மலேசியாவில் மலேயா பல்கலைக்கழகமும், உத்தமமும் இணைந்து நடத்திய உலகத்தமிழ் இணைய மாநாடு ஆகஸ்ட் 15 முதல் 18 வரை மலேயா பல்கலைக்கழகத்தில் நடந்தது. உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். ஒரு சிறு பயணக்குறிப்பு இதோ.
டிப்பெண்டன்ட் விசாவில் இல்லாத முதல் வெளிநாட்டுப்பயணம் என்பதால் மிகவும் எக்ஸைட்டடாக இருந்தது. மாநாட்டின் டெக்னிக்கல் விஷயங்கள் ஒரு புறம் இருக்கட்டும் (பின்னொரு பதிவில்). இப்பதிவில் நான் வேறு சிலவற்றைப் பற்றி விவாதிக்க விரும்புகிறேன்.
முதலில் உணவு. காலை உணவில் விதவிதமான நூடுல்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒல்லியான, பட்டையான, உருண்டையான என்று வித விதமான வடிவங்களில், முக்கியமாக மீன் சேர்க்கப்பட்டவை.இவர்களின் நூடுல்ஸ் மசாலா வித்தியாசமாக, மிகச்சுவையாக இருக்கிறது. அப்புறம் சம்பல் - இந்த மீன் குழம்பு சான்ஸே இல்லை. சூப்பர். முக்கியமாக கவனிக்க வேண்டியது - இவர்களின் மதிய, இரவு உணவில் (பெரிய ஹோட்டல்களில் மட்டுமல்ல -எந்த உணவகமாக இருந்தாலும்) காய்கறி சாலட்டும் (வெறும் உப்பு சேர்த்து வேகவைக்கப்பட்டவை ஆனால் ஆச்சர்யகரமாக மிக ருசியானவை), பழங்களும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இது நம்மூரில் இல்லாத, நிச்சயம் ஆரோக்கியமான உணவுப்பழக்கம். நம் வீடுகளிலும், ஹோட்டல்களிலும் இப்பழக்கத்தை நாம் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். கொஞ்சமாவது வறுப்பதையும், பொரிப்பதையும் குறைத்துக்கொள்ளவேண்டும்.
அப்புறம் ஷாப்பிங் அவ்வளவு எக்சைட்டிங்காக இல்லை. எல்லா ப்ராடக்ட்டுகளும் நம்மூரில் கிடைக்கின்றன.
ஒரு யு.எஸ் தமிழ்க்குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி தன் குடும்பத்தோடு மாநாட்டில் பேப்பர் ப்ரஸண்ட் பண்ண வந்திருந்தார். அவர், அவருடைய கணவர், இரு மகள்கள்.18 மற்றும் 14 வயது. என்ன படிக்கிறார்கள் என்று கேட்டேன். மூத்த பிள்ளை பி.ஹெச்.டி பயோடெக்னாலஜி ஒரு ஐவி லீக் பல்கலையில் செய்து கொண்டிருப்பதாகச் சொன்னார். சர்ப்ரைஸ். எப்படி இவ்வளவு சிறிய வயதில் என்று கேட்டேன். ஹை ஸ்கூலில் இவளது சாட் ஸ்கோரைப் பார்த்து, நான்கு வருடம் பிரமோஷன் கொடுத்து, நேரடியாக பிஹெச்டி யில் அனுமதித்ததாகக் கூறினார். இது எந்த வளரும் நாட்டிலும் சாத்தியமில்லை.
இதே நேரம் ஒரு மலேசியத்தமிழரிடம் பேசிய போது, மலாய்ப்பிரிவு மாணவர்கள் பள்ளியில் பத்து பாடங்களில், ஏதாவது இரண்டு பாடங்களில் `ஏ` க்ரேட் எடுத்தால் கூட போதும். காலேஜில் அவர்கள் கேட்கும் பிரிவு கோட்டாவில் கிடைத்து விடும். ஆனால் தமிழ்ப்பிள்ளைகள் பத்துக்குப் பத்து `ஏ` வாங்கினால் கூட கேட்ட கோர்ஸ் கிடைப்பது கடினம் என்று கூறினார். ஏன் வளரும் நாடுகள், வளரும் நாடுகளாகவே பல வருடங்கள் இருக்கின்றன என்று எனக்குப் புரிந்தது.
இலங்கையிலிருந்து ஒரு தமிழர் வந்திருந்தார். சமீபத்தில் துக்ளக் பத்திரிக்கையில் ஒரு ஈழம் தொடர் வெளியாகி, பெருத்த விமர்சனங்களுக்கு ஆளாகியிருந்தது. அத்தொடரில், ஒரு நிருபர் குழு, இலங்கை சென்று மீள்குடியேற்றம் எப்படி நடக்கிறது என்பதைப் பார்த்து, மிகப்பாஸிட்டிவான ரிப்போர்ட்டைக் கொடுத்திருந்தனர். மற்ற அனைத்து ஊடகங்களும் நெகட்டிவ் விமர்சனங்களையே கொடுத்திருந்த நிலையில், துக்ளக் மட்டும் மீள்குடியேற்றம் ஒழுங்காக நடப்பதாகத் தெரிவித்திருந்தது. உண்மையில் அங்கு என்ன தான் நடக்கிறது என்று அவரிடம் கேட்டேன். அவர் என்னைக் கேட்டவை மற்றும் என்னிடம் தெரிவித்தவை இதோ.
1. நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, இலங்கை என்னும் நாடாக முன்னேற விரும்புகிறோம். உங்கள் அரசியல்வாதிகள் உங்கள் தமிழ்நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்கட்டும். எங்களை நாங்கள் பார்த்துக்கொள்வோம்.
2. போரின் காயங்களை மறந்து நாங்கள் முன் செல்ல விரும்புகிறோம். எங்களை விட்டுவிடுங்கள்.
நாம் நிறைய உண்மைகளை எதிர்கொள்ள விரும்புவதில்லை. மாறாக நாம் விஷயங்கள் எப்படி இருக்க வேண்டுமென்று விரும்புகிறோமோ அப்படியே கற்பனை செய்து கொள்கிறோம். இதுவே நிஜம்.