவும் இல்லை. இது செல்வராகவனுக்கும் பொருந்தும். செல்வராகவன் என்றால் இந்த வகையான படத்தை தான் எடுப்பார் என்ற பிம்பத்தை ஏன் உடைக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள் செல்வராகவன். உணர்வுகளைக் காட்சிப்படுத்துவது மிகக்கடினம். அது உங்களுக்கு அட்டகாசமாகக் கைவருகிறது. நீங்கள் அதையே ஏன் தொடரக்கூடாது? காதல் கொண்டேன் போன்ற ஒரு படத்தை உங்களிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கிறோம்.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes