இளையராஜாவின் மகனும், இசையமைப்பாளருமான யுவன் ஷங்கரின் பேட்டி சமீபத்தில் சென்னை டைம்ஸில் வந்திருந்தது. பெர்சனல் விஷயங்களையும் பகிர்ந்து கொண்டிருந்தார் இந்த ராஜா வீட்டு `இளைய` ராஜா. 25 வயதில் நடைபெற்ற முதல் திருமணம் 3 மாதங்களில் பிரிவை நோக்கி சென்றிருக்கிறது. 30 வயதில் நடைபெற்ற இரண்டாம் திருமணமும் தோல்வியடைந்திருக்கிறது. இதே நேரத்தில் தன் தாயையும் இழந்திருக்கிறார் இவர்.
உறவுகளின் பிரிவு ஆறாத்துயரைத் தரக்கூடியது. குறிப்பாக வாழ்க்கைத்துணை. என்ன தான் தம்பதியருக்குள் சண்டை வருவது சாதாரண நிகழ்வாக இருந்தாலும், தன் கணவன் அல்லது மனைவியோடு போட்ட ஒரு சாதாரண சண்டை அன்றைய தினத்தின் அழகையே சிதைத்து விடுகிறது. இப்படிப்பட்ட நிலையில் டைவர்ஸை நோக்கி செல்லும் சண்டைகள் எத்தனை மனக்காயங்களையும், வடுக்களையும் விட்டுச்செல்லும்??!!! இந்த மாதிரி சமயங்களில் அம்மாவின் ஆறுதல் வார்த்தைகள் கூட வேண்டாம் - வெறும் அருகாமையே பெரும் மனவலிமையைத் தரவல்லது. அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது யுவனுக்கு.
இந்நிலையில் இஸ்லாத்தைத் தழுவியிருக்கிறார் யுவன். இம்முடிவில் இவரது தந்தைக்கு அவ்வளவு விருப்பமில்லை போல் தெரிகிறது. என் பார்வையில் மதம் மாறுபவர்களைப் பரிதாபத்துக்குரியவர்களாக நான் கருதுகிறேன். ஆயிரம் பேர் நிறைந்திருக்கும் இடத்தில் மிகத்தனியாக இருப்பவர்களும், வாழ்க்கையின் வெம்மையிலிருந்து தற்காத்து கொள்ள நினைப்பவர்களும் தான் பெரும்பாலும் மதம் மாறுகிறார்கள் (இது என் சொந்த அனுபவம்). பெற்றோரின் இழப்பு, தாங்கவொண்ணாப்பிரிவு, மன அழுத்தம் போன்றவை தான் இவர்களை கடவுளை நோக்கி விரட்டுகிறது. அப்போது இவர்களுக்கு மதம் என்பதெல்லாம் விஷயமேயில்லை. அச்சமயத்தில் நீ வேற்று மதத்தை நாடுகிறாய் என்றெல்லாம் பேசிக்கொண்டிருப்பது பொருளற்றது. ஏதோவொரு விதத்தில் மன அமைதி கிடைத்தால் போதும்.
16 வயதில் இசையமைக்கத் தொடங்கிய இளைஞன், எந்தவொரு கிசுகிசுவும் இவர் பேரில் வந்ததில்லை. (இப்போது ஒரு பாட்டுக்கு இசையமைத்தவர்களெல்லாம் போடும் சீனுக்கும், 18-20 வயதில் இவர்கள் மாட்டிக்கொள்ளும் கீழ்த்தரமான விஷயங்களுக்கும் - நோ மோர் கமெண்ட்ஸ்) In his early thirties, யுவன் எதிர்கொண்டுவிட்ட கஷ்டங்கள் கொஞ்சம் அதிகம். எல்லாம் வல்ல அல்லாஹ் அவருக்கு மன அமைதியையும், சிறந்த வாழ்க்கைத்துணையையும் அருள் செய்யட்டும் - இன்ஷா அல்லாஹ்
0 comments:
Post a Comment