நிஜமாகவே எல்லாம் அவன் செயல்தானா? நாம் நம் வாழ்க்கையில் பல சமயங்களில் நல்ல வேள, By God's grace தப்பிச்சேன். ஒரு அரை மார்க் குறைஞ்சிருந்தா அவ்ளோதான், வேலை போயிருக்கும், மெடல் போயிருக்கும் ஆர்டர் கெடச்சிருக்காது, ப்ராஜக்ட் கெடச்சிருக்காது, அந்த வீடு அமையாம போயிருந்திருக்கும்.......................... இப்படி பல பல சந்தர்ப்பங்கள், சம்பவங்களில் கடவுள் கருணையுள்ளவர் என்பதைச் சொல்லியிருப்போம்.
என்னுடைய இன்றைய வாழ்க்கை வரை எக்கச்சக்க முறை கடவுளின் கிருபையால் என்ற வார்த்தையை வெவ்வேறு சூழ்நிலைகளில், பயன்படுத்தியிருக்கிறேன். அவற்றில் பெரும்பாலான சமயங்களில் என் அறிவு, என் திறமை போன்ற நினைவுகளை ஒரு போலியான பெருந்தன்மையுடன் கஷ்டப்பட்டு பின்தள்ளிவிட்டு (அப்புறம் சாமி கண்ணக் குத்திரும் என்ற பயத்துடன் ;) ) By God's grace என்று சொல்லிக்கொள்வேன். என்ன தான் கடவுள் இருந்தாலும் என் அறிவால்தானே இந்த கவுரவம் கிடைத்தது என்ற எண்ணத்தை என்னால் அகற்றிக் கொள்ளவே முடிந்ததில்லை. நான் கட்டிய மகா பாபிலோன் என்று அதனைக் கட்டிய மன்னன் கர்வத்தோடு நினைத்த மறுகணம் அரண்மனை இடிந்து விழுந்தது என்று வாசித்ததை நினைவு படுத்திக்கொண்டு, ஒரு பயத்தை வரவழைத்துக்கொண்டுதான் என்னால் கடவுளின் கிருபை என்ற வார்த்தையைச் சொல்ல முடிந்திருக்கிறது.
ஆனால் சமீப காலங்களில் நடைபெற்ற சில அருமையான சம்பவங்கள் leaves me speechless. நான், எனது அறிவு, திறமை, செல்வம் போன்றவையெல்லாம் எவ்வளவு பெரிய மாயை!!! இவையனைத்தும் பயனற்றுப் போகும் சந்தர்ப்பங்களை வாழ்க்கை நம்முன் வாரி இறைக்கிறது. அப்போது எல்லாம் அவன் செயல் என்னும் பேருண்மை மனதில் மின்னி மறைகிறது. அந்த நொடி கொடுக்கும் பரவசத்தை என்னால் வார்த்தைப்படுத்த இயலவில்லை. (கடவுள் உங்களுக்கும் அந்தப்பரவசத்தை - இது வரை கிடைக்காத பட்சத்தில் - அருள் புரிவாராக)
இந்த வாழ்க்கையென்னும் மகாநதியின் முன் நாம் எல்லோரும் எவ்வளவு சாதாரணமானவர்கள். இந்நதி பொங்கிப் பிரவாகம் எடுத்தால் நாம் அனைவரும் எம்மூலை? இந்நதியை வழிநடத்தும் மகாசக்தியிடம் நம்மை ஒப்புவித்துவிட்டு அவரின் எல்லாம் வல்ல கரங்கள் நம்மை வழிநடத்தட்டும் என்று அடி பணிவது ஒன்றே நாம் செய்யத்தக்கது.
பணிவதே பணி என்று பணிந்துவப்பேன் இறைவா!!!!!!