Friday, October 21, 2011

சென்னை MRTS திருவான்மியூர் ஸ்டேஷனில் ஒரு நாள்

காலையில் அரக்க பரக்க பிள்ளைகளை ஸ்கூலுக்கு கிளப்பி அனுப்பிவிட்டு, தங்கள் பிரேக்ஃபாஸ்ட்டைச் சின்ன மூடி போட்ட கிண்ணங்களில் எடுத்து வந்து ரயிலில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் குடும்பத்தலைவியர், கையடக்கப் புத்தகங்களிலிருந்து ஸ்லோகங்களையோ, கர்த்தருக்கு ஸ்தோத்திரங்களையோ படித்துக்கொண்டிருக்கும் பெண்கள், லஷ்மி கடாட்சம் பெறுவது எப்படி என ஆன்மிக மலரிலிருந்து வாசித்துக்கொண்டிருக்கும் நீட்டான பேண்ட் சர்ட் அணிந்து, கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு, பெரிய குங்குமப்பொட்டு வைத்துக்கொண்டிருக்கும் வினோதமான கெட்டப்பில் நடுத்தர வயது ஆண்கள், நின்றபடியே ஹிண்டு படிப்பவர் எனக் கலந்து கட்டி கம்பார்ட்மென்ட் நிறைந்து வழிந்து கொண்டிருந்தது. என்னருகில் ஒரு இளம்பெண் அமர்ந்திருந்தார் செல்போனைக் குடைந்தபடி. வேளச்சேரியிலிருந்து வண்டி லேசாக வேகமெடுத்து திரும்பவும் வேகத்தைக்குறைத்து மீண்டும் புறப்பட்டது. (யாராவது ட்ரெய்னைப் பிடிக்க ஓடி வருவதைப்பார்த்தால் டிரைவர் நிறுத்தி மீண்டும் புறப்படுவார். ட்ரெய்னையே நிறுத்தி நம்மை ஏற்றிக்கொள்ளும் மனிதாபிமானமெல்லாம் நிச்சயம் இங்கு மட்டுந்தான் காண முடியும். UK வில் பஸ்ஸைப் பிடிக்க நாம் ஓடி வருவதைப் பார்த்தாலும் டிரைவர் போய்க்கொண்டே இருப்பார்.) அடுத்த நிறுத்தத்தில் ticket checker ஏறினார். என்னருகில் அமர்ந்திருந்த பெண் டிக்கட் எடுக்கவில்லை. பிடிபட்டுவிட்டார். நில்லும்மா மத்தவங்கள செக் பண்ணிட்டு வந்துர்றேன் என்று டிக்கட் செக்கர் நகர்ந்தார். வண்டியும் நகரத்துவங்கிவிட்டது. அந்த நேரத்தில் அவ்விளம்பெண் யாரும் எதிர்பாராத ஒரு வேலையைச் செய்தார். சிறிது வேகம் பிடித்த ரயிலிலிருந்து குதித்து விட்டார். அப்படியே பிளார்ட்ஃபார்மில் டமாரென்று விழுந்த சத்தம். அப்புறம் என்னென்னவோ வினோத சத்தங்கள். என்னவென்று பார்ப்பதற்குள் வண்டி மிகுந்த வேகமெடுத்துவிட்டது. நிச்சயம் 2,3 fracture ஆவது ஆகியிருக்கும்.

மிஞ்சி மிஞ்சிப் போனால் 500 ரூபாய் ஃபைன் போட்டிருப்பார். இதற்குப் போய் ஏன் ஓடும் ரயிலிலிருந்து குதித்தார்? அவரை ரயிலிலிருந்து குதிக்கத் தூண்டியது நிச்சயம் அந்த ஃபைனாக இருக்காது. அவமானம் தான் காரணமாக இருக்கும்.

நம் வாழ்க்கையில் நாம் ஏமாந்த தருணங்களை விட, உடல் ரீதியாகத் துன்பப்பட்டத் தருணங்களை விட நாம் அவமானப்படுத்தப்பட்ட தருணங்களே நம்மை மிக அதிகமாகப் பாதிக்கின்றது. யோசித்துப்பார்த்தால் நம்மிடம் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றியவர்களைக் கூட நாம் குறிப்பிட்ட நாட்களுக்குள் மன்னித்து மறந்தும் கூட விடுகிறோம். ஆனால் வார்த்தைகளாலும், செயல்களாலும் நம்மை அவமானப்படுத்துபவர்களோடு நாம் நம் உறவைத் தொடர என்றுமே விரும்புவதில்லை. இதனால் தான் ஆத்திச்சூடி கூட மதியாதார் தலைவாசல் மிதியாதே என்று போதிக்கின்றது போலும். வேறெந்த வகையில் நம்மைப் பாதித்தவர் வீட்டுக்குக் கூடச் செல்லலாம். ஆனால் அவமதித்தவர் வீட்டிற்கல்ல என்கிறார் நம் அவ்வைப்பாட்டி. யாரையும் கனவிலும் அவமதிக்காமல் இருக்க எங்கும் நிறை இறைபெருமான் நமக்கு அருள் பிரிவாராக

Friday, October 14, 2011

அழகிய பிட்கெய்ர்ன் தீவு - பெண் குழந்தைகளின் பாலியல் நரகம்

ஒரு காலத்தில் தென் பசிபிக் பகுதியின் தனிமை சொர்க்கமாக கருதப்பட்ட பிட்கெய்ர்ன் தீவின் இருண்ட பக்கங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. தலைமுறை தலைமுறையாகத் தொடரும் பெண் குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறைகள் தற்சமயம் வெளிவந்துள்ளன.





பிட்கெய்ர்ன் தீவு பெருவுக்கும், நியூசிலாந்துக்கும் இடையில் அமைந்துள்ள உலகின் மிகத்தனிமையான, குறைவான மனிதர்களே வசிக்கும் ஒரு அழகிய தீவாகும். இது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வரும் தீவாகும். இத்தீவின் தனிமையே இதன் மிகப்பெரிய அட்ராக்ஷனாகவும் இருக்கிறது. கடினமான பாறைகளும், அடர்ந்திருக்கும் மரங்களும், அலைகளின் தாலாட்டும், ஆளரவமற்ற தனிமையும் இங்கு முதலில் 1790ஆம் ஆண்டு ஃப்ளெட்சர் க்றிஸ்டியனின் தலைமையின் கீழ் வந்தடைந்த HMS Bounty கப்பலில் இருந்தவர்களுக்கு ஒரு சொர்க்கத்தை வந்தடைந்த உணர்வைத் தந்தது. இத்தீவின் தனிமை அவர்களுக்கும், இன்றும் அங்கே வசித்து வரும் அவர்களின் வம்சாவளியினருக்கும் தங்களின் கொடிய குற்றங்களை மறைத்துக் கொள்ள ஒரு நல்ல போர்வையைத் தந்தது.





இங்குள்ள பெண் குழந்தைகள் 12 வயதிலேயே அவர்களின் விருப்பமின்றி
தாயாக்கப்படுகிறார்கள். இங்குள்ள அனைத்து ஆண்களுமே பெண்குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறை புரிந்தவர்களாகவும், பெண் குழந்தைகள் அனைவருமே பாதிக்கப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர், (2004 ல் இவர்களின் மொத்த ஜனத்தொகை 47). இத்தீவுக்கு airport, sea port கிடையாது. ஒரேயொரு docking yard மட்டும் உண்டு. இப்படி ஒரு வெளியாட்களின் வரவே இல்லாத ஒரு சமூகத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் யாரிடமும் எதுவும் சொல்லவும் வாய்ப்பில்லை. தாயார், பாட்டி அனைவரும் இதே விதத்தில் பாதிக்கப்பட்டவர்களே. 1999ஆம் ஆண்டு அங்கு விசிட்டிங் போலீஸாக வந்த ஒரு பெண் அதிகாரியிடம் ஒரு 15 வயது பெண் குழந்தை தான் ரேப் செய்யப்பட்டதையும், இங்கு எவ்வாறு அது சர்வசாதாரணமாக செய்யப்படுகிறது என்பது பற்றியும் தெரிவித்திருக்கிறாள். மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு பெரிய திருட்டை மட்டுமே ஹேண்டில் செய்திருந்த அந்த அதிகாரி, இக்குற்றச்சாட்டின் தீவிரத்தால் அதிர்ந்து போனார். மற்ற பெண்களும், குழந்தைகளும் தைரியமடைந்து தங்களின் வேதனையான அனுபவங்களை வெளியில் சொல்லத்துவங்க, இத்தீவின் இன்னொரு கோர முகம் உலகுக்கு வெளிப்படுத்தப்பட்டது. நியுசிலாந்து கோர்ட்டில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விசாரிக்கப்பட்டனர். நாங்கள் பிரிட்டிஷ் ராஜஜியத்தின் கீழ் வரமாட்டோம். எனவே எங்களை வேறு யாரும் விசாரித்து குற்றம் சாட்டமுடியாது என்று தற்சமய தலைவர் (முதல் ஃபோட்டோவில் 2ம் வரிசையில் வெள்ளை டிஷர்ட்டில் இருப்பவர் - அவரும் குற்றவாளிதான்) வாதிட்டது தள்ளுபடி செய்யப்பட்டது. அனேகமாக அனைத்து ஆண்களும் கைதாகும் நிலை ஏற்பட்டதால், சில வயதான பெண்கள், தீவின் ஆண்களைக் காப்பாற்ற வேண்டுமென "இதிலென்ன இருக்கிறது. இது பாலினேஷியக் கலாசாரத்தின் ஒரு பகுதி" என வாதிட்டனர். இவை அனைத்தையும் மீறி, நியுசிலாந்து கோர்ட் அனைவருக்கும் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

இன்று செய்தித்தாளில் விழுப்புரத்தில் தந்தையால் கர்ப்பமாக்கப்பட்ட பெண் குழந்தை, குழந்தை பெற்றார் என்ற தினமலர் செய்தி மனத்தை நொறுக்குகிறது. இக்கட்டுரை பாதிக்கப்பட்ட, பட்டுக்கொண்டுருக்கிற ஒவ்வொரு குழந்தைக்குமான என்னுடைய பிரார்த்தனை.








Friday, October 7, 2011

இந்தியா திரும்புவீர்களா NRI இன்ஜினியர்ஸ்?

சமீபத்தில் ஒரு நீண்ட ரயில் பயணம் மேற்கொள்ள நேர்ந்தது. பிள்ளைகள்
வளர்ந்து விட்டதனால் அவர்களைத் தொடர்ந்து கவனிக்க வேண்டிய அவசியமில்லாமல் பிரயாணத்தை ரசிக்க முடிந்தது. மிதமான ஏசி, சுவையான சரவணபவன் உணவு வகைகள் மற்றும் அருமையான புத்தகங்கள். ஒரு ரயில் பயணத்தை உபசொர்க்கமாக மாற்ற இவை போதுமல்லவா?






வழியில் பெயர் தெரியாத சின்ன சின்ன ஊர்கள் ஓடி மறைந்து கொண்டிருந்தன. அந்த நிலையங்களில் காணப்பட்ட செடி கொடிகள் படர்ந்த உடைந்த பெஞ்சுகள் என் நினைவுகளை வேறெங்கோ இழுத்துச் சென்றன. அந்த நிலையங்களில் எந்த ரயில் நிற்கும் என்றே தெரியவில்லை. எதற்கு தன்னந்தனி காட்டுக்குள் இப்படியொரு ஸ்டேஷன்? அங்கிருந்து ஒடி மறையும் மண் சாலைகள் எங்கு செல்கின்றன? புரியவில்லை. அந்த பாழடைந்த தோற்றம் இங்கு தனிமையிலிருக்கும் பெற்றோரை ஏனோ எனக்கு நினைவுறுத்தியது.




நான் என் நண்பர்கள் அல்லது பிள்ளைகளோடில்லாத உறவினர்கள் வீட்டுக்குச் செல்லும்போது (நண்பர்கள் வெளிநாட்டில், இங்கே இருப்பது அவர்களின் பெற்றோர்கள் மட்டும். நான் பார்க்கச் செல்வதும் பெற்றோர்களைத்தான்)அமெரிக்காவில் இருக்கும் பிள்ளைகளை நினைத்தபடி இங்கே தவிக்கும் அவர்களின் தனிமை மனதை உலுக்குகிறது. பிள்ளைகளின் ஃபோட்டோக்களை ஆசை ஆசையாக நமக்கு எடுத்து காண்பிக்கின்றனர். ஏற்கனவே facebookல் பார்த்துவிட்டோம் என்று சொல்ல மனமில்லாமல் நாமும் முதன்முறை பார்ப்பது போல் நடிக்கிறோம். அவர்களின் வீடுகள் மிகவும் posh ஆக இருக்கின்றன. ஆனால் அவை வெறும் கற்களாலான கட்டடம் மட்டுமே. குழந்தைகளின் அழுகையும் சிரிப்பும் நிறைந்த, மகனும் மருமகளும் மகிழ்ந்து குலாவி அல்லது சண்டை போட்டுத்திரியும் உயிரோட்டம் அங்கு இல்லை. Sunday evening நம்ம டைம் 7மணி போல onlineல வருவாங்கம்மா என்று அவர்கள் சொல்லும்போது அவர்கள் use பண்ணும் technical terms (online, skype, webcam) என் மனத்தை அறுக்கின்றது. எனக்குத்தெரியும் அவர்கள் அந்த வார்த்தைகளை எவ்வளவு வெறுக்கிறார்கள் என்று.


ஹரிகேசநல்லூர் வெங்கடராமன் (பிரபல ஜோதிடர்) சொல்கிறார் - ஒரு காலத்தில் (சுமார் 15 வருடங்களுக்கு முன்னர்) என்னிடம் ஜாதகம் பார்க்க வரும் பெற்றோர்கள் என் மகன் வெளிநாடு போவானா? அவனுக்கு அந்த யோகம் இருக்கிறதா? என்று கேட்பர். ஆனால் இப்போதோ என் மகன் திரும்ப வருவானா? அவன் கையால் கொள்ளி வாங்கும் யோகம் எனக்கிருக்கிறதா என்று கேட்கின்றனர் என்கிறார்.
கணவன்,மனைவி இருவரும் சேர்ந்து பிள்ளைகளற்ற தனிமையில் இருப்பது கூட பரவாயில்லை. வாழ்க்கைத்துணை மறைந்து பிள்ளைகளும் வேறெங்கோ இருப்பவரின் நிலை இன்னும் பரிதாபம். கொடிது, கொடிது முதுமையில் தனிமை.

வெளிநாடுகளில் வசிப்போரே, உங்கள் பெற்றோர் இங்கு தனிமையில் இருக்கும் பட்சத்தில் யோசியுங்கள். நீங்கள் அங்கு இருப்பதற்கான காரணம் நிச்சயம் பணத்தைத் தவிர வேறெதுவாகவும் இருக்க முடியாது. ஆனால் உண்பது நாழி,உடுப்பது இரண்டு, உறைவிடம் என்பது ஒன்று தான். பெற்றோரைத் தனிமையில் விடாதீர்கள். மேஜர் சர்ஜரிகளைத் தனிமையில் எதிர்கொள்கிறார்கள், தனித்திருக்கும் தகப்பன்மார்கள் தொலைபேசியில் சமையல் குறிப்பு கேட்கிறார்கள் புத்தக சேகரிப்புகளை யார் பார்த்துக்கொள்வார்கள் என்று வருந்துகிறார்கள்.இவர்களின் தேவை பணமல்ல. நீங்கள் தான். வீடு திரும்புங்கள். பெற்றோர் மனம் குளிரச் செய்யுங்கள்.








Saturday, September 17, 2011

பாலுமகேந்திராவின் மனைவி

நான் என் மனைவிக்கே விசுவாசமாக இல்லை. இப்படிச் சொல்லிக்கொள்வதில் எந்த வருத்தமும் இல்லை - படப்பெட்டி சினிமா இதழ் வெளியீட்டு விழாவில் பாலுமகேந்திரா வெளியிட்டுப் பேசியது.



தமிழ்நாட்டின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர்; தனது பெரும்பான்மையான படங்களில் (மீண்டும் கோகிலா, மறுபடியும், ரெட்டைவால் குருவி, சதிலீலாவதி) கணவன் வேறொரு பெண்ணை நாடிச் செல்லுவதில் உள்ள சிக்கல்களையும், மனைவிக்கு அதனால் ஏற்படும் மன உளைச்சலையும், நியாயமான கோபத்தையும் அழகுற, ஆழமாக காட்சிப்படுத்தியவரின் இப்படியொரு ஸ்டேட்மெண்ட் அதிர்ச்சியைத் தருகிறது. ஒரு கணவன் தன்னைவிட்டு வேறொரு பெண்ணை நாடும்போது அந்த மனைவி எவ்வளவு வருத்தமுறுகிறாள் என்பதை மிக நன்றாக ஒரு பெண்ணின் மனநிலையிலிருந்து புரிந்து கொண்டு அதை மிகச்சரியாகவும் படம் பிடித்த ஒரு ஆண்மகன் தன் மனைவியை அதே போன்றதொரு சோகத்தில் ஆழ்த்துவது எப்படி சாத்தியம்? படைப்புகள் என்பவை ஒரு படைப்பாளனின் பிரதிபலிப்பு இல்லையா? உச்சிதனை முகர்ந்தால் கர்வம் ஓங்கி வளருதடி என்று பாடிய பாரதியால் தன் மகளை வெறுக்க முடியுமா? அப்படி வெறுத்தால் அவனுடைய படைப்பு போலியானது இல்லையா? உண்மை மட்டுமே என்றும் நிலைக்கும். சதிலீலாவதியில் ஒரு காட்சியில் கமல் கதாநாயகனைப் பார்த்துச் சொல்வார் - கார் வாங்கி குடுத்தானாம், வீடு வாங்கி குடுத்தானாம், ஃப்ரிட்ஜ் வாங்கி குடுத்தானாம் (சின்ன வீட்டுக்கு). உன் மனைவி குடுத்ததுதானடா உங்கிட்ட இருக்குறது எல்லாம். என்னவொரு அருமையான வசனம். இதை எழுதியவரே இதை உணராமல் போவது எவ்வளவு பெரிய சோகம்.

பாலுமகேந்திராவின் மனைவியைப் பற்றி அவருடைய சிஷ்யர்கள் தங்கள் நிறைய பேட்டிகளில் சொல்லியிருக்கின்றனர். பாலா ஆனந்தவிகடனில் எழுதிய தொடரில் கூட பாலுமகேந்திராவின் மனைவியின் மென்மையான சுபாவத்தைப் பற்றி கூறியிருப்பார். அத்தகைய மனத்தை மவுனிகா என்னும் வலிய ஆயுதம் கொண்டு தாக்குவது எவ்விதத்திலும் சரியில்லை.

அதே போல் எழுத்தாளர் பாலகுமாரன் தன்னுடைய பல நாவல்களில் பெண்ணியம் பேசுவார். அவருடைய பயணிகள் கவனிக்கவும் என்ற நாவலில், கதாநாயகனது infatuation பற்றியும், பின்னொரு நாளில் அவன் உண்மையான காதலில் ஈடுபடுவதையும் அழகாகச் சுட்டுவார். காதலைப் பற்றி இவ்வளவு அழகாக எழுதுபவர், வாழ்க்கைத்துணையைப்பற்றி சிலாகித்துப் பேசுபவர் எப்படி இன்னொரு திருமணம் செய்தார்?? இதில் இரு மனைவியரும் ஒரே வீட்டில் ஒற்றுமையாக இருக்கின்றனர் என்று பெருமை வேறு. படைப்புகள் படைப்பாளிகளின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும். அது நான் வடித்த ஒரு கேரக்டர். அந்த கேரக்டர் அப்படி நடந்து கொள்ளும். அதற்கு நான் என்ன செய்வது என்று ஒரு படைப்பாளன் சொல்லுவானேயானால் then he is a hypocrite. இந்த வசனத்தை ஒரு நடிகன் வேண்டுமானால் சொல்லலாம் (உதாரணம்: ரஜினி- குசேலன் படம்). ஏனெனில் நடிகன் ஒரு கருவி மட்டுமே. ஆனால் ஒரு இயக்குனர், ஒரு எழுத்தாளர் கர்த்தா. அவன் இப்படிச்சொல்லுவது பேடித்தனம்.

முடிவாக, தவறுகளுக்கு மன்னிப்பு உண்டு. துரோகங்களுக்கு அல்ல.

Friday, September 16, 2011

வேளச்சேரியில் உணவகங்கள் - ஒரு கைட்லைன் - பார்ட் II





வேளச்சேரியில் உள்ள உணவகங்களின் சுவை, சர்வீஸ் மற்றும் விலை பற்றிய தொடர் பதிவு இது. முதலில் 100 அடி ரோட்டில் உள்ள சங்கீதா வெஜ் ரெஸ்ட்டாரண்ட். பொதுவாக எங்கள் வீட்டில் யாரும் வெஜ் ரெஸ்ட்டாரண்ட்டை, ரெஸ்ட்டாரண்ட்டாகவே கருதுவதில்லை ;). இருப்பினும் அந்த ஏரியாவின் மற்ற நான்-வெஜ் ரெஸ்ட்டாரண்ட்டுக்குப் போக அன்று மனதில் தெம்பு இல்லாததால் (ஹிஹிஹி) இங்கு சென்றோம். சும்மா சொல்லக்கூடாது - நல்ல ஆம்பியன்ஸ். சீட்டிங் அரேன்ஜ்மென்ட்டும் வசதியாக உள்ளது. ஒரே டேபிளில் இந்தப்பக்கம் ஒரு குடும்பத்தையும் அந்தப்பக்கம் மற்றொர் முன்பின் தெரியாத குடும்பத்தையும் அமர வைப்பதில்லை.






நாம் சென்று அமர்ந்தவுடன் ஒரு பெரிய பவுல் நிறைய சின்ன அப்பளம், வடகம் கொண்டு வந்து வைக்கிறார்கள். பிள்ளைகளுக்கு ஜாலிதான். starter க்கு சில்லி பன்னீர் க்ரேவி, மஷ்ரும் 65 ஆர்டர் செய்து கொண்டோம். மிக சாஃப்ட்டான டேஸ்ட்டியான, மிதமான மசாலா கொண்ட பன்னீர் துண்டுகள். மஷ்ரூம் 65 ஒரு துளி எண்ணெயில்லை. மிக அருமை. இங்கு இட்லி, தோசை வகைகள் not up to the mark. இட்லி பிய்க்க 4 விரல்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. சிறிது புளிப்பாகவும் இருக்கிறது. மற்றபடி சூப், fried rice ஆகியவை மிக அருமை.










KFC Restaurantன் ரிஸோ ரைஸ், பக்கெட் சிக்கன், பர்கர் அனைத்தும் நன்றாக உள்ளன. இவற்றை நம் இந்திய நாவிற்கு ஏற்ற முறையில் spicy யாகத் தருகிறார்கள். ஆனால் இங்கு உள்ளே நுழைந்தவுடன் குப்பென்று வீசும் துர்நாற்றம் நாம் இன்னொரு முறை அங்கே செல்ல வேண்டுமா என்று யோசிக்க வைக்கிறது. எவ்வளவோ அருமையான air freshenerகள் இருக்கின்ற நிலையில் ஏன் இப்படியொரு துர்நாற்றம்??? Im surprised. இந்தப்பிரச்சினையை இந்த ரெஸ்ட்டாரண்ட் காரர்கள் கட்டாயம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.








அடுத்தது நிறைய விளம்பரங்களுடன் துவங்கப்பட்ட திண்டுக்கல் தலப்பாக்கட்டி ரெஸ்ட்டாரண்ட். விளம்பரங்களால் எதிர்பார்ப்பும் மிக அதிகம். இவர்கள் ஹைலைட் செய்தது இவர்களின் பிரியாணி, மற்றும் கரண்டி முட்டை. அதையே ஆர்டர் செய்தோம். பிரியாணியின் ஸ்பெஷாலிட்டி, சீரக சம்பா அரிசியில் செய்கிறார்கள். அருமையான ருசி. மிதமான மசாலா, நன்கு வெந்த கறித்துண்டுகள். அந்த வகை அரிசியினாலே ஒரு தனி ருசி நிச்சயம் கிடைக்கிறது. மற்றவை சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இங்கே இவர்களது சீட்டிங் arrangement very very uncomfortable. Ergonomyயைக் கன்ஸிடர் பண்ணவே இல்லை.


Flamingo வுக்கு ஒரு மதியம் 2.30 போல் சென்றோம். இவர்களது நேரம் காலை 11 முதல் இரவு 11 வரை என்று குறிப்பிட்டிருந்தாலும் நாங்கள் சென்ற நேரம் எதைக்கேட்டாலும் இல்லையென்றார்கள். எந்த starter ம் இல்லை. அது இல்லை, இது இல்லை - ஸ் அப்பா. சாம்பார் சாதமும் தயிர் சாதமும் மட்டும் இருக்கிறது என்றார்கள். நன்றாகத்தான் இருந்தது. ஆனால் கொஞ்சம் (ரொம்பவே) காஸ்ட்லி. Hot Chips அவ்வளவு திருப்திகரமாக இல்லை.


மொத்தத்தில் இம்முறை முந்துவது சங்கீதா ரெஸ்ட்டாரண்ட்தான். நல்ல சர்வீஸ், வசதியான இருக்கைகள், சுவையான உணவு, மிதமான விலை. try பண்ணி பார்த்துவிட்டு சொல்லுங்கள்.









Wednesday, September 14, 2011

விருதுநகர் புரோட்டா சால்னா

ஆரம்பிக்கும் முன் ஒரு சின்ன க்விஸ். கீழ்க்காணும் விருதுநகர் புரோட்டாவில் காணப்படும் பிழைகள் என்ன? விடைகள் கடைசியில்.







விருதுநகர் காமராஜர் பிறந்த ஊர் என்பதற்கு அடுத்தபடியாக அதன் புரோட்டா சால்னாவிற்குத்தான் ஃபேமஸ். 60 வருடங்களுக்கு முன் தெப்பத்தை ஒரு ரவுண்ட் சுற்றி வந்தால், சுற்றியுள்ள புரோட்டா கடைகளில் ஊர் முதலாளிகள் (TKSP, VVR, MSP - ஊர் பெரிய மனிதர்களின் பெயர்ச்சுருக்கம்) அனைவரையும் பார்த்துவிடலாம் என்பார்கள் எங்கள் வீட்டுப் பெரியவர்கள். ஒரு காலத்தில் பெரிய மனிதர்களின் ஏகபோக உரிமையாக இருந்த புரோட்டா சால்னா இப்போது அனைவரும் புசிக்கக் கூடியதாக மாறிவிட்டது.






சாயங்காலம் 5 மணி முதல் எல்லா புரோட்டா கடைகளிலும், புரோட்டா கிடைக்கத் துவங்கும். முன்பெல்லாம் பெண்கள் கடைக்குச் சென்று சாப்பிடமாட்டார்கள். வீட்டு ஆண்கள் வாங்கி வருவதற்காகக் காத்திருக்க வேண்டும். எங்கள் மயில் அண்ணன் வயர்க்கூடை சகிதம் புரோட்டா வாங்கக் கிளம்பிய தினங்கள் இன்றும் பசுமையாய். இப்போ trend மாறி விட்டது. முக்கால்வாசி கடைகளில் family room வந்து விட்டது.



இன்றும் என்று விடுமுறைக்கு ஊருக்குச் சென்றாலும் வாசு கட்டாயம் எங்களை கடைக்கு கூட்டிச் சென்று விடுவார். இதில் ஒரு விஷயம் என்னவென்றால் நீங்கள் பர்மா கடை, கமாலியா, அசன் கடை, அல்லா பிச்சை கடை என்று எந்த கடைக்கு வேண்டுமானாலும் செல்லலாம். எல்லாக் கடையிலும் அதே சுவை கிடைக்கும்.



மொறு மொறுவென்று புரோட்டா. அதற்கு தொட்டுக்கொள்ள சால்னா. சீக்கிரம் சென்றால் மட்டுமே கிடைக்கும் மட்டன் சுக்கா. இதைச்சாப்பிடுவதில் ஒரு டெக்னிக் இருக்கிறது. புரோட்டாவைச் சால்னா தொட்டு சாப்பிடக்கூடாது. சர்வரே பிய்த்துப்போட்டு மேலே சால்னா ஊத்தி எடுத்து வருவார். உங்கள் முகத்தைப் பார்த்தால் வெளியூர்க்காரர் என்று தெரிந்தால் பிய்த்துப்போடமாட்டார் - hygiene reasons க்காக நீங்கள் மறுக்கலாம். ஆனால் அவரே பிய்த்துப் போட்டு தருவதில்தான் டேஸ்ட் அடங்கியுள்ளது. அந்த மட்டன் சுக்கா - அடேங்கப்பா - டிவைன் என்பார்களே அந்த ரகம். சான்ஸே இல்லை. அண்ணாச்சீ அந்தக்கறிய எப்டிண்ணாச்சி வேக வக்கிறீங்க?? saute, marinate என்று என்னென்னவோ சொல்கிறார்களே - அனைவரும் பிச்சை வாங்க வேண்டும். அந்த மசாலா எதைக்கொண்டு தயாரிக்கிறார்கள் - அடேங்கப்பா. முட்டை வழியல் என்று ஒரு ஐட்டம். முட்டை ஆம்லேட் ஒரு பந்து மாதிரி இருக்கும். அதைப்பிய்த்தால் உள்ளே வெங்காயம், மிளகு எல்லாம் கலந்து அரைவேக்காடாக இருக்கும். என்ன ஒரு ருசி. அதை நினைத்துக்கொண்டு இங்கே நம்ம சென்னையில், திண்டுக்கல் தலப்பாக்கட்டி restaurantல் கரண்டி முட்டை ஆர்டர் செய்தோம். menu cardல் photo லாம் பயங்கர அழகா போட்டிருந்தாங்கன்னு நம்பி ஆர்டர் பண்ணிட்டோம் - அவ்வ்வ்வ்வ். அப்படியொரு roughஆ ரப்பர் மாதிரி இருந்துச்சு.



track மாறிட்டேன் sorry.







இன்னொரு விஷயம் அங்கே காணப்படும் கஸ்டமர் சர்வீஸ். அரைமணி நேரம் ஏன்னு கேக்க ஆளில்லாம திருதிருன்னு முழித்துக்கொண்டு உட்கார்ந்திருக்க அவசியமில்லை. அதே போல் சும்மா சும்மா சால்னா கேட்க வெட்கப்பட்டுக்கொண்டு அமர்ந்திருக்க வேண்டாம். நாம் சால்னா கேட்கலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே 'தம்பி அக்காக்கு சால்னா ஊத்து' என்பார் அண்ணாச்சி. ஆனா என்ன ஒரு சின்ன விஷயம்னா அண்ணாச்சிக்கு 50, 60 வயசு இருக்கும். ஆனால் எல்லா வயதினரும் அக்கா, அண்ணாச்சி தான் அவருக்கு.

எங்கள் ஊர்ப்பக்கம் சென்றால் புரோட்டா கடைக்குப் போகாம வந்துராதீங்க. ஜென்மம் சாபல்யம் அடையாது ;)


புதிர் விடைகள்


1. புரோட்டாவின் சைஸ் - படத்தில் மிகப்பெரிதாக உள்ளது

2. சைட் டிஷ் - பட்டாணி, உருளக்கியங்கு குருமா தொட்டு சாப்பிடுறதுக்குப் பேசாம வீட்லயே பால் சோறு சாப்ட்டு படுத்துருலாம்ங்க.

Tuesday, September 13, 2011

குட்டி பிள்ளைகளின் சுட்டி ரெஸ்பான்ஸ்கள்

பின் வருபவை 6 வயது அக்கா மற்றும் 4 வயது தம்பியின் பதில்கள், விளக்கங்கள் ;)







  1. காலை எழுந்தவுடன் ஆரம்பிக்கும் கேள்விக்கணைகள் - மீன் பல் தேய்க்குமா?; ரைனோசரஸுக்கு வால் இருக்குமா? (அவன் கேட்டவுடன் எனக்கே சந்தேகம் வந்துவிடும்); மழை பெய்யும்போது வானத்தில் ஏரோப்பிளேன் நனையுமே! யார் குடை பிடிப்பா?; tenக்கு அப்புறம் tenone தானே, ஏன் elevenனு சொல்றீங்க(பிள்ளை கேட்பதும் correct தானங்க. twentyக்கப்புறம் twentyone தான?) - இப்படி இடைவிடாத கேள்விகளில் நாம் பொறுமையிழந்து தொண தொணன்னு கேள்வி கேக்காதடா என்று அலறும் போது அக்குழந்தை உண்மையிலேயே குழம்பி - நான் கேள்வி கேக்கல அம்மா. பதில் கேக்குறேன் - என்று சொல்லும் குழந்தைத்தனத்தில் இறைவனைக் காணலாம்.




  2. Chips packet ஐ தலைகீழாக கவிழ்த்து விளையாடும் பிள்ளையிடம், ஏய் என்ன பண்ணிக்கிட்டிருக்க? அறிவு கெட்டது - என்று சொன்னவுடன் - நான் அறிவு கெட்டது இல்லம்மா - அறிவு நல்லது என்று ரெஸ்பான்ஸ் (ரொம்ப நல்லவன்டா நீ அவ்வவ்வவ்வவ்வ்)




  3. Chota Bheem POGO வில் இப்போது தமிழில் வருவதைப்பற்றி அக்காவும் தம்பியும் டிஸ்கஷன் - என்ன பப்பு பீமும் காலியாவும் தமிழ்ல பேசுறாங்க? ஆமா தம்பு, அவுங்க தமிழ் டியூஷன் போயிருப்பாங்கன்னு நெனக்கிறேன். (அடுத்து அனேகமாக Mr.Beanம் தமிழ் டியூஷன் போயிருவாருன்னு நெனக்கிறேன் ;) )




  4. Real Juice 1 ltr carton ஐத் தலைகீழாக கவிழ்த்துக்கொண்டிருக்கும் பிள்ளையிடம் - எதுக்கு இப்படி கவுத்துற?. பிள்ளையின் பதில் - juice இருக்கா தீந்து போயிருச்சான்னு பாக்குறேன். (அவரு பாத்து முடிக்கிறதுக்குள்ள juice நெஜமாவே தீந்திருக்கும் :) )


  5. அக்காவிடம் தம்பி - missக்கு A B C தவிர வேற ஒண்ணுமே தெரியல பப்பு. daily அதே தான் சொல்லிக்கொடுக்குறாங்க.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes