தீபாவளியை ஒட்டிய 3 நாட்களில் டாஸ்மாக்கின் விற்பனை 334 கோடியாம். நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட இது பல மடங்கு அதிகமாம். 2002-2003ன் போது இருந்த டாஸ்மாக்கின் விற்பனை அளவு, கடந்த பத்து ஆண்டுகளில் பத்து மடங்கு அதிகரித்திருக்கிறது என்கிறது புள்ளி விவரம். பள்ளிச்சிறார்களும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்களாம்.
காலை 7 மணி போல் கல்லூரிக்குச் செல்லும் போது, நடைபாதைகளிலும், பேருந்து நிறுத்தங்களிலும் விழுந்து கிடக்கும் ஆண்களைப்பார்க்கும் போது, அவர்களின் மனைவியரும், பிள்ளைகளும் என்ன வேதனையில் இருப்போர்களோ என்ற நினைப்பு மனதை அழுத்துகிறது. மதியம் 3 மணியின் போதே இதே போன்ற காட்சிகளைக் காண முடியும். உழைக்க வேண்டிய வயதில், தன்னையும், குடும்பத்தையும், நாட்டையும் முன்னேற்ற வேண்டிய பருவத்தில் இப்படி குப்புறடித்துக்கிடக்கிறது தமிழ்ச்சமூகம்.
அன்று மதியம் 2.30 மணி இருக்கும். பேருந்தில், பெண்கள் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு 20 - 25 வயது மதிக்கத்தக்க இளைஞனை, ஒரு 40 வயது பெண்மணி எழுந்திருக்கச்சொன்னார். அவன், இது பெண்கள் இருக்கைதான். ஆனால் என்னால் நிற்க முடியவில்லை. என்ன செய்வது என்கிறான். நிற்கக்கூட முடியாத மிக ஆரோக்கியமான தலைமுறை உருவாகி வருகிறது. 1971 மதுவிலக்கை ரத்து செய்தார் கருணாநிதி. அன்று ஆரம்பித்தது வினை.
ஆனால் இந்நிலை மாறும். பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி, சீனர்களின் மேல் தொடுத்த ஓப்பிய யுத்தத்தை ஒத்த யுத்தமொன்று தமிழ்நாட்டிலும் நடந்து கொண்டிருக்கிறது. எல்லாப்பிரச்சினைகளையும் மழுங்கடிக்க மது பயன்படுத்தப்படுகிறது. அனால் சீனர்கள் போல் நாமும் இம்மது மயக்கத்திலிருந்து தெளிந்து நிச்சயம் வெளிவருவோம்.
1 comments:
பரவாயில்ல, உங்களுக்கு நம்பிக்க அதிகம்தான்.
Post a Comment