Friday, January 6, 2017

என்ன தான் இருக்கிறது 9ம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் நாடார்களைப் பற்றி

சிபிஎஸ்இ சமூக அறிவியல் ஒன்பதாம் வகுப்புப்பாடப்புத்தகத்திலிருந்து சில பகுதிகளை நீக்க வேண்டுமென்று கோரிக்கைகள் மத்திய அரசிடம் முன்வைக்கப்பட்டு தற்சமயம் அப்பகுதிகளை நீக்கி கல்வித்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி, அப்பகுதிகளை வகுப்பறையில் நடத்தக்கூடாதென்றும் மேலும் அப்பகுதியிலிருந்து பரிட்சையில் கேள்விகள் கேட்கக் கூடாதென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஒரு விஷயத்தைக்குறித்து யாராவது போராடும்போதுதான் (அது எவ்வளவு சாதாரணமாக விஷயமாக இருந்தபோதிலும்) பலரின் கவனத்தை அது திருப்புகிறது. என்ன தான் இருக்கிறது அதில் என்ற ஆர்வக்கோளாறில் அதைப் படித்தோம். 

இது தான் பாடப்புத்தகத்தில் இருக்கிறது - 1800களில் சாணார் என்றழைக்கப்பட்ட நாடார் குலப்பெண்கள் தங்கள் மார்பகங்களை மறைக்கும் வகையில் ஆடை அணிவது திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தடை செய்யப்பட்டிருந்தது. உயர்குலத்தவரான நாயர் பெண்கள் மட்டுமே மேல்முண்டு அணிய அனுமதி. இச்சட்டத்தை எதிர்த்து 1822 முதல் 1859 வரையான காலங்களில் கடுமையாகப் போராடி, மேலாடை அணிவது எங்கள் உரிமை என்று நிறுவினர் நாடார் சமூகத்தினர். இப்போராட்டத்தில் ஆங்கிலேயர்களின் பங்கு மகத்தானது. பிரிட்டிஷ் மகாராணி இச்சட்டத்தைக் காட்டுமிராண்டித்தனமானது என்று கூறி கடுமையாகக் கண்டித்தார். வேறு வழியின்றி திருவிதாங்கூர் மன்னர் அனைத்து நாடார் பெண்களும் குப்பாயம் என்ற மேலாடை அணியலாம் என்ற உரிமை அளித்தார்.

பாடப்புத்தகத்தில் இப்பகுதியைத் தடை செய்வதற்கு சில காரணங்களை முன்வைக்கின்றனர் அரசியல்கட்சிகளைச் சார்ந்தோர் மற்றும் சில நாடார் அமைப்புகள். அந்தத் திருத்தங்களை வேண்டுமானால் செய்யலாமே தவிர, நீக்க வேண்டியதன் அவசியமென்ன?

நாடார் சமூகம், மேலாடை அணியக்கூட உரிமையில்லை என்று அசிங்கப்படுத்தப்பட்டும், அடக்கப்பட்டும், தடை பல தாண்டி முன்னேற்றம் ஒன்றே குறிக்கோள் என்று வீறு கொண்டெழுந்தது. தான் கால் வைத்த அத்தனை துறைகளிலும் சாதனை படைத்து வருகிறது.  கடின உழைப்பே முன்னேற்றத்துக்கு அடிப்படை என்று நிரூபிக்கிறது. இன்றும் நம் தெருவில் சிறிய கடை வைத்திருந்த அண்ணாச்சி, அதே இடத்தில் நாளடைவில் சூப்பர் மார்க்கெட் கட்டி விரிவடைகின்றார் என்றால் அது கடின உழைப்பில்லாமல் வேறென்ன?    ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அனைவருக்கும் ஒரு நம்பிக்கைக் கீற்றைத் தருவதல்லவா இது போன்ற உழைப்பு?

சாம்பலிலிருந்து உயிர்த்தெழுந்ததுதான் ஃபீனிக்ஸிற்கான பெருமை. தான் சாம்பலிலிருந்துதான் உயர்ந்தோம் என்று உலகிற்குத் தெரிவிப்பதில் என்ன அசிங்கம்? முன்னேறிச் செல்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அவசியம் நாம் எங்கிருந்து வந்தோம் என்பதைத் தெரிந்து கொள்வதும், தெரிவித்துக்கொள்வதும். என் வேர்களை வெளிப்படுத்திக்கொள்வதில் எனக்கு எந்த அவமானமும் இல்லை. மாறாக என் முன்னோர்களைக் குறித்து நான் அளவில்லாப் பெருமையும், கர்வமும் கொள்கிறேன்.

முடிவாக - வரலாறு மிக முக்கியம் அமைச்சரே :)

Annex:

“… As it is not reasonable on the part of the Shanar women to wear cloths over their breasts, such custom being prohibited, they are required to abstain in future from covering the upper part of their body. An order (circular) had been issued on the 7th Edavam 989, to all places prohibiting the Shanar women of the families of such Sanars as may have embraced Christianity from wearing cloths, over their breasts, and requiring them to substitute for these the Kuppayam (a kind of short bodice used by their Christians and by Mohamadan native females) but with regard to their (the Shanars) allegation as an authority for wearing clothes over their breasts, that a decree has been passed subsequently by a law court, permitting the Shanar women on the contrary the use of clothes on the upper part of their body. Such a decision since if it be admitted as establishing a rule, it would be a direct contravention of the order alluded to, cannot but be considered as invalid. Therefore the order referred to is hereby republished to be held as a document (or authority) in their respect”
-C.M. Augur – Church, History of Travancore – 1902 – Appendix XVIII – Page vii

3 comments:

PV said...

History is important to victors only when the victors are alive now. When the history become a distant and hoary past, it is for all except the victors as they were all dead now. The right course is to prove that the history as written was a calculated imagination, by putting forth the genuine history as your research has told you.

PV said...

ஆசிரியர் ஏன் நாடார்கள் எதிர்க்கக்கூடாது என்று மட்டுமே சொல்கிறார். ஏன் எதிர்க்கிறார்கள் என்று சொல்லவில்லை அவர் சொல்வது போல, சாணார்கள் என்றழைக்கப்பட்டவர்கள் (ஓ பி சி சர்டிபிகேட் வாங்குவதற்காக பலர் சாணார் என்றுதான் போட்டுக்கொள்கிறார்கள். நாடார்களைப்பிடிக்காதவர்கள் அப்பெயரைத்தான் பயனபடுத்திப்பேசுவர். எப்படி பார்ப்பனரைப் பாப்பான் என்கிறார்களோ அது போல), இன்று தமிழ்ச்சமூகத்தில் ஓபிசிக்களில் மேலான நிலையை அடைந்திருக்கின்றனர். இதுவே அவர்கள் தங்கள் வரலாற்றை மூடி மறைப்பதற்குக் காரணம். ஒரு பெரிய ஜவுளிக்கடை முதலாளியோ, ஒரு வங்கி அல்லது எண்ணை தயாரிக்கும் நாடார் குடும்பமோ - டி எம் பி வங்கி, வி வி டி, இதயம் எண்ணை, போன்று) தங்கள் தலைமுறை, வரும் தலைமுறைகள் - தங்கள் முன்னோர் தலித்துக்களைப் போல நடத்தப்பட்டதைத் தெரிந்தால், தலித்துகளுக்கு இணையாக நாம் என்று கருதக்கூடும். மார்பை மறைக்க தடைசெய்யபப்ட்டது தலித்துகளுக்கும் கேரளா முழவதும்செய்யப்பட்டது எனவே. தலித்துகள்தான் இடைஞ்சல் அவர்களின் மரியாதையான இடத்துக்கு, இதுவே காரணம். நாடார்களை மட்டுமே இங்கு குறை சொல்ல முடியாது. இன்றைய தமிழ்ச்சமூகத்தில் எல்லாருமே தலித்துக்களைத் தீண்டத்தகாதவர்களாகப் பார்த்து, அவர்களுக்கு இணையாக நாம் நினைப்பில் கூட வராமல் பார்த்துக்கொள்கிறார்கள் என்பதுதானே உண்மை?

அதே சமயம், வரலாறு நன்கு பதியப்பட்டு விட்டது. பள்ளி பாடநூல்கள் வரலாறு எழுதாது. எழுதிய வரலாற்றிலிருந்து எடுத்துப்போடும். வரலாறு ஆசிரியர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும். அவர்கள் பாடநூலைப்படித்து தெரியவதில்லை. ஆய்வு நூல்களையே தேர்தெடுப்பர். அவை பல்கிப்பெருகிக்கிடக்கின்றன. இந்தியா ஹவுஸ் லண்டனிலும், மற்றும் ஐரோப்பிய நூலகங்களிலும். இந்தியாவிலே பல நூல்கள் இருக்கின்றன. அவை தெளிவாக நாடார்கள் தீண்டத்தகாதவர்களாகவே திருவாங்கூர் சமஸ்தானத்தில் நடாத்தப்பட்டனர் என்றே தெரிவிக்கின்றனர்.

மேட்டுக்குடி நாடார்கள் அந்நூல்களைத் தடை செய்ய அரசிடம் கோரிக்கை வைக்கலாம். இந்துத்வாவினர் வெண்டி டோனிகர் நூல்களைத்தடை செய்தத்து போல. இது நாடார்கள் தங்கள் வரலாற்றை மூடி மறைக்கத் துடிக்கிறார்கள் எனற உண்மையைத்தான் பறை சாற்றும். உங்களைத்தூண்டியது போல எல்லாரையும் நடந்தது என்ன என்று அறியத் தூண்டும். மறைக்க மறைக்க மேலே வருமே தவிர கீழே போகாது என்பது இவர்களுக்குத் தெரியவில்லை.

வரலாறு வெற்றியாளர்களால் எழுதப்படுகிறது என்பது உண்மை. அதே சமயம் ரிவிசைனிஸ்ட் வர்லாறு என்பதும் உண்டு. அது கசப்பான உண்மைகளை மறைக்கவே எழுதப்படுகிறது.

வருண் said...
This comment has been removed by a blog administrator.

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes