என் பையனைப் பொறுத்தவரைக்கும் ஸ்கூலிலிருந்து வந்தவுடனே கான்வர்ஸேஷன் வகுப்பு,ஸ்கூல் வொர்க் பண்ண,ஸ்டடி பண்ண ஒரு ட்யூஷன், தமிழுக்கு ஒரு டியூஷன் - இப்படி 3 ட்யூஷன் போறான். கர்நாடக சங்கீதம் கத்துக்கறான். ஒரு நாள் விட்டு ஒரு நாள் கராத்தே வகுப்பு, ஜிம்னாஸ்டிக்ஸ் வகுப்பு, தலைகீழா நடப்பான், சம்மர்ஸால்ட் அடிப்பான். பின்பாக பல்டி அடிப்பான். சனி ஞாயிறில் சினிமா பைட்டிங் கத்துக்கறான். கம்புச்சண்டை, மான் கொம்புச்சண்டை, குத்துச்சண்டை அதுக்கான மாஸ்டர் வச்சு கத்து தர்றேன். அப்புறம் டான்ஸ் வகுப்பு.
----- 1990ல் குமுதத்தில் டி.ராஜேந்தரின் பேட்டி. இந்த அளவுக்கு ஒரு பிள்ளையை வதைக்க வேண்டுமா? இவர் நார்வேயில் இருந்திருந்தால் சிம்புவை அரசுதான் வளர்த்திருக்கும். சமீபத்தில் நார்வேயிலிருக்கும் ஒரு இந்தியத்தம்பதியின் குழந்தைகளை அவர்கள் சரியாக வளர்க்கவில்லை என்று சொல்லி (3 வயது பையன் இன்னும் அப்பாவோடு தூங்குகிறான், கையால் சாப்பாடு கொடுக்கிறார்கள்-ஸ்பூன் பயன்படுத்துவதில்லை) நார்வே அரசாங்கம் அந்தப்பிள்ளைகளை அதுவே எடுத்து வளர்க்கிறது. இந்தக்காரணங்கள் நமக்கு மிகவும் அபத்தமாக இருக்கின்றன. ஆனால் சமீபத்தில் Amy Chua என்ற சீனப்பெண் எழுதிய Tiger Mom என்ற நாவல் மேற்கத்திய உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீனர்களின் குழந்தை வளர்ப்புமுறை பெரும்பாலும் நம் முறையை ஒத்துள்ளது. எனவே அவருடைய புத்தகத்தில் அவர் குழந்தையை அவர் வளர்த்தவிதம் குறித்து தெரிவித்துள்ள கருத்துகளில் ஏதும் தவறிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. (டி.ஆர் அளவுக்கு நிச்சயமாக பிள்ளைகளை வதைக்கக்கூடாது என்றாலும்கூட குழந்தைகள் தவறு செய்தால் அடித்து திருத்துவது, மியுசிக் வகுப்புகளைக் கட்டாயமாக்குவது போன்றவை). குழந்தையை அடிப்பதா என்கிறார்கள் மேற்கத்தியர்கள் - கையால் சாப்பாடு கொடுப்பது பெரிய குத்தமா என்கிறோம் நாம்.
பிள்ளைகளை நல்வழிப்படுத்துவது பெற்றோரின் கடமை. அவர்களின் உடல் உள்ள ஆன்ம வளர்ச்சியைக் கவனத்தில் கொள்ள வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது. எனினும் பிள்ளைகளின் வாழ்க்கையில் நம்முடைய எல்லையைப் பின்வரும் கிப்ரனின் வரிகள் கொண்டு வரைந்து கொள்வோம்.
Your Children are not your children.
They come through you and not from you.
though they are with you, they belong not to you.
You may give your love but not your thoughts..............................
உங்கள் குழந்தைகள் உங்களுடையவர்களல்ல.
அவர்கள் உங்கள் மூலமாக வருகிறார்கள் - உங்களிடமிருந்து அல்ல
அவர்கள் உங்களோடிருந்தாலும் உங்களுக்குரியவர்களல்ல
அவர்களுக்கு உங்கள் அன்பைக் கொடுக்கலாம் - உங்கள் எண்ணங்களை அல்ல