ஆனந்தவிகடனில் பாரதிராஜா வாசகர்களின் கேள்விக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார். மணிவண்ணன் பற்றிய ஒரு கேள்விக்கு மிகக் கடுமையாக, தரக்குறைவாக பதில் அளித்திருக்கிறார் பாரதிராஜா.
ஈழத்தமிழர் பிரச்சினை, காவேரிப் பிரச்சினை போன்றவற்றில் இவர்களுக்குக் கருத்து வேறுபாடு இருந்திருக்கிறது. மாற்றுக்கருத்தே இருக்கக்கூடாத அளவுக்கு பாரதிராஜா மானுடப்பிறப்புக்கு அப்பாற்பட்டவரா என்ன? அவன் முழி திருட்டு முழி, நான் தான் அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சேன் - இத்யாதிகள். கருத்துக்கு பதில் கருத்தை முன் வையுங்கள் பாரதிராஜா. பர்சனல் விமர்சனங்களை அல்ல. பாரதிராஜாவின் பேட்டி வெளி வந்த 3 நாட்களில் மணிவண்ணன் மரணமடைந்து விட்டார். அவன் வாயத்திறந்தா பொய்தான் வரும் என்று சொன்ன பாரதிராஜா வாயைத் திறந்ததால் ஒரு உயிர் ஆறாத மனக்காயத்துடன் மரணத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறதே. இதற்கு பாரதிராஜா என்ன நியாயம் கற்பிக்கப்போகிறார். (பாரதிராஜாவுக்கு மாறாத மரியாதையுடன் மணிவண்ணன் அளித்த கடைசி பதில் இங்கே - http://tamil.oneindia.in/movies/news/2013/06/director-manivannan-s-last-speech-177270.html )
வார்த்தைகள் வலிமையானவை. அவற்றால் விளிம்பில் இருக்கு ஒருவனை உயிர்ப்பித்து, உயர வைக்க முடியும். அதே வார்த்தையால் மனிதனை நரகத்திற்கு வழி நடத்த முடியும். நம்மை, நம் வாழ்க்கையைத் திசை மாற்றிய வார்த்தைகளைப் பேசியவர்களை நாம் என்றும் மறப்பதில்லை. வார்த்தைகள் இரு பக்கமும் கருக்குள்ள பட்டயம் போன்றவை. அவற்றை மிகக்கவனமாகக் கையாளப் பழகுவோம். யாகாவாராயினும் நாகாக்கப் பழகுவோம் - அது பாரதிராஜாவாகவே இருந்தாலும் கூட.