காலையில் அரக்க பரக்க பிள்ளைகளை ஸ்கூலுக்கு கிளப்பி அனுப்பிவிட்டு, தங்கள் பிரேக்ஃபாஸ்ட்டைச் சின்ன மூடி போட்ட கிண்ணங்களில் எடுத்து வந்து ரயிலில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் குடும்பத்தலைவியர், கையடக்கப் புத்தகங்களிலிருந்து ஸ்லோகங்களையோ, கர்த்தருக்கு ஸ்தோத்திரங்களையோ படித்துக்கொண்டிருக்கும் பெண்கள், லஷ்மி கடாட்சம் பெறுவது எப்படி என ஆன்மிக மலரிலிருந்து வாசித்துக்கொண்டிருக்கும் நீட்டான பேண்ட் சர்ட் அணிந்து, கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு, பெரிய குங்குமப்பொட்டு வைத்துக்கொண்டிருக்கும் வினோதமான கெட்டப்பில் நடுத்தர வயது ஆண்கள், நின்றபடியே ஹிண்டு படிப்பவர் எனக் கலந்து கட்டி கம்பார்ட்மென்ட் நிறைந்து வழிந்து கொண்டிருந்தது. என்னருகில் ஒரு இளம்பெண் அமர்ந்திருந்தார் செல்போனைக் குடைந்தபடி. வேளச்சேரியிலிருந்து வண்டி லேசாக வேகமெடுத்து திரும்பவும் வேகத்தைக்குறைத்து மீண்டும் புறப்பட்டது. (யாராவது ட்ரெய்னைப் பிடிக்க ஓடி வருவதைப்பார்த்தால் டிரைவர் நிறுத்தி மீண்டும் புறப்படுவார். ட்ரெய்னையே நிறுத்தி நம்மை ஏற்றிக்கொள்ளும் மனிதாபிமானமெல்லாம் நிச்சயம் இங்கு மட்டுந்தான் காண முடியும். UK வில் பஸ்ஸைப் பிடிக்க நாம் ஓடி வருவதைப் பார்த்தாலும் டிரைவர் போய்க்கொண்டே இருப்பார்.) அடுத்த நிறுத்தத்தில் ticket checker ஏறினார். என்னருகில் அமர்ந்திருந்த பெண் டிக்கட் எடுக்கவில்லை. பிடிபட்டுவிட்டார். நில்லும்மா மத்தவங்கள செக் பண்ணிட்டு வந்துர்றேன் என்று டிக்கட் செக்கர் நகர்ந்தார். வண்டியும் நகரத்துவங்கிவிட்டது. அந்த நேரத்தில் அவ்விளம்பெண் யாரும் எதிர்பாராத ஒரு வேலையைச் செய்தார். சிறிது வேகம் பிடித்த ரயிலிலிருந்து குதித்து விட்டார். அப்படியே பிளார்ட்ஃபார்மில் டமாரென்று விழுந்த சத்தம். அப்புறம் என்னென்னவோ வினோத சத்தங்கள். என்னவென்று பார்ப்பதற்குள் வண்டி மிகுந்த வேகமெடுத்துவிட்டது. நிச்சயம் 2,3 fracture ஆவது ஆகியிருக்கும்.
மிஞ்சி மிஞ்சிப் போனால் 500 ரூபாய் ஃபைன் போட்டிருப்பார். இதற்குப் போய் ஏன் ஓடும் ரயிலிலிருந்து குதித்தார்? அவரை ரயிலிலிருந்து குதிக்கத் தூண்டியது நிச்சயம் அந்த ஃபைனாக இருக்காது. அவமானம் தான் காரணமாக இருக்கும்.
நம் வாழ்க்கையில் நாம் ஏமாந்த தருணங்களை விட, உடல் ரீதியாகத் துன்பப்பட்டத் தருணங்களை விட நாம் அவமானப்படுத்தப்பட்ட தருணங்களே நம்மை மிக அதிகமாகப் பாதிக்கின்றது. யோசித்துப்பார்த்தால் நம்மிடம் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றியவர்களைக் கூட நாம் குறிப்பிட்ட நாட்களுக்குள் மன்னித்து மறந்தும் கூட விடுகிறோம். ஆனால் வார்த்தைகளாலும், செயல்களாலும் நம்மை அவமானப்படுத்துபவர்களோடு நாம் நம் உறவைத் தொடர என்றுமே விரும்புவதில்லை. இதனால் தான் ஆத்திச்சூடி கூட மதியாதார் தலைவாசல் மிதியாதே என்று போதிக்கின்றது போலும். வேறெந்த வகையில் நம்மைப் பாதித்தவர் வீட்டுக்குக் கூடச் செல்லலாம். ஆனால் அவமதித்தவர் வீட்டிற்கல்ல என்கிறார் நம் அவ்வைப்பாட்டி. யாரையும் கனவிலும் அவமதிக்காமல் இருக்க எங்கும் நிறை இறைபெருமான் நமக்கு அருள் பிரிவாராக
2 comments:
ஹ்ம்ம்..!
ரொம்ப நாளைக்கப்பறம் நேற்றுதான் நானும் பறக்கும் ரயிலில் பறந்தேன்.
:) :)
\\(யாராவது ட்ரெய்னைப் பிடிக்க ஓடி வருவதைப்பார்த்தால் டிரைவர் நிறுத்தி மீண்டும் புறப்படுவார்//
உண்மையாவா??
நா வெள்ளந்தி பையன்க....உண்மையா சொல்லுங்க :) :)
\\அவரை ரயிலிலிருந்து குதிக்கத் தூண்டியது நிச்சயம் அந்த ஃபைனாக இருக்காது. அவமானம் தான் காரணமாக இருக்கும்.//
பயண சீட்டை மறக்குமளவிற்கு அவருக்கு எதாவது மனக் குழப்பம் மிருந்திருக்கலாம்..!
மற்ற படி அவர் செய்தது மடத்தனம்..கொஞ்சம் பிசகியிருந்தாலும் அவர் வண்டியின் சக்கரங்களில் சிக்கி கூளாகியிருப்பார்.
நிஜமாகத்தான் லெமூரியன். வண்டியை slow பண்ணுவார். எனக்காகவும் வண்டி ஒரு முறை நின்றிருக்கிறது. ஆனா நீங்க வெள்ளந்திங்கறத நான் நம்பிட்டேன் :)
Post a Comment