அது என்னமோ தெரியல, என்ன மாயமோ தெரியல நான் படித்த மற்றும் வேலை பார்த்த, பார்க்கின்ற பெண்கள் கல்லூரி வாட்ச்மேன்கள் அனைவருமே மிகவும் கண்டிப்பானவர்களாக, அதே நேரம் அக்கல்லூரியைச் சார்ந்த அனைவராலும் விரும்பப்படுகிறவர்களாகவே இருக்கின்றனர்.
ஹோலிகிராஸ் சேஷு அண்ணா முதல் எத்திராஜ் அண்ணாதுரை அண்ணா வரை இவர்கள் கண்களில் தப்பி ஈ, காக்காய் கூட உள்ளே நுழைய முடியாது. அதுவும் ஒரு முறை சேஷு அண்ணா, காலேஜுக்கு ஒரு ஃபங்ஷனுக்கு வந்த சீஃப் கெஸ்ட்டை வெளியே நிறுத்தி புண்ணியம் கட்டிக்கொண்டார். என்னடா இன்னும் சீஃப்கெஸ்ட்டைக் காணோம் என்று கேட்டுக்கு வந்து பார்த்தவர்கள், அப்புறம் அவரை சேஷு அண்ணாவிடமிருந்து மீட்டு உள்ளே கூட்டிச் சென்றார்கள். (செல்போனெல்லாம் அப்போது கிடையாது).
ஸ்டூண்ட்ஸும் ஆசிரியர்களிடமிருந்து கூட கல்லூரி நேரத்தில் வெளியே செல்ல பர்மிஷன் வாங்கிவிடலாம். ஆனால் வாட்ச்மேனுக்கு விளக்கம் சொல்லி மாளாது. ஏறக்குறைய ஒரு இன்டர்நேஷனல் ஏர்போர்ட் சுங்கத்துறை இலாகா அதிகாரிகளுக்கு நிகரானவர்கள் இவர்கள். ஆனாலும் இவர்கள், மாணவிகளாலும், பேராசிரியப்பெருமக்களாலும் மிகவும் மதிக்கப்படுபவர்களாகவும், அன்பு செய்யப்படுபவர்களாகவும் இருக்கின்றார்கள்.
எப்படி இத்துறையில் இருக்கும் அனைவரும் இவ்வளவு சின்சியராக இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது, நடுத்தர வயது ஆண்களான இவர்களுக்கு கட்டாயம் கல்லூரிப்பெண்களின் வயதில் மகள்கள் இருக்கிறார்கள். எனவே வாசலில் நிற்பது வாட்ச்மேன் அல்ல, ஒரு தகப்பன். தன் பிள்ளையைப் பாதுகாக்கும் அதே வேகத்துடன் இவர்கள் அங்குள்ள ஒவ்வொரு பிள்ளையையும் ப்ரொடக்ட் செய்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட வயதை அடையும்போது இப்பக்குவம் தன்னால் வருகிறது.
சமீபத்தில் லோலிட்டா என்ற நாவலைப் படிக்கத்துவங்கினேன். இது ஒரு மிகப்பிரபலமான நாவல். திரைப்படமாகவும் வந்துள்ளது. இது ஒரு ப்ரொஃபஸர், 12 வயது பெண்ணிடம் கொள்ளும் தகாத ஆசை பற்றியது. ஒரு 12 வயது பெண்குழந்தையின் சாதாரண நடவடிக்கைகளையும் பாலியல் கண்களோடு பார்ப்பதாக அந்நாவல் விரிகிறது. சில பக்கங்களுக்கு மேல் என்னால் அந்த நாவலைப் படிக்க இயலவில்லை. 10 வயது பெண்குழந்தையின் தாயாக அதைப்படிக்கும்போது ஏற்பட்ட உணர்வு பயங்கரமானது. அனேக சுஜாதா நாவல்களிலும் 12 வயது பெண்குழந்தைகளைப் பற்றிய பெர்வர்ட் ஐடியாக்களைக் காணலாம். ஒரு 20 வயதுப் பெண்ணாக சுஜாதா நாவலை (ஒரு ஸ்கூல் குழந்தையை கடத்து பணக்கார இளைஞன் மற்றும் பல) ரசித்த என்னால், 10 வயது மகளின் தாயாக அதை வாசிக்கவே முடியவில்லை.
இது போன்ற காரணத்தால்தான் வாட்ச்மேன்களும் சூப்பர் கடமையுணர்ச்சியோடு இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஹாட்ஸ் ஆஃப் டு ஆல் ஆஃப் யு அண்ணா. வீ ஆர் ப்ரௌட் ஆஃப் யு