Friday, October 21, 2011

சென்னை MRTS திருவான்மியூர் ஸ்டேஷனில் ஒரு நாள்

காலையில் அரக்க பரக்க பிள்ளைகளை ஸ்கூலுக்கு கிளப்பி அனுப்பிவிட்டு, தங்கள் பிரேக்ஃபாஸ்ட்டைச் சின்ன மூடி போட்ட கிண்ணங்களில் எடுத்து வந்து ரயிலில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் குடும்பத்தலைவியர், கையடக்கப் புத்தகங்களிலிருந்து ஸ்லோகங்களையோ, கர்த்தருக்கு ஸ்தோத்திரங்களையோ படித்துக்கொண்டிருக்கும் பெண்கள், லஷ்மி கடாட்சம் பெறுவது எப்படி என ஆன்மிக மலரிலிருந்து வாசித்துக்கொண்டிருக்கும் நீட்டான பேண்ட் சர்ட் அணிந்து, கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு, பெரிய குங்குமப்பொட்டு வைத்துக்கொண்டிருக்கும் வினோதமான கெட்டப்பில் நடுத்தர வயது ஆண்கள், நின்றபடியே ஹிண்டு படிப்பவர் எனக் கலந்து கட்டி கம்பார்ட்மென்ட் நிறைந்து வழிந்து கொண்டிருந்தது. என்னருகில் ஒரு இளம்பெண் அமர்ந்திருந்தார் செல்போனைக் குடைந்தபடி. வேளச்சேரியிலிருந்து வண்டி லேசாக வேகமெடுத்து திரும்பவும் வேகத்தைக்குறைத்து மீண்டும் புறப்பட்டது. (யாராவது ட்ரெய்னைப் பிடிக்க ஓடி வருவதைப்பார்த்தால் டிரைவர் நிறுத்தி மீண்டும் புறப்படுவார். ட்ரெய்னையே நிறுத்தி நம்மை ஏற்றிக்கொள்ளும் மனிதாபிமானமெல்லாம் நிச்சயம் இங்கு மட்டுந்தான் காண முடியும். UK வில் பஸ்ஸைப் பிடிக்க நாம் ஓடி வருவதைப் பார்த்தாலும் டிரைவர் போய்க்கொண்டே இருப்பார்.) அடுத்த நிறுத்தத்தில் ticket checker ஏறினார். என்னருகில் அமர்ந்திருந்த பெண் டிக்கட் எடுக்கவில்லை. பிடிபட்டுவிட்டார். நில்லும்மா மத்தவங்கள செக் பண்ணிட்டு வந்துர்றேன் என்று டிக்கட் செக்கர் நகர்ந்தார். வண்டியும் நகரத்துவங்கிவிட்டது. அந்த நேரத்தில் அவ்விளம்பெண் யாரும் எதிர்பாராத ஒரு வேலையைச் செய்தார். சிறிது வேகம் பிடித்த ரயிலிலிருந்து குதித்து விட்டார். அப்படியே பிளார்ட்ஃபார்மில் டமாரென்று விழுந்த சத்தம். அப்புறம் என்னென்னவோ வினோத சத்தங்கள். என்னவென்று பார்ப்பதற்குள் வண்டி மிகுந்த வேகமெடுத்துவிட்டது. நிச்சயம் 2,3 fracture ஆவது ஆகியிருக்கும்.

மிஞ்சி மிஞ்சிப் போனால் 500 ரூபாய் ஃபைன் போட்டிருப்பார். இதற்குப் போய் ஏன் ஓடும் ரயிலிலிருந்து குதித்தார்? அவரை ரயிலிலிருந்து குதிக்கத் தூண்டியது நிச்சயம் அந்த ஃபைனாக இருக்காது. அவமானம் தான் காரணமாக இருக்கும்.

நம் வாழ்க்கையில் நாம் ஏமாந்த தருணங்களை விட, உடல் ரீதியாகத் துன்பப்பட்டத் தருணங்களை விட நாம் அவமானப்படுத்தப்பட்ட தருணங்களே நம்மை மிக அதிகமாகப் பாதிக்கின்றது. யோசித்துப்பார்த்தால் நம்மிடம் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றியவர்களைக் கூட நாம் குறிப்பிட்ட நாட்களுக்குள் மன்னித்து மறந்தும் கூட விடுகிறோம். ஆனால் வார்த்தைகளாலும், செயல்களாலும் நம்மை அவமானப்படுத்துபவர்களோடு நாம் நம் உறவைத் தொடர என்றுமே விரும்புவதில்லை. இதனால் தான் ஆத்திச்சூடி கூட மதியாதார் தலைவாசல் மிதியாதே என்று போதிக்கின்றது போலும். வேறெந்த வகையில் நம்மைப் பாதித்தவர் வீட்டுக்குக் கூடச் செல்லலாம். ஆனால் அவமதித்தவர் வீட்டிற்கல்ல என்கிறார் நம் அவ்வைப்பாட்டி. யாரையும் கனவிலும் அவமதிக்காமல் இருக்க எங்கும் நிறை இறைபெருமான் நமக்கு அருள் பிரிவாராக

Friday, October 14, 2011

அழகிய பிட்கெய்ர்ன் தீவு - பெண் குழந்தைகளின் பாலியல் நரகம்

ஒரு காலத்தில் தென் பசிபிக் பகுதியின் தனிமை சொர்க்கமாக கருதப்பட்ட பிட்கெய்ர்ன் தீவின் இருண்ட பக்கங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. தலைமுறை தலைமுறையாகத் தொடரும் பெண் குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறைகள் தற்சமயம் வெளிவந்துள்ளன.





பிட்கெய்ர்ன் தீவு பெருவுக்கும், நியூசிலாந்துக்கும் இடையில் அமைந்துள்ள உலகின் மிகத்தனிமையான, குறைவான மனிதர்களே வசிக்கும் ஒரு அழகிய தீவாகும். இது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வரும் தீவாகும். இத்தீவின் தனிமையே இதன் மிகப்பெரிய அட்ராக்ஷனாகவும் இருக்கிறது. கடினமான பாறைகளும், அடர்ந்திருக்கும் மரங்களும், அலைகளின் தாலாட்டும், ஆளரவமற்ற தனிமையும் இங்கு முதலில் 1790ஆம் ஆண்டு ஃப்ளெட்சர் க்றிஸ்டியனின் தலைமையின் கீழ் வந்தடைந்த HMS Bounty கப்பலில் இருந்தவர்களுக்கு ஒரு சொர்க்கத்தை வந்தடைந்த உணர்வைத் தந்தது. இத்தீவின் தனிமை அவர்களுக்கும், இன்றும் அங்கே வசித்து வரும் அவர்களின் வம்சாவளியினருக்கும் தங்களின் கொடிய குற்றங்களை மறைத்துக் கொள்ள ஒரு நல்ல போர்வையைத் தந்தது.





இங்குள்ள பெண் குழந்தைகள் 12 வயதிலேயே அவர்களின் விருப்பமின்றி
தாயாக்கப்படுகிறார்கள். இங்குள்ள அனைத்து ஆண்களுமே பெண்குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறை புரிந்தவர்களாகவும், பெண் குழந்தைகள் அனைவருமே பாதிக்கப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர், (2004 ல் இவர்களின் மொத்த ஜனத்தொகை 47). இத்தீவுக்கு airport, sea port கிடையாது. ஒரேயொரு docking yard மட்டும் உண்டு. இப்படி ஒரு வெளியாட்களின் வரவே இல்லாத ஒரு சமூகத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் யாரிடமும் எதுவும் சொல்லவும் வாய்ப்பில்லை. தாயார், பாட்டி அனைவரும் இதே விதத்தில் பாதிக்கப்பட்டவர்களே. 1999ஆம் ஆண்டு அங்கு விசிட்டிங் போலீஸாக வந்த ஒரு பெண் அதிகாரியிடம் ஒரு 15 வயது பெண் குழந்தை தான் ரேப் செய்யப்பட்டதையும், இங்கு எவ்வாறு அது சர்வசாதாரணமாக செய்யப்படுகிறது என்பது பற்றியும் தெரிவித்திருக்கிறாள். மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு பெரிய திருட்டை மட்டுமே ஹேண்டில் செய்திருந்த அந்த அதிகாரி, இக்குற்றச்சாட்டின் தீவிரத்தால் அதிர்ந்து போனார். மற்ற பெண்களும், குழந்தைகளும் தைரியமடைந்து தங்களின் வேதனையான அனுபவங்களை வெளியில் சொல்லத்துவங்க, இத்தீவின் இன்னொரு கோர முகம் உலகுக்கு வெளிப்படுத்தப்பட்டது. நியுசிலாந்து கோர்ட்டில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விசாரிக்கப்பட்டனர். நாங்கள் பிரிட்டிஷ் ராஜஜியத்தின் கீழ் வரமாட்டோம். எனவே எங்களை வேறு யாரும் விசாரித்து குற்றம் சாட்டமுடியாது என்று தற்சமய தலைவர் (முதல் ஃபோட்டோவில் 2ம் வரிசையில் வெள்ளை டிஷர்ட்டில் இருப்பவர் - அவரும் குற்றவாளிதான்) வாதிட்டது தள்ளுபடி செய்யப்பட்டது. அனேகமாக அனைத்து ஆண்களும் கைதாகும் நிலை ஏற்பட்டதால், சில வயதான பெண்கள், தீவின் ஆண்களைக் காப்பாற்ற வேண்டுமென "இதிலென்ன இருக்கிறது. இது பாலினேஷியக் கலாசாரத்தின் ஒரு பகுதி" என வாதிட்டனர். இவை அனைத்தையும் மீறி, நியுசிலாந்து கோர்ட் அனைவருக்கும் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

இன்று செய்தித்தாளில் விழுப்புரத்தில் தந்தையால் கர்ப்பமாக்கப்பட்ட பெண் குழந்தை, குழந்தை பெற்றார் என்ற தினமலர் செய்தி மனத்தை நொறுக்குகிறது. இக்கட்டுரை பாதிக்கப்பட்ட, பட்டுக்கொண்டுருக்கிற ஒவ்வொரு குழந்தைக்குமான என்னுடைய பிரார்த்தனை.








Friday, October 7, 2011

இந்தியா திரும்புவீர்களா NRI இன்ஜினியர்ஸ்?

சமீபத்தில் ஒரு நீண்ட ரயில் பயணம் மேற்கொள்ள நேர்ந்தது. பிள்ளைகள்
வளர்ந்து விட்டதனால் அவர்களைத் தொடர்ந்து கவனிக்க வேண்டிய அவசியமில்லாமல் பிரயாணத்தை ரசிக்க முடிந்தது. மிதமான ஏசி, சுவையான சரவணபவன் உணவு வகைகள் மற்றும் அருமையான புத்தகங்கள். ஒரு ரயில் பயணத்தை உபசொர்க்கமாக மாற்ற இவை போதுமல்லவா?






வழியில் பெயர் தெரியாத சின்ன சின்ன ஊர்கள் ஓடி மறைந்து கொண்டிருந்தன. அந்த நிலையங்களில் காணப்பட்ட செடி கொடிகள் படர்ந்த உடைந்த பெஞ்சுகள் என் நினைவுகளை வேறெங்கோ இழுத்துச் சென்றன. அந்த நிலையங்களில் எந்த ரயில் நிற்கும் என்றே தெரியவில்லை. எதற்கு தன்னந்தனி காட்டுக்குள் இப்படியொரு ஸ்டேஷன்? அங்கிருந்து ஒடி மறையும் மண் சாலைகள் எங்கு செல்கின்றன? புரியவில்லை. அந்த பாழடைந்த தோற்றம் இங்கு தனிமையிலிருக்கும் பெற்றோரை ஏனோ எனக்கு நினைவுறுத்தியது.




நான் என் நண்பர்கள் அல்லது பிள்ளைகளோடில்லாத உறவினர்கள் வீட்டுக்குச் செல்லும்போது (நண்பர்கள் வெளிநாட்டில், இங்கே இருப்பது அவர்களின் பெற்றோர்கள் மட்டும். நான் பார்க்கச் செல்வதும் பெற்றோர்களைத்தான்)அமெரிக்காவில் இருக்கும் பிள்ளைகளை நினைத்தபடி இங்கே தவிக்கும் அவர்களின் தனிமை மனதை உலுக்குகிறது. பிள்ளைகளின் ஃபோட்டோக்களை ஆசை ஆசையாக நமக்கு எடுத்து காண்பிக்கின்றனர். ஏற்கனவே facebookல் பார்த்துவிட்டோம் என்று சொல்ல மனமில்லாமல் நாமும் முதன்முறை பார்ப்பது போல் நடிக்கிறோம். அவர்களின் வீடுகள் மிகவும் posh ஆக இருக்கின்றன. ஆனால் அவை வெறும் கற்களாலான கட்டடம் மட்டுமே. குழந்தைகளின் அழுகையும் சிரிப்பும் நிறைந்த, மகனும் மருமகளும் மகிழ்ந்து குலாவி அல்லது சண்டை போட்டுத்திரியும் உயிரோட்டம் அங்கு இல்லை. Sunday evening நம்ம டைம் 7மணி போல onlineல வருவாங்கம்மா என்று அவர்கள் சொல்லும்போது அவர்கள் use பண்ணும் technical terms (online, skype, webcam) என் மனத்தை அறுக்கின்றது. எனக்குத்தெரியும் அவர்கள் அந்த வார்த்தைகளை எவ்வளவு வெறுக்கிறார்கள் என்று.


ஹரிகேசநல்லூர் வெங்கடராமன் (பிரபல ஜோதிடர்) சொல்கிறார் - ஒரு காலத்தில் (சுமார் 15 வருடங்களுக்கு முன்னர்) என்னிடம் ஜாதகம் பார்க்க வரும் பெற்றோர்கள் என் மகன் வெளிநாடு போவானா? அவனுக்கு அந்த யோகம் இருக்கிறதா? என்று கேட்பர். ஆனால் இப்போதோ என் மகன் திரும்ப வருவானா? அவன் கையால் கொள்ளி வாங்கும் யோகம் எனக்கிருக்கிறதா என்று கேட்கின்றனர் என்கிறார்.
கணவன்,மனைவி இருவரும் சேர்ந்து பிள்ளைகளற்ற தனிமையில் இருப்பது கூட பரவாயில்லை. வாழ்க்கைத்துணை மறைந்து பிள்ளைகளும் வேறெங்கோ இருப்பவரின் நிலை இன்னும் பரிதாபம். கொடிது, கொடிது முதுமையில் தனிமை.

வெளிநாடுகளில் வசிப்போரே, உங்கள் பெற்றோர் இங்கு தனிமையில் இருக்கும் பட்சத்தில் யோசியுங்கள். நீங்கள் அங்கு இருப்பதற்கான காரணம் நிச்சயம் பணத்தைத் தவிர வேறெதுவாகவும் இருக்க முடியாது. ஆனால் உண்பது நாழி,உடுப்பது இரண்டு, உறைவிடம் என்பது ஒன்று தான். பெற்றோரைத் தனிமையில் விடாதீர்கள். மேஜர் சர்ஜரிகளைத் தனிமையில் எதிர்கொள்கிறார்கள், தனித்திருக்கும் தகப்பன்மார்கள் தொலைபேசியில் சமையல் குறிப்பு கேட்கிறார்கள் புத்தக சேகரிப்புகளை யார் பார்த்துக்கொள்வார்கள் என்று வருந்துகிறார்கள்.இவர்களின் தேவை பணமல்ல. நீங்கள் தான். வீடு திரும்புங்கள். பெற்றோர் மனம் குளிரச் செய்யுங்கள்.








 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes