கொஞ்ச நாட்களுக்கு முன் திடீரென்று ஒரு நாள் கல்லூரி முன்னிருக்கும் வளையல் கடையில் கலர் கலராக கயிறுகள் தொங்கிக்கொண்டிருந்தன. என்ன விசேஷமென்று க்ளாஸில் பிள்ளைகளிடம் கேட்டபோது ஃப்ரண்ட்ஸ் டே மேம் என்றார்கள். ஒரு காலத்தில் எவ்வளவோ முக்கியமாகத்தோன்றிய ஒரு தினம் இன்று என்ன விசேஷமென்று கேட்கும் நிலையிலிருக்கிறது.
நட்பென்பது எவ்வளவு அழகானது. என்ன பேசிக்கொண்டிருந்தோம் என்று தெரியாமலே இரவு 2 மணியாவதும், மறு நாள் காலை க்ளாஸில் தூங்குவதும், ரெஸ்ட்டாரண்ட்டில் சாப்பிட்டு முடித்து பே பண்ணி முடித்துவிட்டு, சர்வர் வந்து இந்த டேபிளுக்கு ஆள் வராங்க, கொஞ்சம் எந்திரிச்சுக்கோங்க என்று சொல்லும் வரையில் பேசிக்கொண்டே அமர்ந்திருப்பதும், க்ளாஸை பங்க் பண்ணிவிட்டு வெளியே சுற்றுவதும்...................
எந்த நொடியில் இதெல்லாம் நம் வாழ்விலிருந்து காணாமல் போகிறது? எப்போது துரோகங்களும் பொய்களும் நட்புக்குள் ஆரம்பிக்கின்றன? நண்பனின் தொழிலைப் பற்றி ஒற்றறிவதும், காசுக்கணக்குகளும் எப்போது மிக அவசியமானவையாகின்றன? மனித மனங்கள் தன் மலிவுத்தன்மையை அனேகம் தரம் வெளிப்படுத்துகின்றன. ஒருவர் உங்களோடு ஒரு 10 வருடங்கள் நண்பராயிருக்கிறாரென்றால் அவர் உங்களுடைய எக்கச்சக்க தவறுகளைப் பொறுத்துக்கொண்டு சென்றிருக்கிறார் என்று தான் அர்த்தம் (நீங்களும் அவருடைய). இதற்கு மேல் முடியாது என்ற நிலைவரும்போது தன்னால் முடிவு வருகிறது.
லைஃப் ஆஃப் பை படத்தின் இறுதிக்காட்சியில் கடல் முழுதும் தன்னை மட்டும் துணையாகக் கொண்டு பயணம் செய்த அந்தப்புலி காட்டுக்குள் சென்று மறையும் முன் தன்னைத் திரும்பிப்பார்க்கும் என்ற எதிர்பார்ப்போடு கதாநாயகன் பார்த்துக்கொண்டேயிருப்பான். ஆனால் அந்தப்புலி திரும்பியே பார்க்காமல் காட்டுக்குள் சென்று அவன் வாழ்விலிருந்து என்றென்றைக்குமாக மறைந்துவிடும். அலைகளிலும், பெருமழையிலும், பெரும் புயல்காற்றிலும் தன்னோடு பயணித்த அந்தப்புலி ஒருமுறையாவது தன்னைத் திரும்பிப்பார்த்திருக்கலாம் என்று மனம் வருந்துவான்.
உங்களோடு பயணம் செய்த உங்களின் நண்பன் ஒரு கொடும் புலியாகவே இருந்திருக்கலாம் - இருந்தாலும் நண்பர்களே, பிரிய வேண்டும் என்று முடிவு செய்தால் தயவு செய்து உங்கள் நண்பனை ஒரு முறை திரும்பிப்பார்த்துவிட்டு உங்கள் வழி செல்லுங்கள். இது உங்களின் நட்புக்கு நீங்கள் தரும் ஒரு சிறு மரியாதை.