Monday, August 30, 2010

என்ஜினியரிங் காலேஜ்

மீண்டும் ஒரு புதிய கல்வியாண்டு ஆரம்பம். முதல் நாள் வகுப்பு எடுத்து முடித்து விட்டு வெளியே வந்தேன். மணிப்பிரவாள நடை மாணவர்களின் கவனத்தைப் பாடத்தில் குவியச் செய்யும் என்பதால் தமிழும், ஆங்கிலமும் கலந்து பாடம் எடுப்பது என் வழக்கம். அன்றும் அப்படித்தான். வகுப்பு முடிந்து வெளியே வந்தவுடன் ஒரு மாணவர் அவசரமாக என்னைப் பின்தொடர்ந்து வெளியே வந்தார். 'மேடம் தமில் டோனோ. ஒன்லி இங்கிலிஸ் (Tamil don't know, only english)' என்றார். "Ok. I will take only in English hereafter" என்று சொல்லிவிட்டு வந்தேன். அதே போல் செய்தேன். முதல் internal பரிட்சை முடிந்தது. அப்போது தான் தெரிந்தது அந்த மாணவனுக்கு ஆங்கிலமும் சரியாகத் தெரியவில்லை என்பது. டிபார்ட்மென்ட்டிற்கு அழைத்துப் பேசினேன். மிகவும் பிற்பட்ட ஒரு வட மாநிலத்தைச் சேர்ந்தவர் அவர். தமிழ் தெரியாது. பிராந்திய மொழியில் பள்ளி வகுப்புகளை முடித்திருக்கிறார். எனவே ஆங்கிலமும் சரியாகத் தெரியாது. எப்படி இங்கு வந்து சேர்ந்தார் எனக் கேட்டேன். கல்வி புரோக்கர்கள் இருக்கிறார்களாம். அவர்கள் தான் மொழி ஒரு பிரச்சினையில்லை என்று கூறி கல்லூரியின் புகைப்படங்களைக் காட்டி இங்கு கூட்டி வந்தாராம். இந்தப் பையனால் ஆங்கிலத்தில் நடத்தப்படும் பாடங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவனுடைய மொழி எங்களுக்குத் தெரியவில்லை. எப்படி படிப்பாய் ? என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டேன். ஏதாவது செய்ய வேண்டும் மேடம். ஆனால் கோர்ஸ் முடிக்காமல் திரும்ப செல்ல மாட்டேன். என் தகப்பனார் சாதாரண விவசாயக்கூலி. ஃபீஸை மிகக் கஷ்டப்பட்டுக் கட்டியுள்ளார். பயமாக இருக்கிறது என்றான். இந்த வசதியற்ற, பாஷை தெரியாத, வட மாநில மாணவர்கள் கல்லூரியில் ஒரு ரகம்.
மற்றொரு ரக மாணவர்கள் உள்ளனர். ஒரு முதலாமாண்டு மாணவனுக்கு, பொறியியல் கல்லூரி இயக்குநகரத்திலிருந்து ஒரு செமஸ்டர் முடிந்த நிலையில் ஒரு கடிதம் வந்தது. என்ட்ரன்ஸ் தேர்வே எழுதாமல் எப்படி நீங்கள் கல்லூரியில் சேர்ந்தீர்கள் என்று. (இது நடந்தது பல ஆண்டுகளுக்கு முன்னால்). HOD கூப்பிட்டு விசாரித்தார் ஏன் என்ட்ரன்ஸ் எழுதவில்லையென்று. என்ட்ரன்ஸ் ஃபீஸ் கட்டப் பணம் இல்லை, சும்மா சேர்ந்து கொள்ளுங்கள். பிரச்சனை வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று கல்லூரியில் சொன்னார்கள் என்றான். அப்புறம் இப்போது கோர்ஸ் ஃபீஸ் எப்படி கட்டினாய் என்று கேட்டார். 'அப்பா கடலைக் காட்டை வித்துட்டார் சார்'. பின்னர் எப்படியோ அந்த என்ட்ரன்ஸ் எக்ஸாம் பிரச்சனையைச் சமாளித்தான். சில மாதங்கள் கழித்து மீண்டும் டிபார்ட்மென்ட்டிற்கு வந்தான். இம்முறை டி.சி வாங்க வேண்டும் என்றான். என்ன ஆச்சு என்றேன். 'மேடம் என்னால் lab sessions செய்ய முடியவில்லை'. நான் : காட்ட வித்து சேத்து விட்டிருக்காங்க. எப்படி வீட்டுக்குப் போவ?
மாணவன் : டி.சி வாங்கினா வீட்டுக்கு வரக்கூடாதுன்னு அப்பா சொல்லிட்டார்
நான் : அப்புறம் எங்க போவ? பதில் ஒரு நீண்ட மவுனம். டைம் எடுத்துக்கோ. lab seesions மெதுவாப் பண்ணு. pick up பண்ணிடலாம். டிசி வாங்க வேண்டாம். டிசி வாங்கினாலும் எப்படியும் 4 வருஷ ஃபீஸையும் நீ கட்டித்தான் ஆகணும். (Course fee fullம் pay பண்ணா தான் டிசி கிடைக்கும்). அதனால் நீ படி. நான் உனக்கு practicalsஐ முடிப்பதற்கு நிறைய டைம் தருகிறேன் என்று கூறி அனுப்பி வைத்தேன். டிசி வாங்கும் ஐடியாவை விட்டு விட்டான். next semesterல் சிறந்த மதிப்பெண்கள் பெற்று விட்டு மேடம் எனக்கு நம்பிக்கை வந்து விட்டது. நான் சிறப்பாகத் தேர்ச்சி பெற்று, நல்ல வேலையில் அமர்வேன் என்றான். மனம் நிறைந்தது.
பிறிதொரு ரகம் - பையன்/பெண் பிஇ படித்திருக்கிறான்/ள் என்று சொல்லிக் கொள்வதற்காக. வேறொரு வகை - நான் சேர விரும்பியது வேறு கல்லூரியில். இந்த 2 கல்லூரிகளுக்கும் பெயர் ஒரே மாதிரியிருந்தது. ஒரு 'Institute" மட்டும் தான் வித்தியாசம். அதை நான் கவனிக்காமல் விட்டுவிட்டேன். இல்லாவிட்டால் என் cut-off ற்கு அந்த ஃபேமஸ் கல்லூரியிலேயே இடம் கிடைத்திருக்கும் என்று புலம்பும் மிக நன்றாகப் படிக்கக்கூடிய மாணவர்கள்.
இவர்கள் அனைவரையும் ஒரு கூரையின் கீழ் கொண்டு எப்படியாவது 100% ரிசல்ட் கொடுக்க உழைத்துக் கொண்டிருக்கின்றனர் ஆசிரியப் பெருமக்கள்

Friday, August 27, 2010

பொழுது போகாத பொம்மு

எதிர்பாராவிதமாக எனக்கு ஒன்றரை மாதம் விடுமுறை கிடைத்தது. ஒரு வார விடுமுறை எதிர்பார்த்ததுதான். ஆனால் அது ஒன்றரை மாதமாக நீண்டு விட்டது. முதல் ஒரு வாரம் பிரமாதமாக கழிந்தது. காலை எட்டரை மணிக்குள் கணவன், பிள்ளைகள் அனைவரும் கிளம்பி விடுவர். பின்னர் நீண்டு கிடக்கும் பகல் பொழுது முழுவதும் எனக்கே எனக்கு. நிதானமாக 10.30 மணிக்கு டிஃபன், சாப்பிட்டானதும் மீண்டும் ஒரு காஃபி, குறுக்கீடுகள் ஏதுமின்றி தொலைக்காட்சி - என் கையில் ரிமோட்டுடன். என் இஷ்டம் போல் சேனல் மாற்றி மாற்றி என்ஜாய் செய்து கொண்டிருந்தேன். பின்னர் சமையல் குறிப்புகளைப் பார்த்து வெரைட்டி சமையல். மதியம் மகன் வந்தவுடன் அவனுக்கு சாப்பாடு கொடுத்து தூங்கப் பண்ணிவிட்டு மீண்டும் தொ.கா. ஒரு குட்டித் தூக்கம். இப்படியாக ஒரு உப சொர்க்கத்தைச் சிருஷ்டித்து மகிழ்ந்து கொண்டிருந்தேன்.
ஒரு வாரம் முடிந்தது. சேனல்கள் கடுப்படித்தன. டாக் ஷோக்களில் ஒரு குடும்பத்து உறுப்பினர்களை வரவழைத்து, எதிரெதிர் அணிகளில் உட்கார வைத்து, சண்டையை மூட்டி ஒரே காரில் வந்தவர்களை இரண்டு ஆட்டோக்களில் அனுப்பி வைத்தனர். விஜய் டிவியில் லட்சுமி 'அந்தக்குழந்தையைக் கொடுத்தப்ப உன் மனசு எப்படி இருந்துச்சு? சொல்லு. நானும் ஒரு தாய்' என்கிற ரீதியில் பேசி எப்படியாவது அழ வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தார் (டிஆர்பி படுத்தும் பாடு). எல்லா சேனல்களிலும் Super Singer, Super Dancer, Top Singer என்ற தலைப்புகளில் குழந்தைகளும், பெரியவர்களும் படுத்திக் கொண்டு Sorry பாடிக் கொண்டு இருந்தனர். நியூஸ் சேனல்கள் இன்னும் மோசம். ப்ளாஷ் நியூஸ், லைவ் என்ற பெயர்களில் பாத்திரத் திருடர்கள் கல்லால் அடித்துக் கொல்லப்படுவதையும், போலீஸ் ஸ்டேஷனில் நடைபெறும் 3rd degree torturesஐயும் ஒளிபரப்பின. அதே பாடல்கள், நகைச்சுவைத் துணுக்குகள். வெறுத்து விட்டது எனக்கு. இதற்கிடையே நான் முயற்சி செய்த Paneer Capsicum masala, Prawn Capsicum curry, Mushroom masala போன்றவற்றிற்கு பெரும் வரவேற்பும், பேராதரவும் அளித்த குடும்பத்தார் நாளடைவில் 'நீ சமைக்கும் பருப்பு சோறும், உருளைக்கிழங்கும் ரொம்ப நல்லா இருக்கும்' என்று சொல்ல ஆரம்பித்தார்கள். புரிந்து விட்டது. சரி masalas, curries இனிமேல் செய்யவில்லை என்றேன். மகிழ்ந்து களிகூர்ந்தார்கள். ம்ஹும் இந்த வளரும் மல்லிகா பத்ரிநாத்திற்கு வந்த சோதனை ;(.
சமையல் முயற்சிகள் நின்று போயின. தொ.கா பக்கம் போக முடியவில்லை. நண்பர்களுக்கு ஃபோன் செய்தால் 'ஏய் என்ன இந்த நேரத்துல, வெயிட் பண்ணு. 5 நிமிஷத்துல கால் பண்றேன்' என்று வைத்து விட்டார்கள். என்ன செய்வது என்று யோசித்து வலைப்பூ ஆரம்பித்து விட்டேன். நண்பர்களே உங்களுக்கு இந்த வலைப்பூ bore அடிக்கும் முன் எனக்கு லீவ் முடிந்து விடும் என நம்புகிறேன்.
'இந்த வாழ்க்கைக்குப் பயன் என்பது ஒன்றும் இல்லை. நாமாக ஒன்று கண்டுபிடித்துக் கொள்ளவேண்டியது தான் (This life haas no purpose at all unless we find one) ' என்ற வாக்கியம் தான் ஞாபகம் வருகிறது.

நன்றி

என் வலைப்பதிவுகளை வாசித்து கமெண்ட் கொடுத்த அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து வாசித்து, உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

முதல் மனைவிகளும் அவர்களின் குழந்தைகளும்

சென்ற வார இறுதியில் பிரகாஷ்ராஜ், போனிவர்மாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறியதாம். அவர்கள் இருவரும் Made for each other ஆக காட்சி அளித்தார்களாம் (நன்றி - டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ்). விஷயம் பிரகாஷ்ராஜின் முதல் மனைவியின் குழந்தைகள் பற்றியது. இரு குழந்தைகளும் அங்கு ஆஜர். ஒரு மாதிரி அரைப்புன்னகை புரிந்தபடி மூத்த மகள். என்ன உணர்வை வெளிப்படுத்தவென்று தெரியாத குழப்பம் அந்த முகத்தில். ஒரு 15, 16 வயது பிள்ளையிடம் 'இவர் தான் உன் புதிய தாய்' என்று அறிமுகப்படுத்துதல் என்ன மாதிரியான மனப்பாதிப்பை ஏற்படுத்தும்?? வற்புறுத்தி வரவழைக்கப்பட்ட சோகமோ என சந்தேகிக்க வைக்கிறது அந்த குழந்தையின் முகபாவம்.
இதே போல் மற்றொரு செய்தி - பிரபுதேவாவின் மகன் 'அப்பா அம்மாவைக் கஷ்டப்படுத்தாதீர்கள் என்று கதறல்' (நன்றி - குமுதம்). இந்த செய்தியைப் படிக்கும் போது அந்தக்குழந்தையின் மனநிலை எனக்குப் பதற்றத்தைத் தோற்றுவிக்கிறது. ஒரு குழந்தைக்கு மன நிம்மதியையும், பாதுகாப்பு உணர்வையும் தருவது பெற்றோர்களின் கடமையில்லையா? நம் தாய், தந்தையின் தியாகங்களும், ஒருவரையொருவர் பொறுத்துக் கொண்டு சென்ற மனப்பாங்கும் அல்லவோ நம் குடும்பங்களின் அடித்தளமாய் விளங்குகிறது.
ரேகா (காதல் மன்னன் ஜெமினி கணேசனின் மகள்) ஒரு தொலைக்காட்சி பேட்டியில் (ஸ்டார் ப்ளஸ்) 'ஃபாதரா? எனக்குத் தெரிந்ததெல்லாம் சர்ச் ஃபாதர்தான். என் வாழ்வில் தகப்பனார் என்பவர் எந்தப் பங்கையும் ஆற்றவில்லை. குழந்தைப் பருவத்திலிருந்து தனியாகத்தான் இருக்கிறேன். தனிமை எனக்குப் புதிதல்ல' என்கிறார். தகப்பன் காதல் லீலைகள் புரிந்து கொண்டிருக்கும் போது ஒரு மனைவி தீராத மன உளைச்சலுக்கு ஆளாகி குழந்தைகளைக் கவனிக்க இயலாத மனநிலைக்குத் தள்ளப்படுகிறாள்; குழந்தைகள் திணிக்கப்பட்ட தனிமைக்குள் சிக்கி வாழ்நாள் முழுதும் நீங்காத வடுவைப் பெற்று வாடுகிறார்கள். ரேகா இன்றும் தனித்தே இருக்கிறார்.
காதல் மன்னன்களும், அறிவு ஜீவிகளும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் இந்தக் குழந்தைகளுக்கு?

Tuesday, August 24, 2010

சில சந்தேகங்கள்

எனக்கு பிள்ளைகள் (வயது 3 மற்றும் 5 ) விஷயத்தில் சில சந்தேகங்கள் உள்ளன. யாராவது தீர்க்க முடியுமா? இதோ சந்தேகங்கள்
1. பள்ளி செல்ல வேண்டிய தினங்களில் காலை 7.45 வரை தூங்கி நம்மை டென்ஷனாக்கும் பிள்ளைகள் எப்படி சனி,ஞாயிறு அன்று நாம் எழுப்பாமலேயே 6 மணிக்கு எழுகிறார்கள்?
2. 2 வருடங்களுக்கு முன்னால் வாங்கப்பட்ட, உடைந்த, எதற்கும் உதவாத , ஒரு மூலையில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் பொம்மை எப்படி இரு பிள்ளைகளுக்கும் ஒரே சமயத்தில் கட்டாயம் தேவைப்பட்டு சண்டை ஏற்படுகிறது?
3. எப்படி நாம் ஃபோன் பேசும் போது அல்லது சாப்பிடும் போது அல்லது யூனிபார்மை மாட்டிவிட்ட பிறகு பிள்ளைகளுக்கு டாய்லெட் வருகிறது?
4. காலை முழுவதும் நாம் தேடி, நம்மால் கண்டுபிடிக்க இயலாத பென்சில் சீவும் ஷார்ப்பான கத்தி எப்படி மாலையில் இளைய பிள்ளையின் (3 வயது) கையில் விளையாடக் கிடைக்கிறது?
5. நாமெல்லாம் படிக்கும் போது பள்ளிக்கூடம் முழுநேரம் தானே??? இப்போது மட்டும் ஏன் அரை நாள்? என்னாஆஆஆஆஆ வில்லத்தனம்

Thursday, August 19, 2010

என் மகன் படிக்கும் Pre.K.G

மகளுக்கு மன்த்லி டெஸ்ட் ரிசல்ட்ஸ் வந்து விட்டது. கணக்கில் நூற்றுக்கு நூறு. பந்தா பண்ணுகிறேன் என்று எண்ணி விடாதீர்கள் நண்பர்களே. அதே மகள் ஹிந்தி டிக்டேஷனில் பத்துக்குப் பூஜ்யம். (அவளுடைய தாத்தா - என் மாமனார், அந்நாள் தி.மு.க அபிமானியாம். ஒரு வேளை ஹிந்தி எதிர்ப்பு அவள் ரத்தத்திலேயே இருக்கிறதோ ;) ). வாசு கணக்கில் மகள் எடுத்த மார்க்குக்கு கிஃப்ட் வாங்கித் தருவோம் என்றார். ஒரு கொலுசு வாங்குவோம் என்றேன் நான். யார் சொன்னார், 'இந்த விலைக்குத் தங்கம் விற்றால் மக்கள் எப்படி வாங்குவார்?' என்று. கூட்டமோ கூட்டம் நகைக்கடையில். கஸ்டமரைக் கவனியுங்கள் என்று சூப்பர்வைஸர் சொல்லி அந்தப் பக்கம் சென்றவுடன் சேல்ஸ் பெர்ஸன் வெறியோடு நம்மைக் கடித்துக் குதறுகிறார். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. நீண்ட வேலை நேரம், குறைந்த இடைவேளை மற்றும் சம்பளம். அவர்களால் அப்படித்தான் நடந்து கொள்ள இயலும். கொலுசைத் தேர்ந்தெடுத்து வாங்கி விட்டு வீட்டிற்குச் சென்றோம். மகன் எனக்கு என்ன கிஃப்ட் என்று துளைத்தான். அக்கா 100 வாங்கியிருக்கா. நீ என்னடா பண்ண க்ளாஸில என்று கேட்டேன். அமைதியாக யோசித்துக் கொண்டிருந்தான். மகளுக்கு கொலுசை மாட்டிவிட்டு அழகு பார்த்தோம். மகன் அங்கு வந்து கொலுசைப் பார்த்துவிட்டு ' எங்க க்ளாஸில் மௌமிதா இப்படித்தான் போட்டிருப்பா' என்றான். கொலுசு என்று சொல்லத் தெரியவில்லை. 'அடப்பாவி க்ளாஸில் கவனிக்க வேண்டிய விஷயமாடா இது' என்று அலறினார் வாசு. ரூ.28000 ஃபீஸ் கட்டி ப்ரீ.கே.ஜியில் மகனைச் சேர்த்ததன் பலனை அடைந்தோம் ;)

Wednesday, August 18, 2010

மகள்

வாசுவுக்கு 2 கால்களிலும் வலி. காலைத் தரையில் ஊன்றவே முடியவில்லை. ankleல் வலி. டாக்டரைப் பார்க்கச் சென்றோம். வலி எந்த இடத்தில் என்று அழுத்திப் பார்த்தார். சரியான இடத்தில் அழுத்திய போது வலியில் துடித்து விட்டார். டாக்டரைத் திட்ட முடியாமல் உர்ரென்று நின்று கொண்டிருந்தேன். பொதுவாக இந்த வலி ஸ்போர்ட்ஸ் பெர்ஸன்ஸுக்குத்தான் வரும் என்றார் டாக்டர். குறிப்பாக அத்லெட்ஸ். இவருக்கு எப்படி வரும் என்று யோசிக்கிறேன். ஒரு வேளை டிவியில் சேனல்க்குச் சேனல் தாவுகிறாரே அதனால் இருக்குமோ??? நீளம் தாவுதல் போல, அதுவும் தாவுதல் தானே ;). கம்மிங் டு தி பாயிண்ட் - டாக்டர் அறையில் நாங்கள் அமர்ந்திருக்கும் போது ஒரு ஆக்சிடென்ட் கேஸ். டாக்டர் உடனடியாக அடிபட்டவரைக் கவனிக்கச் சென்றார். 55-60 வயது மதிக்கக்கூடிய ஒரு பெண்மணி, டிவிஎஸ் எக்ஸலில் சென்று கொண்டிருந்த போது ட்ரக் மோதிவிட்டது. ஹாஸ்பிட்டலுக்கு மிக அருகில் தான் ஆக்சிடென்ட். ஒரு வழிப்போக்கர் தூக்கிக் கொண்டு வந்து அட்மிட் செய்தார். அவர் சட்டை, பேண்ட் முழுவதும் ரத்தம். டாக்டர், மிகவும் சீரியஸ். உடனடியாக வீட்டுக்கும், ஆம்புலன்ஸுக்கும் சொல்லுங்கள் என்றார். எப்படி, யார் தகவல் தெரிவித்தார்கள் எனத் தெரியவில்லை. உடனடியாக உறவினர்கள் வந்து விட்டனர் - அந்த அம்மாளின் மகள் தன் கணவனுடன் மற்றும் அந்த அம்மாளின் மகன். மகள் பதறித் துடித்தபடி யார் யாருக்கோ ஃபோன் செய்து கொண்டும், ஆம்புலன்ஸ் அல்லது ப்ரைவேட் டாக்ஸிக்கு முயற்சி செய்து கொண்டும் நடுநடுவே அழுது கொண்டும் இருந்தார். கணவன் பதறாதே என்று சமாதானம் செய்து கொண்டிருந்தார். இத்தனைக்கும் நடுவில் அந்த மகனிடம் 'இவர் தாங்க உங்க அம்மாவ இங்க கொண்டு வந்து அட்மிட் பண்ணார்' என்று ஒருவர் சொன்னார். அந்த மகன் - வெளிநாட்டு அதிபரிடம் நம் லோக்கல் மினிஸ்டர்களை அறிமுகப்படுத்தும் போது அதிபர் சிரிப்பாரே - அதைப் போல ஒரு பெருந்தன்மையான புன்சிரிப்பை உதிர்த்தான். அந்த சிரிப்பு , அந்த நேரத்தில் அந்த இடத்தில் மிக அசிங்கமாக, எரிச்சலூட்டக்கூடியதாக இருந்த்து. ஒரு கண்ணீர், ஒரு நன்றி ஊஹூம் ஒன்றும் இல்லை. அந்தப் பெண் மட்டுமே ரொம்ப தேங்க்ஸ் ஸார் என்று கண்ணீர் உகுத்தாள். மகள்களைப் பெற்றோரே மகிழ்ந்து களிகூருங்கள். வேறு வீட்டிற்கு வாழச் சென்று விட்டாலும், நமக்கான ஈரம் நம் மகள்களின் கண்களில் மட்டுமே இருக்கும் போலும்.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes