Tuesday, December 31, 2013

சுரா பற்றி ஜெயமோகன்,சுஜாதாவைப் பற்றி சுஜாதாவின் மனைவி

ஜெயமோகன் எழுதிய - சுந்தர ராமசாமி நினைவின் நதியில் - என்ற புத்தகத்தை இந்த விடுமுறையில் படித்தேன். ஒரு மிகப்பெரிய ஆளுமையின் அருகிலிருந்து ரத்தமும், சதையுமாக அவர் வாழ்வதை அவதானிப்பது ஜெயமோகன் செய்த பாக்கியம் என்றே கருதுகிறேன். ஜெயமோகனின் இந்தப் புத்தகம் சுராவைப் பற்றிய, சமரசங்களற்ற ஒரு பதிவு.
 மூன்று பெண்களின் தந்தையும், மூன்று சகோதரிகளின் இடையே வளர்ந்தவருமான சுரா, பெண்கள் பற்றி கொண்டிருந்த உண்மையான கருத்து, தனக்குப் போதுமான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற கற்பனை அழுத்தத்தில் இருந்த சுரா,  கறாரான, அவர் கடையில் வேலை பார்ப்பவர்களால் திட்டப்பட்ட வியாபாரியான சுரா, மாற்றுக்கருத்துக்களை மறுத்த சுரா, பொய் சொன்ன சுரா, இந்தியா பற்றிய சிறிய எள்ளலும், அமெரிக்கா மீதான மோகமும் கொண்ட சுரா போன்ற சுந்தர ராமசாமியின் நினைத்துக்கூட பார்க்க முடியாத முகங்கள். நான் - குழந்தைகள், பெண்கள், ஆண்கள் - பாலுவின் வளர்ந்த வடிவமே சுரா என்ற கற்பனையில் மிதந்து கொண்டிருந்தேன். அந்தக் கற்பனை எனக்கு உவப்பானதாகவே இருந்தது. ஆனால் உண்மை வேறு.
ஜெயமோகனின் இந்தப்புத்தகத்தால் நான் சுரா மீது கொண்டிருக்கும் மரியாதையும், பற்றும், அன்பும், பிரமிப்பும் எந்த விதத்திலும் குறையப்போவதில்லை. ஜெயமோகனே இன்று வரையிலும் சுரா உபாசகர்தான். இவருக்கு சுரா தான் ஆசான். தன்னுடைய குரு, தன் வளர்ச்சியை அங்கீகரிக்காமல் இருப்பதில் வரும் வலி மிகுந்த துயர் ஜெயமோகனுடையது.
அனைத்துப் படைப்பாளிகளுக்கும் ஒரு மறுபக்கம் இருக்கிறது. நான் முன்னொரு பதிவில் http://personaldiaryofpadma.blogspot.in/2011/09/blog-post_17.html ஒரு படைப்பு, படைப்பாளியின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும் என்று எழுதியிருந்தேன். அதை நான் தீவிரமாக நம்பவும் செய்தேன். அப்படி இருக்கவேண்டியதில்லை என்று வாழ்க்கை முகத்தில் அடித்து எனக்கு கற்றுத் தருகிறது. உதாரணமாக எழுத்தாளர் சுஜாதாவின் மனைவியின் பேட்டி - சில சாம்பிள்கள் இங்கே - அவரை விட்டு பிரியணும்னுதான் நினைச்சேன்… அம்மா மடில படுத்து பல நேரம் அழுதிருக்கேன்… அவரோட வாழ பிடிக்கலைனு கதறியிருக்கேன்… ஆனா, குழந்தைகளோட ஒரு பொண்ணு தனியா வாழறது நல்லதுக்கில்லைனு அம்மா தடுத்துட்டாங்க… அவங்களை சொல்லி குற்றமில்லை. அந்தக் காலம் அப்படி. இந்தக் காலம் மாதிரி சமூக சூழல் இருந்திருந்தா நிச்சயம் அவரை விட்டு பிரிஞ்சிருப்பேன்…’’

———–
‘’அவரோட எழுத்துக்களை நான் படிச்சா திட்டுவாரு… சொல்லப் போனா புத்தகங்களை பெண்கள் படிக்கறதே அவருக்கு பிடிக்காது… சமையலறை, குடும்பத்தைத் தாண்டி பெண்கள் வெளிய வரக் கூடாதுங்கிறது அவர் கொள்கை…
———-
‘’அக்கிரகாரத்துல தன் பாட்டி வீட்லதான் அவர் வளர்ந்தாரு. அதனால அக்கிரகாரத்தை தாண்டி அவர் சிந்தனை வளரவேயில்லை. கடைசி காலம் வரைக்கும் அவருக்குள்ள இருந்தது அந்த அக்கிரகார சிறுவன்தான்…’’ 

ஒரு விஞ்ஞானி, மெத்தப் படித்தவர் கடைசி வரை மனத்தளவில் அக்கிரகாரச் சிறுவனாகவே வாழ்ந்து மடிகிறார். அன்னா கரீனாவின் ஒப்லான்ஸ்கியையும், லெவினையும் படைத்து குடும்ப அமைப்பின் மேன்மையைச் சொன்ன டால்ஸ்டாய், தன் மனைவியின் சகோதரியை செட்யூஸ் செய்கிறார். பாலுமகேந்திரா, பாலகுமாரன், இளையராஜா, சாரு நிவேதிதா................... என்று படைத்தது ஒன்று, வாழ்க்கைமுறை வேறொன்று என்று வாழ்பவர்களின் பட்டியல் முடிவில்லாதது. மலையும், மனிதர்களும் தூரத்தில் இருந்துதான் அழகு.

மனத்தைப் புடம் போடும் ஒவ்வொரு படைப்பும் (எழுத்து, இசை) தானாகவே தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும். காலத்தை வென்று நிற்கும் இப்படைப்புகளை வெளிக்கொண்டு வரும் ஒரு சாதாரண மீடியம்தான் இன்று இருக்கிறான், நாளை இல்லை என்னும் பெருமை படைத்த மானுடன். அன்னா கரீனாவை எழுத ஒரு டால்ஸ்டாய் இல்லையென்றால் இன்னோரு நட்டான்யா மூலம் அவ்வெழுத்து வெளிப்பட்டிருக்கும். அவ்வளவே. அந்நாவலுக்கும், டால்ஸ்டாய்க்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை. லா.ச.ரா விடம் ஒரு முறை உங்கள் எழுத்துக்கள் புரியவில்லையே என்று கேட்டபோது - நான் எங்கே எழுதுகிறேன், எழுத்து தன்னையே எழுதிக்கொண்டு செல்கிறது என்றாராம். இது தான் சத்தியம்.

இனிமேல் பாரதியார் தன் மகளை அடி, அடியென்று அடித்தாராம் என்று கேள்விப்பட்டால்கூட ஆச்சர்யப்படமாட்டேன் ;)

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes