இயக்குனர் விஜய்யின் தாண்டவம் படத்தின் ஸ்கிரிப்ட் யாருடையது என்ற பிரச்சினை பெரிதாகியுள்ளது. பொன்னுசாமி என்பவர் படத்தின் ஸ்கிரிப்ட் என்னுடையது என்கிறார். அவருடைய சார்பில் வாதாடிய அமீர் - எப்படியாவது பொன்னுசாமிக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்று போராடிப்பார்த்தேன். ஆனால் என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை. பொன்னுசாமிக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்து நான் இயக்குனர் சங்கத்திலிருந்து ராஜினாமா செய்திருக்கிறேன் - என்கிறார்.
நாம் செய்த வேலையை யாரோ தான் செய்தது போல் காண்பித்துக்கொள்வது, நாம் செய்த வேலையை அது ஒன்றுமே இல்லாதது போலவும், அந்த வேலை எதற்குமே தேவை இல்லை என்பது போலவும் நடந்து கொண்டு பின்னர் அதையே அவர்கள் பயன்படுத்திக்கொள்வது, என்ன வேலை செய்திருக்கிறோம் என்பதையே பார்க்காமல் மேம்போக்காக அவமானப்படுத்துவது போன்றவற்றைப் பெரிய மானேஜ்மென்ட் ஸ்கில்லாக, சர்வைவல் திறனாகப் பார்க்கும் போக்கு எக்காலத்திலும் இருக்கிறது. இது ஆறாக்காயத்தை ஏற்படுத்தும். மாங்கு மாங்கென்று வேலை செய்தவன் உட்கார்ந்திருக்க, வாய் மட்டும் பேசத்தெரிந்தவன் அல்லது சமூகத்தில் சில பல பிரிவிலேஜ்களை உடையவன் உச்சத்தில். என்ன நியாயம் இது?
எனக்கென்னவோ தாண்டவம் உண்மையில் பொன்னுசாமியின் ஸ்கிரிப்ட்டாக இருந்தாலும் அவரால் எதுவும் செய்ய முடியும் என்று தோன்றவில்லை. ஏனெனில் விஜய்யின் அப்பா அழகப்பன் பெரிய தயாரிப்பாளர், தயாரிப்பாளர் கவுன்சிலின் தலைவராக இருந்தவர்.
நம்மை ஒன்றும் செய்யமுடியாத நிலையில் இருப்பவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்கிறோமோ அதுதான் உண்மையான நாம்.