கல்கியின் பொன்னியின் செல்வனை ஒவ்வொரு பத்தாண்டு காலகட்டத்திலும் (in every decade) யாராவது ஒரு திரையுலகைச் சார்ந்த பிரபலம் திரைப்படமாக்க வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் அந்நாவலைத் திரைப்படமாக்க ஆசைப்பட்டதாக என் பெரியம்மா சொல்வார்கள். அப்போதே சிவாஜி ரசிகர்கள் - எம்.ஜி.ஆர் அதைத் திரைப்படமாக்கி நாவலைக் கெடுத்துவிடக்கூடாது என்பார்களாம். அதற்குப்பிறகு கமல் அதே ஆசையை வெளிப்படுத்தினார் - நடக்கவில்லை. பின்னர் கொஞ்ச ஆண்டுகளுக்கு முன் மணிரத்னம் அதையே சொன்னார். எங்கள் வீட்டுப்பெரியவர்கள் எல்லோரும் மணிரத்னம் அக்கதையைப் படமாக்கப் போகிறார் என்றவுடன் அலறிவிட்டார்கள்.
இப்போது செல்வராகவன் பொன்னியின் செல்வனைப்படமாக்கப்போகிறேன் என்று கிளம்பியிருக்கிறார். பொதுவாக அனேக கொலைவெறிகளைச் சமாளிக்கும் நானே இதைக்கேட்டவுடன் அலறிவிட்டேன். பின்ன - ஆயிரத்தில் ஒருவன் பார்த்தீர்கள் அல்லவா?? ஆயிரத்தில் ஒருவனை கிளாடியேட்டருடன் ஒப்பிட்டு பேட்டி வேறு கொடுத்தார் செல்வராகவன். அவர் கிளாடியேட்டர் படம் பார்க்கவில்லையா அல்லது நாம் யாரும் அந்தப்படத்தைப் பார்த்திருக்க மாட்டோம் என்று நினைத்து விட்டாரா - தெரியவில்லை.
எது எப்படியோ - பிரபல நாவல்களைப் படமாக்கும் போது எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும். அன்னா கரீனினா, மோகமுள், சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் மற்றும் பிரியா, சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் போன்ற எந்த நாவலுமே திரைப்பட வடிவில் என்னைக் கவரவில்லை. பெரிய வெற்றியும் பெறவில்லை. ஆனால் திரைக்கதையில் மிகப்பிரமாதமான மாற்றங்கள் செய்து முள்ளும் மலரும் நாவலைக் கலக்கினார் நம் டைரக்டர் மகேந்திரன். 3 இடியட்ஸும் திரைக்கதையின் சிறந்த மாற்றங்களினால் மிக நன்றாக இருந்தது. அப்படி திறமையான இயக்குனர்கள் கிடைக்கும் போதுதான் இந்த மாதிரியான மாஸ்டர் பீஸ் நாவல்கள் சோபிக்கும். எண்ணித்துணிக கருமம் திரு. செல்வராகவன்.