மீண்டும் ஒரு புதிய கல்வியாண்டு ஆரம்பம். முதல் நாள் வகுப்பு எடுத்து முடித்து விட்டு வெளியே வந்தேன். மணிப்பிரவாள நடை மாணவர்களின் கவனத்தைப் பாடத்தில் குவியச் செய்யும் என்பதால் தமிழும், ஆங்கிலமும் கலந்து பாடம் எடுப்பது என் வழக்கம். அன்றும் அப்படித்தான். வகுப்பு முடிந்து வெளியே வந்தவுடன் ஒரு மாணவர் அவசரமாக என்னைப் பின்தொடர்ந்து வெளியே வந்தார். 'மேடம் தமில் டோனோ. ஒன்லி இங்கிலிஸ் (Tamil don't know, only english)' என்றார். "Ok. I will take only in English hereafter" என்று சொல்லிவிட்டு வந்தேன். அதே போல் செய்தேன். முதல் internal பரிட்சை முடிந்தது. அப்போது தான் தெரிந்தது அந்த மாணவனுக்கு ஆங்கிலமும் சரியாகத் தெரியவில்லை என்பது. டிபார்ட்மென்ட்டிற்கு அழைத்துப் பேசினேன். மிகவும் பிற்பட்ட ஒரு வட மாநிலத்தைச் சேர்ந்தவர் அவர். தமிழ் தெரியாது. பிராந்திய மொழியில் பள்ளி வகுப்புகளை முடித்திருக்கிறார். எனவே ஆங்கிலமும் சரியாகத் தெரியாது. எப்படி இங்கு வந்து சேர்ந்தார் எனக் கேட்டேன். கல்வி புரோக்கர்கள் இருக்கிறார்களாம். அவர்கள் தான் மொழி ஒரு பிரச்சினையில்லை என்று கூறி கல்லூரியின் புகைப்படங்களைக் காட்டி இங்கு கூட்டி வந்தாராம். இந்தப் பையனால் ஆங்கிலத்தில் நடத்தப்படும் பாடங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவனுடைய மொழி எங்களுக்குத் தெரியவில்லை. எப்படி படிப்பாய் ? என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டேன். ஏதாவது செய்ய வேண்டும் மேடம். ஆனால் கோர்ஸ் முடிக்காமல் திரும்ப செல்ல மாட்டேன். என் தகப்பனார் சாதாரண விவசாயக்கூலி. ஃபீஸை மிகக் கஷ்டப்பட்டுக் கட்டியுள்ளார். பயமாக இருக்கிறது என்றான். இந்த வசதியற்ற, பாஷை தெரியாத, வட மாநில மாணவர்கள் கல்லூரியில் ஒரு ரகம்.
மற்றொரு ரக மாணவர்கள் உள்ளனர். ஒரு முதலாமாண்டு மாணவனுக்கு, பொறியியல் கல்லூரி இயக்குநகரத்திலிருந்து ஒரு செமஸ்டர் முடிந்த நிலையில் ஒரு கடிதம் வந்தது. என்ட்ரன்ஸ் தேர்வே எழுதாமல் எப்படி நீங்கள் கல்லூரியில் சேர்ந்தீர்கள் என்று. (இது நடந்தது பல ஆண்டுகளுக்கு முன்னால்). HOD கூப்பிட்டு விசாரித்தார் ஏன் என்ட்ரன்ஸ் எழுதவில்லையென்று. என்ட்ரன்ஸ் ஃபீஸ் கட்டப் பணம் இல்லை, சும்மா சேர்ந்து கொள்ளுங்கள். பிரச்சனை வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று கல்லூரியில் சொன்னார்கள் என்றான். அப்புறம் இப்போது கோர்ஸ் ஃபீஸ் எப்படி கட்டினாய் என்று கேட்டார். 'அப்பா கடலைக் காட்டை வித்துட்டார் சார்'. பின்னர் எப்படியோ அந்த என்ட்ரன்ஸ் எக்ஸாம் பிரச்சனையைச் சமாளித்தான். சில மாதங்கள் கழித்து மீண்டும் டிபார்ட்மென்ட்டிற்கு வந்தான். இம்முறை டி.சி வாங்க வேண்டும் என்றான். என்ன ஆச்சு என்றேன். 'மேடம் என்னால் lab sessions செய்ய முடியவில்லை'. நான் : காட்ட வித்து சேத்து விட்டிருக்காங்க. எப்படி வீட்டுக்குப் போவ?
மாணவன் : டி.சி வாங்கினா வீட்டுக்கு வரக்கூடாதுன்னு அப்பா சொல்லிட்டார்
நான் : அப்புறம் எங்க போவ? பதில் ஒரு நீண்ட மவுனம். டைம் எடுத்துக்கோ. lab seesions மெதுவாப் பண்ணு. pick up பண்ணிடலாம். டிசி வாங்க வேண்டாம். டிசி வாங்கினாலும் எப்படியும் 4 வருஷ ஃபீஸையும் நீ கட்டித்தான் ஆகணும். (Course fee fullம் pay பண்ணா தான் டிசி கிடைக்கும்). அதனால் நீ படி. நான் உனக்கு practicalsஐ முடிப்பதற்கு நிறைய டைம் தருகிறேன் என்று கூறி அனுப்பி வைத்தேன். டிசி வாங்கும் ஐடியாவை விட்டு விட்டான். next semesterல் சிறந்த மதிப்பெண்கள் பெற்று விட்டு மேடம் எனக்கு நம்பிக்கை வந்து விட்டது. நான் சிறப்பாகத் தேர்ச்சி பெற்று, நல்ல வேலையில் அமர்வேன் என்றான். மனம் நிறைந்தது.
பிறிதொரு ரகம் - பையன்/பெண் பிஇ படித்திருக்கிறான்/ள் என்று சொல்லிக் கொள்வதற்காக. வேறொரு வகை - நான் சேர விரும்பியது வேறு கல்லூரியில். இந்த 2 கல்லூரிகளுக்கும் பெயர் ஒரே மாதிரியிருந்தது. ஒரு 'Institute" மட்டும் தான் வித்தியாசம். அதை நான் கவனிக்காமல் விட்டுவிட்டேன். இல்லாவிட்டால் என் cut-off ற்கு அந்த ஃபேமஸ் கல்லூரியிலேயே இடம் கிடைத்திருக்கும் என்று புலம்பும் மிக நன்றாகப் படிக்கக்கூடிய மாணவர்கள்.
இவர்கள் அனைவரையும் ஒரு கூரையின் கீழ் கொண்டு எப்படியாவது 100% ரிசல்ட் கொடுக்க உழைத்துக் கொண்டிருக்கின்றனர் ஆசிரியப் பெருமக்கள்